Advertisement

குவியமிடும் நேசம் – மித்ரா

அத்தியாயம் 01 

பறந்து விரிந்த எல்லையில்லாத வானத்தில், ராஜ ராசாளியாக வலம் வந்தவனின் சிறகுகளைக் கட்டிச் சுருட்டி, சிறை வைத்து விட்டார் தந்தை.

அனல் பெருமூச்சோடு தலை கவிழ, குனிந்து நின்றிருந்தான் மனோகர். கண்ணீர் தேங்கிய கண்களின் பார்வை மங்கலானது, காலுக்குக் கீழே உடைந்து பல துண்டுகளாக கிடந்தது சிறிய புகைப்படக்கருவி.

இந்த கேமராவிற்குள்தான் இவன் உயிரையே அடைத்து வைத்துள்ளான். இப்போது உடைந்து கிடப்பதைக் காண, உயிரே துடிதுடித்தது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை தண்ணீரில் நனைந்து நிற்பவனின் முகத்தில் வழியும் சிலதுளி நீரோடு, ரகசிய கண்ணீர் திவலைகளும் கலந்து உருண்டோடி இருக்க வேண்டும்.

அடி வாங்கியதும் ஐந்து வயதுக் குழந்தையாகக் கீழ் உதடு அழுகைக்குத் துடிக்க, ரோஷமுடன் பற்களால் அழுத்திக் கடித்து வைத்து, இறுகிய தோற்றமாக நின்றிருந்தான்.

செங்கதிர் கிழக்கு வானில் வெளுத்துக் கொண்டு மேல் எழ, கழுத்து வரைக்கும் சற்று முன் இழுத்து மூடி படுத்திருந்தான் மனோகர். அலைபேசி அலாரம் இசைத்து எழுப்ப, பதறி எழுந்தவன் படுக்கைக்கு அருகிலே தயாராக வைத்திருந்த புகைப்படக்கருவியைக் கையில் தூக்கிக் கொண்டு, சீறும் சிறுத்தையாக வீட்டின் பின்கட்டு தாண்டியும் பாய்ந்து ஓடினான்.

இடையில் கட்டியிருந்த கைலி அவிழ்ந்து விழுந்ததையும் பொருட்படுத்தவில்லை. இத்தனைக்கும் உள்ளே முட்டி வரைக்கும் ஷாட்ஸ் அணிந்து இருந்தான்தான் இல்லாவிட்டாலும் அவன் வேகம் தடைப்பட்டு நின்று இருக்காது.

பின்கட்டு மாட்டுத்தொழுவம் தாண்டி, தோட்டத்தை ஒட்டி ஓடும் வாய்க்கால் நீரின் முன், கேமராவை கையில் ஏந்தியபடி  மண்டியிட்டு அமர்ந்தான்.

சில நொடிகள் காத்திருக்க, வாய்க்காலின் மறுகரையில் சூரியகாந்தி தோட்டத்தில் இருந்த பூக்களின் பிம்பம் தெளிந்த நீரில் விழ, அதில் சரியாக நீரோட்டத்தோடு கலந்து வந்த கதிரவனின் கதிர்கள் சூரியகாந்தியைச் சூழ்ந்த நொடியை, அப்படியே தன் புகைப்படக் கருவிக்குள் சிறைபிடித்தான்.

வெகுகாலம் ஏங்கித் தேடித் திரிந்து, கண்டெடுத்த காதலியை ஆரத் தழுவிய ஆசை காதலனை, வண்ணக்கலவை கொண்டு தீட்டியதைப் போன்று இருந்தது புகைப்படம்.

எத்தனையோ நாட்கள் விடியற்காலை நித்திரையை இந்த ஒரு புகைப்படத்திற்காகத் தியாகம் செய்திருந்தான்.

எடுத்த புகைப்படத்தை நிறைந்த மனதோடு திருப்தியாகப் பார்த்தபடியே திரும்பிய நொடியில்தான் கன்னத்தில் வந்து விழுந்தது தந்தை கதிரேசனின் கனத்த கரம்.

சற்றும் எதிர்பாராத நிகழ்வால் இவன் வாய்க்கால் நீரில் தலைக்குப்புற விழுந்து எழ, கேமராவோ கல்லில் விழுந்து தெறித்து, பரிதாபமாக நொறுங்கி இருந்தது.

“என்னப்பா கதிரேசா? தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையைக் கை நீட்டுற?” உயர்ந்த குரலில் அதட்டலோடு ஆச்சி சிவகாமியம்மை பதறி வந்தார்.

துண்டோடு வந்த அன்னை தெய்வானை இளைய மகன் மனோகரின் தலையைத் துவட்டியபடி, “வயசு ஆக ஆக தான் உங்க மகனுக்கு மூக்குக்கு மேல கோபம் வருது அத்தை” உரிமையுடன் மாமியாரிடம் குறைபாடி, கணவரைச் சடைத்து கொண்டார்.

“பின்ன உன் மகன் செய்துட்டு வந்த வேலைக்கு மடியில தூக்கி வைத்துக் கொஞ்ச சொல்றீயா?” நேரடியாக மனைவியிடம் காய்ந்தார் கதிரேசன்.

‘அப்படியென்ன கொலைக்குற்றமா செய்து விட்டேன்?’ ஊமை மனதிற்குள் ஓசையின்றி விம்மினான் மனோகர்.

“அப்படி என்னடா செய்துட்டான்?” சிவகாமியம்மை பரிந்து கொண்டு வர, “எதுவா இருந்தாலும் குணமா புத்திமதி சொல்லிப் பழகுங்க. இனி கை நீட்டுற வேலையெல்லாம் இருக்கக் கூடாது” கோபித்துக் கொண்டார் தெய்வானை.

“ஏற்கனவே ஊர்த்தலைவருக்கும் எனக்கும் ஆகாதுன்னு எல்லாருக்கும் நல்லா தெரியும் தானே? அப்படியிருந்தும் அவர் பொண்ணு பக்கத்து ஊர் வேத்து சமூகத்தைச் சேர்ந்தவனைக் காதலிச்சு, ரிஜிஸ்டர் மேரேஜ் செய்திருக்கு, அதுக்கு இவன் போய் கல்யாண  ஃபோட்டோ எடுத்துக் கொடுத்திருக்கான்.

அத்தோடு விட்டானா? இவன் கூட்டாளிப் பயலுக எல்லாம் சேர்ந்து, அந்த ஃபோட்டோவைப் போட்டு, வாழ்த்து போஸ்டர் அடிச்சி இங்கிருந்து திருநெல்வேலி டவுன் வரைக்கும் ஒரு இடம் விடாம ஒட்டி வைச்சிருக்காங்க.

அந்த ஆள் என்னமோ நான்தான் கல்யாணம் பண்ணி வைச்ச மாதிரி என்னை பஞ்சாயத்துக்கு கூப்பிட்டு விட்டுருக்கான். அவர் பொண்ணே கல்யாணம் முடிச்சிக்கிட்டு போயிடுச்சு இவன் செய்த வேலைக்கு நான் போய் ஊர் முன்னால நிக்கணுமா?

எல்லாம் இவனாலையும் இவன் கேமராவாலையும் வந்த வினை! இதுக்குத்தான் இவனுக்கு இந்தக் கருமத்தை வாங்கிக் கொடுத்தேனா?” 

கதிரேசன் என்னவோ ஆற்றாமையில் குதி குதியெனக் குதித்துக் கொண்டிருக்க, இவரை யாரும் அங்கே கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

ஆச்சி தலை துவட்ட, அன்னை உடல் துவட்ட என சீராட்டிக் கொண்டிருந்தனர். 

ஆனால் மனோவிற்குத்தான் மூக்கு நுனி வரைக்கும் கோபம் குடை விரித்தது. 

“அதுக்கு எதுக்கு என் கேமராவை உடைச்சீங்க?” கீழ் உதட்டைக் கடித்து, இமை நிறைந்த நீரோடு, தாங்க முடியாது வினவினான்.

“என்ன உன் கேமரா? நான் தானே வாங்கிக் கொடுத்தேன்? போனா போகுது போ” என்றார் அதிகாரமாகத் தந்தை.

முகம் துடைத்துவிட்ட அன்னையின் கைகளைத் தட்டிவிட்டவன், “அப்போ நானும் அவர் பெத்த பிள்ளை தானே? என்னையும் கொல்லச் சொல்லும்மா” என்றான் வீம்பாக.

‘உயிருள்ள இவனும் உயிரற்ற பொருளும் ஒன்றா? இப்படி ஒரு பைத்தியத்தைப் பெற்று வைத்துள்ளேனே?’ நொந்துபோய் நெற்றியில் அடித்துக்கொண்டார் கதிரேசன்.

கடுகடுத்துப் போன கதிரேசன், “பஞ்சாயத்து முடிச்சிட்டு வந்து பேசிக்கிறேன்” என்று விட்டு வெளியேறிப் போனார்.

“ஆமாம் மாமா, பளார்ன்னு ஒரு சத்தம்! சுவத்துல வறட்டி தட்டுன மாதிரி, சரியான அடில” தோள்பட்டையில் தாங்கிய, அலைபேசியைச் செவிக்குச் சாய்த்துக் கொண்டு, இங்கு நடப்பவற்றை உடனுக்குடன் நேரலையில் தன் வருங்காலக் கணவருக்கு பரப்பியபடி வந்து நின்றாள் மலர்.

ஒரு கையில் அலைபேசி மறுகையில் மனோகரின் மாற்றுடையோடு வந்து நின்ற மலரை, அனல் கக்கும் ட்ரெகனைப் போல் பார்வையால் முறைத்தான் தம்பி மனோகர்.

வெடுக்கென மலரின் அலைபேசியைப் பறித்து, இணைப்பைத் துண்டித்தவன், “உடனே இதை அவனுக்கு சொல்லணுமாக்கும்?” என்றான் காட்டமாக.

கேலியாகச் சிரித்தவள், “நான் சொல்லாட்டாலும் உன் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் உன்னோட இந்த உடைஞ்ச கேமராவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் போடுவாங்களே அப்போ தெரியத்தானே போகுது?” எனச் சீண்டினாள்.

“அதுக்கு மொதல்ல உன் மொபைலுக்கு காரியம் செய்றேன் பார்” என்றபடியே அலைபேசியைத் தூக்கி வீச எத்தனித்தான்.

“ஐயோ! ஆச்சி அதைப் பிடி” பதறிப் பாய்ந்து, அருகே வந்த மலர், “அம்மா பார் உன் உத்தமபுத்திரன் செய்ற வேலையை” அன்னையிடம் முறையிட்டாள்.

ஆச்சி அலைபேசியைப் பறித்துக் கொடுக்க, அன்னையோ மனோவின் உடைகளை வாங்கி கொடுக்க, வெடுக்கென முகம் வெட்டிச் சென்றாள் மலர்.

“இந்தா, ட்ரெஸ் மாத்து ஈரத்தோட இருக்காத” தெய்வானை கண்டிப்போடு மகனின் கையில் கொடுக்க, “அம்மா இப்போ உன் புருஷன் பஞ்சாயத்துக்குத் தானே போயிருக்கார்? நீயும் நேரா அங்க போம்மா” என்றான் வேகவேகமாக.

“ஏன்லே?” தெய்வானை வினவ, “பஞ்சாயத்துல போய் அவரை டிவோர்ஸ் பண்ணிட்டு வந்துடும்மா” என்றான் சலுகையாக. தன்னை அடித்து விட்டதில் அணையாத ஆதங்கம்.

“அடேய்” சிவகாமியம்மை பதறிப்போய் அதட்ட, “என்ன பேச்சு இது மனோ?” தெய்வானையும் கண்டித்து விட்டுச் சென்றார்.

வீட்டின் கடைக்குட்டியான மனோகர் அனைவரின் அன்பையும் ஒட்டு மொத்தமாக அள்ளி எடுத்துக் கொண்டவன். இதனால் பின் விளைவுகள் எதைப் பற்றியும் யோசிக்காது, நினைத்ததை தைரியமாகச் செய்து விடுவான். 

இவன் அட்டகாசம் அளவில்லாமல் போகும் போதெல்லாம் கறாராகக் கண்டிப்பு காட்டிவிட்டுவார் தந்தை கதிரேசன்.

தன் மகனைப் பிடிக்கும் என்றாலும் இவனின் இந்தப் பொறுப்பில்லாத்தனமும் புகைப்படக்கலையின் மீதான ஆர்வமும் சுத்தமாகப் பிடிக்காது.

ஏன் படிக்கிறோம் என்றே தெரியாது, எல்லோரையும் போல இவனும் தந்தை சொல்லுக்காக, அவர் தேர்வு செய்த கல்லூரியில் அவர் தேர்வு செய்த பொறியியல் பட்டப்படிப்பை முடித்தான்.

ஆனால் சிறு வயதில் இருந்தே அவன் ஆர்வமெல்லாம் ஓவியம் தீட்டுவதில் தொடங்கி புகைப்படக்கலையில் முற்றிலுமாக நிலைத்து விட்டது.

ஆர்வமில்லாது படித்த பொறியியல் படிப்பின் பரிசாக, முதல் வருடத்திலே நான்கு அரியர் வாங்கியிருந்தான். அதைப்பற்றிய கவலை அவனுக்கு இல்லை. தேர்வாகிப் பட்டம் வாங்கியிருந்தால், தந்தை அந்த துறைக்குள்ளே தன் எதிர்காலத்தையும் பிணைத்து விடுவார் என்பதால் எச்சரிக்கை உணர்வோடு இருந்தான்.

ஆனால் பெற்றவருக்கு, மற்ற பிள்ளைகள் எல்லாம் பட்டதாரிகளாக இருக்க, கடைசி மகன் ஒரு பட்டம் வாங்கிவிட வேண்டுமென அதிக கவலை.

அப்போதுதான் மகனின் பலவீனத்தை உற்றுப் பார்த்திருந்தார். பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றால் அவன் கேட்கும் புகைப்படக் கருவியை வாங்கித் தருவதாக ஒப்பந்தம் பேச, மனம் குளிர்ந்து போனான் மனோகர்.

அடுத்த மூன்று ஆண்டுகள் சின்சியர் சிகாமணியாகப் படித்து அத்தனை பாடத் தேர்வுகளையும் எழுதி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். முடிவில் பொறியியல் பட்டமும் பெற்றிருந்தான்.

அவன் கஷ்டப்பட்டு உழைத்துப் படித்தற்குப் பரிசாகத் தந்தை வாங்கிக் கொடுத்ததுதான் இந்தக் கேமரா.

வாங்கிய நாளில் இருந்து ஐந்து வருடங்களாக உறங்கும் போது கூட, ஓரம் வைத்தது இல்லை இந்தப் புகைப்படக்கருவியை.

ஊருக்குள் இவனுக்கென ஒரு நண்பர் பட்டாளமே இருக்க, அவர்களையும் அல்லக்கைகளாக வைத்துக்கொண்டு, ஊரைச் சுற்றி வருவான்.

புள், பூச்சி, பூக்கள் தொடங்கி பொதிகை மலை அருவியின் ஊற்று வரைக்கும் அவன் ஊரைச் சுற்றி இருக்கும் அனைத்து இடங்களையும் அழகு அழகாக வெவ்வேறு காலநிலையில் இந்தக் கருவிக்குள் புகைப்படம் எடுத்து வைத்துள்ளான்.

இத்துறையில் முறையான பயிற்சியும் நல்ல வழிகாட்டுதலும் இல்லாததால் இவன் திறமை இந்த சிற்றூரில் முடங்கிக் கிடக்கிறது.

இப்போது அந்தப் புகைப்படக்கருவி சிதறிய முத்து மாலையாக, துண்டு துண்டாகக் கிடந்தது. வாங்கிக் கொடுத்த தந்தையே உடைத்தும் விட்டார், ஆற்றாமையில் மேரு மலையாக நெஞ்சு ஏறியிறங்க விம்மினான்.  

அனைத்தையும் அள்ளி வந்து நடுக்கூடத்தில் வைத்து, சரி செய்ய இயலுமா? என யூடூப் உதவியோடு ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம்” அலைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு, ஓங்கிக் குரல் கொடுத்தபடி, குறுக்கும் நெடுக்குமாக வலம் வந்த மலர், கேலி செய்தாள். 

மலர் இவனுக்கு அக்கா என்றாலும் ஒரு வயதுதான் மனோவை விட மூத்தவள். வீட்டின் ஒரே பெண்பிள்ளை என இவளுக்குச் செல்லம் கொடுக்க, கடைக்குட்டி என மனோவிற்கும் செல்லம் அதிகம் இருக்கும். இதனாலே இருவருக்குள்ளும் எப்போதும் கேலியும் கிண்டலும் சீண்டலும் போட்டியும் சண்டையுமாகத்தான் இருக்கும்.

மலரின் கேலியில் எரிச்சலுற்றவன் சோஃபாவில் இருக்கும் குட்டித் தலையணை ஒன்றை தூக்கி அவள் மீது எறிந்தான்.

“அம்மாஆஆ…” அவள் அலற, “இதுகளுக்கு வேற வேலையே இல்லை. எப்போ பார் எலியும் பூனையுமா சண்டைதான்” முனங்கியபடியே சலித்துக் கொண்டார் சமையலறையில் இருந்த தெய்வானை.

“அவளை ஏன் ராசா சீண்டுற? அவளே கொஞ்ச நாள்ல கல்யாணம் முடிஞ்சி போகப் போறா” எனக் கொள்ளுப்பேரனோடு விளையாண்டு கொண்டிருந்த பாட்டி பேத்திக்காகப் பரிந்து வந்தார்.

இவனுக்கு இது எதுவும் காதில் ஏறியதாகத் தெரியவில்லை. அவன் வேலையில் முழு கவனமுடன் இருந்தான்.

அப்போதுதான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தனர் அண்ணன் மாதவனும் அவன் மனைவி தனுஜாவும்.

தனுஜா இரண்டாம் முறையாகக் கருவுற்று இருக்க, அவளுக்கு இது நான்காம் மாதம்.

விஷயம் மலர் மூலமாக அறிய வர, “விடு மனோ, நான் உனக்குப் புதுசு வாங்கித் தாறேன்” அன்புடன் உரைத்தாள் அண்ணி தனுஜா.

“வேண்டாம் விடு, நான் பார்த்துக்கிறேன்” என ஒரே மூச்சில் மறுத்தவன், நிமிர்ந்து பார்க்கவில்லை.

“விடு தனு, அவன் படிச்ச என்ஜீனியரிங் இதுக்காவது யூஸ் ஆகட்டும்” மாதவன் கூற, “அதுக்கு முதல்ல அவன் படிச்சி இருக்கணுமே?” மீண்டும் சீண்டினாள் மலர்.

அவளின் கேலிக்கு அங்கே அனைவருமே சிரித்தனர்.

மனோவிற்கு எரிச்சல் மிக, “அம்மா மங்கம்மா! நீங்க கொஞ்சம் சீக்கிரம் இந்த வீட்டை விட்டு கிளம்புற வழியைப் பாருங்க” கடுகடுத்தவன், மலரை விரட்டினான்.

“அவ ஏன் கிளம்பணும்? நீதான் கிளம்பப் போற, அதுவும் இன்னைக்கு நைட்டே” என்ற குரல் முன் வர, பின்னே வந்து நின்றார் தந்தை கதிரேசன்.

உக்கிரமாக வந்து நிற்கும் தோற்றமே பஞ்சாயத்து முடித்து வந்துள்ளார் என உரைத்தது.

பஞ்சாயத்தில் ஊர்த்தலைவர் சமாதானம் ஆகவில்லை. அவர் மகள் செய்த காதல் திருமணத்தை விட, அதைப் புகைப்படம் எடுத்து, போஸ்டராக ஒட்டி, தன் கௌரவத்தைக் குலைத்து விட்டார்கள் என மனோகர் மற்றும் அவனது நண்பர்கள் மீது வன்மத்தைச் சேமித்திருந்தார்.

அதிலும் பல காதல் திருமணம் மற்றும் சமூக மாற்றுத் திருமணங்களைச் செய்து வைக்கும் கதிரேசன் இதற்கும் துணை போயிருப்பார் என இவர் மீதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைத்து விட்டார்.

வீட்டில் அனைவரும் கூடி விட, இளைய மகன் மனோகரை அன்றைய இரவே, சென்னையில் இருக்கும் தன் தங்கை வீட்டிற்குக் கிளம்புமாறு உத்தரவிட்டார் கதிரேசன்.

மலரின் திருமணத்திற்கு முதல்நாள் வந்தால் போதும் அதுவரையிலும் ஊர்ப் பக்கமே வரக்கூடாதென முடிவாக உரைத்தார் தந்தை.

மலரும் தனுவும் இவன் உடைமைகளை பேக் செய்ய, அங்கே மாமியாரும் மருமகளும் வத்தல், வடகம் எனக் கட்டிக் கொண்டிருந்தனர். 

மனோகரின் அலைபேசி குறுஞ்செய்திக்கான இசை எழுப்ப, எடுத்துப்பார்த்தால் மாதவனும் தனுவும் தனித்தனியாக இவன் வங்கிக்கணக்கிற்குப் பணம் அனுப்பியிருந்தனர்.  

போவது அத்தை வீடுதான் என்பதால் இவன் வழிச்செலவிற்கு மட்டும் கதிரேசன் எண்ணிக் கொடுத்தார்.

இவனைப் பற்றி குடும்பத்தார் அனைவரும் அறிந்தே இருக்க, பேரனை அழைத்து விபூதி பூசி ஆசீர்வாதம் செய்த சிவகாமியம்மை சுருக்குப்பையில் இருந்து அள்ளிக் கொடுத்தார்.  

மனோகர் இரவு உணவினை முடிக்கும் நேரத்திற்கு எல்லாம் வாசலில் நிற்கும் இவன் நண்பர் கூட்டம் அழைத்து விட்டனர்.

சமையலறைக்குள் கைகழுவ வந்த மனோவை நிற்க வைத்தார் அன்னை. வெகுநாட்கள் கடுகு டாப்பாவிற்குள் சிறைப்பட்டுக் கிடந்த சில்லறைகளுக்கு இன்று இவனால் விடுதலை.

அள்ளி மகனின் சட்டைப்பையில் வைத்தவர் மகனின் கன்னம் தடவியபடி, “ஊருக்கு ஒரு நியாயம், உங்கப்பனுக்கு ஒரு நியாயம்? அவர் மட்டும் இத்தனை வருஷமா அவங்க அம்மாவோடவே இருந்துட்டு எம்பிள்ளையை மட்டும் என்னை விட்டு பிரிக்கிறாரே?” கணவரை எண்ணிக் காய்ந்தார் தெய்வானை.  

மனோவிற்கு வெடித்துக்கொண்டு வந்தது சிரிப்பு.

இனி தான் திரும்பி வரும் வரையிலும் அன்னையிடம் மாட்டிக்கொண்ட தந்தையின் நிலையை நினைக்க, மேலும் அவனின் சிரிப்பு கூடியது.

அன்னையை அணைத்து விடைகொடுத்தவன், வீட்டார்களிடம் விடைபெற்றுக் கொண்டான். இரண்டு மூன்று பைகளைத் தூக்கிக்கொண்டு நண்பர்களுடன் கிளம்பினான் மனோகர்.

மாலை, மரியாதை, ஆடல் பாடல் என இவனை ஆர்ப்பாட்டமாக அழைத்துச் சென்றது நண்பர்கள் கூட்டம்.

“ஏன் மாப்பிள்ளை இந்தமுறை எத்தனை நாள்?” ஒருவன் கேட்க, “மூனு மாசத்துக்கு மேல ஆகும்லே” என்றான் சோகம் வழியும் குரலில்.

அதில் ஒருவன் ஆறுதல் கூற, அவன் தோளிலே தட்டிய மனோ, “ஏம்லே நீங்கச் செய்த வேலைக்கு எங்கப்பா என்னை ஊர் விட்டு ஊர் கடத்தி, தலைமறைவா வைக்கிறார்!” நொந்து கொண்டான்.

“ஏது தலைமறைவா? அங்க பார் மனோ” எனச் சிரிப்போடு ஒருவன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தவன் அதிர்ந்தான்.

‘காதல் புரிந்த இரு மனங்களைத் திருமணத்தில் இணைத்து வைத்த எங்கள் மன்னன் மன்மதன் மனோ வாழ்க வாழ்க!’ 

‘சென்னை சென்று வர இருக்கும் எங்கள் அண்ணன் மன்மதன் மனோ சீரோடும் சிறப்போடும் சென்று வருமாறு வாழ்த்தி வழியனுப்பும் நாங்கள் மன்மதனின் அம்புகள்’ எனப் போஸ்டர், கட்டவுட்கள் என வீதியெங்கும் நிறைந்து இருந்தது.

“அடேய் அப்ரண்டீஸ்களா! நான் தலைமறைவாகப் போறேன்டா அதை ஏன்டா தலைப்புச்செய்தி ஆக்கி வைச்சு இருக்கீங்க?”  நொந்துபோய் தலையில் கை வைத்துக் கொண்டான்.

ஒரு வழியாக கொண்டாட்டமும் கோலாகலமுமாக அவர்கள் ஊரில் இருந்து நெல்லை பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்து சென்னை செல்லும் பேருந்தில் மனோகரை ஏற்றிவிட்டு, கண்ணீர் இன்றி பிரியாவிடை கொடுத்தனர் நண்பர்கள் அனைவரும்.

Advertisement