பதில் சொல்லவே முடியாது ஆரு கன்றி சிவந்த முகத்துடன் அமைதியாய் அமர்ந்திருக்க, “உங்க இந்தியாவுல இருக்க நாப்பது சதவீத பொண்ணுங்க வாழ்க்கை என்ன தெரியுமா..? அவங்க தனித்துவ சிறகை எல்லாம் வெட்டி அதை சமயல் அடுப்புல போட்டு எரிச்சிடுறாங்க. கொஞ்சம் யோசிச்சு பாரு மிசஸ் ப்ரித்வீயா உன்னோட ரோல் என்னவா இருக்கும்னு… அவங்க வீட்ல பண்ற பூஜைக்கு எல்லாம் உன்னை முன்னாடி நிக்க சொல்லுவாங்க. அப்புறம் ஏதாச்சும் பேமிலி பங்சன்னா என்ன மாதிரி ட்ரெஸ் போடலாம்னு யோசிச்சிட்டு இருப்ப. கொஞ்ச நாள்ல குழந்தைங்க வருவாங்க. அதுக்கு அப்புறம் அவங்களை வளக்குறதே உனக்கு பெரிய டாஸ்க். அவ்ளோ தான்.

லூவின் வார்த்தைகள் அவளின் இயலாமையை அதிகரிக்க, “இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை இல்லை லூ. எனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை. அது எப்படி இருந்தாலும் அதை மகிழ்வாக வாழ்வது தான் என் லட்சியம்.’’ என்றாள் சோர்வுடன்.

“உனக்கு மலாய்லாமா பத்தி தெரியுமா?’’ என்றான். அவன் புருவங்கள் கேலியில் வளைந்ததோ என்ற எண்ணத்தில் அவன் முகத்தில் பார்வையை பதித்திருந்தவள், “நான் தினம் நியூஸ் பாக்குறது இல்ல. ஆனா சோசியல் மீடியா யூசர் தான். மலாய்லாம பத்தி எனக்கு நல்லாவே தெரியும். இங்க யு.பி.எஸ்.சி எக்ஸாம் பைனல் இண்டர்வியூ நடக்குதா என்ன?’’ என்றாள் சலித்து போன குரலில்.

லேசாக இதழ் விரித்து புன்னகைத்தவன், “அந்தப் பொண்ணு இது தான் எனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கைன்னு இருந்திருந்தா,  முதல் முறை சுடப்பட்டப்பவே அவ பள்ளிக் கூட பையை தூக்கி போட்டுட்டு, விதி அவளை யார் வீட்டுக்கோ ரொட்டி சுட அனுப்பியிருக்கும். ஆனா ஹாஸ்பிடல்ல இருந்து வெளிய வந்த அடுத்த நாள் நான் மறுபடி படிக்க தான் போவேன்னு தன்னோட விதியை மீறி நின்னதால தான், ‘ஒரு பேனா, ஒரு குழந்தை, ஒரு புத்தகம்’ இந்த உலகத்தை மாத்திடும் அப்படிங்கிற அவ முழக்கம் இன்னைக்கு உலகம் முழுக்க எதிரொலிசிட்டு இருக்கு’’ என்றதும் ஆரு இவன் தனக்கு என்ன போதிக்க வருகிறான் என் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் எண்ணத்தை படித்தவன், “நீ ஏதோ விதின்னு சொல்லிட்டு இருந்தியே அதுக்கு பதில் சொல்ல தான் மலாய்லாயை நம்ம பேச்சுல கொண்டு வந்தேன். உன்னை சுத்தி போராளிகளா இருக்க பெண்களை உனக்கு தெரியும் ஏஞ்சல். ஆனா நீ அந்த கண்ணாடி கூண்டை விட்டு வெளிய வர விரும்பல. அங்க நீ கம்போர்ட்டா பீல் செஞ்ச. சோ உன்னோட கம்போர்ட் சோனை நீ உடச்சி வெளிய வர விரும்பல. உன் பியான்சி தவிர உன் பேமிலி உனக்கு கொடுத்தது அத்தனையும் உனக்கு பிடிச்ச விஷயம் தான். அதனால நீயா உன் இறக்கையை வெட்டிட்டு அழகா அந்த கூண்டுல வாழ்ந்து பழகிட்ட.’’ என்றவன் அதன் பிறகு எதுகுறித்தும் பேசவில்லை.

லூவின் இந்த பரிணாமம் ஆருவிற்கு பிடிக்கவில்லை. நேற்றைக்கு அவனோடு மகிழ்ச்சியாக செலவிட்ட மாலை நேரம் மீதமிருக்கும் நாட்களும், அந்த வகையிலேயே கொண்டாட்டமாக கழியும் என ஆரு எண்ணியிருக்க, லூவின் வார்த்தைகள் அவள் அமைதியை குலைத்து போட்டது.

வீட்டை அடையும் வகையில் வாகனம் அமைதியில் மூழ்கியிருக்க, அதற்கு எதிர்மறையாக ஆருவின் உள்ளம் லூவின் குற்றம் சாட்டும் வார்த்தைகளை மீண்டும் அலசி ஆராய்ந்து வாதிப், பிரதிவாதியாய் மாறி அவளை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது.

வீட்டை அடைந்ததும், வாகனம் நின்றதை கூட உணராமல் ஆரு தன் சிந்தையில் மூழ்கியிருந்தாள். “வீடு வந்தாச்சு ஏஞ்சல்.’’ என்ற லூவின் குரல் அவளை நடப்பிற்கு திருப்பியது. வீட்டிலிருந்து கிளம்புகையில் இருந்த உற்சாகம் முழு முற்றாய் துடைக்கப்பட்டிருக்க, குழம்பிய மனநிலையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“இணைக்கு நைட் எங்க பாட்டியோட கிராமத்துக்கு போகலாம் ஏஞ்சல். தயாராயிரு.’’ என்றவன் தன்னுடைய அலுவக அறைக்குள் நுழைய, “என்னால இப்போ எங்கயும் வர முடியாது.’’ என்றாள் அழுத்தமாய்.

“ஏன்?’’ என்றான் லூ. “கொஞ்சம் என் கண்ணாடி கூண்டை திறந்து பாக்கலாம்னு இருக்கேன் லூ. அதுல உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா?’’ என்றாள் அவன் கண்களை நேராக சந்தித்து.

அவளை சுவாரசியமாக பார்த்தவன், “கட்டாயமா இல்ல. வீக் என்ட்ல கூட நாம் அங்க ட்ரிப் போகலாம். நிச்சயம் அந்த மலைக்கிராமத்தை உனக்கு பிடிக்கும்னு நம்புறேன். நைட் டின்னர்ல மீட் பண்ணுவோம். பை ஏஞ்சல்.’’ என்றவன் தன் அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

கண்டிப்பாய் மறுப்பான். கட்டாயப்படுத்தி தன்னை அழைத்து செல்வான் என ஆரு நினைத்திருக்க, அவனின் அந்த செய்கை அவளுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. தன் அறைக்குள் நுழைந்த முதல் வேலையாக தங்கள் குடும்ப வைத்தியர், ராம கிருஷ்னணை தொடர்பு கொண்டாள்.

முதலில் அவள் கேட்க விவரங்களை தர தயங்கியவர், அவளின் பிடிவாதம் கண்டு வேறு வழியின்றி மேலோட்டமாக அவள் பெற்றோரின் உடல் நிலை குறித்து விளக்க தொடங்கினார். அவர் பேசியதை கேட்டிருந்தவளின் கண்களில் நீர் தளும்ப, “தாங்க்ஸ் அங்கிள். நீங்க இப்போதைக்கு என்கிட்டே ஷேர் செஞ்ச விஷயம் எங்க வீட்டுக்கு தெரிய வேண்டாம். இனி அவங்க மன்திலி செக்கப் ரிப்போர்ட் எனக்கு ஒரு காபி மெயில் செஞ்சிடுங்க.’’ என்று ஆணையிட்டவள் அலைபேசியை துண்டித்தாள்.

கண்ணாடி கூண்டின் சிறிய ஜன்னலை திறந்த நொடியே பெரும் புயல் அடிக்கிறதே என எண்ணியவள், அடுத்து அலைபேசியில் சாருவை அழைத்து பேச எண்ணினாள். இரண்டு நொடி தயக்கத்திற்கு பின், சாருவிற்கு அழைத்துவிட்டு காத்திருந்தாள்.

முழுதாய் இருமுறை அழைத்த பின்பும் சாரு அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் விடாது முயற்சிக்க, அழைப்பை ஏற்ற சாரு சோம்பலான குரலில், “ஹெலோ” என்றாள்.

“ஹே…ஹாய்…! சாரி இந்த நேரத்துல உனக்கு கால் செஞ்சதுக்கு. நீ ஓகே தானே.’’ என்றாள் இயல்பான குரலில். அப்போது தான் அழைப்பது தோழி என்பதை உணர்ந்த சாரு, “ஓ மை காட். ஆரு நீயா…! சாரி. நல்லா தூங்கிட்டு இருந்தேன். நீ ஓகே தானே. எதுக்கு இந்த நேரத்துல கால் செஞ்சி இருக்க. அங்க எதுவும் பிரச்சனையில்ல தானே. உன்னோட ஷோ எல்லாம் எப்படி போகுது.’’ என்றாள் உற்சாகம் நிரம்பிய குரலில்.

“ஹே… ஈசி… ஈசி. நான் ரொம்ப நல்லா இருக்கேன். உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கலாமா.’’ என்றாள். “என்னடி புதுசா பர்மிசன் எல்லாம் கேக்குற. எதாச்சும் டிசைன் வரையணுமா என்ன? நாளைக்கு எதாச்சும் அசைன்மென்ட் சப்மிசன் இருக்கா?’’ என்றாள் சாரு.

“சாரு போதும். அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நம்ம ப்ரண்ட்ஷிப்பை நீ மதிக்கிறதா இருந்தா என்னோட கேள்விக்கு உண்மையான பதிலை மட்டும் சொல்லு.” என்றாள்.

சாரு அப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “சரி கேளு. என்ன பெருசா கேட்டுட போற. மிஞ்சி மிஞ்சி போனா என்னோட ரீசன்ட் க்ரஷ் யாருன்னு கேப்ப.இல்லனா ப்ரித்விராஜ் பத்தி ஏதாவது லேட்டஸ்ட் இன்பர்மேசன் கேக்க போற. அவ்ளோதானே.’’ என்றாள்.

தோழியின் பதிலில் லேசாக சிரித்தவள், “அதெல்லாம் ஒண்ணுமில்ல. என்னோட பிரண்டா இருக்குறதால உன்னோட தனித்தன்மையை இழந்துட்ட தானே நீ. என்னோட பர்சனல் மெய்ட் மாதிரி பீல் செய்ற தானே. என்னால தானே உனக்கு பிடிச்ச படிப்பை கூட உன்னால படிக்க முடியல. உன்னோட சொந்த குடும்பத்துக்கிட்ட இருந்தே உன்னை பிரிச்சி கிட்ட தட்ட உனக்கு ஒரு அடிமை வாழ்க்கை அமைஞ்சதுக்கு நான் தானே காரணம்.’’ கட்டுப்படுத்தியும் முடியாமல் வாக்கியத்தை முடிக்கும் போது, குரல் கரகரத்து விட்டிருந்தது.

மறுமுனையில் அதிர்ந்து போன சாரு பேச வார்த்தைகளற்று மௌனியாகியிருந்தாள். திரண்டு விழ முயன்ற கண்ணீரை உள் இழுத்தபடி, “நம்ம பிரண்ட்ஷிப் மேல சத்தியமா இப்போ நீ உண்மையை மட்டும் தான் சொல்லணும்.’’ என்றாள் உறுதியான குரலில்.

சாருவோ மென்மையாகிவிட்ட குரலில், “இதுல உன் தப்பு எதுவும் இல்ல ஆரு. ப்ளீஸ். நீ இவ்ளோ பீல் செய்யணும்னு அவசியம் இல்ல. இன்பாக்ட் உன்னோட பிரண்ட்ஷிப் கிடைச்சதால தான் எனக்கு நல்ல எஜுகேசன் கிடைச்சது. நீ… நீ…’’ சாரு ஆருவை சமாதனப்படுத்த முயல, “போதும் சாரு. எனக்கு புரியுது.’’ என்று இடையிட்டு அவள் பேச்சை நிறுத்தினாள்.

சாருவின் உள்ளம் கலங்கிட, “அவன் சொன்னது சரி தான். இத்தனை நாள் நான் ஒரு கிளாஸ் ரூம்ல என்னோட கம்போர்ட் மட்டும் பாத்துட்டு நிம்மதியா இருந்து இருக்கேன். நீ கூட உன்னோட உண்மையான பீலிங்க்ஸ் என்கிட்ட ஷேர் செய்யல. சாரி சாரு. ஐயம் ட்ரூலி ரியலி சாரி.’’ என்றவள் கன்னம் இறங்கிய கண்ணீர் துளிகளோடு அழைப்பை துண்டித்தாள்.

இத்தனை நாள் வாழ்ந்த வாழ்வே, ஒரு மாயையாய் தோன்றிட, மெத்தையில் விழுந்தவள், கதறி அழத் தொடங்கினாள். கூட்டுப் புழு பருவத்தில் இருந்த பட்டுப் பூச்சி சிறகு விரிக்கும் முன் கொள்ளும் போரட்டாமாய் அது இருந்தது.

அவன் வருவான்.