கொஞ்சும் கிளிகள்

அத்தியாயம் 28

    வெற்றியின் சொல் தனத்துக்கு பிடிக்க வில்லை. எவ்வளவு பெரிய பொறுப்பு, மரியாதை, ஊரே கட்டுப்படும், இவர்கள் குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை, தர்மகர்த்தா பதவியும் சேர்ந்து வரும், ஊரில் பொது பிரச்சனைக்கு இவர்கள் சொல் முக்கியத்துவம் பெறும், வயதில் மூத்தவர்கள் கூட மரியாதையாக தான் அழைப்பார்கள். இத்தனை இருக்க நொடியில் தூக்கி விட்டான் மகன்…. 

     இரு பக்க நெருங்கிய சொந்தங்களும் வீடு வந்திருக்க, பம்பரமாக சுற்றி கொண்டு இருந்தாள் சரண்யா. பெரியவர்களுக்கு தூங்க இடம் ஒதுக்கி, பெண்களுக்கு ஓய்வு அறை ஒதுக்கி, சிறியவர்களுக்கு குடிக்க கொடுத்து, பிள்ளைகளை விளையாட விட்டு என்று நிற்க நேரமில்லை.

         எரிச்சல் மண்டியது, எத்தனையை பார்க்க, அவளுக்கும் ஓய்வு தேவை தானே… டீ போட்டாலும் அத்தனை பேருக்கும் போட வேண்டும். முதலில் பட்டு சேலையை தூக்கி வீசிய பின் தான் மூச்சே வந்தது. காலையில் அலங்கரிக்கும் போது நன்றாக தான் இருந்தது. நேரம் ஆக ஆக மூச்சு முட்டி போனது. 

    மாயா, ஆனந்தியை உடன் வைத்து கொண்டு டீ, மாசால் வடை, வெங்காய போண்டா போட்டு எடுத்து கொடுத்தாள். வீட்டில் எதுவும் இல்லை எல்லாம் புதிதாக தான் செய்ய வேண்டும்.  ரொம்ப சோர்வு தான். காலையில் இருந்து நில்லாமல் வேலை, இதில் வீட்டிலும் வேலை எனும் போது மயக்கம் வந்தது.

   அப்போது தான் டீயை எடுத்து உட்கார்ந்தாள். வடை எல்லாம் போயாச்சு, டீ மட்டும் தான் மிச்சம். கொஞ்சம் ஆசுவாச படுத்தி வாயில் கொண்டு போகும் சமயம், “மதினி பட்டு குட்டி எழுந்தாச்சு…” சொன்னது மாய.

   “டீ குடிச்சு வாரேன் மாயா…”

  “புதுசா தோடு போட்டது வலிக்கும் போல மதினி. அம்மாகிட்ட தான் போகணுமாம்…” என்று தூக்கி வர, 

   அய்யோ என்று தான் பிள்ளையை வாங்கினாள். அறைக்கு சென்று பார்க்க, வெற்றி நல்ல உறக்கத்தில். அவ்வளவு கோபம் வந்தது. எல்லோரும் வீடு போக தான் தயாரானார்கள். இவன் தான் வீடு வர சொன்னது. முத்து பல் தெரிய சிரித்து வரவேற்றவன், கவுந்து படுத்து கொண்டான். இவள் தான் எல்லோரையும் பார்க்க வேண்டும். 

   விஜியை தூக்கி வெற்றியின் அருகில் விட்டவள், வெளி வந்து விட்டாள். விஜி, அப்பா என்று எழுப்ப, “சரண்யா, கொஞ்ச நேரம் பாப்பாவா வை, நான் தூங்கணும்…” கணவன் சொல் காதில் விழாதது போல ஓடி வந்து விட்டாள். 

    ஆறிய டீயை சூடு செய்து எடுத்து வர, பிள்ளையை தூக்கி கொண்டு வெற்றி வந்து விட்டான். ஏதோ ஒரு திருப்தி மனைவிக்கு… டீயை குடிக்க போகும் போது, “சரண்யா எனக்கும் டீ…” என்றான் வெற்றி.

  ம்ம்… என்று டீ குடிக்க போக, “சரண்யா எனக்கும் டீ வேணும். தலை வலிக்குது…”

   “இந்தாடி, அவன் எம்புட்டு நேரம் டீ கேட்கிறான். கல்லு மாதிரி உட்கார்ந்து இருக்க. போ போய் டீ போடு. புள்ளைக்கு ஒரு வாரமும் வேலை தான்…” என்று தனம் வர,

   “இந்தம்மா இருக்குறது தெரியாம சாவகாசமாக உட்கார்ந்து இருக்கேன். நானும் தான் டீ குடிக்கலை. அது கண்ணுக்கு தெரியாதே…” முனங்கி கொண்டே எழுந்து செல்ல.

   “மதினி வடை சூப்பரா இருந்துச்சு…” சக்தி சொல்ல.

   “வடையா… சரண், எனக்கும் ரெண்டு வடை வச்சு குடேன்…” என்ற கணவனை என்ன செய்தால் தகும்.

   “வடை எல்லாம் முடிஞ்சது…” என்றவாறு டீ போட.

  “திரும்ப போடேன், பத்து நிமிச வேலை தானா… மதியம் சாப்பிட்டது, பெரியவனுக்கு பசிக்குது போல. எம் புள்ளைக்கு தான் அதிக வேலை…”என்று தனம் வர,

   “நாங்கெல்லாம் பஞ்சு மெத்தையில படுத்து தான் கிடந்தோம். உங்க பையன் மட்டும்  தான் வேலை செஞ்சாங்க…” முணுமுணுத்து தான் வேலையை தொடங்கினாள். 

   அவள் சொல் வெற்றிக்கு கேட்டு விட்டது. “வேணாம் சரண்யா, உனக்கு அதிக வேலை…” வெற்றி சொல்ல.

  “போதும்டா நல்லவனே…” என்று சைகை செய்தாள் சரண்யா.

  “அவளுக்கு என்ன வேலை, எப்பவும் செய்யுறது தான். இம்புட்டு நேரம் மாய ஒத்தாசைக்கு இருந்தா…” விடாமல் தனம் பேச

   “அம்மா, அமைதியா இரு…” வெற்றி அதட்ட, முகத்தை தூக்கி கொண்டு தான் வந்தாள் சரண்யா. வடை, டீயை கொண்டு வந்து அவனிடம் தர, “உனக்கு…” என்று கணவன் கேட்டான். 

   ஒரு பார்வை மட்டும் தான் வாயை மூடி கொண்டான். “எதுக்குடா மூஞ்சிய தூக்கி வச்சிருக்கா உம் பொண்டாட்டி…” என்று தனம் கேட்க.

  “நீ ஒரு ஆளு போதும் எனக்கு…” என்றவன் மனைவியை பார்க்க, அவள் முகம் கடுகடுவென்று தான் இருந்தது. தம்பியை அழைத்து,

   “சக்தி, மதியம் சமையல் வேலை செஞ்சவங்களை வர சொல்லு, ராத்திரிக்கும் சேர்த்து செய்யட்டும். இவ்வளவு பேருக்கும் சரண்யா மட்டும் பார்க்க முடியாது…” என்று வெற்றி, மனைவி புறம் திரும்பி,

   “சரண்யா, மெனு என்னன்னு சொல்லு…” என்று கணவன் சொல்ல சரண்யா முகத்தில் ஒரு மென் புன்னகை. தங்கமும், பட்டும் இல்லாமல் கணவன் தம் மனைவிக்காக சிறு சிறு அனுசரணை செய்யும் போது தான் அன்பு வளரும். 

            வீட்டுக்கு விருந்தாளி வரட்டும் அது பிரச்சனை இல்லை. இவளும் அவர்களோடு வந்தவள் தானே. அவர்களுக்கு ஓய்வு தேவையென்றால் இவளுக்கும் தேவை தானே. உன் வீட்டுக்கு வந்தோம் நீ தான் பார்க்க வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்.

   சரண்யா சொன்னால் தான் எதிர் பேச்சு வரும், மகன் சொல்லி விட்டால் மறு பேச்சே இல்லை. எல்லாவற்றையும் சிவ குமார் பார்த்து தான் இருந்தார். இன்று சரண்யா கணவனை கோபித்து கொள்வதையும், மறை முகமாக மருமகன் சமாதானம் செய்வதையும் பார்த்து தான் இருந்தார். 

   மகளின் செல்ல கோபத்தை சமீப வருடங்களில் பார்த்ததே இல்லை. கண் கலங்கியது. இவர்கள் வீட்டில் இருக்கும் போதும் இப்படி வெளியில் சென்று வந்தால், சரண்யா தான் மற்ற எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும். சிணுங்கும் இரு பிள்ளைகளை வைத்து கொண்டு மறுப்பு சொல்லாமல் எல்லா வேலைகளையும் பார்ப்பாள். 

         நாங்கள் வேலைக்கு செல்கிறோம் ஒரு நாள் தான் விடுமுறை என்று மற்ற மக்கள் ஒதுங்கி கொள்வார்கள். பழகிய வேலை தானே என்று இவர்கள் விட்டது, மகள் உணர்வுகளையே கட்டி போட்டு விட்டது.   

   இரவு உணவு தடபுடல் தான், வகையாக தான் செய்தார்கள். சொந்தம் எல்லாம் அருகில் தான் என்பதால் இரவு உணவின் பின் கிளம்பி விட்டார்கள். பிரியா, தன் தாயிடம் சொல்லி கொண்டு தான் இருந்தாள்.

   “அம்மா, பாரு உன் சின்ன மகளை… அவ நாத்தனார், கொழுந்தன் பொண்டாட்டிய தாங்குறதும், எங்களை மட்டும் தள்ளி வைக்கிறா… அவங்க கிட்ட பேசுற மாதிரி, எங்க கிட்ட பேசலை. வீட்டை விட்டு துரத்தின அவங்க நல்லவங்க, கூட பொறந்த நாங்க கெட்டவங்களா…”

  சுகந்திக்கும் அவ்வாறுதான் தோன்றியது. அவ்வளவு பேசிய மாமியாரை தாங்குகிறாள். நாலு வருசமாக எட்டி பார்க்காத நாத்துனாரை ஆதரிக்கிறாள். அவ கூட பொறந்த அண்ணன், அக்காகவை ஒதுக்கி வைக்கலாமா… கொஞ்சமாவது நன்றி இருக்க வேண்டாம்.

    சரண்யா குடும்பம் இருப்பதால், வெற்றி வீட்டு ஆட்கள் பொது வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள். அவர்கள் கொஞ்சம் ஃப்ரீயாக இருக்கட்டும் என்று தான். பிள்ளைகளை வெற்றி பார்த்து கொள்ள, பிறந்த வீட்டை கவனித்தாள் சரண்யா. சுகந்தி முகம் சரி இல்லாதது போல தான் தோன்றியது.

    “சரண்யா, உட்கார் நான் பேசணும்…” சுகந்தி சொல்ல, மகள் பார்த்தாள்.

   “உன் கிட்ட நான் இதை எதிர்பார்க்கல சரண்யா. உங்க அண்ணனும், அக்காவும் உனக்கு என்ன கெடுதல் பண்ணாங்க. பிள்ளைகளை ஆசிரமத்தில் விடுவோம்ன்றது கூட உனக்கு தனியா ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கத்தான். அதுக்காக அவங்களை தள்ளி வைக்கலாமா… உனக்கு எவ்வளவு பார்த்தாங்க. இந்த நாலு வருசமும் உம் பிள்ளைகளுக்கு துணி கூட அவங்க எடுத்து கொடுத்தது தான்…” ஏதோ ஒரு ஆதங்கம் வாயில் வார்த்தை வந்து விட்டது.

   “சுகந்தி… என்ன பேசுற நீ. அறிவு கெட்டவளே, பைத்தியகாரி…” என்று சிவகுமார் கத்த. பயந்து போனார் சுகந்தி. 

  “என்னங்க… அது வந்து”

   “வாய மூடு. கொஞ்சமும் நன்றி இல்லாத பேச்சு, நீ தான் பேசுற…”

 “அப்பா, நீங்க அமைதியா இருங்க. பதில் நான் குடுக்குறேன்…” என்ற சரண்யா தாயின் புறம் திரும்பி.

   “நன்றியா… நன்றின்னா சொன்னீங்க. அந்த நன்றி மொத உங்க மூத்த மகளுக்கு இருக்கா… சொல்லுங்க. அம்மா…” சரண்யா குரல் கதறலுக்கு மாறியது. 

   பதறி போய் பார்த்தார்கள் பெத்தவர்கள்.