Advertisement

ஸ்மிரிதியின் மனு – 2_1
கோயமுத்தூர்
“ஆதங்கம்..இயல்பா? இயலாமையா?”
“எனக்கு இப்பெல்லாம் ஏதேதோ நினைவுக்கு வருது..சின்ன வயசுலேர்ந்து கத்துகிட்ட தியானம், இப்ப செய்யற யோகா எதுவுமே தடைப் போடமுடியாம நினைவுகள்ள மூழ்கிப் போயிடறேன்.” என்றார் பிரேமா.
“ஏன் இப்படி திடீர்னு? எல்லாம் நல்லாதானே போயிகிட்டிருக்கு.” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“யாரு நல்லதுக்கு எல்லாம் நடக்குது? நடந்தது?”
“ஏன் இப்படி யோசனை வருது உங்களுக்கு?”
“இந்த ஊர்லதான் பிறந்து, வளர்ந்து, படிச்சு முடிச்சிட்டு வேலைக்குப் போனேன்… இதே ஊர்லதான் உங்கப்பாவைக் கல்யாணமும் செய்துகிட்டேன்..ஆன்மீகத்துயும் ஆண்டவனையும் நம்பற எனக்கு ஆண்டவன வேணுங்கறபோது கூட அழைச்சுக்கற உங்கப்பா மேல ஆசை எப்படி வந்ததுனு தெரில.”
“அவர என் வழிக்கு மாற்ற முயற்சிக்கணுமுனு நினைச்சு நானும், என்னை அவர் வழிக்கு கொண்டு வர முடியுமுனு நினைச்சு அவரும் எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சதுனால எந்த வழினுத் தெரியாம எங்க இரண்டு பேரோட வாழ்க்கைப் பயணமும் பாதிலையே முடிஞ்சிடுச்சு..வேற வழிக் கிடைக்காம தனி வழியத் தேர்ந்தெடுத்துகிட்டோம்..எங்க இரண்டு பேருக்கும் நடுவுல நீ மாட்டிகிட்ட.. அந்த வயசுல உனக்குப் புரிஞ்சதை வைச்சு நீயே உன் வழியத் தேர்ந்தெடுத்துகிட்ட.” என்றார்.
“அம்மா, ப்ளீஸ்… நடந்து முடிஞ்சதைப் பற்றி யோசிக்காதீங்க..நீங்க எப்படியெல்லாம் வாழணுமுனு நினைச்சீங்களோ இனிமே அப்படி வாழுங்க..ஸ்கூல்லையே அடைஞ்சு கிடக்காதீங்க..சுசித் ராகிட்ட பேசி உங்களுக்கு வீகெண்ட் டூர் ஏற்பாடு செய்யறேன்.” என்றாள் ஸ்மிரிதி
“அதெல்லாம் வேணாம் எனக்கு..லீவுல நாள்லகூட ஸ்கூலையே இருக்கறது பழக்கமாயிடுச்சு..ஸம்மர் ப்ரேக்ல ஸ்கூலே நிறைய கோர்ஸ் நடத்தறாங்க..வாழ்க்கைய எப்படி வாழணுமுனு பத்து வருஷமா பத்து பேராவது அவங்க அவங்க முறைல சொல்லிக் கொடுத்திருப்பாங்க..எனக்குதான் எதுவும் சரியா வரலை..அதெல்லாம் தெரிஞ்சுகிட்ட பிறகும் நிறைய கேள்விகள்தான் மனசுல வருது…எங்கையோ தப்பு நடந்திடுச்சு ஸ்மிரிதி..என்னால அது எனென்னு கண்டு பிடிக்க முடியல.” என்று மனம் வருந்தினார் பிரேமா.
“இந்த மாதிரி ப்ரோகரமெல்லாம்  உங்களுக்கு வேணாம்..நாம எங்க தப்பு செய்யறோமுனு நாமதான் கண்டு பிடிக்கணும்..வெளிச்சம் இருக்கற எல்லா பாதையம் நாம போக வேண்டிய இடத்துக்கு அழைச்சுகிட்டு போகாது..பாதை இருட்டா இருந்தாலும் நாம பயப்படாமப் பயணம் செய்யதோமுணா நாம போக வேண்டிய இடத்துக்கு போயி சேர்ந்திடலாம்.”
“அந்தப் பத்து பேரும் உங்களுக்குக் காட்டினது உங்களோட பாதை இல்ல அதனாலதான் உங்களுக்கு எங்கையோத் தப்பு நடந்த மாதிரி தெரியுது..அடுத்த ஸம்மர் ப்ரேக்ல்  நானும், நீங்களும் ஊர் சுற்றலாம்..உத்தர கர்னாடக்காவ சுற்றிப் பார்க்கலாம்..சுசித் ராவாட ஹஸ்பண்ட் மஞ்சு நாத் வீடு அங்கதான்..சுசித் ரா கல்யாணம் உடுப்பி பக்கத்திலதான் நடந்திச்சு.” என்றாள் ஸ்மிரிதி.
“அவளுக்கு கல்யாணமாகி இரண்டு வருஷமாயிடுச்சு..நீ அப்ப என்கூட இரண்டு மூணு நாள் இருந்திட்டு போகனுமுனு நினைச்ச ஆனா இருந்ததெல்லாம் சுசித் ராவோடதான்..ஹாஸ்டல் போனதிலிருந்து நம்ம வீட்டைவிட பிரண்டுங்களோட வீட்லதான் நிறைய நாள் இருந்திருக்க.” என்றார்.
“யார் வீட்லையும் நிறைய நாளெல்லாம் இல்ல..எல்லார் வீட்லையும் கொஞ்ச நாள் இருந்திட்டு தல்ஜித்தோட ஊருக்குப் போயிடுவோம்..அவன் குடும்பத்துக்கு ஸ்கூல், காலேஜ், ஹாஸ்பிட்டல் எல்லாம் இருக்கு…..அவனோட பீஜி (பாட்டி) மட்டும் தனியா பீயஸ்ல (beas) இருக்காங்க..நாங்க எல்லாரும் அவங்களோட இருந்திட்டு வருவோம்..என்னோட செகண்ட் செமஸ்ட்ருக்கு அப்பறம் நானும், சுசித் ராவும் மட்டும் பீஜியோட மூணு மாசத்துக்கு மேல இருந்தோம்..என்னோட படிப்புல காப் வந்தததுக்கு அதுதான் காரணம்.” என்றாள்.
அவளுடைய படிப்பில் ஏற்பட்ட தடையைப் பற்றி சாதாரணமாக சொன்ன ஸ்மிரிதியைப் பார்த்து,
“நான் உன்னை அப்ப காரணம் கேட்டபோது சொல்லல..இவ்வளவு வருஷம் கழிச்சு நிதானமா சொல்ற..உன் இஷ்டம்போலதான் உன் படிப்பு எல்லாம் நடந்திச்சு..நான் டீச்சரா இருந்துகிட்டு உன்னை கயீட் செய்ய முடியலை.” என்றார் பிரேமா.
“அம்மா, நாங்க ஏன் பீஜியோட இருந்தோமுனு  இப்பவும் உங்களுக்குச் சொல்ல விரும்பல…அது சுசித் ரா சம்மந்தப்பட்ட விஷயம்.” என்றாள் ஸ்மிரிதி.
“நீ என்கிட்ட எதுவும் சொல்லணுமுனு அவசியமில்ல ஸ்மிரிதி..நான் நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கல..நடக்கறத ஏத்துக்கற மனப்பக்குவத்தை தேடியே என் வாழ்க்கை முடிஞ்சிடும்.” என்று ஆரம்பித்த இடத்துக்கே வந்தார் பிரேமா.
“என்னம்மா திரும்பவும் அப்படியே பேசறீங்க? உங்களுக்குத் தேவையானது என்னென்னு சொல்லுங்க நான் செய்து தரேன்.” என்றாள் ஸ்மிரிதி.
“இப்போதைக்கு ஒரே ஒரு வேண்டுகோள்..அம்மாக்காக ஒருமுறை மலை மந்திர் முருகன் கோவில் போவியா?” என்று கேட்டார் பிரேமா.
“அவ்வளவுதானே..டெல்லி திரும்பி போனவுடனையே நான் போறேன்.” என்று வாக்களித்தாள் ஸ்மிரிதி.
அதற்குமேல் பேச்சை வளர்க்காமல்,”ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்திட்டோம்… கொஞ்ச நேரம் தூங்கலாம்.” என்றார் பிரேமா
அடுத்த ஒரு மணி நேரம் தாய், மகள் இருவரும் அசதியில் அயர்ந்து தூங்கினர்.  ஸ்மிரிதியின் போனிலிருந்த அலார்ம் அவர்களை எழுப்ப, இருவரும் எழுந்திருக்க மனமில்லாமல் விழித்துக் கொணடனர். 
“அம்மா, இப்ப உடம்பு எப்படி இருக்கு? தள்ளறதெல்லாம் சரியாயிடுச்சா?” என்று பிரேமாவைக் கேட்டாள் ஸ்மிரிதி.
“இப்ப நல்லாதான் ஃபீல் செய்யறேன்..ரெஸ்ட் தேவைப்பட்டிச்சு.” என்றார் பிரேமா.
“குளிச்சிட்டு இங்கையே டிபன் சாப்டிட்டு போலமா?” என்று ஸ்மிரிதி கேட்க,
“வேணா மா..லேட்டாயிடும்..மூகூர்த்தம் சீக்கிரம் வைச்சிருக்காங்க..மண்டபத்துக்கேப் போயிடலாம்.” என்றார் பிரேமா.
“நீங்க மெடிஸன் எடுத்துக்கணுமே.” என்றாள் கவலையாக ஸ்மிரிதி.
“இன்னிக்கு ஒரு நாள் லேட்டா எடுத்துகிட்டா எதுவும் ஆகாது.” என்றார்.
அதற்கு மேல் அவரோடு வாதிடாமல்,
“அம்மா, நீங்க இங்க ரெடியாகுங்க..நான் என் ரூமுக்குப் போயி ரெடியாகுறேன்.” என்று அவள் அறைக்கு சென்றாள் ஸ்மிரிதி.
அரைமணி நேரம் கழித்து மறுபடியும் பிரேமாவின் அறைக்கு அவள் வந்த போது குளித்து முடித்து ஆடம்பரமில்லாதப் பட்டு புடவையில் அமரிக்கையாக தெரிந்தார் பிரேமா. 
அதே சமயம் தங்க நிறத்தில் வயலெட் நூலிழைகளால் உடல் முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்ட முகாப் (muga) பட்டுப் புடவையில் ஆர்பாட்டமாகத் தெரிந்தாள் ஸ்மிரிதி.
ஸ்மிரிதியைப் பார்த்து,“இந்தப் புடவை ரொம்ப கிராண்டாத் தெரியுது.” என்றார் பிரேமா.
“இது சுசித் ரா அவ கடைலேர்ந்து கொடுத்தது….நேத்து திடீர்னு  முடிவு செய்தேன் உங்களோட இங்க வரணுமுனு அதான் அவகிட்ட இருக்கறத வாங்கிகிட்டேன்..என் கலருக்கு மஞ்சள் ஒத்துவராது ஆனா எனக்கு பிடிச்சிருந்திச்சு.” என்று சொல்லி மாடல் போல் புடவை முந்தானை விரித்து பிரேமாவை ஒருமுறை சுற்றி வந்தாள் ஸ்மிரிதி.
“ஸ்மிரிதி.” என்று அதிர்ச்சியுடன் அழைத்தார் பிரேமா.
“என்ன?” என்று பார்வையாலையேக் கேட்டாள் ஸ்மிரிதி.
“இது டெல்லி இல்ல..பிளவுஸ்ல பின்னாடி ஒண்ணுமேயில்ல.” என்றார் பிரேமா.
“மறைக்க வேண்டிய இடத்தை மறைக்குதில்ல.தேவயில்லாத இடத்தில துணிய வேஸ்ட் செய்யக்கூடாது.” என்று சொல்லி சிரித்தாள் ஸ்மிரிதி.
“கல்யாணத்துக்குப் போறோம்.” என்றார் டீச்சர் பிரேமா
“நான் இதை பெங்களூர்லதான் வாங்கினேன்…இங்கையும் இந்த மாதிரி போட்டுக்கறாங்க..யு வில் பி ஸர்ப்ரைஸ்ட்..நீங்க ஸ்கூல் பசங்களோடையே இருக்கறதுனால வெளில நடக்கறது தெரிய மாட்டேங்குது..இன்னிக்கு அங்க மற்றவங்க எப்படி டிரஸ் போடறாங்கனு பாருங்க..காக்ரா சோளிதான் இப்ப எல்லாரும் போடறாங்கனு சுசித் ரா ஸ்ஜஸ்ட் செய்தா நான் தான் புடைவை செலக்ட் செய்தேன்..பிளவுஸ் ரெடிமெட்.” என்றாள்.
“நல்ல வேளை காக்ரா சோளி வாங்கல..அதை எப்படி போட்டுக்கறாங்களோ?” என்றார் பிரேமா.
“அம்மா..எப்படி போட்டுக்கறாங்கன்னு என்ன கேள்வி? இந்தக் காலத்தில பொண்ணுங்க அவங்களுக்குப் பிடிச்ச துணியப் போட்டுக்க துணிய வேண்டியிருக்கு.” என்றாள் ஸ்மிரிதி.
அதற்குமேல் அவள் உடையைப் பற்றி விமர்சிக்காமல் அவர் கைப்பையைத் திறந்து அதிலிருந்து ஸ்டிக்கர் பொட்டை எடுத்து அவள் நெற்றியில் ஒட்டினார் பிரேமா.
“காதுல, கழுத்துல போட்டுக்க தெரியுது ஆனா நெற்றில பொட்டு வைச்சுகணுமுனு தெரியலையா?”
“பொட்டு பழக்கமில்ல….அதைப் பற்றி சுசித் ராவும் யோசிக்கல.கைல வைச்சிருக்கற ஹாண்ட் பேக், கால்ல போட்டுகிட்டு இருக்கற செருப்பு எல்லாம் அவ ஐடியாதான்.”என்று அவள் புடவையைச் சற்று தூக்க, கால்களில் தங்க நிறத்தில் காலணிகள்.
“எதுக்கு இதெல்லாம் வாங்கிகிட்ட?என்கிட்ட இருக்கற புடவைல ஒண்ணுக் கொடுத்திருப்பேனே.” என்றார் பிரேமா.
“அப்பறம் பிளவுஸுக்கு யார் அலையறது?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
அவள் பிளவுஸைப் பற்றி பேசியவுடன், அவளின் பின்புறம், முன்புறம் இரண்டையும் நோட்டம் விட்டு கொண்டிருந்த பிரேமா,
“ஹெல்ப் இல்லாம எப்படி போட்டுகிட்ட இந்த பிளவுஸ? தலை வழியாவா?என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.
“இல்ல மா..பின்னாடி இருக்கற பட்டைத்தான் பிடிச்சுகிட்டிருக்கு..டாக்டர் ஆக வேண்டிய டிஸைனர் ஆகியிருக்கா… அவளோட அறிவெல்லாத்தையும்  அரை செண்டிமீட்டர் ஒப்பனிங்க கண் பார்வைல படாம இருக்கறதல காட்டியிருக்கா.” என்று சொல்லி சத்தமாக சிரித்த அவர் மகளின் சந்தோஷத்தைப் பார்த்து அப்போது பிரேமாவின் கண் கலங்கியது.
“இப்ப எதுக்கு அழறீங்க? இந்த கல்யாணத்துக்கு நான் வந்ததே உங்க சந்தோஷத்துகாகதான்..உங்க பிரண்ட நான் பார்த்ததுகூட கிடையாது..உங்களோட இருக்கணுமுனுதான் இந்த ஏற்பாடு..கமான் மாம்..இன்னிக்கு என் ஜாய் செய்யலாம்.” என்று அவர் கண்களைத் துடைத்து விட்டு அவர் கையைப் பிடித்து கொண்டு அறையினிலிருந்து வெளியேறினாள் ஸ்மிரிதி. 
பிரேமாவும், ஸ்மிரிதியும் ஹோட்டல் ரிசெப்ஷனை அடைந்த போது ஹோட்டல் வாசலில் அவர்களுடைய வண்டி தயாராக இருந்தது. காலை வேளை பரபரப்பில் இருந்தது ஹோட்டல்.  அவர்கள் செக்-இன் செய்தபோது தூங்கி வழிந்து கொண்டிருந்த ஆண் ரிசெப்ஷனிஸ்டுக்குப் பதிலாக ஒரு இளம் பெண் இருந்தாள். அவர்களைப் பார்த்து புன்னகைப் புரிந்த அவளிடம் அவர்களின் அறையின் கீ கார்டை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தனர்.  வாசலில் தயாராக இருந்த கார் சாவியை வாங்கிக் கொண்டு டிரைவர் சீட்டில் ஸ்மிரிதி அமர்ந்தவுடன் அவள் பக்கத்தில் அமர்ந்த பிரேமா அவர் மகளைப் பார்தது,
“கவனமா ஓட்டு.” என்று எச்சரிக்கை விடுத்தார்.
“பெங்களூர்லேர்ந்து இங்க வரைக்கும் வந்தபோது ஒண்ணுமே சொல்லல இப்ப எதுக்கு?” என்று கேட்டாள் ஸ்மிரிதி.
“அப்ப நீ நிதானமா இருந்த..இப்ப நீ நிதானத்த இழக்க வைப்ப..உன்னோட உற்சாகம் எல்லாருக்கும் ஆபத்தா மாறிடப் போகுது.” என்றார்.
“யு ஆர் ரைட்..ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் நான் இந்த மாதிரி இருக்கேன்..அப்ப கத்துகிட்ட பாடத்தை மறக்கல மா.” என்று உற்சாகம் வடிந்து போயி பதில்லளித்தாள் ஸ்மிரிதி.
“ப்ளீஸ்..நான் சொல்றத, பேசறத கண்டுக்காத நீ சந்தோஷமா இருக்கணும்.” என்று ஸ்மிரிதியை மறுபடியும் உற்சாகப்படுத்த முயன்றார் பிரேமா.
“விடுங்க..சுசித் ராவும் என்கிட்ட நீங்க சொன்னததான் சொன்னா..எனக்கு இப்ப வயசு பதினைஞ்சு இல்ல இருபத்தைஞ்சுன்னு.”
“ஸ்மிரிதி..நான் அந்த அர்தத்தில சொல்லல..உன்னைய இப்ப பார்க்கறச்சே நான் உன் வயசுல எத்தனை முட்டாள்தனமா இருந்திருக்கேனு இப்பதான் எனக்குத் தெரியுது.”
“யெஸ்..முட்டாளாதான் இருந்திருக்கீங்க..உங்க வீட்டை எதிர்த்துகிட்டு அப்பாவக் கல்யாணம் செய்துகிட்டீங்க..என்னைப் போல ஒரு பொண்ணைப் பெத்துகிட்டீங்க.” என்றாள் ஸ்மிரிதி.
“நோ..நீ என்னோட பெஸ்ட்..என் முட்டாள்தனம் வெறும் உங்கப்பாதான்.” என்று மறுத்தார் பிரேமா.
பிரேமாவுடன் அதற்கு மேல் பேசாமல் மௌனமாக காலை நேர டிராஃபிக்கை சமாளித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்த ஸ்மிரிதி,
“மூகூர்த்தம் முடிஞ்சிட்டு நம்மகிட்ட நிறைய டயமிருக்கும்..உங்களுக்கு வேற எங்கையாவது போகணுமா?” என்று கேட்டாள்.
ஸ்மிரிதி யாரைப் பற்றி கேட்கிறாள் என்று புரிந்து கொண்டு,”எங்க வீட்டு ஆளுங்களோட எனக்கு எந்த உறவுமில்ல..அவங்கள பார்க்க நான் கோயமுத்தூர் வரல.”
“புது வரவா நீ இருந்தபோது உன்னையும் உறவா ஏத்துக்க அவங்க விரும்பல..நான் பெங்களூர்ல வேலைக்கு சேர்ந்த போது சிவகாமி எனக்காக விசாரிச்சா..எந்தக் கல்யாணத்துக்காக என்னை ஒதுக்கி வைச்சாங்களோ அது முறிஞ்சு போனப் பிறகு என்னை மறுபடியும் சேர்த்துப்பாங்கனு அவ நினைச்சா ஆனா முறிஞ்சு போனத ஒட்ட வைக்க முடியாது….உறவு விட்டு போனது போனதுதான்.” என்றார் விட்டேத்தியாக.
“சரி விடுங்க மா..மண்டபம் வர போகுது.” என்று சொல்லி சற்று வேகமாகக் காரை ஓட்டினாள் ஸ்மிரிதி.
மண்டபம் இருந்த தெரு முழுவதும் இடைவெளி இல்லாமல் இருபுறமும் கார்கள் பார்க் செய்ய பட்டிருந்தன.
“இவ்வளவு கார் இருக்கு..நாம ஆட்டோவில வந்திருக்கணும்.” என்றார் பிரேமா.
பார்க் செய்ய இடத்தைத் தேடியபடி மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்த ஸ்மிரிதி திடீரென்று வேகமெடுத்து இரு கார்களுக்கு நடுவே காலியாக இருந்த குறுகிய இடத்தில் லாவகமாக இன்னொரு காரை முந்திக் கொண்டு போய் பார்க் செய்தாள்.  அவர்கள் இருவரும் சற்று கஷ்டபட்டு இறங்க வேண்டியிருந்தது ஆனால் வண்டியை ஒரு கைத்தேர்ந்த ஓட்டுனர் போல் கச்சிதமாக நிறுத்தியிருந்தாள் ஸ்மிரிதி.
அவர்கள் வண்டியை விட்டு இறங்கி வந்தவுடன் அவர்களுக்காகக் காத்திருந்தனர் மற்றொரு காரிலிருந்து இறங்கிய ஒரு ஜோடி.
“பிரேமா..நீதானா? நான் ஸ்மிரிதியதான் பார்த்தேன் ஆனா நாதன் தான் சொன்னார் நீயும் பக்கத்தில உட்கார்ந்திருக்கேனு.” என்று சொல்லி பிரேமாவை இறுக்க அணைத்து கொண்டார் சிவகாமி.
“ஹலோ ஆன் ட்டி..ஹலோ அங்கிள்.” என்று அவர்கள் இருவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள் ஸ்மிரிதி.  அவள் வணங்கி எழுந்த போது அவர்கள் அருகே மூன்றாவதாக இன்னொரு ஜோடி கால்கள் ஆஜராகின. தலை நிமிராமலையே வேஷ்டியில் இருந்த அந்த இன்னொரு ஆள் யாரென்று ஸ்மிரிதியின் உள்ளுணர்வு கண்டு கொண்டது.
ஸ்மிரிதியைக் கண்டு கொள்ளாமல் அவளைப் போல் பிரேமாவின் கால்களில் விழுந்து வணங்கினான் அந்தப் புதியவன். பின் அவரைப் பார்த்து,”ஸர்ப்ரைஸ் ஆன் ட்டி..நீங்க வர மாட்டீங்கனு அம்மா சொன்னாங்க.” என்றான்.
“நேத்துவரைக்கும் வர ஐடியா இல்ல..ஸ்மிரிதி அவ விஷயமாப் பெங்களூர் வந்திருந்தா அப்படியே அவ பிரண்டோட வண்டிய எடுத்துக்கிட்டு இராத்திரி புறப்பட்டு இன்னிக்கு காலைல இங்க வந்து சேர்ந்தோம்.” என்றார் பிரேமா.
“ஒவர் நைட் டிரைவிங்..டேரிங்.” என்று பிரேமாவிடம் சொன்னவன் ஸ்மிரிதியைப் பார்த்து,
“ஒரு ஃபிளைட் பிடிச்சு வர வேண்டியதுதான…அறிவில்லையா உனக்கு?” என்று கேட்டான்.
அவன் கேள்வியையோ அவனையோக் கண்டு கொள்ளாமல், பிரேமாவைப் பார்த்து,
“அம்மா, வாங்க..உள்ள போகலாம்.” என்று யாருக்கும் காத்திருக்காமல் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஸ்மிரிதி.
அவர்கள் எல்லாரும் ஸ்மிரிதியை தொடர்ந்தனர்.  பெரியவர்கள் மூவரும் அவர்களுக்குள் பேசிக் கொண்டு வந்தனர் ஆனால் இளையவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தவிர்த்தனர்.
கல்யாண மண்டபத்தின் நுழைவாயிலிருந்து வாசல் வரை மல்லிகை மற்றும் சாமந்தி பூக்காளால் மலர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.  அந்த பந்தலிலிருந்து இருபுறமும் ரோஜா சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. மண்டபத்தின் வாயிலில் வரவேற்பிற்காக நின்று கொண்டிருந்த பெண்கள் மல்லி சரத்தைக் கல்யாணத்திற்கு வருகைத் தரும் பெண்களுக்கு தாராளமாக வழங்கி கொண்டிருந்தார்கள்.
அவர்கள் கொடுத்தப் பூவை பிரேமா மறுத்துவிட, ஸ்மிரிதியும் அவரைப் பின் தொடர்ந்து, “வேணாம்.” என்றாள்.  ஆனால் அவர்களுடன் வந்த சிவகாமியோ நாலைந்து சரங்களை வாங்கிக் கொண்டு அதை ஒன்றாகச் சேர்த்து ஒரு பெரிய சரமாக அவர் கூந்தலில் சூடிக் கொண்டார்.  பின் அந்த பெண்களிடம் இன்னும் இரண்டு சரத்தைப் பெற்று கொண்டு அந்த டேபிளில் வைக்கப்பட்டிருந்த கிளிப் பாக்கெட்டிலிருந்து மூன்று ஹேர் கிளிப்பை எடுத்துக் கொண்டார்.

Advertisement