அந்த மாலை நேர சூரியன் மஞ்சளின் மந்தகாச ஒளியில் மும்பையை நனைத்துக் கொண்டிருந்தான். சாரு வரைந்து வைத்திருந்த சில உடை வரைபடங்கள் அடங்கிய கோப்பை தவறுதலாக தங்கள் அறையிலேயே விட்டு சென்றிருந்தாள். அதை எடுத்து செல்வதற்காக விடுதியிலிருந்து வந்திருந்தாள்.
தனக்கு தேவையான கோப்புகளை எடுத்துக் கொண்டவள், அப்போது தான் எதிர்புற பிளாட்டின் கதவு லேசாக திறந்திருப்பதை கண்டாள். வழக்கமாய் மாலை நேரங்களில் அவனை வீட்டில் காண்பது அரிது. அவன் வந்தவுடன் எப்போதும் அவனை அழைத்து பேசுவதால் அவனது வழமைகள் அவளுக்கு அத்துப்படி.
‘வேம்பயர் எதுக்கு இந்த நேரத்துல வீட்டுக்கு வந்து இருக்கான். எப்பவும் நைட்டு பத்து மணிக்கு மேல ராக் கொள்ளைக்காரன் மாதிரி தான வருவான்.’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவள், ‘அவன் எப்ப வந்தா என்ன…? நாம வந்த தடயமே தெரியாம எஸ் ஆயிடுவோம்.’ என்று பூனை போல நகர்ந்த நேரம், எதிர் வீட்டின் கதவை விரிய திறந்து கொண்டு மருத்துவர் வெளியே வந்தார்.
அவரை சாருவிற்கு தெரியும். ஆருவிற்கு உடம்பிற்கு முடியவில்லை என்றால் வீட்டிற்கு வந்து வைத்தியம் பார்த்து செல்லும் மருத்துவர் அவர். ‘அவரென்ன இங்கிருந்து வந்து கொண்டிருக்கிறார்.’ என சாரு குழப்பத்தில் புருவத்தை சுருக்கும் போதே, அவளை கண்டுவிட்ட மருத்துவர் அவளைப் பார்த்து சிநேகமாய் முறுவலித்தார்.
தானும் அதே சிநேகப் புன்னகையை சிந்தியவள், “என்ன விஷயம் சார்…? திடீர் விசிட்.’’ என்றாள். தற்சமயம் அவளை கேள்வியாய் பார்த்தவர், “உங்களுக்கு தெரியாதா…? நேத்து நைட்டு அருண் படியில ஸ்லிப் ஆகி விழுந்துட்டாராம். கொஞ்சம் உள் அடி மாதிரி இருந்தது. டிடி இன்ஜக்சன் போட்டுட்டு, பெயின் கில்லர் டேப்லட்ஸ் கொடுத்துட்டு வந்தேன். அவங்க சிஸ்டர் வந்தா அவங்ககிட்ட இன்பார்ம் செஞ்சிடும்மா. உடம்பு சரியில்லைனா யாராவது கூட இருந்தா கொஞ்சம் பெட்டரா பீல் செய்வாங்க இல்ல.’’ என்று இந்தியில் நீட்டி முழக்கியவர், பளு தூக்கி நோக்கி நடந்து விட, சாரு அங்கேயே தேங்கி நின்றாள்.
என்ன செய்வதென்று அவளுக்கு சில நொடிகள் புரியவில்லை. சற்று நேரம் சிந்தித்தவள் அடுத்த வினாடி எதைப்பற்றியும் யோசிக்காமல் அருண் வீட்டை நோக்கி நடந்திருந்தாள்.
கதவு லேசாக திறந்து மூடும் ஒலியில், அருண் தான் படுத்திருந்த இடத்திலிருந்து தலையை உயர்த்தி பார்த்தான். அலுவலக கோப்புகளில் கையெழுத்திட வேண்டியிருக்க, உதவியாளர் ஒருவரை வீட்டிற்கு அழைத்திருந்தான்.
அவர் தான் வந்திருப்பாரோ என்ற எண்ணத்தில் அருண் இருக்க, உள்ளே நுழைந்தவளின் வரி வடிவத்தை கண்டவள், சற்றே குழப்பத்துடன் எழுந்து அமர்ந்தான். அவன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தவள், “ஒரு பைல் எடுக்க வந்தேன். கிளம்பும் போது, டாக்டரை பார்த்தேன். உங்களுக்கு அடிபட்டு இருக்குன்னு சொன்னார். இப்போ எப்படி இருக்கு.’’ என்றவள் கன்றி சிவந்திருந்த இடக் கன்னத்தை பார்த்தபடி நின்றாள்.
“ம்…! இப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஆபிஸ் அசிஸ்டன்ட் இப்போ வந்துடுவாங்க. இருட்டுறதுக்கு முன்ன நீ ஹாஸ்டல் கிளம்பு.’’ என்றான் அருண்.
என்னவோ முகம் தெரியாத ஒருவனிடம் அடிவாங்கிவிட்டு, அதை மற்றவர்களிடம் கீழே விழுந்து அடிபட்டுவிட்டதாக கட்டுக் கதை கட்டிக் கொண்டிருந்ததையே அவமானமாக உணர்ந்தவன், தன் எதிரே நின்று கொண்டிருந்த சாருவிடம் அதே பொய்யை உரைக்க நேர்ந்ததில் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு உள்ளானான்.
‘என்ன ஆச்சு இவருக்கு. வழக்கமா சும்மா இருக்கும் போதே, டீ போடு, காபி போடு, தைலம் போடுன்னு மனுஷன் உசிரை வாங்குவார். இப்போ என்னடான்னா, அடிபட்டு படுத்துட்டு இருக்கும் போது போ போன்னு துரத்துறார். என்னவோ சரியில்லையே.’ என்று அவள் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, கதவை தட்டும் ஒலி கேட்டது.
அருண் உரத்த குரலில், “வாங்க கரண்.’’ என்று குரல் கொடுக்க, அலுவலக கோப்புகளை சுமந்த ஒருவன் உள்ளே வந்தான். அது தான் சமயம் என சாரு சமையலறைக்குள் நுழைந்து, தேநீர் தயாரிக்க துவங்கினாள்.
அருணின் குட்டி சமையலறையில் தேநீர், மற்றும் காபி கலக்க தேவையான பொருட்கள் மட்டும் இருக்கும். சூடான ஏலக்காய், இஞ்சி போட்ட தேநீரை எடுத்து வந்தவள் இருவருக்கும் நீட்ட, அருண் மற்றவன் முன் ஏதும் பேச முடியாது எடுத்துக் கொண்டான்.
அவர்கள் அலுவலக விசயங்களை பேசிக் கொண்டிருக்கும் போதே, தன் எதிர் வீட்டிற்கு விரைந்தவள், சூடாக சாதம் வைத்து, எலும்பிச்சை ரசத்துடன் உருளை வறுவலையும் செய்தாள்.
அருண், கரணுடன் விவாதித்துக் கொண்டு இருந்தாலும், அவன் கண்கள் எதிர் வீட்டு கதவை நோக்கி அடிக்கடி சென்று வந்தன. கிட்ட தட்ட முக்கால் மணி நேரம் கழித்து மீண்டும் அருண் வீட்டிற்குள் சாரு நுழையும் போது, கரண் கிளம்பியிருந்தான்.
சூடான ரசம் சாதத்தை குழைவாக மசித்து, ஒரு பவுலில் ஸ்பூனுடன் கொண்டு வந்தவள், அதோடு மற்றொரு சிறிய கப்பில் வறுத்த உருளைகிழங்கை வைத்திருந்தாள். அத்தனையும் ஒரு ட்ரேயில் அடுக்கியவள், வரவேற்பறையில் இருந்த சிறு மேஜையில் அதனை வைத்தாள்.
அருண் இருந்த படுக்கை அறைக்குள் நுழைந்தவள், “சார் சூடா ரசம் சாதமும், உருளை கிழங்கு ப்ரையும் செஞ்சி இருக்கேன். சாப்பிட்டு டேப்லட் போடுங்க. நான் இன்னைக்கு இங்க தான் தங்க போறேன். நாளைக்கு மார்னிங் இங்க இருந்தே காலேஜ் போய்டுவேன். ஏதாச்சும் வேணும்னா கூப்பிடுங்க.’’ என்றவள் திரும்பி நடக்க, “சாரு…’’ என்று அழைத்திருந்தான் அருண்.
அவன் அழைப்பில் ஆச்சர்யம் கொண்டவள், மெதுவாக திரும்பி பார்க்க, “ரொம்ப தாங்க்ஸ்.’’ என்றான் கரகரத்து போன குரலில். “பரவாயில்ல சார். டேக் கேர்.’’ என்றவள் மீண்டும் திரும்பி நடக்க, “ஒரு நிமிஷம்…’’ என்று அவளை நிறுத்தியவன், “எனக்கு அடிபட்டது ஆருவுக்கு தெரிய வேண்டாம். வீட்லயும் யாருகிட்டையும் சொல்லிடாத.’’ என்றான்.
சாரு கேள்வியாய் பார்க்க, ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன், “ஆக்சுவலி கீழ விழுந்து எனக்கு அடிபடல. நேத்து நைட் யாரோ ஒரு அட்டாக்கர் என் ரூம்ல நுழைஞ்சி, என் மூஞ்சை போர்வையால கவர் பண்ணிட்டு அடிச்சிட்டு, தப்பிச்சு போயிட்டான். வந்தவன் யாரு…? அவன் மோட்டோ என்ன…? அப்பாவோட பொலிடிகல் இஸ்யூவால வந்த ஆளா… இல்ல சினி இண்டஸ்ட்ரில என் வளர்ச்சி பிடிக்காத எனிமிங்க யாராச்சும் செஞ்ச வேலையா…? எதுவுமே புரியல. காலைல தான் விக்ரம்கிட்ட பேசி ஒரு டிடக்டிவ் ஏஜென்சிய காண்டாக்ட் செஞ்சி இருக்கேன். இதுவரைக்கும் அட்டாக்கர் பத்தி ஒரு நியூஸ் கூட கிடைக்கல. எனக்கே சரியா தெரியாத விசயத்தை வீட்ல சொல்லி யாரையும் கலவரப்படுத்த விரும்பல. அதான்… நீயும் எனக்கு அடிபட்டதை பத்தி வீட்ல யார்கிட்டையும் பேச வேண்டாம். சரியா…?’’ என்றான்.
இதுவரை தவறுதலாக விழுந்து ஏற்பட்ட விபத்து என்ற எண்ணத்தில் இயல்பாக இருந்தவள், அவனை யாரோ வேண்டுமென்றே தாக்கி இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்ததும், மிகவும் பதறிப் போனாள்.
சடுதியில் அவனை நெருங்கியவள், “என்ன சார் சொல்றீங்க. உங்களை வீட்டுக்கே வந்து அட்டாக் செஞ்சாங்களா…? அப்புறம் எதுக்கு நீங்க இங்க தனியா இருக்கீங்க. உடனே சென்னை கிளம்புங்க. அப்பாகிட்ட எதுக்கு சொல்லாம இருக்கீங்க. அவர் பவரை யூஸ் செஞ்சி அவரும் அந்த கல்பிரிட்டை கண்டுபிடிக்க முயற்சி செய்வார் தானே. எதுக்கும் போறதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல் போயி புல்லா செக் செஞ்சிட்டு போங்க.’’ என்றாள் பதட்டத்துடன்.
“சாரு… சாரு… காம் டவுன். நான் ஒன்னும் குழந்தை இல்ல. எல்லா சிச்சுவேசனும் எனக்கு சமாளிக்க தெரியும். இப்போ நம்ம ஸ்ட்ரீட் சுத்தி செக்யூரிட்டி கார்ட்ஸ் டைட் செஞ்சாச்சு. இந்த வீட்டை சுத்தி மட்டும் நாலு கார்ட்ஸ் இருக்காங்க. எனக்கு ஒண்ணும் ஆகாது. அங்க, அப்பா, அண்ணா எல்லாரும் ஏற்கனவே வேற பொலிடிகல் ப்ரஷர்ல இருக்காங்க. இப்போ நானும் போயி பிரச்சனைன்னு நின்னா நல்லா இருக்காது. புரிஞ்சிக்கோ. என்ன பார்த்துக்க என்னால முடியும். சரியா.’’ என்றான் திடமாய்.
மண்டையை முன்னும் பின்னும் ஒருவாரு ஆட்டியவள், “சரி. யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். ஆனா நானும் இங்க தான் தங்குவேன். பிரச்சனை முடியிற வரை உங்களை தனியா விட முடியாது.’’ என்றவள் அங்கிருந்த சோபாவில் அமர, அருண் அவளை விழி விரித்துப் பார்த்தான்.
அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாதவள், “எல்லாம் ஆருக்காக தான். அவ இல்லாதப்ப ஏதாச்சும் நடந்தா அவளுக்கு நான் தானே பதில் சொல்லணும். வேற ஒன்னும் இல்ல.’’ என்றாள் தயங்கியபடி.
அதுவரை அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன், தன் பார்வையில் ஆதிக்கத்தை கொண்டு வந்து, “ஓ…! அப்ப சரி. அந்த ஆயின்மென்ட் எடுத்து கொஞ்சம் போட்டு விடு. புட் ஆறியிருக்கும் மறுபடி ரீ ஹீட் செஞ்சி கொண்டு வா.’’ என்றான் குரலில் திமிரை கூட்டி.