Advertisement

“என் பொண்ணோட நோட்ல இருந்தது. அதான் யாருனு கேட்கலாம்னு பண்ணேன்”
“சாதாரணமாக ஒரு நோட்டில் எழுதி இருந்த நம்பருக்கு யாரும் கால் பண்ணி கேப்பாங்களா?”, என்று யோசித்தவனுக்கு பொறி தட்டியது.
“அப்ப என்னோட நினைவா அந்த நோட்டை தூக்கி வச்சிருந்துருக்கா. அதுல தான் மாமனார் கண்டு பிடிச்சிட்டார்”, என்று நினைத்து கொண்டவனுக்கு வெளியே உதறலாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே மனது கும்மாளமிட்டது.
அவன் யோசனையை தடை செய்தது அவர் குரல்.
“நான் கிராமத்து காரன் தம்பி. மனசுல ஒன்னு வச்சு, வெளிய ஒன்னு பேச தெரியாது. நீங்க என் பொண்ணை விரும்புறீங்களா?”
தன் போனை காதில் இருந்து எடுத்தவன், அதை ஸ்பீக்கரில் போட்டு விட்டு  “நான் சத்யாவை விரும்புறது நிஜம் தான் அங்கிள். ஆனா அவ கிட்ட  நான் இன்னும் சொல்லலை. ஒரு தப்பான பேச்சு கூட பேசலை”, என்றான்.
“தெரியும் தம்பி, நீங்க அப்படி எதுவும் பேசியிருக்க மாட்டீங்கன்னு. நீங்க தப்பானவங்களா இருக்க முடியாதுன்னும் தெரியும். சத்யா நோட்டில் எழுதி இருக்கும் கை எழுத்து உங்களோடது தானா தம்பி?”
“ஆமா அங்கிள். உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தப்பானவன் இல்லைனு”
“ஏன்னா எனக்கு என் பொண்ணு மேல நம்பிக்கை இருக்கு. அவ தப்பான ஒருத்தனோட கை எழுத்தை தடவி பாத்துட்டே தூங்க மாட்டா. அந்த நோட்டை இப்படி பத்திர படுத்திருக்கவும் மாட்டா. அந்த நம்பிக்கை தான். அது மட்டும் இல்லாம உங்களை பத்தி பேசின உடனே அவ முகம் மாறுச்சு. எதையோ என்கிட்ட மறைக்கிறான்னு புரிஞ்சிக்கிட்டேன். அவ மனசுல நீங்க சலனத்தை உண்டாக்கிட்டீங்கன்னு தெரிஞ்சது. ஒரு பெத்த தகப்பனா, உங்க கிட்ட விசாரிக்கிறது தான முறை?”
“ஹ்ம்ம்  ஆமா அங்கிள். ஆனா இது வரைக்கும் அவளை நான் எந்த தொந்தரவும் பண்ணல. என் மனசுக்குள்ளே வச்சிக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா அவளை பாக்கணும் போல இருந்ததுன்னு நேத்து பஸ் கிளம்பும் போது போனேன்.  என்னை பாத்ததும் கண் கலங்கிட்டா. அப்ப தான் அவ மனசும் புரிஞ்சது. ஆனா எதுவும் பேசிக்கல. நீங்க என்னை பத்தி எங்க வேணும்னா விசாரிச்சிக்கலாம்”, என்று சொன்னவன் மனது “காலேஜ்ல மட்டும் விசாரிக்க கூடாது. ரவுடின்னு முத்திரை குத்தி வச்சிருக்காங்களே”, என்று நினைத்து கொண்டது.
“ஹ்ம்ம், இது சாதாரண வயசு கோளாறு இல்லை தான தம்பி?”
“அங்கிள், எங்க அப்பாவுக்கு எங்க அம்மான்னா ரொம்ப உயிர். அதே மாதிரி தான் அம்மாவும். ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு எதாவது ஆச்சுன்னா கூட இன்னொருத்தங்க  இருக்க மாட்டாங்க. அவங்களோட அன்பை பாத்து வளந்தவன் நான். எந்த காரணத்துலயும் சத்யாவை விட்டு கொடுக்கவோ, வேற பொண்ணை நினைக்கவோ என்னால முடியாது. நீங்க என்னை நம்பலாம்”
“நம்புறேன் தம்பி. உங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோ?”
“அவங்களுக்கு தெரியும். சத்யாவை பாக்க தான் அவங்க துடிச்சிட்டு இருக்காங்க.  பக்கத்துல தான் அப்பா இருக்காங்க. அவங்க கிட்ட கொடுக்குறேன். பேசுங்க. அப்புறம் உங்களை பத்தி சத்யா சொல்லிருக்கா. அவ சொன்னதே உங்களை பத்தி மட்டும் தான். உங்க மேல அவளுக்கு  ரொம்ப பாசம்னு புரிஞ்சிக்கிட்டேன். இப்ப என்னை உங்களுக்கு பிடிக்கலைன்னா கூட நீங்க தாராளமா சொல்லலாம். நான் அவளை தொல்லை செய்ய மாட்டேன். அப்பா கிட்ட கொடுக்குறேன்”, என்று சேகரிடம் கொடுத்து அவரை மாட்டி விட்டு “அப்பாடி”, என்று மூச்சை வெளியிட்டான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அவ உன்னை விட்டு கொடுக்கவே மாட்டான்னு சொல்லுச்சு, ஒரு நாய். அது இப்ப நீங்க சொன்னா அவளை தொந்தரவே பண்ண மாட்டேன்னு சொல்லுது”, என்று அமைதியாக சொல்லி சிரித்தாள் தேவகி.
“அம்மா சும்மா இரு மா. எனக்கு டென்ஷனா இருக்கு. உன் புருஷன் சொதப்பிற மாட்டாரே”
“அதெல்லாம் சேகர் சிங்கம். சும்மா பக்காவா பேசிருவார் பாரு. ஒரு தடவை என்ன செஞ்சார் தெரியுமா?”
“அம்மா ப்ளீஸ் உன் புருஷன் பெருமையை அப்புறமா எனக்கு சொல்லு. இப்ப அப்பா, அங்கிள் கிட்ட என்ன பேசுறார்னு கேப்போம். என்னை டென்ஷன் பண்ணாதே”
“என்னோட பேர் சேகர். மனைவி பேர் தேவகி. தென்காசி தான் சொந்த ஊர். வேலை விஷயமா சென்னைக்கு வந்துட்டோம். இங்க பிஸ்னஸ் தான் பண்றேன். மனைவி வீட்டை தான் பாத்துக்குறாங்க”, என்று பேசி கொண்டிருந்த சேகரின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்கள் இருவரும்.
“திடிர்னு பித்து பிடிச்சவ மாதிரி இருந்த என் பொண்ணைப் பாத்து, கொஞ்சம் பதறிட்டேன் ஐயா. அவளை நல்லவன் கையில ஒப்படைக்கணும்னு தான் என் உயிரை கையில் பிடிச்சு வச்சிருக்கேன்”, என்றார் சண்முகநாதன்.
“எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு ஒன்னும் ஆகாது. பேரன் பேத்தி எல்லாம் பாக்க வேண்டாமா?”
“இன்னும் நம்ம யாரும் யாரையும் பாத்தது கிடையாது. ஆனா சம்பந்தம் கலக்குற அளவுக்கு வந்து நிக்குது”
“என் பையன் எந்த பொண்ணையும் பத்தி பேசினதே கிடையாது. இப்ப அதிசயமா சத்யாவை பத்தி பேசுறானு எங்களுக்கு சந்தேகம் வந்துச்சு. விசாரிச்சதுல உங்க பொண்ணை அவனுக்கு பிடிச்சிருக்குனு தெரிஞ்சது. ஆனா உங்க பொண்ணுக்கு விருப்பம் இருக்கணும்னு யோசிச்சோம். ஆனாலும் அவளை பாக்காம இருக்க முடியலை. என் மனைவி அன்னைக்கு காலேஜ்ல அவளை பாத்துட்டா. நானும் பாக்கணும்னு நினைச்சு, ஞாயிறு அன்னைக்கு சத்யாவை பாக்க நானும் தேவியும் போகணும்னு நினைச்சோம். ஆனா சத்யா உங்களை பாக்க வந்துட்டா”
“ரொம்ப சந்தோசம் ஐயா. எங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு எதுவும் தெரிய வேண்டாமா?”
“என்னங்க குடும்பம்? மனசுல சந்தோசம் நிறைஞ்சு இருக்குறது மட்டும் தான் முக்கியம். அதை விட்டுட்டு, தேவை இல்லாததை பேசி மனசை வருத்திக்கணுமா சொல்லுங்க? பிள்ளைங்க சந்தோஷம் தான்  முக்கியம். ஆனா நீங்க எங்க ஊருல போய் எங்க  குடும்பத்தை பத்தி விசாரிச்சிக்கலாம். பொண்ணை பெத்த தகப்பனுக்கு, பொண்ணை நல்ல இடத்தில் கட்டி கொடுக்கணும்னு கவலை இருக்குமே.  நான் அட்ரஸ் வேணும்னா அனுப்புறேன். என் அம்மா, அப்பா எல்லாரும் அங்க தான் இருக்காங்க. ஆனா ஜாதி அது இதுன்னு பேசி பிள்ளைங்க சந்தோசம் போயிற கூடாது அதான் யோசிக்கிறேன். ஏன்னா, என்னோட கல்யாணமும் காதல் கல்யாணம் தான். முதலில் எங்க வீட்டில் ஒத்துக்கலை. என் பொண்டாட்டி வேற ஜாதின்னு ஒதுக்கி வச்சாங்க. அப்புறம் கார்த்திக் பிறந்த பிறகு  சேத்து கிட்டாங்க. ஆனாலும் சொந்தம் நம்மளை ஒதுக்கி வச்சா வலி இருக்குமே. அதை அனுபவிச்சவன் நான். அந்த வலி நம்ம பிள்ளைங்களுக்கு வேண்டாமே”
“நீங்க சொல்றதும் சரி தான். ஜாதி என்ன ஜாதி. இப்ப ரத்தம் தேவை பட்டா ஜாதி பாத்தா எடுக்குறோம்? நாம போன பிறகு கடைசி வரைக்கும் அவங்க தான ஒண்ணா இருக்க போறாங்க. ஆனாலும், சொந்த காரங்க கிட்ட யாரு எவருன்னு சொல்லணுமே அதனால தான் கேட்டேன். அப்புறம் பையனுக்கும் சின்ன வயசா தான் இருக்கும் போல? கல்யாணம் அஞ்சாறு வருஷம் கழிச்சு வச்சிக்கலாமா?
“கண்டிப்பா ஐயா. படிப்பு  ரொம்ப முக்கியம். சத்யா நாலு வருஷம் படிச்சு முடிகிறதுக்குள்ள, என் பையன் நல்ல வேலைல உக்காந்துருவான். அதுக்கப்புறம் வச்சிக்கலாம்”
“ஹ்ம்ம் கண்டிப்பா அப்பவே வச்சிக்கலாம். இருந்தாலும் உங்களை எல்லாம் பாத்துட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்”
“நாளைக்கே வேணும்னா வாங்களேன். அப்படியே நம்ம எல்லாரும் பேசி கிட்ட மாதிரி இருக்கும். நீங்களும் மாப்பிள்ளையை பாத்த மாதிரி இருக்கும்”
“நாளைக்கு வர முடியாதுங்களே. வேணும்னா திங்கள் கிழமை வரட்டுமா? பாப்பாவை காலேஜ்ல விட்டுட்டு அப்படியே ஓரெட்டு பாத்துட்டு வரேன்”
“ஹ்ம்ம் இதுவும் நல்ல யோசனை தான்”
“உங்களுக்கு வேலைக்கு போகணுமா?”
“நீங்க வீட்டுக்கு வர நாள் தான் முக்கியம். வேலையை அடுத்த நாள் கூட பாத்துக்கலாம்.  அதெல்லாம் வீட்ல தான் இருப்பேன். நீங்க வாங்க”
தனக்கும் தன் பொண்ணுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேசியதிலே உச்சி குளிர்ந்து விட்டார் சண்முகநாதன்.
“ரொம்ப சந்தோசம் ஐயா”
“இன்னும் என்ன ஐயா? சம்பந்தின்னே கூப்பிடுவோம். என்னோட நம்பர் அனுப்பி வைக்கிறேன். அடிக்கடி போன் பண்ணுங்க. நாளான்னைக்கு நேரில் பாப்போம்”
“ஹ்ம்ம் சரி, அப்படியே உங்க அப்பா அம்மா விலாசம் அனுப்பி வச்சா நல்லா இருக்கும். எங்க அண்ணா யாரு என்னனு விவரம் கேப்பாரு”, என்று இழுத்தார் சண்முகநாதன்.
“காரியத்துல கண்ணா இருக்காரே நம்ம சம்பந்தி”, என்று நினைத்து கொண்டு, “தென்காசில போய் சோலையப்பன் வீட்டுக்கு போகணும்னு சொல்லுங்க. உங்களை அங்க கூட்டிட்டு போயே விட்டுருவாங்க. எங்க அப்பா தான் சம்பந்தி சோலையப்பன்”, என்றார் சேகர்.
“சரிங்க சம்பந்தி. தம்பி கிட்ட கொஞ்சம் போனை கொடுங்களேன். ஒரு வார்த்தை பேசிறேன்”
“இதோ கொடுக்குறேன் சம்பந்தி. கார்த்திக், மாமா உன்கிட்ட பேசணுமாம்”
“சம்பந்தியா? மாமாவா?”,  என்று வாயை பிளந்தான் கார்த்திக்.
“நீ அங்கிள்னு இளிச்சல்ல. உங்க அப்பா மாமான்னு பல்லை காட்டுறாரு. எப்படியோ ஒரே நாளில் உன் காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்க”, என்று சிரித்தாள் தேவகி.
போனை வாங்கிய கார்த்திக் “சொல்லுங்க அங்கிள்”, என்றான்.
“திங்கள் அன்னைக்கு உங்களை பாக்க வரோம். கண்டிப்பா காலேஜ்க்கு போகணுமா? இல்லைனா சாயங்காலம் கூட பாத்துக்கலாம்”
“உங்க பொண்ணை பாக்க வேண்டிய முக்கியமான வேலை தான் இருக்கு”, என்று நினைத்து கொண்டு “நான் லீவ் போட்டுட்டு வீட்ல இருக்கேன் அங்கிள். நீங்க பஸ் ஸ்டாண்ட் வந்த அப்புறம் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க. நான் கூப்பிட வரேன்”, என்றான்.
“இல்லை தம்பி, நீங்க இந்த நம்பருக்கு உங்க அட்ரஸை அனுப்பி வைங்க. நானே வந்துருவேன்”
“சரி இப்பவே அனுப்புறேன். அப்புறம் அங்கிள்…  சத்யா கிட்ட நான் பேச முடியுமா?”
“அவ காலேஜ் வந்த பிறகே பேசிக்கோங்க. அவ படிப்புல கவனம் சிதறாம பாத்துக்கோங்க. அது போதும். அப்புறம் என்ன அங்கிள்? மாமான்னு சொல்லுங்க”
“கண்டிப்பா மாமா. அவ படிக்க நான் எல்லா உதவியும் செய்வேன்னு முன்னாடியே சொல்லிட்டேன். அவ நல்லா படிக்கிறதுக்கு நான் பொறுப்பு”
“ஹ்ம்ம். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் தம்பி”
“என்ன மாமா?”
“நீங்க ரொம்ப பயந்த சுபாவமாம். என்னைக்கு இருந்தாலும் அப்படி இருந்தா உதவாதே. நீங்க இந்த கராத்தே அது இதுன்னு இருக்கே? அதை கத்துக்கிட்டா என்ன?”, என்று கேட்டு அவனையே வாயை பிளக்க வைத்தார் சண்முகநாதன்.
அதை கேட்டு சேகர் மேல் விழுந்து விழுந்து சிரித்தாள் தேவகி.
சிரித்த அம்மாவை முறைத்தவன் “நீங்க சொன்னா கண்டிப்பா கேப்பேன் மாமா. எங்க கிளாஸ் நடத்துறாங்கன்னு பாத்து கத்துக்குறேன் சரியா? அப்புறம்  எங்க அம்மாவும், உங்க கிட்ட பேசணுமாம் மாமா”, என்று சொல்லி தேவகிக்கு பி பி எகிற வைத்தான்.
திகைத்து விழித்த தேவகி வேறு வழி இல்லாமல் பேச ஆரம்பித்தாள்.
என்னமோ கூட பிறந்த அண்ணன் மாதிரியும், முன்னாடியே பார்த்து பழகியது மாதிரியும் தேவகி அண்ணா என்று அழைத்ததில் சண்முகநாதன் உருகி போய் அந்த பக்கம் பாசமழை பொழிந்தார். ஆனால் அம்மாவின் பேச்சை கேட்டு இப்போது கார்த்திக்கும், சேகரும்  விழுந்து விழுந்து  சிரித்தார்கள்.
அதை கண்டு கொள்ளாமல் சத்யாவை பற்றி கேட்டு  விட்டு வீட்டுக்கு வாங்க என்று சொல்லி போனை வைத்த தேவகி, கார்த்திக் முதுகில் நான்கு மொத்து மொத்தினாள்.
“இப்ப எதுக்கு மா இப்படி அடிக்கிற?”
“பின்ன எதுக்கு டா என்னை மாட்டி விட்ட? திடிர்னு பேச சொன்னா என்ன பேசவாம்?”
“அப்ப நீ மட்டும் அவர் கராத்தே கிளாஸ் போக சொன்னதுக்கு அப்படி சிரிக்கலாமா?”
“ஹா ஹா ஆனா அது செம காமெடி டா. ஏற்கனவே கராத்தேல வாங்கி வச்சிருக்கிற கலர் கலர் பெல்ட் போதாது. ரெண்டு வருசத்துல நாலு சஸ்பென்ஷன் சண்டை போட்டு வாங்கியாச்சு. அது போதாது. உன் மாமனாருக்கு இன்னும் புதுசா நீ சண்டை படிக்கணுமாம். ஹா ஹா”
“அப்பா பாரு பா, அம்மா சிரிக்கிறதை”
“விடு டா சிரிக்கட்டும். எனக்கே சிரிப்பா தான் வருது”, என்று சிரித்தார் சேகர்.
கொஞ்ச நேரத்தில் தன் காதலும் நிறைவேறி, கல்யாணம் வரைக்கும் பேசி முடித்த சந்தோசம் கார்த்திக் முகத்திலும் மின்னியது. 
சீண்டல்  தொடரும்….

Advertisement