Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 7
“மனு வாட் இஸ் திஸ்… இப்படி வந்து நிக்கிற…” என்ற தனுஜாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை மானசா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பதை கண்டு.
ஏனெனில் அவள் சென்று நின்றது அதிகாலை பொழுதில். அதாவது காலை ஏழு மணி.. அப்போதுதான் அங்கே மேகங்கள் விலகி லேசாய் பகலவன் தன் இருப்பைக் காட்டத் தொடங்கியிருந்தான். அங்கே அதுதான் அதிகாலை பொழுது போல் இருந்தது.
தனுஜாவும், செந்தமிழும் அப்போது தான்  காலை நேர நடைப்பயிற்சி முடித்து வீட்டிற்கு வர, மானசா முன்னே இருந்த வராண்டா இருக்கையில் அமர்ந்திருக்க, இருவருக்கும் ஆச்சர்யம்.
“டேய்… மனு என்னடா..??” என்று அப்பா கேட்க,
“உங்க ரெண்டு பேரையும் பார்க்கனும்னு தோணிச்சுப்பா சோ..” என்று அவள் தோள் குலுக்க, அதற்குதான் தனுஜா அப்படிக் கேட்டது.
மானசா அவளை வித்தியாசமாய் பார்த்தவள் “எப்படி வந்திருக்கேன்..” என்று தன்னைத் தானே ஒருமுறை பார்த்துக்கொள்ள,
“மனு…” என்று தனுஜா முறைக்க,
“சரி சரி முதல்ல உள்ள வாங்க…” என்று வீட்டினுள்ளே சென்ற செந்தமிழ், தன் இரு பெண்களும் உள்ளே வருகிறார்களா என்று பார்க்க, அக்காவும் தங்கையும் இன்னும் உள்ளே வந்திருக்கவில்லை.
“பொண்ணுங்களா…” என்று அப்பா அழைக்கவும் தான் இருவரும் உள்ளே வர, மானசா வந்து சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.
தனுஜா அப்பாவைப் பார்க்க “விடு…” என்று சைகை செய்தவர், “மூர்த்தி டீ கொண்டு வா…” என, அடுப்படியில் இருந்து வெளியே எட்டிப்பார்த்த மூர்த்தி மானசாவும் இருப்பது கண்டு, மூவருக்கும் டீ கொண்டுவர, அப்பாவும் மகள்களும் அந்த தேநீர் பொழுதினை அமைதியாவே பருக,
தனுஜாவின் பார்வை முழுவதும் மானசா மீதுதான் இருந்தது.
“ம்ம்ச் ப்பா இவளப் பாருங்கப்பா…” என்று மானசா சிணுங்க,
“என்ன தனு…” என்றார் பெரிய மகளிடம்.
தனுஜாவும், மானசாவும் தோழிகள் போலத்தான் பழகுவர் என்றாலும், தனுஜாவிற்கு தொழிலில் பொறுப்புகள் ஏற்றுக்கொண்ட பிறகு அனைத்திலுமே சற்று அதிக பக்குவம் வந்ததாய் இருக்க, இப்படி மானசா சொல்லாமல் வந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதுவும் அவள் வந்த நேரம் வைத்து கணக்கிட்டு பார்க்க, முதல்நாள் அவள் இரவில் கிளம்பியிருக்கவேண்டும் என்று நினைத்தாள்.
“வரணும்னு சொல்லிருந்தா கார் அனுப்பிருப்போம்ல ப்பா.. நேத்து எப்போ கிளம்பினான்னு கேளுங்க.. அன்டைம்ல கிளம்பிருப்பா.. அப்படி என்ன வரணும்னு அவசரம்.. படிக்கிறது சர்டிபிகேட் கோர்ஸ்.. இதுல லீவ் போட்டு வேற வந்தாச்சு..” என்று முகத்தினை திருப்ப,
“ஹலோ… இப்போ என்ன?? சொல்லாம வந்தது தப்பா??” என்று கேட்டவள், இருவரும் அவளின் முகத்தினையே பார்க்கவும் “சரி இப்போ கிளம்புறேன்.. அங்க போய்ட்டு சொல்றேன்.. கார் அனுப்புங்க வர்றேன்…” என்று மறுபடியும் அவளின் பையை தூக்க,
தனுஜா தலையில் கைவைத்து விட, செந்தமிழுக்கு சிரிப்பை அடக்கிட முடியவில்லை.
இவள் எப்போதுமே இப்படிதானே….!!
“சரி மனு கிளம்பு..” என்றபடி அப்பா எழுந்துவிட,
தனுஜாவும் “ஆமா கிளம்பு நீ…” என்று சொல்லிவிட,
“ச்சே.. என்ன கொடுமையான உலகமடா இது..” என்று உலகையே பழித்தவள், மீண்டும் சோபாவில் விழ, மற்றவர்கள் எதுவுமே சொல்லாது அவரவர் அறைக்குச் சென்றுவிட்டனர்.
எப்போதுமே அங்கே இப்படித்தான். ஒரு இலகுவான சூழல் வீட்டினில் இருக்கும். கேலியோ கிண்டலோ இல்லை கோபங்களோ யார் வெளிப்படுத்தினாலும் மற்றவர்கள் பிறரின் உணர்விற்கு மதிப்புக் கொடுத்து ஏற்றுக்கொள்வர்.
‘நீ எப்படி இப்படி பேசலாம்..’ என்பது போன்ற கேள்விகள் வராது.
இப்போதும் மானசாவை ஏன் இப்படி வந்தாய் என்று அவர்கள் கேட்கவில்லை, சொல்லாமல் வந்திருக்கிறாயே என்கிற கேள்வி தான்.
அப்பாவும், அக்காவும் செல்லவும் மானசா சிறிது நேரம் அமர்ந்திருந்தவள், “ரீச்டு ஹோம்..” என்று ஷில்பாவிற்கு தகவல் அனுப்பிட,  அடுத்து சிறிது நேரத்தில் ஷில்பா அவளை அழைத்தேவிட்டாள்.
“சாரி சிப்ஸ்.. உன்னைமாட்டும் விட்டுட்டு நான் வந்திருக்கக் கூடாது…” என்று மானசா இப்போது வருந்த, அதற்கு அவள் என்ன சொன்னாளோ,
“ஓகே ஓகே.. நீ கிளாஸ் போய்ட்டு வந்து சொல்லு..” என்றுவிட்டாள்.
பேசியபிறகும் சிறிது நேரம் அங்கே இருந்தவள் “மூர்திண்ணா தயவு செஞ்சு வெண்பொங்கல் மட்டும் செஞ்சிடாதீங்க…” என்று சொல்லியபடி அவளின் அறைக்குச் செல்ல, அப்படியே அன்றைய காலை வேலை நகர்ந்தது.
ஏதோ ஒரு வேகம் கிளம்பிவந்துவிட்டாள் இங்கே. ஆனால் இப்போது தோன்றியது ‘அவன் திட்டினான்னு இப்படி கோவிச்சுட்டு வந்துட்டியே.. ஷில்பா பாவம் தனியா இருப்பாளே..’ என்று.
இப்போது தோன்றி என்ன செய்ய??!!
‘பேசாம நாளைக்கே கிளம்பிடுவோமா???’ என்ற யோசனையோடு குளித்து முடித்து கிளம்பி வெளியே வர, அப்பாவும் அக்காவும் தங்களின் அலுவலைப் பார்க்கக் கிளம்பிவந்து, இப்போ டைனிங் ஹாலில் அமர்ந்து உண்டுகொண்டு இருக்க, 
“என்ன இது??!!” என்றாள் இருவரையும் பார்த்து.
அவர்களின் தட்டில் அவள் செய்யாதே என்று சொல்லிச் சென்ற வெண்பொங்கலும் சாம்பார் சட்னியும் வடையும் அவளைப் பார்த்து சிரிக்க, மூர்த்தி அங்கே இருந்தவர்
“பாப்பா கேட்டுச்சு அதான்…” என,
“நான் செய்யவேணாம்னு தானே சொன்னேன்…” என்றாள் பிகுவாய்.
இதுவும் அவளின் வழக்கமே.. அவள் எது வேண்டும் என்று நினைக்கிறாளோ அதனை செய்ய வேண்டாம் என்று சொல்லிச் செல்வாள். தன் வாழ்வை வேறுமாதிரி ரசிப்பவள் ஆகிற்றே மானசா.
“வா வா வந்து சாப்பிடு…” என்று தனு அழைக்க,
“ம்ம் எதோ நீ சொல்றன்னு வந்து சாப்பிடுறேன்..” என்றவள், உண்ண அமரவும், மூர்த்தி பரிமாற
“நான் வந்திருக்கேன் எங்க கிளம்பி இருக்கீங்க நீங்க..” என்றாள் வாயில் பொங்கல் திணித்தபடி.
“நீ வரன்னு சொல்லிருந்தா எங்க வொர்க்ஸ் எல்லாம் ஷேடியுல் மாத்தி இருப்போம்..” என்று செந்தமிழ் சொல்ல,
“ஓ…!! அப்படி சொல்றீங்களா நீங்க..” என்றவள், பின் அமைதியாய் உண்ண, மனதெல்லாம் அங்கே கல்லூரியில் என்ன நடக்கிறதோ என்று இருந்தது.
அன்றைய தினம் காலை நேர வகுப்பு என்று அவளுக்குத் தெரியும். அதுவும் சித்திரைச் செல்வனின் வகுப்பு என்றும் தெரியும், இல்லையென்றாலும் அவன் வீம்புக்கென்றே அவன்தான் வந்து நின்றிருப்பான் என்பதும் தெரியும்.
தான் வரவில்லை என்றதும், அவன் என்ன நினைப்பான், என்று தெரிந்துகொள்ள மனது பரபரத்தது.  
தான் ஊருக்கே வந்துவிட்டேன் என்று தெரிந்தால் அப்போது என்ன நினைப்பான்..?? இதெல்லாம் யோசனையாய் மனதிற்குள் ஓட, அவள் கை தட்டிலேயே நின்றுவிட, தனுஜா அதனைப் பார்த்தவள்
“சாப்பிடு..” என,
“ம்ம் ம்ம்…” என்று தலையை ஆட்டியவள், உண்ணத் தொடங்கினாள்.
எப்போதும் அப்பாவும், அக்காவும் காலை ஒன்பது மணிக்கே கிளம்பும் ஆட்கள். இப்போது மதியம் ஆகியும் கிளம்பாது வீட்டினில் இருந்து அலுவலைக் கவனித்துகொண்டு இருக்க, தனக்காக இருக்கிறார்கள் என்று மானசாவிற்கும் புரியாது இல்லை.
“ஆமா என்ன ரெண்டு பேரும் இங்கயே இருக்கீங்க..” என்று கேட்க,
“நெக்ஸ்ட் வீக் அப்பாவோட பர்த்டே.. சோ வொர்கர்ஸ்கு போனஸ் கொடுக்க ப்ளான் பண்ணிட்டு இருக்கோம்.. அதான் என்ன எப்படின்னு…” என்று தனுஜா சொல்லும்போதே,
“ஓஹோ… அப்போ என்னை எல்லாம் கேட்க மாட்டீங்களா என்ன செய்யனும்னு.. நானும் ஒன் ஆப் தி ஷேர் ஹோல்டர் மா..” என்று கைகளை மானசா விரிக்க,
“அடடா…” என்ற செந்தமிழ், “ரெண்டு பேரும் என்ன செய்யணுமோ அதை டிசைட் பண்ணுங்க…” என்று ஒரு பெரிய கணக்கு லெட்ஜரை அங்கிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு எழுந்துவிட்டார்.
தனுஜா சிரிக்க “ப்பா இவ்வளோ பெரிய நோட்டெல்லாம் கொடுத்தா அதெல்லாம் முடியாது…” என்று மானசா சொல்ல,
“யூ ஆர் ஒன் ஆப் தி ஷேர் ஹோல்டர்மா இதெல்லாம் பழகனும்..” என்று அவள் தோளில் தட்டிவிட்டு செந்தமிழ் சென்றுவிட,
“போச்சுடா..” என்று சலிப்பது போல் சலித்துக்கொண்டாள்.
அப்பா செல்லவும், தனுஜா அவள் கையில் இருந்த லெட்ஜரை மூடி வைத்தவள் “ம்ம் இப்போ சொல்லுங்க மானசா மேடம் என்ன பிரச்னை அங்க??” என,
“என்ன பிரச்னை ??” என்றாள் ஒன்றும் அறியாதவள் போல.
“மனு… ஐ க்னோ அபௌட் யூ.. சோ சொல்லு.. யாரோட சண்டை போட்டு வந்திருக்க..” என்று தனுஜா சரியாய் பிடித்துக் கேட்க,
“ஆமா என்னைப் பார்த்தா எப்போ பார் சண்டை போடுறதுபோல இருக்கா ??” என்றாள் மானசா.
“சரி சண்டை இல்லை.. பின்ன என்ன ப்ராப்ளம் அங்க..”
“நத்திங்..” என்றவள் முகத்தினை திருப்பிக்கொள்ள,
“ம்ம் ஓகே.. அப்போ நெக்ஸ்ட் வீக் வரைக்கும் இருப்பியா ??” என்றாள் தனுஜா.
மானசா எதுவும் சொல்லாது இருக்க, “த்ரீ மன்த்ஸ் கோர்ஸ்ல இப்படி அடிக்கடி லீவ் போட முடியாது இல்லையா மனு..” என,
“அப்பா பர்த்டே சாட்டர்டே தானே வருது.. சோ ஃப்ரைடே கிளம்பி வருவேன்..” என்றாள் மானசா.
“ம்ம் ஓகே.. நீ ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடு.. நான் எஸ்டேட் ஒரு ரவுண்ட்ஸ் போய்ட்டு வர்றேன்…” என்று தனுஜாவும் கிளம்பிட, வீட்டினில் போர் அடித்தது அவளுக்கு.
சிறிது நேரம் உறங்கி எழ, எழுந்ததுமே நேரம் பார்த்தாள். மாலை ஐந்து மணி. ‘அச்சோ தூங்கிட்டோமே..’ என்று நினைத்து அறையை விட்டு வெளிவர, அப்போதும் அங்கே அப்படியொரு அமைதி.
டைனிங் ஹால் செல்ல, அங்கே இவள் மட்டுமே உண்ண வேண்டும் என்பதற்கு அடையாளமாய் உணவுகள் எல்லாம் சிறு கிண்ணங்களில் எடுத்து வைத்திருக்க, அவளும் தட்டில் போட்டுக்கொண்டு அமர,
“நல்லா தூங்கிட்டு இருந்த மனு அதான் எழுப்பல..” என்றபடி வந்தார் அப்பா.
“ஓகே ப்பா.. நீங்கல்லாம் எப்போ வந்தீங்க…” என்று கேட்டுக்கொண்டே உண்ண,
“இன்னும் கொஞ்சம் காய் போட்டுக்கோ…” என்று செந்தமிழ் அவளுக்கு எடுத்து வைக்க,
“உக்காருங்கப்பா..” என்று இருக்கையை காட்டினாள்.
செந்தமிழும் அமர்ந்தவர் “சோ எப்படி டா இருக்கு அங்க..” என, அவளுக்குத் தெரியும் அக்கா கேட்டதையே அப்பா அவரின் விதத்தில் கேட்கிறார் என்று.
“சூப்பார் பிளேஸ் ப்பா..” என்றவள், தட்டில் கவனம் செலுத்த,
“ஓகே.. கோர்ஸ் எப்படி கம்ப்ளீட் பண்ணிடுவியா??” என்று அடுத்த கேள்வி கேட்க,
“ப்பா…!!” என்று சத்தமாய் விளித்தவள், “என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா??” என,
“ஹா ஹா ஹா…” என்று சிரித்தவர் “பின்ன கிளாஸ் எடுக்கிற வாத்தியார் கூட கோவிச்சிட்டு இப்படி வந்து இருக்கியே…”  என்று சொல்லவும் மானசாவின் முகம் அஷ்டகோணல் ஆகியது.
கையில் இருக்கும் உணவு வாயில் இறங்கவில்லை.. அப்படியே இருக்க,
“சாப்பிட்டு வா..” என்று அவர் காத்திருந்தார்.
ஆனால் இனி மானசாவால் சாப்பிட முடியுமா என்ன?? யார் சொன்னார்கள் ?? என்ன சொன்னார்கள் ??
‘அடியே சிப்ஸ்.. போட்டுக் கொடுத்துட்டியா??’ என்று எண்ணம் போக, ‘இருக்காதே அப்பா நம்பர் அவக்கிட்ட இல்ல.. அவ நம்பரும் அப்பாக்கிட்ட இல்ல..’ என்று அடுத்து நினைக்க,
“ மிஸ்டர். சித்திரைச் செல்வன் என்னோட பேசினார்…” என்ற செந்தமிழின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுள் பேரிடி போல் தான் இறங்கியது.
‘வாட்??!!!!’ என்று அவளின் நெஞ்சம் பெரிதாய் அதிர, மானசாவின் கண்கள் தன்னைப்போல் விரிய,
“ப்பா..!!!” என்று இதழ்கள் சத்தமே இல்லாது முனுமுனுக்க,
“உனக்கு கால் பண்ணிருக்கார்.. உன்னோட போன் சுவிட்ச் ஆப்.. சோ ஆபிஸ்ல கேட்டு எனக்கு கால் பண்ணிருக்கார்…” என,
“அ.. அது… போன்ல சார்ஜ் இல்லப் போலப்பா…” என்று திணறினாள்.
“ம்ம் போனுக்கு சாப்பாடு போடு..” என்றவர், “சாப்பிட்டு என்னோட போன்ல இருந்தே பேசு..” என்று அவரின் அலைபேசியை அவளிடம் வைக்க,
“இல்ல நான் அப்புறம் பேசிக்கிறேன்..” என்றாள் இப்போது கொஞ்சம் தைரியம் வரப் பெற்றவளாய்.
“மனு..!!!” என்று அப்பாவின் குரல் அடுத்த நொடி மாற,
“இப்போவே பேசுறேன்..” என்று இடக்கையால் அலைபேசியை எடுக்க, “சாப்பிட்டு பேசுன்னு சொன்னேன்..” என்றார்.
வேறு வழியில்லை இல்லையா..??!!
ஆகா அவசர அவசரமாய் உண்டவள், அவரின் அலைபேசியை எடுக்கப் போக, அதற்குள் செந்தமிழே எடுத்தவர், சித்துவிற்கு அழைப்புவிடுத்து இவளிடம் நீட்ட அப்பாவின் முன்னம் மிக மிக பவ்யமாய் பேசும் நிலை.
“ஹலோ சர்…” எனும்போதே அவளின் மனது ‘எந்தா சாரே…’ என்றது.
சித்திரைச் செல்வனுக்கு அவள் ஹலோ சொல்லிய விதத்திலேயே சிரிப்பினை அடக்க முடியவில்லை.
‘இங்க என்னம்மா சவுண்டு விட்டுட்டு அங்க போயி இப்படி அடக்கி வாசிக்கிறா..’ என்று எண்ணியவன் “கிளாஸ் வர ஐடியா இருக்கா??” என,
“அ.. நா.. நாளைக்கு கிளம்பிடுவேன் சர்..” என்றாள் வேகமாய் அப்பாவினைப் பார்த்தபடி.
அவளின் பேசும் விதமும், தொனியும் வைத்தே சித்துவிற்கு புரிந்தது அருகினில் அவளின் அப்பா இருக்கிறார் என்று.
“ஓகே.. கொஞ்சம் பொறுப்பா இருக்க பாரு..” என்றுமட்டும் சொன்னவன், அழைப்பை துண்டித்துவிட,
“ஓகே சர்..” என்றவள், “பேசிட்டேன்.. போதுமா..” என்று சொல்லி அப்பாவிடம் கொடுத்துவிட்டு வேகமாய் அவளின் அறைக்குச் சென்றுவிட்டாள்.
‘ஹ்ம்ம்..’ என்று தலையை இடமும் வளமுமாய் ஆட்டிய செந்தமிழ், அவரின் வேலையைப் பார்க்கச் செல்ல, மானசா வேகமாய் அவளின் அலைபேசியை உயிர்ப்பித்துப் பார்க்க, சார்ஜ் எல்லாம் போகவில்லை, இவள் தான் வேண்டும் என்றே அமர்த்தி வைத்திருந்தாள் ஒருவேளை அவன் அழைத்தால் என்ன செய்வது என்று.
ஆனால் சித்திரைச் செல்வனோ அவளின் அப்பாவிற்கே அழைப்பான் என்று தெரிந்திருந்தால், மானசா ஏன் அலைபேசியை அமர்த்தி இருக்கப் போகிறாள்.
‘என்ன தைரியம்.. என்னை அவ்வளோ பேசிட்டு இப்போ கூலா அப்பாக்கு கால் பண்ணி பேசி.. அதுவும் என்னை அப்படி பவ்யமா வேற பேச வச்சு..’ என்று மனதினில் கடிந்துகொண்டு இருந்தவளின் விரல்களும் இதனை அப்படியே டைப் செய்திருக்க, ட்ரூ காலரில் அவனின் எண் என்று காட்டிய எண்ணிற்கு அனுப்பியும் விட்டாள்.
யோசிக்கவெல்லாம் இல்லவே இல்லை..
அவன் ஆசிரியன் என்ற நினைவும் இல்லை..
வேக வேகமாய் மூச்சுக்கள் வெளிவர, மனதினில் என்ன என்ன எல்லாம் அவனை திட்ட வேண்டும் என்று நினைத்துகொண்டு இருக்கிறாளோ அதெல்லாம் எழுத்து வடிவத்தில் அவனுக்கு போய் சேர்ந்துகொண்டே இருக்க, அதனை எல்லாம் ஒவ்வொன்றாய் படித்து அப்படியொரு சிரிப்பினில் கண்ணில் நீர் வர அமர்ந்திருந்தான் சித்திரைச் செல்வன்.
அவனின் இறுக்கங்களை தகர்த்திய புன்னகை அது..!! 

Advertisement