“காசு கொடுத்து பழகாதீங்க அப்பா… வெளி ஆட்கள் கிட்டையும் எதிர்பார்ப்பாங்க. அது நல்ல பழக்கம் இல்லை…” சங்கடமாக மகளை பார்த்தார் தந்தை. கண் கலங்கும் போல இருந்தது.

     அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்தது. மதியம் விளையாடும் போது  வீட்டில் இருந்த பெரிய ரிமோட் காரை பிள்ளைகள் பார்த்தார்கள். திவ்யா சொல்லி விட்டாள்,

      மாமா தான் வாங்கி கொடுத்தார் சரண். ஒத்த பேரன் இல்லையா, கேட்டதும் வாங்கி கொடுத்துட்டார்.  பென்சன் வருதுல, விலை பதினைந்து ஆயிரம்…” என்று பெருமையாக சொன்னாள். அதை ஈடு கட்ட, தன் பிள்ளைகள் கையில் ஆயிரம் ரூபாய். 

        வாயில் வார்த்தை எக்கு தப்பா வந்தது, அடக்கி கொண்டாள். ஆரம்பத்தில் இருந்தே சரண்யா கோபம் கொள்வதும் அதற்கு தான். என் பிள்ளைகள் தகுதியை நீங்கள் எப்படி தீர்மானிக்கலாம். இவர்களுக்கு இதுவே போதும், இதுவே பெரிது என்று… எங்களுக்கு பெரிய, அவசியமான தொகையாக இருந்தாலும் தேவை இல்லையே.

      மனம் வலித்தது. தன் நிலையை மீண்டும், மீண்டும் சொல்லி காட்டுகிறார்கள் என்று… 

      “அடுத்த மாசம் பென்சன் வரட்டும் சரண். பிள்ளைகளுக்கு  பிடிச்சதை  வாங்கி கொண்டு வாரேன்…” என்றார் சிவகுமார்.

    “வேண்டாம்ப்பா… உங்க தேவைக்கு வைங்க, என் பிள்ளைகள் தேவைக்கு நான் இருக்கேன். அடுத்த மாசம் அக்கா மகன் பிர்த்ட் டே வருது. அவங்களுக்கு செய்யணும். எங்களுக்கு செய்யணும்ன்னு அவசியம் இல்லை. ஏன் செய்யலைன்னு நான் கேட்கவும் மாட்டேன்… காஸ்ட்லி பொருள் வைக்கிற அளவுக்கு என் வீடு பெருசும் இல்லை…” என்று சொன்னதோடு, நடந்து விட்டாள்.  

        அதிர்ந்து போய் கணவரை பார்த்தார் சுகந்தி.  “என்னங்க, இந்த சரண் என்னவோ பேசிட்டு போறா… இவளுக்கு எப்பவும் இப்படித்தான். என்னை பார்க்கலை, என் பிள்ளைகளை பார்க்கலன்னு குறை தான் சொல்லுவா… சொந்த அண்ணன் பையன் தானே, அவளுக்கும் செய்வோம் தான, புரிஞ்சுக்கவே மாட்ட. நல்லா வீம்பு…”

     மனைவியை பார்த்த சிவ குமார், “ காலையில இருந்து எல்லா வேலையும் சரண் தான் பார்த்துச்சு. மருமகளுக்கு கூட ஒத்தாசை செய்யிற, மகளுக்கு ஏன் செய்யலை?”

       “அவளுக்கு எல்லாம் தெரியும்ன்னு தான்…” என்று இழுக்க.

     “ பார்த்தியா உனக்கு தோணவே இல்லை, எனக்கும் தான். எப்பவும் செய்யிற வேலை தான்னு  ஒரு எண்ணம். இதுவே பிரியா வந்தப்பா, இப்படியா  வேலை சொன்ன…”

       “அவ அங்க தனியா எல்லா வேலையும் செய்யணும். அம்மா வீட்டுக்கு வாறதே ஓஞ்சு உட்கார தானே…” என்று சொல்லி கொண்டு வந்தவர் கப்பென்று வாய் மூடி கொண்டார்.

    “உனக்கு இப்பாத்தான் புரியுது. எனக்கு என்னைக்கோ புரிஞ்சு போச்சு. நம்ம அறியாமவே, நம்ம பிள்ளைகள் கிட்ட வேறுபாடு காட்டி இருக்கோம். பிரியா, சுரேந்தர் கஷ்டத்தை புரிஞ்சுகிட்ட நம்ம, சரண்யா  கஷ்டத்தை பிரிஞ்சுக்கலை  தானா… நம்ம கூடவே இருந்ததால நமக்கு தெரியலை போல… சரண்யாவும் வேலைக்கு போற பொண்ணு தானே, தனியா வேலை, வீடு, பிள்ளைகன்னு எவ்வளவு அலைச்சல், கொஞ்சமும் யோசிக்காம இங்க வந்ததும் வேலை ஏவுற… இனி சரண்யா இங்க வரும்ன்னு தோணலை… மகள் மாதிரி யாரும் வர முடியாது. நமக்கு ஒண்ணுன்ன ஓடி வர இடத்துல இருக்குறது சரண்யா தான். அதை கெடுத்துக்காத…”

      “ சின்ன மக சொன்னது சரி தான் சுகந்தி. பேரனுக்கு வாங்குன்ன நாம, பேத்திய யோசிக்கலை பாரு… பிரியா  வரும் போது எல்லாம் எவ்வளவு செய்றோம். சரண்க்கு நாம என்ன செஞ்சோம். யோசிக்க, யோசிக்க நெஞ்சு வலிக்குது. நான் பெத்த பிள்ளைக்கு எவ்வளவு அநியாயம் செஞ்சுட்டேன்.  இவன் வேணாம், காலத்துக்கும் அப்பா உன்னை வச்சு பாக்குறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு, நாட்டாத்துல விட்டுட்டோம்…”

   சுகந்தி அதிர்ந்து போய் தான் நின்று இருந்தார். இவ்வளவும் யோசிக்கவே இல்லை. திகைத்து கணவனை பார்க்க,

    “எம் பிள்ளைக்கு என்ன வயசு. தனியா உலகத்தை பார்க்குது. அந்த ஒத்த வீட்டில ரெண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு உறங்கும் போது மனசு எம்புட்டு வேதனை படும். ஆசை, எதிர்பார்ப்பை அடக்கி வைக்கிற வயசா அதுக்கு… பிரியா வீட்டுக்கு உன்னை அனுப்ப எனக்கு மனசு இல்லை. நீ இல்லாம எனக்கு ஒத்த வேலையும் ஓடாது. ஆனா, சரண்… எல்லாத்தையும் தனி ஆளாக சமாளிக்க எம்புட்டு போராடும்.  நியாயமா நாம என்ன செய்யனும், கஷ்டப்படுற பிள்ளைக்கு துணை நிக்கானும். ஆனா, நாம பெருமைக்கு மத்த பசங்க பிள்ளைகளை பாக்குறோம். சரண்யா கிட்ட எதையும் எதிர்பார்க்கிற தகுதி இருக்கா நமக்கு, யோசிச்சு பாரு…” என்றவர். தளர்ந்த நடையுடன் உள்ளே சென்றார்.

           பிள்ளைகளை கூட்டி கொண்டு வீடு வரும் போதே, அமுதா அக்கா வீடு வந்ததை கண்டு கொண்டாள். இனி தயக்கமில்லை, தனியே அழைத்து நடந்ததை சொல்ல,

     “ புருசன் இல்லாம, ரெண்டு பிள்ளைகளை வச்சு தனியா இருக்கன்னு கூடமாட உதவி செஞ்சா, என் வீட்டுகாரரையே  தப்பு சொல்லுவியா… அன்னைக்கு ராத்திரி உன் வீட்டுக்கு வேற ஒருத்தன் வந்தானாம். அதை பார்க்க போய் கீழ விழுந்து அந்த மனுசனுக்கு கால் உடைஞ்சு போச்சு… அக்கம்பக்கம் உண்மையா இருந்ததுக்கு நல்ல பேரு தான். உனக்கு புருசன் இல்லன்னா, வேற யாரும் புருசன் கூட வாழ கூடாதா. நல்ல எண்ணம் தான் உனக்கு. இனி உம் பிள்ளைகள் என் வீடு வரக்கூடாது…” படபடவென்று கொட்டி விட்டு சென்றாள் அமுதா.

     திகைத்து போய் பார்த்த சரண்யா, பின் புரிந்து கொண்டாள். ஏனெனில் அடுத்த இரண்டு நாளும் அமுதா வீட்டில் சண்டை தான். கண்டு கொள்ளாமல் இருக்க பழகி கொண்டாள்.

     அமுதா, இந்த ஊர் பக்கம் கிடையாது. பிழைக்க வந்தவர்கள். ஆனால், சரண்யா இந்த ஊர் தான். அக்கம் பக்கம் எல்லாம் இவர்கள் ஆட்கள் தான். 

       சுகுமார் மீது தான் தவறு என்று தெரிந்தால் சும்மா விட மாட்டார்கள். வீட்டை காலி செய்யணும், பேர் கெடும், இப்படி ஒரு பேர் வாங்கிய பின் வீடு கிடைப்பது எளிது அல்ல… பிள்ளைகள் படிப்பு இருக்கு, பலதும் யோசித்து, தவறு தன் கணவர் பக்கம் தான் என்று தெரிந்தாலும், சரண்யாவை குற்றவாளியாக்கி விட்டார். வேற வழி, அங்கு குடியிருந்தாக வேண்டுமே…

         ராக்காம்மாவை யாரோ வச்சுருக்கானாம்… பேர் நொடியில் வந்து விட்டது. 

        வீட்டு ஓனர் பாட்டியிடம் பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் வீட்டை காலி செய்வது இவளாகி போவாள். சரண்யாக்கு தயக்கம் எல்லாம் இல்லை. வந்தது அஜி அப்பா தான் என்று சொல்லவும் செய்வாள் தான்.

  ஆனால், அதற்குள்  சரண்யா பேசு பொருள் ஆனாள். இது தான் அவளை எரிச்சல் படுத்தும் பேச்சு. கணவன் உடன் இல்லை, இள வயது வேறு. தவறாக தான் போய் இருப்பாள் என்று எளிதாக எண்ணுகிறார்கள். 

    “எங்கள் ஆசை எல்லாம் கட்டவிழ்ந்த காளைமாடா, கணவன் இல்லை என்றதும் கண்ட இடத்துக்கும் போய் விடுவோமா… எங்களுக்கு எல்லாம் ஆசைகளை அடக்கி ஒழுங்காக வாழ தெரியாதா!… புருசன் உடன் இருக்கும் பெண்கள் யாரும் தப்பே செய்யாதவர்களா?… நாங்கள் தான் முழு தப்பையும் குத்தகைக்கு எடுத்து இருக்கோமா…”

     “ எங்களிடம் எதற்கு கண்ணகி, மாதவி, நளாயினியை தேடுகிறீர்கள். உங்கள் வீட்டு பெண்களை பாருங்கள். இந்த மாதிரி கூட்டத்தால் தான் சரியில்லாத புருசனை கூட எதிர்க்க முடியாமல் அடங்கி போய் விடுகிறார்கள். இந்த நரி கூட்டத்திற்கு, கணவன் என்ற ஒரு கயவனை அனுசரித்து சென்று விடலாம் அல்லவா…” வார்த்தையால் விளாச தோன்றும், தலை குனிந்து சென்று விடுவாள்.

      பெரிதாக ஒன்றும் இல்லை. கண் இருந்தும் குருடாக, காது இருந்தும் செவிடாக, வாய் இருந்தும் ஊமையாக இருந்தால் போதும் எப்படிபட்ட கணவன் கூடவும் குடும்பம் நடத்தி விடலாம்.

         பெண் மனதில் ஆயிரம் யோசனை ஓடினாலும், தனியாக இருக்கும் பிள்ளைகளை நினைத்து ஓடி வந்தாள். கையில் மாவு பாக்கெட் இருந்தது. கால் மணி நேரத்தில் உணவு வேலை முடிந்து விடும். யாரையும் பார்க்காமல் வீடு வந்தவள், மாடி படியில் கால் வைக்கும் போது,

     “சரண்யா …” ஓனர் பாட்டியின் சத்தம்

  “கிழிஞ்சது  போ…”

       “ஏண்டி, அன்னைக்கு ராத்திரி மேல் வீட்டுக்கு ஒருத்தன் வந்தனாம். ஒரு வார்த்தை சொல்லலை நீ… நாங்க என்னன்னு கேட்க மாட்டோமா… பெரியவங்க எங்களை தான் வச்சு பேசணும்…” என்க.

     புரியாமல் சரண்யா பார்த்தாள்.

       “ஊர்ல பேச்சு வேற மாதிரி போச்சு தெரியுமா. அப்புறம் நான் தான் சொன்னேன். அது யாரோ ஒருத்தன் இல்லை.  அவன் சரண்யாவோட புருசன் தான்னு. பொண்டாட்டிய விட்டுட்டு போனவன், பிள்ளைகளை பார்க்க வந்திருக்கான். வெளிநாட்டுல இருந்தானாம், இப்பத்தான் ஊருக்கு வர, பிள்ளைகளை பார்க்க ஓடி வந்துட்டான். நான் தான் புரிய வச்சேன்…”

    ஓ என்றாள் சரண்யா. யாரை விட்டுட்டு போனான் பொண்டாட்டியை, யாருக்காக வந்தான் பிள்ளைகளுக்காக. பேச்சு சாமர்த்தியம் தான். எப்படியோ ராக்கம்மா, யாரோ ஒருத்தனை வைக்கல, அந்த ஒருத்தன் அவள் புருசன் . சரிதான் என்று நினைத்தவள்.

     “உங்களுக்கு?…” என்று ஆரம்பிக்க.

    “ உம் புருசன் தான் பேசுனாப்ள… மேல தான் இருக்கான். செத்த முன்ன தான் வந்தான். நல்ல பையன், வாட்ட சாட்டமா அஜித் குமார் மாதிரி இருக்கான். பிள்ளைகளுக்காக வந்தான், கெட்டியா புடிச்சுக்கிட்டு ஊர் போற வழிய பாரு. உன் அக்கா, அண்ணன் எல்லாம் நல்ல பொழப்பு  பொழைக்க , நீ ஏன் பாடு படனும்.  புருசன் கிட்ட ரோசம் பார்த்தா பொம்பளை யாரும் காலம் தள்ள முடியாது பார்த்துக்க. வந்தது உன் புருசனா இருக்கவும் சரியா போச்சு,  இல்லைன்னா… எனக்கு கூட கோடாரி தைலம் கொண்டு வந்தான். எம் பேத்திக்கு சாக்லெட் குடுத்தான்.  நல்ல பையனா தான் தெரியுறான்….” என்ற பாட்டிக்கு தலையாட்டி படி ஏறினாள்.

     ஆக, துரை மேல தான் இருக்கான்.