சரண்யாக்கு தாங்க வில்லை. தன்னை பேசும் போது வாயை மூடி கொண்டவன். அவளுக்கு ஒன்று என்றதும் ஓடி சென்றதை ஏற்க முடியவில்லை. அப்போ நான் யார்?… இதுவே திரும்ப திரும்ப மனதில் தோன்ற, வேகமாக வெற்றியை நெருங்கியவள், அவன் கையை பிடித்து இழுத்தாள்.
“வாங்க, வீட்டுக்கு போகலாம்…”
சரண்யா நடவடிக்கை வீம்பு பிடிவாதமாக தான் தோன்றியது. அவள் மனம் யாருக்கும் புரியவில்லை.
“ஏண்டி இப்படி ஆடுற… அவன் கையால தொங்க தாலியும் வாங்கி, வயித்துல பிள்ளையும் வாங்கி, உன் இடத்தை கெட்டியா பிடிச்சு கிட்ட தான… பாவம் எம் மருமக, நொந்து போய் கிடக்கா. அவளை கொத்தி எடுக்குற, அவ பாவம் உன்னை சும்மா விடாது. இவ வயித்தெரிச்சலை கொட்டி வாழு… ரொம்பவும் ஆடுனா சாமி தட்டி விட்ரும்…” என்று தனம் பேச
சரண்யாவும் விடவில்லை. அவளுக்கு புருசன் கை விட்டு போய் விடுவானோ என்ற பயம் போல…
“நான் நல்லா தான் வாழ்வேன். யார் குடியையும் நான் கெடுக்கல. உங்க மருமக தான் என் குடியை கெடுக்க அலையுறா. ஒரு ஆம்பிளை இன்னொருத்திக்கு புருசனாக்கிட்டா அங்க வேற பேச்சே இல்லை. நேத்து வந்தாலும் நான் தான் அவங்க பொண்டாட்டி, எனக்கில்லாத உரிமை யாருக்கு இருக்கு…” என்று அவளும் ஆவேசமாக பேசும் போதே, அபிராமி ஓடி சென்று கதவடைத்து கொண்டாள்.
மற்றவர்கள் பதறி போய் கதவை தட்ட, திறக்க வில்லை. மேல் தாழ்ப்பாள் உடைத்து வெற்றி உள் நுழைய, தூக்கில் நின்றாள் அபிராமி. அவ்வளவு தான் எல்லோரும் பதறி போய், அவளை தூக்கி தண்ணீர் கொடுத்து ஆசுவாச படுத்த…
“அந்த சண்டாளி பேசியே உன்னை சாகுர வரை கொண்டு வந்து விட்டாளே…” என்று தனம் ஒரு பக்கம் கத்த,
“ஏன் அபி…” என்றான் வெற்றி. அவன் கண்கள் கலங்கி இருந்தது. தன்னால் ஒரு பெண் வாழ்க்கை வீணாகி விட்டதே.
முகம் வீங்கி இருண்டு கிடந்த அபி, “ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா, முடியலை…” என்று உட்கார்ந்த வாக்கிலே அவன் இடுப்பை கட்டி கொண்டு அழுக.
சரண்யா தான் மொத்தமாக நொறுங்கி போனாள். இவர்கள் எல்லாம் நினைப்பது போல, அவன் தாலியை சுமந்தாலும், அவன் பிள்ளையை வாங்கி கொண்டாலும், அவன் மனம் மனைவி மீது படற வில்லையே. இதோ இப்போது கலங்கும் இவன் கண்கள். அதில் தெரியும் அன்பு. என்றாவது ஒருநாள் என்னை பார்த்தது உண்டா…
“சாகுறதா இருந்தா இவருக்கு கல்யாணம் ஆகும் போதே செத்திருக்கணும். இப்போ எல்லோரும் இருக்கும் போது யாராவது சாக போவாங்களா. இது மத்தவங்க கவனத்தை தன் பக்கம் திருப்ப…” என்று சரண்யா ஆரம்பிக்கும் போதே, வெற்றி அவள் வலது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
“என்னடி வேணும் உனக்கு, அபிய ஏன் குடையிற… உனக்கு பதில் நான் சொல்லுறேன். ஆமா, எங்களுக்குள்ள என்னவோ இருக்கு. என்னா அதுக்கு!… நான் அபி மேல தான் ஆசைப்பட்டேன். அவளை தான் பொண்டாட்டியாக்க நினைச்சேன். உன்னை எனக்கு பிடிக்கலை. கட்டாயபடுத்தி தான் உன்கூட வாழுறேன், போதுமா போய்டு. நீ ஒரு ராட்சசி, பேசியே ஒருத்திய செத்து போற நிலைமைக்கு தள்ளிட்டா, போடி வெளிய உன்னை பார்த்தாலே வெறுப்பா இருக்கு…” என்றவன், சரண்யா கையை பிடித்து வெளியே இழுத்து வர, எந்த முரண்டும் இல்லாமல் அவன் கையோடு வந்து விட்டாள்.
அவளை தெருவில் தள்ளி விட்டவன், உள்ளே சென்று விட்டான். அப்போது மணி ஒன்பது இருக்க, மழை வேறு பிடித்து கொண்டது. வெறும் நைட்டியில் தான் நின்று இருந்தாள். ஒருவரும் வந்து எட்டி பார்க்க வில்லை.
அவளுக்கு எங்கு போகவென்று தெரியவில்லை. ராத்திரி வேளை வேறு, சென்றாலும் வெற்றி இடம் தான் செல்ல வேண்டும். அங்கு பார்த்து நின்ற அந்த ஊர் ஆட்கள் தான் ஆட்டோ பிடித்து,
“எம்மா, உம் புருசன் தான் அடிச்சு விரட்டுனது. எம்புட்டு நேரம் மழையில நிப்ப, ஒன்னு உள்ள போ, இல்லையா இந்த ஆட்டோல ஏறி வீடு போய் சேரு, உங்க வீட்டு ஆட்களை வச்சு ஆற அமர பேசுங்க…” என்ற சொல்ல.
சண்டை போட்டு உரிமையை பெறலாம். அன்பை பெற முடியாதே… புரிந்து கொண்டவள், தாய் வீடு சென்று விட்டாள். பன்னிரண்டு மணிக்கு மேல் தான் சரண்யா நினைவு வந்தது வெற்றிக்கு. பதறி போய் வெளி வந்து பார்க்க, அவள் இல்லை. அங்கு இருக்கும் சொந்தங்கள் தான் விவரம் சொன்னார்கள். தன் தலையிலே அடித்து கொண்டான் வெற்றி. அந்த நேர கோபம் தான், நிலமை கை மீறி விட்டது.
நனைந்த உடையோடு, மேல் வயிற்றை பிடித்து கொண்டு, முகம் வீங்கி வந்த மகளை பார்த்து கொதித்து போனார்கள் சரண்யா பெத்தவர்கள். மறுநாள் காலையிலே சுரேந்தர் நாலு பேரை கூட்டி கொண்டு சண்டைக்கு செல்ல, அந்த ஊர் வெற்றி ஊர் தான், விடுவார்களா… அடுத்த இருவது நாளில் திருமணம் நடக்க இருக்க, கை, கால் முறிந்து போய் வந்தான் சுரேந்தர்.
அங்கு சக்தி வேல்கும் நல்ல அடி தான் போல. தனம் ஒரு பக்கம் கத்தி கொண்டு இருந்தார். சரண்யா திரும்ப வீடு வர கூடாது என்று… அப்போது உடன் நின்றது தான் அபிராமி குடும்பம். சண்டையில் பிரிந்தவர்கள், மற்றொரு சண்டையில் சேர்ந்து கொண்டார்கள்.
மேலும் ஒரு மாதம் கடந்த பின் சரண்யாவை பார்க்க வந்தான் வெற்றி, உடன் வேல் முருகன்.
சுகந்திக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மகள் வாழ்க்கையை பார்க்கவா, மகனுக்கு நியாயம் கேட்கவா… தடுமாறி தான் போனார்.
நல்ல மேடாக வயிறு தெரிந்தது. வெற்றிக்கு பேச்சே வர வில்லை. அவன் பார்வை முழுக்க அவள் வயிற்றில் தான். சரண்யா முகத்தில் விரக்தி சிரிப்பு, கடமையை செய்ய முன் வந்து விட்டான், பெருமை பட தான் வேண்டும்.
சுகந்தி, வேல் முருகன் இருவரும் இருக்கும் போதே, சரண்யாவை தள்ளி கொண்டு போய் அறைக்கு சென்று கட்டவடைத்து கொண்டான். கணவன், மனைவியே சரி செய்யட்டும் என்று அமைதி காத்தார் வேல் முருகன்.
“சரண், நம்ம வீட்டுக்கு போகலாம். கொஞ்ச நாள் அமைதியா இரு, நான் எல்லாத்தையும் சரி செய்யுறேன். அன்னைக்கு நடந்ததை மனசுல வைக்காத சரண். ஏதோ கோபம்… நம்ம குழந்தையை யோசி.” என்ற கணவனை தடுத்தவள்.
அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து கொண்டாள். உங்க குழந்தை மேல சத்தியம்…
“உங்க மனசுல நான் இருக்கானா வெற்றி…”
“சரண்யா” அதிர்ந்து போய் பார்த்தான் வெற்றி. பிள்ளை வயிற்றில் இருந்த அவன் கை நடுங்கியது.
“மனசாட்சிக்கு விரோதமில்லாம உண்மையை மட்டும் சொல்லுங்க. நம்ம குழந்தை தான் சாட்சி. எனக்கு உங்க மனசு தெரியணும்…”
“உங்க மனசுல நான் இருக்கேனா…”
“எம் மேல காதல், அன்பு, பாசம் ஏதாவது இருக்க…”
“இல்லை தான். ஆனா மாறும் சரண்…”
“அபிராமிய நீங்க மறந்துட்டீங்களா …”
“ இல்லை தான் ஆனா மறந்துடுவேன், கூடிய சீக்கிரம். எனக்கு கொஞ்சம் டைம் கொடேன்…”
“என் கூட நீங்க வாழ்ந்த வாழ்க்கை கட்டாயமா வெற்றி?… ஒரு நாள் ராத்திரி கூட என்னை நீங்க உணரலையா வெற்றி…”
“ சரண்யா பிளீஸ்…. என்னை விடு”
“உங்க மோகமும், ஆசையும் எனக்கு மட்டும் தான் தெரியும்ன்னு நினைச்சேன். இது எல்லாம் போலி தன் தானா வெற்றி…”
அவன் மெளனமாக நிக்க, “நீங்க போடுற வாழ்க்கை பிச்சை எனக்கு வேணாம் வெற்றி. தாம்பத்தியதை பிச்சையா போட வேண்டாம். அது என்னை வேசியா உணர வைக்கும்…”
“சரண்யா …” என்று வெற்றி சத்தம் போட.
“எம் புருசன், எனக்கு மட்டும் தான். என் ஆசை, மோகம் அவனுக்கு மட்டும் தான்னு நம்பி தான் என் உடை களைந்து உங்க கூட சேர்ந்தேன். இன்னைக்கு யாரோ ஒருத்தர் முன்னாடி துணி இல்லாம நின்ன உணர்வு… போயிடுங்க, என் வாழ்க்கைய விட்டு போங்க…”