Advertisement

ஒருவழியாக சில சண்டைகளுக்குப் பிறகு உலகின் மிதக்கும் நகரமான வெனிஸை வந்தடைந்தனர் உதயனும் தர்னிகாவும்.
வெகு நாட்களாக ஆசையோடு காத்திருந்த இடத்தைப் பார்த்ததும் தர்னிகாவிற்கு பேச்சே வரவில்லை. அதுவும் தண்ணீரில் தான் போக்குவரத்து எனும் போது அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இத்தாலி நாட்டின் உள்ள தீவு தான் வெனிஸ். 120 குட்டி தீவுகள் இணைந்த நகரமே வெனிஸ். சில சாலைகள் மட்டுமே வெனிஸை இத்தாலியோடு இணைக்கிறது. மற்றபடி முழுவதுமே நீர்ப் போக்குவரத்து தான். திருமணங்கள் முதல் ஊர்வலங்கள் வரை போட் தான் போக்குவரத்துச் சாதனம்.
அவர்கள் முன்பதிவு செய்திருந்த ஹோட்டலை அடைந்தவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தனர்.
சன்னல் வழியே தெரியும், நீரீல் மிதக்கும் நகரத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. போட்டுகளில் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றச் செல்லும் மக்களைப் பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது. வெனிஸ் நகரமே உலகில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகும். அதில் ஆச்சரியமேதுமில்லை என எண்ணிக் கொண்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த உதயன், “என்ன தர்னிகா அவ்வளோ புடிச்சிருக்கா இந்த ஊரை” எனக் கேட்டான்.
வாவ் உதய். இந்த ஊரைப் பிடிக்காம இருக்குமா? எப்படி இருக்கு பாரு.
அவள் தன்னிலை மறந்து அவனை பழையபடி அழைத்ததை இரசித்தவன்,
அப்ப நம்ம கடைக்கு இங்க ஒரு கிளை தொடங்கி இங்க வந்துருவோமா எனக் கேட்டான்.
அப்படியெல்லாம் இங்கேயே வந்தா நல்லா இருக்காது. அப்பப்ப சுற்றுலா மாதிரி வந்தா தான் ஆர்வம் இருக்கும்.
அப்ப வருஷா வருஷம் வருவோம். அவளுக்குக் கூட வெனிஸ் தான் பிடிச்ச இடம்.
தர்னிகாவின் முறைப்பைப் பார்த்தவன்,
அம்மா தாயே! நான் சொன்னது ஹரிணியை. அவளும் வெனிஸ் போகணும்னு சொல்லிட்டே இருப்பா. ஹனிமூன் னால அவ வரலை. அடுத்த தடவை நீ நான் அப்பா அம்மா ஹரிணி, உங்க அப்பா அம்மா எல்லாரும் குடும்பமா வரலாம் என்றான்.
அவன் தன் பெற்றோரையும் குடும்பமாக நினைப்பது அவளுக்கு பிடித்திருந்தது. இருந்தும் அவனை சீண்ட வேண்டுமே!
ஒரு ஆளை விட்டுட்டீங்க. ராஜேஷ் என்றாள்.
இப்போது முறைத்தவன் உதயன்.
நான் சொன்னது குடும்பமா வரலாம்னு
அதான். ராஜேஷ் என் குடும்பம் மாதிரி தான். அவன் இல்லாம எங்க வீட்டுல எந்த விசேசமும் நடந்ததில்லை.
அவனை பத்தி இப்ப ஏன் பேசுற. எனக்கு அவனை பாத்தாவே பிடிக்கலை.
அவன் கோபத்தை இப்போது தான் பார்க்கிறாள் தர்னிகா. சரியென வாயை மூடிக்கொண்டாள்.
சிறிது இளைப்பாறிய பிறகு சுற்றிப் பார்க்கச் சென்றனர். வாட்டர் போட் டாக்ஸி(Water boat taxi)தான் அங்கு பிரசித்தம். உள்ளே நான்கு பேர் அமரக்கூடிய சோபா போடப்பட்டிருந்தது. சேர் ஆட்டோ, டாக்ஸி போல இங்கு இதுதான். உள்ளே அமர்ந்து கொண்டு தண்ணீரில் மிதந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வது இருவருக்குமே வித்தியாசமாக இருந்தது.
தண்ணீரில் செல்வதால் ஆடிக்கொண்டே சென்ற போட்டில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டே சென்றனர். அவ்வப்போது சிரித்து வேறு வைத்தனர். சிறிது நேரத்தில் உதயன் தன் கையை தர்னிகாவின் தோளைச் சுற்றிப் போட்டுக்கொண்டு அவளை தன்னருகில் இழுத்துக்கொண்டான். பின்பு பின்னிருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். அதற்கே காத்திருந்தவள் போல் அவளும் அவன் தோளில் சாய்ந்து கொண்டு கண்களை மூடி அந்த நிமிடத்தை இரசித்தாள்.
(அடேய் லட்ச லட்சமா செலவு பண்ணி தேனிலவு அனுப்புனா ஊரைப் பாக்காம ரெண்டு பேரும் கண்ணை மூடிட்டு வரீங்கன்னு உங்க மைண்ட் வாய்ஸ் நினைச்சா அதுக்கு கம்பெனி பொறுப்பில்லை)
அந்த ரம்மியமான நிமிடம் அப்படியே தொடராதா என இருவருமே நினைத்தனர். எத்தனை நேரம் தான் போட்டை ஓட்டுபவர் அப்படியே இருப்பார். இறங்க வேண்டிய இடம் வந்தும் தன்னிலை மறந்து அமர்ந்தவர்களை அவரின் “எக்ஸ்க்யூஸ் மீ”என்ற குரல் கலைத்தது.
இருவரும் தான் இருக்கும் நிலையைப் பார்த்து விலகியவர்கள் அவரைப் பார்த்து, “தாங்க்ஸ்” எனக் கூறிவிட்டு நகர்ந்தனர். போட்டிலிருந்து இறங்க அவளுக்கு உதவி செய்ய அவள் கையைப் பற்றியவன் பின் விடவேயில்லை.
அவர்கள் பார்த்த இடம் கிராண்ட் கானல் எனும் முதன்மைக் கால்வாய். அது மிகப்பெரியதாகும். இங்கு கால்வாயின் இருபுறமும் 12 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பளிங்கு மற்றும் கல் மாளிகைகள் உள்ளன. வெனிஸ் நகர பாலங்களில் புகழ்பெற்றவை ரியால்டோ மற்றும் பிரிட்ஜ் ஆப் ஸை. இவை கிராண்ட் கானல் கால்வாயில்தான் உள்ளன.
டோஜெஸ் மாளிகையையும், சிறைக்கூடத்தையும் இணைக்கும் விதமாக இந்த பாலம் 16-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. ஸை (SIGH) பாலம், கைதிகளை நடத்தி கூட்டிச் செல்ல பயன்பட்டதாகும். இதற்கு பெருமூச்சு என்று பொருளாகும். கைதிகள் சிறை தண்டனை பெற்று செல்லும்போது கடைசியாக நகரத்தை அந்த பாலத்தில் இருந்து பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள். கடும் தண்டனையால் வெளியே வர முடியாமல் அவர்கள் ஏக்கப்பெருமூச்சுடன் பார்வையிடுவதை குறிக்கும் பொருட்டு இந்த பாலத்திற்கு அந்தப் பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது
அங்கு நின்றுப் பார்த்தால் அந்நகரின் அழகு பன்மடங்கு அதிகரித்தது போல் தோன்றியது.
நாம குறைந்தது வருஷத்திற்கு ஒருமுறையாவது இங்க வரணும் உதய்.
கண்டிப்பா வரலாம்.
குழந்தைகள் பிறந்துட்டா கூட அவங்களையும் கூட்டிட்டு வரணும்.
தன்னையும் மீறி கூறிய தர்னிகா சட்டென மவுனமானாள். இன்னும் குடும்பமே தொடங்கவில்லை. அது தொடங்குமா இல்லையா என்றும் தெரியவில்லை. அதற்குள் குழந்தைகள் வரை சென்றுவிட்ட தன்னை மனதிற்குள் திட்டிக்கொண்டாள்.
தர்னி! நீ பெரிய தைரியமான ஆள் மாதிரி பில்டப் குடுத்திருக்கிற. இப்படி இவனுக்காக உருகுறன்னு தெரிஞ்சா ரொம்ப ஆடுவான். அடக்கி வாசி என தன்னையே எச்சரித்தாள்.
பாவம் எத்தனை கனவோடு தேனிலவு வர ஆசைப்பட்டிருப்பாள். தன்னால் தானே இதெல்லாம் என உதயன் அவளை பரிதாபத்தோடு பார்க்க அதைக் கண்ட தர்னிகா
இப்படியெல்லாம் சிம்பதியா பாக்க வேணாம். நான் சொன்ன மாதிரி ஆறு மாசத்துக்குள்ள நீ ஒத்துவரலைன்னா நான் கிளம்பிருவேன். நான் சொன்ன மாதிரி நான் என் குழந்தைகளோட குடும்பமா வருவேன். ஆனா அந்த குடும்பம் உன்னோடையா இல்லையான்னு நீ தான் முடிவு பண்ணனும் என அவளுக்கே உரித்தான திமிரில் அவனுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தாள்.
தர்னிகா, இன்னொருவனுடன் குழந்தையுடனா … நினைப்பே கசந்தது உதயனுக்கு. அடியே மஹதி! சீக்கிரம் போடி மனச விட்டு. நான் தர்னிகாவை முழு மனசா ஏத்துக்கனும் என மனதுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அவளைப் பார்த்து,
அதான் ஆறு மாசம் குடுத்துருக்கல்ல. சும்மா சும்மா இப்படியெல்லாம் பேசாத என பாவமாக சொல்ல
தர்னிகா சிரிக்க அவனும் சிரித்தான். அதை கண்களில் இரத்த சிவப்பேற பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.
யார் அரவிந்த்?

Advertisement