மகளுக்கு அழைத்தவர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலை ப்ரித்வீயை போனிக்ஸ் மாலில் சென்று சந்திக்க வேண்டும் என்ற செய்தியை பகிர்ந்தார். அப்போதைக்கு தந்தையிடம் மறுத்து பேசாமல் தலையாட்டி வைத்தாலும், ஆரு உள்ளுக்குள் நொந்து போனாள்.
செய்தியை அறிந்த சாரு தோழிக்காய் வருந்தினாள். ப்ரித்வீக்கு வயது என்னவோ இருபத்தி ஐந்து தான். ஆனால் ஆள் பார்க்க தொப்பையும் தொந்தியுமாக முப்பது வயது ஆணைப் போல தோற்றம் கொடுப்பான்.
பரம்பரை, செல்வாக்கு என்ற அளவு கோலில் முருகு பார்க்க, நேரடியாக களத்தில் இறங்கி விசாரித்துப் பார்த்த தமையன்கள் அவன் தொழிலில் கில்லி, அதோடு மேல்தட்டு வர்க்க ஆண்களின் பழக்க வழக்க குறைகள் ஏதுமின்றி நிறைகுடமாய் இருக்க, புறத் தோற்றத்தை புறம் தள்ளி தங்கைக்கு ஏற்ற இளவரசனாய் அவனை முடிவு செய்தனர்.
ஆர்கலி கல்லூரியின் முதலாம் ஆண்டில் இருக்கும் போதே, இந்த பேச்சு வார்த்தை தொடங்கப்பட இவனே உன் மணாளன் என்ற செய்தி மட்டுமே புகைப்படத்துடன் அவளுக்கு அறிவிக்கப்பட்டது.
“அண்ணா… ரொம்ப குண்டா இருக்காரு. எனக்கு பிடிக்கலை.’’ என்று ஆரு முகம் சுருக்க, மெலிதாய் சிரித்த அருண், “கல்யாணம் முடிஞ்சதும்… நீ சமச்சி போடு… தானா இளச்சிடப் போறார்… அவ்ளோ தானே.’’ என்று எளிதாக சமாதானம் சொன்னான்.
அடுத்த அடுத்த குடும்ப வைபவங்களில் அவனை நேரடியாக சந்திக்க நேர்ந்தாலும், ஆர்கலி ஓரிரு வார்த்தைக்கு மேல் அவனிடம் பேச மாட்டாள். பிறந்த நாள், பண்டிகை நாள் என்று விசேச நாட்களில் அவன் பெயர் தாங்கிய பரிசுப் பொருட்கள் அவளை தேடி வரும்.
அதை பிரித்து பார்ப்பதோடு சரி. பெரிதாய் அதில் ஆர்வம் காட்டமாட்டாள். தோழியின் தோளில் ஆதரவாக கரம் வைத்த சாரு, “வெயிட் ரெட்யூஸ் பண்றது எல்லாம் இப்ப ஒரு மேட்டரே இல்ல. உங்க அண்ணனுங்களே ஓகே சொல்லி இருக்காங்கன்னா இவரை விட பெஸ்ட் மாப்பிள்ளை இந்த உலகத்துல உனக்கு எங்க தேடினாலும் கிடைக்க மாட்டார். சோ அவர்கிட்ட நல்லபடியா பேசிப் பழகு.’’ என்று தோழிக்கு அறிவுரை கொடுத்தாள்.
தோழி எப்படி தேற்றினாலும் அன்றைக்கு முகத்தை தூக்கி வைத்து கொண்டே திரிந்த ஆரு அப்படியே உறங்கியும் போனாள். அடுத்து நடக்கவிருந்த வளாக நேர்காணலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
நேரம் நள்ளிரவை எட்டும் போது அவளின் அலைபேசி அழைத்தது. ‘வேம்பயர் காலிங்…’ என அலைபேசி ஒளிர்ந்ததும், ‘ஐயோ காதை தீய்க்க கால் செஞ்சுட்டாரே…’ என மதிற்குள் புலம்பியவள், வேகமாக அழைப்பை ஏற்றாள். நேரம் கழித்து அழைப்பை ஏற்றால் அதற்கு வேறு தனியாக அர்ச்சனை கிடைக்கும்.
“கதவை திற…” என்றவன் அடுத்த நொடி அழைப்பை துண்டித்திருந்தான். பொதுவாக இரவில் மும்பை வர நேர்ந்தால் நேராக தன் வீட்டிற்குள் நுழைந்து விடுவான். ‘என்ன பஞ்சாயத்துன்னு புரியலையே…’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டவள், வேகமாக போய் கதவை திறந்தாள்.
“கதவை திறக்க இவ்ளோ நேரமா…?” என்று கடுகடுத்தபடி உள்ளே நுழைந்தான். “அது… சார்..’’ அவள் பதில் பேசும் முன்பே தான் அணிந்திருந்த ஓவர் கோட்டை சோபாவில் கழற்றி வீசியவன், கையில் வைத்திருந்த பார்சலை அருகிருந்த சோபாவில் வைத்து விட்டு, “கிட்சன்ல போய் ப்ளேட் எடுத்துட்டு வந்து, பார்சலை பிரிச்சி சர்வ் செஞ்சி வை” அருகிருந்த மற்றொரு அறைக்குள் தன்னை தூய்மை செய்து கொள்ள நுழைந்தான்.
‘முசுட்டு முனுசாமி…’ என்று மனதிற்குள் அவனுக்கு பட்டம் கொடுத்தவள், வேகமாக சென்று தட்டை எடுத்து வந்து, அவன் வாங்கி வந்த உணவினை பிரித்து தட்டிற்கு இடம் மாற்றினாள். கண்ணாடி கோப்பையில் நீரையும் பிடித்து வந்து வைத்தவள், அவன் வந்ததும் சொல்லிக் கொண்டு அறைக்குள் நுழைந்து விடலாம் என்று எண்ணியிருந்தாள்.
முகத்தை துண்டினால் துடைத்துக் கொண்டே வந்தவன், தட்டை கையில் எடுத்தபடி, “ஆரு சாப்பிட்டாளா…? மெய்ட் என்ன சமைச்சாங்க…? பீச்சுக்கு அவளோட யார் யார் எல்லாம் வந்திருந்தாங்க…?’’ இப்படி தொடர் கேள்வியாய் கேட்டு அவள் தொண்டையை வரள வைத்தான்.
இவன் கேள்வியை முடித்ததும் ஓடி விடலாம் என்ற எண்ணத்தில் அவளிருக்க, உணவை முடித்தவன் அவளை நிமிர்ந்து பார்த்து, “ஸ்டடீஸ் முடிச்சதும் என்ன ப்ளான்…?’’ என்றான்.
ஒரு நிமிடம் அவன் கேட்பது தன்னை தானா என்பது அவளுக்கு உரைக்கவில்லை. “என்ன…?’’ என்று அவள் அவனை புரியாது குழப்பமாய் பார்க்க, “உன் ஸ்டடீஸ் முடிச்சதும் என்ன ப்ளான்னு கேட்டேன்…?’’ என்றான் அழுத்தமாய்.
“கேம்பஸ் இன்டர்வியூ அட்டன் பண்ண போறேன். முதல்ல ஒரு பெரிய கம்பெனில வொர்க் பண்ணிட்டு கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சதும் பொட்டிக் ஆரம்பிக்கலாம்னு ஒரு ப்ளான் இருக்கு.’’ என்றாள் தயங்கியபடி.
கைகளை கழுவி வந்தவன், தன் வீட்டிற்கு செல்ல கதவை திறந்தபடி, “அதெல்லாம் நீ எந்த இன்டர்வியூவும் அட்டன் செய்ய வேண்டாம். நம்ம ப்ரொடக்சன் கம்பெனிக்கே காஸ்ட்யூம் டிசைனர் தேவைப்படுது. எக்ஸாம் முடிஞ்சதும் உன் ரெஸ்யூம் நான் கொடுக்குற மெயில் ஐ.டிக்கு அனுப்பி வை. மீதி எல்லாம் நான் பாத்துகிறேன்.’’ என்று பேசியபடி வெளியே செல்ல, “வேண்டாம்.’’ என்ற சாருவின் வார்த்தை அவனை தேக்கி நிறுத்தியது.
அதுவரை இயல்பாக இருந்தவன், முகம் சடுதியில் கடுமையாக மாற, ‘என்ன வேண்டாம்.’ என்ற பார்வையை தாங்கி அவளை திரும்பி பார்த்தான்.
அவன் பார்வைக்கே அவளுக்கு வாய் தந்தியடிக்க, “இல்ல… எனக்கு சினி பீல்ட் ஐடியா இல்ல. வேண்டாம்…’’ என்றாள் தட்டு தடுமாறி.
அதற்குள் அவளை நெருங்கி நின்றவன், “ஐடியா இல்லைனா… ஐடியாவை வளர்த்துக்கோ. நீ பாட்டுக்கு வேற ஒருத்தன்கிட்ட வேலைக்கு போனா… பப்புமா கல்யாணம் வரை அவளை யார் பார்த்துக்குவா.’’ என்றவன் அவள் துப்பட்டாவில் கைகளை துடைத்து விட்டு இதழ்களை ஆழ்ந்து பார்த்தான்.
அடுத்த நொடி கண்கள் கலங்க அவன் கைவசமிருந்த துப்பட்டாவை உருவியவள், அங்கிருந்து தன் அறை நோக்கி ஓடினாள். அலட்சியமாக தன் தோள்களை குலுக்கியவன் எதிர் வீட்டை நோக்கி நடந்தான்.
அதே நேரம் பிரான்சின் கோர்சிகா தீவில் இருந்த தன் கண்ணாடி மாளிகையில் நின்றபடி ஆர்பரிக்கும் கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் லூகா. “லூ இட்ஸ் பிஸ்னஸ் டைம்.’’ என்றபடி அவனுக்கு பின்னால் வந்து நின்றான் ஜேம்ஸ்.
‘அது எனக்கு தெரியும்.’ என்று அவனை ஒரு பார்வை பார்த்தவன், “சிக்னல்ஸ் எல்லாம் கிளியரா இருந்தா கிளம்பலாம்.’’ என்றபடி விமான ஓடுதளத்தை நோக்கி நடந்தான். அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் அவன் பின்னால் ஓடிய ஜேம்ஸ், “லூ…! ப்ளீஸ் மீட்டிங்ல உன் கோபத்தை காட்டாத. வெனிஸ் அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்கு தான் காத்துட்டு இருப்பான்.’’ என்றான் பிரெஞ்சில்.
ஜேம்சை ஆழ்ந்து பார்த்தவன், தன் தனி விமானத்தில் ஏறி அமர, இவனுக்கு அறிவுரை சொல்வது செவிடன் காதில் ஊதும் சங்கிற்கு ஒப்பானது என்று தெரிந்தே அதை அடிக்கடி செய்து பழகிய ஜேம்ஸ் தானும் தனக்கான இருக்கையில் சென்று அமர்ந்தான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் பிரான்சின் புகழ் பெற்ற நகரமான பாரிசில் வந்து இறங்கி இருந்தார்கள். அவர்களை அழைத்து செல்ல, பாதுகாப்பு வசதி கொண்ட வாகனம் வந்து காத்திருந்தது. தேவைபட்டால் தங்கி செல்ல இங்கும் சொகுசு மாளிகைகள் லூவின் வருகைக்காய் காத்திருந்தன.
அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் வாகனம் வேறு திசையில் செல்லவும், ஜேம்ஸின் முகம் குழப்பத்தில் சுருங்கியது. ஆனால் லூகாவிடம் அது பற்றி கேட்காமல் அமைதியாயிருந்தான்.
அவர்கள் வாகனம் ஒரு புகழ் பெற்ற மணமகள் உடை வடிவமைக்கும் கடையின் முன் நிற்கவும், ஜேம்ஸ் திரும்பி லூவை பார்க்க, “கல்யாணம் இப்ப இல்ல. இறங்கி வா.’’ என்றவன் அவனுக்கு முன் இறங்க, ஜேம்ஸ் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டவன் லூவை பின் தொடர்ந்தான்.
அங்கிருந்த பெண்கள் அவனை முகமன் கூறி பணிவுடன் வரவேற்றனர். கடையின் உள்ளிருந்து வந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண், “வெல்கம் மிஸ்டர் லூகா. உங்களின் உடை தயாராகிவிட்டது. நீங்கள் இப்போது அதை பார்க்கலாம்.’’ என்று பிரெஞ்சு மொழியில் அறிவிக்க, இரு பெண்கள் அந்த வெண்ணிற உடையை சுமந்து வந்தனர்.
லூ தன் கோர்ட் பாக்கெட்டில் இருந்த அந்த தாளை எடுத்தான். உடைக்கும் அந்த வரைபடத்திற்கும் சின்ன வேற்றுமை கூட எங்கும் இல்லை. உடை முழுக்க பிரத்யேக வெண்ணிற சாட்டினால் தைக்கப்பட்டு முத்துக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதே இதய வடிவ கழுத்து, இடையில் இருந்த வெண்ணிற ரோஜாக்களை கை நீட்டி பறிக்கலாம் போல அத்தனை தத்ரூபமாயிருந்தது. குடை போல விரிந்த ப்ரிலில் ஓடிய ஒவ்வொரு வகை பூவிலும் வெண்முத்துக்கள் சிரித்துக் கொண்டிருந்தன.
ஜேம்ஸ் அந்த உடையை வாய் பிளந்து ரசித்தவன், “வாவ்…’’ என்றிருந்தான். லூகாவோ “நைஸ் ஜாப் மிசஸ் ஆண்டர்சன். நீங்கள் கேட்டதை விட இரண்டு மடங்கு விலையை இந்த உடைக்காக தரப் போகிறேன். இதை பத்திரமாக என்னுடைய மாளிகைக்கு அனுப்பி வைத்து விடுங்கள். இன்னும் ஒரு முக்கிய வேண்டுகோள். இதே டிசைனில் இன்னொரு உடையை நீங்கள் உருவாக்கவே கூடாது.’’ என்றான் கடைசி வார்த்தையை கட்டளையாய் அவர்கள் பேசிய அதே பிரெஞ்சு மொழியில்.
“மிக்க நன்றி மிஸ்டர் லூ. கண்டிப்பாக இதே போன்ற இன்னொரு ஆடையை நாங்கள் வடிவமைக்கப் போவதில்லை. இது உங்கள் இதய ராணிக்கு உங்களின் காதல் பரிசு என்பதை அறிவோம்.’’ என்றாள் அந்த பெண்மணி.
கை குலுக்கி கடையை விட்டு வெளியே வரவும் தான், ஜேம்ஸ் லூவின் கையில் இருந்த அந்த காகிதத்தை பார்த்தான். “இது யாருக்காக…?’’ என்றான் ஜேம்ஸ் குழப்பமாய். லூ பதில் சொல்லாமல் காரில் ஏற, ஜேம்ஸ் ‘கேட்காமலேயே இருந்திருக்கலாம்’ என்பதை தாமதமாக உணர்ந்து அவன் பின் ஓடினான்.
காலையில் தான் வரைந்து வைத்திருந்த வரைபடங்களில் அந்த திருமண உடை வரைபடம் மட்டும் எப்படி தொலைந்தது என தன் அறையையே தலை கீழாக திரும்பிக் கொண்டிருந்தாள் சாரு.