அவனுக்கு கொடுத்த உணவை பயபக்தியாக உண்டு  கொண்டு இருந்தான்.  அன்று, அவள் கொண்டு வந்து கொடுத்த நீரை கூட குடிக்க யோசித்தான், இன்று மடங்கி போகிறான். ஆராய்ச்சியாக பார்த்தாள். பின் கண்டு கொள்ள வில்லை.

        தன் உணவை முடித்து கொண்டு, பாத்திரம் ஒதுங்க வைத்து, துணி துவைக்க வெளி சென்று விட்டாள். அதுவரை மனைவியை தான் பார்த்து நின்றான்,  காலையிலிருந்து இரவு வரை நின்று கொண்டே இருக்க வேண்டும். அதன் பின் ஓட்டமாக வீடு வந்தால், இங்கும் வேலை தான் காத்து நிக்கும். கொஞ்சமும் சோர்ந்து போகாமல், முகம் சுளிக்காமல்  வேலை செய்யும் மனைவியை தான் வியந்து பார்த்தான்.

       இரவு பத்தரை, வேலை எல்லாம் முடித்து உள்ளே வந்தாள் சரண்யா. அப்போதும் நிலை மாறாமல் தான் அமர்ந்து பிள்ளைகளை பார்த்து இருந்தான். விஜியாவது அவனை கடித்து வைத்தாள், அஜி சின்னது தொட்டு பழக்கம், மூச்சு விடாமல் அழுவாள். ஆசையாக வெற்றி தூக்க கால் மணி நேரமும்  சத்தமில்லாமல், திறந்த வாய் மூட வில்லை. பயந்து போய் வாயில் ஊதி விட்டவன் தான் பின் அஜி பக்கம் கூட போக வில்லை.

         பிள்ளைகள் தூக்கத்திற்கு சிணுங்க, பாயை எடுத்தவள் படுக்கை விரிக்காமல் அவன் முகம் பார்த்து நின்றாள். வெற்றிக்கு புரிந்தது, நாசுக்காக  வெளியேற சொல்கிறாள். இது என்ன அமைதியா, அடமா, அழுத்தமாக நிற்பது. பிள்ளைகளை பார்த்தவன், அவர்கள் அழுகை அதிகமாகவும் வெளியேறினான். வெற்றி திரும்பி பார்க்க, பாய் விரித்து தாய், மக்கள் படுக்க தயார் ஆனார்கள். அவனுக்கு இடமில்லை என்று சொல்லாமல் சொல்கிறாள். ஆனால், சட்டையை பிடித்து சண்டை போடவும்  இல்லை, அவள் வீட்டில் சொல்லி பிரச்சனை பண்ணவும் இல்லை. 

      வீட்டை விட்டு வந்தவன், வெளியே நின்று இருந்த அவன் காரில் படுத்து கொண்டான். பிள்ளைகளை உறங்க வைத்து, தானும் படுத்த சரண்யாவிற்கு தூக்கம் எட்ட வில்லை.  வெற்றி தன்னை தொடரும் பாதை கண்டு கொண்டாள். அதை எவ்வாறு அணுக என்று தான் தெரியவில்லை. 

        தற்போதைய அவள் நிலை பெரும் கவலைக்கிடம்.  பொட்டை கோழி கூவி பொழுது விடியாத… சரிதான் போல. தன்னால் முடியவில்லை என்ற ஆதங்கம் மனதில் நிறைந்து நின்றது. நீ, எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ தேவையில்லை என்ற முடிவை நான்கு வருடம் முன் துணிந்து எடுத்து விட்டாள். ஆனால், தான் ஒன்றுமே இல்லை என்று அவன் காட்டி விட்டான். 

       தன்னை வேண்டாம் என்ற ஒருவனை தூக்கி எறிய முடியாமல், பல்லை கடித்து சகிக்கும் நிலை அவளது… இந்த வீடு, இந்த வேலை, பிள்ளைகளுக்கு பள்ளி, இந்த பாதுகாப்பான சூழல் என்று தங்கள் கூட்டை அவள் அவ்வளவு எளிதாக உருவாக்க வில்லை. சின்னதாக தங்கள் வாழ்க்கை அமைப்பு இருந்தாலும், அதை கொண்டு வர அவள் பட்ட பாடு கடவுளுக்கு தான் தெரியும். குடும்ப தலைவன் என்ற பெயர் மட்டும் தான் வெற்றிக்கு. அந்த பெயரை கொண்டு இவன் இடத்தை நிலை நிறுத்தி கொண்டது, தான்  ஒன்னுமே இல்லை என்ற உணர்வு தான் அவளுக்கு… கடவுள் தனக்கு நியாயம் செய்ய வில்லையே என்று மருகி போனாள். 

      பொண்டாட்டி, பிள்ளைகளை விட்டுட்டு போய் விட்டான் அயோக்கியன் என்றது போய், என்ன இருந்தாலும் பொண்டாட்டி, பிள்ளை மட்டும் போதும்ன்னு வந்துட்டான், நியாஸ்தன் தான் என்ற பெயர் வந்து விட்டது. அப்போ பெண், அவள் யார்?… இத்தனை வருடம்  ஏந்தி, தூக்கி சுமந்தவள் ஒன்றுமே இல்லையே… முதல் உரிமை அவனுக்கு என்றால், இடுப்பு எலும்பு உடையும் வலியை  மூச்சடக்கி பிள்ளை பெற்ற என் உரிமை தான் எங்கே?

        குடும்பமாக சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று சொன்னால் போதும், ஊர் இவனுக்கு சாதகமாக தான் பேசும். இரு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு சரண்யா படும் பாட்டை அறிந்தவர்கள், அவள் தன்மானத்தை உதுத்து  இவனோடு சேர தான் விடுவார்கள். 

        அவளுக்கு என்று நேரடியான குடும்ப துணை கிடையாது. தனியே இரு பெண் பிள்ளைகளை வளர்ப்பது சுலபம் அல்ல. பொறுப்பை தனதாக்கி சேர்ந்து வாழ நினைக்கும் கணவன், நிச்சயம் மற்றவர்கள் பார்வைக்கு நல்லவனாக தான் தெரிவான். சுய மரியாதை பேசி, தன்மானம் பார்த்து, தனியே சுமை தூக்கி நிக்க தயாராகும் பெண், மற்றவர்கள்  பார்வைக்கு நன்மதிப்பு இருக்காது. அத்தகைய நன் மதிப்பு இன்றி இந்த சமூகத்தில் வாழ முடியாது. 

       

      ஐந்து மணிக்கே எறியும்  விளக்கை கண்டு, மனைவி எழுந்து விட்டாள் என்று அறிந்து கொண்டான்.  மெல்ல மேலே ஏறி சென்றான். பிள்ளைகள் இன்னும் உறக்கத்தில் தான். எப்போதும் காலையில் தனக்கு என்று டீ வைத்து கொள்வாள். முன் வராண்டாவில் குட்டி நடை போடுவாள், மனதில் அடுத்து என்ன என்ற கணக்கீடு ஓடி கொண்டு இருக்கும். சமையல் வேலை துவங்க நேரம் ஓடியது, வெற்றி ஆஸ்தான இடத்தில் அமர்ந்து கொண்டான். இன்று என்னவோ பிள்ளைகள்  எழுந்து கிளம்ப தாமதம் ஆனது.

       சரண்யா என்னவும் செய்து பார்த்து விட்டாள். அசைய கூட இல்லை, நேரம் ஓடி கொண்டே இருந்தது. வேற வழி இல்லாமல் முதுகில் சுள்ளென்று ஒன்று விழ, பதறி துடித்து எழுந்து கொண்டார்கள். 

        வெற்றிக்கு கொஞ்சம் கோபம், தானும் இருக்க பிள்ளைகள் மீது கை வைத்து விட்டாளே… ஓடி சென்று தூக்க, வில்லாக வளைந்து அவனிடமிருந்து திமிறியது,  அடித்தாலும் தாய் தான் வேண்டும் என்று…

           ஒரே குடும்பமாக இருந்தால், அம்மா அடிக்க அரவணைப்பை அப்பாவிடம் தேடி இருக்கும்.  ஆனால், தன்னை கிட்ட கூட சேர்க்க மாட்டேன் என்கிறார்கள். அதற்கு  காரணம் தெரியும், சரண்யா பார்வையில் தான் பிள்ளைகள் தொடரும். இன்னும் அவன் வாங்கி வந்த ஒன்றையும் தொடவில்லை. ஒரு மூலையில் தான் கிடக்கின்றது. இது வேண்டும், அது வேண்டும் என்று அம்மாவிடம்  அடம் தானே தவிர, அவன் கொண்டு வந்ததில் கை கூட வைக்க வில்லை. 

       பிஸ்கெட் வைக்க குக்கிஸ் கேட்டு ஒரு பாடு அழுகை. தலை வலித்தது சரண்யாவிற்கு. தனி ஆளாக அவள் போராடுவதை பார்த்து கொண்டு தான் இருந்தான். ஷூ போடவாது தன்னை விடலாம் என்ற அளவிற்கு நினைத்தும் அவனை அருகில் கூட விட வில்லை. பெயரளவில் இருந்தவன், ஆள் அளவில் இருந்தான். 

     அவசரக்கதியில் பிள்ளைகளை இழுத்து ஓடி கொண்டு இருந்தாள். மெளனமாக பார்த்து நின்றான் வெற்றி. தன்னிடம் மூன்று கார் இருக்க, பள்ளி வேனுக்கு இரண்டாயிரம் கட்ட வழி இல்லாமல், பிள்ளைகளை தரதரவென இழுத்து கொண்டு ஓடினாள்.  அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி நடந்தாள் அஜி…

           தன் வீட்டுக்கு வந்தவனை தான் வீட்டில் எல்லோரும் பார்த்து நின்றார்கள். எங்கு  போய் வருகிறான் என்று தெரியாது. பிள்ளைகளை பார்க்க  தான் என்று ஒரு எண்ணம் உண்டு. அவனின் செயலை யாரும் கேட்காமல் இருக்க, தந்தை கேட்டு விட்டார்.

          “நாம நாலு பேரை கூட்டு போய் பேசுவோம் வெற்றி. நீ மட்டும் போய் வராது சரி வராது. பொதுவான ஆளை வச்சு பேசுவோம்…”

       “வேண்டாம்ப்பா , நானே பார்த்துக்கிறேன். நாலு பேர் சமாச்சாரமே வேண்டாம். ரெண்டு பிள்ளைக இருக்குது, பஞ்சாயத்து, பிரச்சனைன்னு இழுக்க முடியாது. வெளி நாட்டுல இருந்து வந்த மாதிரியே இருக்கட்டும். பேச போனா பிரச்சனை தான் பெருசாகும். இனி எம் பொண்டாட்டி, பிள்ளைக கூட தான் என் வாழ்க்கை. வேற எண்ணத்தை விட்டு உங்க பொழப்பு பாருங்க…” தாயை பார்த்து சொள்ளியவன் ,சென்று விட்டான்.

          மறுநாள் சரண்யாவுக்கு வார முடிமுறை, ஓய்வாக இருக்க வந்து விட்டான் எரிச்சல் மண்டியது.  வெளி வராண்டாவில் பிள்ளைகள் விளையாட பார்த்து நின்றான், இப்போது தான் தெரிந்த முகமாக பார்த்து வருகிறார்கள். இனி என்று தந்தையாக அன்பை பெற… 

         பிள்ளைகள் கண் பார்வையில் தாய் இருந்தாள் போதும், மத்தபடி  தேட மாட்டார்கள். அம்மா என்ற அழைப்பிற்கு, கண் தாயை பார்த்தால் போதும், எந்த தொந்தரவும் செய்யாமல் விளையாட தொடங்கி விடுவார்கள். 

       பிள்ளைகள் தன்  வேலையில் இருக்க, நழுவி உள்ளே சென்றான். காய் வெட்டி கொண்டிருந்தாள் சரண்யா. எப்பவும் போல அமர்ந்தவன் , மெதுவாக ஆரம்பித்தான்.

         “சரண்யா…” என்ற சத்தம் அவளுக்கு இறுக்கத்தை கொடுத்தது. இத்தோடு இரண்டு, மூன்று முறை தான் பேர் சொல்லி அழைத்து இருக்கிறான். 

       “ நான் பிள்ளைகளுக்காக தான் வந்தேன்னு நீ நினைக்கலாம். ஆனால், உன் நினைப்பும்  எனக்கு இருந்தது. இந்த நாலு வருசம் உன்னை நினைக்காத நாள் இல்லை…”

      சரண்யா முகம் கடுமையாக மாறியது. பிள்ளைகளுக்காக சுத்தி வரும் போது அமைதியாக கடந்தவள், தன்னை குறித்த பேச்சு வெறியை கிளப்பியது.

    “ நிஜம் சரண்யா.  நாம பிரிஞ்சு நின்ன இத்தனை வருசத்துல நான் உணர்ந்தேன். எனக்கு… எனக்கு , உன்னை ரொம்ப பிடிக்கும் சரண்யா. ஆஆஅஅ…” என்று கத்தி விட்டான். கத்தி குத்தியதில்.

         ஆம், கத்தியை கொண்டு தான் குத்தி விட்டாள். தரையில் அமர்ந்து அவள் காய் வெட்ட, சற்று தள்ளி சேரில் அமர்ந்து இருந்தான். அவன் சொன்ன வார்த்தையில், உண்டான கோபத்தில் கத்தியை தூக்கி அவனை நோக்கி எறிய,

         மொட்டிக்கு கீழ குத்தி நின்றது.  கெண்டை காலில் கத்தி குத்தி நிற்க, கை வைத்து கூட தொட முடியாமல் உயிர் வலி…