“மிஸ் ஆர்கலி.’’ என்ற புதிய குரலில் தனக்கு பின்னால் ஒலிக்கவும், ஆரு அதிர்ந்து திரும்பினாள். அங்கே ஒரு வெளிநாட்டவன் இவளை பார்த்து புன்னகைத்து நின்றிருந்தான்.
அவள் அவனை தடுமாற்றத்துடன் பார்க்க, “நான் லூகாவின் உதவியாளன். அவர் தற்சமயம் முக்கிய பணியில் இருக்கிறார். உங்களை அழைத்து வர என்னை பணித்தார்.’’ என சற்றே உடைந்த ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டான்.
‘நான் உன்னை எப்படி நம்புவது’ என்பதை போல ஆரு பார்த்து நிற்க, “ஒரு நிமிடம்’’ என்றவன் தன் சட்டை பையினுள் இருந்த அலைபேசியை எடுத்தான். அடுத்த நொடி லூகா காணொளி காட்சியில் ஆருவின் முன் தோன்றினான்.
“ஹாய் ஏஞ்சல். அவனுடையை உதவியை ஏற்றுக் கொள். நீ இப்படி விழிப்புடன் இருப்பதும் எனக்கு பிடிக்கத் தான் செய்கிறது. இரவு உணவின் போது சந்திப்போம்.’’ என்று சொல்லி விடை பெற, ஆருவின் விழிகள் அவன் வெண்ணிற சட்டையில் லேசகா படிந்திருந்த குருதி துளிகளின் மீதே படிந்திருந்தது.
“மேம்…’’ என்று மாக்சிம் அழைக்க, அவனுக்கு அருகில் இருந்த காரில் அமைதியாக ஏறி அமர்ந்தாள். பயணம் தொடங்கிய சில நிமிடங்கள் வெளிய வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவள், அதன் பிறகு அப்படியே ஜன்னல் கதவில் தலை சாய்த்து உறங்கிப் போனாள்.
லூகாவின் வீடு வந்ததும், “மேம்…’’ என்ற மாக்சிம் வலுவாக குரல் கொடுத்த பின்பே துயில் கலைந்து எழுந்தாள். “சாரி’’ என்று உரைத்தவள், காரை விட்டு இரங்க, “இட்ஸ் ஓகே மேம்.’’ என்றான் மாக்சிம்.
சுகமான வெந்நீர் குளியலை அனுபவித்தவள், இலகுவான உடை அணிந்து தன் மடிக் கணினியை எடுத்துக் கொண்டு பணியில் மூழ்கி போனாள். பெல்லா அவள் அருந்த பழசாறையும் கொறிக்க சில சாக்லேட் பிஸ்கட்டுகளையும் கொண்டு வந்து வைத்து சென்றாள்.
ஏனோ அந்த பிஸ்கட்டுகளை கண்டதும் ஆருவிற்கு சாருவின் நினைப்பு வந்தது. உடனே தன் அலைபேசியை எடுத்தவள் சாருவிற்கு அழைத்தாள்.
இவளின் அழைப்பை ஏற்றதும் சாரு உயிர் உருகும் குரலில், “ஆரு…’’ என்று அழைத்தாள். “சாரு..’’ என்று ஆருவும் கலங்க, “எரும இப்போ தான் உனக்கு என் நியாபகம் வந்தததா? போனதும் கால் பண்றேன்னு சொல்லிட்டு இப்போ தான் கூப்பிடுற எரும.’’ என்றாள்.
“ஏய்… சாரிடி. வந்ததும் ஜெட் லாக். அது தெளியிறதுக்கு முன்னாடியே காலேஜ். இப்போ கொஞ்சம் முன்னாடி தான் எனக்கு பிரீதிங் ஸ்பேஸ் கிடைச்சது. உடனே வீட்டுக்கு கூட கூப்பிடாம உனக்கு கூப்பிட்டா… ஓவரா பண்ற.’’ என இறங்கிப் போன குரலில் சொல்லவும் மறுபுறம் சாரு இப்போது தோழியிடம் மன்னிப்பை யாசித்து கொண்டிருந்தாள்.
இரு தோழிகளும் ஊடல் முடிந்து, கொஞ்சி கெஞ்சி சமாதானமாகிய பின், ஆரு அன்றைக்கு கல்லூரியில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டாள். சாருவும் அன்றாட கல்லூரி நடப்பை பகிர்ந்து முடித்த பிறகு தோழிகள் இருவரும் பொதுப்படையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
நிமிடங்கள் முடிந்து மணியை தொட்டிருக்க, “சரி சாரு. நான் நாளைக்கு கூப்பிடுறேன். நீ உடம்பை பார்த்துக்கோ. ஹாஸ்டல் புட் வேற உனக்கு சேருமா தெரியல. ஏதாச்சும் ஹோம் மெஸ் முடிஞ்சா பிக்ஸ் செஞ்சிக்கோ.’’ என்றாள்.
“சரிங்க அம்மா பாட்டி. நான் இங்க நல்லா என்னை பார்த்துகிறேன். அங்க ஏதாச்சும் வெள்ளைக்காரியை பிரண்ட் பிடிச்சிட்டு என்னை மறந்துடாம சீக்கிரம் நீங்க திரும்பி வாங்க.’’ என்றாள் சாரு.
தான் யாரையும் பிடிக்கவில்லை. ஒரு வெள்ளைக்காரன் தான் தன்னை பிடித்து வைத்து இருக்கிறான் என மனதிற்குள் எண்ணிக் கொண்டவள், ஒரு பெருமூச்சோடு அலைபேசியை துண்டித்தாள்.
‘இன்னும் எத்தனை நாட்கள் இங்கு தாக்கு பிடிக்க வேண்டுமோ?’ என்ற எண்ணம் உள்ளுக்குள் பிறக்கும் போதே உடல் முழுக்க பயத்தில் சிலிர்ந்து அடங்கியது. இன்று லூவிடம் எப்படியேனும் சமாதானமாக பேசி இங்கிருந்து நழுவும் வாய்ப்பை தேட வேண்டும் என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டாள்.
இரவு வேளை வந்த போது, பெல்லா ஒரு புதிய பெண்மணியோடு, ஆருவின் அறைக்குள் நுழைந்தாள். ஆரு கேள்வியாக பார்க்க, “உங்களை தயார்படுத்த வந்திருக்கும் அலங்கார நிபுணர். இரவு உணவிற்கு பாஸ் உங்களை வெளியே அழைத்து செல்ல இருக்கிறார்.’’ என்று திணறி திணறி ஆங்கிலத்தில் பேசினாள்.
அவளின் உடைந்த ஆங்கிலம் சிரிப்பை தோற்று வித்த போதும், “எனக்கு தனிப்பட்ட அலங்காரங்கள் எதுவும் தேவையில்லை என்று என் சார்பாக நீ உன் பாஸிடம் தெரிவித்து விடு பெல்லா.’’ என்று கட்டளையிடும் குரலில் அறிவித்தாள் ஆரு.
இவளை அலங்கரிக்க வந்திருந்த பெண் தடுமாறி நிற்க, ஆருவின் அலைபேசி இசைத்தது. அதில் ஒலித்த எண் புதிதாக இருக்க ஆரு குழப்பத்தோடு ஏற்க, “ஹாய் பார்பி டால்…! அடிக்கடி நான் உனக்கு படம் காட்டிட்டே இருந்தா தான் நான் சொல்ற பேச்சை நீ கேப்பியா. இப்போ என்னோட ஆளுங்க உன் காலேஜ் ஹாஸ்டல் பக்கத்துல தான் இருக்காங்க. என்ன செய்யலாம்..?’’ என்று நகைக்கும் குரலில் கேட்டான்.
‘சாரு…’ என்று மதிற்குள் அதிர்ந்தவள், “உனக்கு என்ன தான் மேன் வேணும்.’’ என்று வெளியே அலறினாள்.
“எல்லாத்தையும் ஒண்ணா சொல்ல முடியாது டால். முதல்ல நீ பார்பி டால் மாதிரி அழகா கிளம்பனும். அது மட்டும் தான் இப்போதைக்கு வேணும். மீதி எல்லாம் ஒன்னு ஒண்ணா சொல்றேன்.’’ என்றவன் அலைபேசியை துண்டித்தான்.
இவள் முகத்தையே மற்ற இரு பெண்களும் பார்த்திருக்க, “என்ன பாத்துட்டே இருந்தா என்ன அர்த்தம். அதான் உங்க பாஸ் சொல்லிட்டாரே. வந்து என்ன என்ன செய்யணுமோ செஞ்சி தொலைங்க.’’ என்று வெறுப்பாக கத்தியவள், எழுந்து சென்று அலங்கார கண்ணாடியின் முன் அமர்ந்தாள்.
அவளின் முக பாவங்களை தன் மடிக்கணினியில் ரசித்தவன், ஒரு புன்னகையோடு இரத்தகறை படிந்த உடையை மாற்ற குளியலறைக்குள் நுழைந்தான்.
அலங்கார நிபுணர் தன் காரியத்தை கன கச்சிதமாக நிறைவேற்றி வெளியேறிய போது ஒரு மணி நேரம் கடந்திருந்தது. நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை காண பிரியமற்று வெறுப்புடன் அமர்ந்திருந்தாள் ஆர்கலி.
அவளை முன்னும் பின்னும் சுற்றி சுற்றி வந்து ரசித்த பெல்லா, “வூ பெல்..’’ என அடிக்கடி சொல்ல, அவளின் செய்கை ஆருவின் கோபத்தை சற்றே மட்டுப்படுத்த, “என்ன பெல்லா என்னை சுத்தி சுத்தி வந்து பெல் பெல்ல்னு சொல்லிட்டு இருக்க. அது உன்னோட பேராச்சே.’’ என்றாள் வேடிக்கையாய்.
உடனே தலையில் லேசாக தட்டிக் கொண்ட பெல்லா, “வூ பெல் என்ற வார்த்தைக்கு பிரெஞ்சில் வாவ் பியூட்டிபுல் என்று அர்த்தம் மேம்.’’ என்று மீண்டும் தன் உடைந்த ஆங்கிலத்தில் ஒப்புவித்தாள்.
அவள் உடல் மொழியும் திணறலும் ஆருவிற்கு சிரிப்பை தோற்றுவிக்க, இருந்த சூழ்நிலையை மறந்து ஆரு வாய் விட்டு சிரித்தாள். அவளின் சிரிப்பை கண்ட பெல்லாவும் வெட்க முறுவலை பூத்தாள்.
அந்த நேரம் லூ ஆருவின் புன்னகையை தன் விழிகளால் சிறையெடுத்தபடி அவர்களை நோக்கி நடந்து வந்தான். லூவைக் கண்டதும் பெல்லா தலை குனிந்து ஒதுங்கி நிற்க, ஆருவின் கைகளை பற்றிய லூ முழங்காலில் மண்டியிட்டு மிக மென்மையாக அவள் புறங்கையில் தன் இதழ்களை பதித்தான்.
“ஷால் வீ…?’’ என்று லூ அவளை பார்க்க, ஆரு அவனை குழப்பத்தோடு பார்த்திருந்தாள். அது அவன் இதழ்களில் குறுநகையை தோற்றுவிக்க, “டின்னருக்கு போக உன்கிட்ட பர்மிசன் தான் கேக்குறேன். எங்க ஊர் வழக்கப்படி.’’ என்றான்.
ஆரு விரும்பாவிட்டாலும் அவள் தலை லேசாக அசைந்தது சம்மதமாய். உடனே எழுந்து நின்றவன் அவளை ஒருகையால் லேசாக அணைத்தபடி வழி நடத்தி சென்றான். அவள் விலகி செல்ல முயல, “இந்திய பெண்கள் அந்நிய ஆண்களின் தொடுகையை விரும்பமாட்டார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இன்றைக்கு அதை உணர்கிறேன். ஆனால் உனக்கு வேறு வழி இல்லை. என்னை பொறுத்து கொள்.’’ என்ற லூ அவளை வீட்டின் பின் பக்கம் அழைத்து செல்ல, இவர்களின் பின்னோடு ஜேம்ஸ் ஓடி வந்தான்.
சிறிது தூரம் நடந்து சென்றதும் அங்கே விமான ஓடு தளம் இருக்க, ஆருவின் கண்கள் வியப்பில் விரிந்தது. அவள் அடிக்கடி விமான பயணம் செய்பவள் தான். தங்கள் வீட்டின் அருகே விமான ஓடுதளம் அமைத்து கொண்டிருக்கும் பல தொழில் அதிபர்கள் வீட்டிற்கு விருந்தாட சென்று வந்தவள் தான்.
ஆனாலும் அங்கு நின்று கொண்டிருந்த விமானம் தான் அவளின் விழிகளில் வியப்பை விதைத்திருந்தது. அது ஏர்பஸ் H225 விமானம். அவள் தன்னை மறந்து அதன் பெயரை உரக்க சொல்ல, “வாட்…?’’ என்றான் அவள் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த லூ.
அவன் பதிலுக்காய் தன் முகம் பார்ப்பதை உணர்ந்தவள், ‘ஒன்றுமில்லை..’ என்று தலை அசைக்க, அதன் பின்னே லூ மீண்டும் தன் நடையை துவங்கினான். அவள் பதில் சொல்லாவிட்டாலும் அவள் அதிர்ந்த காரணத்தை ஊகித்தவன், “இந்த மாதிரி ப்லேன்ஸ் என்கிட்ட பதினாலு இருக்கு. அதுக்காக என் கூடவே இருந்துடப் போறியா என்ன…?’’ என்றான்.
உடனே ஆரு அவனை முறைத்து பார்க்க, “எந்த பொருள் காஸ்ட்லி அப்படிங்கிறது அவங்க அவங்க பார்வையில தான் இருக்கு. உன்னோட பார்வவையில இந்த ப்ளேன் காஸ்ட்லி. ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு இரும்பு சாமான். இரத்தமும் சதையுமா எதிர்ல நிக்குற நீ தான் எனக்கு ரொம்ப காஸ்ட்லி.’’ என்றான்.
அவர்கள் இருவரும் விமானத்தை நெருங்க, விமான பணிப்பெண் இருவருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அத்தனை பெரிய விமானத்தில் தாங்கள் மட்டுமே பயணிக்க போகிறோம் என்ற எண்ணமே ஆருவை திகில் கொள்ள வைத்து.
சில நிமிடங்களில் ஜோ அவர்களோடு இணைய, அப்போது தான் இழுத்து பிடித்திருந்த மூச்சை ஆரு வெளியிட்டாள். அவள் காதோரம் குனிந்து அமர்ந்த லூ, “நீ இத்தனை கவலைப்பட தேவையில்லை. விருப்பம் இல்லாத பெண்ணை நான் தொடுவதில்லை.’’ என்றான் குரலில் காட்டத்தோடு.
‘என் அனுமதியின்றி தான் நீ என்னை பிடித்து வைத்திருகிறாய்’ என்று தன் முக குறிப்பில் உணர்ந்த, “நீ எனக்கு கொடுத்த அவமானத்திற்கு நான் உனக்கு கொடுக்கும் சிறிய பதிலடி. அதற்கெல்லாம் நீ இத்தனை பயப்பட தேவையில்லை.’’ என்றான் நக்கலாய் உதட்டை சுளித்தபடி.
“எப்போது என்னை விடுவிப்பாய்…!” கண்களில் லேசாக நீர் துளிர்க்க, ஏறக் குறைய இறைஞ்சுவதை போல ஆரு லூவிடம் தன் கேள்வியை முன் வைத்தாள்.
அவளின் கலங்கிய கண்களை இரண்டு நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், “நான் முன்பே சொன்னது தான். நீ கவனக் குறைவில் சரியாக கேட்காமல் விட்டிருக்கலாம். நீ இங்கு தங்க போகும் இந்த முப்பது நாட்கள் மட்டுமே நீ என்னை சகித்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அந்த முப்பது நாட்கள் முடியும் போது, நீ இங்கிருந்து கிளம்ப பிரியப்பட்டால் கட்டயாம் நான் உன்னை வழி அனுப்பி வைத்து விடுவேன்.’’ என்றான்.