Advertisement

“அவ சொல்றது எல்லாம் உண்மை தான் சார்”, என்று குறுக்கே புகுந்து பேசினான் ரவி.
அவர்களிடம் எல்லாவற்றையும் விசாரித்து விட்டு “இதெல்லாம் உண்மை தானா கார்த்திக்?”, என்று கேட்டார் பிரின்சிபால்.
அப்போது தான் கனவில் இருந்து வெளியே வந்தான் கார்த்திக்.
“ஆமா சார்”, என்று ஒப்பு கொண்டான் கார்த்திக்.
“சரி இனி அப்படி செய்யாத. இது தான் கடைசி வார்னிங். ஜஸ்டின் வந்த பிறகு இன்னொரு தடவை விசாரிச்சிட்டு பனிஸ்மென்ட் கொடுக்கணும். இப்ப கிளம்புங்க. ரவி உனக்கும் பனிஸ்மென்ட் உண்டு”, என்றார் பிரின்சிபால்.
“இப்ப வந்து உண்மையை சொல்லிருக்கானே சார். அவனை விட்டுருங்க”, என்று சொன்னான் கார்த்திக்.
புது வித பாசத்துடன் கார்த்திக்கை பார்த்தான் ரவி.
மூவரும் வெளியே வந்தவுடன் “சாரி சத்யா. தேங்க்ஸ் கார்த்திக்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் ரவி.
சத்யாவும், கார்த்திக்கும் நின்றிருந்தார்கள்.
“யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது?”, என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.
“நீங்க தானா கார்த்திக்?”, என்று சத்யா கேட்க வரும் போது, “ஏன்டா எருமை, எப்ப டா நீ திருந்த போற?”, என்ற பெண்ணின் குரலில் திகைத்து திரும்பினார்கள் இருவரும்.
அங்கே அவனை உக்கிரமாக முறைத்து கொண்டு நின்றிருந்தாள் கார்த்திக்கின் அம்மா தேவகி.
“அம்மா…”, என்று அழைத்தான் கார்த்திக்.
ஒரு பட படப்போடு தேவகியை பார்த்தாள் சத்யா. ஆனால் தேவகி அவளை பார்க்காமல் அவனை மட்டும் முறைத்து கொண்டிருந்தாள்.
“இப்ப என்ன டா நொம்மா. இன்னைக்கு என்னத்தை செஞ்சு வச்சிருக்க? நேத்து என்கிட்டே ஒண்ணுமே சொல்லலை. நீ இந்த பக்கம் நடந்த உடனே கால் வருது காலேஜ்க்கு வர சொல்லி. எவன் மண்டையை உடைச்ச? திருந்தவே மாட்டியா நீ? எருமை மாடு மாதிரி வளந்து வச்சிருக்க? கொஞ்சமாவது மூளை வளந்துருக்கா? உன்னை பெத்ததுக்கு ஒரு அம்மிக்கல்லை பெத்துருக்கலாம்”
தேவகி, கார்த்திக்கை திட்டுவதை பார்த்து கார்த்திக் முகத்தை பார்த்தாள் சத்யா. 
அவன் அவஸ்தையில் விழித்து கொண்டிருந்தான். அதை பார்த்ததும் சத்யா முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
அவள் சிரிப்பை பார்த்து அவளை முறைத்தவன் “அம்மா, நிறுத்து. நான் சொல்றதை கேளு மா”, என்றான்.
“என்னத்தை கேக்கணும்? இப்ப உள்ளே கூப்பிட்டு என்னை வளைச்சு வளைச்சு கேள்வி கேப்பானுங்க. உன் அப்பனை கூப்பிட்டா வேலை இருக்குன்னு கழண்டுக்கிட்டான். இன்னைக்கு வீட்டுக்கு வா அப்பனுக்கும் மகனுக்கும் இருக்கு”, என்று சொல்லி கொண்டே பிரின்சிபால் ஆபிஸ் நோக்கி காலடி வைத்தாள்.
தேவகி தோளை பற்றிய கார்த்திக் “நீ உள்ள போக வேண்டாம். பிரச்சனை முடிஞ்சிட்டு”, என்று சிரித்தான்.
“என்ன டா சொல்ற?”
“ஆமா மா. பிரச்சனை முடிஞ்சிட்டு. என் மேல தப்பு இல்லைனு சொல்லிட்டாங்க”
“எப்பவும் அதே தான சொல்லுறாங்க. இந்த தடவை என்ன ஆச்சு? யாருக்காக சண்டை போட்ட?”
“இங்க நிக்காங்களே இந்த மேடம்காக தான்”, என்று சத்யாவை காட்டினான் கார்த்திக்.
தயக்கத்துடன் கை குவித்த சத்யா “வணக்கம் ஆண்ட்டி”, என்றாள்.
“வணக்கம் மா. உன்கிட்ட யாரும் பிரச்சனை பண்ணாங்களா? இவன் வந்து உதவி செஞ்சானா?”, என்று கேட்டாள் தேவகி.
“எப்படி கண்டு பிடிச்சாங்க?”, என்று நினைத்து அமைதியாக தலை குனிந்தாள் சத்யா.
“இதுல நீ ஏன் மா தலை குனியுற? இவனை பத்தி தெரியாதா? எப்பவும் இதை தான செய்றான்? சரி டா என்னை வர சொன்னாங்களே. அப்புறம் என்ன ஆச்சு?”
“இவ விஷயம்னு தெரிய கூடாதுன்னு தான் இவளை அனுப்புனேன் மா. ஆனா இவ என்னை காப்பாத்த வந்து உண்மையை உளறிட்டா”, என்றான் கார்த்திக்.
“என்னால ஒரு தப்பும் செய்யாத அவங்களுக்கு எதுக்கு ஆண்ட்டி தண்டனை கிடைக்கணும் அதான்?”, என்று மரியாதையுடன் சொன்னாள் சத்யா.
இப்போது தான் இருவரையும் கூர்ந்து கவனித்தாள் தேவகி. அவளை காப்பாத்தணும்னு உண்மையை கார்த்திக் மறைத்தது தேவகிக்கு சாதாரணமாக தான் பட்டது. ஏன் என்றால் அது பல தடவை நடந்தது தான். எந்த பெண்ணை காப்பாற்றினாலும் கடைசியில் கார்த்திக் பழியை தன் மேலேயே தான் போட்டு கொள்வான்.
ஆனால் இன்று அவனை காப்பாற்ற ஒரு பெண் உண்மையை சொன்னாளா? தேவகி கண்ணுக்கு புது விதமாக தெரிந்தாள் சத்யா.
அப்போது மற்றொரு உண்மையும் விளங்கியது தேவகிக்கு. அது மகன் முகத்தில் இருந்த மலர்ச்சியும், சத்யாவை பார்க்கும் பார்வையில் தெரிந்த உரிமையும்.
“சரி தான் ரவுடி பய இந்த பொண்ணு கிட்ட மயங்கிட்டான்”, என்று நினைத்து கொண்டு சொந்தத்துடன் சத்யாவை பார்த்த தேவகி “உன் பேர் என்ன மா?”, என்று கேட்டாள்.
“சத்யா ஆண்ட்டி”
“அவளுக்கு இன்னொரு பேரும் இருக்கு மா”, என்று சிரித்து கொண்டே சொன்னான் கார்த்திக்.
இரு பெண்களும் அவனை பார்த்தார்கள்.
“அன்னைக்கு என்னை சண்டை கத்துக்கோன்னு சொன்னாள்ல? அதுவும் அந்த ஜஸ்டினை மிரட்டி என்னை காப்பாத்துனான்னு சொன்னேன்ல? அந்த வீராங்கனை இவ தான்”, என்று சிரித்தான் கார்த்திக்.
அசடு வழிந்தாள் சத்யா.
“ஹா ஹா நீ தானா அது? அவனே ரவுடி பய. அவனை இன்னும் சண்டை கத்துக்க சொன்னியா?”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் தேவகி.
“இல்லை ஆண்ட்டி. இவங்க தான் என்கிட்ட பொய் சொன்னாங்க. கார்த்திக் தைரிய சாலின்னு இந்த காலேஜ்க்கே தெரியும். ஆனா இவங்க தான் கார்த்திக்குனு எனக்கு தெரியாது. இவங்க பேர் கேட்டதுக்கு வேற பேரை சொல்லி ஏமாத்திட்டாங்க”
“ஐயோ அதை சொல்லாத சத்யா”, என்று அலறினான் கார்த்திக்.
அவன் அலறலில் தேவகியின் ஆவல் அதிகமானது. “நீ சொல்லு மா. என்ன பேர் சொன்னான்?”, என்று கேட்டாள் தேவகி.
“என்னை மட்டும் பாத்து சிரிச்சீங்கள்ல? நான் சொல்லுவேன். இவரோட பேர் குஞ்சு மணின்னு சொன்னாங்க ஆண்ட்டி”. என்று சிரித்தாள் சத்யா.
“போச்சு டா”, என்று தலையில் கை வைத்து கொண்டான் கார்த்திக்.
“ஹா ஹா குஞ்சு மணியா? ஹா ஹா டேய் செம பேர் டா உனக்கு”, என்று விழுந்து விழுந்து சிரித்தாள் தேவகி.
அவள் சிரிப்பை பார்த்து சத்யாவும் சிரித்தாள். இருவரையும் முறைத்தான் கார்த்திக்.
“என்ன டா முறைக்கிற? சூப்பர் பேரு டா”, என்று அவனை கலாய்த்து விட்டு சத்யாவுடன் அமர்ந்து நடந்த அனைத்தையும் கதை கேட்க ஆரம்பித்து விட்டாள் தேவகி.
நடந்த அனைத்தையும் சொல்லி கொண்டிருந்தாள் சத்யா. இருவரையும் ஒரு புண் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக்.
சிறிது நேரம் பேசிவிட்டு “நீ கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வரணும் சத்யா. கிளாசுக்கு நேரமாகுதே? நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. நான் வீட்டுக்கு கிளம்புறேன்”, என்று சொன்னாள் தேவகி.
கார்த்திக்கிடம் பேச ஆவலாக இருந்தாலும், இப்போது நின்று முழு கதையும் பேச முடியாது என்பதால் “சரி ஆண்ட்டி நான் கிளம்புறேன். வரேன் மணி. ச்சி வரேன் கார்த்திக்”, என்று வம்பிழுத்து விட்டு தேவகியிடம் அதுக்கு பாராட்டையும் பெற்று கொண்டு கிளப்பினாள் சத்யா.
அவள் போன பிறகு “அப்புறம்?”, என்று சொல்லி கார்த்திக்கை பார்த்து சிரித்தாள் தேவகி.
“என்ன அப்புறம்? வந்த வேலை முடிஞ்சிட்டுள்ள? இந்த விசயத்தை வச்சு நீயும் உன் புருசனும் இன்னும் ஒரு மாசத்துக்கு என்னை ஓட்டி தள்ளுவீங்க”, என்று சலித்து கொண்டான் கார்த்திக்.
“உண்மை தான். செம பன். உங்க அப்பா கிட்ட சொன்னா விழுந்து விழுந்து சிரிப்பார். ஆனா நீயா டா இவ்வளவு சீக்கிரம் ஒரு பொண்ணு கிட்ட விழுந்துட்ட?”
“இந்தம்மா அதுக்குள்ளே கண்டு பிடிச்சிருச்சே. அவ்வளவு தெரியுற மாதிரியா இருக்கு என் முகம்? இந்த அம்மா இருக்கே. இது கண்ணுல இருந்து எதுவும் தப்பிக்க முடியாது”, என்று நினைத்து கொண்டு “என்ன மா உளறுற?”, என்று சாதாரணமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டான்.
“நான் இப்ப சொன்னது உனக்கு புரியலை. இதை நான் நம்பனும். நீ காந்தி செத்துட்டாரான்னு கேப்ப? வீட்டுக்கு வா உனக்கு இருக்கு. இப்ப கிளம்புறேன். அவளை பாத்துகோ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
சிரித்து கொண்டே தன்னுடைய கிளாஸ் நோக்கி சென்றான் கார்த்திக். அடுத்து வந்த ஒரு வாரமும், சத்யா கண்ணில் சிக்காமல் இருந்தான் கார்த்திக்.
அவனுடைய டிபார்ட்மென்ட் போய் அவனை பார்ப்பதற்க்கு தயக்கமாக இருந்ததால், அந்த நினைப்பை கை விட்டாள். ஆனால் கேன்டீன் போகும் போதும், லேப்பிற்கு போகும் போதும் அவனை அவள் கண்கள் தேட தான் செய்தது.
அந்த வார இறுதியில் லைப்ரேரியில் அமர்ந்திருந்தாள் சத்யா.
புக்கை ரிட்டர்ன் பண்ண வந்த கார்த்திக் அவளை பார்த்து விட்டான். அவள் தலை நிமிராமல் குனிந்து எதையோ எழுதி கொண்டிருந்தாள். பார்த்து விட்டு பேசாமல் போக அவனுக்கு மனதில்லை.
அது மட்டும் இல்லாமல் ஒரு வாரம் அவளை பற்றியே யோசித்து கொண்டிருந்தான் கார்த்திக். கனவில் அவனை காதல் செய்து கொன்று நின்றிருந்தாள் சத்யா. 
அவனே அவளை பார்க்க தான் துடித்து கொண்டிருந்தான். அவனே சில நிமிடம் அவளை மறந்திருந்தாலும் தேவகியும், சேகரும் அவளை நினைவு படுத்தி கொண்டே இருந்தார்கள். 
அது வேறு அவன் மனதை குடைந்தது. அவன் காதலியாக வருங்கால மனைவியாக, அவனுடைய இதய சிம்மாசனத்தில் அவளை அமர்த்தி விட்டான் கார்த்திக்.
அப்படி இருக்கும் போது இப்போது பேச கிடைத்த வாய்ப்பை விடுவானா?
அவள் அருகில் வந்து “ஹாய்”, என்று சொன்னான். ஆனால் அவள் அழைத்தது அவள் காதில் விழ வில்லை. அப்போது சத்யாவை திகில் நிறைந்த முகத்துடன் கூப்பிட்டாள் சித்ரா.
“என்ன சித்ரா?”, என்று அவளை பார்த்தவள் அவள் முகம் போன திசையை பார்த்து தலையை திருப்பினாள்.
அங்கே அவளை பார்த்து சிரித்து கொண்டு நின்றிருந்தான் கார்த்திக்.
அவனை பார்த்ததும் அவள் முகமும் ஒளிர்ந்தது. அந்த ஒளிர்வில் உயிர்த்தான் கார்த்திக்.
தனக்கான ஒரு பெண்ணின் தேடலில் எந்த ஆண்மகனுக்கு தான் கர்வம் வராது. அந்த கர்வத்தை தந்தவளை காதலாக பார்த்தான் கார்த்திக்.
ஆனால் இருவர் முகத்திலும் வந்து போன உணர்வுகளை பார்த்து அரண்டாள் சித்ரா.
அங்கே அமைதியாக இருக்க வேண்டும் என்பதால் “என்ன?”, என்று சைகை செய்தாள் சத்யா.
சைகை செய்யும் கைகளை சிறை எடுக்க துடித்த கைகளை அடக்கியவன் “என்ன செய்ற சீரியஸா?”, என்று கேட்டு கொண்டே அவள் அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்.
“நாளைக்கு இங்கிலீஸ் செமினார்க்கு, மை ஆம்பிஷன் அப்படிங்குற தலைப்பில் அஞ்சு நிமிஷம் பேசணுமாம். அதுக்கு தான் நோட்ஸ் எடுத்துட்டு இருக்கேன்”
“மை ஆம்பிஷன் தலைப்புக்கு எதுக்கு நோட்ஸ் எடுக்கணும்? அது நீ என்ன விரும்புரியோ அதை பேச வேண்டியது தான?”
“தெரிஞ்சா பேச மாட்டோமா? ஒரு லைன்க்கே இங்க மூச்சு முட்டும். இதுல அஞ்சு நிமிஷம் இங்கிலீஸ் பேசணும்னா டப்பா டேன்ஸ் ஆடிரும்”
“சரி வா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்”, என்று சொல்லி அவள் கையில் இருந்த நோட்டையும் பேனாவையும் பிடுங்கி கொண்டான்.
திகைத்து போனாள் சத்யா. அப்போது தான் நினைவு வந்தவளாக பக்கத்தில் இருந்த சித்ராவை பார்த்தாள். அவள் ஆ என்று வாயை பிளந்து கொண்டு இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
தர்ம சங்கடமாக அவளை பார்த்தாள் சத்யா. அதில் தன்னை மீட்டு கொண்ட சித்ரா, “நான் ஒரு புக் தேடிட்டு அரை மணி நேரத்துல வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்.
“புக் தேடிட்டு வரேன்னு சொல்லாம அது என்ன அரை மணி நேரத்துல வரேன்னு சொல்லிட்டு ஓடுறா?”, என்று யோசித்து விடை தெரியாததால் கார்த்திக் பக்கம் கவனத்தை செலுத்தினாள் சத்யா.
“இப்ப உன்னோட கனவை நீ தமிழ்ல சொல்லு. நான் அதை இங்கிலீஸ்ல எழுதி தரேன்”, என்றான் கார்த்திக்.
அரை மணி நேரம் போராடி ரெண்டு லைன் மட்டும் முடித்திருந்தவளை பத்தே நிமிசத்தில் முழுவதையும் எழுதி முடித்து கொடுத்து ஆச்சர்ய படுத்தினான்.
ஆச்சர்யமாக அவனை பார்த்து சொல்லவும் செய்தாள் சத்யா.
“எனக்கு இப்படி எல்லாம் இங்கிலீஸ் வரலை. எல்லாமே இங்கிலீசா இருக்கு. ஒண்ணுமே புடிக்கலை. உங்களுக்கு இங்கிலீஸ் ஈஸியா இருக்கு. எப்படி?”
“எங்க அம்மா, அப்பா என்னை கான்வென்ட்ல தான் படிக்க வச்சாங்க. அதனால தெரியும். அப்புறம் நீ பய படாத. பைனல் இயர் முடிக்கும் போது, நீ என்னை விட அழகா இங்கிலீஸ் பேசுவ. அது பழகிரும். அது வரைக்கும் இந்த மாதிரி எந்த ஹெல்ப் வேணும்னாலும் கேளு”
“ஹ்ம்ம் ஆனா எப்படி கேக்க? நீங்க என்னோட டிபார்ட்மென்ட் இல்லையே”
“ஒரே ஒரு மிஸ்ட் கால் கொடு. ஓடி வந்து ஹெல்ப் பண்றேன்”
“என்கிட்ட போன் இல்லையே. உங்க கிட்டயும் இல்லை. அப்புறம் எப்படி பேச?”
“என்கிட்ட இல்லைனு யார் சொன்னா?”, என்று கேட்டு கையில் எடுத்து காண்பித்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தவள் அவன் காதருகே வந்து “போன் இந்த காலேஜ்ல வைக்க கூடாதுன்னு ரூல் இருக்கே”, என்றாள்.
அவளுடைய நெருக்கத்தில் அந்த வாலிபனின் காதல் எண்ணத்தை மேலும் தூண்டி விட்டாள் சத்யா அவளை அறியாமலே. அவள் வாசனையை அவன் நாசி உணர்ந்தது.
சீண்டல் தொடரும்….

Advertisement