Advertisement

            கொஞ்சும் ஏழிசை நீ – 19
மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது.
இருவருக்கும் விலகும் எண்ணமும் இல்லை, இது தவறென்றும் தோன்றிடவில்லை. விருப்பங்கள் விளைந்த பின்னே இதிலென்ன தவறு என்பது மானசாவின் எண்ணமாய் இருக்க, சித்திரைச் செல்வனுக்கோ இவை எல்லாம் தன்னை மீறி நடக்கும் ஒன்றாகவே இருந்தது.
அவளின் கன்னம் பற்றியதில், சித்திரைச் செல்வனின் விரல் தடம் கூட பதிந்திருக்கும் போல, அப்படி இறுக பற்றியிருந்தான். மானசாவின் இரு கரங்களும் சித்திரைச் செல்வனின் கழுத்தினை கோர்த்திருக்க, இருவரின் உடலும் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது..
இதயம் இரண்டும் நெருங்கிய பின்னே, இதழ்களும் உறவாடிய பின்னே இதற்குமேலும் என்ன இருக்கிறது??!!
‘உண்மைய சொல்லிடு சித்து…’ என்று அவனின் மனது உரக்கச் சொல்ல,
“எந்தா சாரே…” என்று ஆவலாய் மானசா அவன் முகம் பார்க்க,
“ம்ம்..” என்றவன், அவளின் நெற்றியில் தன் நெற்றி முட்டி அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.
‘மறுக்காதே… மறைக்காதே…’ என்று சித்திரைச் செல்வனுள் பெரும் சப்தம். அவனுக்கு வேறெதுவும் யோசிக்கவும் முடியவில்லை. ஆவலும் ஆசையும் மிகுந்த அவளின் விழிகள் மட்டுமே அவனை இயக்குவதாய் இருந்தது.
மெதுவாய் அவளிடம் இருந்து விலக, “எந்தா சாரே…” என்றாள் மீண்டும் மானசா.
“ம்ம்ம்… இதெல்லாம் நடந்திடக் கூடாதுன்னு நினைச்சேன் மனு..” என்றவனின் குரல் கரகரக்க,
“ஏன்..??!!” என்றாள் புரியாது.
சித்திரைச் செல்வனின் கரத்தினை தன் கரத்தோடு பற்றிக்கொண்டவள் “மனசுல இருக்கிறதை சொல்லக் கூடாதுன்னு எதுவும் இருக்கா???!!” என்றாள்.
“அப்படின்னு இல்ல.. பட்…” என்று இழுத்தவனின் பார்வை நேர்கொண்டே இருக்க,
“பட்..??!!” என்றாள் கேள்வியாய்.
“ஒண்ணுமில்ல…” என்று எழப் போனவனை, அவளின் பிடி எழவிடாது தடுத்தது.
“மானசா..!!”
“சொல்லுங்க சித்து சார்.. அப்போ உங்களுக்கும் என்மேல பீலிங்க்ஸ் இருக்குதானே.. அதை ஏன் மறைக்கணும்..??” என்றவளுக்கு குழப்பமே மிஞ்சியது.
இதற்கெல்லாம் சித்திரைச் செல்வன் என்ன பதில் சொல்வான். என் காதலை விட எனக்கு என் பொறுப்பும், கடமைகளும் தான் பிரதானம் என்று அவளிடம் சொல்லிட முடியுமா என்ன??!
“அப்படி எதுவும் இல்லை மனு..” என்றவன், “இந்த பேச்சு வேண்டாம்.. நீ பர்ஸ்ட் சரியாகு…” என்றான் ஒருவித இயலாமையோடு.
“என்ன சரியாகணும்…” என்றவள், அவளே அவன் கரத்தினை விடுவித்து, எழுந்து அவன் முன்னே நிற்க, சித்திரைச் செல்வனுக்கு இனி சமாளித்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தோன்றிவிட்டது.
“பிடிக்கும் மானசா..” என்றவன், அவள் முகம் பார்க்க,
“என்ன பிடிக்கும்???!!” என்றாள்.
அவள் முகத்தினில்  குழப்பம் இருந்தாலும், அதில் ஒரு குறும்பும் கூத்தாட, “ம்ம்ச் உன்னை பிடிக்கும்..” என்றவனைப் பார்த்து
“பிடிக்கும்னா எப்படி??!!” என்றாள் வேண்டுமென்றே.
சொல்பவன் முழுதாய் சொன்னால் தான் என்னவாம்??!!
“பிடிக்கும்னா பிடிக்கும்.. எப்படின்னு கேட்டா என்ன சொல்றது?” என்றவன் “ரொம்ப பிடிக்கும்.. இதோ இப்போ கிஸ் பண்ணேனே.. அந்த அளவுக்கு..” என, இடுப்பில் கை வைத்து அவனை உறுத்துப் பார்த்தவள்,
“இப்படியொரு ப்ரோபோசல்.. அதுவும் மனு உனக்கு..” என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ள,
“ஏன்.. இப்போ என்ன குறைச்சல்??!!” என்றான், தன்மானம் சீண்டப் பட்ட உணர்வில்.
ஏனோ சட்டென்று ஒரு ரோசம் வந்தது சித்திரைச் செல்வனுக்கு. அவன் இத்தனை சொன்னதே பெரிய விஷயம். அவனைப் பொருத்தமட்டில். அப்படியிருக்க, அதனை மானசா கிண்டலாய் பேசவும் ரோசம் வந்துவிட்டது. முகம் அப்படியே சுண்டிட, அவனது பார்வையும் மாறிப்போனது.
“குறைச்சல் எல்லாம் இல்ல…” என்று இழுத்தவள், “இது நீங்க சொன்னதே பெரிய விசயம்னு தெரியுது…” என்றாள்.
“புரிஞ்சா சரி…” என்று சித்து சொல்ல,
“ஓ காட்..!!” என்று இரு கைகளையும் மேல் நோக்கி நீட்டி சொன்னவள், “இது எவ்வளோ லவ்லி மொமன்ட்.. ஆனா இவ்வளோ ட்ரையா இருக்கனுமா…” என,
“எனக்கு இப்படி பேசத்தான் வரும்..” என்றான் அப்போதும் உர்ரென்று.
“கிளாஸ் எல்லாம் எப்படி செமையா எடுக்குறீங்க..” என்று மானசா உரிமையாய் கேட்க,
“கிளாஸ் எடுக்கிறதும் லவ் பண்றதும் ஒண்ணா??” என்று சித்துவும் கேட்க,
“ஹப்பாடி..!!!! இப்போவாது லவ் பண்றதுன்னு வாய்ல வந்ததே.. இல்ல.. பிடிக்கும்ன்னு லெவல்லயே இருந்துடுவீங்களோன்னு கொஞ்சம் பயந்துட்டேன்..” என்று அவள் பாவனையாய் சொன்ன விதத்தில் சித்திரைச் செல்வனுக்கே சிரிப்பு வந்துவிட்டது.
அவன் சிரிப்பினை கண்டபின்னே தான், “ஹப்பாடி.. சிரிக்கவும் செஞ்சுட்டீங்களா… சந்தோசம்…” என்றவள், நிம்மதியாய் நெஞ்சில் கை வைத்து அமர,
“நீ என்ன இவ்வளோ பேசுற…” என்றான்.
“ம்ம் ஆன்ட்டி தான் சொன்னாங்க, இந்த வாத்திங்கள கல்யாணம் பண்ணாலே வாழ்க்கை இப்படித்தான் போகும்னு.. அது அப்போ சிரிப்பா இருந்தது.. இப்போதான் புரியுது…” என்று அவளின் பேச்சு கல்யாண வாழ்க்கைக்கு செல்ல, பகீரென்றது சித்திரைச் செல்வனுக்கு.
காதலைச் சொல்லவே பெரும்பாடு.. இதில் கல்யாணம் என்ற பேச்செல்லாம்?!! அவனால் சிந்திக்கவும் கூட முடியாது போக, நல்லவேளை அவன் பதில் சொல்லும் முன்னம், பூபதியும் மீனாவும் வந்துவிட,
“வாடா எப்போ வந்த….??!!” என்றபடி வந்தார் மீனா.
“என்ன செல்வா கேம்ப் எப்படி இருக்கு??” என்றபடி பூபதி அங்கே அமர,
“இப்போதான் வந்தேன் ம்மா…” என்றவன் “நல்லாருக்கு ப்பா.. இப்போ கொஞ்ச நேரத்துல கிளம்பனும்…” என்றான்.
அவன் அப்படி சொன்னதுமே, மானசா அதிர்ந்து திரும்பியவள் “நாளைக்கு தானே போகணும் சொன்னீங்க…??” என்றாள்.
மானசாவின் கேள்வி பார்த்து, பூபதியும் கேள்வியாய் மகனைக் காண “அதுப்பா.. இப்போதான் போன் வந்தது….” என்று சமாளிக்க,
அதற்குள் சமையல் அறைக்கு சென்று பார்த்து வந்த மீனா “நீயாம்மா காபி போட்டு கொடுத்த..” என்றார்.
“ஆமா ஆன்ட்டி…” என்றவளுக்கு ஏனோ தொண்டை அடைத்தது.
வீட்டில் இருப்பான் என்று ஆசையாய் இருந்தவளுக்கு, அவன் கிளம்ப வேண்டும் என்று சொல்லவுமே, எதுவும் விளங்கவில்லை. இருக்க வேண்டும் என்று வந்தவன் ஏன் கிளம்ப வேண்டும் என்கிறான் என்று அவள் யோசித்து நிற்க,
“நைட் சாப்பிட என்னடா செய்யட்டும்??!!” என்றார் மீனா.
சித்திரைச் செல்வனுக்கும் மனதில் ஒரு அலைபுறுதல் இருந்ததுவோ என்னவோ “இல்லம்மா நான் கேம்ப்ல போய் சாப்பிட்டுக்கிறேன்..” என்றதும், மீனா ஏகத்துக்கும் முறைக்க, அங்கே மானசாவின் உணர்வினைக் கேட்கவும் வேண்டுமா??  
“எதையாவது செய்ம்மா..” என்று வேண்டா வெறுப்பாய் சொல்ல, 
“அ… எதையாவது செய்யா…” என்றவர் “என்னங்க இப்படி சொல்றான்…” என்று கணவரிடம் முறையிட,
“வர்றப்போவே சப்பாத்தி போடணும்னு தானே வந்த.. அதையே செய்..” என்றார் பூபதி.
“உங்கட்ட சொன்னேன் பாருங்க..” என்றவர், மானசாவைப் பார்க்க, அவளின் அதிர்ந்த முகமே மீனாவை கேள்வியாய் பார்க்க வைத்தது.
மனைவியின் பார்வையை உணர்ந்த பூபதி “என்ன மானசா.. உடம்புக்கு எதுவும் செய்யுதா??” என,
வேகமாய் சுதாரித்தவள், “இ… இல்ல அங்கிள்..” என்றாள்.
“முகமே சரியில்லையே..”
“அ.. அது.. அப்பாவும் அக்காவும் நாளைக்கு ரிட்டன் ஆகுறதா இருந்தாங்க.. பட் ஒன் டே லேட் ஆகுமாம் அதான்..” என்று இழுத்தவள், சாதாரணமாய் பார்ப்பது போல் சித்திரைச் செல்வனின் முகம் காண, அவனோ எவ்வித உணர்வையும் காட்டாது அமர்ந்திருந்தான்.
“அதுக்கென்ன ஒரு நாள் தானே.. நேரா மதுரைக்கு வந்து இங்க வருவாங்களா??” என்றார் மீனா.
“ஆமா ஆன்ட்டி.. என்னை வந்து கூட்டிட்டு போகணும்ல..” என்றபோதும் மானசா சித்திரைச் செல்வனைப் பார்க்க, இமைக்கும் நொடி அவன் முகம் சுறுங்கி மீண்டது போல் இருந்தது.
“ஊருக்கா.. அதான் இப்போ நல்லாகிட்டியே.. பின்ன என்ன கூட்டிட்டு போறதுக்கு இருக்கு.. படிப்பு என்னாகுறது..” என்ற மீனா,
“நீ ஏன்டா இப்படி உக்காந்து இருக்க..??” என்று மகனிடம் திரும்ப,
“ஒண்ணுமில்ல, சமைக்கிறதுன்னா கொஞ்சம் சீக்கிரம் பண்ணு.. இல்லன்னா கிளம்புறேன்..” என்றவனை கண்டு பூபதி புரிந்துகொண்டார் என்னவோ நடந்திருக்கிறது என்று.
காபி கலந்து கொடுத்து அவனும் குடித்திருக்கிறான், ஆனாலும் இருவரின் முகமும் சரியில்லை. என்னவோ ஒரு சண்டை வந்திருக்க வேண்டும் என்று யூகித்த பூபதி, மகனின் உணர்வுகளையும் யூகித்து இருந்தால் கொஞ்சம் சரியாய் இருக்கும்.
இப்படி அனைவரும் அமைதியாய் இருக்க, மீனாவோ “எனக்குன்னே எல்லாம் வர்றாங்க..” என்றபடி சமையல் அறைக்குள்ளே போக, மானசாவும் அவளின் அறைக்குச் செல்ல, பூபதியும் சித்திரைச் செல்வனும் மட்டும் இருக்க,
“அந்த பொண்ணோட எதுவும் சண்டை போட்டியா??” என்றார் பூபதி.
யார் பேசுவதும் அவனுக்கு மனதினில் அப்போது பதியாது என்ற நிலை. அப்படியிருக்கையில் அப்பாவின் கேள்வி அவனுக்கு சுத்தமாகப் புரியாது போக “என்னப்பா..??!!” என்றான் புருவம் நெரித்து.
“இல்ல.. மானசாவோட எதுவும் சண்டையா??” என,
“இல்லையே..” என்று பட்டென பதில் வந்தாலும், அப்போது தான் அவனின் கண்கள் அவளைத் தேட, அவள் அங்கில்லை.
“அந்த பொண்ணு எழுந்து போய்டுச்சு.. சொல்லு செல்வா என்ன பிரச்னை?? உன் முகமும் சரியில்லை.. அந்த பொண்ணு முகமும் சரியில்லை..”
“அ.. அதெல்லாம் இல்லப்பா.. ஜஸ்ட் சும்மாதான் பேசிட்டு இருந்தோம்..” என்றவன் “ஊருக்கு போகணும் சொன்னா.. நான் தான் கிளாஸ் கட்டாகும்னு திட்டினேன்..” என்று புதிதாய் ஒரு பதில் கண்டுபிடித்து சொல்ல,
“ஒன் வீக் நீங்க எல்லாருமே கேம்ப்ல இருப்பீங்க.. அப்படி இருக்கப்போ என்ன கிளாஸ் கட் ஆகும்??” என்றார் பூபதியும் விடாது.
‘ஷ்… சித்து.. சமாளிடா…’ என்று நெற்றியை தேய்த்துக்கொண்டவன், “அ.. அதுப்பா.. அவ.. அ.. மானசா ஊருக்கு போனா கிளம்பி வர அடம் பண்ணுவான்னு அ.. அன்னிக்கு அவங்கப்பா சொன்னார்.. அதான்..” என்றான் திக்கி திணறி.
“ம்ம்.. அப்படியா??” என்று கேட்டவரின் பார்வை மகனை ஆராய்ச்சி செய்ய,
“நா.. நான் ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன் ப்பா..” என்று எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.
மேலும் ஒருமணி நேரம் கடந்திருக்க, சித்திரைச் செல்வன் சமையல் அறையிலேயே கீழ் அமர்ந்து உண்டுகொண்டு இருக்க, “அந்த பொண்ண சாப்பிட கூப்பிடு டா.. இப்படி நீயா சாப்பிடுற..” என்றபடியே மீனா சப்பாத்தியை அவன் தட்டினில் வைக்க,
“அவளுக்கு பசிச்சா அவளே வந்து சாப்பிடுவாம்மா…” என்றான், மனதில் ஒரு பெரும் பாரம் கூடிய உணர்வுடன்.
“அதுசரி.. கூட்டிட்டு வந்தது நீ.. நீயே இந்த லட்சணத்துல கவனிச்சா விளங்கும்..” என்றவர் “மானசா..” என்றழைக்க, அவளின் அறையில் இருந்து வந்தவள்,
“ஆன்ட்டி நான்.. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்..” என,
“அப்போ நீயும் நானும் ஒண்ணா உக்காந்துப்போம்..” என்ற மீனா, அடுக்களை பக்கம் திரும்பிட, ஒருவித தவிப்புடன் தான் மானசா சித்திரைச் செல்வனைப் பார்த்தாள்.
கைகளை தட்டில் இருக்க, அவனும் அதே தவிப்போடு மானசாவைக் காண, மானசாவின் கண்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லிட அவனால் முடியாது என்றே தான் தோன்றியது.
சமையல் அறை வாசலிலேயே மானசா நின்றுவிட, ஹாலில் பூபதி டிவி போடும் சத்தம் கேட்டு “ம்மா.. அவருக்கு இதை கொடுத்துட்டு வாயேன்..” என்று ஒரு தட்டில் சப்பாத்தியும் குருமாவும் வைத்து மீனா கொடுக்க,
“சரிங்க ஆன்ட்டி…” என்று அவள் தட்டை வாங்கிக்கொண்டு செல்ல, அதற்குமேல் அவனால் உண்ண முடியவில்லை.
அப்படியே எழுந்துவிட “என்ன செல்வா நீ.. ரெண்டு தானே சாப்பிட்ட..” என்று மீனா கேட்டமைக்கு கூட,
“போதும்மா..” என்றவன், தட்டையும் கழுவி வைத்துவிட்டு, “நான் கிளம்புறேன்..” என்று சொல்லி ஹால் வர, அங்கே பூபதியோடு மானசாவும் இருக்க,
“நான் வர்றேன் ப்பா..” என்றவன், மானசாவையும் ஒரு பார்வை பார்த்தவிட்டு கிளம்ப, அவளால் பொறுக்கவே முடியவில்லை.
‘இவன் ஏன் இப்படி செய்கிறான்??!!’ இதுவே அவளின் மனதினில் ஓட, அப்படியே நின்றுவிட்டாள்.
பூபதி நீர் கேட்டு இரண்டு முறை அவளின் பெயர் அழைத்தமைக்குக் கூட அவள் பதில் சொல்லாது வாசல் பார்த்து நிற்க, அவரே எழுந்து சென்று தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தது கூட அவளுக்குத் தெரியவில்லை.
உள்ளே சென்றவர், மீனாவிடம் என்ன சொல்லிவிட்டு வந்தாரோ, மீனா வந்து “மானசா வா சாப்பிடலாம்..” என்றழைக்க, அதில் மீண்டவள் தான், பெயருக்கு உண்டுவிட்டு அறைக்கு வந்து, சித்திரைச் செல்வனுக்கு அழைத்துப் பார்த்தாள்.
முதலில் அவன் எடுக்கவில்லை. எடுக்கமாட்டான் என்றும் தெரிந்தே இருந்தது. இருந்தும் விடாது திரும்ப அழைக்க, எடுத்தவன் “இப்போதான் இங்க வந்தேன்..” என,
“ஏன் போனீங்க??” என்று கேட்டவளின் குரல் உடையத் தொடங்க,
“மனு..!!” என்று அதட்டியவன் “கொஞ்சம் நீயும் ரிலாக்ஸா இரு….” என்றுமட்டும் சொல்ல,
“எனக்கு உங்களோட பேசணும்…” என்றாள் பட்டென்று..
“இப்போகூட அதானே செய்றோம்..”
“ம்ம்ச் உங்களுக்கு புரியலையா?? இல்லை” என்று அவள் ஆரம்பிக்கும்போதே,
“எல்லாம் எனக்கு புரிஞ்சது.. வீட்ல எதுவும் பேச முடியாது.. நீ புரிஞ்சுக்கோ அதை.. நீ ப்ரீயா இரு.. ஊருக்கு போய் நல்லா ரெஸ்ட் எடு..” என,
“அந்த டாஸ் எல்லாம் எனக்கும் தெரியும்.. ச்சே.. உங்களோட நான் பேசியே இருக்கக் கூடாது..” என்றவள் பட்டென்று போனை வைத்துவிட, காதல் சொன்ன நாளே இப்படியா என்று தோன்றிப்போனது இருவருக்கும்.
சொல்லவேண்டும் என்றா சொன்னார்கள்.. இல்லையே.. அவர்களை மீறி சொல்லிட நேர்ந்தது. அதனை ரசித்து மகிழக் கூட முடியாது போனது யாரின் விதியோ??!!
சித்திரைச் செல்வன் அவர்கள் தங்கியிருந்த ஒரு சமுதாயக் கூடத்தின் மாடியில் இருக்க “டேய் இங்க இருக்கியா நீ..” என்றபடி வந்தான் பாஸ்கர்.
“என்ன பாஸ்கி..?” என,
“மார்னிங் வர்றேன்னு சொல்லிட்டு போன என்ன வந்திட்ட??” என்று கேட்டவனுக்கு,
“வந்துட்டேன்..” என்று மட்டும் பதில் சொல்ல,
“அதான் ஏன்னு கேட்டேன்..” என்றான் இவனும்.
“வந்துட்டேன் அவ்வளோதான்..” என்று சித்து அழுத்தம் திருத்தமாய் சொல்ல,
“என்னடா எதுவும் சண்டையா??” என்றான் பாஸ்கர்.
“ம்ம்ஹும்..”
“பின்ன..??!”
“ம்ம்ச்.. அவளை ஹர்ட் பண்ணிட கூடாதுன்னு நினைச்சேன்.. பட் அதுதான் நடக்குது..” என்றவனின் பார்வை இருள் சூழ்ந்த வானத்தை வெறிக்க,
“என்ன பண்ண நீ??!!” என்றான் பாஸ்கர்.
“நத்திங்.. அவ மனசுல இருக்கிறதை சொன்னா.. நானும் சொன்னேன்..”
“டேய்.. சித்து.. யப்பா நல்லவனே.. ப்ரோபஸ் பண்ணிட்டு வந்திருக்கியா??!! வாவ் செமடா…” என்று பாஸ்கி அகமகிழ, அதில் லட்சத்தில் ஒரு பங்கு கூட சித்துவிடம் பிரதிபலிக்கவில்லை.
அவனின் அமைதி கண்டு, “என்னடா மச்சி..” என்று பாஸ்கி, அவன் தோளில் கை வைக்க,
“எனக்குத் தெரியலைடா.. அவ ஒரு செக்கன்ட்ல கல்யாணம் வரைக்கும் யோசிக்கிறா.. பட் நான்..” என்றவன், “ம்ம்ச் என்னால முடியல பாஸ்கி.. இது பாசிபிள் இல்லை..” என,
“முட்டாளா டா நீ??!!” என்றான் பாஸ்கர் கோபமாய்.
அப்போதும் சித்து அமைதியாவே இருக்க “டேய் இதெல்லாம் இயற்கான ஒரு விசயம்டா.. அவளோட உக்காந்து பேசு.. உன்னோட பியூச்சர் ப்ளான் என்னன்னு சொல்லு.. ரெண்டுபேரும் முதல்ல சந்தோசமா லவ் பண்ணுங்க.. மனசுல இருக்கிறதா ஷேர் பண்ணுங்க.. அதைவிட்டு ஆரம்பமே இப்படின்னா ஒன்னும் பண்ண முடியாது..” என்று பாஸ்கர் சொல்ல,
மானசாவின் ஒவ்வொரு உணர்வுகளையும் பிரதிபலித்த அவளின் முகம் அவன் மனக்கண்ணில் தோன்றி அவனை இம்சித்தது.  

Advertisement