Advertisement

                          கொஞ்சும் ஏழிசை நீ – 17
ஆகிற்று நான்கு நாட்கள்… மானசா சித்திரைச் செல்வனின் வீடு வந்தும். அவளை கொணர்ந்து விட்டுச் சென்றவன் அடுத்த இரண்டு நாட்கள் வரவேயில்லை.
‘வீட்டிற்கு போ..’ என்று மனம் சொன்னாலும், அவனுக்கு படிக்க வேண்டிய வேலைகளும், படிப்பு சம்பந்தமாய் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறையவே இருந்தது.
ஆக, அவனின் மனதின் குரலுக்கு சித்திரைச் செல்வன் செவி மடுக்கவில்லை. பாஸ்கருக்கு கூட இது அதிசயமாய் தான் இருந்தது. விட்டுவிட்டு எப்படி வந்து, பின் போகாமல் இருக்கிறான் என்று.
முகத்தினை முகத்தினைப் பார்க்க “என்னடா அப்போ இதெல்லாம் யார் செய்வா??” என்று எரிந்து தான் விழுந்தான் சித்து.
“அதுக்கேன் டா இப்படி கத்துற…”  என்று பாஸ்கி கேட்க,
“ஒண்ணுமில்ல விடு…” என்றுவிட்டு போனான் சித்திரைச் செல்வன்.
‘ஹ்ம்ம்.. கொடுமை.. லவ் பண்றவனுக்கு கூட பிரண்டா இருந்திடலாம்.. ஆனா லவ் பண்ணிட்டு அதை சொல்லாம இருக்கவன் கூட மட்டும் பிரண்டா இருக்கக் கூடாது..’ என்று புலம்ப மட்டுமே முடிந்தது பாஸ்கருக்கு.
சித்திரைச் செல்வன் எதையோ பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு இருக்க, சரியாய் அவனின் அலைபேசி சிணுங்க எடுத்துப் பார்த்தால், அழைத்தது மானசா தான்.
அவனுக்குத் தெரியும் எதற்கு அழைக்கிறாள் என்று. அவன் வீட்டில் விட்டு வந்த முதல் நாள் மானசா அழைக்கவே இல்லை. கோபமாய் இருப்பாள் என்று நன்குத் தெரியும். அப்பாவிடம் மட்டும் விசாரித்துக் கொண்டான் சித்து. அவ்வளவே. அம்மாவிடம் என்றால் அது இதேன்றே ஏதாவது கேள்விகள் வரும்.
பொய் மட்டுமே சொல்லி சொல்லி சமாளிக்க எல்லாம் சித்திரைச் செல்வனுக்கு வராது.
ஆக அப்பாவிடம் என்றால், சிலது சொல்லாமல் புரிந்துகொள்வார் என்று அவருக்கு மட்டும் அழைத்து பேசிக்கொண்டான்.
ஒருநாள் தான் மானசாவின் மௌனம் நீடித்தது. மறுநாள் இதோ அழைத்துவிட்டாள். அலைபேசி திரையில் ‘மானசா..’ என்று முன்னே மிளிர்ந்த பெயர் இப்போது ‘மனு’ என்று மறுவியிருக்க, அதுவும் அவளின் புகைப்படத்தோடு மிளிர்ந்து கொண்டு இருந்தது. எடுத்துப் பார்த்தவன் முகத்திலும் முறுவல்.
ஆனாலும் கூட எடுத்துப் பேசவில்லை அவன்.
அவளும் விடுவதாய் இல்லை. விடாது அழைக்க, “அட ச்சே எடுத்து பேசு இல்ல போன ஆப் பண்ணு..” என்று பாஸ்கர் சலிக்க,
“இந்தா நீயே கேளு என்னன்னு..” என்று தன் அலைபேசியை அவனிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
‘இது வேறயா…’ என்று பார்த்த பாஸ்கி, அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வெல்கம் பார்ட்டியில் இருக்கும் மானசாவின் புகைப்படம் அலைபேசி திரையில் ஒளிர்வது கண்டு சற்றே திடுக்கிட, ஒருமுறை அழைப்பு நின்று பின் மீண்டும் ஒலித்தது.
‘அடடா…’ என்று பல்லைக் கடித்தவன், அழைப்பை ஏற்று ஹலோ என்று சொல்லும் முன்னமே “ஹலோ எந்தா சாரே.. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க.. ஹா…” என்று உச்சதஸ்தாயில் கத்தினாள் மானசா.
“அ…” என்று பாஸ்கர் பதில் சொல்ல வர,
“எனக்கு செம எரிச்சலா இருக்கு.. நான் கேட்டேனா??? இங்க கொண்டு வந்து விடுங்கன்னு.. விட்டுட்டு நீங்க போயிட்டீங்க.. அதுவும் என்கிட்டே சொல்லாம கூட.. ஹவ் டேர் ஆர் யூ?? செம கடுப்புல இருக்கேன் உங்க மேல..” என்று மானசா கத்த,
பொறுமை இழந்து “மானசா…” என்றுவிட்டான் பாஸ்கர்.
குரல் வேறுபட்டு வரவும் தான் “ஹ.. ஹலோ..” என்றவள் “பாஸ்கிண்ணா…” என,
“இப்போ சொல்லு.. பாஸ்கிண்ணா அப்படின்னு.. போன் எடுத்தா முதல்ல ஹலோ சொல்ல விடுங்கம்மா..” என்றான் சலிப்பாய்.
“சாரி.. சாரிண்ணா…” என்றவள், பின் பேச வராது திணற,
“இப்போ மட்டும் பேச்சு வரலையா??” என்றவன் “அவன் ஆபிஸ் ரூம் வரைக்கும் போயிருக்கான்..” என,
“ம்ம் ஓகே…” என்றவள், வைத்துவிட்டாள்.
‘கூல் மனு.. கூல்…’ என்று அவள் குரல் சொல்வதற்கு பதிலாய் அவன் குரல் சொல்வதாய் இருக்க,
‘கடவுளே…!!’ என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் மானசா.
அங்கே சித்திரைச் செல்வனோ, பாஸ்கர் பேசி முடிக்கவும் வர “என்னடா பேசியாச்சா??” என்றான் ஒரு புன்னகையோடு.
“சத்தியமா என்னை சோதிக்காத சித்து…” என்று கடுப்பாகவே பாஸ்கி சொல்ல,
“விடு விடு ப்ரீயா விடு..” என்று இவன் சொல்ல, “ஏன்டா நீ இப்படி இருக்க?? பிடிச்சிருக்குன்னா அதை சொல்லிட வேண்டியது தானே..” என்று மனது கேளாது பாஸ்கர் கேட்க,
“ம்ம்ச் சொல்ல ஒரு செக்கன்ட் ஆகாதுடா.. பட் இப்போ என்னோட சிச்சுவேசனுக்கு நான் யாருக்கும் கமிட் ஆக முடியாது…” என்றான் ஒருவித கசந்த முறுவலில்.
“இந்த வருஷம் எப்படியும் நம்ம முடிச்சிடுவோமே டா…”
“முதல்ல முடிப்போம்..” என்றுசொல்லி சித்திரைச் செல்வன் அந்த பேச்சினையும் முடித்துவிட்டான்.
இதற்கு அடுத்தநாள் அவர்களின் துறையில் அனைவரும் கேம்ப் கிளம்பிட, அந்த கிராமமோ, சித்திரைச் செல்வனின் ஊருக்கு பக்கத்து ஊராகவே இருக்க, பூபதி மீனாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்,
“கேம்ப் வந்துட்டாங்க போல.. இவன் என்ன வர்றேன்னு சொன்னானா??” என்று.
“ம்ம்.. என்னைய கேட்டா?? பேசுறது எல்லாம் அப்பாவும் புள்ளையும்.. இப்போ என்னை ஏன் கேக்குறீங்க..” என்றவர், அங்கே அமர்ந்திருந்த மானசாவிடம்
“உனக்கு எதுவும் சொன்னானா..??” என,
“ம்ம்ஹும் ஆன்ட்டி..” என்றாள் தலையை உருட்டி.
“அதான பார்த்தேன்..” என்று அவர் சொன்ன விதமே, தனக்கு மட்டும் எதுவும் சொல்லாமல் இருந்திருப்பானோ என்று இருக்க, மானசா வந்த சிரிப்பினை விழுங்கிக் கொண்டாள்.
ஒரு நாள் தான் அங்கே தயக்கமாய் இருந்தது. பின் மீனாவின் இயல்பான பேச்சினிலும், கவனிப்பினிலும் மானசா அங்கே பொருந்திவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வீட்டு வேலை எல்லாம் செய்வதற்கு ஆள் இருந்தாலும், சமையல் மட்டும் முன் நின்று மீனா தான் செய்வார்.
“கஞ்சியே குடிச்சா நாக்கு செத்துடும்..” என்று அவர் சொல்ல,
‘ஹப்பாடி…’ என்று ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது மானசாவிடம்.
அவள் முகம் கண்டே சிரித்தவர் “பின்ன.. எனக்கெல்லாம் ரெண்டு வேளைக்கு மேல கஞ்சி உள்ள போகாது.. நல்லா சாப்பிட்டா தானே தெம்பா எந்திரிக்க முடியும்.. சொல்லு உனக்கு என்ன செஞ்சு தர..” என்று உரிமையாய் கேட்க, மானசாவிற்கு ஏனோ சட்டென்று நெஞ்சடைத்தது போலிருந்தது.
“என்னப்பா அமைதியா இருக்க?? என்ன வேணும் சொல்லு செஞ்சு தர்றேன்..” என்று மீனா கேட்க, அவளுக்கு எதுவெல்லாம் பிடிக்கும் என்பது கூட மறந்து போனது.
“நீ.. நீங்க.. எது செஞ்சாலும் ஓகே..” என, அவளின் குரல் பிசிறு கண்டு “என்னப்பா என்னாச்சு??” என்றார் மீனா.
“ம்ம் ஒண்ணுமில்ல ஆன்ட்டி..” என்றவள் “நான் ஏதாவது ஹெல்ப் செய்யவா??” என்று கேட்க,
“அதெல்லாம் வேணாம்.. நின்னுட்டே காய் வெட்டிப்பேன்.. உனக்கு இதெல்லாம் பழக்கம் இருக்குமோ என்னவோ..” என்றவர் நின்றுகொண்டே காய் நறுக்க,
“பழக்கி விடுங்க..” என்றாள் மானசா.
மீனாவோ அதனைக் கேட்டு அவளைப் பார்த்து பின் “ஹா ஹா நல்லா சொன்ன போ..” என்று அவள் தோளில் தட்டி சிரிக்க,
“ஏன்.. ஆன்ட்டி.. நீங்கவேணா சொல்லுங்க.. நான் சமைக்கிறேன்..” என்று கோதாவில் குதித்து விட்டாள் மானசா.
“அதுசரி.. உடம்பு முடியலன்னு வந்த பிள்ளைய.. சமைக்க சொன்னியான்னு வாத்தியாரே கேப்பாரு..” என, மீனா சொன்ன தினுசில் மானசாவும் சிரித்துவிட,  இப்படியே பேசும் சிரிப்புமாகத்தான் அங்கே சமையல் நடந்தது.
‘அம்மா இருந்திருந்தா ஒருவேளை அவங்களும் இப்படித்தான் என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்களோ..’ என்று அவளும்,
‘வீட்ல ஒரு பொண்ணு இருந்தா இப்படி பேசிக்கிட்டே எல்லாம் செய்யலாம்..’ என்று மீனாவும் எண்ணாது இருக்க முடியவில்லை.
அதற்கு பிறகு, மானசா வால்பிடியாய் மீனாவின் பின்னே தான் சுத்திக்கொண்டு இருந்தாள். அவர் வேலை செய்யும் பாங்கு.. வேலை வாங்கும் பாங்கு.. எல்லாமே அவளுக்கு ஒரு புது வேடிக்கையாய் இருந்தது. அங்கே அவர்களின் டீ எஸ்டேட்டில் செந்தமிழும் அனைவரோடும் இன்முகமாய் தான் பழகுவார்.
ஆனாலும் அங்கே ஒரு முதலாளித்துவம் தெரியும்.
இங்கே பூபதியும் சரி, மீனாவும் சரி, அவர்கள் வயலில், தோட்டத்தில், வீட்டில் என்று யார் வேலைக்கு வந்தாலும் அவர்களிடம் சொந்தம் போல பேசி பழகுவது எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.
மனது இங்கே அதிகம் ஓட்டுவது போலிருந்தது..!!
சொல்லப்போனால் அன்றைய தினம் அப்பாவிற்கும் சரி, அக்காவிற்கும் சரி அழைத்து பேச கூட மறந்துவிட, தனுஜாதான் அழைத்து “என்ன மனு ஒரு போன் கூட பண்ணல..” என்று விசாரிக்க,
“அ.. அது..” என்று இழுத்தவள் “நான் கால் பண்ணேன் நாட் ரீச்சபிள் வந்துச்சு..” என்று வேகமாய்.
“ஓ..!! இட்ஸ் ஓகே.. ஹவ் இஸ் யுவர் ஹெல்த்..” என்று தனுஜா கேட்க,
“ஐம் கம்ப்லீட்லி ஆல்ரைட் தனு.. இங்க ஜாலியா இருக்கேன்.. சூப்பர் பிளேஸ்.. அருமையான மனுசங்க.. ஐ ஜஸ்ட் லவ் டு பி ஹியர்..” என்று மானசா, அதனைக் கேட்ட தனுஜாவிற்கு சற்றே வியப்புதான்.
ஏனெனில் சித்திரைச் செல்வனுக்கும், அவளுக்கும் ஆகாது என்று நன்குத் தெரியும், அவன் வீட்டினில் மானசா தங்க சம்மதித்ததே ஆச்சர்யம் தான். அதுவும் இப்படி பாராட்டு பத்திரம் வேறு வாசிக்க, தனுஜாவிற்கு நம்பிடவே முடியவில்லை.
என்ன சொல்வது என்று யோசித்து அவள் இருக்க “தென் தனு என்ன பண்றீங்க நீயும் டாடும்??” என,
“இப்போதான் மீட்டின் முடிஞ்சது… ஒரு டின்னர் பார்ட்டி இருக்கு.. சோ கோயிங்..” என்று அவளும் சொல்ல,
“ஓகே.. என்ஜாய்..” என்று வைத்துவிட்டாள்.
தங்கையோடு பேசிவிட்டு வைத்தவள் முகம் யோசனையாகவே இருக்க “என்ன தனு…” என்று செந்தமிழ் கேட்கவும்,
“நத்திங் டாடி..” என்றுவிட்டாள் தனுஜா.
இருந்தும் மானசாவை எண்ணி மனதில் ஒரு யோசனை விழுந்தது நிஜம்.
மறுநாள் மானசா, மீனாவோடு பொழுதினைக் கழிக்க, “பாரேன் எப்பவும் இங்க பக்கத்துல கேம்ப் போட்டா இவன் வீட்டுக்கு அடிக்கடி வருவான்.. இப்போ ஆளே காணோம்..” என்றபடி மீனா வயலில் நடக்க,
“ம்ம் ஏதாவது வொர்க்கா இருக்கும் ஆன்ட்டி..” என்று அவளும் பின்னோடு நடக்க,
“என்ன வேலையா இருந்தாலும் வந்து முகத்தை காட்டிட்டு போகனுமா இல்லையா??” என்றார்.
இதற்கு மானசா என்ன பதில் சொல்ல முடியும்??!! அவளுக்கும் தான் அவனைக் காண வேண்டும் போலிருந்தது. அவனிடம் கேட்க நிறைய கேள்விகள் வேறு இருந்தது. அழைத்துப் பார்த்தாலும் எடுத்துப் பேசாதவனை என்ன செய்ய முடியும்?
அதுவும் அவள் இருப்பதோ அவனின் வீட்டில். கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டிய நிலை வேறு..
மீனா பேச பேச ‘ம்ம்.. ம்ம்..’ என்றுமட்டும் சொன்னவள் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
வயல் வேலைகளை மேற்பார்வை பார்த்து இருவரும் வீட்டிற்குள் நுழைய, முன் வாசல் திண்ணையில் பூபதி அமர்ந்து யாரோடோ பேசிக்கொண்டு இருக்க, மீனா அவரைப் பார்த்து “வாங்கண்ணே..” என்று அங்கேயே தேங்கி நின்றுவிட,
இப்போது மானசாவிற்குத் தான் திணறலாய் இருந்தது, இவர்களை கடந்து வீட்டினுள் போவதா இல்லை இங்கேயே நிற்பதா என்று.
அவளைப் பார்த்த அந்த புதியவரோ “பொண்ணு யாரு..” என்று விசாரிக்க,
பூபதி “நம்ம செல்வா…” என்று சொல்ல வரும் முன்னமே, மீனா முந்திக்கொண்டு “நம்ம செல்வாவோட, பெரிய வாத்தியாருக்கு சொந்தக்கார பொண்ணு.. படிப்பு சம்பந்தமா ஆராய்ச்சி பண்ண வந்திருக்கு..” என, அவரோ மானசாவை ஒரு ஆராய்ச்சி பார்வை தான் பார்த்தார். 
மானசா சம்பிரதாயமாய் ஒரு புன்னகை பூக்க ‘உள்ள ஓடு..’ என்று மீனா முணுமுணுப்பது கண்டு, வேகமாய் உள்ளேயும் சென்றுவிட்டாள்.
“எந்த ஊரு..” என்று அவர் விசாரிப்பது கேட்டது.
“ஊட்டில இருந்து வந்திருக்கு..” என்று மீனா சொல்லிக்கொண்டே உள்ளே வர, மானசா “சாரி ஆன்ட்டி..” என்றாள் அவரிடம்.
“இது எதுக்கு??” என,
“இல்ல.. சர் வந்து இங்க விட்டிட்டு போயிட்டாரு.. நீங்க தானே பதில் சொல்லி சமாளிக்கிறீங்க..” என்றாள்.
“அட கிறுக்கு புள்ள.. இப்ப வந்திருக்க ஆளு பேரு என்ன தெரியமா வத்திப்பொட்டி.. போற இடமெல்லாம் வத்தி வைக்கும்.. வாத்திய இந்த ஆளு கூட பேசாதன்னு சொன்னா கேட்கமாட்டாப்ள.. இவர்கிட்ட உண்மைய சொல்லி, அந்தாளு ஊரு முழுக்க அதை சொல்லி.. தேவையா இது.. அதான்.. ” என்று வெகு சாதாரணமாய் அவள் கன்னம் தட்டி சொல்லிவிட்டுச் சென்றார் மீனா.
ஆனால் இதற்கெல்லாம் சேர்த்து வைத்து அவளுக்குச் சித்திரைச் செல்வன் மீது தான் கோபம் கோபமாய் வந்தது.
‘வரட்டும் அப்புறம் இருக்கு…’ என்று கடிந்துகொள்ள, அவளின் எண்ணம் போலவே அன்றைய மாலை பொழுதே வீடு வந்தான் சித்திரைச் செல்வன்.
யாரின் நல்ல நேரமோ, இல்லை யாரின் போறாத காலமோ, மானசா மட்டுமே வீட்டில் இருக்க, பூபதியும், மீனாவும் அருகே இருக்கும் கோவிலுக்கு என்று சென்றிருந்தார்கள்.

Advertisement