Advertisement

                        கொஞ்சும் ஏழிசை நீ – 11

‘மானசா மேல உனக்கு ஏதும் பீலிங்க்ஸ் இருக்கா..??!!’

பாஸ்கர் கேட்ட இக்கேள்வியே சித்திரைச் செல்வனின் மனதினுள் ஓடிக்கொண்டு இருந்தது. அவன் கேட்ட நேரத்திற்கு இவனும் பதில் பேசி சமாளித்துவிட்டான் தான்.

இருந்தும் அவன் மனதிற்கு உண்மை என்னவென்று தெரியுமே..!!

‘பீலிங்க்ஸ்…’ அது காதலா இல்லை நட்பா என்பது தெரியாது. திண்ணமாய் சொல்லிட முடியாது. வெறும் சலனம் என்றும் சொல்லிட முடியாது. அது அவனுக்கே நன்கு தெரிந்தது..

ஒருமாதிரி கலவையான உணர்வு இருப்பது நிஜம்.

அவள் ஊருக்குச் சென்றுவிட்ட இந்த இடைப்பட்ட நாட்களில் அவன் எப்படியானதொரு வெறுமையை உணர்ந்தான் என்பது சித்திரைச் செல்வன் மட்டுமே அறிவான்.

அவள் பேசுவது.. சிரிப்பது.. கோபமாய் காண்பது.. அவனை ‘எந்தா சாரே…’ என்று அழைப்பது இதெல்லாம் அவள் இல்லாத நாட்களிலும் அவன், அவனை சுற்றி இருப்பது போல் உணர்ந்தான்..

‘எந்தா சாரே…’ என்ற அவளின் அழைப்பு அவனுள் கேட்டுக்கொண்டே இருந்தது. திடீரென்று அவனாகவே கூட திரும்பிப் பார்த்தான். அவளின் குரல் மட்டுமே கேட்டது. அவள் இல்லை அங்கே.

அந்த நொடிகளில் எல்லாம் ‘மானசா…’ என்று அவனது மனது ஜபித்துக்கொண்டு தான் இருந்தது.

இதெல்லாம் நடந்திடக் கூடாது என்று தன் மனதை இறுக்கி இறுக்கி பிடித்தவனுக்கு அந்த பிடிப்பு பட்டென்று விட்டுப்போனது. அவளின் நினைவுகள் எழும்பி எழும்பி மேலே வர வர, தனக்குள் தானே திண்டாடிப் போனான்.

‘யாரிவள்.. எங்கிருந்து வந்தாள்… என்னுள் ஏன் இப்படியொரு மாற்றம் நிகழ்த்துகிறாள்…’ என்று அவன் விடை தேட முயல, அவளின் எண்ணங்களுக்குள் அவன் மூழ்கிக்கொண்டு இருந்தான்.

இவ்வுணர்வை விரும்பி ஏற்றுக்கொண்டால் அது வேறு, ஆனால் சித்திரைச் செல்வனின் கண் முன்னே அவனுக்கு இருக்கும் பொறுப்புகள் அதிகம். அவன் எடுத்துக்கொண்டு இருக்கும் படிப்பின் நிலை, அதை முடிக்க அவன் எத்துனை மெனக்கெடல் வேண்டும் என்பது எல்லாம் அவன் அறிவான் தானே.

ஆக, இவ்வுணர்வு தனக்கு வருவது என்பது அவனுக்குப் பிடிக்காது தான் போனது.

இருந்தும் தன்னை மீறி நிகழ்கையில்..!!

முதல் நாள் கோபமாய் அலைபேசியில் பேசியவள், அதற்கு அடுத்த நாளும் அழைத்திருந்தாள். அவளாய் அழைக்கவில்லை. தவறுதலாய் அவள் இவனின் எண்ணை அழுத்தியிருக்க, அடுத்து உடனே சுதாரித்து அவளே கட் செய்தும் விட்டாள்.

மிஸ்ட் காலில் மானசாவின் எண்ணைப் பார்த்தவன், திரும்ப அவளுக்கு அழைத்து என்னவென்று கேட்க, “தப்பா ப்ரெஸ் பண்ணிட்டேன் சர்..” என்றாள்.

“ஓ.. ஓகே.. இனி கேர்புல்லா இரு…” என்றவன், அப்படியே வைத்துவிட,

“கடவுளே…” என்று மானசா நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது.

அழைப்பைத் துண்டித்தவனுக்கு, தன்னையும் மீறி இப்போது மானசா தன்னை எப்படி அர்ச்சித்துக் கொண்டு இருப்பாள் என்ற கற்பனைகள் தோன்ற, ‘நோ.. நோ சித்து..’ என்று வேகமாய் தலையை ஆட்டி அவ்வெண்ணங்களை விரட்டி அடிதான். 

அவன் மனதில் என்ன ஓடுகிறது என்பதனை உணர்ந்த அடுத்த நிமிஷம், முழுதாய் இதிலிருந்து விலகிடத் தான் எண்ணினான். ஆனால் விலகி எங்கே போவான்??!! அவன் கல்லூரி விட்டு செல்ல முடியுமா?? இல்லை அவளைத் தான் இங்கே வராதே என்றிட முடியுமா??

‘என்ன சித்து இதெல்லாம்…’ என்று அவன் நெஞ்சம் கேட்க,

‘இல்ல.. இதெல்லாம் ஒண்ணுமில்ல.. கண்டிப்பா இதெல்லாம் ஒண்ணுமில்ல..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் தான், மானசாவோடு இயல்பாய், இலகுவாய் பழகிட முடிவு கொண்டான்.

ஷில்பா, பாஸ்கி, மானசா மூவரும் எப்படி பேசிக்கொள்கிறார்களோ அதுபோலவே. இயல்பாய் பேசிவிட்டால் அவளும் சும்மா இருக்கப் போகிறாள். இல்லையென்றால் தானே அது இது என்று அவளும் பேசி, பதிலுக்கு பதில் என்று இவனும் பேசுவான். அதெல்லாம் இல்லாது அனைத்தையும் ஒரு எல்லைக்குள் நிறுத்திட எண்ணம் கொண்டான்..

எதுவாக இருந்தாலும், அது தன் மனதோடு போகட்டும் பாஸ்கருக்கு கூட தெரிய வேண்டாம் என்பதில் தெளிவாய் இருந்திட, அதன் பின்னே தான் இந்த சமாதானங்கள் எல்லாம்.

இது தெரியாத மற்றவர்கள் சித்து கொஞ்சம் மாறிவிட்டான் என்று எண்ணிக்கொண்டு இருக்க, மானசாவோ அவன் அன்று வெல்கம் பார்ட்டியில் தன்னை பார்த்து ‘சாப்பிடு..’ என்று பாவனையாய் தலை அசைத்து சொன்னதையே நினைத்துக் கொண்டு இருந்தாள்.

சித்திரைச் செல்வன்.. அழகன் தான்.. புன்னகைத்தால் இன்னும் அழகாய் இருப்பான். ஆனால் அவனின் கோபத்தில் கூட அவன் அழகாய் இருப்பது தான் மானசாவிற்கு வியப்பு.

‘கோபம் வந்தா உர்ருன்னு இருப்பான்னு பார்த்தா.. அப்போ கூட இவன் ஸ்மார்ட்டா இருக்கான்யா..’ என்று பலமுறை நினைத்திருக்கிறாள்.

ஒரு பிடிவாதம், அவன் தன்னை சரியாய் நடத்தினால் மட்டுமே தானும் அவனோடு சரியாய் இருப்பேன் என்று. ஆனால் இப்போதோ, அனைத்தையும் தாண்டி, அன்று தனுஜா சொன்னது இன்னமும் அவள் மறந்திடவில்லை..

‘நம்மள கண்டிப்பா முன்னாடியே பார்த்திருக்கணும்.. அதனால தான் நான் பார்க்கிறப்போ கேசுவலா பார்த்து சிரிக்க முடிஞ்சது…’ என்றெண்ணியவள்

‘கேட்போமா??!!’ என்று யோசித்தாள்.

‘லூசா நீ.. இதெல்லாம் கேட்கணுமா??!!’ என்று அவளின் மனசாட்சி கேட்க, “ஏன் கேட்டா என்ன?? இப்போதான் நாங்க சமாதானம் ஆகிட்டோமே.. கேட்டா திட்டவா போறாங்க..” என்று அதற்கு மானசா பதில் சொல்ல,

‘தேவையில்லாத வேலை இது..’ என்றது மனசாட்சி.

“ம்ம்ச் இதுல என்ன இருக்கு??!! என்னை எப்போ பார்த்தீங்க அப்படின்னு கேட்கப் போறேன் அவ்வளோதானே..” என்றவள், அதே வேகத்தில் அவனின் எண்ணையும் அழுத்தி விட, முதலில் சித்திரைச் செல்வன் எடுக்கவில்லை.

‘புல் ரிங் போய் கட் ஆகுது.. தூங்கிருப்பாங்களோ??!!’ என்ற யோசனையோடு நேரம் பார்த்தாள், இரவு பதினொன்று.

‘ச்சே.. இந்த டைம்ல போயா கால் பண்றது..’ என்று தன் தலையில் தானே தட்டிக்கொண்டவள், புரண்டு படுக்க, உறக்கம் என்பதுதான் வரவில்லை.

‘போச்சு.. போச்சு.. இந்நேரம் கால் பண்ணி தொலைச்சு.. எதுக்கு கால் பண்ண கேட்டா என்ன சொல்றது…’ என்று யோசனையோடு படுத்திருந்தவள், லேசாய் எட்டி ஷில்பாவைப் பார்க்க, அவள் நல்ல உறக்கத்தில் இருப்பது தெரிந்தது.

‘ப்பா..!! தூங்கிட்டா…!!’ என்று எண்ணி முடிக்கவில்லை அவளின் அலைபேசி வைப்ரேட் ஆக, வேகமாய் அதனை எடுத்துப் பார்த்தாள் ‘எந்தா சாரே..’ என்ற பெயர் மிளிர, தானாக இதழில் ஒரு புன்னகை..

சிறிது இடைவெளி விட்டு “ஹெலோ..” என்று மிக மிக மெதுவாய் மானசா சொல்ல,

“ஹே என்னாச்சு..??!” என்று அவனின் குரல் பதற்றமாய் கேட்டது.

“என்னாச்சு.. ஒன்னுமில்லையே..” என்று மானசாவும் வேகமாய் அதே நேரம் குரலை தழைத்து சொல்ல,

“பின்ன எதுக்கு கால் பண்ண??!” என்றான் அவனோ சத்தமாய்.

அந்த இரவு நேர அமைதியில், அதுவும் அவன் கேட்ட தொனியில், அவனின் குரல் நன்கு உறங்கும் ஷில்பாவை கூட எட்டிவிடும் போல, அப்படியிருக்க

“ஷ்!! மெதுவா..” என்றாள் ஹஸ்கி வாய்ஸில்.

‘இவ ஒருத்தி…’ என்று எண்ணியவன் “ம்ம் சொல்லு..” என்று குரலை தன்னைப் போல் தழைக்க,

“சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா??!!” என்றாள்.

“இல்ல.. போன் சைலேன்ட்ல இருந்தது.. நான் சிஸ்டம்ல இருந்தேன்.. இப்போதான் பார்த்தேன்..” என்று ஒப்புவிக்க,

“ஓ..!! ஓகே..” என்றாள்.

“ம்ம் டெல் மீ.. ஏன் கால் பண்ண?? எதுவும் ப்ராப்ளமா??” என்று திரும்ப சித்து கேட்க,

“நோ நோ.. ஒரு விஷயம் கேட்கணும் அதான்..” என்றவளுக்கு என்ன தோன்றியதோ “நான் மார்னிங் கேட்டுக்கறேன்..” என,

“அது கால் பண்றதுக்கு முதல்ல யோசிச்சு இருக்கணும்..” என்றவன் “குட் நைட்..” என்றுசொல்லி வைத்துவிட,

‘அப்பாடி.. ரொம்ப திட்டல..’ என்று அந்தளவில் மனதை சமன் செய்துகொண்டாள் மானசா.

இருந்தும் அந்த நேரத்தில் அழைத்தது அவளுக்கே எப்படியோ இருக்க, அவன் வேறு கொஞ்சம் பதற்றமாய் ‘என்னாச்சு..’ என்று கேட்டது நன்கு புரிந்தது.

‘ச்சே அன்டைம்ல கால் பண்ணவும், டென்சன் ஆகிருப்பாங்க..’ என்றெண்ணியவள்  ‘சாரி..’ என்று வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் போட, சிறிது நேரம் கழித்தே அது ப்ளூ நிற டிக் காட்ட, ஒருவித படபடப்பு அவளுக்கு.

‘இருந்திருந்து நான் சாரி கேட்கிற மாதிரி ஆகிடுச்சே..’ என்று நொந்தபடி, அலைபேசி திரையைப் பார்க்க ‘இட்ஸ் ஓகே.. ஸ்லீப் வெல்..’ என்று அவனின் பதில் வந்திருக்க,

‘ம்ம்…’ என்று மட்டும் இவளும் அனுப்பினாள்.

‘என்ன.. இன்னும் ஏன் தூங்காம இருக்க??!! எனி திங் இம்பார்டன்ட்..?’ என்று அவன் பதிலுக்கு கேட்க,

‘அப்பாடி இப்போவாது கேட்கணும் தோணிச்சே..’ என்று இவள் ஒரு சிரிக்கும் ஸ்மைலி போட்டு பதில் அனுப்ப,

‘மானசா….’ என்ற அவளின் பெயர் மட்டுமே அடுத்து வந்தது.

அது அப்படியே, அவன் உறுத்து விழித்து  அவளை நேருக்கு நேர் பார்த்து பல்லைக் கடித்து அழைப்பது போல் இருக்க, ‘ஓகே.. ஓகே.. மார்னிங் பாக்கலாம்.. குட் நைட்..’ என்று சொல்லி, முடித்துவிட்டாள்.

‘போதும் மானசா.. தூங்கிடு..’ என்றவள், கண்களை இறுக மூடிக்கொள்ள, அங்கே சித்திரைச் செல்வனோ அடுத்தும் கூட வெகு நேரம் அவனின் அலைபேசி திரையை பார்த்துக்கொண்டு இருந்தான்.

‘இன்னும் கொஞ்ச நாள் தான் சித்து.. அவளுக்கு கோர்ஸ் முடிஞ்சதுன்னா கிளம்பிப் போயிட போறா.. அதுவரைக்கும் நீ கண்ட்ரோலா இருந்துட்டா போதும்.. கவனமெல்லாம் உன்னோட படிப்புல வை..’ என்று தனக்கு தானே சொல்லியவன், ஒருவித இயலாமையை உணர்ந்தான்.

“ம்ம்ச்..” என்ற ஒரு சலிப்போடு கண்களை சித்திரைச் செல்வன் மூட, வெகு நேரம் கழித்த உறக்கம் என்பது வந்தது.

மறுநாள் வழக்கம் போல் விடிய, மானசா அவளின் எப்போதும் வழக்கமாய் ஹாஸ்டலின் மாடிக்குச் சென்று சிறிது நேரம் சுற்றிலும் கண்ணுக்கு விருந்தாய் காட்சி அளிக்கும் இயற்கை காட்சியினை கண்டு ரசித்துக் கொண்டு இருந்தாள்.

கையில் சுட சுட, ஷில்பா தயாரித்த தேநீர் கோப்பை.

“நீயும் வா..” என்றமைக்கு “ம்ம்ஹும்.. தூக்கம் வருது..” என்று அவள் மீண்டும் போர்வைக்குள் நுழைய,

“அடப்போடி..!!” என்றுவிட்டு தான் மாடிக்கு வந்திருந்தாள்.

மாலை நேரங்களில் தான் விளையாட்டு மைதானம் இருக்கும் பக்கம் நின்று வேடிக்கைப் பார்ப்பாள். காலை நேரங்களில் மாடியின் இன்னொரு புறம் சென்று நின்றால் சுற்றிலும் பச்சை பசேல் என்றுதான் இருக்கும்.

பார்ப்பதற்கே காட்டுப் பாதை போல இருக்கும்.. இரு புறமும் மரங்கள் அடர்ந்து பார்க்கவே ரம்யமாய் இருக்கும். அந்த பக்கமும் கூட சிலர் நடைப் பயிற்சி செய்வார்கள்.

இரவு நேர உடையும், சரியாய் கட்டியும் காட்டாது இருக்கும் கேசமுமாய், முகத்தை மட்டும் கழுவி துடைத்து, கையில் தேநீர் கோப்பையோடு சென்று அந்த அழகிய நேரத்தில் அங்கே நிற்க, மனதிற்குள் அப்படியொரு உற்சாகம் அவளுக்கு..

“வாவ்… இந்த சிப்ஸ் இதெல்லாம் மிஸ் பண்றா..” என்று தனக்கு தானே பேசிக்கொண்டு, கோப்பையில் இருக்கும் தேநீரை சுவைத்தபடி, பார்வையை அந்த மரங்களில் பாய்ச்ச, தன்னைப்போல் அங்கே ஒருவன் ஜாகிங் செய்து வருவது தெரிந்தது.  

முகம் சரியாய் தெரியவில்லை முதலில்.. ஆக ‘யாரடா இது.. செமையா இருப்பான் போல…’ என்று அவளுள் இருக்கும் ரசிக மனம் தலைதூக்க, அந்த அவன் சற்று முன்னே வர வரத்தான் தெரிந்தது வந்தது சித்திரைச் செல்வன் என்று.

‘ஓ.!!! காட்..!!’ என்று கண்கள் பெரிதாய் விரிய, ‘ஷாட்ஸ் அண்ட் டி ஷர்ட்ல இவ்வளோ ஸ்மார்டா..’ என்று பார்க்க,

பார்க்க என்ன பார்க்க, ‘சைட்..’ அடித்தாள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அவனின் கேசம் அந்த காலை நேர காற்றில் பறக்க, இரு கைகளையும் முன்னே குவித்து வைத்து, காதுகளில் இயர்போன் மாட்டி, அவன் ஓடி வரும் அழகே தனியாய் தான் இருந்தது.

வழியில் யாரோ அவனோடு பேச, நின்றவன் அவனின் டிரேட் மார்க் புன்னகையை சிந்தி, வேகமாய் அவனின் காதில் மாட்டி இருக்கும் இயர் போனை கழட்டி விட்டு அவரோடு பேச, மானசாவின் பார்வை அசையவே இல்லை. கையில் இருக்கும் தேநீர் கொஞ்சம் கொஞ்சமாய் சூடு தனிந்துகொண்டு இருந்தது.

அந்த நபரோடு நின்று பேசியவன், அவர் கடந்து செல்லவும், தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு, மீண்டும் இயர்போனை எடுத்து காதில் மாட்டியபடி, அவனின் ஜாக்கிங்கை தொடர, அவனின் பாதை மாறி, விளையாட்டு மைதானம் இருக்கும் பாதைக்குள் திரும்ப, மானசாவும் வேகமாய் மாடியும் மறுபுறம் விரைந்தாள்.

இத்தனை நாள் இல்லாத இந்த உணர்வு என் என்று அவள் யோசிக்கவே இல்லை. ஏனோ அந்த நேரத்தில் சித்திரைச் செல்வனை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று மட்டும் திண்ணமாய் தோன்ற, அவளோ தான் செய்வது எல்லாம் சரியா தவறா என்ற சிந்தனைக்கு எல்லாம் போகவேயில்லை.

நல்லவேளை சித்திரைச் செல்வன் இவளைக் காணவில்லை.

விளையாட்டு மைதானத்தினுள் நுழைய, யாரோ இருவர் அவனோடு இணைந்து பேசியபடி ஓட, மானசா பார்த்தபடி நின்று இருந்தாள்.

‘ஹ்ம்ம் இப்படியெல்லாம் வொர்க்கவுட் பண்றதுனால தான் சர் ஃபிட்டா இருக்கார்…’ என்று நினைக்க,

“ச்சே ச்சே.. நம்மலே கண்ணு வைக்கக் கூடாது..” என்று சொல்லிக்கொள்ள

“அடி.. மனு…” என்ற ஷில்பாவின் குரல் கேட்க,

“அச்சோ..” என்று திரும்ப, ஷில்பா இவளை நோக்கி வந்துகொண்டு இருந்தாள்.

“இங்க இருந்து அங்க பார்த்தா அவ்வளோ தான்..” என்று நினைத்தவள் “இதோ நானே வந்துட்டேன் சிப்ஸ்..” என்று ஓட்டமாய் அவளை நோக்கி ஓட, முதல் முறையாய் மனதினில் ஒரு கள்ளத் தனம் வந்து ஒட்டிக்கொண்டது.

“இவ்வளோ நேரமோ..” என்று ஷில்பா கேட்க,

“சும்மா அப்படியே வாக் பண்ணேன்..” என்று சொல்லி இளித்தாள் மானசா.

ஷில்பா நம்பாது அவளைப் பார்க்க “அட நிஜமா..” என்றவள், “வா வா..” என்று சொல்லி நடக்க, ஷில்பாவும் அவளோடு வரவும் தான் ‘தப்பிச்சோம்..’ என்ற உணர்வு வந்து நிம்மதி கொடுத்தது.

Advertisement