Advertisement

அத்தியாயம் 4
என் ஒவ்வொரு நாள்
உறக்கத்தையும் தின்று
தீர்க்கிறது உன் நினைவுகள்!!!
“ஏன் அப்படி சொன்னாள்? நான் அவளுக்காக ஜஸ்ட்டினை அடிக்கணும்னு அவ நினைக்கிறாளா? இதுக்கு என்ன அர்த்தம்?”, என்று புரியாமல் குழம்பினான் கார்த்திக்.
அதன் பின் இதை பற்றி யோசித்து யோசித்து சத்யா அவன் வாழ்வில் முக்கியமானவளாக மாறி போனாள்.
அங்கே ஜஸ்ட்டினும் அதே நிலைமையில் தான் இருந்தான். அவன் இது வரை எந்த பெண்ணையும் பெரிதாக நினைத்தது கிடையாது. ஆனால் சத்யாவின் அழகு அவனை தலை கீழாக புரட்டி போட்டது. எப்படியாவது அவள் தனக்கே வேண்டும் என்று நினைத்தான்.
சத்யா, கார்த்திக்கிடம் பேசி விட்டு சென்ற அடுத்த நாள் கார்த்திக் ஜஸ்ட்டினை தேடி வந்தான்.
“நான் அன்னைக்கு அவ்வளவு தூரம் சொல்லியும் நீ சத்யாவை தொந்தரவு பண்ற அப்படி தானே?”, என்று எரிச்சலில் பேசினான் கார்த்திக்.
“சத்யா வந்து உன்கிட்ட சொன்னாளா, நான் தொல்லை செய்றேன்னு?”, என்று திமிராய் கேட்டான் ஜஸ்ட்டின்.
“சொல்லாமலா உன்கிட்ட வந்து பேசிட்டு இருக்கேன்? அவ தான் பிடிக்கலைன்னு சொல்றாள்ல. அப்புறம் ஏன் இப்படி பண்ணிட்டு இருக்க?”
“இது உனக்கு தேவை இல்லாதது கார்த்திக். வீணா என் விசயத்துல குறுக்க வராத”
“என்னது குறுக்க வராதேவா? சத்யா விசயத்துல நீ ஒதுங்கி போகணும். அவளை இனி தொல்லை செஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன் ஜஸ்ட்டின்”
“என்ன செய்வ? நான் அப்படி தான் செய்வேன். சத்யா எனக்கு தான் சொந்தம். அவளை அடஞ்சே தீருவேன்”, என்று ஜஸ்ட்டின் சொன்ன அடுத்த கணம் கார்த்திக்கின் கரம் ஜஸ்டின் கன்னத்தில் இடியாய் இறங்கியது.
“பேசிக்கிட்டு இருக்கும் போது கை நீட்ட கூடாது தான். ஆனா நீ அளவுக்கு மீறி போற? சத்யா விசயத்துல ஏதாவது பண்ணேன்னா, உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. இது தான் நான் உனக்கு கொடுக்குற கடைசி எச்சரிக்கை சொல்லிட்டேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் கார்த்திக்.
எரிச்சலாக வந்தது ஜஸ்ட்டின்க்கு. “எப்படி வந்து அடிச்சிட்டு போறான். இதுக்கு காரணம் அந்த சத்யா தான? ஒண்ணு அவ என்னை லவ் பண்றேன்னு இன்னைக்கு சொல்லணும். இல்லைனா அவ எனக்கே கிடைக்கிற மாதிரி ஏதாவது செய்யணும்”, என்று வாய் விட்டே புலம்பினான் ஜஸ்ட்டின்.
“என்ன டா செய்ய போற?”, என்று கேட்டான் உடன் இருந்த ரவி.
“இன்னைக்கு எப்படியாவது அவளை தனியா பாக்கணும் டா ரவி”
“அதுக்கென்ன? பாத்துட்டா போச்சு. சாயங்காலம், அவளை மட்டும் ஹாஸ்டலுக்கு போக விடாம நிப்பாட்ட வேண்டியது என்னோட பொறுப்பு. அவளுக்கு துணைக்கு யாரும் இருக்க மாட்டாங்க. மித்த ஜூனியர் எல்லாரையும் விரட்டி விட்டுறேன்”, என்று சிரித்தான் ரவி.
பிளான் செய்து முடித்ததும் சந்தோசத்துடன் அவர்கள் கிளாஸ் நோக்கி சென்றார்கள்.
கிளாஸ் அருகில் சென்றதும், அவர்கள் குரூப்பில் இருந்த மோகன், “நான் பாத்‌ரூம் போய்ட்டு வரேன் டா”, என்று சொல்லி விட்டு கழண்டு கொண்டான்.
அன்று கடைசி பீரியடில் புரொபஸர் நடத்தும் இங்கிலீஸ் பாடத்தை தலை விதியே என்று கவனித்து கொண்டிருந்தாள் சத்யா.
ஒன்றும் புரியாமல் கண்களில் தூக்கம் சொக்கி அமர்ந்திருந்தவளை சோதித்தது போதும் என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ, பாடம் நடத்தி கொண்டிருந்த விஸ்ணு வர்தனை பிரின்சிபால் அழைப்பதாக பியூன் வந்து சொன்னான்.
“சரி ஸ்டுடென்ட்ஸ். பெல் அடிச்ச பிறகு எல்லாரும் கிளம்புங்க. இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு. அமைதியா இருங்க. எப்ப வேணும்னாலும் ஹெச். ஓ.டி ரவுண்ட்ஸ் வருவார்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
அப்பாடி என்ற விடுதலை உணர்வுடன் எல்லாரும் சிரித்து பேசி கொண்டிருந்தார்கள்.
பத்து நிமிசத்தில் பெல்லும் அடிக்க பட்டது. காலேஜ் பஸ்ஸில் போகிறவர்கள் கிளம்பி சென்று விட்டார்கள்.
கோகிலா, சித்ரா, கிருத்திகா, சத்யா நால்வரும் கிளம்பும் போது ரவி அங்கு வந்தான்.
நால்வரையும் வழி மறைத்தவனை திகிலாக பார்த்தார்கள்.
“சத்யா நீ மட்டும் கொஞ்சம் இரு. உன்கிட்ட ஜஸ்டின் ஏதோ பேசணுமாம்”, என்றான்.
“அதெல்லாம் முடியாது. வாங்க நாம போகலாம்”, என்று சொல்லி நடக்க பார்த்தாள் சத்யா.
“ப்ளீஸ் சத்யா. உன்னை நிப்பாட்ட சொல்லி என்கிட்ட தான் அவன் சொல்லிருக்கான். நான் அதை செய்யலைன்னா அவன் என்னை அடிப்பான். அவனை பத்தி தான் உனக்கு தெரியுமே. இங்க பாரு. போன வாரம் அவன் என்னை அடிச்சது”, என்று சொல்லி, தன்னுடைய வீட்டில் கம்பியில் குத்திய காயத்தை காண்பித்தான்.
அதில் இளகிய சத்யாவும் “சரி இருக்கேன். ஆனா என்னோட பிரண்ட்ஸ்சும் இருக்கட்டும்”, என்றாள்.
“ஐயோ ப்ளீஸ் சத்யா. அவங்களும் இருந்தா என்னை திட்டுவான். அடிப்பான். ப்ளீஸ் புரிஞ்சிக்கோயேன்”, என்று நம்பும் படி கதை அளந்தான் ரவி.
இவனை நம்பி இருப்பது முட்டாள் தனமாக பட்டாலும், “அப்படி காலேஜ்ல வச்சு ஜஸ்டின் என்ன தான் செஞ்சிர முடியும்?”, என்று நினைத்து கொண்டு மற்றவர்களை போக சொன்னாள்.
“இன்னைக்கே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டிட்டு வந்துரு டி சத்யா. அந்த சீனியரை பாத்தாலே சரி இல்லைன்னு தோணுது. சீக்கிரம் வந்துரு”, என்று சொல்லி விட்டு சென்றாள் கோகிலா.
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த டிபார்ட்மெண்டில் யாருமே இல்லை. கொஞ்சமாக பயம் வந்தது சத்யாவுக்கு.
அவள் கிளம்புவதை பார்த்த ரவி “உள்ள கிளாஸ்ல உக்காரு சத்யா. இப்ப வந்துருவான்”, என்றான்.
“இல்லை வேண்டாம்”, என்று நினைத்து கொண்டு கிளாஸ் வாசலிலே நின்று கொண்டாள் சத்யா.
சிறிது நேரத்திலே அங்கே வந்தான் ஜஸ்டின். அவன் வந்ததும் ரவி காதில் என்ன சொன்னானோ ரவியும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்.
திகில் பிடித்து கொண்டது சத்யாவை. அவள் அருகில் வந்தான் ஜஸ்டின்.
“ஹாய் சத்யா”
“இப்ப எதுக்கு அண்ணா என்னை மட்டும் இருக்க சொன்னீங்க? இனி இப்படி எல்லாம் செய்யாதீங்க. சீக்கிரம் சொல்லுங்க. நான் போகணும்”
“ஏய் நான் உன்னை அண்ணன்னு கூப்பிட கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல?”
“அண்ணனை அண்ணன்னு தான கூப்பிடணும்?”
“எரிச்சலை கிளப்பாத. நான் உன்னை விரும்புறேன்னு சொல்லறேன்ல?”
“ஆனா நான் விரும்பலையே”
“ஓ அதனால தான் அந்த கார்த்திக் கிட்ட என்னை பத்தி கம்பளைண்ட் பண்ணிட்டு இருக்கியா?”
“இது வரைக்கும் நான் கார்த்திக் கிட்ட சொல்லலை. ஆனா இனி இந்த மாதிரி செஞ்சா கண்டிப்பா கம்பளைண்ட் பண்ணுவேன். இப்ப கிளம்புறேன்”, என்று நகர பார்த்தவளை கையை பிடித்து இழுத்து கிளாசுக்குள் தள்ளினான் ஜஸ்டின்.
அவன் தள்ளியதில் கீழே விழுந்தவள் திகைத்து பயத்துடன் எழுந்து நின்றாள்.
“நான் நின்னு பேசிட்டு இருக்கேன். எங்க டி ஓடி பாக்குற?”, என்று கத்தினான் ஜஸ்டின்.
“ஏய் நீ ரொம்ப பண்ற. டீன்னு பேசுன, பல்லை பேத்துருவேன் பாத்துக்கோ. இதெல்லாம் தப்பு. அப்புறம் என்ன ஆகும்னு தெரியாது. என்னை விடு”, என்ற படியே மறுபடியும் வெளியே போக பார்த்தாள்.
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?”, என்ற படியே அவளை பிடிக்க போனவனை அங்கு வந்த கார்த்திக் புரட்டி எடுத்து விட்டான்.
ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் சத்யா.
தனியே சிக்கி கொண்டவளை காப்பாற்ற ஒரு ஆள் கிடைத்ததே அவளுக்கு பெரியதாக இருந்தது. அதுவும், மணி என்று நினைத்து கொண்டிருக்கும் கார்த்திக் வந்தது அதை விட பெரிய சந்தோசம். 
அதுவும் அவள், அவனை அப்பாவி, பயந்த சுபாவம் என்று நினைத்து வருந்தும் போது அவனோ ஜஸ்டினை இந்த அடி அடித்தால் அவளுக்கு சந்தோசம் வராமல் இருக்குமா?
அடின்னா அடி, அந்த அளவுக்கு அவனை துவைத்து கொண்டிருந்தான் கார்த்திக்.
அடி தாங்க முடியாமல் அலறினான் ஜஸ்டின். “கார்த்திக் விட்டுரு ப்ளீஸ். இனி செய்ய மாட்டேன். வலிக்குது”, என்று கெஞ்சினான் ஜஸ்டின்.
அவன் கார்த்திக் என்று சொன்னதும் திக் பிரம்மை பிடித்து நின்று விட்டாள் சத்யா.
எதை பற்றியும் யோசிக்காமல் அவனை கொன்று விட வேண்டும் என்ற நோக்கில் மட்டும் அடித்து கொண்டிருந்தான் கார்த்திக்.
அதில் ஜஸ்டின் சத்தம் அதிகமாவதை உணர்ந்தவன் “யாரும் வந்தால் சத்யாவுக்கு பிரச்சனை”, என்று நினைத்து அவனை அடித்து கொண்டே அவள் புறம் திரும்பியவன் “சத்யா ஹாஸ்டல் கிளம்பு”, என்றான்.
அவள் அப்படியே சிலை போல் நிற்பதை உணர்ந்தவன் “ஏய் அறிவு இல்லை? சொல்றது காதில் விழலையா? இங்க நீ இருக்குறது யாருக்கும் தெரிய கூடாது. உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. ஓடு இங்க இருந்து”, என்று கத்தினான்.
அவனிடம் பேச துடிக்கும் வாயை கட்டு படுத்தியவள், அங்கே இருந்து ஹாஸ்டலுக்கு ஓடியே விட்டாள்.
ஹாஸ்டல் போன உடனே கோகிலாவிடம் மட்டும் உண்மையை சொல்லி விட்டு “இரவு சாப்பாடு வேண்டாம்”, என்று சொல்லி படுத்து விட்டாள்.
“இன்னைக்கு மட்டும் கார்த்திக் வராமல் இருந்திருந்தா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?”
அந்த நினைவே அவளுக்கு பயத்தில் புல்லரித்தது. அது மட்டும் இல்லாமல் அவன் தான் கார்த்திக் என்று தெரிந்த நொடி, ஏதோ உடல் முழுவதும் பரவசம் வந்தது போல உணர்ந்த உணர்வை இப்போதும் அனுபவித்தாள் சத்யா.
“என்ன ஆகியிருக்கும் அங்க? இப்ப ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிருப்பாங்களா? யாரும் பாத்திருப்பாங்களா? இதுல கார்த்திக்குக்கு எதாவது பிரச்சனை வருமா? என்னால அவனுக்கு தொல்லை வருமா?”, என்று யோசித்து யோசித்து குழம்பி தவித்தாள். எப்போது உறங்கினாள் என்று தெரியாமலே தூங்கி போனாள்.
காலையில் எப்பவும் கிளம்பும் நேரத்துக்கு முன்னதாகவே கிளப்பி விட்டாள் சத்யா.
அவளுக்கு கார்த்திக்கை பார்க்க வேண்டும். அதை நினைத்து கிளம்பி வந்தவள், எப்படி பார்க்க என்று தெரியாமல் தன்னுடைய கிளாஸ்க்கே வந்து அமர்ந்தாள்.
அப்போது அங்கு வந்த ரவி, “நேத்து என்ன நடந்தது சத்யா? நீயும் இங்க தான இருந்த?”, என்று கேட்டான்.
அவனை ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்தவள் “நீ தனியா என்னை அவன் கிட்ட மாட்டி விட்டுட்டு போன உடனே ஒரு ஆம்பளை வந்து காப்பாத்திட்டான். நீயெல்லாம் ஒரு ஆம்பளை தூ”, என்று துப்பினாள் சத்யா.
“சாரி சத்யா. என்னை மன்னிச்சிரு. ஜஸ்டின் உன்னை விரும்புறேன்னு சொன்னதுனால தான், நான் ஹெல்ப் பண்ணனும்னு நினைச்சேன். இப்ப அவன் சீரியஸா ஹாஸ்ப்பிட்டல்ல படுத்துருக்கான். அங்க கார்த்திக் க்கு என்கொயரி ஓடிட்டு இருக்கு”
“என்னது கார்த்திக்கு என்கொயரியா?”
“ஆமா, அவன் தான் அடிச்சான்னு எல்லாருக்கும் தெரிஞ்சிட்டு. காரணம் கேட்டா சும்மா அவனை பிடிக்காது, அதான் அடிச்சேன்னு சொல்லிருக்கான். அவனுக்கு சஸ்பென்ஷன் கிடைக்கும்னு நினைக்கிறேன். அவன் வீட்ல இருந்து ஆள் வர சொல்லிருக்காங்களாம். ஜஸ்டின் என்னோட பிரண்ட் அப்படிங்குறதுனால என்னை கூப்பிட்டுருக்காங்க. அதான் போகுறதுக்கு முன்னாடி உன்கிட்ட கேட்கலாம்னு வந்தேன்”
“ஐயோ வா போகலாம். கார்த்திக்கு எதுவும் கெட்டது நடக்க கூடாது. ஜஸ்டின் கிட்ட இருந்து என்னை காப்பாத்த தான் கார்த்திக் அவனை அடிச்சான். வா போய் உண்மையை சொல்லுவோம்”
“வேண்டாம் சத்யா. உன் பேர் வெளிய வர கூடாதுனு தான் கார்த்திக் அப்படி பொய் சொல்லிருக்கான்னு நினைக்கிறேன். அது அப்படியே இருக்கட்டும்”
“என்னால இப்படி எல்லாம் சுயநலமா இருக்க முடியாது. உனக்கு கொஞ்சமாவது மனசு உறுத்துச்சுன்னா என்கூட வந்து நேத்து நடந்ததை சொல்லு”
“சரி வரேன். வா போகலாம்”
அங்கே மெக்கானிக்கல் ஹெச். ஓ. டி, பிரின்சிபால் என அனைவரும் கார்த்திக்கை சுற்றி வளைத்து திட்டி கொண்டிருந்தார்கள்.
“நிறைய தடவை இப்படி தான் சார் காலேஜ்ல பிரச்சனை பண்றான். இப்படியே போச்சுன்னா கொலை செய்ய கூட தயங்க மாட்டான்”, என்று ஒருவரும் “இப்படி போட்டு அடிச்சிருக்கான்னா அவன் என்ன தப்பு செஞ்சானோ?”, என்று இன்னொருவரும் என மாறி மாறி பேசி கொண்டிருந்தார்கள்.
எந்த விதமான பதிலையும் சொல்லாமல் ஒரு இறுக்கத்துடன் நின்றிருந்தான் கார்த்திக்.
அப்போது பெர்மிஷன் கூட வாங்காமல் புயல் என அந்த அறைக்குள் ரவியுடன் நுழைந்தாள் சத்யா.
முகம் எல்லாம் வியர்வை வடிய பதட்டத்துடன் இருந்தாள் சத்யா.
அவளை பார்த்ததும் பல்லை கடித்தான் கார்த்திக். “இப்ப இவளை யாரு இங்க வர சொன்னா?”, என்று அவன் அவளை முறைக்கும் போதே அவனை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள், “சீனியர் கார்த்திக் மேல எந்த தப்பும் இல்லை சார். இவங்க ஜஸ்டினை அடிச்சதுக்கு காரணம் நான் தான்”, என்று நேரடியாக விசயத்துக்கு வந்தாள்.
“நீ யாரு மா? எந்த கிளாஸ்? என்ன சொல்ற?”, என்று கேட்டார் பிரின்சிபால்.
“நான் பர்ஸ்ட் இயர் சார். என் பேர் சத்யா, ஈ.சி.ஈ டிபார்ட்மெண்ட். ஜஸ்டின் எங்க டிபார்ட்மென்ட் தான். கொஞ்ச நாளா லவ் பண்றேன்னு என்னை தொல்லை செஞ்சிட்டு இருந்தான்”
“கொஞ்ச நாளான்னு சொல்ற? எங்க யார் கிட்டயும் ஏன் கம்பளைண்ட் பண்ணலை?”
“கம்பளைண்ட் பண்ணா அவனோட படிப்பு பாதிக்க படும்னு நினைச்சேன். அது மட்டும் இல்லாம காலேஜ் குள்ள வச்சு, என்னை என்ன செய்ய முடியும்னு நினைச்சேன். ஆனா நேத்து…”
“சத்யா நீ எதுவும் சொல்ல வேண்டாம். போ இங்க இருந்து”, என்று கத்தினான் கார்த்திக்.
அவன் சொன்னதை கேட்காமல் “நேத்து என்னை மட்டும் தனியா நிக்க வச்சு மிரட்டினான் சார். கீழ எல்லாம் தள்ளி விட்டான். அப்ப இவங்க தான் வந்து காப்பாத்துனாங்க . இல்லைனா என்ன ஆகிருக்குமோ?”, என்று அழுது விட்டாள் சத்யா.
தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து அவள் கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற ஆவல் வந்த போது தான் அவன் மனதையே உணர்ந்தான் கார்த்திக்.
“இதுக்கு தானா? என்னோட மனசு சத்யாவுக்காக இதனால் தான் இப்படி துடிச்சதா? அவ எனக்கே எனக்குன்னு நினைக்கிறதுனால தான் ஜஸ்டினை அப்படி அடிச்சேனா? அவளை பாத்ததும் என் மனசு சந்தோச படுறதுக்கு காரணம் இந்த காதல் தானா?”, என்று நினைத்து புது விதமாக அவளை பார்த்தான்.
சுற்றி அவனுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களும், கல்லூரி முதல்வரும் நின்று அவனை காலேஜ் விட்டே துரத்தும் முயற்சியில் ஈடு பட்டு கொண்டிருக்க, அவன் எல்லாவற்றையும் மறந்து தேவலோகத்தில் இருக்கும் மங்கையை போல் அழகாக இருந்த சத்யாவை ரசித்து கொண்டிருந்தான்.
“இவ தான் எல்லாமே எனக்கு”, என்று நினைத்து நெஞ்சில் ஒரு பரவசம் வந்தது.
“கார்த்திக் மேல எந்த தப்புமே இல்லை சார். என் பெயர் வெளிய வந்தா ஏதும் பிரச்சனை வரும்னு நினைச்சு நடந்ததை சொல்லலை போல. அது மட்டும் இல்லாம, நான் காலேஜ் வந்த அன்னைக்கே இந்த கார்த்திக்கை, அந்த ஜஸ்டின் அப்புறம் அவனோட பிரண்ட்ஸ் எல்லாரும் சேந்து அடிக்க பாத்தாங்க. அந்த ஜஸ்டின் குணம் சரியே இல்லை சார்”

Advertisement