கொஞ்சும் கிளிகள்

அத்தியாயம் 24

           சரண்யாவின் அண்ணன், அக்கா, அவள் கணவன், அவள் பெற்றோர் என்று  கூடி பேசி தான் அத்து விடும் முடிவிற்கு வந்தார்கள்.  

     வெற்றி சொன்ன உன்னை பிடிக்க வில்லை என்ற வார்த்தை மட்டுமே பலமாக தாக்கியது. தாம்பத்திய உணர்வு இயற்கையானது, இவன் உன் கணவன் என்ற உணர்வில் தன்னை போல் உறவு, உரிமை வந்து விடும். கண்டதும் காதல் என்ற சொல் இங்கு தான் முழுதாக பொருந்தும்.  அதனால் தான் தன்னை பெற்ற தாயிடம் கூட உடை மாற்ற கூச்ச படும் பெண்கள், கட்டிய கணவனிடம் உதுத்து விடும். அவ்வாறு தான் சரண்யாவும் தன் கணவன் என்ற உரிமையில் அவளை வெளிப்படுத்தினாள்.  தன் ஆசைகளை வெட்கம் இன்றி அவனிடம் காட்டினாள். அவன் தோதுக்கு வளைந்து, அவன் இழுப்புக்கு விட்டு கொடுத்து சென்றாளே… 

         இதையெல்லாம் தற்போது யோசிக்கும் போது தன்னையே அடித்து கொள்ளும் ஆத்திரம் தான் வந்தது. தன்னை பற்றி எண்ண நினைத்து இருப்பான். தன்னை பிடிக்காமல், வேற ஒருத்தியை மனதில் நினைத்து கொண்டு இருப்பவனிடம் தான் உருகி கரைந்ததை நினைக்கையில் அவமானமாக இருந்தது.  அவன் கலட்டி போட்ட அழுக்கு உடைகளை கூட ஆசையாக துவைத்து போடுவாள். எல்லாம் மாறி போனது…

      சரண்யா வீட்டில் இருந்து வெற்றி வீட்டுக்கு முறையாக தகவல் சொல்லி விட்டார்கள்.  இந்த உறவு வேண்டாம் என்று… அதன் பின் வெற்றி இரு முறை வந்து விட்டான். கொஞ்சமும் பிடி கொடுக்க வில்லை. அன்று அத்தனை பேர் இருக்க, “உன்னை பிடிக்க வில்லை, என் மனதில் இருப்பது அபிராமி” என்று வெற்றி சொன்ன வார்த்தையை கடக்க முடியவில்லை.

       சிவகுமார் உறுதியாக இருந்தார். “சரண், பாப்பா… அப்பா நான் இருக்கேன். காலத்துக்கும் உன்னை நான் வச்சு தாங்குவேன். அந்த நாதாரிபைய வேணாம்மா…”

     “நம்ம வீட்டு கடை குட்டி, உன்னை நாங்க விட்டு விடுவோமா…” என்று அக்காவும்,

     “உன் தன்மானம், சுய கௌரவம் இழந்து நீ வாழ வேணாம் சரண். அதுக்கு நீ வாழ வெட்டியா நம்ம வீட்டுல இருக்கலாம். என் தங்கச்சி எனக்கு பாரம் கிடையாது…” தனக்காக அடி வாங்கிய அண்ணன் சொல்லவும்,  ஒரு புது நம்பிக்கை சரண்யாக்கு. எப்போதும் நம் குடும்பம், நமக்கு துணை நிக்கும் என்ற எண்ணம் பிறந்தது. தைரியமாக, துணிந்து தான் தாலியை கலட்டி வெற்றி கையில் கொடுத்து விட்டாள்.

          சும்மாவே ஆடும் தனம் விடுவாரா… அடுத்த இரண்டு நாளில் சரண்யா பொருட்கள் அனைத்தும் அவள் வீட்டுக்கு மூட்டை கட்டி விட்டார். வேல் முருகன் வந்த போது சுகந்தி தான், பிள்ளையை கழித்து விட்டு வேற கல்யாணம் செய்து வைப்போம்” என்று சண்டையில் வார்த்தை விட, அதை கெட்டியாக பிடித்து கொண்டார் தனம்.

       “அவளுக்கு புருசன், பிள்ளை வேணாமாம். ரெண்டாம் கல்யாணத்துக்கு ரெடியாகி ட்டா வெட்கம்கெட்டவ…” ஊர் முழுக்க தமுக்கு வச்சு சொல்லாத குறையாக சொல்லி விட்டார்.

     

           வெற்றிக்கு மனைவி விட்டு சென்றதை மற்றவர்கள் போல இயல்பாக எடுத்து கொள்ள வில்லை. அவனுக்கு தெரியும் தப்பு முழுக்க அவன் பேரில் மட்டும் தான். இப்படி எல்லாம் ஆகும் என்று அவன் யோசிக்கவே இல்லை.

    சரண்யா அவன் மனைவி, அடித்தாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால், அபிராமி வேற வீட்டுக்கு போகும் பெண். நொடி நேரம் தடுமாறி கொண்டான் தான். அந்த அளவிற்கு காதல் கொண்டு விட்டான். அபி பெயர் தப்பாக போய் விட கூடாது. அவளுக்கு என்று தனி ஒரு வாழ்க்கை உண்டு என்று தான் சரண்யாவை தள்ளி கொண்டு செல்ல பார்த்தது. கணவன், மனைவியாக வாழ்ந்து, குடும்பம், குழந்தை என்ற நிலை கடந்த பின் எத்தனை சண்டை வந்தாலும் சரி கட்டி விடலாம் என்று தான் மனைவியை தள்ளி வைத்தது.  அவள் கோபம் நியாயம் என்றாலும் பேச்சு சரியில்லை என்று தான் அடித்தது. ஆனால், சரண்யா வாய் நிற்க வில்லை.  எங்கெங்கோ போய் எல்லாம் உடைந்து விட்டது.

       வெற்றியும் வரம்பு மீறி பேசி விட, அவன் வார்த்தை சரண்யாவை உடைத்தது என்றால், அபிராமிக்கு நம்பிக்கையை கொடுத்தது. தன் காதலுக்கு கடவுள் வழி விட்டதாக  தான் நினைத்தாள்.  எல்லோரும் இருக்க பேசியதால், அவன் மனதில் அபி இருப்பதாக தான் நினைத்தார்கள். பிடிக்காத உறவை இழுத்து பிடித்து என்ன செய்ய…

     அபி தற்கொலை செய்து கொள்வேன் என்ற சொல்லிலே அவள் பெற்றோரை கட்டு படுத்தினாள். சரவணன் மூலமாக சரண்யாவை நெருங்க பார்க்க, அவள்  பிடி கொடுக்கவே இல்லை. தனம், அவர் இஷ்டத்திற்கு  திட்டம் போட, இனி முடியாது என்று வெற்றி  வெளிநாடு செல்வதில் உறுதியானான். 

        சரண்யா வீட்டு ஆட்கள் எவ்வளவு பேசியும், குழந்தையை கழிக்கும் முடிவிற்கு சரண்யா உடன் ஓட வில்லை. நாலு மாத ஸ்கேன் பார்க்கையில் தான் இரட்டை கரு என்று தெரிய வர, தன் பிள்ளைகள் வேண்டும் என்று உறுதியாக நின்றாள். இரட்டை கரு என்பதால், மாதமும் தள்ளி போக, அபார்சன் எளிதல்ல என்று சொல்லி விட்டார்கள். அபார்சன் செய்து வேற கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்று எண்ணத்தில் இருக்க, இங்கு தான் எல்லாம்  மாறி போனது.

         

   பிள்ளை பிறக்கும் வரை, சரண்யா பெரிதாக பட்டு கொள்ள வில்லை. ஆனால், இரண்டும் பெண் பிள்ளைகள் என்றதும் அவள் வீட்டு ஆட்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். இரு பெண் பிள்ளைகள் பொறுப்பு என்பது சாதரணமாக தோன்ற வில்லை. அதன் பின் விசயம் வேற மாதிரி சென்று விட்டது. குடும்பத்தில் யாரும் பெரிதாக கொண்டாடததே அவளுக்கு சுருக் என்று தைத்தது. இதில் பார்க்க வரும் அனைவரும்,

     “ஐயோ! ரெண்டும் பொம்பளை பிள்ளையா… என்னைக்கு கரை சேர்க்க…”   

   “ அப்பா இல்லாம எப்படி வளர்க்க முடியும். என்ன தான் அண்ணன், அப்பா இருந்தாலும் எம்புட்டு காலத்துக்கு உன்னை தாங்க முடியும்…”

    “நீ பண்ணது தப்பு சரண். உன் இடம் அது தான். உன் பிள்ளைக உரிமையா விட்டு கொடுக்காத…”

     “யார் இருந்தாலும் பெத்த தாய், தகப்பன் வளக்குற மாதிரி வராது சரண்…”

    “ யார் தான் ஒழுக்கம். கட்டுன பொண்டாட்டி இருக்க, அடுத்த வீடு தேடி போறாங்க. உம் புருசன் கல்யாணத்துக்கு முந்தி தான. கொஞ்சம் விட்டு கொடுத்து போயிருக்கலாம்…”

     “ரோட்டுல போட்டு அடிக்கிற புருசனவே தங்கம்ன்னு சொல்றாங்க. நீ அனுசரிச்சு போகலாம்…” என்று வரும் சொந்தமெல்லாம் ஆளாளுக்கு பேச, பயம் வந்தது சரண்யாக்கு.  தன்னால் தனியாக இரு பெண் பிள்ளைகளை பார்க்க முடியாதோ என்ற எண்ணம் வந்தது. கணவன் வந்து அழைத்த போது போய் இருக்கலாமோ… என்னைக்கும் உடன் இருப்பேன் என்ற அண்ணன் அவன் மனைவி வீட்டில், அக்கா அவள் கணவன் வீட்டில், அம்மா முடியாதவர்கள், இரு பிள்ளைகளும் இவள் பொறுப்பில் தான். கை மாத்தி தூக்கி வைக்க கூட ஆள் இல்லை.  

   சரண்யாக்கு ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது. தன் கணவன் காத்திருப்பான் என்று… முடிவாக, இரு பிள்ளைகளை தூக்கி கொண்டு கிளம்பி விட்டாள். அவரவர் ரோசம் பார்த்தா என் பொழப்பு வெட்டியா போய் விடும் என்று…

        பிள்ளைகள் முகம் பார்த்த பின் யார் என்ன சொல்ல போகிறார்கள். வாடகை காரில் தனியே சென்று விட்டாள். யாரின் பேச்சையும் கேட்க வில்லை.  கொஞ்சம் நிதர்சனம் புரிந்தது. நிறைய சங்கடம், தயக்கம் இருந்தாலும் ஒரு தெளிவு இருந்தது. வெற்றிக்கு நேரம் கொடுப்போம், வாழ்வை சரி படுத்துவோம் என்று…

      முதலில் அஜியை தூக்கி கொண்டு உள்ளே செல்ல, மாமனார் இல்லை. மாயா, சக்தி  மட்டும் தான் இருந்தார்கள். இவளை பார்த்து அதிர்ந்து நிக்க, அவள் பார்த்து நின்றாள். ஆசையாக பிள்ளையை தூக்குவார்கள் என்று நினைக்க, பேசாமல் பார்த்து தான் நின்றார்கள். 

      முகம் சுருங்க தன்னை திடப்படுத்தி, முன் அவள் இருந்த அறைக்குள் சென்று கட்டிலில் பிள்ளையை படுக்க வைத்தாள். அப்போது கூட அவள் அருகில் யாரும் வர வில்லை. அடுத்து போய் தான் விஜியை தூக்கி வந்தாள். பின் கட்டில் இருந்த தனத்தை மாயா அழைக்க, அப்போது தான் உள்ளே நுழைந்து ஃபேன் போட்டு அமர்ந்தாள். 

        அவேசமாக வந்த தனம், அருகில் அஜி படுத்து இருக்க, விஜியை கையில் வைத்து இருந்தவளை வெடுக்கென்று கையை பற்றி எழுப்ப, பதறி போய் பிள்ளையை பிடித்தாள் சரண்யா. அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், வேகமாக வெளியே இழுத்து வந்து தெருவில் தள்ளியவர். 

        சரண்யா அதிர்ந்து நிற்கும் போதே, கையில் அஜியை தூக்கி வந்து அவள் காலுக்கு கீழே வைத்து விட்டு உள்ளே சென்று கதவடைத்து கொண்டார். ஒத்த வார்த்தை பேச வில்லை. சரண்யாக்கு கண்கள் குளம் கட்டி நின்றது. எல்லா சொந்தமும் இருந்தும் இரு பிள்ளைகள் உடன் தெருவில் நின்றாள். கண்ணீரை துடைத்து கொண்டு பிள்ளைகள் உடன் பிறந்த வீட்டில் தஞ்சம் அடைந்து விட்டாள். அப்படி தான் சொல்ல வேண்டும். 

     கல்யாணத்துக்கு முன் இருந்த உரிமை, தற்போது இல்லை. பிறந்த பிள்ளைகள் கற்று கொள்வது போல, வாழ்வின் நிதர்சனத்தை கற்று கொள்ள ஆரம்பித்தாள். அண்ணன் பிள்ளைக்கு கிடைக்கும் எதுவும் தன் பிள்ளைக்கு ஏன் இல்லை.

    தன் பிள்ளைகளுக்கு  தங்க சங்கிலி, ஃபார்த்டே பார்ட்டி, விதவிதமான போட்டோ, வகையான உணவு, ஆடம்பர விளையாட்டு பொருட்கள் ஏன் கிடைக்க வில்லை என்பதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக புரிந்தது. அப்பா இருக்கும் பிள்ளைக்கும், அப்பா இல்லாத  பிள்ளைக்கும்  இருக்கும் வித்தியாசம். 

    சரண்யாவும் சிறு வயது என்பதால் அண்ணன், அண்ணி அண்ணி அன்னியோன்யம் அவளுக்கு சிறு ஏக்கம் கொடுக்கும். தன் கணவன் உடன் இருந்தால் என்ற நினைப்பு வராமல் இல்லை. அடுத்தடுத்து பிள்ளைகளின் பாடு என்று அந்த வயதுக்கு உரிய ஆசை, உணர்ச்சியை அடக்கி, மறைத்து வாழ பழகி கொண்டாள்.

       கடந்த கால நினைவு மூச்சு முட்ட செய்ய, எழுந்து அமர்ந்தாள். திரும்பி வெற்றியை பார்க்க, அவன் நல்ல உறக்கத்தில். அவன் நெஞ்சில் விஜி தூங்க, அஜி குட்டி  தந்தை மேல் கால் போட்டு உறங்கியது. இதற்கு மேல் என்ன வேண்டும்… வெட்டி ரோசம், சூடு, சொரணை எல்லாம் என்றோ  உதுத்தாச்சு…

       அடுத்த நாள் காலையில் பிள்ளைகளை தயார் செய்து கொண்டு இருந்தான் வெற்றி. அடுத்த வாரம் திருபுவனம் செல்ல வேண்டும். தனம் தான் கண் முன் தோன்றினார். அய்யோ மனம் அலறியது. 

        முறையாக தாய், தந்தைக்கு தகவல் சொல்லி விட்டாள். நாங்களும் உடன் வாரோம் என்ற  பெற்றோரை தடுத்து விட்டாள். சரண்யாக்கு சங்கடமாக இருந்தது. திருமணம் முடித்து கணவன் வீடு செல்வது வேறு, இரு பிள்ளைகள் உடன் செல்வது வேறு… அதை பெரிதாக சொல்லி, விசேஷம்  போல் செய்ய விருப்பம் இல்லை. எதார்த்த நிகழ்வாக   இருக்க தான் நினைத்தாள். 

       தன் சின்ன வீட்டில் இருக்கும் சிலதை அடுக்கி வைத்தாள். சிறு பொருள் என்றாலும் தன் உழைப்பில் வாங்கியது, தூக்கி போட மனதில்லை.

     அன்று மாலையே வேல் முருகன் வந்தார்.  என்னவென்று புரியாமல் கணவன், மனைவி இருவரும் பார்க்க…

   “ வெற்றி, நீ உம் பொண்டாட்டி, பிள்ளைக கூட தனியா போய் இரு… இனி ஒன்னா இருக்க வேணாம்.” நேராக விசயத்திற்கு வர,

    அதிர்ந்து போனவன், “ஏன்ப்பா…”

    “ஆமாடா, எம்புட்டு பெரிய பாதகம் செஞ்சு இருக்கா… என்னமோ தம்பி மக மேல உள்ள ஆசையில இருக்கான்னு பார்த்தா, கொடுமைகாரியா இருக்கா. நீயும், நானும் எம்புட்டு அலைஞ்சோம். எப்படியாவது உம் பொண்டாட்டி கூட சேர, நீ எம்புட்டு தவிச்ச. எல்லாத்தையும் கூட இருந்து பார்த்தவ, குனிய வச்சு கழுத்தறுத்துட்டா. நாளைக்கு நீங்க அங்க வந்தாலும் சும்மா விட மாட்டா. பாம்பு மாதிரி கொத்திகே தான் இருப்பா… அவ குணம் மாறாது. இனியாவது உனக்கு நிம்மதி வேணும் வெற்றி…”

   “நாங்க இங்கேயே இருக்கவாப்பா…”

     “ இங்கையா… நீ கட்டுன வீடு இருக்குல்ல வெற்றி.  பொண்டாட்டி, பிள்ளைகளை விட்டு கஷ்டப்பட்டு சம்பாதிச்சது, நீ தான் இருக்கணும். நாங்க தான் வெளிய போறோம்…”

  “ நீங்களா?… எங்க?…”

    “நம்ம பழைய வீட்டுக்கு தான். ஆறு மாசம் முந்தி அங்க தான இருந்தோம். அதுவும் பெரிய வீடு தான. உங்க எல்லாருக்கும் அங்க தான் கல்யாணம் ஆச்சு. அத்தோட, பொது வீட்டுல அண்ணன், தம்பி ஒன்னா இருக்கலாம். ஆனா, அண்ணன் வீட்டுல தம்பி குடும்பம் இருக்க முடியாது. என்னைக்கா இருந்தாலும் பகையாக்கிடும். ஒரே ஊர் தான, நீதான் எல்லாம் பார்க்கணும். ஒன்னா வேணாம் வெற்றி…”

       அவன் முகம் யோசனையாக தான் இருந்தது. சரண்யா வந்து பிரித்து விட்டதாக பேர் வரும். எல்லோரும் ஒன்னாக இருக்க தான் பெரிதாக எடுத்து கட்டியது.  சரண்யா  இதில் எதிலும் தலையிட வில்லை.

      “வெற்றி, அப்பன் சொல்றத கேளு. ஒன்னா இருந்தா, உங்காத்தா உன்னை வாழ விட மாட்டா.  பச்சை பிள்ளையை தெருவுல விட்டவ, உன் தம்பி பொண்டாட்டியும் இருக்க, வேணாம். நான் சொல்றத கேளு…”

    வெற்றிக்கு புரிந்தது. திரும்பவும் சரண்யாவை பேசி ஒதுங்க செய்வார். புரிந்து கொண்டான்.

    “ முடியாத காலத்துல உன் வீடு தான் எங்களுக்கு… அவ வாய் அடங்கட்டும். அப்புறம் பார்ப்போம்…” தந்தை எடுத்து சொல்ல புரிந்து கொண்டான் 

      “அம்மாக்கு தெரியுமா…”

    “அவ கிட்ட என்ன சொல்றது, அவளை நான் பாத்துக்கிறேன்…” என்று வேல் முருகன் சொல்ல,

     பூனைக்கு மணி கட்டியாச்சு என்று தான் பார்த்தாள் சரண்யா.