Advertisement

                                                            கொஞ்சும் ஏழிசை நீ – 16
பூபதிக்கும் மீனாவிற்கும் அதிர்ச்சி உள்ளுக்குள்ளே இருந்தாலும் அதனை மானசாவின் முன்னம் காட்டவில்லை. ஆனாலும் தங்கள் மகனை எண்ணி வியக்காது இருக்கவும் முடியவில்லை.
அன்று வந்தவர்களை சரியே வரவேற்கக் கூட செய்யாதவன், இன்று இங்கே தங்க அழைத்து வந்திருக்கிறான். அதுவும் தங்களிடம் ஒருவார்த்தை இப்படி செய்யட்டுமா என்று கேட்கவும் இல்லாமல்.
‘மானசாக்கு உடம்பு சரியில்ல.. இப்போதைக்கு அவங்க வீட்டுக்கு போகவும் முடியாது.. ஹாஸ்டல்லயும் இருக்கவும் முடியாது.. சோ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்..’ என்று மீனாவிற்கு அழைத்துச் சொல்ல, அவருக்கு என்ன பதில் சொல்வதென்று கூட தெரியவில்லை.
மகன் சொன்னவைகளை கிரகித்துக்கொள்ளவே நேரம் பிடிக்க, அதற்குள் அவன் வைத்திருந்தான். கணவரிடம் “என்னங்க..” என்று அழைத்து விசயத்தினை சொல்ல,
“அப்படியா??!!” என்றதை தவற அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
“என்னங்க… என்ன அப்படியான்னு மட்டும் சொல்றீங்க..” என,
“வேற என்ன சொல்ல சொல்ற மீனா.. கூட்டிட்டு வரட்டுமான்னு செல்வா கேட்கல.. கூட்டிட்டு வர்றேன்னு தகவல் சொல்றான்.. அவன் சின்ன பையனும் இல்லை. அந்த பொண்ணு சூழ்நிலையும் அப்படியிருக்கு.. வரட்டும் பார்த்துப்போம்..” என்றுவிட்டார்.
சொன்னதுபோலவே மானசாவை சித்து அழைத்துக்கொண்டு வர, உடன் பாஸ்கியும் ஷில்பாவும் கூட வந்திருந்தனர்.
“வாங்கம்மா…” என்று எப்போதும் போல், பூபதியும் மீனாவும் வரவேற்க,
“எப்படி இருக்கீங்க ஆன்ட்டி??” என்றாள் மானசா.
“நான் நல்லா இருக்கேன்.. ஆமா உனக்கென்ன ஆச்சு..??” என, “புட் அலர்ஜி மாதிரி ஆகிடுச்சு ஆன்ட்டி…” என்றாள்.
“மாதிரி என்ன மாதிரி.. சேராதுன்னு சொல்லிருந்தா என்ன??” என்று சித்து அப்போதும் காட்டமாய் கேட்க,
“செல்வா.. வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு என்ன இது..” என்றார் பூபதி.
“பின்ன என்னப்பா… சுக்குமல்லி காப்பி சேராதுன்னு என்கிட்டே சொன்னா, நான் என்ன சொல்லிட போறேன்… ஒண்ணுமே சொல்லலை..” என,
‘என்ன நடக்குது??’ என்றுதான் பார்த்தனர் பெற்றோர்.
‘உடம்பு சரியில்லைன்னு தானே சொன்னான்.. இவன் வாங்கிக் கொடுத்தான்னு சொல்லலையே..’ என்று மீனா பார்க்க,
“கேம்ப் வேறம்மா.. அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்..” என்று சித்து சொல்லவும்,
“அதுக்கென்னடா.. இவ்வளோ பெரிய வீட்ல நானும் அப்பாவும் மட்டுமா தானே இருக்கோம்..” என்றவர் “போ ம்மா போய் தூங்குறதுன்னா தூங்கு..” என்றவர் “அந்த ரூம்டா..” என்று ஒரு அறையை காட்ட, சித்து தான் அவளின் பை தூக்கிச் சென்றான். 
என்னவோ இவன் சொல்கிறான் என்ற வேகத்திலும், அவளுள்ளே தோன்றிய ஒரு ஆவலிலும் மானசா கிளம்பியும் வந்துவிட்டாள். ஆனால் வந்த பிறகு கொஞ்சம் சங்கடமாய் இருந்தது..
அவளின் தயக்கம் அவளின் முகத்தினில் தெரிய “இப்போ என்னாச்சு??” என்றான் சித்திரைச் செல்வன்.
“இல்ல சாரே..” என்று தலையை ஆட்ட,
“கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு..” என்றவன், அறையின் ஜன்னல் கதவுகளை எல்லாம் திறந்து விட, நல்ல வெளிச்சம் வந்தது. கூடவே மிதமான காற்றும்.
அந்த ஜன்னல் பக்கம் இருந்து பார்த்தால், அவர்களின் வயல் தெரியும்.. மானசா அங்கிருந்து பார்த்தவள் “வாவ்..” என,
“இது என்னோட பேவரேட் ரூம்.. முதல்ல இதுதான் என்னோட ரூம்மா இருந்தது..” என்றான் சித்து.
“ஓ..! பின்ன ஏன் சேஞ் பண்ணீங்க…” என்று கேட்டபடி, மானசா அங்கிருந்த கட்டிலில் ஏறி அமர,
“நான் எங்க சேஞ் பண்ணேன்.. இதோ எங்கம்மாதான் யாரோ சொன்னாங்கலாம் பசங்க இந்த பக்கம் பார்த்த வாசல் வச்ச ரூம்ல இருக்கக் கூடாதுன்னு…” என,
“வாட்??!!!” என்று கேட்டவள் பின் சிரிக்கத் தொடங்கிட, அவளின் சிரிப்புச் சத்தம் வெளியே உள்ளவர்களுக்கும் கேட்க, அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் நிலை.
அதிலும் மீனா, பாஸ்கரின் முகத்தினைப் பார்க்க, ‘ஐயோ..!!’ என்று நொந்தவன் “ஷில்பா டாக்டர் கொடுத்த டேப்லட்ஸ் எல்லாம் உன்கிட்ட தானே இருக்கு..” என,
“ஷ்..!! ஆமா சேட்டா..” என்றவள், அவளின் ஹான்ட் பேக்கினுள் இருந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு மானசாவை பார்க்கச் செல்ல,
பாஸ்கர் “ப்பா… இங்க பக்கத்துல தான் கேம்ப் போட்டிருக்காங்க..” என்று பேச்சினை மாற்ற,
“ம்ம் அப்படியா…” என்று கேட்டுக்கொண்டார்.
‘டேய் மவனே.. வா டா நீ…’ என்று மனது சித்துவை வைத்தாலும், அப்படியே பாஸ்கர் நிற்க
“நீங்களும் தானடா கேம்ப் வரணும்…” என்றார் மீனா.
“ஆமாம்மா.. வரணும்.. இன்சார்ஜ் போட்டிருக்காங்க..” என்றான்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது சித்திரைச் செல்வன் அங்கே வர, பாஸ்கர் அவனை முறைக்க பூபதி தான் “அந்த பொண்ணுக்கு இங்க சரிபடுமா செல்வா??” என்றார்.
“சரி படுது, படலை அதெல்லாம் இல்லப்பா.. அவளுக்கு முடியலை.. சோ இருக்கட்டும்..” என, இது என்ன மாதிரியான பதில் என்று பெற்றவர்களுக்கு புரியவில்லை.
“ம்ம் எப்படி சாப்பாடு கொடுக்கணும்?” என,
“ரெண்டு நாள் மைல்டா கொடுத்தா போதும்மா.. நீ ரொம்ப எல்லாம் பண்ணிக்க வேண்டாம்.. ஆள் வருது தானே…” என்று சித்து சொல்ல,
“ம்ம் ம்ம் வர்றாங்க வர்றாங்க…” என்றபடி எழுந்து சென்றார் மீனா.
பூபதியும் மகனை பார்த்து “நான் போய் கொஞ்சம் ப்ரூட்ஸ் வாங்கிட்டு வர்றேன்..” என்று கிளம்ப,
“ப்பா.. மாதுளை வாங்கிட்டு வாங்க.. டாக்டர் அந்த ஜூஸ் கொடுக்க சொன்னாங்க..” என்று சித்து சொல்ல,
“சரி செல்வா…” என்றுவிட்டு போனார் அவர்.
ஒருவழியாய் அங்கே யாருமில்லை என்று ஆகவும் பாஸ்கர் “டேய்.. நல்லவனே..” என்று கடிய ,
“என்னடா??!!” என்றான் சித்து.
“என்ன பண்ணிட்டு இருக்க நீ?? அன்னிக்கு என்கிட்டே நீ சொன்னது என்ன இப்போ பண்றது என்ன.. இப்பவும் சொல்றேன்.. மானசாக்கும் எதோ இன்ட்ரெஸ்ட் இருக்கிறது போல இருக்கு.. சோ பால்ஸ் ஹோப் அவளுக்குக் கொடுக்காத..” என,
“இப்போ நான் என்னடா பண்ணிட்டேன்.. ரூம் ரெடி பண்ணி கொடுத்தேன்.. அதுல என்ன அவளுக்கு நான் ஹோப் கொடுத்துட்டேன்…” என்று சித்திரைச் செல்வனும் சீரியசாய் முகம் வைத்துக் கேட்க,
“ஒருநாள் சிக்கிட்டு முழிப்படா அப்போ இருக்கு..” என்றான் பாஸ்கர்.
“நான் தெளிவா தான் இருக்கேன்…” என்று சித்து கடுகடுப்பாய் சொல்ல,
“ரொம்ப தெளிவு…” என்று பாஸ்கர் முனங்க, மீனா வந்துவிட்டார்.
“சப்பிட வாங்க..” என்று சொல்லியபடி.
“ம்மா நான் இப்படியே கிளம்புறேன்.. ஷில்பாவ பஸ் ஏத்தி விடனும்.. காலேஜ்ல கொஞ்சம் வொர்க் இருக்கு…” என்று பாஸ்கர் எழுந்துவிட,
‘நீ..??!!!’ என்று பார்த்தார் மகனை.
“நான் ஈவ்னிங் போகணும்மா..” என்றவன் “நான் போய் எடுத்து வைக்கிறேன்..” என்று ஏழ, “எல்லாம் எடுத்து வச்சாச்சு ..” என்றார் மீனா ஒருமாதிரி குரலில்.
அவருக்கு இன்னமும் மகன், ஒரு பெண்ணை அழைத்து வந்து வீட்டில் தங்க வைப்பதனை சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நட்பின் பேரில் வருவது வேறு. வந்து தங்குவது வேறு.
எப்படி அவர்களின் வீட்டில் இதற்கு சம்மதம் சொன்னார்கள் என்று தோன்றியது??!!
அக்கம் பக்கத்தில் யாரேனும் கேட்டால் என்ன சொல்வது என்ற யோசனை வேறு.. இதெல்லாம் கலந்து, மீனாவை அந்த நேரத்தில் அவரின் இயல்பில் இருக்க விடவில்லை.
“மானசாக்கு கஞ்சி..” என்று சித்து சொல்ல, “கொடுத்துட்டு தான் வந்தேன்..” என்றார் மீனா.
சித்திரைச் செல்வனுக்கு நன்கு புரிந்தது அவனின் அம்மாவின் மனநிலை. எடுத்து சொல்வது என்றால், தனித்துதான் பேசிட வேண்டும் என்று அம்மாவின் முகம் பார்க்க, பாஸ்கர் “நான் கிளம்புறேன் டா..” என்று எழுந்துவிட்டான்.
ஷில்பாவும் வந்துவிட, உடன் மானசாவும் வர “டேக் கேர் மனு..” என்று ஷில்பா சொல்ல,
பாஸ்கரும் “பார்த்து இரு..” என, சரி என்று மட்டும் சொல்லிக்கொண்டாள் மானசா.
என்னவோ மீனாவின் முன்னம் அவளால் வாய் திறந்து பேசக்கூட முடியவில்லை. மனதினில் ஒரு உறுத்தல். முதல் நாள் வந்தபோது இல்லாத உறுத்தல் இப்போது. சித்திரைச் செல்வனின் மீது அவள் கொண்ட சலனத்தின் காரணமாய் வந்த சங்கடமா இது என்று அவளுக்கு விளங்கவில்லை.
பாஸ்கரும், ஷில்பாவும் கிளம்பிட “கஞ்சி குடிச்சியா??” என்றான் சித்திரைச் செல்வன்.
“ம்ம்..” என்றவள், மீனாவிடம் “நீங்க சாப்பிடலையா ஆன்ட்டி…” என,
“அவர் வரவும் சாப்பிடனும்மா… நீ மாத்திரை போட்டியா??!!” என்றார்.
“இன்னுமில்ல.. கொஞ்ச நேரம் போகட்டுமே..” என்றவள், அவரோடே பேச, என்னவோ அவளுக்கு அவர் முன்னம் சித்துவை ஏறிட்டும் காண முடியவில்லை.
பூபதியும் வெளியே போனவர் வந்துவிட, மானசா சுதரித்தவள் “ஓகே நீங்க சாப்பிடுங்க..” என்றுசொல்லி, அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு வந்துவிட்டாள்.
வந்த சிறிது நேரத்திற்கே இப்படியெனில், இன்னும் நான்கு நாட்கள் எப்படி ??!! என்று அவள் மனம் யோசிக்க, ஒருவித அயர்ச்சியாய் இருந்தது.
மாத்திரைகளை விழுங்கியவள், அப்படியே படுத்துக்கொள்ள, அப்பா சொன்னது போல் ஸ்டெல்லா ஆன்ட்டியை வரவழைத்து ஊட்டிக்கே சென்று இருக்கலாம் போல இருந்தது.
‘ஓ..!! காட்…’ என்று உச்சரித்தவள், படுக்கவும் முடியாது, எழுந்து சென்று ஜன்னல் பக்கம் நின்று தூரத்தில் தெரியும் வயல்வெளியைப் பார்த்தாள்.
பச்சை பசேல் என இருந்தது. காற்று வீசும் பக்கம் நெல் நாற்றுகள் தலையசைக்க, மானசாவிற்கு தானும் இப்படி சித்திரைச் செல்வன் இழுக்கும் பக்கம் செல்கிறோமோ என்று தோன்றியது.
இதில் என்ன தவறு என்று நினைக்கத் தோன்றினாலும், ஏனோ சொல்ல முடியாத ஓர் பயமும் ஒர் அழுத்தமும் அவளுள் எழ, இவ்வுனர்வுகளுக்கு வடிகால் என்னவென்பதும் அவளுக்கு விளங்கவில்லை.
சித்திரைச் செல்வன் மீது அவளின் மனம் சாய்வது அவளுக்கு நன்குத் தெரிந்தது. அது பிடித்தும் இருந்தது. அவனுக்கும் எதுவோ ஒன்று தன்மீது இருப்பதும் புரிந்தது. இருந்தும் இதனைப் பற்றி வெளிப்படையாய் யாரிடமும் பேச தயக்கமாய் இருந்தது.
தனுஜாவிடம் இதுநாள் வரைக்கும் எதையும் மறைத்தது இல்லை. ஆனால் இதனை சொல்ல மனமும் வரவில்லை.
சரி அவனிடமே பேசலாம் என்றால், அவன் என்ன சொல்வானோ என்று அது வேறு..??!!
இதெல்லாம் இருக்க இப்போது இப்படி அவனின் வீட்டினிலே வந்து தாங்கும் நிலை..
இதெல்லாம் சேர்ந்தே அவளுக்கு அப்படியொரு சோர்வினைக் கொடுக்க, எப்படி உறங்கினாள் என்பதே தெரியவில்லை.  உண்டு முடித்துவிட்டு சித்திரைச் செல்வன் வந்து காண்கையில் அவள் நல்ல உறக்கத்தில் இருக்க, நின்று ஒருநிமிடம் அவள் முகம் பார்த்தவன், பின் வெளியேறி விட்டான்.
மீனா வேறெதுவும் கேட்காது இருக்க “ம்மா.. கோவமா??” என்றான் அப்போதுதான்.
“எனக்கென்ன கோவம்??!!” பட்டென்று வந்தது பதில்.
“உன்ன பார்த்தாலே தெரியுது..” என்றவன் “எனக்கு வேற வழி தெரியலைம்மா..” என்று சொல்ல,
“நான் தப்பா எல்லாம் எதுவும் நினைக்கல.. அக்கம்பக்கத்துல யாரும் கேட்டா என்ன சொல்றது??” என்றார் மீனா.
பூபதியும் இவர்களின் பேச்சினை கவனிக்க, “ ஒரு ஹெல்ப்னு சொல்லும்மா…” என்று சித்து சொல்ல,
“செல்வா…” என்றவரின் அழைப்பில் அவரைக் கண்டவன் “என்னப்பா..??” என,
“அந்த பொண்ண நல்லபடியா பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு… நீ காலேஜ் கிளம்பு..” என்றார் தீர்க்கமாய்.
“என்னங்க..” என்று மீனா எதையோ சொல்ல வர,
“கூட்டிட்டு வந்தாச்சு.. அந்த பொண்ணு இங்கதான் இருக்கும்… இனி அதபத்தி பேசி பிரயோஜனம் இல்லை.. பார்த்துக்கலாம்..” என்றுவிட்டார்.
இதற்குமேல் மீனா எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் இருந்துவிட்டு சித்திரைச் செல்வனும் கிளம்பிவிட்டான். கிளம்ப மனமில்லை தான். மானசாவோடு சிறிது நேரம் பேசிடவேண்டும் என்று நினைத்தான். ஆனால் முடியவில்லை.
நேரம் பார்த்தவன் இப்போது கிளம்பினால் தான் சரியாய் இருக்கும் என்றெண்ணி கிளம்பிவிட, செல்லும் முன்னம் மானசாவிற்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு தான் சென்றான்.
அவள் உறக்கம் களைந்து எழுந்து அலைபேசி எடுத்துப் பார்க்கையில் ‘நான் கிளம்பிட்டேன்.. பார்த்து இருந்துக்கோ.. கேம்ப் ஸ்டார்ட் ஆகவும் வந்து பார்க்கிறேன்.. எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு.. அம்மாக்கிட்ட எதுன்னாலும் கேளு.. டேக் கேர்..’ என்று இருக்க,
அவன் இங்கில்லை என்று தெரிந்ததுமே, மானசாவிற்கு கண்ணில் நீர் கோர்த்து விட்டது.
‘ஓ..!! நோ.. மனு… நோ.. அழக் கூடாது..’ என்று கண்களைத் துடைத்தவள் “ஓகே..” என்றுமட்டும் அவனுக்கு பதில் அனுப்பிவிட்டு, அலைபேசியை கட்டிலின் ஒருபக்கம் கடாசிவிட்டு வெளியே வந்துவிட்டாள்.
‘கூட்டிட்டு வந்தான்.. இருக்க வச்சான்.. கிளம்பிட்டான்…’ என்று கடிய,
‘வேறென்ன செய்யனும்னு எதிர்பார்க்கிற நீ..??!!’ என்று அவள் புத்தி எட்டிப்பார்க்க,
‘ஒரு மண்ணும் வேணாம்..’ என்று சலித்து உள்ளம்.
“எல்லாம் தெரிந்தும்…
என்னை புரிந்திருந்தும் சும்மா
இருக்கும்படி சொன்னேன்…..
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…….”   

Advertisement