Advertisement

 
                                                            கொஞ்சும் ஏழிசை நீ – 8
“நீங்க சாரி சொல்லாம ஐ வோன்ட் கம் தேர்…” என்று மானசா அடிக்குரலில் கத்திக்கொண்டு இருக்க,
“ஓ..!! அப்படியா…” என்று சித்திரைச் செல்வன் சிரித்துக்கொண்டு இருந்தான்.
“ஹெலோ என்ன சிரிப்பு… பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்ன சிரிப்பு?? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. ஹா..!! எங்கப்பாவோட பேசினா நான் அப்படியே நாளைக்கே கிளாஸ் கிளம்பி வந்திடுவேன்னா.. நெவர்… இந்த மானசா முன்ன வச்ச காலை பின்ன வைக்க மாட்டா… நீங்க பண்ணது தப்பு… சோ நீங்க சாரி சொல்லி என்னை கிளாஸ்க்கு வான்னு சொல்லாம நான் வரமாட்டேன்… அவ்வளோதான்…” என்று மூச்சு வாந்த மானசா பேசினாலும்,
“ஓகே.. அப்புறம்…” என்றான் சித்திரைச் செல்வன்.
“அப்புறமா?? நான்.. நான் என்ன கதையா சொல்றேன்..” என்று எரிச்சல் தாளாமல் தரையை ஓங்கி மானசா மிதிக்க,
“பார்த்து பார்த்து ஊட்டில எர்த் குவாக் வந்திட போகுது…” என்று சித்து இன்னும் பலமாய் சிரிக்க,
“யூ… யூ…” என்று அவன் எதிரே இருப்பது போல் விரல் நீட்டி மிரட்ட,
“எஸ் மீ..” என்றவன் “ஹே.. லுக் உனக்கு கோர்ஸ் முடிக்கனும்னா நீ வா.. இல்லனா டூ வாட் எவர் யு வான்ட்…” என்றவன் வைத்து விட்டான்.
அவளிடம் பேசியதே பெரிது. இதில் ‘சாரி..’ வேறு சொல்லவேண்டுமா??! அதுவும்  சித்திரைச் செல்வன்..
நடக்குமா என்ன??!!
அவன் நியாயமே இல்லாது கோபம் கொண்டதினால் தான் முதலில் மானசாவிற்கு அழைத்துப் பார்த்தான். அவளின் அலைபேசி அமர்த்தி வைத்திருக்க,
“சுவிட்ச் ஆப் பண்ணிருக்கா டா..” என்று பாஸ்கியிடம் சொல்ல,
“ஆன் பண்ணாமயா போயிடுவா?.. பட் தப்பு உன்மேல.. சோ அதை மனசுல வச்சிட்டு பேசு…” என்றுவிட்டு போனான் பாஸ்கர்.
திரும்ப திரும்ப முயற்சித்தும் மானசாவின் அலைபேசி ‘சுவிட்ச் ஆப்..’ என்றே வர, பொறுமை இழந்தவனுக்கு ஒன்று நன்றாய் புரிந்தது இவள் வேண்டும் என்றே ஆப் செய்து வைத்திருக்கிறாள் என்று.
‘எப்படி பேசினாலும் பதிலுக்கு பதில் பேசி டென்சன் தான் செய்வா..’ என்று எண்ணியவன், அவர்களின் துறை அலுவலகம் சென்று
“கணேஷ்ணா சர்டிபிகேட் ஸ்டூடண்ட்ஸ் டீடைல்ஸ் பார்க்கணும்..” என,
“அது எதுக்கு தம்பி…” என்றான்.
“அட… வேணும்னு சொன்னா எடுத்துக் கொடுங்க.. அதைவிட்டு..” என்று சித்து பார்த்த பார்வையில்,
“வர வர எல்லாம் என்னை முறைக்கிறீங்க..” என்று முனங்கியபடி கணேஷ் அவன் கேட்ட விபரங்கள் எடுத்துக் காட்ட, பொதுவாய் அனைத்தையும் பார்ப்பது போல் பார்த்து பின் மானசாவின் அப்பா அலைபேசி எண்ணை மனதில் குறித்துக்கொண்டான்.
அதன்பின் தான் அவன் செந்தமிழுக்கு அழைத்து, தன்னை அறிமுகம் செய்துகொண்டு நடந்த விபரங்களை கூற,
“அட மானசா எப்பவுமே இப்படிதான்…” என்றார் இலகுவாய் அவர்.
அவரின் அந்த பதிலிலேயே புரிந்துபோனது மற்ற  அப்பாக்கள் போல எல்லாம் இவர் இல்லை என்று. தேவையில்லாத பதற்றமோ இல்லை மகள் இப்படி பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரிடம் கோபித்து வந்திருக்கிறாள் என்ற கோபமோ அதெல்லாம் எதுவும் இல்லை.
“நான் பேசச்  சொல்றேன்..” என்றவர் வந்து பார்க்க, அப்போதுதான் அவள் உறங்கி எழுந்து வந்துகொண்டு இருந்தாள்.
“மேடம் இப்போதான் தான் தூங்கி எழுந்து வர்றாங்க.. சாப்பிடவும் பேச சொல்லவா?? இல்லன்னா பசில இன்னும் நிறைய பேசுவா..” என்று செந்தமிழ் சொல்லவுமே, சட்டென்று சித்திரைச் செல்வனுக்குமே அந்த இலகுத் தன்மை வந்து ஒட்டிகொண்டது.
ஒரு சில மனிதர்களால் மட்டுமே இப்படி முகம் காணாது பேசினாலும், நேர்மறை எண்ண அதிர்வுகளை எளிதில் பரப்ப முடியும். அப்படியொரு சக்தி செந்தமிழிடமும் இருந்தது போலும்.
“ஓகே சர்.. பட் நான் எதோ டென்சன்ல பேசிட்டேன்.. மிஸ்டேக் இஸ் மைன்.. அதுக்காக  மானசா கிளம்பி…” எனும்போதே,
“ஓகே ஓகே.. கூல்.. இதெல்லாம் நடக்குறது தான்.. தப்பா எடுத்துக்க எதுவும் இல்லை.. அண்ட் ஐ க்னோ அபௌட் ஹெர்…” என்றவர் தான் பின் மகளை பேச வைத்திருந்தார்.
அப்பாவின் முன்னம் பவ்யமாய் பேசியவள், அறைக்கு வந்து கோபம் கோபமாய் அதிலும் பக்கம் பக்கமாய் பேசி மெசேஜ் அனுப்ப, அதெல்லாம் படித்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
இவன் மானசாவோடு பேசினானா என்று பார்க்க வந்த பாஸ்கர், அவன் புன்னகை முகமாய் அமர்ந்திருக்கும் விதம் பார்த்து “என்னடா??” என,
“ம்ம் இங்க பாரு..” என்று அவனின் அலைபேசியை நீட்டினான்.
“என்னாச்சு…” என்று யோசனையாய் அவனைப் பார்த்தபடியே அலைபேசியை வாங்கிப் பார்த்த பாஸ்கருக்கும் சிரிப்பே..
மானசா அனுப்பிய மெசேஜ் கண்டு அல்ல. அதனைப் படித்து தன் நண்பன் சிரித்த சிரிப்பினைக் கண்டு.
“என்னடா சிரிக்கிற…” என்று சித்து கேட்க,
“பின்ன திட்டு வாங்குற நீயே சிரிக்கிறப்போ நான் சிரிச்சா என்ன??” என்றவன், “சரி சொல்லு என்ன இதெல்லாம்..” என, சித்துவும் நடந்ததை சொல்ல,
“ஹ்ம்ம்.. நீதானா இது… பரவாயில்ல… தேறிட்ட போ…” என்று சொல்லிவிட்டு போனான்.
யாரின் நல்ல நேரமோ என்னவோ, சித்திரைச் செல்வன் இதனை தவறாய் எடுத்துகொள்ளவில்லை. இல்லையெனில் இதையும் தலையில் ஏற்றி, அதற்கொரு தனி அர்த்தம் எடுத்து மீண்டும் ஒரு வட்டத்தினுள் சுருங்கி இருப்பான்.
ஒருவேளை செந்தமிழ் இதனை சீரியசாக எடுத்து பேசியிருந்தால், சித்திரைச் செல்வனும் அதே மனநிலையில் இருந்திருப்பானோ என்னவோ, இப்போது மானசாவின் கோபம் எல்லாம் சிறுபிள்ளையின் பிடிவாதமாய் தான் தோன்றியது.
‘யாராவது சர் கிட்ட கோவிச்சுட்டு வீட்டுக்கு போவாங்களா??!!’ இப்படித்தான் அவன் நினைக்க,
‘இதோ இவ இருக்காளே.. இவ போவா…’ என்று அவன் மனது சொல்ல,
‘அவ போறதெல்லாம் சரி.. நீ ஏன் இப்போ ரோஷமே இல்லாம சிரிச்சிட்டு இருக்க.. எங்கயாவது இதெல்லாம் நடக்குமா..’ என்று புத்தி எட்டிப் பார்க்க,
‘இதோ இங்க நடந்திடுச்சே.. என்ன செய்ய…’ என்றது மனது.
இப்படி புத்திக்கும் மனதிற்கும் இடையினில் சித்திரைச் செல்வனின் சிந்தனைகள் அலைபட, தொடர்ந்து மானசாவின் மெசேஜ்கள் வந்தபடியே இருக்க, ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்ல முடியாது என்று நினைத்தவன், திரும்ப அவளுக்கு அழைப்பு விடுக்க, ரிங் போனதா என்று உணரும் முன்னமே,
“ஹலோ…” என்றாள் கடுப்பாய்.
“ம்ம் ம்ம் சொல்லு…” என்று சித்துவும் சொல்ல,
“நான் என்ன சொல்ல, கால் பண்ணது நீங்க…” என்று மானசா தொடங்க,
“பின்ன உன்னோட மீனிங்லெஸ் மெசேஜஸ்கு எல்லாம் நான் ரிப்ளை பண்ணிட்டு இருக்க முடியுமா??” என்றான் எடக்காய்.
“வாட்…??!! கம் அகைன்… மீனிங்லெஸ் மெசேஜஸா.. ஹவ் ரூட் யூ ஆர்… டபுட் கேட்டா ரீசனே இல்லாம திட்டுற நீங்க எல்லாம் மீனிங் பத்தி பேசக் கூடாது..” என்று மானசா பொரியத் தொடங்க, இப்படி ஆரம்பித்தது தான் இவர்களின் பேச்சு வார்த்தை.
மானசாதான் பேசிக்கொண்டே இருக்க, அவள் பேச பேச அவனுக்கு அப்படியொரு பூரிப்பு. சிறு குழந்தைகள் தையா தக்கா என்று குதிக்குமே அதுபோல் ஒரு கற்பனை தான் மனதில் வந்தது அவனுக்கு மானசா கோபமாய் பேசுவது எண்ணி.
ஆகமொத்தம், இருவருமே இருவரிடமும் தங்களின் நிலை எது என்பதை மறந்து போயிருந்தனர்.
நண்பர்கள் இப்படி சண்டையிட்டுக் கொள்வார்களா?? என்றால் இவர்கள் நண்பர்களும் இல்லையே.. காதலர்களின் சண்டையா என்றாலும் இது அதிலும் சேராது..
பின்னே என்னதான் இருவரின் உறவும்??!!!
பெயரில்லை.. உருவமில்லை.. இதுவரை முறைப்புகளும் முரண்பாடுகளும் மட்டுமே.. இப்போதுதான் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருக்க, இனிதான் ஒரு முடிவிற்கு வந்து தெளியவேண்டும்..
முடிவு என்பது வேறொரு உறவின் ஆரம்பம் ஆகுமோ??!! யார் அறிவார்..
இத்துனை கோபமாய் பேசியதில் மானசாவிற்கு மூச்சு வாங்கியது தான் மிச்சம். உண்டது எல்லாம் இவனோடு கத்தியதிலேயே செரிமானம் ஆகியிருக்கும் போல, மீண்டும் பசிப்பது போல் தோன்ற, எழுந்து வெளியே வர, தனுஜா வெளியே கிளம்பிச் செல்ல என்று தயாராகி அவளின் அறையில் இருந்து வர,
“எங்க போறன்னு எல்லாம் கேட்க மாட்டேன்..” என்றபடி அமர்ந்தாள் மானசா.
“ம்ம்ம் நீ திருந்தமாட்டான்னு எனக்கும் தெரியும்..” என்றவள் “ஜஸ்ட் அப்படியே ஒரு டிரைவ் போய்ட்டு வரலாம் வா….” என,
“சும்மா எல்லாம் வரலை..” என்று தங்கையாய் மாறி மானசா பேச,
“ம்ம் என்னவோ பண்ணிட்டு வந்திருக்க நீ.. அதை மறைக்க இவ்வளோ பேச்சு…” என்றவள் “கிளம்பு உன்னோட பேவரெட் ஷாப் போலாம்…” என,
“வாவ் மசாலா டீ…” என்று அப்படியே கிளம்பிவிட்டாள் மானசா.
அவளுக்கும் தெரிந்திருந்தது தனுஜாவிடம் அப்பா அனைத்தையும் சொல்லியிருக்கிறார் என்று. அதை கேட்கவே தனுஜா இப்படி தன்னை அழைத்து செல்கிறாள் என்பதும் தெரிய, மானசா எதையாவது மறைக்க முயன்றால் தானே தயக்கம் இருக்கும்..
தைரியமாகவே கிளம்பிச் செல்ல, தனுஜாதான் காரினை செலுத்த, மலைப் பாதையின் வளைவுகளுக்கு எல்லாம் சரி கொடுத்து கார் செல்ல, இவர்கள் வீடு இருக்கும் பகுதியில் இருந்து ஒரு இருபது நிமிட பயணம் அது.
சீரான சாலைப்பகுதி வரவும் தான் தனுஜா பேச்சினைத் தொடங்கினாள் “சோ… மனு… நாளைக்கு கிளம்புறியா??” என்று.
“ம்ம்ம்…”
“ம்ம்ன்னா என்ன அர்த்தம்.. நீ கிளம்புறன்னு அப்பா சொன்னார்…” என,
“கிளம்பனும்…” என்றாள் வேடிக்கைப் பார்ப்பது போல் முகத்தினை திருப்பி.
“இந்த கோர்ஸ் பிடிக்கலன்னா விட்ரு…”  என்று தனுஜா சொல்லி முடிக்கவில்லை, “ஹேய்.. என்ன இது??” என்றாள் மானசா.
“எஸ்.. நீ இவ்வளோ டிஸ்டர்ப்பா இருந்ததில்லை தானே..”
“அதுக்காக.. த்ரீ மன்த்ஸ் கோர்ஸ் கூட கம்ப்ளீட் பண்ண முடியாதவளா நான்…” என்று மானசா தன் கேசத்தை கோதிக்கொண்டு சிலுப்ப,
“ம்ம் இப்படித்தான் நீ மிஸ்டர். சித்திரைச் செல்வன் கிட்டயும் பேசிருப்ப…” என்றாள் தனுஜா.
“ஓ.. காட்…!!!” என்று இரு கைகளையும் மேல்நோக்கி காட்டி இறைவனை அழைத்தவள், “உங்க எல்லாருக்கும் ஏன் நான் சொல்றது புரியல… இதுல என்னோட தப்பு எதுவும் இல்லை.. புரிஞ்சதா.. நான் ஒரு சந்தேகம் கேட்டா க்ளாரிபை பண்றது அவரோட பொறுப்பு.. அதைவிட்டு என்னை திட்டினா எனக்கும் கோபம் வரும்..” என,
“கோபம் வந்தா கிளம்பி நீயும் இப்படி வந்திடுவ…” என்று சொல்லி தனுஜா சிரிக்க, வெடுக்கென்று தலையை திருப்பிக்கொண்டாள் மானசா.
அதற்குள் அவளின் மிக விருப்பமான அந்த டீ கடையும் வந்துவிட, அந்த மாலை நேரத்தில் அங்கே ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்தது. சூடாக கொதிதுக்கொண்டு இருக்கும் மசாலா டீயின் வாசம் வந்து நாசியை நிறைக்க, கார் நிறுத்தும் இடம் பார்த்து காரினை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி கடைக்கு வர, கடைக்காரர் சிநேகமாய் புன்னகை பூத்தார்.
கடைக்கு வெளியே நின்ற கூட்டத்தினை கடந்து, உள்ளே நுழைத்து இடம் பார்த்து அமரவே ஒரு ஐந்து நிமிடம் கடந்துவிட, அவர்கள் சென்று அமரவுமே கடையில் வேலையில் இருப்பவர் “வாங்கம்மா..” என்று இருவரையும் பொதுவாய் வரவேற்று,
“மசாலா டீயா…” என,
“ஆமாண்ணா…” என்றாள் தனுஜா.
மானசா ஒன்றும் பேசினாள் இல்லை. அவளுக்கு என்னவோ அனைவரும் சித்திரைச் செல்வனுக்கு சாதகமாய் பேசுவது போலவும், தான் செய்தது தவறு என்பதுபோலவும் சொல்வதாய் இருக்க, முகத்தை உம்மென்றே வைத்துக்கொண்டாள்.
தனுஜா அவளின் எதிரே அமர்ந்து இருக்க “சோ… மிஸ்டர். சித்திரைச் செல்வன் உன்னை மதிக்கலை.. அதானே கோபம்…” என்றாள்.
“என்னை ஸ்டுடென்டா கூட நினைக்கவேணாம்.. ஒரு பெர்சனுக்கு கொடுக்கிற பேசிக் ரெஸ்பெக்ட் கொடுக்கனுமா இல்லையா?? அது யாரா இருந்தா என்ன?? அவங்க வீட்டுக்கு போனப்போ கூட இப்படித்தான்…” என்றாள் மானசா.
“லுக் மனு.. நம்ம வளர்ந்த விதம் வேற.. மே பி அவரோடது வேறயா இருக்கலாம் இல்லையா?? எல்லாருமே இப்படி வீட்டுக்கு பொண்ணுங்க வர்றது பிடிக்கும்னு சொல்ல முடியாது தானே…”
“அதெல்லாம் அவங்க பேரன்ட்ஸ் செமையா பேசினாங்க..”
“ஓகே.. சரி அப்போ கோபமெல்லாம் உன் சர் மேலதான்.. இல்லையா…” எனும்போதே மசாலா டீ வந்துவிட, அடுத்து இரண்டு நொடிகள் மௌனமாய் டீ பருகுவதில் கழிந்தது.
“ம்ம்ம் கோபம்னு எல்லாம் சொல்ல தெரியலை.. ஆனா அங்க இருந்தா கண்டிப்பா ஏதாவது நிறைய பேசிருப்பேன்.. அவ்வளோ எரிச்சலா இருக்கு.. அதான்…” என்றாள் மானசா.
“நீ சொல்ற.. ஒரு பேசிக் ரெஸ்பெக்ட் கூட இல்லைன்னு.. பட் நீ இவ்வளோ ப்ரீயா அவரோட சண்டை போடுற… க்வஸ்டீன் பண்ற… இதோ இப்படி கோவிச்சுட்டு வந்து திரும்ப அவர கால் பண்ண வச்சிருக்க.. இந்த ஸ்பேஸ் எல்லாம் உனக்கு யார் கொடுத்தா மனு??” என்று தனுஜா நிறுத்தி நிதானமாய் கேட்க, டீ பருகிக்கொண்டு இருந்தவளின் இதழ் அப்படியே கோப்பையில் நின்றுவிட, பார்வை மட்டும் தன் அக்காவை பார்த்தது.
“ம்ம் சொல்லு.. இந்த ப்ரீடம் யார் கொடுத்தது..? நம்ம பண்ணது தப்புன்னு புரிஞ்சதுனால தானே அவர் கால் பண்ணிருக்கார்..” என,
தனுஜா சொல்ல வருவது மானசாவிற்குப் புரிந்தாலும், அதை தள்ளி வைத்து “அதெல்லாம் இல்லை ஹச்ஓடி கேட்டா பதில் சொல்லணும்… அதனால தான்..” என்று அவளும்  சொல்ல,
“அப்போ நீ ஸ்டார்டிங்ல சண்டை போட்டாப்போவே அவரும் கம்ப்ளைன்ட் பண்ணிருக்கலாம் தானே… இந்த பொண்ணு சொல்ற பேச்சு கேட்கலைன்னு…” என்று தனுஜா சொல்லவும் தான் மானசாவின் வாய் மூடியது.
உண்மைதானே..!!
சித்திரைச் செல்வன் அதனை செய்தானா??!!
ஆரம்பத்தில் இருந்து மானசாவும் அவனோடு மல்லுக்குத் தானே நின்றாள். அவன் நினைத்திருந்தால் என்றோ இவள் மீது துறைத் தலைவரிடம் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாம் தானே.. ஆனால் அதெல்லாம் செய்யவேயில்லை.
அவள் சண்டையிட்டாலும், சிரித்து பேசினாலும், இல்லை எப்படி என்றாலும், அதற்கு ஏற்றார் போல் அவனும் நடந்துகொள்வான். அவ்வளவே..
சக மனுசியாய் மதிக்கவில்லை என்ற கோபம் தானே மானசாவிற்கு. ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், சித்திரைச் செல்வன் அப்படி எதுவும் பெரியதாய் அவளை மதிக்காது நடந்தது போலவே இல்லை.. கோபம் வந்தால் அதனை மறைக்காது வெளிப்படுத்துவான். அவ்வளவே..!!!
இதெல்லாம் அவளுக்குத் தோன்றவும் தான் மானசாவின் முகம் தெளிவிற்கு வர, “இப்போ ஓகேவா…” என்றாள் தனுஜா.
“ம்ம்ம்….”
“லுக் மனு… நீ எல்லாத்தையுமே கேசுவலா எடுத்துக்கிற டைப்.. சோ உனக்கு இந்த சண்டை எல்லாம் பெரிய விஷயம் இல்லை.. நாளைக்கே போய் நீ நல்லபடியா பேசுவ.. அது உன்னோட பீகேவியர்.. ஆனா எல்லாரும் அப்படின்னு சொல்ல முடியாது. மோர் ஓவர் ஹி இஸ் ஏ பிஹச்டி ஸ்டூடன்ட்.. அப்போ அவங்களுக்கு எவ்வளோ வொர்க் இருக்கும், ஸ்ட்ரெஸ் இருக்கும் அதெல்லாம் யோசிக்கணும்..” என்று தனுஜா இன்னும் விளக்க,
“போதும் போதும்… புரிஞ்சிடுச்சு.. இனி இதுபத்தி பேசவேண்டாம்…” என்றாள் மானசா.
“தட்ஸ் குட்…” என்று தனுஜா புன்னகைக்க,
“ஓகே ஓகே.. அதெல்லாம் விடு.. நீ சொல்லு.. எப்படி போகுது எல்லாம்…” என்று கேட்ட மானசாவின் பார்வையில் விஷமம் தெரிய,
“ஆரம்பிச்சுட்டா…” என்று போலியாய் அலுத்துகொண்டாள் தனுஜா.
“அடடா…!! ரொம்பத்தான்… எப்படி இருக்கார் மிஸ்டர்.ராபர்ட்…?? என்ன சொல்றார்…??” என்று மனு கேட்க,
“ம்ம் இப்போ கேட்கிற இதை இவ்வளோ நேரம் கழிச்சு..” என்றவள் “துபாய் போயிருக்கார்.. நெக்ஸ்ட் மன்த் வந்திடுவார்..” என,
“வந்ததுமே எங்கேஜ்மென்ட்.. செமல…” என்றாள் மானசா.
ராபர்ட் வேறாரும் இல்லை, செந்தமிழின் நெருங்கிய நண்பர் வில்லியம்ஸின் மகன். இவர்களின் எஸ்டேட்டிற்கு பக்கத்து எஸ்டேட். ராபர்ட் ஒற்றை பிள்ளை. சிறுவயதில் இருந்தே இரண்டு குடும்பத்திற்கும் நெருக்கம் அதிகம். ஆக தனுஜா ராபர்டின் காதல் பெரியவர்களுக்கு சந்தோஷம் தான் கொடுத்தது.
செந்தமிழுக்கு தனக்கு பின்னே தன் பெண்களை யார் கவனிப்பர் என்ற கவலை மறைந்து போனது..
இதோ அடுத்த மாதம் ராபர்ட் இங்கே வரவுமே தனுஜா ராபர்ட்டின் நிச்சய விழா.. ஊட்டியின் இரு பெரும் செல்வந்தர்களின் பிள்ளைகளின் நிச்சய விழா எப்படி நடக்கும்??!!
பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்கு செந்தமிழ் ஆட்களிடம் சொல்லியிருக்க, அதெல்லாம் தெரிந்தும் மானசா தனுஜாவை கேலி பேசிக்கொண்டு இருந்தாள்.
“சண்டே தானே.. சோ உனக்கு ப்ராப்ளம் இல்லை..” என்று தனுஜா சொல்ல,
“நான் என் பிரண்ட்ஸ் எல்லாம் இன்வைட் பண்ணனும் அவங்களோட தான் வருவேன்..” என்றாள் மானசா.
“உன்னோட விருப்பம் தான்..” என்று, அக்காவும் தங்கையும் பேசியபடி மீண்டும் வீடு வர, மானசாவின் மனதில் அந்த கோபங்கள், எரிச்சல்கள் இதெல்லாம் எதுவுமே இல்லை.
மாறாக மனது முழுக்க முழுக்க அடுத்த மாதம் வரும், தன் அக்காளின் நிச்சய விழாவை எதிர்நோக்கி நின்றது..
‘சித்து.. பாஸ்கி.. ஷில்பா.. எல்லாரையும் கூட்டிட்டு வரணும்..’ என்று இப்போதே அந்த சந்தோஷ கற்பனைகளுக்கு போய்விட்டாள் மானசா.

Advertisement