வெற்றிக்கு கொஞ்சம் புரிந்தது மனைவியின் மனம் தன்னை நோக்கி சாய்கிறது என்று… எதிர்காலம் நம்பிக்கையாக இருந்தது.
காலை நேர பரபரப்பில் சரண்யா கணவனை கண்டு கொள்ளவே மாட்டாள். எப்போதாவது வரும் மாமியார் என்பது போய் மூன்று வேளையும் இங்கு இருந்து தான் சாப்பாடு. ஒரு நைட்டியில் இழுத்து கொண்டை போட்டு ரவுண்டு கட்டி ஓடுவாள். பிள்ளைகள், கணவன், மாமியார், மாமனார் என்று எல்லோரையும் பார்க்க வேண்டும். தனம் துரும்பை கூட அசைக்க மாட்டார். அப்புறம் எதுக்கு மருமகள் என்ற கேள்வி வரும்…
காலையில் மனைவியோடு இருக்கும் வெற்றி. மாலையில் பார்ப்பது அரிது தான். அன்று அவனும் வீட்டில் தான் இருந்தான். மாயா வந்து இருக்கக் பிள்ளைகள் அப்பத்தா வீட்டில்… வீடு கொஞ்சம் அமைதியாக இருந்தது. பிள்ளைகள் இல்லாதது வெற்றிக்கு என்னவோ போல இருக்க, சரண்யா ஓய்வாக இருந்தாள்.
அதை தொடாதே, இதை எடுக்காத, தண்ணி கிட்ட போகாத, குப்பை போடாதே என்று கத்தல் இன்றி வாய்க்கு ஓய்வு… அப்படி தான் சொல்ல வேண்டும். செல்லம் கொஞ்சுவது மட்டுமே தந்தை. கட்டி மேய்ப்பது எல்லாம் தாய் தான். பெரிதாக வேலை இல்லாமல் இருக்க, மீன் குழம்பு, மீன் வறுவல், மட்டன் தொக்கு செய்தாள். அதை கண்ட வெற்றி,
“சரண்யா, எதுக்கு இவ்வளவு பிள்ளைகளும் இல்லை. எனக்கும் வயிறு உப்பி தான் இருக்கு… தேவை இல்லாத வேலை…”
“ஏன்?… உங்களுக்கும், உங்க மகளுகளுக்கும் மட்டும் தான் வாய், வயிறு, நாக்கு எல்லாம் இருக்கா… நாங்க என்ன காத்த குடிச்சா வாழ. இது எல்லாம் எனக்கு… எனக்கு மட்டும் ஆசையா செஞ்சேன். நல்லா சாப்பிட்டு, நிம்மதியா தூங்க போறேன். நீங்களும் உங்க அம்மா வீட்டுக்கு கூட போகலாம்…” என்று சரண்யா சாப்பிட அமர,
வெற்றி தான் முழித்து நின்றான். அவர்கள் வீட்டில் பிள்ளைகள் இருந்தால் மட்டுமே ஸ்பெஷல் உணவு இருக்கு. மத்தபடி தாய், தந்தை பெரிதாக விரும்ப மாட்டார்கள். மனைவி சொல்வதும் நியாயம் தானே. அவளுக்கு பிடித்ததை அவள் செய்து சாப்பிடட்டும். அதுக்கு காரணம் தேவையில்லை. மனதில் நிம்மதி வந்தது. எப்பொழுது எல்லாம் தனக்கு என்று , தன் விருப்பத்துக்கு என்று ஒவ்வொன்றையும் பார்க்கிறாள். உணவில் ஏற்படும் விருப்பத்தை கூட மறந்து வாழ்ந்தவள். தன் தேவைகளை நிறைவு செய்கிறாள்.
திருப்தியாக சாப்பிட்டவள், “நான் தூங்க போறேன். நானா தான் எழுவேன். டீ போட என்னை எழுப்ப கூடாது…” என்று சொல்லியே படுத்தாள்.
மாலை ஐந்து மணிக்கு தான் வெளி வந்தாள். சிமெண்ட் கலர் பூனம் சேலை, தலை பின்னி கொஞ்சம் ஜாதி மல்லி வைத்து இருந்தாள். காலை முழுக்க நைட்டி, அப்புறம் சுடிதார் என்று இருப்பவள். மாலை மட்டும் தான் சேலை, அதுவும் பூனம் சேலை தான். பின் பக்கம் இருக்கும் செடிகளுக்கு குட்டி குடத்தில் தண்ணீர் ஊற்ற, அப்போது தான் எழுந்து வந்தான் வெற்றி.
அரைகுறை தூக்கத்தில் வந்தவனுக்கு மனைவியின் நிறை அழகு கவர்ந்தது. பட்டும், நகையும் குடுக்காத ஒரு சௌந்தர்யம் சாதாரண வீட்டில் கட்டும் சேலை எடுத்து காட்டியது. அப்படியே படியில் உட்கார்ந்து மனைவியை ரசிக்க தொடங்கி விட்டான். எதுவும் பேச வில்லை, சின்ன சிரிப்பும், கண்களில் ரசனையும் மட்டுமே….
கணவனை கண்டவள் இருவருக்கும் டீ கொண்டு வர, மேல் படியில் வெற்றியும், கிழ் படியில் சரண்யாவும் அமர்ந்து என்றாவது கிடைக்கும் மாலை நேரத்தை ரசிக்க தொடங்கினார்கள். இது தான் என்று இல்லாமல் பொதுவான விசங்கள் யாவும் அலச படும்…
மூக்கு வேர்த்தது போல தனம் வந்து விட்டார். சரண்யா முகத்தில் சிரிப்பு வந்தது. எல்லோரும் அங்கே தான். இவர்கள் இருவர் மட்டும் தான் வீட்டில்… ஏனோ யாரும் தொந்தரவு செய்ய வில்லை. மகனை பார்க்காமல் தூக்கம் அண்டாது அம்மைக்கு… சரண்யா டீ வைக்க எழுந்து சென்றாள்.
அவள் அளவில் மாமனார், மாமியாரை பார்ப்பது இது ஒன்றில் தான். சாப்பாடு, டீ, காபி, பழம் என்று ஏதேனும் கேட்கும் முன் கவனித்து விடுவாள். பெத்தவர்கள் வயிறு காய கூடாது…
“வெற்றி, ராத்திரி ஒரு சடங்கு வீடு இருக்கு…”
அவளுக்கு தான் தெரியுமே… மகனிடம் புதுசாக சொல்ல தான் வேண்டுமா…
“வெற்றி, நான் சடங்கு வீட்டுக்கு போறேன். பிள்ளைக யூனிஃபார்ம் மட்டும் அயன் பண்ணி வச்சுடுங்க…” மகனை வேலை சொன்னால் மாமியாருக்கு பிடிக்காது.
தனம் முகம் கடுகடுவேன்று ஆகியது.
“பெத்து பேரு வச்சவ மாதிரி வெற்றின்னு சொல்றா பாரு..”
“தென்னை ஓலையை கொஞ்சம் வெட்டி விடுங்க. வீட்டுல இருந்தா சின்ன, சின்ன வேலை செய்யணும்…”
மகன் எதிரில் மருமகளை ஒன்றும் சொல்ல மாட்டார். தனியாக சிக்கினாள் இருக்கு…
வெற்றியும் அருவாள் எடுத்து கொண்டு பின் பக்கம் செல்ல, “லூசு பைய…” முணங்கினார் தனம்.
இரவு பத்து மணிக்கு பிள்ளைகள் உடன் தான் வந்தாள் சரண்யா. சாதாரண சேலைக்கு மாறி பிள்ளைகள் உடன் படுத்து கொள்ள, அடுத்து தான் வந்தான் வெற்றி.
என்னவோ மாலையில் இருந்து மனைவி நினைப்பு தான். இப்போது மல்லிகை பூ வாசம் ஆள் தூக்கியது. எட்டி பார்க்க, லட்டு குட்டி, பட்டு குட்டி அதற்கு அடுத்து சரண்யா… தூக்கமே இல்லை, புரண்டு புரண்டு படு படுத்தவன். அவளை அணைத்து கொண்டு உறங்கும் சுகம் கேட்டது மனம். மெல்ல பிள்ளைகளை ஓரம் கட்டி படுத்து, சரண்யா அருகில் இருந்த சிறு இடத்தில் உடல் குறுகி படுத்து கொண்டான்.
ஐந்து வருடம் முன் உணர்ந்த வாசம், கிறங்கி தான் போனான். மெத்தை அசைவில் சரண்யாக்கும் முழிப்பு வந்தது. ஒரே படபடப்பு… அறியாதது அல்ல. அறிந்து பல வருடம் ஆனது. அப்பவே முரடன் தான். கொஞ்சம் பயம், கொஞ்சம் எதிர்பார்ப்பு. கண்ணை மூடி படுத்து கொண்டாள். மெல்ல உடலோடு ஒட்டி படுக்க, மனைவியை எப்படி எழுப்ப என்று தெரியவில்லை. தவித்து போனான்.
படங்களில் வருவது போல தோலில் கை வைத்தால் என்ன… ஓங்கி அறைவது போல ஒரு தோற்றம் வர, பயந்து போனான். நைசாக தன் காலை தடவி பார்த்து கொண்டான். கத்தி குத்து தழும்பு இருந்தது.
அரை மணி நேரம் சென்றும், அப்படியே தான் இருந்தான் தவிர ஒரு முன்னேற்றமும் இல்லை. சரண்யாக்கு பொறுமை முழுதாக போய் விட்டது. தூங்கவும் விடாமல், முழிக்கவும் விடாமல் இது என்ன அவஸ்தை.
பலவாறு யோசித்தான், மனைவியை எழுப்பி புரிய வைப்பதற்க்கு பாட்டாக பாடியே விடுவோம். நல்ல ஐடியாவாக தான் தோன்றியது.
அவன் செருமல் சத்தத்தில் அவள் உஷாரானள்.
வெட கோழி எனக்காக தினம் தவமா கிடக்கு…
கணக்காக தொட வேண்டும் இடம் புதுசா இருக்கு…
அட!… ராத்திரி நேரத்தில மல்லிகை பூ இம்புட்டு தேவையில்லை…
அடி ஆத்தாடி ஆம்பிளைக்கு புத்தியில விவரம் எட்ட வில்லை.
நான் இறுக்கி புடிச்சா எறும்பு கூட நொறுங்கும்…
அவளை தன் உடலோடு சேர்த்து அணைக்க, “அப்பா…” என்று ஒரு சத்தம். பதறி போய் இருவரும் எழுந்து அமர, அவனின் பட்டு குட்டி…
மெத்தையை ஈரம் செய்து இருந்தாள், அசௌகரியமாக இருக்க, வெற்றியின் பாட்டு சத்தம் முழுசாக எழுப்பி விட்டது. “முழிச்சு தான் இருந்தியாடி ராட்சசி…”
சரண்யா முகத்தை திருப்பி கொண்டாள். மெத்தை விரிப்பை மாற்ற வேண்டும். அஜியை தூக்கி வெற்றி தோலில் போட, விஜியை இறக்கி விட்டவள், வேகமாக மெத்தை விரிப்பை மாற்றினாள்.
“தொட்டில போட்டு ஆட்டி விடுங்க, தூங்கிடும்…” சரண்யா சொல்ல, வெற்றி தூக்கி கொண்டு சென்றான்.
அரை மணி நேரம் இருக்கும், முட்டை கண்ணை உருட்டி கொண்டு படுத்து இருந்தது பட்டு குட்டி. சும்மா கூட கண்ணு சொருக வில்லை.
“அப்பா, நின்னு ஆட்டு…”
“தூங்குடா பட்டு…”
“வேகமா ஆட்டி விடு…”
“கண்ணை மூடி தூங்கு. எப்படி கண்ணை மூடுவ…”
“பாட்டு பாடு ப்பா…”
“கிழிஞ்சது போ…”
“இன்னைக்கு முழுக்க சிவராத்திரி தான்…” சரண்யா வந்து நிக்க.
“அதுக்கு தான் நானும் பிளான் பண்ணேன். ஆனா, இப்படி எதிர் பார்க்கலை…”
“அப்பா, பால் வேணும்…”
வெற்றி, சரண்யாவை பார்க்க, அவள் உள்ளே சென்றாள்.
“தூங்கு பட்டு. உப்பு தாத்தா சாக்கு கொண்டு வாராங்களாம். தூங்காத பாப்பாவா சாக்குல கட்டி தூக்கி போவார்…” வெற்றி சமாதானம் செய்ய. இஞ்ச் முடியவில்லை. பிள்ளை முத்து போல முழித்து கொண்டு இருந்தது. வெற்றிக்கு கை தான் வலித்தது.
“அப்பா, பாட்டு பாடு…”
சரண்யா அங்கு சோபாவில் அமர்ந்து இருக்க, அவளை பார்த்தவன்.
பூங்காத்தே அந்த பொண்ணு கிட்ட என்னை கொண்டு போ…
தனியா… அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…
“அப்பா, ரஞ்சிதமே பாடு…”
சரண்யாக்கு சிரிப்பு வந்து விட்டது, அடக்க முடியவில்லை.
“என்ன சிரிப்பு. இந்தா இப்போ உன் டர்ன், நீ தான் வந்து தொட்டி ஆட்டு…” வெற்றி கடுப்பில் சொல்ல.
“பாட்டு பாடி பிள்ளையை எழுப்பி விட்டு, நான் வந்து தொட்டி ஆட்டவா… தொட்டி பழக்கம் வேணாம்ன்னு சொன்னேன் தான… பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்குறதே நீங்க தான். நான் போறேன் எனக்கு தூக்கம் வருது…” என்று சரண்யா உள்ளே செல்ல.
“அந்த பூவ தூக்கி வீசி எறி… இனிமே ராத்திரியில பூ வச்ச உனக்கு அவ்வளவு தான் மரியாதை…” என்று மனைவியை பார்த்து கத்தியவன்.
“ரஞ்சிதமே… ரஞ்சிதமே…” ஆரம்பித்து விட்டான்.
காலையிலே தனம் வந்த விட்டார். இவர்கள் நாள், அவர் இல்லாமல் விடியாது போல…
“அஜி, ஒழுங்காகவே தூங்க மாட்டா… பெட்டவே சுத்தி வருவா. அவ கால்லு எம் முகத்துல தான் இருக்கும்…” போனில் குறை படித்தாள் சரண்யா.
அப்பத்தா ஊட்டி விட சாப்பிட்டு கொண்டு இருந்தவள். தாய் தன்னை புகார் சொல்வதாக எண்ணி கொண்டு தன்னோடு தந்தையும் கோர்த்து விட்டாள். அதுவும் எப்படி…
“அப்பத்தா, அப்பா கூட நைட் என் பக்கத்துல தான் படுத்து இருந்தாங்க. காலையில பார்த்தா அம்மா பக்கத்துல படுத்து இருக்காங்க…” சமத்தாக சொல்லி விட,
வெற்றிக்கு குடித்து கொண்டு இருந்த டீ புரையேரி விட்டது. ராத்திரி விஜி தூங்கிய பின் மெல்ல மனைவி அருகில் படுத்து கொண்டான். பசிக்கு பழைய சோறு… அதையும் போட்டு கொடுத்து விட்டாள் அஜி…
“பொச கெட்டவன்….” தாயின் சொல்லில் தலை குனிந்து கொண்டான்.
வெற்றி தனியே சிக்க, “இன்னைக்கும் ராத்திரி ஏதாவது செஞ்சிங்க…” சரண்யா மிரட்ட.