Advertisement

“சீனியர்ஸை அக்கா, அண்ணனு தான் சொல்லணும்? சரி அதை விடுங்க இப்ப எதுக்கு என்னை நிக்க சொன்னீங்க? சொல்லுங்க நான் போகணும்”
“அன்னைக்கு முதல் தடவை உன்னை பாத்த அன்னைக்கே நான் விழுந்துட்டேன் சத்யா”
“என்னது விழுந்துட்டீங்களா? ஹாஸ்பிட்டல் போனீங்களா?”
“ஐயோ நான் விழலை”
“இப்ப தான விழுந்தேன்னு சொன்னீங்க?”
“சத்யா, நான் அதை சொல்லலை. உன் மேல காதலில் விழுந்துட்டேன்னு சொன்னேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு”
அதிர்ச்சியாக அவனை பார்த்தாள். அவன் ரோசை அவளிடம் நீட்டினான்.
“எனக்கு காதல் எல்லாம் பிடிக்காது. ஒழுங்கா படிக்க விடுங்க”, என்று முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டு நடந்து விட்டாள்.
ஹாஸ்டல் போன பிறகு என்ன என்ன என்று கேட்டு உயிரை எடுத்தவர்களிடம் “உண்மையை சொன்னா இவர்களே டெவலப் பண்ணி விட்டுருவாங்க”, என்று நினைத்து கொண்டு “நம்ம கிளாசில் அந்த அண்ணன் யாரையோ லவ் பண்றாங்களாம். அதை அந்த பொண்ணு கிட்ட நான் சொல்லணுமாம்”, என்றாள்.
“யார் அந்த பொண்ணு?”, என்று கேட்டாள் கோகிலா.
“சொல்றதுக்குள்ள அவங்க பிரண்ட்ஸ் கூட்டிட்டு போய்ட்டாங்க”, என்று சொல்லி அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்த சத்யா, அடுத்த நாளே கார்த்திகை கண்களால் தேடினாள்.
அவன் கண்ணெதிரே வராததால், அவனுடைய டிபார்ட்மெண்ட்க்கே போய் விட்டாள்.
ஆனால் உள்ளே போக தயக்கமும் பயமும் வந்ததால் திரும்பி விடலாம் என்று நினைக்கும் போதே அவளுக்கு நல்ல நேரம் போல? கார்த்திக் அவளை பார்த்து கை அசைத்து அவள் அருகில் வந்தான்.
“ஹே சத்யா, என்ன இந்த பக்கம்?”
“நான் உங்களை தான் பாக்க வந்தேன்”
“என்னையா?”
“ஹ்ம்ம் ஆமா, நாம இப்பவே கார்த்திக்கை பாக்க போகணும்”
“என்னது???? எதுக்கு?”
“முதல் காரணம் உங்களுக்கு சண்டை சொல்லி கொடுக்க. இன்னொன்னு எங்க சீனியர் என்னை தொந்தரவு பண்றான்”
பல்லை கடித்த கார்த்திக் “ஜஸ்டினா?”, என்று கேட்டான்.
“ம்ம்”
“என்ன செஞ்சான்?”
“லவ் பண்றேன்னு வழி மறைச்சு பேசுறான். கார்த்திக் ரொம்ப நல்லவனாம். அவன் கிட்ட இதை சொன்னா அந்த சீனியரை தட்டி வைப்பான்ல அதான். போகலாமா?”
“இன்னைக்கு கார்த்திக் வரலையே”
“ஐயோ அப்படியா? நல்லா தெரியுமா?”
“என் கிளாஸ் பையனை எனக்கு தெரியாதா? இன்னைக்கு வரலை”
“ஓ சரி இன்னொரு நாள் பாக்கலாம். வரேன்”
“ஹ்ம்ம்”
அவள் போன பிறகு முகம் இறுக நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக். அவன் முகத்தில் கொலை வெறி தாண்டவம் ஆடியது.
அவள் போன பிறகு ஜஸ்டினை தேடி சென்றான் கார்த்திக். ஜஸ்டின் அவனுடைய குழுவுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான்.
இவனை பார்த்ததும் புருவம் உயர்த்திய ஜஸ்டின் “அன்னைக்கு என் மண்டையை உடைச்சதை நான் மறந்துட்டேன். பொழைச்சு போன்னு விடுறேன். கிளம்பு இங்க இருந்து”, என்று தெனாவெட்டாக சொன்னான்.
“அடி வாங்கினாலும் மீசைல மண்ணு ஒட்டலைன்னு இருக்கான் பாரு. இவன் என்னை பொழைச்சு போன்னு விட்டானா?”, என்று நினைத்து எரிச்சல் வந்தது கார்த்திக்க்கு.
“இங்க பாரு ஜஸ்டின், நான் இப்ப நம்ம விவகாரம் பேச வரலை. வேற ஒரு விஷயமா பேச வந்தேன்”
“என்ன விஷயம்? சொல்லிட்டு இடத்தை காலி பண்ணு”
“எவ்வளவு பட்டாலும் இவனுக்கு புத்தி வராது. என்னைக்கு என்கிட்டே வசமா வாங்கி கட்ட போறான்னே தெரியலை”, என்று நினைத்து பல்லை கடித்தவன் “நீ சத்யா கிட்ட லவ் பண்றேன்னு சொன்னியா?”, என்று நேரடியாக விசயத்துக்கு வந்தான்.
“அவ கிட்ட சொன்னது இவனுக்கு எப்படி தெரிஞ்சது?”, என்று குழம்பினாலும் “ஆமா இப்ப அதுக்கு என்ன?”, என்று கேட்டான் ஜஸ்டின்.
“அந்த பொண்ணு கிராமத்துல இருந்து நம்ம ஊருக்கு படிக்க வந்திருக்கு. அதை போய் தொல்லை பண்ணலாமா சொல்லு”
“ஏய் நான் அவளை லவ் பண்றேன் கார்த்திக். எனக்கு அவளை பிடிச்சிருக்கு. அதனால அவ கிட்ட சொன்னேன். இதுல என்ன தப்பு இருக்கு?”
“என்ன தப்பு இருக்கா? உனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம் ஜஸ்டின். அப்பாவி பொண்ணோட வாழ்க்கையில விளையாடாதே”
“அப்படி எல்லாம் இல்லை. அவளை கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேன்”
“இவனுக்கு வந்திருக்குற காதலை நிப்பாட்ட எப்படி முடியும் என்னால? இதுக்கு என்ன சொல்ல?”, என்று தெரியாமல் மௌனமாய் நின்றான் கார்த்திக்.
“இங்க பாரு கார்த்திக் நான் எல்லாரையும் கிண்டல் பண்ணுவேன் தான். சில நேரம் வரை முறை இல்லாம பேசியிருக்கேன். ஆனா யாரையும் லவ் பண்றேன்னு ஏமாத்துனது இல்லை. எனக்கு சத்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் எங்க அப்பா கிட்ட சொல்லி பொண்ணு கேப்பேன் டா. இதுல நீ தலை இடாதே”
ஒரு பெருமூச்சு வந்தது கார்த்திக்க்கு . “நீ விரும்புறதுல தப்பு இல்லை ஜஸ்டின். ஆனா அவளும் உன்னை விரும்பணும்ல?”
“அவ கண்டிப்பா என்னை விரும்புவா. விரும்ப வைப்பேன்”
“இப்ப புரியுதா நான் ஏன் தடுக்குறேன்னு? என்னமோ செஞ்சு முடிப்பேன்னு சொல்ற மாதிரி விரும்ப வைப்பேன்னு சொல்ற? காதல் என்ன கடைல வாங்குற பொருளா? அது அவளுக்கா தோண வேண்டாமா? அவ உன்னை பிடிக்கலைன்னு சொல்றா. அப்ப நீ விலகி தான போகணும். தேவை இல்லாம அவளை டிஸ்டர்ப் பண்ணாத”, என்று சொல்லி விட்டு நடந்து விட்டான்.
“மச்சி நீ சொன்னது எப்படி டா இவனுக்கு தெரிஞ்சிருக்கும். அந்த சத்யா சொல்லிருப்பாளோ?”, என்றான் கூட்டத்தில் இருந்த ஒருவன்.
“அவ சொல்லிருக்க மாட்டா டா. சத்யா நல்ல பொண்ணு. அன்னைக்கு நம்ம கிட்ட இருந்து இவனை அவ காப்பாத்துனாள்ல. அதான் கார்த்திக்கு அவளை பிடிச்சிருக்கு போல? அதான் எப்படியோ மோப்பம் பிடிச்சு வந்து மிரட்டிட்டு போறான். இது எது வரை போகுதுன்னு பாப்போம். வாங்க டா கிளாசுக்கு போகலாம்”, என்றான் ஜஸ்டின்.
எல்லாரும் கிளாசுக்கு போகும் போது சத்யாவை பார்த்த ஜஸ்டின் அவள் அருகே சென்று “நீ கார்த்திக் கிட்ட நான் லவ் பண்றேன்னு சொன்னதை சொன்னியா சத்யா?”, என்று கேட்டான்.
திகைப்புடன் அவனை பார்த்தவள் “கார்த்திக்கையே நான் பாத்தது இல்லை. இவன் என்ன இப்படி கேக்குறான்?”, என்று எண்ணிக் கொண்டு “இல்லையே. ஏன் கேக்குறீங்க?”, என்று கேட்டாள்.
“பின்ன அவன் வந்து உன்னை லவ் பண்ண கூடாதுன்னு மிரட்டுறான்”
“என்னது கார்த்திக் வந்து மிரட்டினானா?”
“ஆமா. நான் அவன் சொன்னா கேட்பேனா என்ன? உன்னை எப்படி மறக்க முடியும்?”, என்று கேட்டு விட்டு “பை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
ஆச்சர்யத்துடன் நின்றாள் சத்யா. “எனக்காக குஞ்சு மணி தான் கார்த்திக் கிட்ட பேசிருக்கான் போல? தேங்க்ஸ் சொல்லணும்”, என்று நினைத்து கொண்டாள் சத்யா.
ஒரு நாள் கிளாசில் அமர்ந்திருந்தாள் சத்யா.
“கார்த்திக் அண்ணா செமல்ல. ரொம்ப அழகா இருக்காங்க. சூப்பரா பாட்டு எல்லாம் பாடுவாங்களாம். அது மட்டும் இல்லாம, அவங்க தான் பர்ஸ்ட் இயர்ல டாப் ரேங்க் கோல்டராம்”, என்று சொன்னாள் கோகிலா.
“இப்ப எதுக்கு கார்த்திக் பத்தி பேசுற?”, என்று கேட்டாள் கிருத்திகா. சத்யாவுக்கும் அதே எண்ணம் தான்.
“அதோ போறாங்கள்ல? அதான் சொன்னேன்”, என்று கோகிலா சொன்னவுடன் ஒரு எதிர்பார்ப்புடன் திரும்பி பார்த்தாள் சத்யா.
“காணுமே கோகிலா. அவனை உனக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டாள் சத்யா.
“அங்க தான் போனாங்க. ஒரு வேளை வேற வழில போய்ட்டாங்க போல? அப்புறம் நாங்க அவங்களை எங்க பேட்ச் லேப்ல பாத்தோம். சார் கிட்ட ஏதோ கேக்க வந்தாங்க. அப்ப தான் தெரியும்”, என்று சொல்லி விட்டு வேற எதையோ கிருத்திகாவிடம் பேச ஆரம்பித்தாள்.
சத்யா திரும்பி திரும்பி பார்த்து கொண்டே இருந்தாள். ஆனால் யாருமே அங்கு இல்லை.
“ப்ச் போய்ட்டான் போல”, என்று அவள் நினைக்கும் போதே அங்கே கார்த்திக் சென்று கொண்டிருந்தான்.
“மணி போறான்”, என்று நினைத்த சத்யா “இவனும் தான் அழகு. எல்லாரும் கார்த்திக் தான் அழகுன்னு சொல்றாங்க. ஆனா மணியும் ரொம்ப அழகு”, என்று நினைத்து சிரித்து கொண்டாள்.
ஒரு நாள் ஆடிட்டோரியம் அருகே கார்த்திக் நிற்பதைப் பார்த்த சத்யா அவனிடம் பேச நினைத்தாள்.
“எனக்காக கார்த்திக் கிட்ட பேசி ஜஸ்டினை மிரட்ட வச்சிருக்கான். ஜஸ்டின் தொல்லை அதுக்கு பிறகு தொடர்ந்தாலும், இவனுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்”, என்று நினைத்து அவன் அருகில் சென்றாள்.
“ஹாய்”, என்ற குரலை அடையாளம் கண்டு கொண்டு சந்தோசத்துடன் திரும்பினான் கார்த்திக்.
“ஹாய் நீ என்ன இங்க?”
“ஹாஸ்டல் போயிட்டு இருந்தேன். உங்களை பாத்த உடனே ஒரு தேங்க்ஸ் சொல்லணும்னு தோணுச்சு. அதான் வந்தேன்”
“தேங்க்ஸ்சா எதுக்கு?”
“நீங்க கார்த்திக் கிட்ட ஜஸ்டின் தொல்லை செஞ்சதை சொன்னீங்கள்ள? கார்த்திக் ஜஸ்டினை மிரட்டிருக்கான். அது உங்களால தான? அதான் தேங்க்ஸ் சொல்ல வந்தேன்”
“ஓ அப்படியா? கார்த்திக் ஜஸ்டினை மிரட்டினது உனக்கு எப்படி தெரியும்?”
“ஜஸ்டின் தான் வந்து சொன்னான்”
“அவன் அப்புறம் தொல்லை செய்றதை விட்டுட்டானா?”
“எங்க விட்டுருக்கான்? எங்க இருந்தாலும் சைட் அடிக்கிற பேர்ல முண்ட கண்ணை வச்சு முழிச்சிட்டு தான் இருக்கான்”
“ரொம்ப டார்ச்சல் பண்றானா? நான் வேணும்னா கார்த்திக் கிட்ட சொல்லவா?”
“ரொம்ப தொல்லை செஞ்சா நானே சொல்றேன். அப்புறம் அப்படி பிரச்சனைன்னு நான் சொல்றப்ப கார்த்திக் வந்து அவனை அடிக்காம நீங்களே வந்து அடிச்சா நான் ரொம்ப சந்தோச படுவேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
அவள் போன பிறகும் அவள் வாசனையும், அவள் சொல்லி சென்ற வார்த்தைகளும் கார்த்திக்கை சுற்றி இருந்தது.
சீண்டல் தொடரும்…

Advertisement