Advertisement

ஸ்மிரிதியின் மனு – 2_2
அவர்கள் ஐவரையும் தெரிந்தவர் மேடையில் மணமகனுக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.  மூகூர்த்த நேரத்தில் அவர்கள் உள்ளே நுழைந்ததால் மண்டபமேப் பரபரப்பாக இருந்தது. மேடையிலிருந்து சற்று தள்ளி மூன்றாவது வரிசையில் காலியாக இருந்த சேரில் அமர்ந்து கொண்டனர்.  முதலில் பிரேமா, அவரருகே ஸ்மிரிதி, அடுத்து சிவகாமி, அவரருக்கே நாதன், கடைசியாக மனு அமர்ந்து கொண்டான்.
அவரருகே உட்கார்ந்திருந்த ஸ்மிரிதியிடம்,”உன் தலையக் காட்டு..பூ வைச்சு விடறேன்.” என்று அவளின் அனுமதிக்குக் காத்திராமல் அவளைத் திருப்பி அவர் எடுத்து வந்திருந்த இரண்டு மல்லிச் சரங்களை ஹேர் கிளிப்பின் உதவியுடன் ஸ்மிரிதியின் கூந்தலில் சூட்டினார் சிவகாமி.  பின் ஸ்மிரிதியைப் பார்த்து,
“உன் வயசுல உங்கம்மா அஞ்சாறு முழத்தை வைச்சுகிட்டு டெய்லி ஸ்கூலுக்கு வருவா..நீயும் அவ அப்ப எப்படி இருந்தாளோ அந்த மாதிரி இப்ப இருக்கணும்..இப்ப அவ எப்படி இருக்காளோ அந்த மாதிரி இருக்காத.” என்று கடுமையாகப் பேசினார் சிவகாமி.
“இல்ல ஆண்ட்டி..பூ வைச்சுகிட்டு பழகமில்ல.” என்றாள் ஸ்மிரிதி.
“எவ்வளவு புது பழக்கம் பழகிக் கிட்ட..அதே மாதிரி இதையும் பழகிக்க.” என்று வெடுக்கென்று பதில் சொன்னார் சிவகாமி.
அவள் பழகிக் கொண்ட புது பழக்கங்கள் என்னெவென்று அங்கே அம்ர்ந்திருந்த அனைவருக்கும் தெரியும்.  அவர்கள் இருவரின் பேச்சில் தலையிடாமல் மௌனமாக அமர்ந்திருந்தனர் மற்றவர்கள்.
“இந்தப் புடவை எங்க வாங்கின? கான் மார்கெட்டா?” என்று கேட்டார் சிவகாமி.
“இல்ல..பெங்களூர்ல..என் பிரண்ட் பொடிக் வைச்சிருக்கா.” என்று பதில்லளித்தாள்.
“புடவை நல்லா இருக்கு..பிளவுஸ்தான் இல்லவே இல்ல.” என்று சிவகாமி சொன்னதும் பிரேமா, ஸ்மிரிதி இருவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.
 “ஸ்மிரிதி ஸ்டைல்.” என்று விரிந்தப் புன்னகையுடன் பதில்லளித்தாள் ஸ்மிரிதி.
அவள் பதிலைக் கேட்ட சிவகாமி, ஸ்மிரிதியின் காதுருகே,”இந்த பிளவுஸ்ஸ எப்படி போட்டுகிட்ட?” என்று கிசுகிசுத்தார்.
ஸ்மிரிதியும் அவரைப் போலவே,”எப்படிக் கழட்ட போறேனோ அதே வழிலதான் போட்டுகிட்டேன்.” கிசுகிசுத்தாள்.
அவள் பதிலைக் கேட்ட சிவகாமி,”ஊரு மொத்தம் ஒரே மாதிரி போட்டு, கழட்டற விஷயத்துக்கு நீ ஒருத்திதான் புதிரு போட முடியும்.” என்றார்.
“ஆன் ட்டி..ஊரு போலவே நான் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஊர், உலகம் ஒத்துக்க மாட்டேங்குது..அதான் நான் எதுக்கும் விளக்கம் கொடுக்க விரும்பறதில்ல.” என்று சற்றுமுன் சிவகாமி அவளின் பழக்க வழக்கத்தைப் பற்றி பேசியதற்கு பதில் கொடுத்தாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதிக்கு சிவகாமி பதில் சொல்லுமுன்,
“சிவகாமி..கொஞ்சம் நேரம் சும்மா இரு..தாலி கட்ட போறாங்க.” என்று அவர் மனைவியைக் கண்டித்தார் நாதன்.
மூகூர்த்த நேரம் நெருங்கியவுடன் மங்கள் வாத்திய முழக்கங்களுடன், அழைப்பை ஏற்று வந்திருந்தவர்களின் ஆசிர்வாதத்துடன் மாங்கல்ய தாரணம் நடைபெற்றது.  
அந்த மண்டபே ஒருவிதமான விசித்திரத்தை விட்னஸ் செய்து கொண்டிருந்தது. அங்கே நடைபெற்று கொண்டிருந்த திருமணத்தை சலனமேயில்லாமல் இளையத் தலைமுறையினர் இருவர் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தனர்.  அடுத்து அவர்கள் வாழ்க்கையிலும் அப்படி ஒரு நிகழ்வு ஏற்படலாம் என்று எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் அதை ஒரு தினசரி நிகழ்ச்சி போல் எடுத்து கொண்டனர் இருவரும்.
திருமணம் நடந்து முடிந்தவுடன் மேடையிலிருந்து இறங்கி வந்த ஒரு பெண்மணி, நேராக பிரேமாவிடம் வந்து,
“நீ நிஜமாதான் வந்திருக்கியா? என்னால நம்ப முடியல.” என்றார்.
“என்ன புவனா, உன் ஒரே பையன் கல்யாணத்துக்கு பிரேமா வராம இருப்பாளா?” என்று அவரிடம் பொய்க் கோபத்துடன் கேட்டார் சிவகாமி.
“இல்ல..நீ வருவேனுத் தெரியும் ஆனா பிரேமாதான் எனக்கு ஸர்ப்ரைஸ்.” என்றார் புவனா.
“அவ பொண்ணையும் அழைச்சுகிட்டு வந்திருக்க.” என்று பிரேமா அருகில் நின்று கொண்டிருந்த ஸ்மிரிதியை அறிமுகப்படுத்தினார் சிவகாமி.
உடனே ஸ்மிரிதியும்,
“நமஸ்தே ஆன் ட்டி..நான் ஸ்மிரிதி.” என்று சொல்லி புவனாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். ஸ்மிரிதியின் அந்தச் செயலில் தடுமாறிப் போன புவனா,
“நல்லா இரு மா..உன்னைச் சின்ன வயசுலப் பார்த்தது அதனால இப்ப அடையாளம் தெரியலை.” என்று தயக்கத்துடன் ஆசிர்வாதம் செய்தார்.
“பரவால்ல ஆன் ட்டி..அம்மாவையே இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு மீட் செய்யறேன்.” என்று அவருக்கு ஆறுதலாகப் பேசினாள் ஸ்மிரிதி.
அதற்குள் நாதன் அருகே நின்று கொண்டிருந்த மனுவும் புவனாவின் கால்களில் விழுந்து வணங்கினான்.  உடனே,
“சுபஸ்ய சீக்கிரம்.” என்று ஆசிர்வாதம் செய்தார் புவனா.
“ஏன் ஆன் ட்டி உங்களுக்கு இந்த வேலை? நான் சுதந்திரமா இருக்க விருப்பப்படறேன்.” என்று புவனாவிடம் மனு கொடுத்தான் மனு.
“போடா..நீயும் உன் கான்செப்டும்..வக்கீலுங்கறதுனால இரண்டு ஆப்ஷந்தானா உனக்கு..அடிமைத்தனம் இல்ல சுதந்திரம்..இதுக்கு நடுவுல நிறைய இருக்கு டா..சுதந்திர அடிமைங்ககூட இருக்காங்க..உன்னோட அப்பா, அம்மா போல.” என்றார் புவனா.
“ஆமாம்..அவ சொல்றது சரி..எனக்கும், உங்கப்பாவுக்கும் நடுவுல யார் அடிமைனு அடிச்சுப்போம்.” என்று அவர்கள் திருமணத்தை விளக்கினார் சிவகாமி.
“நம்ம கதை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்..மனு கொடுக்க படையெடுத்தவகிட்ட என் மனசைக் கொடுத்தேன்..இப்ப நம்ம இரண்டு பேருக்கும் நடுவில நீதிபதியா வீக்கல்  மகன் இருக்கான்.” என்று நாதன் அவர் பங்குக்கு அவர்களின் திருமணத்தை விவரித்தார்.
“ஏன் பெரியவன மட்டும் சொல்றீங்க..சின்னவன் பெரியவனுக்கு எல்லாத்துலையும் துணையா இருக்கான்.” என்று அவரின் இளைய மகனையும் விவாக விவாதத்தில் கொண்டு வந்தார் சிவகாமி.
“மாறன் ஏன் வரல?” என்று விசாரித்தார் புவனா.
“அவன் இப்பதான் புதுசா ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்திருக்கான்..லீவு எடுக்க முடியாது.. அதான் வரல.” என்றார் சிவகாமி.
“ஆன் ட்டி..நீங்க எப்படி அங்கிள்கிட்ட ஏமாந்தீங்க? தில்லை நாதர் ஆட்சி சிதம்பரத்தில மட்டுமில்ல தலை நகர்லையும்தான்..உங்க பெயரப் பார்த்து அவரு உங்களை மனைவியாக்கிருக்காரு..என்னிக்கும் அவரு கீழ, ஆட்சித் தலைவர் ஆட்சிக்கு உட்பட்டு.” என்று சிவகாமியைப் பார்த்து பரிதாபப்பட்டாள் ஸ்மிரிதி.
“என் ராஜாத்தி..இன்னிக்கு உன் வாயலாக் கேட்கறச்சே தான் தெரியுது உன் வயசுல நான் எத்தனை முட்டாளா இருந்திருக்கேனு.” என்று அங்கலாய்த்தார் சிவகாமி.
“இன்னிக்கு நீங்க இரண்டாவது..காலைல அம்மாவும் இதேயேதான் சொன்னாங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ எங்களைப் போல இல்ல..நீ  புத்திசாலி ஸ்மிரிதி.” என்றார் சிவகாமி.
“அப்ப எனக்கு அறிவு இருக்கு இல்ல ஆன் ட்டி?” என்று மண்டப வாசலில் மனு அவளிடம் கேட்ட கேள்விக்கு அவன் அம்மா மூலம் பதில் அளிக்க முற்பட்டாள் ஸ்மிரிதி.
“புத்திசாலினா சராசரிய விட அறிவு ஜாஸ்தினு அர்த்தம்..உங்களுகெல்லாம் நான் தான் தமிழ் சொல்லி தந்தேன்..எப்படி மறந்த புத்திசாலி வார்த்தைய?” என்று கேட்டார் சிவகாமி.
“நான் மறக்கல ஆன் ட்டி..முட்டாளுக்குதான் புத்திசாலியத் தெரியாது.” என்றாள் மனுவை நேரடியாகப் பார்த்து.
 
ஸ்மிரிதிக்கு மனு பதில் சொல்லுமுன் அவனைப் பார்த்து,
“உன் பிரண்ட் கல்யாணத்துக்கு இப்படிதான் மூகூர்த்த நேரத்திற்கு வருவியா? முன்னாடியே ஏன் வரல?” என்று  கேட்டார் புவனா.
“பிரண்டு கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடியும் வந்திருக்கலாம்..முன்னாடியே கல்யாணம் செய்துகிட்டு புருஷன், பொண்டாட்டி இரண்டு பேராவும் வந்திருக்கலாம்..நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்.” என்று மறுபடியும் அங்கலாயத்தார் சிவகாமி.
“என் ஆசிர்வாதம் பலிக்கும்.. உன் மனக்குறைத் தீரும்.” என்று மனுவிற்கு அவர் செய்த ஆசிர்வாதத்தை திடமாக்கி மனுவின் மனுவைத் தள்ளுபடி செய்து அவர் தோழிக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தார் புவனா.

Advertisement