Advertisement

அத்தியாயம் 8 
கூட்டத்தில் என்
முகத்தை தேடிய
உன் மெல்லிய படபடப்பை
ரசித்தேன் ஒளிந்திருந்து!!!
அன்று இரவு ஹாஸ்டல் மெஸ்ஸில் சாப்பிட அமர்ந்திருந்தாள் சத்யா.
அப்போது அவள் எதிரே யாரோ நிற்பது போல தெரிந்து தலையை நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே அவர்கள் டிபார்ட்மென்ட் செகண்ட் இயர் வைசாலி நின்றிருந்தாள்.
“இப்ப எதுக்கு இவ என்னை இப்படி பாத்துட்டு இருக்கிறா?”, என்று உள்ளுக்குள்ளே திகைத்தாலும் அவளை நேர் பார்வை பார்த்தாள் சத்யா.
பக்கத்தில் இருந்த கோகிலாவுக்கும் திகைப்பு தான்.
அவர்கள் பார்வையை எல்லாம் பொருட்படுத்தாமல் “சாப்பிட்டு முடிச்சு என்னோட ரூம்க்கு வந்திட்டு போ”, என்று சொன்னாள் வைசாலி.
குழப்பமாய் புருவம் உயர்த்திய சத்யா “எதுக்கு?”, என்று கேட்டாள்.
“எதுக்கா? சீனியர் சொன்னா கேக்கணும்னு தெரியாதா? நீ வா. அப்புறம் சொல்றேன்”, என்று திமிராய் சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“என்ன சத்யா இது? வந்தா, பேசுனா போயிட்டே இருக்கா”, என்றாள் கோகிலா.
“எனக்கும் தெரியல கோகிலா. நாம தேர்ட் இயர், பைனல் இயர் சீனியர் கூட எல்லாம் நல்லா பேசிருக்கோம். அவங்களும் ஜாலியா இருப்பாங்க. ஆனா செகண்ட் இயர் திமிர் பிடிச்சவங்கன்னு சொல்லுவாங்களே. அது மட்டும் இல்லாம இவளும் எப்படி திமிரா கூப்பிட்டுட்டு போறா பாரு. எதுக்கா இருக்கும்?”
“தெரியலையே”
“சரி நீயும் என் கூட வா”
“சரி டி. ஆனா இப்ப சாப்பாடு தான் முக்கியம். எதையும் யோசிக்காம சாப்பிடு. இப்ப விட்டா அடுத்த வாரம் தான் இந்த நல்ல சாப்பாடு கிடைக்கும்”, என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள் கோகிலா.
சிறிது நேரம் கழித்து செகண்ட் இயர் ரூம்ஸ் முன்னால் இருவரும் நின்றார்கள்.
“எந்த ரூம்னு தெரியலையே”, என்றாள் சத்யா.
“எனக்கும் தெரியலை சத்யா. இரு கேப்போம்”, என்று நினைத்து கொண்டு எதிரே வந்தவளிடம் “அக்கா, இங்க வைசாலி அக்கா ரூம் எங்க இருக்கு?”, என்று கேட்டாள் கோகிலா.
“ஓ பர்ஸ்ட் இயரா? அதோ அந்த ரூம் தான்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் அவள்.
இருவரும் வந்த பதட்டத்தை மறைத்து கொண்டு அந்த அறை கதவை தட்டினார்கள்.
கதவை திறந்தது வைசாலி தான். “உன்னை மட்டும் தான வர சொன்னேன்? அவளையும் கூட்டிட்டு வந்துருக்க. சரி உள்ள வாங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
உள்ளே இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். அங்கு இருந்த சேரில் இருவரையும் உக்கார சொன்னவள் அவர்கள் எதிரே கட்டிலில் அமர்ந்தாள்.
“இன்னைக்கு உன்னை லைப்ரரில கார்த்திக் பக்கத்துல வச்சு பாத்தேன்”, என்று ஆரம்பித்தாள் வைசாலி.
“அட பாவி, இன்னைக்கு பாத்ததை மறைச்சிட்டாளே. போன உடனே சித்ரா கிட்ட சொல்லணும்”, என்று நினைத்து கொண்டு சத்யாவை முறைத்தாள் கோகிலா.
ஆனால் அவள் பார்வையை எல்லாம் கண்டு கொள்ளாமல் “என்னையும் கார்த்திக்கையும் சேத்து வச்சு பாத்தாளா? ஐயோ அவன் கழுத்துல எல்லாம் கையை வச்சிருந்தேனே? அதையும் பாத்திருப்பாளோ?”, என்று யோசித்து கொண்டிருந்தாள் சத்யா.
“அவன் கூட நீ பேசிட்டு இருந்ததை பார்த்து எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எங்க கிளாஸ் ஜஸ்டின் உன்கிட்ட வம்பு பண்ணப்ப, கார்த்திக் தான் உன்னை காப்பாத்தினானாமே. பிள்ளைங்க சொன்னாங்க. அதனால தான் அவனை உனக்கு தெரியுமான்னு கேக்க கூப்பிட்டேன்?”, என்று கேட்டாள் வைசாலி.
“அப்பாடி இவ பேசினதை மட்டும் தான் பாத்துருக்கா”, என்று நினைத்து கொண்டு “ம்ம்”, கொட்டினாள் சத்யா.
“ஹ்ம்ம் என்ன பேசிட்டு இருந்தீங்க?”
“நாங்க என்ன பேசுனா இவளுக்கென்ன? எதுக்கு இப்படி கேட்டுட்டு இருக்கா?”, என்று கோபமாக வந்தாலும் “அடுத்த வாரம் ஒரு செமினார் இருக்குன்னு சொன்னாங்க. நான் பயந்த சுபாவம். அதனால கலந்துக்கிட்டா தைரியம் கிடைக்கும்னு சொன்னாங்க”, என்றாள்.
கோகிலா மைன்ட் வாய்ஸ் “பயந்த சுபாவமா? இவளா? இன்னைக்கு சத்யாவை கலாய்க்க மேட்டர் சிக்கிட்டு”, என்று  நினைத்து கொண்டு அவர்கள் பேச்சை கவனித்தாள். கார்த்திக் பற்றிய பேச்சை கேட்ட உடனே குதூகலமாக ஆகிவிட்டாள் கோகிலா.
“கார்த்திக் எப்பவுமே சுவீட். எப்படி அட்வைஸ் பண்ணிருக்கான் பாரு. அவன் எந்த பொண்ணு கிட்ட பேசியும் நான் பாத்தது இல்லை. உன்கிட்ட மட்டும் தான் அவன் பேசுறான். அதனால…..”, என்று இழுத்தாள் வைசாலி.
“எந்த பொண்ணு கூடவும் பேசாதவன் என்கிட்ட மட்டும் பேசுறானா?”, என்று நினைத்து பெருமையாக இருந்தது சத்யாவுக்கு. 
“ஆனா இப்ப எதுக்கு இவ இதை எல்லாம் பேசுறா?”, என்று யோசித்து “அதனால என்னக்கா?”, என்று கேட்டாள்.
“கார்த்திக்கை நான் காலேஜ்க்கு வந்த முதல் நாளே பாத்துட்டேன்”
“ம்ம்”
“பாத்த அன்னைல இருந்து அவன் தான் என் மனசுல நிறைஞ்சு இருக்கான்”
“என்னது????”, என்று அதிர்ச்சியான சத்யா கோகிலாவை பார்த்தாள். அவள் சிரிப்பை அடக்குவது தெரிந்தது. அவளை முறைத்து விட்டு வைஷாலியை பார்த்தாள்.
“நீ ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற? நிஜமா தான் சொல்றேன். நான் கார்த்திக்கை ரொம்ப விரும்புறேன். இங்க பார். அவனோட போட்டோ எல்லாம் சேகரிச்சு வச்சிருக்கேன். அவன் பிரைஸ் வாங்குறப்ப எல்லாம் நான் போட்டோ எடுத்துருவேன்”
உடம்பு முழுக்க மிளகாயை அரைத்து பூசியது போல எரிச்சலில் அமர்ந்திருந்தாள் சத்யா. “இந்த ஸ்டடி பெல்  அடிச்சா தேவலை. இங்க இருந்து ஓடிறலாம். இல்லைனா இந்த புலம்பல் எல்லாம் கேக்க வேண்டி இருக்கு.  இவ எப்படி கார்த்திக்கை லவ் பண்றேன்னு சொல்லலாம்?”, என்று நினைத்து மனதுக்குள் வைஷாலியை தாளித்தாள் சத்யா.
ஆனால் எதையும் கவனிக்காமல் கண்களில் கனவு மிதக்க, அவள் காதல் கதையை சொல்லி கொண்டிருந்தாள் வைசாலி.
எரிச்சலோடு கோகிலாவை பார்த்தாள். அவள் இன்னமும் சிரிப்பை அடக்கி கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.
ஒருவாறு தைரியத்தை வர வழைத்து கொண்டு “இதெல்லாம் எதுக்குக்கா என்கிட்ட சொல்றீங்க?”, என்று கேட்டாள் சத்யா.
“நான் சொன்னதை எல்லாம் அவன் கிட்ட போய் நீ தான சொல்ல போற? அதனால தான் உன்கிட்ட சொல்றேன்”, என்று குண்டை தூக்கி போட்டாள் வைசாலி.
“என்னது????”, என்று மறுபடியும் அதிர்ச்சியானாள் சத்யா. கோகிலா “ஹா ஹா”, என்று கத்தி சிரித்தே விட்டாள்.
அவளை வைசாலி முறைத்ததை பார்த்த பின்னர் தான் அவள் சிரிப்பு நின்றது. அதுவும் வாயில் கையை பொத்தி கொண்டு சிரித்தாள் கோகிலா.
“நீ இனி எப்ப கார்த்திக்கை பாப்ப?”, என்று கேட்டாள் வைசாலி.
“நாளைக்கு சாயங்காலம் பாப்பேன்”
“நாளைக்கா, எனக்கு லேப் முடிய நேரம் ஆகுமே”
“இவளுக்கு லேப் முடிஞ்சா என்ன? முடியாட்டி எனக்கு என்ன?”, என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் சத்யா.
“சரி நீ நாளைக்கே கார்த்திக் கிட்ட நான் அவனை விரும்புறேன்னு சொல்லிரு. சரியா சத்யா?”
“நானா? அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ஸ்டடிக்கு நேரம் ஆயிருச்சு. நாங்க கிளம்புறோம். வா கோகிலா”, என்று சொல்லி விட்டு எழுந்து விட்டாள்.
“ஏய் இரு இரு. என்ன அதுக்குள்ளே போற? ப்ளீஸ் சத்யா. அவன் கிட்ட பேச பயமா இருக்கு. அடிச்சி வச்சிட்டான்னா மானம் போயிரும். உன்கிட்ட நல்லா தான பேசுறான்? நீ சொல்லு பா”, என்று  விட்டால் காலிலே விழுந்து விடுபவள் போல கெஞ்சினாள்.
“லவ் எல்லாம் அவங்க அவங்க தான் சொல்லணும். அடுத்தவங்களை அனுப்ப கூடாது”
“வேற வழி இல்லாம தான உன்கிட்ட ஹெல்ப் கேக்குறேன்”
“ஹ்ம்ம் சரி சொல்றேன்”
“கண்டிப்பா சொல்லுவ தான?”
“ஹ்ம்ம் சொல்றேன்”, என்று எழுந்தவள் கையில் இருந்த கார்த்திக் போட்டோக்களை அவளிடம் திருப்பி கொடுக்க மனதில்லாமல், “இந்த போட்டோஸ் நான் கொண்டு போகட்டுமா? அது… அது… வந்து இதை காட்டி தான் உங்க லவ்வை சொல்ல முடியும். அதுக்கு தான்”, என்றாள்.
“கண்டிப்பா சத்யா. நீ எனக்காக பேசுறதே போதும். எடுத்துட்டு போ”
“அப்பாடி”, என்ற விடுதலை உணர்வுடன் சத்யாவும், கோகிலாவும் வெளியே வந்தார்கள்.
“ஹா ஹா, செம காமெடி”, என்று சிரித்தாள் கோகிலா.
“கோகிலா இப்ப எதுக்கு சிரிக்கிற? அப்பவும் சிரிச்ச.  எனக்கு எரிச்சலா இருக்கு”, என்றாள் சத்யா.
“உனக்கு எரிச்சலா இருக்கு. எனக்கு சிரிப்பா இருக்கு. ஹா ஹா “
“அதான் ஏன்?”
“ரூம்க்கு வா சொல்றேன்”, என்று மறுபடியும் சிரித்தாள்.
முகத்தை உம்மென்று வைத்து கொண்டு அறைக்கு சென்றாள் சத்யா.
“நான் ஜோ கூட சாப்பிட்டு வந்து உங்களை தேடுறேன். ரெண்டு பேரையும் காணும். எங்க போனீங்க?”, என்று கேட்டாள் சித்ரா.
“ஹா ஹா, ஒரு சரி காமெடி சித்ரா. அதை தான் பாத்துட்டு வாரோம்”, என்று சிரித்தாள் கோகிலா. சத்யா அவளை முறைத்தாள்.
“என்ன நீ சிரிக்கிற? சத்யா முறைக்கிறா? என்ன ஆச்சு? சீக்கிரம் சொல்லு டி”
“ஹா ஹா அதுவா? நம்ம சீனியர் வைசாலி இல்ல?”
“ஆமா அந்த நெட்ட கொக்குக்கு என்ன?”
“அவ… ஹா ஹா…. அவ கார்த்திக் அண்ணாவை லவ் பண்றாளாம்”
“என்னது????”
“ஆமா சித்ரா. அதுக்கு தான் சத்யா கோபமா இருக்கா”
“அப்படியா சத்யா?”
“ஆமா சித்ரா. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தட்டிட்டு போற மாதிரி என்கிட்டயே கார்த்திக்கை லவ் பண்றேன்னு சொல்றா? எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? அப்படியே அவ தலை முடியை எல்லாம் ஆஞ்சி விடணும் போல இருக்கு”, என்று திட்டி தீர்த்தாள் சத்யா.
“ஆமா இதுல காத்திருந்தவன் யாரு? பொண்டாட்டி யாரு? நேத்து வந்தவன் யாரு?”, என்று அறிவாளி தனமாக கேள்வி கேட்டாள் சித்ரா.
அவள் கேள்வியில் “ஹா ஹா, என்னால முடியலை. ஹா ஹா சித்ரா சூப்பர் கேள்வி”, என்று விழுந்து விழுந்து சிரித்தாள் கோகிலா.
அவளை எரித்து விடுவது போல முறைத்தாள் சத்யா.
சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டே இருந்தாள் கோகிலா. அவள் சிரிப்பு இப்போது சித்ராவையும் தொற்றி கொண்டது.
“எப்படி சித்து உன்னால இப்படி எல்லாம் கேள்வி கேக்க முடியுது ஹா ஹா”, என்று மறுபடியும் சிரித்தாள் கோகிலா.
“ஏய் சும்மா இரு டி. அவளே கடுப்புல முறைக்கிறா? நீ சிரிச்சு வெறி ஏத்தாத?”, என்றாள் சித்ரா. 
“இப்ப எதுக்கு அவ கோபமா இருக்கான்னு கேளு சித்ரா. யாரோ யாரையோ லவ் பண்ணா அப்படியான்னு கேட்டுட்டு விட்டுற வேண்டியது தான?”, என்றாள் கோகிலா.
“அதானே? நாம லவ் லவ் னு கிண்டல் பண்ணும் போது எல்லாம் சத்யா அதை இல்லை இல்லைனு தான சொல்லிருக்கா. இப்ப வேற யாரோ கார்த்திக் அண்ணாவை  லவ் பண்றதுக்கு இவ ஏன் உம்முன்னு இருக்கா?”
“நல்லா கேளு சித்ரா. லவ் இல்லைன்னா இவளுக்கு இப்ப ஏன் கோபம் வரணும்”
“நானே எரிச்சலில் இருக்கேன். ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம இருங்களேன்”, என்றாள் சத்யா.
“அவ கிடக்கா. நீ சொல்லு டி கோகிலா. என்ன தான் ஆச்சு?”, என்று கேட்டாள் சித்ரா.
“திடிர்னு சத்யாவை ரூமுக்கு வான்னு கூப்பிட்டா டி. ரெண்டு பேரும் போனோம். அப்ப தான் ரெண்டு வருசமா அண்ணாவை லவ் பண்றேன்னு சொல்றா. அங்க பாரு சத்யா கையில் இருக்குற போட்டோ எல்லாம் கார்த்திக் அண்ணாவோடது தான். அவ தான் எடுத்துருக்கா”
“சரி இதை எல்லாம் எதுக்கு உங்க கிட்ட சொன்னா?”
“இரு சொல்றேன். இன்னைக்கு சாயங்காலம் சத்யா நமக்கு டிமிக்கி கொடுத்துட்டு கார்த்திக் அண்ணாவை பாக்க லைப்ரரிக்கு போயிருக்கா”
“அட பாவி, புக்  எடுக்க தானே போறேன்னு சொன்னா. சொல்லவே இல்லை. ஆமா அது உனக்கு எப்படி தெரியும்?”
“அந்த பஞ்சாயத்தை அப்புறம் வச்சிக்கலாம். இவ அந்த அண்ணாவை பாக்க போனது எனக்கு எங்க தெரியும்? வைசாலி தான் சொன்னா”
“ஓ அப்புறம் என்ன ஆச்சு?”
“அப்புறம் தான் காமெடியே”
“என்ன டி சொல்லு?”
“சத்யா கிட்ட அந்த அண்ணா நல்லா பேசுவாங்கள்ல? அதனால இவ தான் வைசாலி லவ் பண்றதை கார்த்திக் அண்ணா கிட்ட சொல்லணுமாம்?”
“என்னது? ஹா ஹா எனக்கு இப்ப தான் காத்திருந்தவன் யாரு? பொண்டாட்டி யாரு? நேத்து வந்தவ யாருன்னு புரிஞ்சது”, என்று சிரித்தாள் சித்ரா.
“ஹ்ம்ம் அதான் என்னால சிரிப்பை அடக்கவே முடியலை. அப்ப சத்யா முகம் போன போக்கை நீ பாத்துருக்கணுமே? தன்னோட லவ்வர்கிட்டயே இன்னொருத்திக்காக தூது போக சொன்னா எப்படி இருக்கும்?”
“நான் ஒன்னும் லவ் பண்ணலை”, என்று இடையில் புகுந்து சொன்னாள் சத்யா.
“சரி அப்ப நீ லவ் பண்ணலை. அப்ப வைசாலி லவ் பத்தி அண்ணா கிட்ட சொல்லு. பாவம் வைசாலியோட லவ்வாவது சேரட்டும்”,  என்று சொல்லி சத்யாவிடம் இரண்டு அடிகளை வாங்கி கொண்டாள் கோகிலா.
“நான் எப்படி கோகிலா அவங்க கிட்ட அவ லவ்வை சொல்ல முடியும்? என்னால முடியாது?”
“ஏன்?”
“ஏன்னா எனக்கு சொல்ல தெரியலை”
“எங்களுக்கு தெரியும். உனக்கு கார்த்திக் அண்ணா மேல அன்பு இருக்கு. நாங்க அவங்க கூட உன்னை சேத்து வச்சி பேசினா நீ சும்மா இருங்க இருங்கன்னு சிணுங்குவியே ஒளிஞ்சு கோப பட மாட்ட. இப்ப அவ விரும்புறேன்னு சொன்ன உடனே உனக்கு கோபம் வருது. இதை ஒத்துக்க தான் மனசு வரலை. நல்ல யோசி உனக்கு முடிவு தெரியும்”, என்று சொல்லி விட்டு கோகிலாவும் சித்ராவும் கதை பேச ஆரம்பித்தார்கள்.
என்ன யோசித்தும் எரிச்சலாக இருந்தது சத்யாவுக்கு. எங்க போனாலும் கார்த்திக்கை எல்லா பெண்களும் பாராட்டுவது பெருமையாக இருந்தாலும், எல்லாரும் அவனை சைட் அடிப்பது அவளுக்கு இதய நோயை உண்டாக்கியது. 
“எப்படி கார்த்திக்கை எல்லாரும் பாக்கலாம். அவன் ஏன் இப்படி ஹீரோ மாதிரி சுத்திகிட்டு இருக்கான்?”, என்று நினைத்து மொத்த கோபமும் அவன் மேல் திரும்பியது.
கைகளில் இருந்த அவனுடைய புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வை இட்டாள் சத்யா. அவன் முகத்தை பார்த்ததும் அவள் கோபம் எல்லாம் வடிவது போல இருந்தது.
“தொட்டு எல்லாம் பேசுறான். அவனுக்கு என்னை பிடிக்குமா? என்கிட்ட பிரண்டா பழகுறதை நான் தான் தப்பா எடுக்குறேனா? என் மனசு தான் கெட்ட மனசா இருக்கா?”
“இவனை யாரு இப்படி நல்லவனா, அழகானவனா பிறக்க சொன்னது. நாளைக்கு வைசாலி பத்தி அவன் கிட்ட என்ன சொல்லணும்? சொன்னா அவன் என்ன சொல்லுவான்? சரி நானும் வைஷாலியை விரும்புறேன்னு சொல்லிருவானோ? அப்படி சொன்னா என்னால தாங்க முடியுமா? முடியாது, முடியவே முடியாது. அவனை பாக்காம இருக்கவே கஷ்டமா இருக்கு. இதுல மொத்தமும் விட்டு கொடுத்துட்டா செத்தே போயிருவேன்”
பலவாறு சிந்தித்து கொண்டே இருந்தாள் சத்யா. இடையில் அப்பா நினைவும் வந்தது. அப்போது மனது குற்றவுணர்ச்சியில் மேலும் வருந்தியது.
“இதுக்கு முடிவு கிடைக்காம என்னால தூங்க கூட முடியாது”, என்று நினைத்து கொண்டு அடுத்த நாளுக்காக காத்திருந்தாள் சத்யா.
அடுத்த நாளும் வந்தது.  அன்று மாலை, “கிளம்பலாமா?”, என்று கேட்ட கோகிலாவை பார்த்து திரு திருவென்று முழித்தாள் சத்யா.
அவள் முழிப்பதை பின்னாடி பெஞ்சில் அமர்ந்திருந்த சித்ராவிடம் கண்ணை காட்டி சிரித்தவள் “சரி சரி நேத்து அந்த லைப்ரரியன் நாளைக்கு அந்த புக் கிடைக்கும்னு சொன்னாருன்னு சொன்னியே. அதை போய் வாங்கிட்டு வா”, என்றாள்.
அவள் காதருகே குனிந்த சத்யா “இப்ப உன்னை இருக்க அணைச்சு உம்மா கொடுக்கணும் போல இருக்கு. அப்புறம் உன் மேல உயிரா இருக்குற பசங்க எல்லாம் பொறாமைல பொங்கி என்கிட்டே சண்டைக்கு வருவாங்க. தேங்க்ஸ் கோக்ஸ் பை”, என்று சொல்லி விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.

Advertisement