கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.2

         மகளின் முகத்தை தான் அதிர்ந்து பார்த்திருந்தார்கள்  பெற்றவர்கள்.  எப்பொழுதும் அமைதியும், அடக்குமாக இருக்கும் நம் பெண்ணா இது… இதை செய் என்றால் ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் செய்யும் மகள் மனதில் இவ்வளவு குறை இருந்ததை  அறியவில்லையே…

          “சரண், அப்பா உனக்கு அநியாயம் பண்ணலட. விவரம் தெரியாத பொண்ணு, என் கைக்குள்ளே வச்சுகிட்டேன். வெளிய அனுப்ப பயம்…” என்றார் தந்தை.

      “எங்களுக்கு அப்புறம் அண்ணன் தான் உங்களை பார்க்கணும், அவன் பொண்டாட்டிக்கு செஞ்சா நாளைக்கு உம் பிள்ளைகளுக்கு செய்வான்னு தான் நினைச்சோம். உம் மனசுல இப்படி பதியும்ன்னு எதிர்பார்க்கலை…” என்று தாய் வருத்தமாக சொல்ல.

       “அம்மா, ஒரு வீட்டுல சமையல் வேலை செய்யிறதுக்கு மட்டுமே எட்டாரயிரம்  சம்பளம் வாங்குறாங்க… நான், உங்க வீட்டிலே எல்லா வேலையும் செய்யிறேன். எனக்கும் ஏதாவது பணமா கொடுத்து இருந்தா நல்ல இருக்கும் தானே…” என்று சரண் சொல்லி வரும் போதே,

     “ நீ என்ன வேலைக்காரியாடி, கோட்டி கழுதை…” என்றார் தாய்.

   “மம்ம்… வேலைக்காரியா இருந்தா கூட கையில காசு நிக்கும்.  நான் ஒரு அடிமை மாதிரி இருந்தேன்…”    

    “ சரண்யா, என்ன பேச்சுடி பேசுற…”  பதறினார்கள் பெற்றவர்கள்.

     “உண்மைய தான சொன்னேன். நானும் ரெண்டு பிள்ளை வச்சுருக்கேன். எனக்கும் செலவு இருக்கும் , வாரத்துக்கு ஒரு ஐநூறு ரூபாய் குடுக்கலாம் … பிள்ளைக, பெத்தவங்க கிட்ட காசு  கேக்குறதுக்குக்கு தயங்க மாட்டாங்க. அவங்க கிட்ட தான் உரிமையா கேட்க முடியும். ஆனா, நான் தயங்கினேன், ஒவ்வொண்ணுக்கும் உங்க கிட்ட வந்து நிக்க முடியாம தயங்கி நின்னேன்.  எங்களுக்கு மூணு வேலை சாப்பாடு, வருசத்துக்கு ரெண்டு தடவை எடுக்குற துணி மட்டும் தான்  எங்களோட தேவையா?… அதை மட்டும் தான் நீங்க சரியா செஞ்சீங்க…”

       “ஆரம்பத்துல உங்க கிட்ட நிறைய எதிர்பார்ப்பு, கோபம் வருத்தம்   இருந்துச்சு. அப்புறம் நிதர்சனத்தை நான் புரிஞ்சு கிட்டேன். உங்க மூணு பசங்கள்ளா  நான் தான் சோட போனேன். உங்களுக்கு பேர் வாங்கி, பெருமை படுத்துற பிள்ளையா நான் இல்லாம போனேன்…” என்றவள்  புறங்கையால் கண்ணீரை துடைத்தாள்.

      “நாங்க தப்பு பண்ணிட்டோம் சரண்யா…” என்ற தந்தையை பார்த்தவள்.

      “இல்லைப்பா நான் தான் தப்பு. ஆணோ, பெண்ணோ ஒரு நிலைக்கு மேல  பெத்தவங்க கைய கூட எதிர்பார்க்க கூடாது தான்… கூட பொறந்த இரத்த சொந்தம் பணங்காரங்களா இருக்கலாம், ஒரே வீட்டிலே இருக்குறதால, சொந்தமா இருக்குறதால நாமளும் வசதியானவங்களா பார்க்க படுவோம். ஆனா, உண்மையிலே  நம்ம நிலை என்னவோ அது தான் நம்ம பிள்ளைக விதி… என் நிலை ரொம்ப பரிதாபம். ஆனா, எம் பிள்ளைக விதி மாறனும். அவங்க விதிய மாத்த, நான் மாறனும், மாறிட்டேன்…” என்றாள் தெளிவாக.

       “உன்னை தப்பு சொல்லலை சரண், எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதா” தயாவாக தான் வந்தது வார்த்தை.  வரும் போது இருந்த கோபம் போன இடம் தெரியவில்லை.

      “வெற்றி ஒரு புருசனா சரி கிடையாது. ஆனா, ஒரு நல்ல அப்பா… பிள்ளைக பொறுப்பை, கடமையை ஏத்துக்க தயாரா தான் நின்னாரு…”

    தன் தாய், தந்தையை தீர்க்கமாக பார்த்து ,

    “சொல்லணும்ன்னா நிறைய இருக்கு, ஒவ்வொண்ணையும் தோண்டி எடுத்து என் நியாயத்தை நான் புரிய வைக்க கூடாது. நான் சொல்லாமவே  என் வலி பிரிஞ்சுருக்கணும், உங்களுக்கு புரியலை. இனி புரிய வைக்க எனக்கு விருப்பமும் இல்லை.  வெற்றி தப்புன்னு என் பிடியில் நிக்கிறத விட, இன்னும் தப்பாவே இருந்தா என்னால என்ன பண்ணிருக்க முடியும். அவர் விருப்பப்பட்ட வாழ்க்கையை தேட, அவருக்கு எந்த தடையும் இல்லை. ஆனாலும் எங்களுக்காக  வந்தார் இல்லையா நான் அதை யோசிக்கணும் தான. வெறும் பணத்தை மட்டும் கொடுத்து ஒதுங்காம, பெத்த தகப்பனார்  பிள்ளைகளுக்காக நிக்கிற ஒருத்தருக்கு  நான் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்..” ஒரு பெருமூச்சு விட்டு,

     “வாழ்க்கையில உறைக்கிற மாதிரி நான் படிச்ச விசயம், பிள்ளைகளுக்கு குடும்பம்ன்ற சூழலை பெத்தவங்களாள மட்டும் தான் கொடுக்க முடியும்.  கொட்டி குடுக்குற பணமும்,  தாங்கி நிக்கிற உறவு இருந்தும், பெத்தவங்க இல்லைன்னா அந்த பிள்ளைக அனாதை தான்.  என் பிள்ளைகளை அனாதையா நான் ஏன் வளர்க்கணும். பொறுப்பை தட்டி கழிசுட்டு, உரிமைக்கு மட்டும் வந்து மல்லு கட்டுற  உங்க கிட்ட கேட்டு  எங்க வாழ்க்கைய நான் ஏன் தீர்மானம் செய்யணும்…” முகத்திலடித்தது  போல் பேச, வாயடைத்து போனார்கள் பெற்றவர்கள். 

       சரண்யாக்கு மேல பேச விருப்பமே இல்லை. வெற்றி வந்து விட்டான். அவர்களும் எழுந்து கொண்டார்கள்.

        வெற்றி, மனைவி முகம் தான் பார்த்தான். அவள் முகத்தின் இறுக்கம் வாயை மூடி கொண்டான், தனக்கு ஏன் வம்பு… சிவகுமார் தம்பதிகள் கிளம்பி விட்டார்கள்.  பிள்ளைகள் இருவரும் பெற்றவர்களை ஒட்டி நின்றது, அவர்களின் தலையை வருடியவர்,

      “தம்பி, நல்ல படியா பார்த்துக்கோங்க.  இதுவரைக்கும் என்னவோ, இனி நாங்க தள்ளி நிக்க மாட்டோம். எந்த நல்லது, கெட்டதுக்கும் எங்களை ஒதுக்காம…” என்று சொல்லும் போதே,

       “பழசு வேணாம், விட்டுடுங்க. குடும்பத்துல மூத்தவங்க, உங்களை விட்டு எதுவும் நடக்காது. அடுத்த வாரம் அப்பா உங்களை பார்க்க வாரேன்னு சொல்லிருக்காரு… டிராவல்ஸ் தொடங்குகிறோம்,  உங்களை விட்டு உங்க மக வீட்டில ஒரு நல்லது நடக்குமா…” என்று அவனும் தன்மையாகவே பேசினான்.

     நாடகம் போல தான் சரண்யா பார்த்தாள். “சாத்தான் வேதம் ஓதுது” என்று எண்ணாமல் மட்டும் இருக்க முடியவில்லை. 

அந்த வாரத்தில் ஒரு நாள் வேல் முருகன் தன் பேத்திகளை பார்க்க வந்து விட்டார். சரண்யா நல்ல முறையில் தான் வரவேற்றாள். 

        அவரோடு அவளுக்கு எந்த விகல்பமும் இருந்தது இல்லை. ரொம்ப நல்ல மனிதர், பேத்திகளை பார்த்து கண் கலங்கினார்.  அங்கிருந்த காலத்தில் அவர் தான் இவளுக்கு ஆறுதல். தனத்திடம் இருந்து இவளை காப்பதும் அவர் தான்…

         அந்த வாரத்தில் சரண்யாவின் பெற்றோரை பார்க்கணும் என்று சொல்ல, வெற்றி சரண்யா முகம் தான் பார்த்தான். அவளுக்கு ஒன்றும் இல்லை. சாதரணமாக தன் வீட்டு ஆட்களுக்கு சொல்லி விட்டாள். கணவனும், மாமனாரும் வருகிறார்கள் என்று…

      வேல் முருகனுக்கு தயக்கமில்லை. தான் முன்  நின்று செய்த திருமணம், தன்  மகன், ஒரு பெண் பிள்ளை வாழ்க்கை வீணாக கெட்டு விட கூடாதே… 

       வாசல் வரை வந்து வரவேற்றார்கள் சரண்யாவின் பெற்றோர். சுரேந்தர் தான் கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தான். அப்பா, மகன் இருவரும் அவனை ஒரு பொருட்டாக கூட  எண்ணவில்லை.

      கடந்தத்தை  தோண்டாமல்,  உறவை வளர்க்கும் பொருட்டு பொதுப்படையான பேச்சுகள் மட்டுமே…  இரு பக்கமும் அந்த எண்ணம் இருந்ததால், பேச்சு நல்ல முறையில் வளர்ந்தது. சாதாரண பேச்சாகவே சரண்யாவை திருபுவனம் அழைத்து செல்லும் பேச்சு வந்தது. வெற்றி அடிக்கடி மனைவி முகம் பார்த்து கொண்டான். சரண்யா வேறொரு சிந்தனையில் இருந்தாள்.

        தொழில் தொடங்கும் போது முறையாக வீட்டிற்கு சென்று விட்டு, பிள்ளைகள் பள்ளி முடிந்ததும் மொத்தமாக அழைத்து கொள்வதாக பேச, ஒரு நிமிசம் என்றாள் சரண்யா.

      வெற்றிக்கு பதட்டம், எங்கே வர மாட்டேன் என்று சொல்லி விடுவாளோ என்று… 

       ஆனால், அவள் அதை இழுக்காமல், தன்னை பெற்றவர்களை பார்த்து… 

      “நாலு வருசம் கழிச்சு, எம் பிள்ளைகளோடு எங்க வீட்டுக்கு போறேன். நான் எப்படி சும்மா போறது. ரெண்டு கட்டை பையில துணி அள்ளி போக என்னால முடியாது.  அங்க வாழ வந்த பொண்ணு வேற இருக்கு… ரெண்டு பிள்ளைகளோடு நான் வெறும் கையவா வீசி வராது…” எதற்கோ அடி போட்டாள்.

       அப்பனும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். என்ன பேச்சு இது… 

      சிவகுமார் தயங்க வில்லை. “என்ன பாப்பா இப்படி சொல்ற. உன்னை யாரு வெறும் கையா போக சொன்னது.  உனக்கு உரியதோட பிள்ளைக்கு, மாப்பிளைக்கு எல்லாம் எடுத்து தான் அனுப்புவோம்…”

     “ ஆமா, சரண்யா. மொத நீ நம்ம வீட்டுல இருந்தா, பெருசா செய்ய தேவை இல்லை. உன் புருசன் வீட்டுக்கும் அப்படி அனுப்ப முடியுமா… முறைன்னு ஒன்னு இருக்கு தானா…” என்றார் சுகந்தி.

    அன்றே மகள் தங்களை  கிழித்து தொங்க விட்டு இருக்க, இனி தவறு நேராதவாரு  கவனமாக இருந்தார்கள்.

     “உனக்கு என்ன வேணும்ன்னு கேளு சரண். அப்பா ஒரு குறையும் வைக்காம செய்றேன்…” மகள் மன காயத்தை போக்க நினைத்தார் சிவகுமார்.

       வெற்றி மனைவியவே பார்க்க, அவள் கணவன் புறம் திரும்ப கூட இல்லை.

      “எனக்கு புதுசா எதுவும் வேணாம்ப்பா. என்னோடது எனக்கு கொடுத்தா போதும். அக்காக்கு அம்பத் பவுன் போட்டீங்க, எனக்கு முப்பதது போட்டீங்க, பரவாயில்லை. எனக்கு அதுவே போதும்… ஆனா, அதை எல்லாம்  அண்ணன் அடகு வச்சிருந்தான். அதுக்குள்ள  திருப்பியாச்சா, பரவாயில்லையே…” என்றாள்  போலி ஆச்சர்யம் காட்டி.

      சங்கடமாக இருந்தது சிவகுமாருக்கு. பிரியாவின் கணவன் அரசு வேலை, சரண்யாவின் கணவன் சாதாரண டிரைவர் தானே… 

       வேல் முருகன், வெற்றி வேல் முன் மகள் நகையை அடகு வைத்த விசயம் வெளி வர, பெருத்த சங்கடம் தான்.

        வேல் முருகன் எப்போதும் தேங்காய் உடைப்பது போல பேசுபவர் தான். அதனால்,

      “என்னம்மா சரண். பொறந்த வீட்டுக்கு ஒரு கஷ்டம்ன்னா, அந்த வீட்டு பொண்ணு கொடுக்கணும் தானே. அதை தான நீ செஞ்ச, இதுல என்ன இருக்கு…” என்றார் புரியாமல்.

     “நானும் தப்பு சொல்லலை மாமா. எனக்கு குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடியே நகை எல்லாம் வாங்கிட்டாங்க. அண்ணனுக்கு இடம் வாங்கணுமாம், என் நகைய தான் எடுத்தாங்க.  நான் வீட்டோட இருக்கேன் எனக்கு எதுக்கு நகை. அண்ணி வேலைக்கு போறவங்க, அவங்களுக்கு தேவை படும் தான. அதனால, என் நகைய வச்சு தான் அண்ணி பேர்ல இடம் முடிச்சாங்க.  நாலு வருசம் ஆச்சு, கல்யாணத்துக்கு போட்டது தான் அப்புறம் ஒரு தடவை கூட போடலை. எப்பவும் கேட்க தான் செய்யிறேன்…” சாதாரணமாகவே சொல்லி விட்டாள்.

       “அப்படியா” என்பது போல் வேல் முருகன் பார்க்க, அவமானமாக இருந்தது சிவகுமார் தம்பதிக்கு… அன்று யோசிக்கும் போது சரியாக தான் தோன்றியது. மகன் இடம் வாங்க போகிறான், சரண்யா நகை சும்மா தானே கிடக்கு, இனி தங்கள் ஆதரவில் தான் எனும் போது அண்ணன் ஆதரவு தேவை என்று அவள் பார்க்க நகையை தூக்கி கொடுத்து விட்டார்கள். நாலு வருசம் ஆகியும் நகை பற்றி சுரேந்தர் வாய் திறக்க வில்லை. அதை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை. இன்று பெரிதாக இருந்தது. 

        திவ்யா தான், “கொஞ்சம்  சிரமம் சரண்யா. அதான் திருப்பி கொடுக்க முடியாம போச்சு, முடிந்த அளவு சீக்கிரம் கொடுக்கிறேன்…” என்று தயவாக சொன்னாள் திவ்யா. உள்ளம் கொதித்தது, எவ்வளவு திமிர், ஊர்ல இல்லாத புருசன் கிடைச்ச மாதிரி சட்டமாக  வந்து நகை கேட்கிறாள்.

            சிவகுமார் சொல்லி விட்டார். “ நகையா திருப்பி தொழில் தொடங்குற அன்னைக்கு  கொடுக்கிறோம் சம்மந்தி. மத்த படி, சரண்யா பொருள் எல்லாம் மேல தான் கிடக்கு…” என்று தொடங்க

       தடுத்து விட்டாள் சரண்யா, “அப்பா, எனக்கு குடுத்த தேக்கு கட்டில் அண்ணன் ரூம்ல தான் கிடக்கு. நீங்க உட்கார்ந்து இருக்குற சோபா எனக்கு கொடுத்தது தான். எங்களுக்கு கூட கட்டில் கிடையாது, நாங்க பாய்ல தான உறக்கம் எல்லாம்… டைனிங் டேபிள்ல இருந்து  எல்லாம் வீட்டுக்கு போட்டாச்சு. கொஞ்சம் கிடந்த பித்தளை பாத்திரம் எல்லாம் ஆடி, தீபாவளின்னு அக்கா வீட்டுக்கு சீருக்கு போயாச்சு…”

      பெருத்த அவமானமாகி  போனது சம்மந்தி வீட்டின் முன், மாப்பிளையும் இருக்க, தங்களை பற்றி எண்ண நினைப்பார்கள். மனைவியை முறைத்தார். பெரிய மகள் மீது உள்ள பாசத்தில் சரண்யா பொருட்களை எல்லாம் கடத்தி விட்டார்.

   “எல்லாத்தையும் புதுசா வாங்கி கொடுத்துரோம் பாப்பா. பிள்ளைகளுக்கு செஞ்சுருவோம்…” என்றார் சிவகுமார்.

       “இவங்க இப்பதான்  புது வீடு கட்டுனாங்க. எல்லாம் புதுசா வாங்கி போட்டு இருக்காங்க. எதுவும் வேணாம் ப்பா…” என்ற சரண்யாவை எல்லோரும் ஆச்சர்யமாக பார்க்க.

    “நீங்க சீருக்கு பணமா கையில கொடுத்திருங்க.  என் நகையே எனக்கு போதும், அதை மட்டும் திருப்பி கொடுத்துறுங்க. அன்னைக்கே பொருள் எல்லாம் மூணு லட்சம் வந்துச்சு. இன்னைக்கு விலைக்கு நாலு லட்சம் வரும். அப்படி கணக்கு போட்டு குடுங்க…” என்று  தீர்மானமாக சரண்யா சொல்ல,

        “அப்படி போடு அருவாள…” என்று பார்த்தார் வேல் முருகன்.

     அங்கிருந்து வந்த பின் வெற்றி கேட்டே விட்டான், ஏன் சரண் இப்படி…

         “முதலை வாய்க்குள்ள கை விட்டு எடுக்குற மாதிரி திவ்யா கிட்ட இருந்து நகை வாங்குறது…  யார் போனாலும் பேசியே சரி கட்டிடுவா. உங்க அப்பா முன்ன ஒன்னும் செல்லாது. சம்மந்தி வீடு மரியாதை கொடுக்கணும். அத்தோடு, அவர் முன்னுக்கு சொன்னதை செஞ்சு தான் ஆகணும்…”

    “நான் பார்க்க மாட்டேன சரண்…

     “யார் பார்த்தாலும் எம் பிள்ளைகளுக்கு நான் பார்க்கணும் வெற்றி. எம் பொருள் எல்லாம் எம் பிள்ளைகளுக்கு கொடுக்கணும்ன்னு எவ்வளவு ஆசையா வச்சு இருந்தேன். ஒவ்வொண்ணா போகும் போது எப்படி வலிக்கும் தெரியுமா… நம்ம வாழ்நாள் சொல்ல முடியாது வெற்றி. நான் இல்லாம போனாலும், எம் பிள்ளைக யார் தயவையும் எதிர் பார்த்து நிக்க கூடாது.  இங்க தங்கம் ஒரு பெரிய முதலீடு, நாளைக்கு எம் பிள்ளைகளுக்கு உதவும் தான… “ என்று சரண்யா சொல்ல.

    “நானும் அதை தான் யோசிச்சேன். நானே இல்லாம போனாலும் என் குடும்பம் யாரையும் எதிர்பார்த்து நிக்க கூடாதுன்னு. அதான், ரெண்டு வேண்டிய உம் பேருக்கு மாத்துனேன். அது ரெண்டு தான் என் சுய சம்பாத்தியம்.  மத்த வண்டி எல்லாம் லோன்…” என்றான் வெற்றி.

        கணவனை ஆழ்ந்து சரண்யா பார்க்க, சளைக்காமல் உண்மை தான் என்று பதில் பார்வை பார்த்தான் வெற்றி.