Advertisement

“இப்ப போல எங்க டி போற?”, என்று கேட்டாள் கிருத்திகா.
“அவ பாத்ரூம் போறா. அதான் பஸ் எடுக்க அரை மணி நேரம் இருக்கே. போயிட்டு வரட்டும்”, என்று சொன்ன கோகிலாவை நன்றியோடு பார்த்து விட்டு அவன் அருகில் சென்றாள் சத்யா.
முகம் முழுக்க புன்னகையோடு கண் முன் வந்த அவனுடைய தேவதையை ஆசையாக பார்த்தான் கார்த்திக்.
“கார்த்திக்… கார்த்திக்.. நீங்க தானா?”, என்று கேட்பதற்க்குள் அவள் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.
அதை பார்த்தவன் இனிமையாக அதிர்ந்தே போனான்.
“ப்ச் என்ன சத்யா? என்ன ஆச்சு? எதுக்கு கண் கலங்குற?”
தன்னை சமாளித்து கொண்டவள் “ஒன்னும் இல்லை. உங்களை இங்க எதிர்பாக்கவே இல்லையா அதான்”, என்று சொல்லி கர்ச்சிப்பில் கண்ணை துடைத்து கொண்டாள்.
“என்னை தேடிருக்கா?”, என்று நினைத்து கார்த்திக் க்கு கர்வமாக இருந்தது.
“நான் வந்தது உனக்கு பிடிக்கலையா?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
அவனை முறைத்தவள், “காலைல இருந்து தேடினேன் தெரியுமா? இப்ப பாத்த உடனே எப்படி சந்தோசமா இருந்துச்சுன்னு எனக்கு தான் தெரியும்?”, என்று சிணுங்கினாள்.
“பாவி படுத்துறாளே. இப்படி இங்க வச்சு சிணுங்குனா நான் என்ன செய்றது?”, என்று தவித்து போனான் கார்த்திக். 
தன்னை அடக்கி கொண்டவன் “மண்டே மார்னிங் வந்துருவ தான?”, என்று கேட்டான்.
அவனுடைய அந்த தவிப்பான குரலில், தன்னை மொத்தமாக அவனிடம் இழந்தாள் சத்யா. கண்கள் கண்ணீரை மறுபடியும் பொழிந்தது.
“சே எனக்கு எதுக்கு இப்படி அழுகையா வருது?”, என்று வாய் விட்டே புலம்பியவள் கண்ணீரை துடைத்தாள்.
“இப்ப என்னை பாத்து அழுததுக்கான காரணத்தை நீ ஊருக்கு போயிட்டு வந்த பிறகு சொல்றேன் சரியா?”, என்று கேட்டு சிரித்தான் கார்த்திக்.
அவன் கண்கள் சொல்லும் செய்தியை, உணர்ந்தவள் அவன் சொன்ன வார்த்தையை கேட்டு பட படப்பாக உணர்ந்தாள்.
“என்ன… என்ன காரனம்? அப்படி எல்லாம் இல்லை. அப்பாவை பாக்க போறேன்ல? அதான்”, என்று தன்னை சமாளித்தாள் சத்யா.
“ஓ அப்படியா? சரி ஓகே”, என்று சொன்னவனின் குரலில் நக்கல் ஒளிந்திருந்தது.
அதை உணர்ந்தாலும், “நீங்க இங்க என்ன செய்றீங்க?”, என்று கேட்டாள்.
“ஊருக்கு போக தான்”
“நீங்களும் ஊருக்கு போக போறீங்களா? எந்த ஊருக்கு?”
“லூசு நீ ஊருக்கு போறல்ல? அன்னைக்கு பாத்த அப்புறம் பேசவே இல்லை. பாக்கணும் போல இருந்தது. அதான் வந்தேன்”
“என்னது எனக்காகவா?”
“ஆமா”
“ஏன்?”
“தெரியலை”, என்று தோள்களை குலுக்கி சிரித்தான் கார்த்திக். அப்போது அவன் கண்ணில் அந்த பஸ்ஸில் கண்டக்டர் ஏறுவது பட்டது.
“சரி சத்யா. பஸ் இப்ப எடுத்துருவாங்க. நீ கிளம்பு. அடுத்த வாரம் காலேஜ்ல பாப்போம்”
“ஹ்ம்ம் சரி. போய்ட்டு வரேன்”, என்று சொன்னவளுக்கு மறுபடியும் கண் கலங்கியது.
மெதுவாக திரும்பி இரண்டு அடி நடந்தவள் திரும்பி வந்து, “பஸ் கிளம்புற வரைக்கும் இங்கயே இருக்கீங்களா?”, என்று கேட்டாள்.
“ஹ்ம்ம் கண்டிப்பா”, என்று சிரித்தவன் “உன்னோட கையை நீட்டேன்”, என்றான்.
“ஆன் எதுக்கு?”
“நீட்டேன் சொல்றேன்”
கையை நீட்டியவளின் உள்ளங்கையில் ஒரு சாக்லெட்டை வைத்தவன், அவளுடைய விரல்களை அப்படியே மூடினான்.
சிலிர்த்து சிவந்து போனாள் சத்யா. 
அவளுடைய நாணத்தை வெகுவாக ரசித்தான் கார்த்திக். அதுவும் அவன் கைக்குள் இருக்கும் அந்த விரல்களின் மென்மை அவனையும் வெகுவாக சோதித்தது.
“சத்யா நேரம் ஆகிட்டு. நீ கிளம்பு”, என்று காரமாக சொன்னான் கார்த்திக்.
“இப்ப எதுக்கு இவ்வளவு கோபமா சொல்ற மாதிரி பேசுறான்?”, என்று நினைத்தவளுக்கு கொஞ்ச நேரம் முன்பு வந்த சிலிர்ப்பு மாயமாய் மறைந்தது.
“ஹ்ம்ம்”, என்று சொல்லி விட்டு திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள். பின் பஸ்ஸில் ஏறியதூம் ஜன்னல் அருகே அமர்ந்து அவனை பார்த்தாள்.
அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னை பார்த்த போது அவள் முகத்தில் வந்த மலர்ச்சி, இப்போது இல்லாததை கண்டவன் தன்னையே திட்டி விட்டு அவளை பார்த்து அழகாக புன்னகைத்தான்.
அந்த புன்னகையில் சத்யா முகமும் மலர்ந்தது. பஸ் நகர ஆரம்பித்தது.
“போய் வா”, என்னும் விதமாய் தலை அசைத்தான் கார்த்திக். சிரித்து கொண்டே கை ஆட்டினாள் சத்யா. பஸ் அவன் கண்ணை விட்டு மறையும் வரை அதே இடத்தில் நின்றவன் தன்னுடைய பைக் நோக்கி சென்றான். 
மதுரையில் இறங்கிய சத்யா, அங்கு இருந்த போனில் தன் அப்பாவை அழைத்தாள்.
“பாப்பா எங்க டா இருக்க?”
“மதுரைக்கு வந்துட்டேன் பா. நம்ம ஊருக்கு வர பஸ் கிளம்பிட்டு இருக்கு. அதை சொல்ல தான் போன் பண்ணேன்”
“சரி பாப்பா, நீ அதுல வா. அப்பா பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்குறேன்”
“சரி பா”, என்று சொல்லி விட்டு அந்த பேருந்தில் ஏறி கொண்டாள்.
நடு ராத்திரியில் வந்து இறங்கிய மகளை அழைத்து போக பஸ் ஸ்டாண்ட் வந்திருந்த சண்முகநாதன் “பாப்பா”, என்ற படி வாஞ்சையுடன் அழைத்தார். “அப்பா”, என்ற படி அவரை அணைத்து கொண்டாள் சத்யா. அவள் கண்கள் தன்னாலே கலங்கியது.
“என்ன பாப்பா இது? வந்ததும் வராததுமா கண்ணு கலங்கி கிட்டு? நட வா. வீட்டுக்கு போவோம்”
“எப்படி பா இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க? உன் சினேகித பிள்ளைங்க எல்லாம் உன்கிட்ட அன்பா இருக்காங்களா?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க. நீ போன வாரம் வந்த அப்பவே அவங்க கிட்ட பாசமா பேசுனியா? அவங்க எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிட்டு. உன்னை கேட்டதா சொல்ல சொன்னாங்க”
“சரித்தா. அப்பாவும் கேட்டேனு சொல்லு. போகும் போது அவங்களுக்கும் சேத்து பண்டம் கொண்டு போ பாப்பா. ஆனா நாம கொடுத்தா வாங்குவாங்களா?”
“நீ எனக்கு கொடுத்து விட்டாலே அதை பிடுங்கி சாப்பிடுவாங்க பா. அப்ப அவங்களுக்குன்னு கொடுத்தா சாப்பிடாம இருப்பாங்களா?”
“இல்ல பாப்பா. நம்ம பக்கம் அயலார் கிட்ட வாங்கி சாப்பிட மாட்டோம்ல? அதான் கேட்டேன்”
“அதெல்லாம் நம்ம பக்கம் தான். அங்க அதெல்லாம் பாக்க மாட்டாங்க”
இருவரும் பேசிய படியே வீட்டுக்கு வந்தார்கள். 
“சரி பாப்பா, உடம்பை கழுவிட்டு படுத்து தூங்கு. அப்பா பால் ஏதும் காச்சு தரவா?”
“இப்ப வேண்டாம் பா. எனக்கு தூக்கம் வருது. நீயும் போய் தூங்கு”
“சரி டா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
தன் அறைக்குள் வந்தவள் பாத்ரூம் போய், குளித்து விட்டு படுக்கையில் படுத்து தூங்கி விட்டாள். 
காலையில் அவள் எழுந்து வெளியே வரும் போது, சண்முகநாதன் சாக்கு பை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்தார். 
அவளை பார்த்ததும் “எந்திச்சிட்டியா கண்ணு?”, என்று பாசத்துடன் கேட்டார் சண்முகநாதன்.
“ஆமா பா, நீ என்ன செய்ற?”
“கடைக்கு லோடு வாங்க நம்ம முனியாண்டியை அனுப்பனும். அதான் பையை எடுத்து வச்சிட்டு இருக்கேன்”
“நீயும் போறியா பா?”
“இல்ல பாப்பா, இன்னைக்கு வயலை போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்னு போறேன்”
“ஹ்ம்ம் சரி பா”
“சரி பாப்பா. நீ குளிச்சிட்டு வா. உன் அண்ணன் பொண்டாட்டி, நீ வருவேனு மீன் குழம்பு செஞ்சு கொடுத்து விட்டுருக்கா. உன் அண்ணன் தான் கொடுத்தான்”
“முகில் அண்ணா வந்துருக்கா பா?”
“ஆமா கண்ணு. பின்னாடி வைக்கோல் அடுக்க தான் போனான். அவனை பாத்துட்டு குளிச்சிட்டு வா. நாம ரெண்டு பேரும் சேந்து சாப்பிடலாம். அப்புறம் மதியம் நீயே எதாவது செஞ்சு தா பாப்பா. உன் கையாள சாப்பிடணும் போல இருக்கு”
அவர் குரலில் நெகிழ்ந்தவள் “இதுக்கு தான் உன்னை விட்டுட்டு போக மாட்டேன்னு சொன்னேன். சரி அண்ணனை போய் பாத்துட்டு குளிக்க போறேன்”, என்று சொல்லி விட்டு துள்ளலுடன் பின் பக்கம் சென்றாள். அங்கே இருந்த தன் பெரியப்பா மகன் முகிலை பார்த்தவள் “ஐயோ கரப்பான் பூச்சி கரப்பான் பூச்சி”, என்று கத்தினாள்.
அடுத்த நிமிடம் துள்ளி குதித்து அங்கே இருந்து ஓடி வந்த முகில் “எங்க? எங்க? எங்க கரப்பான் பூச்சி?”, என்று பதறி விட்டான்.
வாட்ட சாட்டமாக, கிராமத்துக்கே உரிய கம்பீரமான அழகுடன் கண் முன்னே இருந்த அண்ணனை பார்த்து சிரித்தவள் “பாக்க விருமாண்டி மாதிரி இருந்து கிட்டு இன்னும் இந்த கரப்பான் பூச்சிக்கு பயப்படுறதை நிறுத்தலை? என்ன அண்ணா?”, என்று சிரித்தாள்.
“ஏய் சின்ன குட்டி, நீ விளையாட்டுக்கு தான் சொன்னியா? நான் நிஜமாவே பயந்துட்டேன். எப்படி டா இருக்க?”, என்று அவள் தலையில் கொட்டி சிரித்தான் முகில்.
“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? அண்ணி எப்படி இருக்காங்க?”
“இங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நீ இல்லாத குறை தான்”
“சாப்பிட்டியா அண்ணா?”
“இந்த வைக்கோலை அள்ளி வச்சிட்டு குளிச்சிட்டு சாப்பிடணும் பாப்பா. ஆமா எத்தனை நாள் லீவ் உனக்கு?”
“அது ரெண்டு நாள் தான். நாளைக்கு நைட் கிளம்பிருவேன். நீ தான் பஸ் ஏத்தி விடனும்”
“சரி கழுதை. நேத்து நான் வீட்ல இல்லை. உரம் வாங்க போயிருந்தேன். இல்லைனா உன்னை கூப்பிட வந்துருப்பேன்”
“தெரியும் அண்ணா. அப்பா சொன்னாங்க”
“சரி சத்யா, உன் அண்ணி உனக்கும் சித்தப்பாவுக்கும் சாப்பாடு கொடுத்து விட்டா. நீ குளிச்சிட்டு சாப்பிடு. அப்புறமா வீட்டு பக்கம் வா. அப்பாவும் அம்மாவும் உன்னை பாக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க”
“சரி அண்ணா”, என்று திரும்பியவள் அங்கு இருந்ததை பார்த்து “பா…. பா…”, என்று அலறினாள்.
சீண்டல் தொடரும்….

Advertisement