Advertisement

அத்தியாயம்  7 
நீ என் அருகில்
இருக்கும் ஒவ்வொரு
நொடியும் என் உயிரை
பரிசிக்கிறது உன் வாசனை!!!
சிரித்து  கொண்டே அறைக்கு வந்தான் கார்த்திக். அவனுக்கு எல்லாமே கனவு போல இருந்தது. ஒரே நாளில் கல்யாணம் வரை முடிவானது பிரமிப்பாக இருந்தது.
அவனுடைய சத்யா அவனுக்கே அவனுக்கு இனி சொந்தம். ஏற்கனவே கண்ணீர் வழியாக அவள் காதலை அவனுக்கு உணர்த்தி விட்டாள். இனி வார்த்தையால் உணர்த்த வேண்டியது தான் பாக்கி.
அவள் முகம் மனக்கண்ணில் வந்தது. அவன் உதடுகள் தாபத்துடன்  சத்யா என்று முணங்கியது.
அங்கே சத்யா  பதறி அடித்து கொண்டு எழுந்தாள். “என்ன இது இருட்டு ஆன மாதிரி இருக்கு. இப்படியா இவ்வளவு நேரம் தூங்குவேன்? அப்பா வயல்ல இருந்து வந்திருப்பாங்களே”, என்று நினைத்து கொண்டு பாத்ரூம் சென்றவள்  முகம், கை, கால் கழுவி விட்டு வெளியே வந்தாள்.
டிவி முன்னே அமர்ந்திருந்தார் சண்முகநாதன். அவளை பார்த்ததும் “என்ன பாப்பா எந்திச்சிட்டியா?”, என்று கேட்டார்.
“சாரி பா. ரொம்ப நேரம் தூங்கிட்டேன்”
“என்ன பாப்பா அசதியா  இருந்ததுனால தான தூங்குன. பரவால்ல டா. அப்பாவுக்கு ஒரு டீ போட்டு தரியா?”
“இதோ இப்பவே போடுறேன்”, என்று உள்ளே போனாள்.
சிரித்து கொண்டே செல்லும் மகளை பார்த்தவருக்கும் புன்னகை வந்தது. “எப்பவுமே என் சத்யா சந்தோசமா இருக்கணும்”, என்று நினைத்து கொண்டார்.
டீ போட்டு கொடுத்தவள், “என்ன பா இன்னைக்கு உங்க முகம் சந்தோசமா இருக்கு?”, என்று கேட்டாள்.
“நீ என்கூட இருக்கியே பாப்பா. அதனால தான். சரி நான் பெரியப்பா வீடு வரைக்கும் ஓரெட்டு போய்ட்டு வரேன்”
“சரிப்பா. காலைல பெரியம்மா தோசை மாவு தந்தாங்க. நைட்டுக்கு தோசை ஊத்திரவா?”
“சரி பாப்பா. நீ பசிச்சா சாப்பிட்டுரு என்ன?”
“சரிப்பா”, என்று சொல்லி விட்டு சாமி விளக்கை ஏற்ற சென்றாள்.
“அண்ணன் என்ன சொல்லுவாரோ? எத்தனை பொய் சொன்னாலும் பரவால்ல. அண்ணனை இந்த விஷயத்தில் சம்மதிக்க வைக்கணும்”, என்ற பதைப்புடன் தேவநாதன் முன்பு அமர்ந்திருந்தார் சண்முகநாதன்.
“என்ன சம்மு? முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன. இப்ப அமைதியா இருக்க?”, என்று கேட்டார் தேவநாதன்.
“அண்ணா அது வந்து எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியலை”
“நீங்க அண்ணன் இல்லை, எனக்கு அப்பான்னு சொல்லுவ. இப்ப என்ன தயக்கம்”
சத்யா தடுமாற்றத்தையும், நோட்டில் கார்த்திக் போன் நம்பர் இருந்ததையும், அந்த நம்பருக்கு போன் செய்து விசாரித்து அவர்கள் படித்து முடித்த பிறகு கல்யாணத்துக்கு பெண் கேட்டதையும் சொன்னவர் தப்பி தவறி கூட இவர் சம்மதம் சொன்னதை சொல்லாமல் விட்டார்.
“நீ என்ன சொன்ன சம்மு?”
“குடும்பத்துல எல்லார் கிட்டயும் பேசிட்டு  சொல்றேன். அது வரைக்கும் என் பொண்ணுக்கு  தெரிய கூடாதுனு சொன்னேன்”
“சரியா தான் டா சொல்லிருக்க. ஆனா அவங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சு தான நம்ம பிள்ளையை கொடுக்க முடியும்?”
“ஆமா அண்ணா, அதுக்கு தான் நாளைக்கு அவங்க ஊருக்கு போய்ட்டு வரலாமா? இங்க கிட்டக்க தான?”
“நல்ல குடும்பம்னா விட்டுற கூடாது தம்பி”, என்று சண்முகநாதனிடம் சொல்லி விட்டு “முகில் முகில்”, என்று குரல் கொடுத்தார்.
“என்னங்கப்பா?”, என்ற படியே அங்கு வந்தான் முகில்.
“நாளைக்கு நானும் உன் சித்தப்பனும் ஒரு முக்கியமான சோலியா போறோம். நீ இங்க இருக்குற வேலையை எல்லாம் பாத்துக்குவியா?”
“பாத்துக்குவேன் பா. நீங்க போக கார் ஏற்பாடு பண்ணவா?”
“அதெல்லாம் வேண்டாம் முகில். இங்க இருக்குற தென்காசிக்கு தான். பஸ்ல போயிட்டு வந்துறோம். வந்து விசயத்தை சொல்லுறோம் சரியா?”
“எதுக்கு சம்பந்தமே இல்லாம தென்காசிக்கு போறாங்க?”, என்று யோசித்தாலும் அவன் உதடுகள் “சரிப்பா”, என்று சொன்னது. 
அடுத்த நாள் காலையிலே சத்யாவிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள் இருவரும். 
பஸ் ஸ்டாண்டில் இறங்கியவர்கள், எங்கே, எப்படி போக என்று ஒரு நிமிடம் யோசித்தார்கள்.
“சம்மு, அவங்க வீடு எங்கன இருக்குன்னு தெரியலையே. இதுவும் பெரிய ஊரா தான இருக்கு”, என்று கேட்டார் தேவநாதன்.
“தென்காசில இறங்குனவுடனே சோலையப்பன் ன்னு விசாரிக்க சொன்னாங்கண்ணா”
“அப்படியா? சரி இரு, அந்த கடைல கேப்போம்”
அந்த கடைக்காரனிடம் கேட்டதுக்கு, “அவர் வீடுங்களா இங்க பக்கத்துல தாங்க இருக்கு. அதோ தெரியுதே அந்த ஹோட்டல். அது அந்த ஐயா ஓடது  தாங்க. இருங்க என் பையனை அனுப்புறேன். அவன் உங்களை கூட்டிட்டு போவான்”, என்றார்.
கடைக்கு உள்ளே புத்தகத்தை வைத்து படித்து கொண்டிருந்த பையனை கடைக்காரன் அழைத்ததும் அவன் ஓடி வந்தான்.
“நீங்க விலாசம் மட்டும் சொல்லுங்க. நான் போய்கிறோம். பையன் படிச்சிட்டு இருக்கானே”, என்றார் சண்முகநாதன்.
“அட நீங்க வேற ஐயா? அவனே அவன் அம்மா வேலை சொல்லுவான்னு புத்தகத்தை தூக்கி வச்சிட்டு உக்காந்துருக்கான். ஐயா டீ சாப்புடுறீங்களா?”
“ஹ்ம்ம் சரி கொடுங்க. அண்ணனுக்கு மட்டும் கொஞ்சம் சர்க்கரை கம்மியா போடுங்க”
“இதோ நொடியில் போடுறேன்”, என்று சொல்லி போட்டு கொடுத்து அவர்கள் கிளம்பும் போது பணம் கொடுத்ததை கடைக்காரன் மறுத்தான்.
“என்ன தம்பி? பணம் வேண்டாம்னு சொல்ற?”, என்று கேட்டார் தேவநாதன்.
“இந்த கடையே சோலைப்பன் ஐயா  வச்சி கொடுத்தது தாங்க. அவர் வீட்டுக்கு போறீங்க. பாக்க அவங்களை மாதிரியே வளமா தெரியுறீங்க. அப்ப அவங்க சொந்த காரங்களா தான இருக்கும். உங்க கிட்ட காசு வாங்குனா, அது தப்புங்க”
“அட பாரு டா, எங்களுக்கு சோலையப்பன் யாருனு தெரியாது தம்பி. அவங்க சொந்த காரங்க இல்லை. அவங்க கிட்ட ஒரு தொழில் விஷயமா பேச தான் நாங்க வந்துருக்கோம். நீ அவரை சாமியா நினைச்சு கும்புடுவ போல? நாங்க கொடுக்கற காசை வாங்கி கிட்டு அந்த ஐயாவை பத்தி சொன்னா நாங்களும் அவரை பத்தி தெரிஞ்சிக்குவோம்”, என்றார் தேவநாதன். 
அப்போது ஆரம்பித்து அடுத்த அரை மணி நேரத்தில் சோலையப்பனை பத்தி புகழ்ந்து தள்ளி விட்டான் கடைக்காரன். அவருடைய  குடும்ப கதையையே ஒப்பித்து விட்டான்.
கேட்டவர்களுக்கு திருப்தியாக இருந்தது. மேலும் அந்த சின்ன பையனை கூட கூட்டி கொண்டு வீட்டுக்கு போனார்கள். 
“இது தான் வீடு”, என்று சொல்லி விட்டு ஓடி விட்டான் அந்த பையன். அங்கே இருந்ததில் சோலையப்பன் வீடு தான் அரண்மனை போல கம்பீரமாக இருந்தது.
ஏற்கனவே சோலையப்பனின் விவரம் அனைத்தையும் கடைக்காரர் சொல்லி விட்டதால் மேலும் இரண்டு பேரிடம் விசாரித்து விட்டு நிம்மதியோடு ஊர் திரும்பினார்கள் இருவரும். 
“என்னண்ணா சொல்றீங்க?”, என்று கேட்டார் சண்முகநாதன்.
“திருப்தியா தான் இருக்கு சம்மு. எதுக்கும் அவங்க  எல்லாரையும் பார்த்துட்டா நல்லா இருக்கும்”
“திங்கள் கிழமை நம்ம சத்யா கூட போய் பாத்துருவோமா?”
“இதுவும் நல்ல யோசனை தான். பாத்துட்டு வந்துருவோம். ஆனா சத்யாவுக்கு தெரிய வேண்டாம். நான் வீட்ல எல்லாருக்கும் சொல்லிறேன். ஒரு கல்யாணத்துக்கு போறோம்னு சத்யா கிட்ட சொல்லிறலாம். அப்புறம் முகிலை காரை ஏற்பாடு பண்ண சொல்லிறேன். சத்யாவை விட்டுட்டு நாம மட்டும் போகலாம்”
சந்தோசத்துடன் சரி என்றார் சண்முகநாதன்.
அடுத்த நாள் மொத்த குடும்பமும் கிளம்பி இருந்ததை பார்த்து திகைத்தாள் சத்யா.
“எதுக்கு எல்லாரும் கிளம்பி இருக்கீங்க? கல்யாணமா? ரொம்ப வேண்டியவங்களா?”, என்று கேள்வியால் துளைத்தெடுத்தவளை சமாளித்து கொண்டு அந்த கார் சென்னையை நோக்கி பயணித்தது.
சத்யாவும் உற்சாகமாக வந்தாள். “கார்த்திக்கை பார்க்கணும்”, என்பது மட்டும் தான் அவள் எண்ணமாக இருந்தது. “எப்படி பேச? அவன் எப்ப காலேஜ் வருவான்னு தெரியலையே. அப்ப எப்படி பாக்க?”, என்று யோசித்தவளுக்கு அவன் கொடுத்த நம்பர் நினைவில் வந்தது.
“போன உடனே அவனுக்கு போன் பண்ணி வர சொல்லலாம்”, என்று நினைத்து நிம்மதி ஆனாள்.
அவளை காலேஜ் முன்னே இறக்கி விட்டுவிட்டு “நல்லா படி, நல்லா சாப்பிடு”, என்ற அறிவுரைகளோடு கிளம்பி போனார்கள்.
அவசர அவசரமாக கேன்டீன் சென்றவள் அந்த நம்பருக்கு அழைத்தாள்.
அங்கே ரிங் போகும் போது, இங்கே இவளுக்கு இதயமே எம்பி குதித்து விடும் போல இருந்தது.
முழு ரிங்கும் போன பிறகும் அந்த பக்கம் எடுக்க வில்லை. கொஞ்சம் சோர்ந்து போனாள் சத்யா. அதுக்கு மேலே போன் பண்ண மூளை வேண்டாம் என்று சொன்னாலும், ஆசை மனது “திருப்பி பண்ணு”, என்று தூண்டி விட்டது.
அவள் கைகள் ரிடையல் பட்டனை அழுத்தியது; மறுபடியும் அதே பதட்டம் வந்து அவளை ஆட்கொண்டது.
இந்த முறை அவளை ஏமாற்றாமல், அவன் எடுத்து விட்டான். “ஹலோ”, என்று அவனுடைய குரலில் திகைத்து போய் பேசாமல் நின்றாள் சத்யா.
அவள் பேச நினைத்தாலும் வார்த்தை வராமல் சண்டி தனம் செய்தால் அவளும் தான் என்ன செய்வாள்?
“ஹலோ யாரு?”
“ஹலோ யாரு பேசுறீங்க?”, என்று சொன்னவனுக்கு சற்று பொறுமை குறைந்திருந்தது.
“போன் பண்ணிட்டு அமைதியா இருக்கீங்க? நான் வைக்கிறேன்”, என்று அவன் சொல்லும் போது தைரியத்தை கூட்டி “ஹலோ”, என்றாள் சத்யா.
அவளுடைய குரலை கேட்டு திகைப்பது இப்போது அவன் முறை. அவன் உதடுகள் அவனுடைய அனுமதி இன்றியே “சத்யாவா?”, என்று கேட்டது.
“ம்ம் நான் தான்”
“எங்க இருக்க?”
“காலேஜ்ல இருந்து தான் பேசுறேன். நீங்க எப்ப வருவீங்க? நாம எங்க வச்சு பாக்க?”
அவளுடைய தேடலில் குதூகலம் அடைந்தவன் “நான் இன்னைக்கு வர முடியாதே சத்யா”, என்று சொல்லி  அவள் நிம்மதியை கெடுத்தான்..
“ஓ”
அவளுடைய மொத்த உற்சாகமும்  வடிந்தது  போல உணர்ந்தாள்  சத்யா.
அதை  கார்த்திக்கும்  உணர்ந்து  தான் இருந்தான். ஆனால் மாமனார்  இருக்க சொன்ன  பிறகும் அவனால்  எப்படி போக முடியும்?”
“சாரி  சத்யா”
“ம்ம்”
“முக்கியமான கெஸ்ட்  வாரங்க  மா  அதான்”
“என்னை விட முக்கியமான அந்த கெஸ்ட் யாரு?”, என்று நினைத்து கொண்டு “யாரு?”, என்று கேட்டாள்.
“என்னை  மாப்பிள்ளை  பாக்க  வாரங்க”
“என்னது?”, என்று கேட்கும்  போது சத்யாவின்  கண்ணில்  கண்ணீரே  வந்து விட்டது.
“ஆமா சத்யா. நிஜமா தான். நாம நாளைக்கு பாக்கலாம் சரியா?”, என்று அவன் கேட்கும்  போது போனை கட் செய்து விட்டாள். அவள் முகம் சுருங்கி போய் இருந்தது. 
கார்த்திக் ஒரு விசில் அடித்து கொண்டே குளிக்க சென்றான்.
சத்யா குடும்பம் அட்ரஸ் விசாரித்து காரில் இருந்து கார்த்திக் வீட்டு முன்னாடி இறங்கியவர்கள், அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தார்கள்.
தென் காசியில் இருந்த அளவுக்கு இல்லாமல், அதை விட கொஞ்சம் சின்னதாக இருந்தது. ஆனால் இதுவும் பெரியதாக தான் இருந்து.
வாட்ச்மேன் வந்து “யாரு?”, என்று விசாரித்து உள்ளே விட்டான்.
காலிங் பெல் சத்தம் கேட்டு டிவி பார்த்து கொண்டிருந்த சேகர் கதவை திறந்தார்.
அங்கே மொத்த குடும்பத்தையும் பார்த்தவர் திகைத்தார்.

Advertisement