Advertisement

பறந்த றெக்கையை அடுத்த நிமிசத்தில் வெட்டி போட்டாள் தேவகி.
“சாப்பிட்டுட்டு என்னோட ரூம்ல படுத்துக்கோ மா. உன் மாமா வேற ரூம்ல படுத்துப்பாரு”, என்றாள் தேவகி.
அவளுக்கு அம்மா தனி ரூம் கொடுப்பாங்க. அடிக்கடி என்ன வேணும் என்ன வேணும்னு கேக்குற சாக்குல சைட் அடிக்க நினைச்ச கார்த்திக்க்கு கடுப்பானது. “அம்மா சொதப்பிட்டாங்க”, என்று மனதுக்குள் பல்லை கடித்தான்.
அடுத்து அவர்கள் அனைவரும் அவளுடன் சந்தோசமாக பேசினார்கள். அதில் அவள் தயக்கம் எல்லாம் ஓடியே போனது.
மறுபடியும் அவன் குஞ்சு மணி என்று பெயரை சொன்னதை பற்றி பேசி அவளும் அம்மா, அப்பாவுடன் சேர்ந்து அவனை ஓட்டி கொண்டிருந்தாள்.
அவன் முறைப்பது போல இருந்தாலும் எல்லாவற்றையும் ரசிக்க தான் செய்தான்.
அவளை தன்னுடைய அறையில் விட்டவள் “முகம் கழுவிட்டு படு சத்யா. நான் உன் மாமாவுக்கு பால் சூடு பண்ணி கொடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி வெளியே வந்தாள் தேவகி.
அங்கே அம்மாவை முறைத்த படியே நின்றிருந்தான் கார்த்திக்.
“என்ன டா தூங்க போகாம கீழயே குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துற?”
“உனக்கு ஓவரா தெரியலை. அவளுக்கு தனி ரூம் கொடுத்துருக்கலாம்ல?”
“அடிங்க… கல்யாணம் வரைக்கும் பக்கத்துல போன கொன்னுருவேன்”
“ப்ச் என்ன மா நீ? நான் உன் செல்ல பையன். என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? அய்யகோ பெத்த தாயே நம்பலைனா இந்த கொடுமையை எங்க போய் சொல்லுவேன். கடவுளே நீ இல்லையா? லொக்கு லொக்கு”, என்று இருமினான் கார்த்திக்.
“நடிக்காத டா. அவ இங்க தனி ரூம் கொடுத்தா தனியா பீல் பண்ணுவான்னு தான் என்னோடவே படுக்க வச்சிக்கலாம்னு நினைச்சேன். அப்புறம் அப்பா கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன். அது வரை வேணும்னா சத்யா கிட்ட பேசிட்டு இரு. வேணும்னா தான். இல்லைனா போய் தூங்கு”
“மம்மின்னா மம்மி தான். லட்டு சான்சை யாரும் வேண்டாம்னு சொல்லுவாங்களா? கூட கொஞ்சம் நேரம் அப்பா கிட்ட பேசிட்டு வா என்ன?”
“டேய் அரை மணி நேரத்துக்கு மேல உங்க அப்பா வோட மொக்கையை என்னால கேக்க முடியாது. சீக்கிரம் வெளிய வந்துரு டா”
“ஓகே ஓகே”, என்ற படியே அவள் அறைக்குள் போனான் கார்த்திக்.
கண்களில் அவளை பார்க்க போகும் கனவுடனும் காதலுடனும் அறைக்குள் வந்தவன் திகைத்தே போனான்.
அங்கே பிங்க் கலரில், பச்சை கலர் பூ போட்ட நைட்டி அணிந்து படுக்க தலையணையை எடுத்து வைத்து கொண்டிருந்தாள் சத்யா.
“ஆண்ட்டி வந்துட்டாங்க”, என்று நினைத்து கொண்டே திரும்பி பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்தாள். அதுவும் அவன் கண்களில் வழிந்த பாவத்தில் அவள் முகம் சிவந்தே போனது.
“இந்த நேரத்தில் இவன் வருவான்னு தெரிஞ்சிருந்தா சுடிதார் போட்டுருப்பேனே”, என்று நொந்து கொண்டு கவனத்தை திசை திருப்ப “வாங்க கார்த்திக்”, என்றாள்.
அவள் குரலில் கலைந்தவன் “ஆன்… ஹ்ம்ம் கம்பர்ட்டபிளா இருக்கானு கேட்கலாம்னு வந்தேன்”, என்று சொல்லி அவள் முகத்தை பார்த்தான்.
ஆனால் தலை முதல் கால் வரை அவளை ரசிக்க சொல்லி மூளை கட்டளை இட்டது.
அதை “சும்மா இரு”, என்று அடக்கினான்.
“ஹ்ம்ம் உங்க வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆண்ட்டி அழகா வச்சிருக்காங்க”
“இன்னொரு  தடவை உங்க வீடுன்னு சொல்லாத சத்யா. நம்ம வீடுன்னு சொல்லு”, என்று சொன்னான் கார்த்திக்.
இந்த வார்த்தைகளில் ஒரு வித பட படப்புடன்  அவனை பார்த்தாள்.
என்ன கட்டு படுத்தினாலும் அவள் அருகே செல்ல அவன் கால்கள் நடக்க ஆரம்பித்தது. அவள்  அருகில் சென்று விட்டான்.
“இப்ப எதுக்கு இப்படி பக்கத்துல வந்துருக்கான்? அங்க இருந்தே பேச வேண்டியது தான?”, என்று தடுமாறினாள் சத்யா.
அவன் கைகள் அவள் முகத்தை நோக்கி முன்னேறியது. அதை பார்த்தவள் “என்ன…? என்ன கார்த்திக்…?”, என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.
“அது…. அது… காயம் என்ன நிலைமைல இருக்குனு பாக்க வந்தேன். பாக்கலாமா?”
“அரை மணி நேரத்துல காயம் ஆறவா செஞ்சிருக்கும்?”, என்று நினைத்து கொண்டு “ம்ம்”, என்று சொன்னாள்.
அவள் கன்னத்தில் ஒரு கையை வைத்தவன், அவள் நெற்றியில் இன்னொரு கையை வைத்தான்.
அந்த தொடுகையிலும் அவன் அருகாமையிலும் சிலிர்த்து கண்களை மூடி கொண்டாள் சத்யா.
மனதுக்கு இனியவனின் மூச்சு காற்று பட்டால் கூட பெண்கள் மயங்கும் போது, அவன் விரல் தொட்டால் மயங்காமல் இருக்க முடியுமா என்ன?
மூடிய கண்களுடன் அவனுடைய வாசனையை ஆழ்ந்து அனுபவித்தாள் சத்யா.
தன்னுடைய கைகளுக்குள் கண்களை  மூடி அவள் நின்றிருந்த கோலம், அவள் அணிந்திருந்த நைட்டி, எல்லாம் சேர்ந்து  ஒரு ரோஜா வண்ண தாமரை தலை கவிழ்ந்து அமர்ந்திருப்பது போல அவன் கண்ணுக்கு பட்டது.
அவளை இறுக்கி அணைக்க சொல்லி ஒவ்வொரு செல்லும் பர பரத்தது. “செய்றது தப்பு”, என்று மூளைக்கு நூறு சதவீதம் தெரிந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மனது ஒரு சதவீதம் கூட தயாராக இல்லை அவனுக்கு.
ஆனாலும் மனதை கட்டு படுத்தி கொண்டு, காயத்தை பார்த்து விட்டு  கையை அவள் முகத்தில் இருந்து எடுத்தான்.
கண்களை திறந்தவள் அவனை பார்க்காமல் தலை குனிந்தாள்.
அவளுடைய அழகு, நாணம் அனைத்துமே கார்த்திக்கை பாடாய் படுத்தியது.
“நாலு நாள்ல காயம் ஆறிரும் சத்யா. இது உன்னோட வீடு. நிம்மதியா படுத்து தூங்கு”, என்று சொன்னவனின் குரல் மிருதுவாய் வந்தது.
“ஹ்ம்ம்”
“குட் நைட்”
“குட் நைட்”
வெளியே போக காலை திரும்பியவன் மறுபடியும் அவள் புறம் திரும்பி “சத்யா”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
அவன் குரலில் இருந்து மென்மையில் அவனை பார்த்தவள் திகைத்தாள்.
அவன் கண்களில் எதுவோ இருந்தது.  சரக்கு அடிக்காமல் கண்களில் போதை ஏறுமா? ஆனால் அவனுக்கு ஏறி இருந்தது போல இருந்தது. ஒரு நொடிக்கு மேல் அந்த கண்களை பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் “என்ன?”, என்று கேட்டாள்.
அவள் அருகில் நெருங்கி, அவள் கன்னத்தை தாங்கி பிடித்து, அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து “டேக் கேர்”, என்று சொல்லி விட்டு புயலென வெளியேறினான்.
அவனுடைய சிறு தொடுகையிலே சிலிர்த்தவள், இந்த முத்தத்தில் நிலை குலைந்து போனாள்.
அவன்  நெற்றியில் கொடுக்கும் முத்தத்தில் எந்த காமமும் இல்லை தான். ஆனால் அவன் கண்களில் வழிந்த காதல், தன் கன்னத்தை தாங்கும் போது அவன் கைகளில்  இருந்த நடுக்கம், இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியாமல் அவள் கன்னி மனது சலன பட்டது.
கண் முன் இருந்து கண்ணாடியில் அவள் பிம்பத்தை பார்த்தாள். அது அவளை கூட கொஞ்சம் அழகாக காட்டியது.
தன்னை மறந்து நினைவுகளில் மூழ்கி இருந்தவளை “நீ இன்னும் படுக்கலையா? மாத்திரை போட்டது தூக்கம் வரும் மா. படுத்துக்கோ. எதாவது வேணும்னா கேளு”, என்ற தேவகியின் குரல் கலைத்தது.
தேவகியை பார்த்து சிரித்த சத்யா “அதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி. ஆனா அங்கிள் எப்பவும் இங்கயே படுத்துட்டு வேற ரூம்க்கு போனா அவங்களுக்கு தூக்கம் வராது. கஷ்ட படுவாங்களே”, என்றாள்.
“நீ வேற உன் மாமா, தூங்குவாருன்னு நினைக்கிற? சின்ன பசங்க தோத்துருவாங்க. கார்த்திக் கூட அப்படி பண்ண மாட்டான். நைட் முழுக்க செல்லுல கேம் விளையாடிட்டே இருப்பார். தூங்கலையானு கேட்டா, இன்னைக்கு இந்த லெவலை முடிச்சிட்டு தான் தூங்கணும்னு சொல்லுவார். நான், அவரை ப்ளூ வேல் கேம் விளையாடுங்க. அப்ப தான் சுடுகாட்டுக்கு எல்லாம் போகுற திரில் கிடைக்கும்னு கிண்டல் பண்ணுவேன். அந்த அளவுக்கு கேம் அடிக்ட். தூக்கம் வந்தா அவரே தூங்குவார்”
“அப்ப சரி ஆண்ட்டி”
“ஹ்ம்ம் படு சத்யா. கண்ணை மூடி தூங்கு”, என்று சொல்லி அவள் படுத்த பிறகு அவளுக்கு போர்வையை மூடி விட்டாள் தேவகி. அதில் தான் உணர்ந்திராத அன்னை பாசத்தை உணர்ந்தாள் சத்யா.
அவள் கண்கள் தன்னாலே உறக்கத்துக்கு சென்றது.
காலையில் தான் கண் விழித்தாள் சத்யா. கண்களை திறந்து பார்த்தவளுக்கு புது இடம் என்ற உண்மை புரிய சில நொடிகள் ஆனது. நேற்று நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்தது.
அவன் கொடுத்த முத்தமும் நினைவில் வந்து, அவள் முகத்தில் புன்னகையை பூக்க வைத்தது. தேவகி படுத்திருந்த இடத்தை பார்த்தாள். அங்கே அவள் இல்லை. “ஆண்ட்டி சீக்கிரமே எழுந்துட்டாங்க போல”, என்று நினைத்து கொண்டு பாத்ரூம் போய் விட்டு, காலை கடன் எல்லாம் முடித்து விட்டு வந்தாள்.
“நைட்டியோட எப்படி வெளிய போக? நேத்து கார்த்திக்கோட அதிர்ச்சியான பார்வையே சரி இல்லை. அங்கிள் வேற இருப்பாங்க. சுடிதார் மாத்திரலாம்”, என்று நினைத்தவள் காயத்தில் படாதவாறு குளித்து விட்டு சுடிதார் அணிந்து கொண்டு வெளிய வந்தாள்.
தேவகி கிச்சனில் சமைத்து கொண்டிருந்தாள். அங்கே சேகர் போனை நொண்டி கொண்டிருந்தார். “ஆண்ட்டி சொன்னது சரி தான் போல”, என்று நினைத்து சிரித்து கொண்டாள் சத்யா.
“எந்திச்சிட்டியா சத்யா? அடடே குளிக்கவே செஞ்சிட்டியா? நானெல்லாம் அப்புறம் தான் குளிப்பேன். இந்த காலைல எந்திச்சு குளிச்சிட்டு சாமி கும்புடுற பழக்கம் எல்லாம் எனக்கு கிடையவே கிடையாது”, என்று தேவகி சொல்லும் போது “சோம்பேறி தனத்தை உங்க அத்தை எப்படி பெருமையா சொல்றா பாரு”, என்று சிரித்த படியே அங்கு வந்தார் சேகர்.
இருவரையும் பார்த்து சிரித்தாள் சத்யா.
“சோம்பேறி தனத்தை பத்தி உங்க மாமா பேசுறார் பாரு. வயித்துல டயரை கட்டி வச்ச மாதிரி தொப்பையை வச்சிட்டு நம்மளை சொல்றாரு”
“ஹி ஹி சும்மா சொன்னேன் தேவி. ஒரு காபி தாயேன்”, என்று அசடு வழிந்தார் சேகர்.
“இதுக்கு மட்டும் வாயெல்லாம் பல்லாகிருமே. இந்தாங்க. சத்யா இந்தா உனக்கும்”
அப்போது தான் சத்யா அதை உணர்ந்தாள். இவள் ஆண்ட்டி, அங்கிள் என்று சொன்னாலும் அவர்கள் அத்தை, மாமா என்று சொல்லுவதை.
“அவங்களே அப்படி கூப்பிடணும்னு எதிர் பாக்கும் போது எதுக்கு இங்கிலீஸ்ல புளிப்பு காட்டணும்?”, என்று நினைத்து “தேங்க்ஸ் அத்தை”, என்று வாங்கி கொண்டாள். என்ன தான் யோசிச்சாலும் நம்ம தமிழையும் ஒழுங்கா பேச மாட்டோம்.  அதுலயும் இங்கிலீஸ் கலந்துருது.
அவள் அத்தை என்று சொன்னதை அவர்கள் உணர்ந்தாலும் காட்டி கொள்ளாமல் இருந்தார்கள். “ஆனாலும் மாமா உங்களுக்கு ரொம்ப எல்லாம் தொப்பை இல்லை. கொஞ்சமே கொஞ்சம் தான். எங்க அப்பாவை விட கம்மி தான்”,  என்று சிரித்தாள் சத்யா.
அவரும் அவளை பார்த்து புன்னகைத்து விட்டு “வலி குறைச்சிருச்சா?”, என்று கேட்டார்.
“வலி குறைஞ்சிருச்சு மாமா. இப்ப இல்லவே இல்லை”
“ரொம்ப பிளட் லாஸ் ஆகிருக்கு. அதனால பீட்ரூட் ஜூஸ் போட்டு தரேன் குடிக்கணும். இங்க இருக்குற ரெண்டு நாளில் கொஞ்சமாவது ஹெல்த்தியா மாறனும்?”, என்றாள் தேவகி.
“ரெண்டு நாளா?”, என்று திகைத்தாலும் “தேங்க்ஸ் அத்தை. ஆனா அப்பா இன்னைக்கு சாயங்காலம் வந்துருவாங்களே. நாங்க கிளம்பிருவோமே”, என்றாள்.
“இன்னைக்கா? இல்லையே நாளான்னைக்கு தான அண்ணா உன்னை கூப்பிட வாரங்க?’
“அண்ணாவா?”
“உங்க அப்பாவை தான் சொன்னேன் சத்யா”
“ஓ, ஆனா என்கிட்டே சொல்லவே இல்லையே”
“இல்லை மா. நாளான்னைக்கு தான் வருவாங்க.  எப்படியும் நீ இங்க என்ன செய்றன்னு தவிச்சு போய் தான் அண்ணா  இருப்பாங்க. அதோ அங்க போன் இருக்கு பாரு. நீயே பேசிரு”
“ஹ்ம்ம் சரி அத்தை”, என்று எழுந்து போனவள் சண்முகநாதனை அழைத்தாள்.
சீண்டல்  தொடரும்…

Advertisement