“அப்போ சரின்னு சொல்லிடலாம்னு சொல்றியா வருண்…?’’ என மகனிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார் முருகானந்தம்.
“இப்போ நமக்கு வேற வழி இல்லைப்பா. மாப்பிள்ளையே கூப்பிட்டு அவ்ளோ தூரம் ரிக்வஸ்ட் செஞ்சி கேக்கும் போது நாம எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்.’’ என்றான் வருண்.
அவர்கள் இருவரும் உணவு மேஜையில் அமர்ந்து காலை உணவருந்திக் கொண்டிருந்தனர். இருவரின் அருகிலும் அவரவர் மனைவிமார்கள் நின்று பரிமாறிக் கொண்டிருந்தனர்.
“கல்யாணத்துக்கு இன்னும் நாலு மாசம் தான் இருக்கு. இப்ப போய் இந்த வெளிநாட்டுப் பிரயாணம் எல்லாம் அவசியமா…?’’ அபிராமி தன் மனதில் உதித்த சஞ்சலத்தை வாய் வார்த்தைகளாய் மொழி பெயர்த்தார்.
“மா…! மாப்பிள்ளை தொடர்ந்து ரெண்டு நாளா போன் கால். பப்புவை அந்த காம்பிடீசன் அனுப்பி வைக்க சொல்லி. எல்லாருக்கும் எல்லாம் அந்த ஆப்பர்சூனிட்டி கிடைக்காது. நானும் விசாரிச்சு பார்த்துட்டேன். இதே கல்யாணம் ஆகி அவ வைப்பா ஆகி இருந்தான்னா கட்டாயம் அனுப்பி வச்சி இருப்பேன்னு சொல்லும் போது நாம என்ன செய்ய முடியும். ஒரு ஒன் மன்த் தானே. கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள ஓடிடும்.’’ என்று அன்னைக்கு சமாதனம் சொன்னான் மகன்.
“என்னவோ பண்ணுங்க. நான் சொல்றது எதை தான் கேக்க போறீங்க….!’’ என்று அவர்கள் புலம்பிக் கொண்டே உணவினை பரிமாறிக் கொண்டிருக்க, அருண் அங்கு வந்து சேர்ந்தான்.
“நீயும் உக்காரு டா…” என்று அபி அவனை அழைக்க, “பப்புவை ஒன் மன்த் பாரீஸ் அனுப்ப அப்பாவும் ஓகே சொல்லிட்டாங்க அருண்.’’ என்றான் வருண் தமையனிடம். அது அப்படித் தான் முடியும் என்ற முடிவை ஏற்கனவே அறிந்தவன், வெறுமனே தலையை ஆட்டிவிட்டு உணவில் கவனமானான்.
அப்போது முருகு, “டேய் பாரீஸ்க்கு ப்ளைட் டிக்கெட் தங்குற இடம் பாதுகாப்பு எல்லாம் நீயே பார்த்து ரெடி பண்ணிடு. சொல்ல மறந்துட்டேன்… சாருவுக்கும் சேர்த்து டிக்கெட் போட்ரு. ரெண்டு பேரும் ஒண்ணா படிக்கிறவங்க தானே. சேர்ந்து போயிட்டு வரட்டும்.’’ என்றார்.
உடனே அருணின் நெற்றி சுருங்கியது. “அப்பா…! விளையாடுறீங்களா. பாரீசுக்கு அப் அண்ட் டவுன் ப்ளைட் டிக்கெட், புட் அண்ட் அகமடேசன் எல்லாம் ஒரு ஆளுக்கு எவ்ளோ வரும் தெரியுமா…? நீங்க இதுவரை அவ படிப்புக்கு செலவு செஞ்ச காசை விட டபுள் மடங்கு வரும். அதோட நம்ம பப்பும்மா அவ காலேஜ் லெவல்ல பர்ஸ்ட் வந்ததால இன்டர்நேசனல் லெவல் காம்பிடீசனுக்கு அவளை ஸ்பான்சர் செஞ்சி பாரிஸ் அனுப்புறாங்க. நீங்க ஏதோ பக்கத்துல இருக்க குற்றாலம் போற மாதிரி அசால்ட்டா சொல்றீங்க. அதோட பப்பு இப்போ வளர்ந்துட்டா. இனி அவ தான் அவளை பார்த்துக்கணும். இன்னும் நாலு மாசத்துல கல்யாணம் செஞ்சி அனுப்புறப்ப தோழிப் பொண்ணா அந்த சாருவை கூட அனுப்பிவிடப் போறீங்களா என்ன…?’’ என்று எகிறினான்.
“டேய்…! ஏன்டா இவ்ளோ டென்சன். வேண்டாம்னு ஒரு வார்த்தை சொன்னா போதாதா…? எப்பவும் சாருவும், ஆருவும் எங்க போனாலும் ஒண்ணா தான் போவாங்க. அந்த யோசனையில அப்பா சொல்லி இருப்பாங்க. அதுக்கு ஏன் நீ இவ்ளோ எமோசனல் ஆகுற.’’ என்று தமையனை கடிந்தான் வருண்.
“பின்ன என்னடா…! நம்ம பப்புவுக்கு எது செஞ்சாலும் உடனே அவளுக்கும் அதே மாதிரி செய்யணுமா. நல்லவேளை அந்த குஜாரத்காரருக்கு ஒரே பையனா போச்சு. ப்ரித்வீக்கு தம்பி யாரச்சும் இருந்திருந்தா அங்கேயே இவளுக்கும் சம்மந்தம் பேசி கல்யாணம் செஞ்சி வச்சி இருப்பார் போல. யாரை எங்க நிறுத்தணும்னு இன்னும் தெரியல.’’ என்றான் கடுப்புடன்.
“அருண்…! பணமும் அந்தஸ்தும் மட்டும் எப்பவும் கூட வராது. கிட்ட தட்ட பதினஞ்சி வருசமா நம்ம பப்புவுக்கு பிரண்ட். ஆறு வருசமா நம்ம கூட ஒரே வீட்ல இருந்தவ. உனக்கு பிடிக்காட்டி போனாலும் ஆரு மாதிரி அவளும் எனக்கு பொண்ணு தான். என்னடா பெரிய செலவு ஒரு இருபது லட்சம் ஆகுமா…? என் அக்கவுன்ட்ல இருந்து ட்ரான்ஸ்பர் பண்றேன். அவளுக்கும் சேர்த்தே டிக்கட் புக் பண்ணு. வந்துட்டான் வாய் இருக்குன்னு பேச.’’ என்று அபிராமி பொரிய, முருகு இப்போது யார் பக்கம் பேசுவது என திருதிருத்தார்.
அப்போது வசுந்திரா தான் உதவிக்கு வந்தாள். “அத்தை நம்ம ஆருவை காலேஜ் சார்பா செலெக்ட் செஞ்சி இருக்காங்க. அதானால அவளுக்கு ஒன் மன்த் லீவ் ஓ.டியா கிடைக்கும். ஆனா சாரு அப்படி ஒரு மாசம் எல்லாம் காலேஜ் லீவ் போட முடியாது அத்தை. அதோட நம்ம ஆருவும் இனி தனியா இருந்து பழகணும் தானே.’’ என்றாள் தன்மையாய்.
வசுவின் அந்த விளக்கத்தில் அபி சாந்தமாக, அருண் உடனே, “அம்மா தாயே…! உன் தத்து பொண்ணுக்கு நீங்க என்ன வேணா சீர் செய்யுங்க. ஆனா அப்படியே உங்க கடைக்கண் கொண்டு நீங்க பெத்த பிள்ளைக்கு இப்ப அந்த பூரியை போடுங்க….!’’ என்று தாயிடம் வம்பு வளர்ந்து சூழலை இலகுவாக்க முயன்றான்.
“போக்கிரி…! நீ பேசின பேச்சுக்கு உனக்கு பழைய சோறு தான் போடணும்.’’ என்று அவன் தலையில் லேசாக தட்டியபடி, அவன் கேட்ட பூரியை ஒன்றிற்கு இரண்டாக அவன் தட்டில் வைத்தார்.
மும்பையில் ஆருவிற்கு தேவைப்படும் பொருட்களை எல்லாம் பார்த்து பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தாள் சாரு. ஆரு சோபாவில் குறுக்குவாட்டில் படுத்தபடி ராஜீவுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
சிணுங்கலும், கொஞ்சலுமாய் அவர்கள் பேச்சு நீள, ஆருவிற்கு தேவைப்படும் என்று தோன்றிய பொருட்களை எல்லாம் அடுக்கி முடித்திருந்தவள், சத்தம் கொடுக்காது தன் அறையை நோக்கி நடந்தாள்.
ஆருவுக்கு இருபது வயது தான் ஆகிறது. இருபது வயதில் திருமணம், குடும்பம், குழந்தை இதெல்லாம் சரியாக வருமா…? என்று சாருவின் மனதில் கேள்வி ஓடினாலும், அவள் சார்ந்திருக்கும் குடும்பம் அனைத்தையும் நேர் செய்துவிடும் என்ற எண்ணம் தோன்ற நெருங்கி வரும் வளாக நேர்காணலுக்கு படிக்க அமர்ந்தாள்.
ஆரு கூட அந்த பயணத்தை முழுமையாக ஏற்று கொண்டாள். ஆனால் ஆரு இல்லாமல் ஒரு மாதம் தனிமையில் கழிக்க வேண்டும் என்ற எண்ணமே சாருவிற்கு ஒரு சோர்வை தந்தது. அவள் விரும்பிய சுந்ததிரம் தான். ஆனால் கிட்டிய போது அத்தனை இனிக்கவில்லை.
ஆறாம் விரலாக அவளோடு ஒட்டிக் கொண்டு திரிந்த மனம், இப்போது அவள் மட்டும் தனியே கிளம்புகிறாள் என்று தெரிந்த மாத்திரத்தில் இருந்து வெற்றிடமாகிப் போனது.
அவ்வளவு தான். இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே அவளோடான நெருக்கம். அதன் பிறகு அவளின் திருமணம் முடிந்த பின் தனக்கான வாழ்வின் பயணம் தனியானது என்பதை உணர்ந்தவள் முயன்று தன் கவனத்தை புத்தகத்தில் திருப்பினாள்.
அதே நேரம் “வேம்பயர் காலிங்” என்று அவள் அலைபேசி அறிவிக்க, “இவன் வேற.’’ என்று மனதிற்குள் அவனை காய்ச்சியபடியே அழைப்பை ஏற்றாள்.
“பப்பும்மா சாப்பிட்டாச்சா…? திங்க்ஸ் எல்லாம் பேக் செஞ்சாச்சா…? இதெல்லாம் கரக்ட்டா எடுத்து வச்சியா…? எதுக்கும் இதெல்லாம் இருக்கான்னு இன்னொரு முறை செக் செஞ்சிடு.’’ என்று தொடர் கேள்விகளால் அவளை திணறடிக்க, சாரு பொறுமையை இழுத்து பிடித்து வரிசைக்கிரமமாக அவள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தாள்.
“ஓகே…’’ என்று அவன் அழைப்பை துண்டிக்க சென்ற நேரம், “சார்…! ஒரு நிமிஷம். இன்னும் நாலு நாள் கழிச்சு ஆரு பாரிஸ்ல இருப்பா. அப்பவும் மறந்து போய் எனக்கு போன் செஞ்சிடாதீங்க. அன்ட் ஆரு கிளம்புறதால அவ ரிட்டர்ன் வர வரை நான் எங்க காலேஜ் ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணலாம்னு இருக்கேன். வீட்டை பூட்டி சாவியை கீழ மெயின்டனஸ்ல கொடுத்துடுட்டு போறேன். உங்களுக்கு ஏதும் அவசர தேவை இருந்தா வாங்கி யூஸ் செஞ்சிக்கோங்க.’’ என்றவள் அழைப்பை துண்டிக்க எதிர்புறம் காதை கொடுதிருந்தவனுக்கு பெரும் ஆத்திரம்.
இத்தனைக்கும் சாரு சரியாக தான் பேசினாள். தனக்கு ஏன் இத்தனை ஆத்திரம் வருகிறது என அவனுக்கே புரியவில்லை. எழும்பி நின்றவன் ஆத்திரம் தாங்காது, “சை…’’ என்றபடி தன் கையிலிருந்த ஆப்பிள் ஐ போனை பறக்க விட்டான். அது எதிரே இருந்த சுவற்றில் மோதி அவன் மனம் போலவே உடைந்தது சுக்கு நூறாய்.
ராஜிடம் பேசி முடித்திருந்த ஆரு சாருவை தேடி அவள் அறைக்குள் வந்தாள். “எரும…! உன்ன யாரு என் திங்க்ஸ் எல்லாம் பேக் செய்ய சொன்னா…? நான் போன் பேசிட்டு பாக்குறேன். நீ பேக்கிங்கே முடிச்சி வச்சி இருக்க. நீ என்ன எனக்கு பர்சனல் மெய்டா.’’ என்று கடிந்தபடியே தோழியை நெருங்கி அமர்ந்தாள்.
“எப்பவும் செய்றது தானே. என்ன எப்பவும் ரெண்டு பேக்கிங் செய்வேன். இப்போ ஒன்னு மட்டும்.’’ என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில். தோழியின் குரல் மாற்றத்தில் அவள் முகத்தை திருப்பி பார்க்க அவளின் விழிகள் லேசாக கலங்கி இருப்பதை கண்டவள், “சாரு…! என்னடி…?’’ என்றாள் கவலையாய்.
அதுவரை அடக்கிக் கொண்டிருந்த, சாரு பாடறென தோழியின் மடியில் விழுந்து குமுறி குமுறி அழுதாள். ஆருவிற்கு எதுவும் புரியவில்லை. “ஹே…! என்ன ஆச்சு சொல்லிட்டு அழு பிசாசே…’’ என தோழியை எழுப்ப முயன்றாள் ஆரு.
தன்னை பிரியப்போகும் பிரிவுத் துயர் தான் அவளை இப்படி பேச வைக்கிறது என்பதை உணர்ந்த ஆரு, “சாரு…! ஈசி. இன்னும் போர் மன்த்ல எனக்கு மேரேஜ். அப்பவும் இது தான் நடக்கும். உனக்கு எப்படியோ தெரியல. நீ இல்லாம நான் சர்வைவ் ஆவேனானே எனக்கு டவுட்டா இருக்கு. அதான் இந்த பாரீஸ் ட்ரிப்பை தனியா பேஸ் செய்ய ரெடி ஆயிட்டேன். பேசாம எங்க அப்பா மாதிரி நானும் அரசியல்ல குதிச்சு உன்னை என்னோட சசிகலாவா வச்சிக்கவா…?’’ என்றாள் கொஞ்சமும் சிரியாமல்.