Advertisement

இன்று இவளே சீக்கிரம் போய் அவனுக்காக காத்திருந்தாள். அங்கே அவளை தவிர இன்னும் ஐந்து பேர் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள்.
“எல்லாரும் படிக்க இங்க வாரங்க. நாங்க கதை பேச வாரோம்”, என்று நினைத்து கொண்டாள்.
அவனும்  வந்தான். அவனை ரசிக்க தூண்டிய மனதை அடக்கினாள் சத்யா. “இவனை எப்படி என்னால விட்டு கொடுக்க முடியும்?”, என்று நினைத்து மனது சோர்ந்து.
“ஹாய் சத்யா”, என்று சொல்லி கொண்டே அவள் அருகில் அமர்ந்தவன், அவள் முகத்தை பார்த்தான். அவள் முகத்தில் சந்தோசம் இல்லாமல் கவலை மேகம் சூழ்ந்திருந்தது.
“என்ன ஆச்சு இவளுக்கு?”, என்று யோசித்து கொண்டே “டாபிக் என்னன்னு முடிவு பண்ணியா?”, என்று கேட்டான்.
“ப்ச் இல்லை. அதை மறந்தே போய்ட்டேன்”
“நினைச்சேன். இப்படி தான் செய்வேன்னு. சரி நான் நாலு டாபிக் எடுத்துட்டு வந்துருக்கேன். இதுல எது உனக்கு பிடிச்சிருக்குனு பாரு”, என்று சொல்லி கொண்டே அவள் மண்டையில் கொட்டு வைத்தான்.
அந்த தொடுகையில் உயிர்த்தாள் சத்யா.
“எது ஈஸியா இருக்கோ அதை தாங்க”
“நாளுமே சிம்பிள் தான். நீ  இதை எடுத்துக்கோ”
“ஹ்ம்ம், மற்றதையும் கொடுங்க. பிரண்ட்ஸ் கேட்டாங்கன்னா கொடுக்குறேன்”
“ஹ்ம்ம் சரி இந்தா. அப்புறம் ஏன் டல்லா இருக்க? எதாவது இங்கிலீஸ் செமினார் இருக்கா?”
“அதெல்லாம் இல்லை. உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
அவன் மனது குதூகலமானது. “மேடம் லவ் பண்றேன்னு சொல்ல போறாங்களோ?”, என்று நினைத்து மனதுக்குள் சிரித்து கொண்டு “என்ன விஷயம்?”, என்று கேட்டான்.
“அது வந்து…”, என்று ஆரம்பிக்கும் போதே அங்கு இருந்த ஜன்னல் கல்லடி பட்டு உடைந்து சிதறியது.
எல்லாரும் அதிர்ச்சியாக அங்கே பார்த்தார்கள். அவர்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே அடுத்த ஜன்னல் உடைந்தது.
எதுவோ சரி இல்லை என்று நினைத்து அவளையும் அங்கு இருந்தவர்களையும் புக் அடுக்கி வைக்க பட்டிருந்த பகுதிக்கு அழைத்து சென்றான்.
“அங்க கல் எறிஞ்சா உள்ள வரும். இங்கயே இருங்க. லைப்ரரியன் கிட்ட என்னனு கேட்டுட்டு வரேன்”, என்றான் கார்த்திக்.
“நானும் வரேன் அண்ணா”, என்று சொல்லி அவனுடன் அங்கு இருந்த மற்றொரு பையனும் சென்றான்.
அவர்கள் இருவரும் போன பிறகு நான்கு பெண்களும் ஒருவரை ஒருவர் பாத்து கொண்டு “என்ன ஆச்சின்னு தெரியலையே?”, என்று பேசி கொண்டார்கள்.
“போனவனை காணுமே, என்ன ஆச்சு?”, என்று பதறினாள் சத்யா.
அதுக்கு மேல் பொறுக்க முடியாமல் அவன் போன இடத்துக்கே சென்றாள். அங்கே லைப்ரேரியனுடன் பேசி கொண்டிருந்தான் கார்த்திக்.
அவன் முகத்தை பார்த்தாள் சத்யா. கார்த்திக் குழப்பமாக நின்றான்.
லைப்ரரியன் கதவை உள்ளே இருந்து கொண்டே பூட்டி கொண்டிருந்தார்.
“என்ன ஆச்சு சார்? எதுக்கு பூட்டுறீங்க? யாரோ  கல் எறிஞ்சு கண்ணாடி உடைஞ்சிருச்சு சார். வெளிய யார் அப்படி செஞ்சது? நான் கேட்டுட்டே இருக்கேன். நீங்க டென்ஷனா இருக்கீங்க?”, என்றான் கார்த்திக்.
அவன் கேட்ட அடுத்த நொடி அங்கு பறந்து வந்த கல் அந்த அறை கண்ணாடியை உடைத்தது மட்டுமல்லாமல் சத்யா தலையையும் பதம் பார்த்தது.
“ஆ அம்மா”, என்ற படி தலையை பிடித்தாள் சத்யா.
“ஐயோ என்ன ஆச்சு சத்யா? ரத்தம் கொட்டுதே”, என்று அவள் அருகே வந்தான் கார்த்திக்.
“அதோ அங்க இருக்குற பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வா”, என்று கார்த்திக்கிடம் சொன்ன லைப்ரேரியன் அவன் பக்கத்தில் நின்றவனை “அங்க இருந்து ஒரு டம்ளர் தண்ணி எடுத்துட்டு வா பா”, என்று சொல்லி விட்டு சத்யாவை அங்கு இருந்த பெஞ்சில் அமர வைத்தார்.
அந்த பையன் வந்ததும் தண்ணீரை வாங்கி அவளை குடிக்க சொன்னவர் கார்த்திக்கை காயத்தை துடைத்து மருந்து போட சொன்னார்.
அவன் துடைக்க துடைக்க ரத்தம் வந்து கொண்டே இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அவள் அழுவதை பார்த்து அவன் இதயமே கதறியது உண்மை.
“சார் ரத்தம் வந்துட்டே இருக்கு சார். உடனே டிஸ்பென்சரி கூட்டிட்டு போகணும்”, என்றான் கார்த்திக்.
“டிஸ்பென்சரியா? இப்ப வெளியவே போக முடியாது கார்த்திக். உயிருக்கே ஆபத்து”, என்று பதறினார் லைப்ரரியன்.
“என்ன சார் சொல்றீங்க? சத்யாவுக்கு ரத்தம் வந்துட்டே இருக்கு சார்”
“கொஞ்சம் டைட்டா கட்டு போடு பா. இப்ப நின்னுரும். நாம கொஞ்ச நேரத்தில் போயிரலாம்”
அவள் காயத்துக்கு மருந்திட்டு கொண்டே “இப்பவாது சொல்லுங்க சார். என்ன ஆச்சு? வெளிய என்ன பிரச்சனை?”, என்று கேட்டான் கார்த்திக்.
“அது வந்து..”, என்று அவர் ஆரம்பிக்கும் போதே அவருடைய போன் அடித்தது.
எடுத்து பேசியவர் “உள்ள தான் சார் இருக்கோம். ஏழு பொண்ணுங்க, ரெண்டு பசங்க இருக்காங்க. அப்புறம் ஒரு பொண்ணுக்கு கல் அடி பட்டுருச்சு. கண்ணாடில பட்டு அவ தலைல விழாம நேரா விழுந்திருந்தா மண்டையே பிளந்திருக்கும். பர்ஸ்ட் எய்ட் கொடுத்துட்டு இருக்கோம் சார்”, என்றார்.
….
“ஐயோ என்ன சார் சொல்றீங்க?”
….
“சரி சார். நான் பத்திரமா பாத்துக்குறேன்”
“சரி சார்”, என்ற படியே போனை வைத்தார்.
எல்லாரும் பதட்டத்துடன் அவர் முகத்தை பார்த்தார்கள்.
“என்ன பிரச்சனை சார்?”, என்று கேட்டான் கார்த்திக்.
“கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்ல பைனல் இயர் படிக்கிற ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணி திருட்டு தனமா கல்யாணம் பண்ணி காலேஜ்க்கு வந்துருக்காங்க. அவங்க கிளாஸ் பசங்களும், சப்போர்ட் பண்ணிருக்காங்க. அந்த பொண்ணோட அப்பா பெரிய அரசியல் வாதியாம். காலேஜ்ல தான் அவங்க ஒளிஞ்சு இருக்காங்கனு நினைச்சு இப்ப தான் உள்ள புகுந்துட்டாங்களாம். எல்லா கிளாஸ் ஜன்னல் எல்லாம் உடைச்சு பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம். அதுவும் ரெண்டு பையன்களை நல்ல அடிச்சிருக்காங்க. ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போயிருக்கங்களாம். பிரின்சிபால்க்கு அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சிருக்கு. போலீசுக்கு கால் பண்ணிருக்கார். அவங்க வர வரைக்கும் வெளிய போக வேண்டாம்னு சொன்னார்”, என்று சொன்ன லைப்ரரியன் “பதட்ட படாதீங்க போலீஸ் வந்த உடனே சரியாகிரும். வீட்டுக்கு போன் பண்ணனும்னா, அங்க இருக்குற போன்ல பண்ணிக்கோங்க. கார்த்திக் அந்த பொண்ணை கொஞ்சம் பாத்துக்கோ. அப்புறம் ரெண்டு பேரும் எந்திக்காதீங்க. திருப்பியும் கல் எறியலாம். அப்படியே உக்காந்துருங்க. அப்புறம் தம்பி நீ என் கூட வா. கம்ப்யூட்டர் ரூம்ல எத்தனை பேர் இருக்காங்கன்னு பாத்துட்டு வா. நான் மித்த பிள்ளைங்களை தைரியமா இருக்க சொல்லணும்”, என்று சொல்லி விட்டு நகர்ந்தார். அவருடன் அந்த பையனும் சென்றான்.
“ரொம்ப வலிக்குதா டா?”, என்று கேட்டான் கார்த்திக்.
“ஹ்ம்ம் ஆமா”
“உன்னை எவன் அங்க இருந்து வர சொன்னான். நிக்க சொல்லிட்டு தான வந்தேன்?”
“உங்களுக்கு என்ன ஆச்சோன்னு பயமா இருந்தது அதான்”
அவள் பதிலில் வேகம் தணிந்தவன் “பயமா இருக்கா?”, என்று கேட்டான்.
“இல்லையே”, என்று சிரித்தாள் சத்யா.
“ஏன்?”
“நீங்க இருக்கீங்களே. அப்புறம் என்ன பயம்? காயம் ஆழமா பட்டுருக்கா?”
“டாக்டர் கிட்ட போனா தான் சத்யா தெரியும். இரு நான் அம்மாவை காலேஜ்க்கு வெளிய வந்து நிக்க சொல்றேன்”
“ஆண்ட்டி பய பட போறாங்க”
“அதெல்லாம் பிரச்சனை இல்லை. வீட்டுக்கு லேட்டா போனா தான் பய படுவாங்க. அப்பாவை கூட்டிட்டு தான் வருவாங்க. அதனால பிரச்சனை இல்லை”, என்று சொல்லி விட்டு தன்னுடைய போன் எடுத்து தேவகியை அழைத்தான்.
தேவகி எடுத்தவுடன் விசயத்தை சுருக்கமாக சொன்னான். கூடவே சத்யா இருப்பதையும்.
“அவளை பாத்துக்கோ டா. நானும் அப்பாவும் பத்து நிமிசத்துல அங்க இருப்போம்”
“உள்ள வர வேண்டாம் மா. பிரச்சனை பெருசா இருக்கும் போல? போலீஸ் இன்னும் வரலையாம். காலேஜ் வெளியவே ஏதாவது கடை முன்னாடி கார் குள்ளே உக்காந்துருங்க சரியா?”
“ஹ்ம்ம் சரி டா பாத்து இருங்க”
“சரி மா”, என்று சொல்லி விட்டு வைத்தவன், “நீ உங்க அப்பாவுக்கு போன் பண்ண போறியா சத்யா?”, என்று கேட்டான்.
“வேண்டாம். அப்பா கிட்ட  சொன்னா தேவை இல்லாம பயப்படுவாங்க. நாளைக்கு பேசிக்கிறேன்”
இந்த இடத்தில், இப்படி பிரச்சனை இருக்கும் போது அவன் கூட இல்லாமல் இருந்தால் பயந்திருப்பாளோ என்னவோ? ஆனால் அவன் உடன் இருப்பதால் ஒரு துளி பயம் கூட இல்லாமல் ஏதோ பிக்னிக் வந்தது போல அமர்ந்திருந்தாள்.
இவர்கள் இங்கே சாதாரணமாக இருக்க, வெளியே பிரச்சனை பெரியதாக இருந்தது. ஓடி போன பெண்ணின் பக்கம் உள்ள ஆள்கள் ஒரு புறம் என்றால், அந்த பையனை தேடி மொத்த குடும்பமே வந்துவிட்டது.
அது மட்டும் இல்லாமல் பிள்ளைங்க இன்னும் வீட்டுக்கு வர வில்லை என்று மற்ற மாணவர்களின் பெற்றவர்களும் வந்து நிலைமை சரி இல்லாததை கண்டு பயந்து அலறினார்கள்.
ஒரு வழியாக போலீஸ் வந்து சேர்ந்தது.  இரு கூட்டத்தையும் அவர்கள் சமாதான படுத்த “ஓடி போனவங்களை வெட்டாம விட மாட்டோம்”, என்று பொங்கி கொண்டிருந்தார்கள் அவர்கள். மணி ஆறு அறையை தொட்டது.
சத்யா தலையில் இருந்து ரத்தம் வருவது நின்றிருந்தது. அவள் தான் சோர்ந்து போய் இருந்தாள்.
தலை விண் விண்ணென்று தெறித்தது. அதை பார்த்ததும் பதறியவன் “வலிக்குதா கண்ணம்மா?”, என்று கேட்டான்.
அவன் சொன்ன வார்த்தையிலும், குரலில் இருந்து தவிப்பிலும் அவன் முகத்தை ஆசையாக நிமிர்ந்து பார்த்தாள் சத்யா.
அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல் “ரொம்ப சோர்ந்து போய்ட்ட. இன்னொரு டம்ளர்  தண்ணி தரவா? கொஞ்ச நேரத்தில் வெளிய போன உடனே டிஸ்பென்சரிக்கு போயிரலாம்”, என்றான்.
“நான் உங்க கையை பிடிச்சிக்கவா?”, என்று கேட்டாள் சத்யா.
“கரும்பு தின்ன கூலியா?”, என்று நினைத்து கொண்டு அவள் அருகே அமர்ந்தான். அவன் கையை பிடித்தவள் அவன் தோளிலே சாய்ந்து விட்டாள். ஏதோ எல்லை இல்லாத நிம்மதி கிடைத்தது இருவருக்கும்.
லைப்ரேரியன் அங்கு வந்தார். அப்போதும் அவர்கள் விலகாமல் அதே பொசிசனில் தான் இருந்தார்கள். மற்ற நேரமாக இருந்தால் “இது காலேஜா இல்லை பார்க்கா?”, என்று கேட்டிருப்பார். ஆனால் அவள் தலையில் இருந்து ரத்தம் போனதை பார்த்தவர் “இப்ப ரத்தம் நின்னுருச்சா?”, என்று கேட்டார். அவர் குரலில் கண் விழித்தவள் விலக நினைத்தாள். ஆனால் சோர்வாக இருந்தது.
அவளை “அப்படியே சாஞ்சிக்கோ”, என்றவன் “ரத்தம் நின்னுருச்சு சார். ஆனா சோர்வா ஆகிட்டா”, என்றான் கார்த்திக்.
“அடி பட்டுருக்குள்ள அப்படி தான் இருக்கும்”
“வெளிய என்ன ஆச்சு சார்?”
“போலீஸ் ரெண்டு குரூப்பையும் சமாதானம் பண்ணிட்டு இருக்காங்களாம்”
“அந்த ஜோடி யாரு சார்?”
“ரகு, பூர்ணிமா. அவங்களை  உனக்கு தெரியுமா?”
“ரகுவை தெரியும் சார். ஆனா பழக்கம் இல்லை. இப்ப என்ன சார் ஆகும்? வீட்டுக்கு போயிறலாமா?”
“எனக்கே தெரியலை பா. நான் நேரம் கழிச்சு போனா என் பையன் என் பொண்டாட்டியை ஒரு வழி பண்ணிருவான். இப்ப தான் போன் பண்ணி விசயத்தை சொன்னேன். அவளும் பதறிட்டு தான் இருக்கா”
“ரெண்டு பேர் தப்பு செஞ்சா காலேஜை எதுக்கு சார் நாசம் பண்றாங்க?”
“கல்யாணம் பண்ணிட்டு ஓடி போயிருந்தா பிரச்சனை பெருசா ஆகியிருக்காது. ஆனா இங்க ஒளிஞ்சு இருக்காங்களே. அவங்களை தான் போலீஸ் தேடிட்டு இருக்காங்க. எந்த கிளாஸ்ல ஒளிஞ்சு இருக்காங்களோ தெரியலை”
லைப்ரேரியன் அப்படி சொல்லும் போது அந்த ஜோடி  போலீசார் கையில் சிக்கினார்கள்.
லைப்ரேரியை திறக்க சொல்லி பிரின்சிபால் போன் செய்ததும் அனைவரும் வெளியே வந்தார்கள்.
கார்த்திக் அருகே ஒட்டி ஒட்டி நடந்து வந்தாள் சத்யா. இருவருடைய பேகையும் கார்த்திக் ஒரு கையில் பிடித்து கொண்டு அவளை ஒரு கையில் பிடித்திருந்தான். பாதுகாப்பாக உணர்ந்தாள் சத்யா. 
அங்கே சமாதான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே அடை பட்டிருந்த ஸ்டுடண்ட்ஸ், ஸ்டாப் அனைவரையும் வெளியே வர சொன்னார்கள்.   “எதுனாலும் ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம்”, என்று சொல்லி அந்த ஜோடியை போலீஸ் பாதுகாப்புடன் ஜீப்பில் ஏற்றியவர்கள் அவர்களுடைய பெற்றோரை போலீஸ் ஸ்டேஷன்க்கு வர சொல்லி அனுப்பினார்கள். அது மட்டும் இல்லாமல் பிரச்சனை செய்தவர்களை போலீஸ் பிடித்து ஜீப்பில் ஏற்றினார்கள்.
பிள்ளைகளை தேடி வந்த பெற்றோர்களுடன் மாணவர்கள் சென்றார்கள்.
அப்போது தான் சேகரும், தேவகியும் அங்கு வந்தார்கள். அவர்களை கார்த்திக்கும் பார்த்து விட்டான்.
“சார் ரொம்ப டேமேஜ் பண்ணிருக்காங்க. இன்சூரன்ஸ் க்ளைம் பண்ணுங்க. அப்புறம், அந்த பொண்ணோட அப்பா ரொம்ப மோசமான ஆளு. அந்த பையனோட பிரண்ட்ஸை கூட கொல்ல தேடிட்டு இருக்காங்கன்னு நியூஸ் வருது. காலேஜ்ல வச்சு அப்படி எதாவது நடந்தா எங்களால முழு டைமும் அந்த பசங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. அதுவே வெளியன்னா அவங்க குடும்பத்துல பேசி சமாதானம் பண்ணிருவோம். நீங்க எப்படியும் காலேஜ் சரி பண்ண ஒரு வாரம் ஆகும். கூட ஒரு வாரம் லீவ் விட்டா காலேஜ் பேர் தப்பிக்கும் அதான்”, என்றார் அந்த போலீஸ் ஆபிசர்.
“சரி சார். நான் கரஸ்பாண்டெண்ட் கிட்ட பேசுறேன். சார் வந்துட்டே இருக்காங்க”
“ஓகே வந்ததும் ஸ்டேஷன்க்கு வந்து கம்பளைண்ட் கொடுத்துருங்க”, என்று சொல்லி விட்டு அவர் போன பிறகு நின்றிருந்தவர்கள் பக்கம் பார்வையை திருப்பினார் பிரின்சிபால்.
சீண்டல்  தொடரும்….

Advertisement