Advertisement

கிட்டத்தட்ட நாற்பது நிமிட பயணத்திற்குப் பின் ஒரு தேவாலயத்தின் முன் வந்து இறங்கினர். மனோவின் முகம் அப்படியே காற்றுப் போன பலூனாகிப் போனது. பப், பார்டி, ஹோட்டல், திரையரங்கம் எங்கவாது அழைத்துச் செல்வாள் என கொண்டாட்டமான மனநிலையில் இருக்க, மொத்தமாக மண்ணை அள்ளிப் போட்டுவிட்டாள் ஷிவி.

கொச்சியில் இருக்கும் பழமையான புனித பிரான்சிஸ் தேவாலையத்திற்கு வந்திருந்தனர்.

இறங்கிய ஷிவி விறுவிறுவென முகப்பு வாசல் வரையிலும் சென்றுவிட்டு அதன் பிறகே திரும்பிப் பார்க்க, மனோ அங்கே நின்றிருந்தான்.

வருமாறு வார்த்தையின்றி தலையசைப்பில் அழைக்க, வேண்டா வெறுப்பாக அருகில் வந்தவன், “நானே போயிருந்திருக்கலாம். உங்களைப் போய் கூப்பிட்டேன் பாருங்க, என்னைச் சொல்லணும்” உதட்டைச் சுளித்தவன் சடைத்துக் கொண்டான்.

உள்ளே சென்றபடியே, “இது ரொம்ப பழமையான சர்ச் மனோ” என்றவள் பொறுமையாகக் கூற, “பார்க்கும் போதே தெரியுது” பட்டென வாயடைக்க வைத்தான்.

“வாஸ்கோடகாமா தெரியுமா?” ஷிவி கேட்க, முகத்தைச் சுருக்கிக்கொண்டு,

“ஹிஸ்டரி புக்ல படிச்சிருக்கோம்” என்றான் மிதப்பாக.

“அவரோட உண்மையான கல்லறை இங்கதான் இருக்கு. வாஸ்கோடகாமா உடலை இங்க தான் வைச்சிருந்தாங்க, கிட்டத்தட்ட பதினாலு வருஷத்துக்கு அப்புறம் தான் போர்ச்சுக்கலுக்கு எடுத்துட்டுப் போனாங்களாம்” ஷிவி கூற, வாயடைத்துப் போனான் மனோகர்.

உயரமான கோபுரமும் உள்கட்டமைப்பு, கட்டுமானம் அனைத்தும் பல ஆண்டுகள் பழமையான போதும் கம்பீரம் குறையாது காட்சியளித்தது.

எத்தனை ஆண்டுகள் பழமையானது, எத்தனை எத்தனை முன்னோர்களின் பாதச்சுவடு பட்ட இடம்! பிரமிப்போடு ஒவ்வொன்றையும் வியந்து பார்த்தவன், அமைதியாக ஷிவியின் பின் சென்றான்.

தேவாலயத்திற்குள் சென்ற இருவரும் கடவுளை பிராத்தனை செய்துவிட்டு, முழுவதும் சுற்றிப்பார்த்தனர். மேலும் சில போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்களின் கல்லறைகள் இருக்கக் கண்டனர், ஷிவி அனுமதிக்கப்பட்ட இடங்களில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாள்.

நேரம் சென்றதே தெரியவில்லை. இருவரும் வெளியே வர, அலுத்துப் போயிருந்த ஷிவி காரை அழைக்கும் முன் தடுத்த மனோ, சாலையோரமாக நடக்கத் தொடங்கினான்.

உணவு தெருவிற்குள் அழைத்து வந்திருந்தான். வரிசையாக நீண்ட தெரு முழுவதும் இரண்டு பக்கங்களிலும் உணவுகடைகளால் நிரம்பி வழிய, தெரு முழுதும் மக்கள் கூட்டமும் இருந்தது.

“ஃபுட் ஸ்ட்ரீட் எதுக்கு மனோ? நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேன்” ஷிவி அழுத்தடன் பற்களை கடிக்க, “நான் சாப்பிடுவேன்” என்றபடி உள்ளே வந்திருந்தான்.

பாரம்பரிய உணவுகள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் உணவுவகைகளும் அங்கே கிடைத்தது. மனோ நின்று ஒவ்வொன்றையும் கேட்டு, விசாரித்து வாங்கி ருசித்தான். எது வாங்கினாலும் இரண்டு ப்ளேட் தான்.

ஷிவி மறுத்தபோதும் கேட்கவில்லை. இவளுக்குப் பிடிக்குமென அதிகம் ஆசிய வகை உணவுகளையே வாங்கினான். போதும் போதுமென மூச்சு முட்டிப் போனது ஷிவிக்கு.

தனியாக இரவு உணவே வேண்டாம் என்னும் அளவிற்கு வயிறார சுவைத்து விட்டுதான் அந்த வீதியை தாண்டி வெளியே வந்தனர்.

மற்றுமொரு வீதிக்குள் அழைத்துச் சென்றான். நடைப்பாதைக் கடைகள் ஒவ்வொன்றிலும் நின்று பார்த்துப் பார்த்து அவன் வீட்டில் உள்ள அனைவருக்கும் பொருட்கள் வாங்க, ஷிவி வேடிக்கைப் மட்டும்தான் பார்த்திருந்தாள்.

அண்ணன் மகனுக்குப் பொம்மைகள், கர்ப்பிணியாக இருக்கும் அண்ணிக்கு கலர் கலராய் கண்ணாடி வளையல்கள், அலங்கார நகைகள், சிகை அலங்காரப் பொருட்களென அவன் வீட்டுப் பெண்களுக்குத் தேவையானதும் பிடித்ததுமாகப் பார்த்துப் பார்த்து வாங்கினான்.

வேடிக்கைப் பார்த்திருந்த ஷிவன்யா பிரமிப்பில் மலைத்துப் போனாள். எதிலும் கணக்குப் பார்ப்பவன் இப்போது கணக்கே இல்லாது செலவு செய்ய, ஒருநொடி அவள் பார்வை மனோவை தழுவித் திரும்பின.

“மனோ நான் கிளம்புறேன்” வெறுமையான குரலில் அறிவித்துவிட்டு ஷிவி திருப்பி நடக்கத் தொடங்கினாள்.

“இருங்க வரேன்” என்றபடி விரைந்து ஓடி வந்த மனோ அவளோடு இணைந்து நடந்தபடி, “இங்க பாருங்க” வாங்கிய பொருட்களை காட்டினான்.

ஷிவி காதோர சுருள் முடிகளை ஒதுக்கியபடி திரும்பிப் பார்க்க, மஞ்சள் நிற தெருவிளக்கு ஒளிக்கு ஒளிரும் பொன்சிலையாக மிளிர்ந்தாள். மனோகரால் அவள் முகம் தாண்டி பார்வையைத் திரும்ப முடியவில்லை.

வாகன சத்தத்தில் கலைந்தவன், சட்டென குனிந்தபடி, “இதுல உங்களுக்கு பிடிச்ச பொருளை எடுத்துக்கோங்க” என்றான்.

தனியாக அவளுக்கென வாங்கிக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டாளென அறிந்தவன் தான்.

சட்டென நிமிர்ந்து மனோவின் முகம் பார்த்தாள் எந்தவித கள்ளம்கபடமின்றி அவன் வீட்டுப் பெண்களில் ஒருத்தியாக தன்னையும் நினைத்துக் கூறுகிறான் என்றே நினைத்திருந்தாள்.

“நோ தேங்க்ஸ் மனோ” தன்மையாக மறுத்தவள் முன்னேறி நடக்க, இடைநின்று வழிமறித்த மனோ, ஒரு சில்வர் நிற பெரிய ஜிமிக்கி ஒன்றை எடுத்து அவள் கன்னம் உரச, அவளைத் தொடாது செவியோடு ஒட்டி வைத்துக் காட்டியவன், “உங்களுக்கு இது ரொம்ப நல்லாயிருக்குங்க” என்றான் ஆசையாக.

“மனோ” கண்டிப்புடன் அதட்டி அழைத்தவள், வெடுக்கென அவன் கரங்களை தட்டியும் விட்டாள்.

மனோவிற்கு முகமே கசங்கிப் போனது. ‘இப்போது நான் இவளை என்ன செய்துவிட்டேன்? இத்தனைக்கும் இவளை தொடக்கூட இல்லை. இவள் மட்டும் என்னை தொட்டு வெடுக்கென தள்ளியும் விடுகிறாள்? அன்பின் பரிசாகக் கொடுத்த சிறுபொருளையும் மறுக்கிறாளே? அவள் அந்தஸ்திற்கு சிறுபொருள் என்பதால் தானே மறுக்கிறாளோ?’ இடியும் மின்னலும் இன்றி குமுறியவன் ஷிவியை பற்றி என்னென்னவோ நினைத்தான்.

அவள் நிராகரித்த கடுங்கோபம், விறுவிறுவென விலகி நடந்தவன் ஒரு வண்டியை அழைத்து, ஷிவியுடன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். இடையில் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஷிவன்யாவும் பெரிதாக கண்டிக்கொள்ளவில்லை, எப்போதும் போல் இறுக்கமாகவே இருந்து கொண்டாள்.

இரவு நேர குளுமைமும் வண்ணங்கள் உமிழும் மின்விளக்குகளும் எதையும் நின்று ரசிக்கவோ புகைப்படம் எடுக்கவோ இல்லை.

இரவு பதினொன்று மணிப்பொழுதில் இருவரும் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அடித்துப் போட்டதைப் போன்ற அலுப்பில் உள்ளே வந்த இருவருமே பிரமாண்ட வரவேற்பறையில் ஒரு ஓரம் இருந்த மின்தூக்கியை நோக்கி நடந்து கொண்டிருக்க, “ஹேய் ஷிவ், ஷிவன்யா” கேட்ட குரலில் இருவரும் ஒரு சேர திரும்பினர்.

இவர்களை நோக்கி கையசைத்தபடி நின்றிருந்தனர் ஆதித்யாதேவ் அருகே ஓர் இளமங்கை. அவள் அவனின் மேனேஜர்.

சோர்ந்த முகத்தில் சுந்தர புன்னகை ஒன்று மெல்லியதாக அரும்ப, ஆதித்யாவை நோக்கி நெருங்கினாள் ஷிவி.

‘இவன் என்ன இங்கே?’ பற்களைக் கடித்தபடி கடுகடுத்த மனோவிற்கு அடிவயிற்றில் என்னவோ பற்றிக்கொண்டு எரிந்தது.

ஷிவி நெருங்கும் போதே கரங்களை நீட்டி, அவள் உள்ளங்கையைப் பற்றிக் கொண்டான் ஆதித்யா.

“இட்ஸ் சப்ரைஸ்! உங்களை இங்க எதிர்பார்க்கவே இல்லை ஷிவ்” என்றபடியே கரம் குலுங்கிய ஆதித்யா, பிடித்த இனிப்பைக் கண்ட குழந்தையைப் போல் குதூகலித்தான்.

“இங்க இன்டெர்நேஷனல் ஃபோட்டோ பெஸ்ட் நடக்குது தெரியாதா?”

“ஓ எஸ்” நெற்றியோரம் தடவிக் கொண்டவன், “இங்க ஒரு ஆட் ஷூட்க்கு வந்தேன். நாளைக்கு கிளம்பணும்” ஷிவி கேளாமலே தன்னைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டான் ஆதித்யா.

இருவரும் பேசிக்கொண்டிருக்க, அருகே நிற்கும் மேனேஜரின் நினைவு வர, அவள் புறம் திரும்பிய ஆதித்யா அவளது அறைக்குச் செல்லுமாறு அனுப்பி வைத்தான்.

ஷிவிக்கும் அப்போதுதான் மனோவின் நினைவு வர, திரும்பியவள் அவன் அருகே வந்தாள்.

“நீ உன் ரூம்க்கு போ மனோ, மார்னிங் பார்க்கலாம்” என அறிவுறுத்தினாள். இருவருக்குமிடையில் இவ்வளவு நேரமாக இருந்த மௌனத்தின் ஆட்சியை முதலில் முடித்திருந்தாள்.

கைகளைக் கட்டிக்கொண்டு கண்ணோடு கண் பார்த்த மனோகரோ, “பேசிட்டு வாங்க வெய்ட் பண்றேன்” மறுத்து பிடிவாதமாக நின்றான்.

“மனோ நாங்க வெளிய போறோம்” ஷிவி அழுத்தி உரைக்க, அதிர்ந்து பார்த்தவன், “சரி போயிட்டுவாங்க வெய்ட் பண்றேன்” அசைக்க முடியாத பிடிவாதத்துடன் நின்றான்.

இவன் மறுப்பான மறுமொழியில் ஷிவன்யாவின் முகம் முழுதுமாக சூடேறிப் போனது. மனோகரை ஒருநொடி உற்றுப் பார்த்து, முறைத்தவள் எப்போதும் போல அலட்சியப்படுத்தி விட்டு, தோள்பையோடு திரும்பினாள்.

திரும்பியவள் இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப்பாள் சட்டென அவள் கரங்களை எட்டிப் பிடித்தான் மனோ. அதிலும் அழுத்தமான பிடி, எலும்புகள் நொறுங்குவது போன்ற வலியைக் கொடுத்தன.

 

Advertisement