Advertisement

அத்தியாயம் 3
அழகாக தாலாட்டுகிறது
என் மீது மோதும்
உன் நினைவுகள்!!!
 
அடுத்த நாள் காலை ஆட்டோ பிடித்து காலேஜ் சென்ற சத்யா,  ஹாஸ்டல் முன்னே நிறுத்த சொன்னாள்.
அங்கே விசாரித்து, அவளுக்கு கொடுக்க பட்ட அறைக்கு பொருள்களை எல்லாம் எடுத்து சென்றாள்.
அவளை பார்த்ததும் கோகிலா “வா வா, இனி நாம மூணு பேரும் தான் நாலு வருஷம் ஒண்ணா இருக்கணும்”, என்று புன்னகைத்தாள்.
அவளுடன் அவர்கள் கிளாசில் இருந்த சித்ரா என்ற பெண்ணும் இருந்தாள். கிருத்திகா பக்கத்து அறையில் இருந்தாள்.
இருவருடனும் பேசி சிரித்த சத்யா, அவர்களுடனே சாப்பிட்டு விட்டு கிளாசுக்கு சென்றாள்.
அவன் நேற்று நுழைந்த கிளாஸை பார்த்தவள் ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள்.
“இந்த கிளாஸ் குள்ள தான ஒளிஞ்சு இருந்தான். ஐயோ பாவம். பயந்துட்டான் போல”, என்று நினைத்து கொண்டாள்.  எந்த காரணத்துக்காவது அவள் நினைவில் வந்து கொண்டே இருந்தான் கார்த்திக். 
அன்று இரவு ஹாஸ்டல் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு கோகிலா மற்றும் சித்ராவுடன் அறைக்கு சென்றாள் சத்யா.
அப்போது அவர்கள் கிளாஸ் மகா அவர்கள் அறைக்குள் வந்தாள்.
“மூணு பேரும் கிளம்பணும் வாங்க”, என்றாள் மகா.
“எங்க மகா?”, என்று கேட்டாள் கோகிலா.
“சீனியர்ஸ் நம்மளை வர சொன்னாங்க. ரேகிங்கா இருக்கும் போல?”
“ஐயையோ நான் வரலை”, என்றாள் சித்ரா.
“இங்க ரேகிங் கிடையாதே”, என்றாள் சத்யா.
“சும்மா இன்ட்ரோ கொடுக்க தான் கூப்பிடுவாங்க. வாங்க போகலாம். மித்த ரூம்மேட்ஸையும் கூப்பிடுங்க”, என்றாள் கோகிலா.
அவள் சொன்ன படியே சீனியர்ஸ் இன்ட்ரோ கொடுக்க தான் அழைத்திருந்தார்கள். கூடவே சிரித்து கொண்டே, பாட்டு பாடி, ஆட சொன்னார்கள்.
எல்லாரும் கஷ்ட பட்டு வேற வழி இல்லாமல் செய்தார்கள்.
சத்யாவை பாட சொன்னால் கூட பாடி விடுவாள். ஆட சொன்னால் அவளும் தான் என்ன செய்வாள். 
தயக்கத்துடன் மறுத்து கொண்டிருந்தாள். அதை பயம் என்று நினைத்து கிண்டல் செய்து சிரித்தார்கள். அவளிடம் எல்லாரையும் விட அதிகமாக பேசவும் செய்தார்கள். “அழகா இருக்க சத்யா”, என்று புகழவும் செய்தார்கள்.
அதில் மேலும் கூச்ச பட்டாள் சத்யா. கடைசியில் ஒருத்தி “கார்த்திக் கிட்ட தான் டிரெய்னிங்க்கு விடணும். இப்படி பய படுறா”, என்றாள்.
“யார் அக்கா கார்த்திக்?”, என்று கேட்டாள் மகா.
“மெக்கானிக்கல் கார்த்திக் னா இங்க எல்லாருக்கும் தெரியும். அடி தடி சண்டைனா முதல் ஆளா நிப்பான். சண்டைனா அவனுக்கு, அல்வா சாப்பிடுற மாதிரி. அவன் கிட்ட சத்யாவை விட்டா தைரியத்தை சொல்லி தருவான்”, என்று அவள் முடித்ததும் “அவன் கிட்ட நம்ம பிரண்டை டிரெயினிங் போக சொல்லணும்”, என்று மனதுக்குள் முடிவெடுத்தாள் சத்யா.
அதன் பின் அவள் தயக்கத்தை பார்த்து கிண்டல் அடித்து, ஒரு வழியாக பாட சொல்லி அவள் குரலில் மயங்கி, “என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க. நாளைக்கும் இங்க வந்துருங்க”, என்று சொல்லி, ஸ்டடி டைம் ஆரம்பித்ததால் எல்லாரையும் அனுப்பினார்கள் சீனியர்ஸ்.
“நல்ல அக்கா எல்லாரும்”, என்று சந்தோசமாக பேசி சிரித்து கொண்டு அறைக்குள் வந்தார்கள்.
ஸ்டடி டைம் ஆரம்பித்த உடன் அன்று நடந்த பாடங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தாள் சத்யா.
அனைத்தும் ஆங்கிலமாக இருந்து தலையை கிறுகிறுக்க வைத்தது.
தயக்கமாக இருந்தாலும் அடிக்கடி கோகிலாவை அர்த்தம் கேட்டு குடைந்தாள். சித்ராவும் தமிழ் மீடியம் ஆதலால் அவளும் டவுட் கேட்க ஆரம்பித்தாள்.
“ரெண்டு பேருமே கிட்ட வாங்க. எனக்கும் எல்லாம் தெரியாது. நாம சேந்து படிப்போம்”, என்று சொல்லி இருவருக்குமே சொல்லி கொடுத்தாள் கோகிலா. 
ஸ்டடி முடிந்த பின்னர் படுக்க போகும் போது தான் “அப்பாவுக்கு போன் பண்ணலையே”, என்ற நினைவு வந்தது.
“காலைல பண்ணனும்”, என்று நினைத்து கொண்டே சிறிது நேரம் மூவரும் கதை பேசி விட்டு படுத்து விட்டார்கள்.
காலையில் குளித்து முடித்து, சாப்பிட்டு விட்டு அப்பாவுக்கு போன் செய்ய கீழே வந்தாள். அங்கே போன் பேச மாணவிகள் குமிந்திருந்தார்கள். “இந்த கூட்டத்தில் எங்க பேச?”, என்று எண்ணிக்கொண்டு கேன்டீன் சென்றாள் சத்யா.
அவரிடம் இங்க வந்ததையும், பிரண்ட்ஸ் பற்றியும், வீட்டில் அவருடைய நிலவரம் பற்றியும் பேசி விட்டு வெளியே வந்தவள் பைக் ஸ்டாண்டில் பைக்கை விட்டு கொண்டிருந்த கார்த்திக்கை பார்த்து விட்டு அவன் அருகில் சென்றாள்.
அவளை பார்த்ததும் அவன் முகமும் புன்னகையை சிந்தியது. 
“ஹாய் சீனியர்”, என்று சிரித்தாள் சத்யா.
“ஹாய், காலைலே என்ன கேன்டீன் பக்கம்? ஹாஸ்டல் சாப்பாடு ஒரு நாளிலே பிடிக்கலையா?”
“அதெல்லாம் இல்லை. அப்பாவுக்கு போன் பண்ண வந்தேன்”
“ஓ பேசிட்டியா?”
“ம்ம் பேசிட்டேன்”
“காலில் முள்ளு குத்துனது சரி ஆகிருச்சா?”
“அது சரி ஆகிட்டு. ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். அதான் ஓடி வந்தேன்”
“முக்கியமான விஷயமா? என்கிட்டயா? என்ன விஷயம்?”
“உங்களுக்கு சண்டை சொல்லி கொடுக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டேன்”
“என்னது??????”
“ஆமா சீனியர், நீங்க அவன் கிட்ட போய் சண்டை கத்துக்கோங்க. அப்ப தைரியமா இருக்கலாம்”
“ஹா ஹா, சரி தான். யாரு அந்த பராக்கிரம சாலி”
“சிரிக்காதீங்க சீனியர். உங்க நல்லதுக்கு தான சொல்றேன். அவன் கிட்ட கத்துக்கோங்க. தைரியமா இருப்பீங்க”
“சரிங்க மேடம். நீங்க பாத்து வச்சிருக்கிற கராத்தே மாஸ்டர் யாரு?”
“பேரு கார்த்திக்காம்.செகண்ட் இயர் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டாம். சண்டைக்கு பெயர் போனவராம். அவரை உங்களுக்கு தெரியுமா?”
வந்த சிரிப்பை கஷ்ட பட்டு அடக்கியவன் “உனக்கு அவனை தெரியுமா?”, என்று கேட்டான்.
“ப்ச். எனக்கு தெரியாது. பட் பாத்தா ஒரு சேகன்ட் கொடுக்கணும். காலேஜ்க்கே ஹீரோவாமே. செமையா இருப்பாராம். பட் அவர் சண்டை போடுற அழகுக்காவே அவரை பாக்கணும். சரி அவர் கிட்ட நீங்க சண்டை கத்துக்கோங்க. அப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”
“நான் தைரியசாலியா இருக்கணும்னு நீ ஏன் விரும்புற பெண்ணே? நீ யார்? எனக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? உன் அருகில் நான் எதற்காக என்னையே மறக்கிறேன்”, என்று நினைத்து கொண்டு “சரி உனக்காக நான் கார்த்திக் கிட்ட சண்டை கத்துக்குறேன் ஓகே வா?”, என்றான்.
“ஹ்ம்ம் தேங்க்ஸ்”
“சரி உன் பேர் என்ன?”
“என் பேரு சத்யா. ஆமா உங்க பேர் என்ன?”
“அது எதுக்கு உனக்கு? என் பேர் தெரிஞ்சு என்ன செய்ய போற?”
“என்ன சீனியர் நான் மட்டும் சொன்னேன்ல? சொல்லுங்க ப்ளீஸ்”
“ஹ்ம்ம் குஞ்சுமணி”, என்று சொல்லி விட்டு சிரித்து கொண்டே சென்று விட்டான்.
“பேர் காமெடியா இருக்கு அப்படிங்குறதுனால தான் சொல்ல தயங்குனான் போல? பட் ரொம்ப நல்ல பையன்”, என்று நினைத்து கொண்டு அவள் டிபார்ட்மென்ட் நோக்கி நடந்தாள் சத்யா.
அடுத்து அவன் அவளை பார்த்தது அடுத்த சண்டை நடை பெறும் போது தான். 
யாரிடம் இருந்தோ தப்பித்து ஓடி வருவது போல ஓடி வந்து கொண்டிருந்தான் கார்த்திக்.
அங்கே ஜஸ்டின் மண்டை உடைந்து கீழே கிடந்தான். அங்கே கார்த்திக் நின்றிருந்தால் யாராவது பார்த்து பிரின்சிபாலிடம் சொல்லி இருப்பார்கள். அவர் உடனே அம்மாவை அழைத்து வந்து, அம்மா ஒரு வாரம் அட்வைஸ் என்ற பெயரில் நடத்தும் கொடுமையை தவிர்க்க தான் ஓடி வந்து கொண்டிருந்தான். 
அவன் ஓடி வந்ததை பார்த்து விட்டாள் சத்யா. அவன் அருகே ஓடி போனாள்.
ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து இளைப்பாறினான். அவனுக்கு கொஞ்ச தூரம் பின்னால் ஜஸ்டின் கேங்கில் உள்ளவன் ஒருத்தன் எதையோ தேடினான். 
“இவனை தான் தேடுறாங்க போல”, என்று நினைத்து கொண்டு கார்த்திக் அருகில் சென்றாள்.
இவளை பாத்ததும் “நீ தானா? நான் பயந்தே போய்ட்டேன்”, என்றான் கார்த்திக்.
அவள் பதில் சொல்லாமல் இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை முறைத்தாள்.
அவன் புருவம் உயர்த்தினான்.
“நான் அவ்வளவு சொல்லியும் இவனுங்களுக்கு பயந்து ஓடி வாறீங்க? அப்படி தான? சண்டை கத்துக்க போகலையா?”
சிரிப்பை அடக்கிய கார்த்திக் “அந்த கார்த்திக் சரியான திமிர் பிடிச்சவன் போல? அதெல்லாம் சொல்லி தர முடியாதுன்னு சொல்லிட்டான். என்ன செய்ய சொல்லு?”, என்று பாவமாய் சொன்னான்.
“டேலண்ட் இருந்தா திமிரும் இருக்கும். நான் வேணும்னா அவன் கிட்ட பேசவா?”
“உனக்கு தான் அவனை தெரியாதே? எப்படி அவனைப் பாத்து எனக்காக ரெகமண்ட் பண்ணுவ?”
“அதை நான் பாத்துக்குறேன். சீக்கிரம் நீங்க சண்டை கத்து கிட்டா அவனுங்களை அடிக்கலாம்ல?”
“ஹ்ம்ம் சரி. நீ அவனை பாத்தா, எனக்கு சொல்லி தர சொல்லு சரியா?”
“ஹ்ம்ம் சரி சொல்றேன். கிளம்பட்டா?”
“ஹ்ம்ம் சரி பை”, என்று சொல்லி சிரித்தான் கார்த்திக். பதிலுக்கு புன்னகைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தாள் சத்யா.
ஆனால் அடுத்த இரண்டு நாள்களில் கண்களில் காதலுடன், கையில் ரோஜாவுடன் சத்யாவை நிறுத்தினான் ஜஸ்டின்.
அவனை பார்த்து பயம் எல்லாம் இல்லை தான். ஆனால் அவன் கண்களில் வழிந்த காதலில் திகைத்தாள் சத்யா.
“இது என்ன புது வம்பு?”, என்று நினைத்து கொண்டு அவனை விட்டு விலக பார்த்தாள். அவனை பார்த்ததும் கோகிலா மற்றும் கிருத்திகாவுக்கே பயம் வந்தது. “சீனியர் ஏன் இப்படி பண்றாங்க?”, என்று நினைத்து “வா சத்யா, ஹாஸ்டல் போயிரலாம்”, என்று சொன்னார்கள்.
“ஹ்ம்ம் வாங்க”, என்று நடந்தவளை “சத்யா நில்லு”, என்றான்.
“இவனா எனக்கு பேர் வச்சான்? எப்படி கூப்பிடுறான் பாரு”, என்று நினைத்து பல்லை கடித்தாள் சத்யா.
கூடவே கோகிலாவும் கிருத்திகாவும் இருப்பதை பார்த்த ஜஸ்டின் “உங்க பிரண்ட் கிட்ட பேசணும். நீங்க போங்க”, என்றான்.
என்ன செய்ய என்று தெரியாமல் முழித்தவர்களை “முன்னாடி போங்க. சீனியர் அண்ணன் என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு வரேன்”, என்று அனுப்பி வைத்தாள்.
அவனை அண்ணன் என்று சொன்னதில் அவன் முகம் விளக்கெண்ணெய் குடித்து போல ஆனது. “கிடைத்த தனிமையை யூஸ் பண்ணனும்”, என்று நினைத்தவன் முகத்தை மாற்றி கொண்டு அவளை பார்த்து சிரித்தான்.
“சகிக்கலை”, என்று நினைத்து கொண்ட சத்யா “சீக்கிரம் சொல்லுங்க அண்ணா. நான் ஹாஸ்டல் போகணும். அப்பா கால் பண்ணுவாங்க”, என்றாள்.
“அண்ணன்னு சொல்ல கூடாது சத்யா. ஜஸ்டின்னு சொல்லு”

Advertisement