Advertisement

அத்தியாயம் 6
நீ விழி வழி
அனுப்பிய செய்திகள்
என்னை வந்து
சேர்ந்து விட்டது என்னவளே!!!
“என்ன பாப்பா”, என்று கேட்டு கொண்டே அவள் பார்வை போகும் திசையில் பார்த்தவன் “சின்ன பூச்சி தான் பாப்பா. அது ஒண்ணும் செய்யாது. இப்ப விரட்டி விட்டுறேன்”, என்று சொல்லி கொண்டே அந்த பாம்பை விரட்டி விட்டான்.
ஆ என்று வாயை பிளந்து பார்த்தவள் “கரப்பான் பூச்சி மேல இருக்குற பயம் மட்டும் இவனை விட்டு போகல போல”, என்று நினைத்து சிரித்து கொண்டே உள்ளே சென்றாள். 
குளித்து முடித்து வெளியே வந்தவள் தன் தந்தையுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பெரியப்பா வீட்டுக்கு சென்றாள். அங்கே பெரியம்மா, பெரியப்பா, அக்கா, அண்ணி எல்லாருடனும் சிறிது நேரம் பேசி விட்டு மதியத்துக்கு அவர்கள் கொடுத்த சாப்பாட்டை மறுத்து விட்டு “நானே இன்னைக்கு அப்பாவுக்கு சமைக்க போறேன். நாளைல இருந்து என் செல்ல பெரியம்மா கையால தான் சாப்பாடு”, என்று சொல்லி வீட்டுக்கு வந்தாள்.
அப்பாவுக்கும் தனக்கும் உணவை சமைத்தவள் அவருக்கு வயலுக்கு எடுத்து கொண்டு சென்றாள். அங்கே பேசிய படியே இருவரும் உண்டனர். அங்கே அவரை வயலை பற்றி கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருந்தாள். 
“போதும் சத்யா, என்னால பதில் சொல்ல முடியலை”, என்று அவர் அரட்டிய பிறகு தான் வாயை மூடினாள். ஆனாலும் முகத்தை திருப்பி கொண்டாள்.
அவளை பார்த்து சிரித்த சண்முகநாதன் “என் பாப்பாவுக்கு கோபம் வந்துட்டே. மன்னிச்சிக்கோ குட்டி”, என்று சமாதானம் செய்தார். 
“அப்புறம் பாப்பா, அதுக்கு பிறகு அந்த பையனை பாத்தியா? அதான்… நீ வண்டில அவன் கூட போனேன்னு சொன்னியே. அந்த பிள்ளையை பாத்தியா?”, என்று கேட்டு அவளுக்கு புரை ஏற வைத்தார்.
அவளுடைய பதட்டத்தை அவர் கண்கள் குறித்து கொண்டது. “ஹ்ம்ம் பாத்தேன் பா”, என்று முனங்கி விட்டு அமைதியாகி விட்டாள். அதில் அவர் சந்தேகம் அதிகமானது. 
“எதுவோ சரி இல்லை”, என்று அவர் உள்மனது சொன்னது. அவர் சந்தேகம் உண்மையானது போல் நடந்து கொண்டாள் சத்யா. அவள் கண்கள் அவரை பார்க்க மறுத்தன. குற்றவுணர்வுடன் அமர்ந்திருந்தாள். 
அதுக்கு மேல் அவர் பார்வையை சந்திக்க முடியாமல் “நான் வீட்டுக்கு போறேன் பா”, என்று கிளம்பி விட்டாள்.
“தப்பு பண்ணிட்டேனோ? இங்கயே சத்யாவை படிக்க வச்சிருக்கணுமோ?”, என்று யோசித்து பெருமூச்சு விட்டார். 
“சாயங்காலம் வரைக்கும் உன் கூட தான் இருப்பேன்”, என்று சொல்லி வந்தவள் இப்போது கிளம்பவும் “வீட்டுக்கு போய் சத்யா கிட்ட பேசணும்”, என்று முடிவு எடுத்து “பாத்து போ பாப்பா”, என்று சொல்லி அனுப்பி வைத்தார். 
வீட்டுக்கு வந்தவள் தன்னுடைய அறையில் படுத்தாள். தனிமை கிடைத்ததும் கார்த்திக்கின் நினைவு வந்து ஒட்டி கொண்டது. 
இது வரை அவனுடன் கழித்த தருணங்களை நினைவு கூர்ந்தாள். நினைவே சுகமாக இருந்தது. அவன் மேல் இருக்கும் அன்புக்கு விடை தெரியவில்லை. 
“எதனால் அப்பாவிடம் அவனை பற்றிய விஷயம் மறைக்கிறேன்? அப்பா கண்டு பிடிச்சிருப்பாங்களோ?”, என்ற கேள்விக்கும் விடை தெரிய வில்லை. இப்படியே பலவற்றை யோசித்து விடை கிடைக்காமல் தூங்கி போனாள் சத்யா.
மாலை நான்கு மணிக்கு சண்முகநாதன் அவள் அறைக்குள் வந்து, அவள் தலையை வாஞ்சையுடன் வருடி விட்டதோ, அவள் கை அணைப்பில் இருந்த நோட்டை எடுத்து பார்த்து புருவம் உயர்த்தியதோ, அதில் இருந்த நம்பரை தன்னுடைய போனில் குறித்து கொண்டதோ எதுவுமே தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சத்யா.
மாலை  நான்கு  மணிக்கு  கொட்டாவி  விட்டு  கொண்டே கண் விழித்தான்  கார்த்திக்.
“இப்ப எங்கயாவது வெளிய போகலாமா?”, என்று யோசித்து தன்னுடைய ஸ்கூல் பிரண்ட் சிவாவை அழைத்தான்.
“சொல்லு டா மச்சி”, என்றான் சிவா.
“போர் அடிக்குது, வெளிய போகலாமா டா”
“நான் ஒரு கேம்ப்ல இருக்கேன் டா. அதனால இன்னைக்கு வர முடியாதே”
“உன்னை எவன் டா என்னை தனியா விட்டுட்டு டாக்டருக்கு படிக்க போக சொன்னது? என் கூடவே படிக்க வந்துருக்கலாம்ல? சனி ஞாயிறுல கூட பிரியா விடுறானுங்களா?”
“எங்க அப்பன் செஞ்ச சதி மச்சான். சாரி டா. நாளைக்கு ஈவினிங் வேணும்னா போகலாம். இப்ப பிசி. அப்புறம் பேசுறேன். உம்மா டா”
“கொலை பண்ணிருவேன் வச்சி தொலை”
“நான் எவ்வளவு பாசமா உம்மா கொடுக்குறேன். நீ என்ன டான்னா திட்டுற?”
“கொன்னுருவேன் டா பரதேசி”‘
“உம்மா கொடு டா”
“எவனாவது கேட்டா தப்பா நினைப்பானுங்க டா. நீ லவ் பண்ற ஆர்த்தி கிட்ட கேளு. அவ கொடுப்பா”
“அவளுக்கு தான் மச்சி கொடுத்துக்கிட்டு இருக்கேன்”, என்று உளறி நாக்கை கடித்து கொண்டான் சிவா.
“அட பாவி புளுகு மூட்டை, நீ அவ கூட ஊரை சுத்திட்டு கேம்ப் னா புழுகுற?”
“ஹா ஹா அதான் மாட்டிகிட்டேன்ல?”
“சரி சரி நாளைக்கு நாலு மணிக்கு வீட்டுக்கு வா வெளிய கிளம்பலாம்”
“சுயர் டா. இப்ப மட்டும் கொஞ்சமே கொஞ்சம் மன்னிச்சிரு”
“டேய் லூசு, நீ ஆர்த்தி கூட டைம் ஸ்பென்ட் பண்ணா எனக்கு ஹேப்பி தான். அதுக்காக கேம்ப் னு சொல்லி மட்டும் வெறி ஏத்தாத. அவளை கேட்டேன்னு சொல்லு பை. வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்தான்.
“சத்யா முத்தம் கொடுத்தா எப்படி இருக்கும்?”, என்று யோசித்து “இதை யோசிச்சா கிறுக்கா ஆகிருவேன்”, என்று நினைத்து விட்டு “என்ன செய்யலாம்?”, என்று யோசித்தான்.
ஐடியா கிடைக்காததால் நேரம் போகாமல்  கிச்சனுக்கு  வந்தான்.
அங்கு  தேவகி  எதையோ  செய்து  கொண்டிருப்பதை  பார்த்தவன்  “எதுவோ  பண்டம்  சுடுற  போல?”, என்று  கேட்டான்.
“ஆமா  டா, வாழை  பூ  நேத்து  உங்க அப்பா அதிகமா  உரிச்சிட்டார். அதை  தான்  வடையா  சுட்டுட்டு  இருக்கேன். சூடா நீயும் சாப்பிடு”, என்று  அவன்  கையில்   ஒரு  சின்ன  தட்டை  திணித்தாள் தேவகி .
வடையை  வாயில்  கடித்து  கொண்டே  “இருந்தாலும்  நீ  ரொம்ப  கொடுத்து  வச்சவ  மா”, என்று  சிரித்தான்  கார்த்திக்.
“என்ன  டா  சொல்ற?”
“பின்ன  உனக்கு  வாழை  பூ  உரிச்சு  கொடுக்குற  புருஷன்  கிடைச்சிருக்காரே. அதனால  தான்  சொன்னேன்”
“அடிங்க, அதுல  உனக்கு  என்ன டா  பொறாமை? நீயும்  என்  புருஷன்  மாதிரியே  உன்  பொண்டாட்டிக்கு  உரிச்சு  கொடு”
“நானா  மாட்டேன்னு  சொல்றேன்? எங்க? அந்த  அறிவு  உங்களுக்கு  தானே  இருக்கணும்? கல்யாணம்  செஞ்சு  வச்சா  உரிச்சு  கொடுக்க  போறேன். நானும்  வயசுக்கு  வந்துட்டேன்ல?”
“அட பாவி, அதுக்குள்ளே  உனக்கு  கல்யாண  ஆசை  வந்துட்டா? இருபத்தி  ஏழு  வயசுல  தான்  செஞ்சு  வைப்போம்”
“என்னது இன்னும் அவ்வளவு வருஷம் வெயிட் பண்ணனுமா?
“சரி வேணும்னா ஐயோ பாவம்னு இருபத்தி அஞ்சு வயசுல பண்ணி வைக்கிறோம்”
“இது பேச்சு. அம்மான்னா அம்மா தான்”
“அது சரி, என்னமோ கல்யாணத்துக்கு அதுக்குள்ள ரெடி ஆகிட்ட? பொண்ணு பாக்க வேண்டாமா?”, என்று கேட்டு விட்டு அவன் முகத்தை கூர்ந்து பார்த்தாள் தேவகி.

“பாத்தியா? முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற? உனக்கு தெரியாதோ பொண்ணு யாருன்னு?”
“தெரியாதே. நீ  சொன்னியா  என்ன?”
“அம்மா   விளையாடாதே  மா. உனக்கு  அவளை  பிடிக்கலையா?”, என்று அவன் கேட்டு கொண்டிருக்கும் போதே “எனக்கு வடை எனக்கு வடை”, என்று அங்கு வந்தார் சேகர்.
“இவர் ஒரு காமெடி பீஸ். இந்தாப்பா தின்னு. முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கும் போது இடைல புகுந்துகிட்டு”, என்று சொல்லி கொண்டே வடையை அவர் கையில் கொடுத்தான்.
“அப்படி என்ன முக்கியமான விஷயம்?”, என்று கேட்டார் சேகர்.
“கல்யாணத்தை பத்தி பா”
“என்னது எனக்கு இன்னொரு கல்யாணமா? வாட் எ சர்ப்ரைஸ்? தேவி உனக்கு எப்படி இப்படி ஒரு நல்ல காரியம் செய்ய தோணுச்சு? ஆமா பொண்ணு யாரு? அழகா இருப்பாளா?”
“உங்க அப்பாவை அசையாம பிடிச்சுக்கோ டா”, என்றாள் தேவகி.
“எதுக்கு மா?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் கார்த்திக்.
“கரண்டியை எண்ணெய்ல காய வச்சிருக்கேன். நாலு இழுப்பு இழுக்கனும்ல? கல்யாண ஆசை, அதுவும் ரெண்டாவது கல்யாணம். பையனும் கல்யாணம் வேணும், அப்பனும் கல்யாணம் வேணும்னு கேக்குறது இந்த வீட்ல தான் நடக்கும்”, என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“ஐயோ நான் வாயவே திறக்கலை. நீங்களே பேசுங்க. எனக்கு வடை தான் முக்கியம்”, என்ற படி சாப்பிட ஆரம்பித்தார்.
“அவர் கிடக்குறார் நீ சொல்லு மா. அவளை பிடிக்கலையா உனக்கு?
“பிடிக்கலைன்னு  சொன்னா  என்ன  செய்ய  போற? வேற  பொண்ணு  பாக்க  போறியா?”
“அம்மா….”
“சும்மா  சொன்னேன்  டா. ஆனா  சத்யா  வீட்ல  என்ன  சொல்லுவாங்களோன்னு  பயமா  இருக்கு”
“எனக்கு  தான  அந்த  பயம்  இருக்கணும். நீ  ஏன் கவலை  படுற? என் செல்லம்  என்னை  பாக்காம  ஊருக்கு  கிளம்பும் போது ஒரே  அழுகை  தெரியுமா?”
“என்ன  டா  சொல்ற?”
“ஆமா  மா, பாத்த  உடனே  கண்ணு  கலங்கிட்டா. காதல்  எல்லாம்  பேசலை. ஆனா  அவ  மனசுலயும்  நான்  புகுந்துட்டேன்  மா”
“எப்படி  டா  ஓட்டை  போட்டு  புகுந்த?”
“மொக்கை  ஜோக்  அடிக்காத  மா. அதனால  அவ  என்னை  மறக்க  மாட்டா. அவங்க  அப்பாவும்  ஒத்துக்குவார்”, என்று  அவன்  சொல்லி  கொண்டிருக்கும்  போதே  அவனுடைய  போன் அடித்தது.
“யாரு  டா  இந்த  நேரத்தில்? சத்யா  உனக்கு  போன்  எல்லாம்  பண்ணுவாளா?”
“நீ    வேற  அவளாவது  போன்  பண்றதாவது”, என்று  சொல்லி  கொண்டே  சட்டை   பாக்கெட்டில்  இருந்த  போனை  எடுத்தான்.
“ஹலோ யாருங்க பேசுறது?”, என்று கேட்டான் கார்த்திக்.
அந்த பக்கம் இருந்து எந்த சத்தமும் வராமல் இருந்தது. 
“என்ன டா யாரு?”, என்று கேட்டார் சேகர்.
“தெரியலை பா. அந்த பக்கம் யாருமே பேசலை. சத்தமே இல்லாம இருக்கு”
“ஒரு வேளை உன் ஆளோ என்னவோ?”, என்று சிரித்தாள் தேவகி.
“ஒரு வேளை அப்படியும் இருக்குமோ?”, என்று யோசித்த கார்த்திக் க்கு பஸ் கிளம்பும் முன் அவள் பார்த்த பார்வை நினைவில் வந்தது. 
“மேடம் க்கு என்கிட்ட பேசாம இருக்க முடியலை போல”, என்று நினைத்து கொண்டு “சத்யா”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான்.
“நான் சத்யாவோட அப்பா பேசுறேன்”, என்று அந்த பக்கம் வந்த குரலில் கீழே போட இருந்த போனை கடைசி நேரத்தில் கீழே போடாமல் பிடித்தான் கார்த்திக்.
அவன் கை, கால் எல்லாம் ஆடியது. அவனை வித்தியாசமாக பார்த்தார்கள் சேகரும், தேவகியும்.
“டேய் என்ன டா ஆச்சு? வடிவேல் மாதிரி ஆடிக்கிட்டு இருக்க? போன்ல யாரு? உங்க பிரின்சிபாலா? காலேஜ்ல இருந்து போன் பண்ணா, எங்க அம்மாவுக்கு டைபாய்டு வந்து ஆஸ்பத்திரில இருக்காங்கன்னு சொல்லிரு டா. அடுத்து என்ன வம்பு…”, என்று தேவகி அடுத்த வார்த்தை பேசும் முன்னே அவள் வாயை பொத்திய கார்த்திக் “தயவு செஞ்சு என் மானத்தை வாங்கிறாதே. சத்யாவோட அப்பா தான்  லைன்ல இருக்காரு”, என்றான்.
பெற்றவர்கள் இருவருக்கும் அதிர்ச்சி தான். அவனை பேசு என்னும் விதமாய் சைகை செய்தார் சேகர்.
போனை கையை வைத்து பொத்தி இருந்தவன் எடுத்து காதில் வைத்து “ஹலோ”, என்றான்.
மறுபடியும் அந்த பக்கம் அமைதியாக இருந்தது.
“அங்கிள் இருக்கீங்களா?”
“ஹ்ம்ம் இருக்கேன். உங்க பேரு என்ன தம்பி?”, என்று கேட்டார் சண்முகநாதன்.
“என்னோட பேர் கார்த்திக் அங்கிள். சத்யா காலேஜ்ல தான் ரெண்டாவது வருஷம் படிக்கிறேன்”
“ஓ முதல் நாள், என் பொண்ணை வண்டில கூட்டிட்டு போனது நீங்க தானா?”
“இதை கூட உளறி வச்சிட்டாளா?”, என்று நினைத்து கொண்டு “ஆமா. அன்னைக்கு அவ காலில் முள்ளு குத்தி நடக்க முடியாம சிரம பட்டா. அதான்…”, என்று சொன்னான்.
அவரிடம் இருந்து பதில் இல்லை. “இவர் இப்படி ஊமையா இருக்காரு. ஆனா அவ எப்படி வாய் பேசுறா?”, என்று நினைத்து கொண்டு “அங்கிள் என் நம்பர் எப்படி உங்களுக்கு கிடைச்சது?”, என்று கேட்டான்.

Advertisement