கொஞ்சும் கிளிகள்

அத்தியாயம் 21

          காலையில் எழுந்ததில் இருந்து பிள்ளைகள் தந்தையை தான் கேட்கிறார்கள்.  இரண்டு நாளாக தந்தை தோலிலே தொத்தி கொண்டு கிடந்தார்கள். தூங்கி எழுந்து அப்பா இல்லையேன்றதும், ஒரே அழுகை தான். சரண்யா சமாளிக்க முடியாமல் திணறி தான் போனாள். டிரைவிங்ல இருப்பான், நம்ம நேரத்துக்கு போன் செய்ய முடியாது.  

       ஒருவழியாக காலை பத்து மணிக்கு தான்  வீடியோ கால் வந்தது.  இந்தா பிடித்து கொள் என்று பிள்ளைகளிடமே கொடுத்து விட்டாள்.  அவன் சாப்பிடும் நேரம், அப்பா வா என்று சிணுங்கிய குழந்தைகளிடம் என்ன சொல்லி சமாதானம் செய்தான் தெரியவில்லை. அஜி முகம் முழுக்க புன்னகையோடு தாயிடம்  போன் கொண்டு வந்து கொடுத்தாள். சற்று தயக்கம் தான் சரண்யாக்கு, இதுவரை வீடியோ கால் செய்து பேசியதில்லை. 

      தயங்கி தான் போனை வாங்கினாள். எங்கோ நின்று கொண்டு இருந்தான், பார்த்ததும் இருவர் முகத்திலும் சிறு புன்னகை தன்னை போல் மலர்ந்தது.  

       “சாப்டீங்களா?… ஒன்னும்  பிரச்சனை இல்லையே?… இப்போ எங்க இருக்கீங்க?” என்ற மனைவியின் கேள்வியில் பல் தெரியும் அளவுக்கு புன்னகை  விரிந்தது வெற்றிக்கு.

         பிள்ளைகள் , “அப்பா வா, பென்சில் வேண்டும், கலர் புக் வாங்கி தா, சிக்கன் வேணும்” என்று வகையாக பட்டியல் போட்டார்கள். அவர்களுக்கு வாங்கி கொடுக்க சொல்லி தான் மனைவியை அழைத்தது. ஆனால், பார்த்ததும் மனைவி கேட்ட அக்கறையான வார்த்தைகள் மனதில் இனித்தது.  

    அவனும், மனைவியை கேட்டு போன் செய்ய வில்லையே. பிள்ளைகளை மனதில் கொண்டு தான் போன் செய்தது. மனைவியின் வார்த்தை அவனை கவனிக்க வைத்தது…

     “நீ சாப்பிட்டையா சரண்?…”   

   “ இனி தாங்க, இப்பதான் பசங்க சாப்டாங்க. சப்பாத்தி தான் போட்டேன்.”

    “சரி, நீயும் சாப்பிடு. இன்னைக்கு வேலை இருக்கா…”

    “இல்லை வீட்டுல தான். ஏன்? என்னங்க?…”

   “பிள்ளைகளை மால் கூட்டி போறையா?…”

   “என்ன மால், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ரெண்டு நாள் போட்ட ஆட்டம் பத்தாத உங்க பிள்ளைகளுக்கு, அநாவசிய செலவுக்கு நான் ஆள் இல்லை…” என்று காட்டமாக சொல்ல. 

         “பிளீஸ் சரண், முடியாதுன்னு சொல்லாத, நானும் இல்லை பிள்ளைக ஏங்கி போவாங்க. நான் வர மூணு நாள் ஆகும்.  பேனா, பென்சில், புக் எல்லாம் என்னைக்கும்  யூஸ் ஆகும்..” என்று மனைவியை தாஜா செய்தான்.

          ரொம்பவும் சிக்கனம் பார்க்கும் சரண்யாக்கும், பிள்ளைகள் கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்கும் வெற்றிக்கும் சில நேரம் ஒத்து போகாது…

         “இங்க பாருங்க, உங்க பிள்ளைக ஐ லவ் யூன்னு ஒத்த வார்த்தை சொன்னதுக்கு நீங்க மயங்குங்க. உங்க தாஜாவுக்கு மயங்குற ஆள் நான் இல்லை…” என்று மனைவி கறாராக பேச.

     சத்தமாக சிரித்தான் வெற்றி, ஐ லவ் யூ அன்பான வார்த்தை, பெற்றோரிடம் சொல்லலாம் என்று பள்ளி ஆசிரியர் சொல்லி கொடுத்திருப்பார்கள் போல… தெரிந்ததில் இருந்து அப்பா ஐ லவ் யூ தான். இதை சொன்னால் வெற்றி முழுதாக விழுந்து விடுவான். அடுத்து பிள்ளைகள் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து தான் ஓய்வான். சரண்யாவிடம் மட்டும் கதை ஆகாது. எப்பவும் கண்டிப்புடன் தான் செலவு இருக்கும்.

    வெற்றி விடவில்லை, “சரண் பிளீஸ், உன் அக்கவுண்ட்க்கு பணம் அனுப்பிட்டேன், கூட்டி போய்டு வா… எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சென்னை வந்தாச்சு… மால் போய் கால் பண்ணுங்க…” என்று வைத்து விட்டான்.

        சரண்யாக்கு தான் குழப்பம்.  தனியாக இரு பிள்ளைகளை  இழுத்து கொண்டு மால் போய் வருவது எல்லாம் சாதாரண காரியமா…  இவள் பள்ளி தோழிகள் எப்போவாது கெட் டூ கெதர் மாதிரி போடுவார்கள். இவள் போகவே மாட்டாள். என்னவென்று அங்கு போவது, ஒதுங்கி கொள்வாள். இதை வைத்து போவோமா என்று யோசனை ஓட, அகி போன் செய்து விட்டாள்.  நானும் வாரேன், நீ வந்து விடு என்று… அகி வந்தால் பிரச்சனை இல்லை, பிள்ளைகளை சமாளித்து விடலாம். 

     அவளும் கிளம்பி, பிள்ளைகளையும் கிளப்பி விட்டவள். கணவனுக்கு மெசேஜ் போட்டு விட்டாள்.   பிள்ளைகளை வெளியேற்றி கதவை அடைக்க, 

      “அப்பா வரலை, கார் யார் ஓட்டுவ?…” என்றது பட்டு குட்டி.

      “கார?… ஆட்டோல போகலாம்” என்று சரண்யா சொல்ல.

   “ மாட்டேன், கார் வேணும்” என்றது லட்டு குட்டி.

      “கார் அப்பா எடுத்துட்டு போய் இருக்காங்க…” என்ற தாய்க்கு,

     “நம்ம மூணு கார் வச்சிருக்கோம்ன்னு அப்பா சொன்னாங்க…”  என்றது பட்டு குட்டி.

    “சரியா போச்சு, உங்க அப்பா மூணு கார் வச்சிருந்தாலும், உங்கம்மாக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது. அப்போ ஆட்டோ தான்…” என்று பிள்ளைகளை தள்ளி கொண்டு சென்றாள்.

    ஆட்டோ ஏற மெயின் ரோடு போகணுமே யோசனையோடு கீழ வர, வாசலில் சிவப்பு  நிற ஸ்கொடா நின்று இருந்தது.

      ஐ… அப்பா கார் என்று பிள்ளைகள் குதிக்க. அவர்களிடம் வேலை செய்யும் பையன் தான் நின்று இருந்தான்.

         “அக்கா, அண்ணன் தான் நீங்க வெளிய போக அனுப்பி வச்சாங்க…”  என்றான் செல்வம்.

   ஒரு பெருமூச்சு விட்டவள், பிள்ளைகள் உடன் ஏறி கொண்டாள்.  பிள்ளைகள் பேசி கொண்டு வந்தார்கள்…

    “ நான் சொன்னால அம்மா புவர் ஸ்டூடண்ட், கார் ஓட்டவே தெரியலை… அப்பா தான் பிரில்லியன்ட்” என்று அவர்கள் தந்தை புகழ் பாட,

      இவ்வளவு சௌகரியம் பண்ணி கொடுத்தால், இந்த பேச்சு வர தான் செய்யும்… மால் வந்த உடன் பிள்ளைகளை கையில் பிடிக்க முடியவில்லை. அவர்களுக்கு தக்க ஈடு கொடுத்து ஓடவே முடியவில்லை.  அகி வந்த பின் தான் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது.

     அவர்கள் குரூப் ஏலு பேர், அதில் சிலர் வேலையிலும், இரண்டு பேர் கல்யாணம் சகி இருந்தது, மற்ற எல்லோரும் மேற்படிப்பில் இருந்தார்கள். நீண்ட வருடம் சென்று சரண்யா இனைவதால் எல்லோர் கவனமும் அவள் மீது தான்…

         “ஹே சரண், எப்படி இருக்க?…”

     “உம் பிள்ளைகளா ஹப்பி வரல, உன் வீட்டுகாரர் என்ன பண்றாங்க…”

    “டிராவல்ஸ் ஓனரா,  செம்மைய செட்டில் ஆகிட்டா…” என்ற கேள்விக்கு,

      “யாரு நானு, கிழிஞ்சது போ…” என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே சிரித்து வைத்தாள்.

      சரண்யா ரொம்ப கெடுபிடி காட்ட, “எங்கப்பா இருந்தா என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பார் அத்தை…” என்று அகியிடம் புகார் வாசித்தது லட்டு குட்டி. 

        “அப்பா போன் பண்ண, அம்மா ஒன்னுமே வாங்கி தரலைன்னு சொல்லுவேன்…” மறைமுக மிரட்டலில் சின்ன வாண்டு குதிக்க. அப்போது பார்த்து  தந்தையிடம் வீடியோ கால் வர, ரெண்டும் போட்டி போட்டு கொண்டு புகார் சொல்ல ஆரம்பித்தது. 

       கணவனிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டு, பிள்ளைகளை கடைக்கு அழைத்து  சென்றாள். அப்போது அங்கு வந்தார்கள் சுரேன், திவ்யா, பிரியா, அவள் கணவன் என்று… 

       முகம் பார்த்த பின் தட்ட முடியாது என்று சிரித்து வைக்க, பேசினான் பிரியாவின் கணவன். பிள்ளைகள் இருவரும் அவர்களுக்கு பிடித்ததை கை கொள்ள எடுத்து  வைத்திருந்தார்கள். பில் போட வரிசையில் நிற்க, கார்ட் வத்து பணம் செலுத்தினாள் சரண்யா.

        “கார்ட் எல்லாம் வச்சுருக்கியா சரண்…” ஆச்சர்யமாக கேட்டாள் பிரியா.

      “வைக்காம என்ன, மால்ல ஷாப்பிங் பண்ற அளவுக்கு பெரிய ஆள் எல்ல…” என்றாள் திவ்யா. 

   நேற்று தான் பேசி முடிவு செய்தார்கள். திவ்யா நகை வைத்து சரண்யா நகையை மீட்க. அந்த கடுப்பு…

        அவர்களுக்கு பெரிதாக பதில் அளிக்காமல் நகர்ந்து விட்டாள்.  உங்களுக்கான மரியாதை இது தான் என்பது போல… 

      “காசு வந்துட்டா திமிர் வந்துடும் போல…” 

      “புது பணக்காரன், கொஞ்ச நாள் ஆட தான் செய்வாங்க…” என்றாள் திவ்யா.

        வெளியே வரும் நேரம் பிரியாவின் கணவன்,

   “ சரண் தனியாவா வந்த, எப்படி போவ?…” என்று கேட்க.

     “இல்லை மாமா, கார்ல தான் வந்தேன்…” என்ற சொல்லி முடிக்க, கார் வந்து நின்றது.

        “இது யார் சரண்?…” என்ற கேள்விக்கு.

     “எங்க டிரைவர், இவங்க அப்பா வெளிய போய் இருக்காங்க…” சரண் சொல்லும் போதே, செல்வம் வந்து கார் கதவை திறந்து விட, தலையசைத்து ஏறி கொண்டாள்.

      “நீ ஏன் பிரியா உன் தங்கச்சி கிட்ட பேசலை. உன் அண்ணன் தான் நகை அடகு வச்சான். அவன் திருப்பி குடுக்குறான், அது அவன் பாடு. உனக்கும், உன் தங்கச்சிக்கும் என்ன?… நல்ல விதமா பழகு…” என்று கண்டிப்பான குரலில் சொன்ன கணவனை ஆழ்ந்து பார்த்தாள் பிரியா.