Advertisement

அத்தியாயம் 10

கருப்பு நிறத்தில் ஜீன், ஊதா, வெள்ளை வர்ணங்கள் நிறைந்த டீசர்ட், கண்களை மறைத்தபடி கருப்புக் கண்ணாடி, கொஞ்சமாக வளர்ந்து தாடை, கன்னங்களை நிறைத்திருக்கும் தாடி என கையில் ஒரு பெட்டியை இழுத்தபடி படு அசத்தலாக வந்து நின்றபவனின் வரவு வல்வரவு தான் ஷிவன்யாவிற்கு.

மலர்ந்த முகத்துடன் அருகில் வந்த மனோகரை நோக்கி, “நீ ஏன் இங்க வந்த?” அனல் பார்வையில் முறைத்தபடி வினவினாள்.

“நீங்க எங்கேயோ அங்கதான் நான்” தோள்களை குலுக்கியபடி இலகுவாக கூறியவனை, மேலும் உற்றுப் பார்த்தாள்.

“மனோ ஐம் யூர் பாஸ்” இறுகிய குரலில் அதட்ட நினைத்து, அதிகாரம் காட்டினாள்.

“ம்ம், அதான் ஹெல்ப்க்கு வந்தேன்” சக்கரைப்பாகாக இளகி, உருகி நின்றான்.

“நீ வேண்டாம்னு அன்னைக்கே சொன்னேன்ல? ஸ்டுடியோல வேலையை பார்க்காம என்னோட வந்து என்ன செய்யப் போற?”

“நீங்க இல்லாம ஸ்டுடியோல என்ன செய்யப் போறேன்?”

“மனோ” பற்களைக் கடித்தவளின் முகமும் குரலும் இறுகியது. ‘வார்த்தைக்கு வார்த்தை வாதாடுகிறானா? இல்லை உணர்ந்து தான் பேசுகிறானா?’ சந்தேகம் குடைந்தது ஷிவியின் உள்ளத்தில்.

“இல்லைங்க வேற ஒன்னும் இல்லை, தனியா போறீங்களே உங்களுக்கு துணையா…” என்றவன் அவள் பார்வையின் உஷ்ணம் உணர்ந்து, “உதவியா வரலாம்னு ஒரு நல்ல எண்ணத்துல தான்ங்க” என்றான் நல்ல பிள்ளையாக.

ஷிவி இன்னும் நம்பாமல் பார்த்துக் கொண்டிருக்க, “ஏங்க இப்படி பார்க்குறீங்க? உண்மையை சொல்லிடுறேன், உங்க செலவுல கொச்சியை சுத்திப் பார்க்கிற திட்டத்தில வந்திருக்கேன். அது மட்டுமில்லாம தர்ஷன் வேற உங்களைப் பார்த்துக்கச் சொல்லி கெஞ்சிக் கேட்டான், அதான்” அசராது பொய் உரைத்தான்.

கருவிழிகள் கனலாகச் சிவக்க, மனோவின் முகத்திற்கு முன்பாக சட்டென தன் அலைபேசியை நீட்டினாள். அதில் இன்னும் இணைப்பிலே காத்திருந்தான் தர்ஷன்.

“உன்னைப் பார்த்துக்கச் சொல்லி சொன்னான்” பற்களைக் கடித்தவளை நேர் கொண்டு பார்க்க முடியாது மழுப்பியவன், பட்டென அவள் அலைபேசியை பரிந்து இணைப்பைத் துண்டித்தான். ‘மாமன்னு பார்த்தா என் மானத்தை வாங்குறாதே வேலையா வைச்சு இருக்கான்’ உள்ளுக்குள்ளே தர்ஷனைத் திட்டித் தீர்த்தான்.

அங்கிருக்கும் காலி இருக்கையில் இலகுவாக அமர்ந்து கால் ஆட்டிக்கொண்டே ஷிவியை நிமிர்ந்து நோக்கியவன், “காரணம் எதுவா வேணாலும் இருக்கட்டும், நான் உங்களுக்கு உதவியா இருப்பேன் நம்புங்க” என்றான் உறுதியாக.

அமைதியாக அமர்ந்த ஷிவி சிலநொடிகள் யோசனையில் இருந்தாள். சமீப காலத்தில் இருக்கும் வேலைப்பளுவில் மனோவை ஒரு பொருட்டாக கண்டுகொண்டதில்லை. ஆனால் இப்போது யோசித்தால் கொஞ்சம் நெருடியது.

ஸ்டுடியோவில் வேலையில் இருக்கும் போதெல்லாம் காஃபி எனக் குரல் கொடுத்தாலே மனோவே காஃபி தயாரித்து எங்கிருந்தாலும் கொண்டு வந்து கொடுத்திடுவான். முன்பெல்லாம் தன்னைக் கண்டாலே எட்ட ஓடுபவன் இப்போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு தன்னைச் சுற்றியே வருகிறான்.
முன்பை விட எளிதாக அதிகம் தன்னோடு பேசுகிறான், தன்னையும் பேச வைக்கிறான். ஏதாவது வேலையில் சந்தேகம் கேட்டுகொண்டே இருக்கிறான். அலட்சியப்படுத்தும் போதும் தவறுகளை குறை கூறும் போதும் கோபத்தில் கடுகடுக்கும் போதும் முகம் சுணங்கிச் சென்றாலும் மீண்டும் தன்னிடமே வந்து நிற்கிறான்.

மனோவோ, “ஏங்க இந்த இருக்கிற கொச்சிக்கு ட்ரைன்லையே போயிருக்கலாம். நீங்க ஹை கிளாஸ், உங்களுக்காக தான் பிளைட் டிக்கெட் எல்லாம் போட்டு வந்திருக்கேன். இதுக்கு மேல நீங்களே செலவை பார்த்துக்கோங்க” வளவளத்துக் கொண்டே இருந்தான்.

ஷிவன்யா இன்னும் யோசனையிலே இருக்க, “நீங்க தங்குற ஹோட்டலையே எனக்கும் ரூம் புக் பண்ணிடுங்க” மேலும் சீண்ட, அவளோ நிமிர்ந்து பார்க்க, “இல்லைன்னா ஒன்னும் பிரச்சனையில்லை. எப்படியும் உங்களுக்கு நீங்க தாராளமா பெரிய ரூம் தான் எடுத்திருப்பீங்க அதுலையே அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றான் இலகுவாக.

ஷிவி பார்வையிலே எரிக்க, “ஏங்க வேற எந்த எண்ணமும் இல்லை நம்புங்க” என்றவன் மேலும் தாழ்ந்து வேண்டினான்.

ஷிவியின் பார்வை தன்னைச் சுற்றிக் கட்டம் கட்டி, சிறை செய்து, உரசிப் பார்த்து ஆராய்வதையும் தான் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையையும் அவள் உன்னிப்பாக கவனிப்பதையும் மனோகர் உணராமல் இல்லை.

கொச்சி செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு வர, முதல் ஆளாக எழுந்து முன்னே சென்று விட்ட மனோ, நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டான்.

யோசனையுடன் எழுந்த ஷிவியும் தனது உடைமைகளை இழுத்தபடி பின் சென்றாள்.

கிட்டத்தட்ட ஒருமணி நேரத்தில் இருவரும் கேரளா மாநிலத்தின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கி இருந்தனர்.

வெளியில் வந்ததுமே மனோவே டெக்ஸி அழைத்தான். இருவரும் உடைமைகளையும் மனோவே ஏற்றி வைத்துவிட்டு, ஷிவிக்கு கதவை திறந்துவிட்டு, மறுபுறம் ஏறிக் கொண்ட மனோ தங்க இருக்கும் நட்சத்திர விடுதியின் பெயரையும் கூறினான்.

இப்போது வரையிலும் ஷிவி இவனிடம் எதுவும் பேசவில்லை, மனோவும் பேசாமலில்லை.

இப்போதுதான் யோசனையை விட்டு வெளியே வந்தவள், “ஹோட்டல் உனக்கு எப்படித் தெரியும்?” உறுத்து நோக்கியபடி வினவினாள்.

‘ஊரோ தங்கும் இடமோ விமான நேரமோ யாரிடமும் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே இவன் எப்படி அறிந்தான்?’ உள்ளுக்குள்ளே குடைந்தது.

எச்சரிக்கை உணர்வின்றி உளறிய பின்பே புத்தியில் உறைக்க, மனோ இப்போது திருட்டுமுழியாக விழித்தான்.

சமாளிப்பாகச் சிரித்தவன், “அது உங்க சிஸ்டம் ஓபன் பண்ணனிட்டேன்” இறங்கிய குரலில் உண்மையை தைரியமா உரைத்தான்.

ஷிவி கடுமையாக முறைக்க, “உங்க டேட் ஆஃப் பர்த்தை பாஸ்வேர்ட்டா வைச்சது உங்க தப்பு, மத்தபடி என் தப்பு இல்லைங்க” அவள் மீது பழியை போட்டவன் பம்மினான்.

பாதுகாத்து வைக்கும்படியான ரகசியம் எதுவுமில்லை என்றாலும் தன் ஊழியர்களுக்கு அதிகமாக இடம் கொடுத்துள்ளோம் என இப்போது தான் புரிந்தது.

மௌனமானவள் அதற்கு மேல் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஒருமணி நேரப்பயணத்தில் ஹோட்டலை அடைந்திருந்தனர். மனோ மொத்த உடைமைகளையும் எடுத்து வர, வரவேற்பில் விசாரித்து மனோவிற்கும் அவசர அவசரமாக பிஸ்னஸ் ரூம் ஒன்றை புக் செய்து வந்து சாவியை அவனிடம் நீட்டினாள்.

நேரம் நள்ளிரவை நெருங்கியிருந்தது. ஏற்கனவே சென்னையிலே உணவை முடித்துக் கொண்டதால் அறைக்குள் வந்ததும் படுக்கையில் விழுந்தனர்.

ஷிவன்யா ஏற்கனவே தன் எடுத்ததில் தேர்வு செய்திருந்த புகைப்படங்களை கண்காட்சியில் வைக்கும்படியான அளவிற்கு பிரேம் செய்து பேக் செய்து அனுப்பி வைத்துவிட்டாள்.

ஷிவிக்கு உதவிக்கு ஒரு ஆள் தேவையாக இருக்க, கொச்சியில் இருக்கும் தனது இரு நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்க, இருவருமே இங்கில்லை வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருப்பதாகப் பதில் மட்டுமே வந்தது. பரவாயில்லை, அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் கிளம்பினாள்.

ஆனால் குறுக்கே இந்த மனோகர் வந்து மாட்டிக்கொள்ள மௌனமாக ஏற்றுக்கொண்டாள். அதுமட்டுமின்றி மனோகரின் நோக்கம் என்னெவென்று கண்டுபிடித்துவிடும் திட்டத்திலும் இருந்தாள்.

ஆனால் மனோவிற்கு இது எதுவும் தெரியாது, மனம் போன போக்கில் இங்கு வந்திருந்தான்.

காலையிலே அலைபேசி வழியாக மனோவை அழைத்து எழுப்பி விட்டிருந்தாள் ஷிவி. மனோ எழுந்து கிளம்பும் நேரத்திற்கு எல்லாம் ஷிவி ஆடர் செய்திருந்த காலை உணவு அறைக்கே வந்துவிட, அதையும் உண்டுவிட்டு கீழே வந்தான்.

இவனுக்கு முன்பாகவே கிளம்பியிருந்த ஷிவி இவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

புன்னைகை முகமாக புத்துணர்வோடு எதிர் வந்து நிற்பவனை ரசனையில்லாத பார்வையில் எதிர்கொண்டவள், “மனோ இதுல இருக்கிற அட்ரெஸ்ல போய் ஃபோட்டோஸ் எல்லாம் கலெட் பண்ணிட்டு, ஆர்ட் கேலரி வந்துடு. நான் முன்ன போய் மத்த பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சு வைக்கிறேன்” என்றபடியே அவன் கையில் இரண்டு முகவரி அட்டைகளை கொடுத்தாள்.

தலையாட்டியபடியே வாங்கிக் கொண்டவனை வியப்பாக நோக்கியவள், அமைதியாக தேவைக்கானப் பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டாள்.

ஹோட்டலில் இருந்து வெளியே வந்த மனோவிற்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்றிருந்தது.

கேரள தேசத்தின் இளங்காலை குளிர்காற்று தேகம் உரசி சில்லென்ற குளுமையையும் புதுவித புத்துணர்வையும் கொடுக்க ஆழ்ந்து அனுபவித்தான்.

பயணத்திற்கு வசதியாக வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு ஓட்டுநர் உதவியோடு ஷிவி கொடுத்த முகவரிக்குச் சென்று புகைப்படக்களைப் பெற்றுக் கொண்டான். அங்கிருந்து கண்காட்சி அரங்கை அடைந்தவன், அனைத்தையும் அவனே சுமந்து வந்து ஷிவியின் வழிகாட்டுதல்படி பொருத்தி காட்சிக்கும் வைத்தான்.

சர்வேதேச புகைப்படக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் சிறந்த புகைப்படங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தியிருந்தனர். வெவ்வேறு வித புகைப்படங்கள் அனைத்தும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்தது.

கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று பசியில் வீரிடுவதும் அடுத்த படத்தில் தேவதைப் போன்றதொரு பெண் வந்து அணைத்துத் தூக்கிக்கொண்டு நெஞ்சோடு சரித்து பாலூட்டுவது போன்றும் அதற்கு அடுத்த புகைப்படம் இருவர் முகத்திலும் மலர்ந்திருக்கும் மென்னகையும் நிறைந்த சந்தோஷமும் பார்பவர்களுக்கு ஒரு நிறைவைத் தந்தது.

மூன்று தொடர் புகைப்படங்கள் தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வை ஒலியின்றி ஒளியின் மொழியில் மொழிந்தது. கருப்பு வெள்ளையில் மழலைகளின் மீது அன்பும் கனிவும் தோற்றுவிக்கும்படி நேர்த்தியாக எடுப்பப்பட்டிருந்தது. கடந்து செல்பவர்களை கட்டயாம் ஒருநொடி நின்று பார்க்க வைக்கும் அழகுடன் ஈர்த்தது.

மனோகர்தான் கால்கடுக்க, நாள் முழுக்க அரங்கில் நிற்கிறான். கண்காட்சியில் பார்த்துச் செல்பவர்கள் அமைதியாகச் செல்லும் போது நிற்க வைத்து, இவன் அறிந்தவரை விளக்கங்கள் உரைப்பான், பாராட்டிச் சென்றால் அப்படியே அலைபேசியில் பதிவு செய்து பத்திரப்படுத்தியும் கொள்வான். பெரும்பாலும் வெளிநாட்டிவர்களின் வருகை அதிகம் இருந்தது.

காலையில் வந்தால் இரவு ஹோட்டலுக்குத் திரும்பும் வரையிலும் அரங்கில்தான் இருந்தனர். தினமும் ஷிவி மற்ற புகைப்படங்களை காண, புகைப்பட கலைஞர்களின் கருத்தரங்கு, நவீன புகைப்படக்கருவிகள் பற்றி கலந்தாலோசிக்க, மேற்கத்திய இசைக் கச்சேரி என அனைத்திற்கும் சென்றிடுவாள். மனோகர்தான் இங்கு இருந்தான்.

சில நாட்கள் விரைவாக ஷிவி ஹோட்டலுக்குத் திரும்பி விட்டாலும் மனோ இறுதி வரையிலும் இருந்து வருவான். அவர்கள் உணவு நேரத்தைக் கவனித்து உணவு வாங்கி வருவதென நான்கு நாளும் நல்லமுறையில் பெரிதும் ஷிவன்யாவிற்கு உதவியாக இருந்தான்.

‘உண்மையிலே சொன்னது போல் உதவியாகத்தான் வந்துள்ளான் நாம் தான் ஏதோ சந்தேகம் கொண்டுவிட்டோம் போல?’ தன்னுள்ளே நினைத்தவள் இலகுவாக அவனோடு உரையாடத் தொடங்கினாள்.

இரண்டாம் நாள் மாலை கடற்கரையில் ஒரு நடைபயிற்சி சென்றனர். எப்போதும் போல மனோ வாய் ஓயாது வளவளக்க, ஷிவி மௌனமுடன் இதமான சுற்றுப்புற்றத்தையும் ஆழியோடு ஆதவன் அஸ்தவனத்தையும் பார்த்துவிட்டு திரும்பி இருந்தாள்.

வேலை தாண்டி வேறு எந்தவித பொழுதுபோக்கு, களிப்பு, கொண்டாட்டம் எதுவுமில்லை. வெளியில் எங்கும் செல்லவுமில்லை.

இன்றோடு கண்காட்சி முடிய இருக்கும் நிலையில் இருள் சூழயிருக்கும் மாலை நேரமாக ஷிவியின் முன் வந்து நின்றான் மனோ.

கண்காட்சி அரங்கத்தின் நுழைவில் இருக்கும் ஒரு மர பெஞ்சில் அமர்ந்திருந்தாள் ஷிவி. அலைபேசியில் கவனமிருக்க முன் வந்து நிற்பவனை நிமிர்ந்து நோக்கினாள்.

“நாளைக்கு சென்னைக்கு டிக்கெட் போட்டீங்களா?” என்றவன் வினவ, தலையாட்டியவள்,

“மார்னிங் பிளைட், ஏன் நீ வரலையா?” என்றாள் கேள்வியாகப் புருவம் சுருக்கியபடி.

“வரணும் ஆனால் கொச்சி வந்ததுல இருந்து ஹோட்டல், ஆர்ட் கேலரி, டேக்ஸி இதைத் தவிர வேற எதுவும் பார்க்கவே இல்லையே? எங்கையாவது வெளியே போவோமாங்க?” என்றான் ஏக்கமாக.

ஷிவியும் இந்த சில நாட்களாக இதே சுற்றுப்புறத்தில் தானே இருக்கிறாள்? கண்காட்சி அரங்கின் நிறைந்த நிஷப்தமும் ஒருவித சலிப்பை ஊட்டியிருந்தது.

மனோவின் வாடிய முகம் பார்த்தவள், அருகிலிருந்து தனது கேமரா பையைத் தூக்கி மாட்டிக்கொண்டு தலையைப்போடு எழுந்து கொண்டாள். அதிலே உற்சாகமடைந்தவன் அவள் பின்னே நடந்தபடி, “ஏங்க எங்க போகலாம்?” என்றபடி அலைபேசியில் தேடுதல் செயலியை இயக்கினான்.

“உஷ்…” முகம் சுருக்கியவள், “கால் மீ ஷிவி ஆர் மேம். ஏங்க ஏங்ன்னு கத்தாத மனோ” அதட்டினாள்.

முன் செல்பவளை நிமிர்ந்து பார்த்தான். ‘வசதியாகப் போயிற்று’ மனதில் நினைத்தவன் வசீகரமாகச் சிரித்தான்.

Advertisement