Advertisement

தர்னிகாவும் , உதயனும் சிரித்துப் பேசுவதே அபூர்வம். அதையும் வயிறு எரியப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த். பின் தன் கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணை அழைத்தான்.
யாரு அரவிந்த் ன்னு பாக்கலாம் வாங்க!
(என்ன? வாங்கன்னா வந்துருவீங்களா? இப்பவே சொல்லிட்டா அப்பறம் ட்விஸ்டு ஒன்னு நான் வச்சிருக்கிறதுக்கு என்ன மரியாதை? இப்ப யாருக்கு போன் பண்றான்னு பாக்கலாம் வாங்க.)
அழைத்தது அவன் நண்பனைத் தான்.
ஹலோ அருண்!
சொல்லுடா! எப்படி இருக்க?
நான் இருக்குறது இருக்கட்டும். நான் சொன்ன பொண்ணை தேடி கண்டுபிடிச்சிட்டியா?
தேடிட்டே இருக்கேன் மச்சான். சீக்கிரம் கண்டுபிடிச்சிருவேன்.
நீ கண்டுபிடிக்கிறதுக்குள்ள அவளுக்கு குழந்தை பிறந்திரும். போய் பேரு வச்சிட்டு வரலாம்.
என்னடா சொல்ற?
அவளை இங்க பாத்தேன் வெனிஸ்ல.
டேய் சூப்பர். உன் கண்ணுல காட்டணும்னு தான் கடவுள் இவ்வளவு நாள் கண்டுபிடிக்க விடாம பண்ணிருக்காரு போல டா. போய் பேசுடா
ம்ம் பேசலாம். ஆனா அவ புருஷன் நீ யாருன்னு என்னை கேட்டா நான் என்னடா பண்ணுவேன்?
என்னடா சொல்ற. கல்யாணம் ஆகிருச்சா?
ஆமா. ஹனிமூன் வந்திருக்கா போல
என்னடா இப்படி ஆகிருச்சு. இதுனால தான் கடவுள் நம்மளை கண்டுபிடிக்க விடலை போலடா.
செருப்பு பிஞ்சிரும். நான் சொல்லி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது. சும்மா தூங்கிட்டு இப்ப கடவுள் காட்டலை ன்னு சொல்லிட்டு இருக்க.
என்னை ஏண்டா திட்டுற. உங்கப்பா கிட்ட சொன்ன ஒரே நாள்ல கண்டுபிடிச்சிருப்பாருல்ல.
இப்ப ஏன் அவரை இழுக்குற. அவரு கூட பேசுறது புடிக்காம தானே தனியா இருக்கேன். தனியா இருந்தாலும் வீட்டுக்கு அடிக்கடி வராருன்னு தான் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்னு இங்க வந்தேன். இங்க வந்தா தான் தெரியுது எனக்கு இனி நிம்மதியே இல்லைன்னு.
டேய் மச்சான் சாரிடா …
சரி விடு. நான் ஆசைப்பட்ட எது எனக்கு கிடைச்சிருக்கு. ஆனா இந்த தடவை நான் நல்லவனா இருக்கப் போறதில்லைடா. எனக்கு வேண்டியதை நான் அடையப் போறேன்.
டேய். உனக்கு வில்லத்தனம் எல்லாம் செட் ஆகாது. சொன்னா கேளு. ஊருக்கு கிளம்பி வா .
இல்லடா. இனி நான் நல்லவனா இருந்து என்ன பிரயோஜனம். இனி என்ன பண்ணணும்னு யோசிக்கிறேன். நீ அவளை அப்ப அப்ப போய் பாத்துக்கோ.
இப்ப கூட போய் பாத்துட்டு தான் வந்தேன். உங்க அப்பாக்கு தெரிஞ்சா நான் சமாதிடா.
அதுக்கு தானே உன் வீட்டு பக்கத்துல தங்க வச்சிருக்கேன். சரி வை போனை.
போனை வைத்தவன் தனக்கு வராத வில்லத்தனத்தை பற்றி யோசித்தான்.
எப்படியாவது பிரிக்கணும். என்ன பண்ணலாம்?
அவன் யோசிக்கிற வரை நாம உதயனையும் தர்னிகாவையும் பாக்கலாம்.
ஹேய் தர்னிகா. செல்ஃபி எடுக்கலாமா?
தர்னிகா விற்கு மயக்கம் வராத குறை தான். அவள் முழிப்பதைப் பார்த்த உதயன்
என்ன அப்படி பாக்குற? ஐயாவை ரொமாண்டிக்கா பாத்தது இல்லையே! இனி பாப்ப என்றான்.
அவள் தோளோடு தன் கைகளை வளைத்து தன் அருகில் இழுத்தவன் அவள் விழிப்பதையும், அதை அவன் ரசப்பதையும் தன் கைப்பேசியில் பதித்துக் கொண்டான்.
பின் அறைக்குத் திரும்பிய இருவரும் எந்த வித தயக்கமும் இன்றி அருகருகில் படுத்து உறங்கினர். மேலும் இரண்டு நாட்கள் வெனிஸின் அழகை ரசித்துவிட்டு ஊர் திரும்ப தயாராயினர்.
விமான நிலையத்தில் அமர்ந்திருந்த இருவரையும் நெருங்கினான் அரவிந்த்.
நீங்க தமிழா? என பேச்சைத் தொடங்கினான்.
வேற்று நாட்டில் தமிழைக் கேட்டதும் மகிழ்ந்த இருவரும், ஆமா என பதிலளித்தனர்
நல்ல ஊரு இல்லை – அரவிந்த்
ஆமா. எனக்கும் போக மனசே இல்லை என்றாள் தர்னிகா.
பை தி வே. நான் அரவிந்த்
நான் உதயன். இது தர்னிகா. இப்ப தான் கல்யாணமாகி ஒரு வாரம் கிட்ட ஆகுது.
ஒரு வாரமா. சை. இதுக்கு முன்னாடி இவளை பாத்திருக்கக் கூடாதா. என்ன அழகான பெயர் தர்னிகா. அவளை மாதிரியே என எண்ணினான் அரவிந்த்.
நான் உங்களை முன்னாடியே பாத்திருக்கேன் என்றான் தர்னிகாவிடம்.
என்னையா? எங்க?
ஒரு .. ஒரு வருஷம் இருக்கும். கொடைக்கானல்ல.
ஆமா. எம்.பி.ஏ. கடைசி வருடம் படிக்கிறப்ப காலேஜ் டூர் வந்திருந்தோம்.
எத்தனை டூர்டி போய்ருக்க என்றபடி உதயன் அவளைப் பார்த்தான்.
ஆங்ங். அங்க தான். நானும் அப்ப கொடைக்கானல் வந்திருந்தேன். உங்க கூட க்ளோஸா ஒருத்தர் இருந்தாரே.
ஆமா. ராஜேஷ். என் ஃபிரண்டு.
ஓ. ஃபிரண்டா? நீங்க நடந்துகிட்டதைப் பாத்தா உங்க லவ்வர்ன்னு நினைச்சேன். என் ஃபிரெண்ட்ஸ் கூட அப்படித் தான் சொன்னாங்க. அவரைத் தான் கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு நினைச்சேன். அவ்வளோ நெருக்கமா இருந்தீங்க.
தர்னிகாவின் முகம் நிமிடத்தில் மாறிவிட்டது. உதயனை தவிப்புடன் பார்த்தாள். சூழ்நிலையை உணர்ந்த உதயன்
ஓ.கே அரவிந்த். உங்களை பாத்ததுல மகிழ்ச்சி. நாங்க கொஞ்சம் தனியா இருக்கணும் பை. எனக் கூறி அவளை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றான்.
விமானத்திலும் தர்னிகா முகமே சரியில்லை. உதயன் தோளில் சாய்ந்து கொண்டு அமைதியாக இருந்தாள். உதயன் தர்னிகாவின் கையை தன் கையில் பதித்துக் கொண்டு, கூல். அவன் ஏதோ சொன்னான்னு டல்லா இருக்க. நான் நல்லா இருக்கேன் என அவளை சமாதானப் படுத்தினான்.
அதே விமானத்தில் வேறு இருக்கையில் அமர்ந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த் இதழில் புன்முறுவல் மலர்ந்தது.
தன் புருஷன் தன்னை தப்பா நினைக்க மாட்டான்னு தைரியமா சொல்லாத போதே உங்களுக்குள்ள நல்ல உறவு இல்லைன்னு புரிஞ்சது. இனி உங்களை பிரிக்கிறது சுலபம் என அவன் எண்ணி மகிழ்ந்தான்.
பிரிப்பது சுலபமா? பார்ப்போம்.

Advertisement