Advertisement

வண்ண விளக்குகளாலும் ,
தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திருமண மண்பத்தின் வாயிலில்
“உதயன் வெட்ஸ் தர்னிகா”
என்ற பிராம்மாண்ட பேனர் அவர்களுக்கு திருமணம் எனக் காட்டியது.
பெரிய வீட்டுத் திருமணம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. திருமணத்தின் நாயகன் உதயனின் முகத்தில் மகிழ்ச்சி எள்ளளவும் இல்லை. பேருக்குக் கூட சிரிக்காமல் வெற்று முகத்தை காட்டியடி நின்றிருந்தான். அதற்கு நேர்மாறாக தர்னிகா முகத்தில் மகிழ்ச்சி கொட்டிக் கிடந்தது. அவ்வப்போது ஓரக்கண்ணில் உதயனை பார்த்தபடி இருந்தாள்.
தர்னிகா உதயனைப் பார்ப்பதையும் அவனின் உம்முனாமூஞ்சியையும் பார்த்த உதயனின் தாய் தேவி அவனிடம் வந்து கிசுகிசுத்தார்.
மூஞ்சியை ஏண்டா அப்படி வச்சிருக்க? தர்னிகா பாக்குறா. சிரிச்ச மாதிரி இரு. இல்லன்னா உனக்கு இதுல விருப்பம் இல்லைன்னு நினைப்பாங்க.
மெதுவாக ஆனாலும் அழுத்தமாக அவன் குரல் ஒலித்தது.
எனக்கு இதுல விருப்பம் இல்ல தான்.
தர்னிகாவிற்கு கேட்டுவிடக் கூடாதே என பயந்த தேவி, ” வாயை மூடுடா. இத்தனை பேர் மத்தியில குடும்ப மானத்தை வாங்கிறாத.தாலி கட்டியாச்சு. ஒழுங்கா நடந்துக்க ” என்று கூறிவிட்டு தர்னிகாவிடம் சென்றார்.
அவனுக்கு அசதியா இருக்கும்மா அதான் இப்படி இருக்கான்.
சரிங்கத்தை. நேத்துல இருந்து இப்படியே நின்னுட்டே இருக்கோம்ல அதான்.
தர்னிகாவின் கனிவான பதிலில் மகிழ்ந்தவர் உதயனை பார்த்து பார்வையிலேயே எச்சரித்து விட்டுச் சென்றார்.
உதயனின் குடும்பம் செல்வாக்கு மிக்கது. உதயனின் அப்பா சிவகுருநாதன் மிகப்பெரிய ஜவுளிக் கடையான “உதய் டெக்ஸ்டைல்ஸ்” நிறுவுனர். ஆரம்பத்தில் சிறியதாக தொடங்கப்பட்ட கடை இன்று தமிழகம் முழுவதும் தன் கிளைகளை பரப்பியிருந்தது. தற்போது தான் நிறுவுனத்தின் பணியை உதய் கைகளில் வழங்கியிருக்கிறார் சிவகுருநாதன். உதயனுக்கு ஒரு தங்கை ஹரிணி. கல்லூரி இறுதியாண்டு பயில்கிறாள்.
தர்னிகாவின் குடும்பம் அவ்வளவு செல்வாக்குள்ளது இல்லை என்றாலும் அவர்களும் துணி வியாபரமே. தரமான துணிகளுக்கு பெயர் பெற்றவர்கள். நம்பகத்தன்மை வாய்ந்த துணி ரகங்கள் அவர்களிடம் உண்டு. இந்த நம்பகத்தன்மையால் தான் சிவகுருநாதன் தர்னிகாவின் அப்பா- தேவநாயகம் அம்மா – சுந்தரியிடம் திருமணப் பேச்சுவார்த்தையை துவங்கினார்.
தர்னிகாவிற்கு உதயனை போட்டோவிலேயே பிடித்து விட்டது. உதயன் தான் திருமணத்தை இழுத்தடித்தான். ஆனால் தந்தையின் கண்டிப்பின் முன் ஒன்றும் கூற முடியாமல் இன்று தாலியும் கட்டிவிட்டான்.
திருமணம் முடிந்து அனைவரும் கிளம்பியாற்று. சடங்குகள் முடிந்து புதுமணத் தம்பதிகள் தனியறையில் விடப்பட்டனர்.
இருவரும் வெகு நேரம் அமைதியாய் இருக்க உதயனே பேச்சைத் தொடங்கினான்.
நான் சொல்றது உனக்கு கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கும். இந்த நேரத்துல சொல்லக் கூடாதுதான். ஆனா வேற வழி தெரியலை.
தர்னிகா குழப்பமாகப் பாத்தாள்.
நான் கல்லூரி படிக்கும் போது மஹதின்னு ஒரு பொண்ணை காதலிச்சேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு உறுதியா இருந்தேன். ஆனா திடீர் ன்னு ஒரு விபத்துல அவ இறந்துட்டா
கூறும் போதே கண்கள் கலங்கியது உதயனுக்கு.
அவளை நினைச்ச மனசால யாரையும் நினைக்க முடியலை. இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பம் இல்லை. அப்பா அம்மாக்காக தான் சம்மதிச்சேன். உன் கூட மனசார வாழ முடியாது. என்ன பண்றதுன்னு தெரியலை. இதை சொல்ல சந்தர்ப்பமே கிடைக்கலை.
அவன் கூறி முடித்ததும் தர்னிகா முகம் அதிர்ச்சியிலிருந்து அழுகைக்கு மாறி அவள் அழுவாள். அவளை என்ன சொல்லி தேற்றுவது என உதயன் நினைத்துக்கொண்டிருந்த போது பளாரென்று அவன் கன்னத்தில் விழுந்த அறை அவனை நின உலகிற்குக் கொண்டு வந்தது.
அவன் அதிர்ச்சியில் உறைந்து தன்னை தான் அறைந்தாளா என்று நிமிர்ந்து பார்க்கையில்,  சற்று முன் குடிகொண்டிருந்த நாணம் முற்றிலுமௌ மறைந்து கோபத்தில் சிவந்த முகத்துடன் நின்றிருந்தாள் தர்னிகா.
அவள் தானா அறைந்தது என அவன் நினைக்கும் போதே அவள் தான் என உறுதிப்படுத்த விழுந்தது மற்றொரு அறை மறு கன்னத்தில்.
என்னடா சொன்ன? சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கலையா? பொண்ணு பாக்குற அன்னிக்கு பேச சொன்னாங்கல்ல. அப்ப அரைமணி நேரம் வெட்டியா என்னை முறைச்சு பாத்துட்டே இருந்தல்ல அப்ப சொல்லிருக்கலாம். இல்லன்னா நிச்சயம் பண்ற அன்னிக்கு சொல்லிருக்கலாம். அவ்வளோ ஏன் இன்னிக்கு காலை கூட மந்திரம் சொல்லிட்டு உட்கார்ந்து இருந்தோமே அப்போலாவது சொல்லிருக்கலாம். எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் சர்ந்தர்ப்பம் கிடைக்கலன்னு சொல்ற. சொல்ல தைரியம் இல்லன்னு சொல்லு.
உணயனுக்கு பேச்சே வரவில்லை. இல்ல… அது அப்பா அம்மா தான் … என இழுத்தான்.
உன் குடும்ப மானத்துக்காக என் வாழ்க்கையை கெடுப்பியா. இல்ல நீ இப்படி சொன்னதும் சரிங்கக் நீங்க மனசு மாறுகிற வரை காத்திருப்பேன்னு சொல்லுவேன்னு நினைச்சியா?
இல்ல .எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.
நீ என்ன டைம் கேக்குறது. நான் சொல்றேன். இன்னும் ஆறு மாசம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள உன் மனசை மாத்திகிட்டு என்னை முழுமனசா காதலிச்சு மனைவியா ஏத்துக்கணும். இல்லைன்னா நான் டைவர்ஸ் வாங்கிட்டு போய்ட்டே இருப்பேன். உன் மனசு மாறுற வரை என் வாழ்க்கையை வீணடிக்க முடியாது.
அவளது முகம் கோபத்தில் சிவந்திருந்தது. இதுவரை யாரும் செய்யாத, செய்ய முடியாத காரியத்தை அவள் செய்துவிட்டாள். உதயனை இதுவரை யாரும் அதிர்ந்து கூட பேசியதில்லை. இப்போது அவளது கைவிரல்கள் அவன் கன்னத்தில் பதிந்திருந்தது. ஆனால் அவனுக்கு கோபம் வரவில்லை. தன் தவறுக்கு ஏற்ற தண்டனையாகவே நினைத்தான்.
கட்டிலின் அருகில் சென்றவன் அவளைப் பார்த்தான். அவள் கண்களை மூடி படுத்திருந்தாள். தயக்கத்துடன் கட்டிலின் மறுபக்கத்தில் அமர்ந்தவன் உறங்கும் அவளை பார்த்துக் கொண்டே கண்களை மூடினான்.
ஆறு மாதத்தில் ஒரு பெண்ணை காதலிக்க முடியுமா? மஹதியை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா? டைவர்ஸ் வரைச் சென்றால் தன் தாய் தந்தை தாங்குவார்களா? இப்படி பல கேள்விகள் அவன் மனதில் உதித்தன. இதற்கு விடை அவன் தான் கூறவேண்டும்.

Advertisement