“ஐயம் சாரி…! நான் வேணும்னு எதுவும்..’’ என்றவள் தொடரும் முன், “நான் தப்பா எதுவும் எடுக்கல. எல்லா பொண்ணுங்களுக்கும் தன் வருங்கால ஹப்பி பத்தி ஒரு எக்ஸ்பெக்ட்டேசன் இருக்க தானே செய்யும். ஆனா நீ உருவத்தை விட உள்ளத்துக்கு மதிப்பு கொடுப்பன்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஸ்கூல்டேஸ்ல காலேஜ்டேஸ்ல எல்லாம் குண்டுன்னு எல்லாரும் ஓட்டுவாங்க. உருவ கேலி பண்ணுவாங்க. ஆனா அதையெல்லாம் காதுலையே வாங்காமா கடந்து போயிருவேன். ஆனா நீ அன்னைக்கு பார்த்த ஒரு பார்வை..’’ என்றவன் மீண்டும் அந்த கண்ணாடி கோப்பையை உருட்ட தொடங்கி இருந்தான்.
“சாரி ராஜ்…! நான் உங்களை ஹர்ட் செய்ற மோடிவோட எதையும் செய்யல. வெரி சாரி.’’ என்றாள் உள்ளார்ந்து. சில நொடிகள் அவன் நிமிரவே இல்லை. ஆனால் நிமிர்ந்த போது இதழ்களில் அந்த குறும்பு புன்னகை மீண்டிருந்தது.
“என் பேவரிட் ஹீரோயின் ஜெனிபர் லாரன்ஸ். எனக்கு பிடிச்ச கலர் பர்பிள். சோளாப் பூரி சரியான மிக்சிங்ல கொடுத்தா என் சொத்தையே எழுதி கொடுத்துருவேன் … என்ன பழகிப் பார்க்கலாமா கார்சியஸ்…!” என்றான் கண்களை சிமிட்டி.
ஆருவிற்கும் அதன் பிறகே சுவாசம் சீரானது. பிறகு அவர்கள் தங்களை பற்றி பகிர்ந்தபடி அந்த மாலை சுற்றி வந்தனர். பிஷ் புட் மசாஜ் அரங்கிற்குள் அவன் அழைத்து செல்ல, காலுக்கு அடியில் மீன்கள் குறுகுறுப்பூட்ட இயல்பாக ராஜின் கரங்களை பற்றிக் கொண்டு பொங்கி சிரித்தாள் ஆரு.
சிறுவயது தொடங்கி, பள்ளிநாட்கள், கல்லூரி வாழ்க்கை, உறவுகள், உணவு, உடை என்று தலைப்புகளை தேர்ந்தெடுத்து சலிக்காமல் பேசிக் கொண்டே இருந்தனர். மதிய வேளை நெருங்கும் சமயம் அவளோடு கைகோர்த்தபடி மேரிகுவின் உணவகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான் ராஜ்.
“நம்ம கல்யாணம் பத்தி என்ன முடிவு எடுத்து இருக்கீங்க மேடம்…?’’ என்றான் உல்லாச குரலில். “அது…’’ ஆரு பதில் சொல்லும் முன், “இரு… இரு… நான் பேசி முடிச்சதுக்கு அப்புறம் உன் முடிவை சொல்லு. யாருக்காவும் நம்மளை மாத்திக்க கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனா உன்னோட கண்ல ஏமாற்றத்தை பார்க்கவும் ரொம்ப கஷ்டப்பட்டு உடம்பை குறைச்சேன்.’’ என்றவன் ஆருவை பார்க்க, ‘இப்போ இதை பேசியே ஆகணுமா…?’ என்று அவனை பார்த்து வைத்தாள்.
அவளின் பார்வையை கண்டு கொள்ளாது, “என்னோட ஓபிசிட்டிக்கு காரணம் வெறும் ஜங் புட் தான். அதனால டார்கட் அச்சீவ் செய்ய ஈசியா இருந்தது. ஆனா எல்லாருக்கும் அதே காரணமா இருக்காது. பரம்பரையா வர உடல்வாகு, ஹார்மோன் கோளாறு இப்படி நிறைய விஷயம் காரணமா இருக்கும். அதை எல்லாம் ஈசியா சரி செய்யவும் முடியாது. நான் இப்போ இன்னைக்கு இப்படி இருக்கேன். இன்னும் பத்து வருசம் கழிச்சு இப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது. குண்டாகலாம்… ஒல்லியாகலம் இன்னைக்கு இருக்க என்னோட ஸ்பைக் மண்டை சொட்டையாகலாம்… அப்படி ஆனாலும் உனக்கு என்னை பிடிக்கும் இல்ல… இதோ இப்ப சிரிச்சிட்டே ஜாலியா என் கையை பிடிச்சிட்டு வர மாதிரி இன்னும் அம்பது வருசம் ஆனாலும் இதே சிரிப்போட என் கையை பிடிச்சிட்டு வருவியா…? என்னோட அவுட் லுக் எப்படி இருந்தாலும்…?’’ என தீர்க்கமாக கேட்டான்.
அவன் சுற்றி வளைத்து கேட்க விரும்புவதை ஆர்கலியின் உள்ளம் அறிந்து கொண்டது. ‘என் புறத்தை புறம் தள்ளி அகம் நேசிப்பாயா பெண்ணே…?’ என்ற கேள்வி அவன் கண்களில் தொக்கி நிற்க, “நானும் ஒன்னும் இம்மார்டல் கிடையாது மிஸ்டர் ராஜ். என் சுருட்டை முடி நரைக்கும். கன்னத்துல டொக் விழும். வாய் கூட பொக்கை ஆயிடும். ஈஸ் இட் ஓகே பார் யூன்னா… எனக்கும் ஓகே தான்.’’ என்றாள் இலகுவாய்.
அவள் கரங்களோடு தன் கரங்களை அழுத்தமாய் பிணைத்து கொண்டவன், “ஒரு நாள் பேசி பழகி எதையும் முழுசா தெரிஞ்சிக்க முடியாது கார்ஜியஸ். நம்ம மேரேஜுக்கு தான் இன்னும் சிக்ஸ் மன்த் டைம் சொல்லி இருக்காங்க இல்ல. சோ தினம் பேசிப் பழகலாம். முடிஞ்சா மன்த்லி ஒன்ஸ் அவுடிங் போலாம். லெட் அஸ் பீ பிரண்ட்ஸ். அப்பவும் உனக்கு இதே பாசிடிவ் பீல் என் மேல இருந்த மேரேஜுக்கு ஓகே சொல்லலாம். இல்லைனாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல… உங்க அப்பாவே மேரேஜ் ஐடியாவை ட்ராப் பண்ற மாதிரி ஏதாச்சும் செட் பண்றேன். ஆர் யூ ஹாப்பி நவ்…’’ என கேட்க, சிரித்துக் கொண்டே தலையாட்டினாள்.
“மேக்ஸிமம் நீங்க மேரேஜை ப்ரோசீட் செய்ற மாதிரி தான் இருக்கும் போல.’’ என்றாள் வெட்கி சிவந்த முகத்தை மறுபுறம் திரும்பிய படி. அவளின் அந்த வார்த்தையில் முகம் பிரகாசிக்க மலர்ந்து சிரித்தவன், “இட்ஸ் மை பூன்(வரம்) கார்ஜியஸ்.’’ என்றபடி அவளோடு நடந்தான்.
இவர்கள் உணவகத்தில் நுழையும் போது, சாரு ஒரு மூலையில் முகம் இறுகி அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிர்புற இருக்கையில் அருணும், ராகவும் அமர்ந்திருந்தார்கள். இருவரும் எதையோ தீர்க்கமாக விவாதித்துக் கொண்டிருக்க, ஆரு, “ஹாய்…’’ என்று அவர்களை கலைத்தாள்.
“ஹாய் பப்பும்மா. அதுக்குள்ள மாலை சுத்தி வந்தாச்சா…’’ என்றவன் எழுந்து நின்று ப்ரித்வீராஜிற்கு கை கொடுத்து வரவேற்றான். இருவரும் முகமனோடு நலம் விசாரித்து கொள்ள, ஆரு, “நீ எப்ப அண்ணா வந்தா…? வரதா சொல்லவே இல்ல..?’’ என்ற கேள்வியோடு சாருவின் அருகில் அமர்ந்தாள்.
இயல்பு போல அவள் அருகில் ராஜ் அமர, “இன்னைக்கு ஒரு மூவியோட அக்ரிமென்ட் சைனாக வேண்டி இருந்தது பப்புமா. அதான் இயர்லி மார்னிங் ப்ளைட்ல மும்பை வந்தேன். அப்பா வேற இன்னைக்கு ராஜ் உன்னை மீட் பண்ண போறதா சொல்லிட்டு இருந்தாரு. சரி அப்படியே நாமளும் அவருக்கு ஒரு அட்டனன்சை போட்றலாம்னு வந்தேன்.’’ என்றான்.
அவனை பார்த்து பொங்கி சிரித்த ராஜ், “உங்க பேபி சிஸ்டரை பேபி வாட்சிங் செய்ய வந்தீங்கன்னு சொல்லுங்க. அதான் கொஞ்சம் நம்புற மாதிரி இருக்கு. நீங்க மாலை தேடி வந்தது எல்லாம் சரி. ஆனா நாங்க லஞ்சுக்கு மேரிகுவின் சூஸ் செஞ்சது உங்களுக்கு எப்படி தெரியும்…?’’ என்றான் இயல்பாய்.
அருண் என்ன பதில் சொல்வது என தெரியாமல் திணற, “விக்ரம் சார் சொல்லி இருப்பார்.’’ என்றாள் சாரு பதிலாய். சாரு அவள் அண்ணனோடு அரை மணி நேரம் தான் சந்தோசமாக கழித்திருப்பாள்.
அதற்குள் வேம்பயர் காலிங்கில் வந்தது. ‘இவன் ஏன் இப்போது அழைக்கிறான்…?’ எனப் புரியாது, “அண்ணா ஒரு நிமிஷம்..’’ என்று தமையனிடம் அனுமதி வாங்கி ஓரமாய் சென்று அந்த அழைப்பை ஏற்றாள்.
அருண் வழக்கம் போல, “ராஜ் வந்தாச்சா…?” என்று தன் விசாரிப்பை தொடங்கவும், இவள் ‘ஆம்’ என்ற மறு நொடி, “சரி நீ நந்தி மாதிரி அவங்க வாயை வேடிக்கைப் பார்த்துட்டு இருக்காம கிரவுண்ட் ப்ளோர்ல இருக்க யம்மி புட் கோர்ட் வா…’’ என்றவன் அழைப்பை துண்டிக்க, சாரு தன் வாழ்நாளில் அதுவரை செய்யாத ஒரு காரியத்தை செய்தாள்.
ஆம் அவளே அவனுக்கு அலைபேசியில் அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்றதும், “தயவு செஞ்சி நான் பேசி முடிக்கிற வரை கட் பண்ணாதீங்க. நான் இப்ப எங்க அண்ணா கூட ஃபன் மால்ல இருக்கேன். அவங்க ரெண்டு பேரும் தனியா டைம் ஸ்பென்ட் செய்ய ப்ளான் போட்டு ஆரு எங்க அண்ணாவை மும்பை வர வச்சிட்டா. நான் எங்கயும் நந்தி மாதிரி இல்ல. அதனால நீங்க கவலைப்படாம உங்க வேலையை பார்க்கலாம்.உங்களுக்கு உங்க தங்கச்சியை பார்க்கணும்னா மதியம் மேரிகுவின் ரெஸ்டாரன்ட் வாங்க. அங்க தான் லஞ்சுக்கு மீட் பண்றதா இருக்கோம்’’ என்றவள் அழைப்பை துண்டித்திருந்தாள்.
அவளுக்கு கோபத்தில் முகமெல்லாம் சிவு சிவுவென சிவந்திருக்க, அவளின் அருகில் வந்த ராகவன் “போன்ல யாரும்மா…? நீயேன் இவ்ளோ டென்சன் ஆயிட்ட…?’’ என்று அக்கறையாய் வினவினான்.
“ஒன்னும் இல்லண்ணா. பிரண்ட் ஒருத்தி. அப்போ அப்போ கால் செஞ்சி ஏதாச்சும் இரிடேட் செஞ்சி விட்ருவா.’’ என்றவள் முகத்தை முடிந்த அளவு இயல்பாக்கிக் கொண்டு அவனோடு மீண்டும் அந்த விளையாட்டு அரங்கிற்குள் நுழைந்தாள்.
இவள் வீசிய தூண்டிலில் பெரிய டெடி சிக்கிக் கொள்ள, “ஹே…’’ என்று அவள் உற்சாகமாய் குதிக்க, ராகவ் அவள் உச்சந்தலையை பிடித்து ஆட்டி, “சூப்பர் சது…’’ என்று தன் மகிழ்வை கொண்டாடினான்.
இப்படி இவர்கள் மாலை சுற்றி ஆற அமர மேரிகுவின் உணவகத்திற்குள் நுழையும் போது, இவர்களுக்கு முன் அருண் அங்கே வந்து காத்திருந்தான். அவனை கண்ட ராகவ் மகிழ்வாக கைநீட்டி தன்னை அறிமுகம் செய்து கொள்ள, அவன் மட்டும் அமர ஒரே ஒரு இருக்கைக்கு இடம் விட்டு தள்ளி அமர்ந்த அருண் கர்வமாகவே ராகவுடன் தன் பேச்சை தொடர்ந்தான்.