Advertisement

                          
                        கொஞ்சும் ஏழிசை நீ – 28
ஜெர்மன் பயணம் நிச்சயம் ஏதோ ஒரு மாற்றம் கொடுக்கும் என்று நினைத்தான் சித்திரைச் செல்வன். ஆனால் அது இப்படியொரு மாற்றம் என்று எதிர்பாக்கவே இல்லை. யாரை தன் மனதினில் சுமக்கிறானோ, யாரை நேரில் காணும் திராணி அற்று இருக்கிறானோ, அவளே இன்று அவன் கண்ணெதிரில்.
கிஞ்சித்தும் நம்பிட முடியவில்லை…!!
அவளைக் கண்டதுமே, வேகமாய் அவளிடம் செல்ல மனம் துடிக்க, கால்களோ வேரோடிப் போனது போல் ஒரே இடத்தினில் நின்றுவிட்டது. இமைகள் துடிக்கவும் மறந்து, அவளைப் பார்த்துக்கொண்டு இருக்க,
“மனு லீவ் மீ ப்ளீஸ்..” என்று அவளின் கையினில் இருக்கும் சிறுமி மேலும் குரல் உயர்த்த,
“நோ வே..! வா என்னோட…” என்று பிடிவாதமாய் நடந்து வந்தாள் மானசா..
அவள் நடக்கும் போது எப்போதும் இருக்கும் துள்ளல் இப்போதில்லை, மாறாக இப்போது ஓர் நிமிர்வு. ஒரு திடம்.. திமிர் என்றுகூட சொல்லலாம்.
“டாடி…” என்று அந்த சிறுமி பின்னே வந்த டேவிட்டை நோக்கி குரலை உயர்த்த,
“ஐம் சாரி பேபி…” என்றான் அவன்..
“நீ யாரைக் கூப்பிட்டாலும் சரி.. உன்னை விட மாட்டேன்.. வா வா வந்து நான் சொல்றதை அப்படியே சொல்லு…” என்றவள் பிடிவாதமாய் அங்கிருக்கும் ஒரு கல் பெஞ்சினில்  அமர, உதட்டினை பிதுக்கி அக்குழந்தை அழத் தொடங்க,
“தமிழ்ல பேசுன்னு சொன்னா கேட்கிறியா நீ.. இல்லன்னா டெய்லி இப்படித்தான் செய்வேன்.. வா..” என்று அவள் ஆரம்பிக்க, பாவமாய் டேவிட்டை அந்த சிறுமி பார்க்க,
“கொஞ்ச நேரம் பேபி…” என்றான் டேவிட், மகளை சமாதானம் செய்யும் விதமாய்.
“நீ போ.. கிளம்பு.. உன்னை யார் வர சொன்னா இப்போ..” என்று மானசா, டேவிட்டை துறத்த,
“நோ நோ..” என்று குழந்தை இறுக்கமாய் அவனின் கரம் பற்றிக்கொள்ள,
“மனு.. அவளை கொஞ்சம் ப்ரீயா விடேன்..” என்று அவனும் சொல்ல,
“ஓகே.. தென் நீயே பார்த்துக்கோ.. நான் எதுவும் சொல்லலை..” என்று எழுந்தவள் “நீயாச்சு இவளாச்சு..” என்று இருவரின் முன்னமும் ஒரு முறைப்பை சிந்திவிட்டு, வேகமாய் எட்டுக்கள் வைத்து நடந்து செல்ல,
“மனு.. ப்ளீஸ்.. நில்லு…” என்று சொல்லியபடி அந்த சிறுமி வேகமாய் பின்னே ஓடி வந்தாள்.
அவள் பின் வருவது தெரிந்ததும், நின்றவள், பின் இன்னும் வேகமாய் நடையை கூட்டினாள்.
“மனு.. நில்லு… நில்லு..” என்று வேகமாய் ஓடிவந்து அவளின் கால்களை இறுக கட்டிக்கொண்டாள்.
“ஹா ஹா ஹா.. அப்படி வா நீ…” என்று அவளைத் தூக்கிக்கொண்டவள், “இப்போ மட்டும் எப்படி வருது உனக்கு..” என்று சொல்லி செல்லம் கொஞ்ச, இவை அனைத்தையும் சித்து கண்களை இடுக்கி பார்த்துக்கொண்டு இருந்தான்.
மானசாவும், அக்குழந்தையும் செல்லம் கொஞ்சிக்கொண்டே, மீண்டும் அங்கிருக்கும் கல் பெஞ்சினில் வந்து அமர, திடீரென்று மானசா சுற்றி சுற்றி பார்வையை திருப்பினாள்.
“வாட் ஹேப்பன் மனு..” என்று டேவிட் கேட்கவும்,
“இல்ல யாரோ பார்த்த மாதிரி இருக்கு..” என்று அவள் சொல்ல, சித்து சற்றே தன் உருவத்தை மறைத்துகொண்டன்.
இப்போதும் அவளின் எதிரில் சென்று நிற்கவோ, அவளை நேருக்கு நேர் காணவோ அவனுக்கு தைரியம் இல்லை. அவள் இங்குதான் இருக்கிறாள் என்பது ஒரு பெரும் ஆசுவாசம் கொடுத்தாலும், டேவிட் அவளருகே இருப்பதனைக் கண்டு சற்று நெருடலாகவும் இருந்தது.
திருமணம் ஆகியிருக்குமோ..??!!
ஆகியிருந்தால் என்ன செய்வது?? இல்லையென்றால் என்ன செய்வது??
அவனால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.
‘டேய் சித்து.. இன்னும் என்னடா.. நீ இவ்வளோ தூரம் வந்ததே இவளைப் பார்க்கன்னு நினைச்சுக்கோ.. இன்னும் ஏன் தயக்கம்.. இன்னும் ஏன் யோசனை…?? போ போ.. போய் அவளோட பேசு… என்னவா இருந்தா என்ன?? போ போய் பேசு..’  என்று அவனை போட்டு உந்த,
சித்திரைச் செல்வனுக்கு அப்போது அவனின் உடல் பாரமே தாங்க முடியாதது போல் இருக்க, அப்படியே தொய்ந்து அமர்ந்து போனான்.
‘போடா போய் அவ முன்னாடி நில்லு..’ என்று அவனின் காதல் அவனை மேலும் மேலும் படுத்த,
‘எப்படி போய் நிப்பேன்.. என்ன சொல்வேன்?? இல்ல என்ன கேட்பேன்…’ என்று தவித்தான்.
‘டேய் கிறுக்கா அப்போ உனக்குன்னு எதுவும் இல்லாம இருந்திருக்கலாம்.. ஆனா இப்போ அப்படியில்லை… அவளை உன்னால நல்லா பார்த்துக்க முடியும்… அந்த நம்பிக்கை முதல்ல நீ வை…’
‘அவளுக்கு கல்யாணம் அகிருந்தா??’
‘டேய் முட்டாள்.. நீ இங்க வரணும் அவளை பார்க்கணும்ங்கறது உன்னோட விதி.. அதை நம்பு… கண்டிப்பா அவ உனக்குத்தான்… சொதப்பி வைக்காத…’ என,
‘இல்ல என்னால முடியாது.. அவ கேள்வியா பார்த்தா கூட என்கிட்டே பதில் இல்லை..’ என்று சோம்பினான்.
‘நீ தேரமாட்ட…’ என்று அவனின் உள்ளே இருந்தே குரல் வர,
“சித்து…” என்ற குரலும் வீட்டினில் ஒலிக்க, வேகமாய் எழுந்தவன், தன் முகத்தினை அழுந்தத் துடைத்து சீராக்கி “யா நீல்…” என,
“ஓ இங்க இருக்கீங்களா.. ரெஸ்ட் எடுத்திருக்கலாமே..” என்றபடி வந்தான்.
“ஜஸ்ட் வெளிய கிட்ஸ் பார்த்தேன்..”
“ஓ… எஸ்.. இங்க நின்னு பார்த்தா டைம் போறதே தெரியாது…” என்றபடி நீலும் அங்கிருந்தே வெளியே வேடிக்கைப் பார்க்க, அதற்குமேல் சித்திரைச் செல்வனுக்கு அங்கே நிற்க முடியவில்லை.
அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது..!! அதற்கு சிறிது தனிமையும் தேவை தானே..!!
“ஓகே நீல்.. நீட் சம் ரெஸ்ட்..” என,
“ஓ..!! யா..” என்று அவன் முன்னே கரம் நீட்டியவன், நடக்க, பின்னோடு சித்துவும் வந்து, அங்கிருந்த கட்டிலில் சாய்ந்துகொண்டான். அப்போதுதான் வீட்டிற்கு அழைத்து பேசவேண்டும் என்று தோன்ற “நீல்…” என்று திரும்ப அழைக்க,
வந்தவன் “வீட்டுக்கு பேசணுமா??” என்று கேட்டு அவனே, இவன் எண்கள் சொல்லவும் அழைத்தும் கொடுத்துவிட, அடுத்த சில நொடிகள் அப்பாவினோடும் அம்மாவினோடும் தான் பேச்சு போனது.
பேசி முடித்து, சற்று நேரம் அமைதியாகவே பொழுதினை கழிக்க, நீல் அவனின் அறையினில் என்ன செய்கிறானோ தெரியவில்லை. வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தமும், கதவு திறக்கும் சத்தமும் கேட்க, யாரோ என்று இவன் உள்ளேயே இருந்துகொள்ள,
“ஹேய்… நீல்…” என்ற குரலில் தூக்கி வாரி போட்டது சித்துவிற்கு.
‘மானசா…’ என்று அவன் மனக்கண் விழித்துக்கொள்ள, “இதோ நீ கேட்ட திங்க்ஸ்.. தென் கெஸ்ட் வந்தாச்சா??” என்று அவள் அங்கே எதையோ கொடுத்துக்கொண்டே, கேள்வி கேட்க,
‘தான் வருவது தெரியுமா??’  என்று நினைக்கும் போதே தூக்கிவாரிப் போட்டது.
“யா மனு..!! ஹி இஸ் ஸ்லீபிங்..” என்று நீல் சொல்ல,
“ஓகே டுமாரோ போறப்போ சொல்லு..” என,
“கண்டிப்பா…” என்று நீலும் பேசிக்கொண்டு இருக்க, 
‘இவளிடம் என்ன சொல்ல வேண்டும்??’  நினைக்கும் போதே, அவனுக்கு மயக்கம் வருவது போல் தான் இருந்தது.
தான் இங்கு வருவது, இங்கிருப்பது எல்லாம் தெரியுமா ?? தெரிந்தும் அவள் எதுவும் நினைக்கவில்லையா?? ம்ம்ஹும் இதற்குமேல் எல்லாம் இப்படி இருந்திட முடியாது.. படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்துவிட,
“போடா டேய்.. போய் அவ முன்னாடி போய் நில்லு…” என்று உள்ளிருந்து ஓர் உணர்வு அவனை போட்டு தள்ள, யோசிக்காது வெளி செல்ல, சரியாய் அதே நேரம் மானசா அங்கிருந்து வெளியேறிக்கொண்டு இருந்தாள்.
நீல் கதவினை அடைத்துவிட்டு உள்ளே வந்துகொண்டு இருக்க, இவனோ ஆணி அடித்தது போல் நிற்பது பார்த்து “வாட் ஹேப்பன்??” என்று அவன் கேட்க,
“ந… நத்திங்…” என்றான் வேகமாய் மூச்சுக்கள் விட்டு.
அன்றைய தினம் முழுமைக்கும் அவனுக்கு அப்படியே ஒருவித நெஞ்சடைத்த உணர்வு தான். நேர மாற்றம் ஒருபுறம் இருக்க, வந்த முதல்நாளே மானசா அவனின் கண்ணில் பட்டு, வந்ததுமே அவனுள் ஒரு பூகம்பம் கொடுத்துவிட்டாள். 
நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து, இரவு வந்து, பொழுது விடிந்து, இவர்கள் கிளம்பும் நேரமும் வர, சித்திரைச் செல்வனுக்கு சரியாய் எல்லாமே மறந்து போனதாய் தான் இருந்தது.
‘காட்.. நான் அங்க போறதுக்குள்ள ஒன்ஸ் மனுவ கண்ணுல காட்டு..’ என்று வேண்டியபடி இருக்க,
நீல் வந்து “போலாமா??” என, பின் இருவரும் கிளம்பி லிப்டினில் வர, கீழிறங்கும் அடுத்த தளத்தில் ஒருமுறை லிப்ட் நிற்க, யாரோ வருவர் என்று சித்து அசால்ட்டாய் நிற்க, உள்ளே வந்தது மானசா..
அதுவும் அவனை நேரே ஒரு பார்வை பார்த்தபடி..
அடுத்த நொடி, சித்திரைச் செல்வனுக்கு சுவாசம் நின்றுபோனது போல் தான் இருந்தது. இல்லை சுவாசிக்க மறந்தானோ தெரியவில்லை.
“ஹாய்..” என்று நீல் சொன்னவன் “மனு ஹி இஸ் சித்திரைச் செல்வன்..” என்று இவனை அறிமுகம் செய்ய,
‘என்ன சொல்லப் போகிறாள்..??’ என்ற ஆவலோடு அவன் காண “ஹாய்…” என்றாள் தெரியாதவரை காணும் பாவனையில்.
‘சோ நான் வருவேன்னு தெரிஞ்சிருக்கு..’ என்று அவன் நினைக்கும் நொடியே அவள் நீலோடு எதுவோ பேசியபடி வர,
‘என்னை பார்த்து இவ்வளோ தான் இவளோட ரியாக்ஸனா??’ என்று அதிர்ச்சியை போனது அவனுக்கு..
‘நான் தான்னு தெரிஞ்சதா இல்லையா?? ஹாய்னு சொல்லிட்டு திரும்பிட்டா.. மனு.. ஏய் மனு…’ என்று அவன் உள்ளம் கத்த, அவளோ அடுத்து இவனொருவன் இருக்கிறான் என்ற எண்ணம் கூட இல்லாது சலசலத்துக்கொண்டு வர, சித்திரைச் செல்வனின் பார்வை அவளை ஆராய்ந்தது.
முன்னே எப்படி இருந்தாலோ அப்படித்தான் இருந்தாள். என்ன இன்னும் நிறம் கூடியிருந்தாள். முடியை  இன்னும் சிறியதாய் வெட்டியிருந்தாள் தோள் வரைக்கும் தான் இருந்தது. காதில் முன்னமே சின்னதாய் ஒரு தோடு வைத்திருப்பாள் இப்போது அதைவிட இன்னும் சிறியதாய் ஒற்றை கல் காதினில் இருக்க, உடைகள் மட்டும் சற்று மாறியிருந்தது.
ஆனால் ஒன்றே ஒன்று முன்னிருந்ததை விட இப்போது அவளிடம் ஒரு நிதானம் வந்திருந்தது..
‘இல்ல.. என்னை பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு அவளே எல்லாம் ப்ளான் பண்ணிருப்பா..’ என்று சித்து நினைக்க, அதற்குள் தரைதளம் வந்துவிட, அடுத்து நேரம் போனதே தெரியவில்லை.
மானசா அடுத்து அவனை கண்டுகொள்ளவே இல்லாது விட, அவனுக்கும் ஒரு கோபம் வந்துவிட்டது ‘போ டி..’ என்று எண்ணியவன், தன்னை திடப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு தான் எப்படி அங்கே நடந்துகொள்ள வேண்டும் என்ன பேசிட வேண்டும் என்பதனை மனதினில் ஓட்டிப் பார்த்துக்கொண்டான்.
முனீச் பல்கலைகழகம், உள்ளே நுழையும் போதே பிரம்மிப்பாய் இருந்தது.. ‘அம்மாடியோ…!!!’ என்ற உணர்வு தான்..
அதனை வெளிக்காட்டிக்கொள்ள முடியுமா என்ன??!!
‘கூல் சித்து… பி ரிலாக்ஸ்..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.
இவர்களோடு மானசாவும் வந்தவள், பல்கலைகழகம் உள்ள சென்று சிறிது நேரத்தில் “ஓகே நீல் சீ யூ லேட்டர்…” என்றவள்,
“பை…” என்று சித்துவையும் பார்த்து சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.
‘என்ன திமிரா  போறா..??’ என்றுதான் அவனுக்கு நினைக்கத் தோன்ற, முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டான்.
அதெல்லாம் சிறிது நேரம் தான். பின் நீல் இவனை அங்கு ஏற்பாடு செய்யபட்டிருக்கும் கருத்தரங்கு பொறுப்பாளருக்கு அறிமுகம் செய்து வைக்க, பின் அங்கே சுற்றி பார்க்க, அவர்களின் ஆராய்ச்சி கூடம் பார்த்து வர என்று நேரம் போனதே தெரியவில்லை.
ஏதோ ஒரு புதிய உலகிற்குள் வந்தது போலிருந்தது.
‘ஆறு மாத சிறப்பு வகுப்பு..’ நிஜமாகவே இவனுக்கு நிறைய புதிய விசயங்களை கற்றுக்கொள்ள உதவும்.. அது திண்ணமாய் தோன்றியது..
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாய் அங்கே பொழுது கழிய, மதிய உணவும் அங்கேதான்.  சித்திரைச் செல்வனுக்கு வாயில் வைக்க முடியவில்லை. இருந்தும் என்ன செய்ய?? முகத்தினில் எதனையும் காட்டாது இருந்துகொண்டான்.
உணவு மட்டுமே சிறிது கஷ்டம் என்று தோன்றியது…!!
அதனை விட கஷ்டம் எல்லாம் எத்தனையோ இருக்கிறதே..!!
நீல் இவனோடே இருக்க, ஒவ்வொன்றும் அவன் தான் அனைத்தையும் எடுத்து சொன்னான். சிலர் பேசுவது சித்திரைச் செல்வனுக்குப் புரியவும் இல்லை. முதல் நாள் தானே ஆக, கொஞ்சம் திணறல் இருந்திடத் தான் செய்தது..
இன்னும் ஆறு மாதங்கள் என்று நினைக்கையில், பெறும் தூரமாய் தோன்ற, அவள் இங்குதானே இருக்கிறாள் என்று எண்ணுகையில் ஒரு நிம்மதியும் சேர்த்தே பிறந்தது.
மதியத்திற்கு மேலே “உங்களை விட்டுட்டு அகைன் நான் வரணும்…” என, இவன் புரியாது பார்த்தான்.
“ஓ..!! சாரி… நான் சொல்லவே இல்லைதானே.. மீ அண்ட் மனு ஆர் ரிசர்ச் ஸ்டூடன்ஸ் ஹியர்..” என்று சொல்ல,
‘அப்.. அப்போ அந்த டேவிட்.. அந்த குழந்தை…??’ என்று வேகமாய் அவன் யோசிக்க,
“உங்களுக்கு ஹெல்ப் பண்றது எங்களுக்கு அலாட் பண்ண ஸ்பெஷல் வொர்க்..” என,  ‘சோ எல்லாமே முன்னாடியே இவளுக்கு தெரியும்…’  என்று எண்ணிக்கொண்டான்.
நீல் வந்து அவனை விட்டுச் செல்ல, இங்கே பூட்டிய வீட்டிற்குள் தான் மட்டும் என்ன செய்வது என்ற யோசனை. புதிய இடம் இன்னும் பழகவும் இல்லை தானே.
“போர் அடிச்சா ஜஸ்ட் வாக் போயிட்டு வர்றேன்..” என்று நீலிடம் சொல்லியும் இருக்க,
“யா… ஏரியா மேப்..” என்று ஒரு மேப்பினை கொடுத்துவிட்டு சென்றான்.
அரை மணி நேரம் என்று அவனாய் கணக்கிட்டு வெளி செல்ல, ஆனால் திரும்ப அவன் வருவதற்குள் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஆகியது. வீடு வந்து பார்த்தாளோ மானசா நீலோடு எதனையோ சீரியசாக பேசிக்கொண்டு இருக்க, உள்ளே வந்தவனுக்கு ஒரு தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
“கம் கம்…” என்று நீல் அழைக்க,
மானசா “இதெல்லாம் செக் பண்ணிக்கோ நீல்.. தென் இதெல்லாம் டாபிக்ஸ்..” என்று கையில் இருக்கும் ஒரு பைலை காட்டி பேசிக்கொண்டு இருக்க, அவனொருவன் இருப்பதை அவள் சட்டையே செய்யாது இருப்பது, அப்படியொரு கோபம் கொடுத்தது சித்திரைச் செல்வனுக்கு.
அவள் கண்களில் கூட சிறிது அதிர்வு தெரியவில்லையே…!!!
புதியவனை காணும் பாவனை கூட இப்போதில்லை. இதோ இங்கிருக்கும் இருக்கைகள், டேபிள் இதனை போல நீயும் ஒருவன் அப்படித்தான் பார்த்துவைக்க, அது அவனுக்கு பொறுக்குமா என்ன??
அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து பார்க்கையில், எதுவுமே அவளுக்கு தோன்றவில்லையா என்று தவியாய் தவிக்கத் தொடங்கியது அவனுக்கு.
எத்தனை நேரம் இப்படியே இருக்க முடியுமா?? அவளிடம் இப்போது கேட்க நிறைய கேள்விகள் இருந்தது. கேட்டிட வேண்டும் என்று துடியாய் துடிக்க, நீல் என்ன நினைப்பானோ என்று அப்போது தான் பார்வையை நீல் பக்கம் திருப்ப, அவனோ எங்கோ கிளம்ப தயாராகி வந்து கொண்டு இருந்தான்.
மானசா இன்னும் அங்கே தான் அமர்ந்திருக்க “சீ யூ லேட்டர்…” என்றுவிட்டு நீல் கிளம்பிட, மானசா கையில் இருந்த டேப்பில் மூழ்கியிருந்தாள்.
‘கிளம்புவாளா மாட்டாளா??’ என்று பார்த்து நிற்க, டேப்பில் இருந்து பார்வையை அவன் மீது திருப்பியவள், அவன் அவளையே பார்ப்பது கண்டு மீண்டும் டேப்பில் பார்வை பதிக்க,
பொறுக்காது “மனு…” என்றுவிட்டான்.
“எஸ்…” என்று அவனைப் பார்த்தவள் “ஐம் மானசா செந்தமிழ்…” என்று சொல்ல, அதிலேயே அவனின் பல கேள்விகளுக்கான பதில் இருந்தது.

Advertisement