கொஞ்சும் கிளிகள்

அத்தியாயம் 20.2

          பிரியா வீடு வந்தது தெரிந்தும் சரண்யா சென்று பார்க்க வில்லை. அவளுக்கும் வேலை இழுத்து கொண்டது.

      தன் வீட்டில் என்ன நடக்கும் என்று அறிவாள். தான் ஏன் தலையை கொடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு முடிவை கொண்டு வரட்டும்  பார்ப்போம் என்று ஒதுங்கி கொண்டாள். 

           பிரியா ரொம்பவும் அலட்டி கொள்ள வில்லை. எதார்த்தமாகவே சொல்லி விட்டாள், “சரண்யா பேசினது கொஞ்சமும் நியாயமில்லை.  அவளை பேச விட்டு நீங்க எல்லாம் வேடிக்கைய  பார்த்தீங்க. பெரிய தியாகி மாதிரி பேசிட்டு போயிருக்கா… பொறந்த வீட்டுல ஒரு கஷ்டம்ன்னா அந்த வீட்டு பொண்ணு நகைய கொடுத்து உதவலாம் தான. இது என்ன அவ்வளவு பெரிய விசயமா… நம்ம போட்டது, ஒரு கஷ்டதுக்கு அடகு வைக்க கூட உரிமை இல்லையா…”

      “ எல்லாம் புருசன் இருக்குற சப்போர்ட் அண்ணி. அவரும் கூடவே தான் வந்தாரு… எங்களுக்கு எவ்வளவு அசிங்கமா போச்சு. கூட பொறந்த அண்ணன், உனக்கு ஒரு பிரச்சனைன்னவும் ஓடி வந்தவரு இவர் தான். உன்னையும், உம் பிள்ளையையும் நான் பாக்குறேன்னு கூட்டி வந்தார். அந்த நன்றியை மறந்து குற்றவாளி மாதிரி நிக்க வச்சு நகை கேக்குறா…” மற்றொரு புறம் ஆதங்கமாக திவ்யா சொல்ல.

        “யாரோ மூணாவது ஒரு ஆள நம்பாமல் போகலாம். உன் கூட பிறந்தவன் தான, எப்படிய ஆளை கூட்டி வந்து கறார நகை கேட்கிறது. சரண்யா  கல்யாணதப்ப நான் கூட என் நகை அஞ்சு பவுன் கொடுத்தேன். அப்புறம் திருப்பி கொடுத்தாங்க. எல்லா வீட்டுலயும் நடக்கிறது தான்…” என்று சொன்னவள்.

    “ பார்த்துக்கமா உன் சின்ன மக லட்சணத்தை…  இவளா நாளைக்கு உங்களை பார்த்துக்க போறா, கடங்காரங்க மாதிரி பெத்த தாய், தகப்பன் கிட்ட வசூல் செய்ற… அம்மாடி, இன்னைக்கு தான புருசன் வந்தான். அதுக்கு முந்தி நாலு வருசம் நாம தான பார்த்தோம்…” என்று பிரியாவும் விடாமல் பேச,

       சுகந்தி கூட ஒரு நொடி குழம்பி வீட்டார். இவர்கள் சொல்வது சரி தானே, கூட பொறந்த அண்ணன், விட்டு குடுத்த என்னவாம்.

        தன் கணவரிடம், “பார்த்தீங்களா, சரண்யா மாறிட்டா… ஏதோ நாம தராம போடுவோம்ன்னு மாமனாரை கூட்டி வந்து, எவ்வளவு அவமானம்…” என்று குமுற

      சிவகுமாருக்கு புரிந்தது. தப்பு முழுக்க சரண்யா பக்கம் திருப்பி விட்டார்கள். மனைவியும் நம்பி விட்டாள்.

     “சரண்யா நகைக்கு பதில் என்ன?…”

     “இப்பத்தான் நாலு லட்சம் கொடுத்தோம், நகை மெதுவா தான் கொடுப்போம். நீங்க சொல்லுங்க” என்றார் சுகந்தி.

     “முடியாது சுகந்தி, சம்மந்தி முன்னாடி வாக்கு கொடுத்தாச்சு.  உன் பையனை திருப்பி தர சொல்லு… எம் பிள்ளை புருசன் வீடு போகும் போது நகையோடு தான்  போகணும்…”

   “அவன் கொஞ்சம் கஷ்டபடுறான் போல…” 

     “ரெண்டு பேரும் வேலை பாக்குறாங்க. அவங்களால முடியாததா… எல்லாம் சமாளிப்பாங்க. மாப்பிள்ளை பத்திரிக்கை வைக்க வரும் போது எல்லாம் கொடுத்து தான் அனுப்பனும். உன் மருமகள் நகை அப்படியே தான இருக்கு…” என்ற கேள்வி வர,

         “கொஞ்சம் மட்டும் திருப்பி தாரேன் ப்பா… மீதி கொடுக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும்.” தயங்கி தயங்கி சுரேன் கேட்க. 

    பொறுக்க வில்லை சுகந்திக்கு. இரு பெண் பிள்ளைகள் மத்தியில் பிறந்த ஒற்றை மகன்.  நல்ல படிப்பு, அரசு வேலை என்று பெருமை படுத்திய மகன், மருகி நிற்க தாங்க வில்லை.

    “உன்னால முடிஞ்சது கொடு சுரேன். மத்ததுக்கு என் நகை  வச்சு சமாளிக்கலாம்…” என்று சுகந்தி சொன்ன நொடி அப்படி ஒரு கோபம் சிவகுமாருக்கு.

       “அறிவு கெட்டவளே… உன் நகையை தூக்கி கொடுக்குறேன்னு சொல்றவ… பிள்ளைகளை கட்டி கொடுத்ததோடு நம்ம கடமை முடிஞ்சு போச்சா.  நமக்கு ரெண்டு பொம்பளை பிள்ளைக இருக்கு, அவங்களுக்கும் பிள்ளைக இருக்கு. பிரியாக்கு ஒரு பொண்ணு, சரண்யாக்கு ரெண்டும் பொண்ணுக. அவங்களுக்கும் சீர் செய்யனும்.  பாட்டி நகை பேத்திகளுகு  போகட் டும்…” என்று சொன்னவர், மகன் பக்கம் திரும்பி,

       “ இங்க பாரு சுரேன்.  சரண்யாக்கு எதுவும் பெருசா செய்யலை. இனியாவது எம் பொண்ணுக்கு குறை இல்லாம செய்யணும்ன்னு நினைக்கிறேன். நகைய கொடு, இல்லையா சமயபுரம் இடத்தை மாத்தி விட்டு எம் பிள்ளைகளுக்கு நாங்க செய்றோம். ஆண் பிள்ளைக்கு சொத்து வேணும்ன்னு தான் பொண்ணுக்கு நகை போட்டோம். அதுக்கும் பங்கம் வந்தா, இடத்தை மாத்திட்டு போலாம். யாருக்கும் பாதிப்பு இல்லை…” என்று முடிவாக சிவகுமார் சொல்லி விட,

      சுரேன் திகைத்து போய் தந்தையை பார்த்தான். இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் நினைக்க வில்லை. எட்டு லட்ச ரூபாய்க்கு அடகு கிடக்கு, தங்கள் உடன் தான் இருப்பாள் என்ற தைரியத்தில் அடகு வைத்து, எங்கே போவார்கள், மெதுவாக கொடுப்போம் என்ற மெத்தனம்…  

          வெற்றி ஓரளவு வேலைகளை ஒழுங்கு படுத்தி விட்டான். இரண்டு நாளாக வீட்டுக்கு வரவில்லை. பிள்ளைகளை தான் சரண்யாவால் சமாளிக்க முடியாமல் போனது.

     இரண்டு முறை சரண்யா போன் செய்து சொல்லி விட்டாள். அவர்களை தவிர்ப்பவன் கிடையாது வேலை, மிசுங்க முடியாமல் போனது… அன்று இரவு பத்து மணி மேல் தான் வீடு வந்தான். பிள்ளைகள் இருவரும் உறங்காமல் இருக்க, அவனுக்கு ஆச்சர்யம் தான், திரும்பி மனைவியை பார்த்தான்.

      “நைட் அப்பா வருவாங்கன்னு சொன்னேன். ரெண்டும் தூங்கவே இல்லை. இன்னும் சாப்பிடவும் இல்லை.  அவங்க அப்பா தான் ஊட்டி விடனுமாம்…” என்றால் அழுத்து போய்,பின்னே பள்ளி விட்டு வந்ததில் இருந்து அப்பா எப்போ வருவார் என்பதை தாண்டி வேற வார்த்தை வாயில் வரவில்லையே…

      பிள்ளைகள் அப்பா என்று அனைத்து கொள்ள, வெற்றி தூக்கி கொண்டான். பிள்ளைகளுக்கு, அப்பாவிடம்  கதை பேச ஆயிரம் இருந்தது. அஜி, தான் கையை தந்தையிடம் காட்டினாள்.

      “அப்பா, எங்க மிஸ் எனக்கு மூணு ஸ்டார் போட்டாங்க…” 

       “வெரி குட்… எதுக்கு மூணு ஸ்டார் போட்டாங்க…”     

     “மிஸ், ஃபேமிலி பேர் சொல்ல சொன்னாங்க. நான் கரெக்ட்ட சொல்லிட்டேன். அதான் குட் சொல்லி, மூணு ஸ்டார் போட்டாங்க…” 

     “அப்படியா, அப்பா கிட்ட ஒரு தடவை திரும்ப சொல்லுங்க…”

    கையை கட்டி தன்னை தயார் செய்த அஜி, “அப்பா – வெற்றி வேல், அம்மா – சரண்யா தேவி, பட்டு குட்டி – விஜிதா,  லட்டு குட்டி –  அஜிதா”  என்று பிள்ளை சொல்லி முடிக்க. 

         கணவன், மனைவி இருவருக்கும் வாய் கொள்ள புன்னகை. வெற்றி மட்டும் தான் செல்ல பேர் வைத்து பிள்ளைகளை அழைப்பது, அதையே சொல்லி பிள்ளைகள் அறிமுகமாக, அப்படி ஒரு சிரிப்பு தந்தைக்கு. இதுவரை இருந்த வேலை அழுத்தம் கூட காணாமல் போனது. 

        விஜிதா முகத்தை தூக்கி வைத்து தந்தையிடம் புகார் வாசித்தாள். யாரை பற்றி தாயை பற்றி தான்.

       “அப்பா, அம்மா என்னை அடிச்சுட்டா… அதுவும் கரண்டி வச்சு…” என்று விஜி சொன்னதும்.  உண்மையான கோபம் வெற்றிக்கு…

     அவன் கேட்கும் முன்பாகவே சரண்யா சொல்லி விட்டாள். “ உங்க பட்டு குட்டி, ஸ்கூல்ல ஒரு பையனை அடிச்சுட்டா…”

   இப்போது தந்தை மகளை பார்த்தான், “அவன் என்னை பென்சில் வச்சு குத்துனான்…”  தன் நியாயம் சொல்லும் அவசரம்.

   “ ம்ம், பார்த்தியா சரண். அவன் மேல தான் தப்பு. நீயா ஃபர்ஸ்ட் அடிச்ச?…”

     “நோப்பா, அவன் தான் ஃபர்ஸ்ட் பென்சில் வச்சு குத்துனான். எனக்கு வலிக்கவும், ஸ்கேல் வச்சு அடிச்சேன். மிஸ் என்னை அம்மாட்ட சொல்லி குடுத்துட்டாங்க..”  முகத்தை சுருக்கி கொண்டு விஜி விவரிக்க.

        “அப்பாக்கு போன் பண்ண சொல்லலாம்ல  பட்டு…”

      “ நான் சொன்னேன்ப்பா. எங்க  அப்பாட்டா சொல்லுங்க மிஸ், அவர் தான் குட் பாய்… அம்மா கிட்ட வேணாம், அவங்க பேட் கேர்ள் சொன்னேன். அப்புறம் தான் அம்மாக்கு போன் பண்ணிட்டாங்க…” என்று மேலும் முகத்தை சுருக்கி கொண்டு விஜி சொல்ல.

     அதில் சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு,  “பார்த்தியா சரண், பட்டு மேல தப்பு  இல்லை. அவன் அடிக்க போய் தான் பட்டு அடிச்சுருக்கு. அதுக்கு நீ ஏன் அடிச்ச…” 

       “அவன் அடிச்சாலும் மிஸ் கிட்ட சொல்ல வேண்டி தான. எதுக்கு உங்க பொண்ணு ஸ்கேல் வச்சு அடிக்கிறா,  அதுவும் தடுப்பு விழுற மாதிரி. இது தப்பு தான். அதான் நானும் ஒரு அடி போட்டேன்.”

   “அதுக்கு சின்ன பிள்ளையை கரண்டி வச்சு அடிப்பியா, எனக்கு பிடிக்கலை சரண். பிள்ளைக மேல கை வைக்குறது  இது தான் கடைசியா இருக்கனும். நீ சொல்லி பாரு, இல்லையா என் கிட்ட விடு…” குரலில் இதுவரை இருந்த  சிரிப்பு காணாமல் போக, வாயை மூடி கொண்டாள் சரண்யா.

      விஜி எப்போதும் அடி வாங்குவாள். அங்கு இருக்கும் போதும், “உன் பிள்ளை சேட்டை சரண், அடித்து வள…” என்று தான் சொல்வார்கள். யாரும் அடிக்காதே என்று பிள்ளைக்கு ஆதரவு தந்தது இல்லை. இன்று தந்தையின் இளவரசியாக, தாயை போட்டு கொடுத்து விட்டாள்.