Advertisement

“தெரியலை பா. நாலு பேரும் அவனை சுத்தி வளைச்சிட்டு நின்னாங்க. பாக்க பாவமா இருந்துச்சு. அதான் நான் அவங்க கிட்ட போய், ஒருத்தனை அடிக்க சுத்தி நிக்கறீங்கன்னு திட்டினேன்”
“நீ செஞ்சது சரி தான் பாப்பா. ஆனா காலேஜ் வெளிய இப்படி நடந்ததுன்னா நீ அப்படி எல்லாம் செய்யாம ஒதுங்கி போகணும் சரியா பாப்பா?”
“எங்க எப்படி இருக்கணும்னு எனக்கு தெரியாதாப்பா? ஆனா அந்த பையன் ரொம்ப சாதுப்பா. பாவமா இருந்துச்சு அதான்”
“சரி சரி இதுக்கு தான் அப்பா திட்டுவேன்னு நினைச்சியா? உனக்கு நல்லது பண்ண தம்பிக்கு நீயும் நல்லது தான கண்ணா பண்ணிருக்க? எதுக்கு அந்த பையன் கோழை மாதிரி இருக்கான்? திருப்பி அடிக்க சொல்லு. இனி பாத்தேன்னா”
“ம்ம் ஆனா அது இல்லை பா. அது வந்து… நான் அவனை காப்பாத்தினேனா, அவன் நன்றி சொன்னான். அப்புறம் எப்படி போவன்னு கேட்டான். நான் கேட்டு கேட்டு போவேன்னு சொன்னேனா? உடனே வா வண்டில விடுறேன்னு சொன்னான். நான் யாரோடவும் போனது இல்லைனு சொன்னேன். உன்னை கடத்திட்டு போற ஐடியா எல்லாம் எனக்கு இல்லை. என்னை அவங்க கிட்ட இருந்து காப்பாத்திருக்க. அதனால கூட்டிட்டு போறேன்னு சொன்னானா. எனக்கும் ரொம்ப கால் வலிச்சதா? அதான்….மன்னிச்சிரு பா”
….
“அப்பா…”
“சத்யா குட்டி. உனக்கு விவரம் சொல்லி தான் வளத்துருக்கேன். நீ சொன்னது வச்சு பாத்தா, அந்த தம்பி நல்ல பிள்ளையா தான் தெரியுது. ஆனா டவுணுக்காரவுக எப்படின்னு நமக்கு தெரியாதுத்தா. எந்த சிக்கல் லையும் சிக்கிக்க கூடாது. இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். யார் கூடவும் போக கூடாது சரியா பாப்பா?”
அவர் குரலில் உண்மையான அக்கறை இருந்தாலும் அதில் சிறு கண்டிப்பே கலந்திருந்தது.
“சரி பா. இனி செய்யலை. சரி சாப்பிட்டியா?”
“சாப்பிட்டேன் டா. உன் பெரியப்பா வீட்ல இருந்து கொடுத்துட்டு போனாக. நீ சாப்பிட்டியா பாப்பா?”
“சாப்பிட்டேன் பா”
“சரி நாளைக்கு பத்திரமா போ. அங்கன போய் போன் பன்றியா?”
“போன் இல்லையே பா. காலேஜ்ல வச்சிக்க கூடாதுல்ல? ஹாஸ்டல்ல போய் நிலவரம் என்னன்னு பாத்துட்டு பேசுறேன் சரியா?”
“சரி கண்ணு. படுத்து தூங்கு. அப்பா வார கடைசில வரேன்”
“சரிப்பா வைக்கிறேன்”, என்று வைத்து விட்டு போனை சுகந்தியிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று படுத்து விட்டாள்.
அதே நேரம் அங்கே தன்னுடைய அம்மா தேவகியை பார்த்து முறைத்து கொண்டிருந்தான் கார்த்திக்.
“இங்க பாருங்க சேகர். என்னை முறைச்சிட்டு இருக்கான். நீங்க கண்டுக்காம இருக்கீங்க?”, என்று தன் கணவரிடம் புகார் வாசித்தாள் தேவகி.
“அது நீயாச்சு, உன் பிள்ளையாச்சு”, என்ற படியே போனை நோண்டி கொண்டிருந்தார் சேகர், கார்த்திக்கின் அப்பா.
“டேய் எதுக்கு டா என்னை முறைக்கிற? உங்க அப்பாவே என்னை பாத்து பயப்படுவார் தெரியுமா?”, என்றாள் தேவகி.
அப்பாவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “அப்படியா?”, என்று கண்களால் கேட்டான்.
அவர் சும்மா லுள்ளாலாயிக்கு என்று சைகை செய்து விட்டு குனிந்து கொண்டார்.
மறுபடியும் அம்மாவை முறைக்க ஆரம்பித்தான் கார்த்திக்.
“டேய் சொல்லிட்டு முறையேன் டா. சும்மா சும்மா இப்படி முறைச்சு முறைச்சு பாத்துட்டு இருந்தா கண்ணை நோண்டிருவேன் சொல்லிட்டேன்”, என்று எரிச்சலில் சொன்னாள் தேவகி.
அவன் அப்போதும் அப்படியே இருக்க, சேகர் கையில் இருந்த போனை பிடுங்கி அங்கே இருந்த டேபிளில் போட்டாள்.
“ப்ச் என்ன தேவி, இப்படியா பிடுங்குறது?”, என்றார் சேகர்.
“நாங்க இங்க கரடியா கத்திக்கிட்டு இருக்கேன். இவன் என்னன்னா முறைச்சு முறைச்சு பாக்குறான். நீங்க சின்ன லொள்ளை மாதிரி கேம் விளையாடிட்டு இருக்கீங்க? என்னனு கேளுங்க. வந்ததுல இருந்து முறைச்சிட்டு இருக்கான்”
கார்த்திக்கை பார்த்து புருவம் உயர்த்திய சேகர் “என்ன ஆச்சு கார்த்திக். உன் அம்மா மேல எதாவது கோபமா? அவ எதாவது உன்னை கோப படுத்திட்டாளா?”, என்று விசாரித்தார்.
“உங்களை விசாரிக்க சொன்னா, என் மேல அவனுக்கு இல்லாத கோபத்தையும் உண்டாக்கிருவீங்க போல? உங்களை போய் கேக்க சொன்னேன் பாரு?”, என்று தலையில் அடித்த தேவகி “டேய் சொல்லு டா”, என்றாள்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா மா? உன்னால எனக்கு இன்னைக்கு எவ்வளவு அசிங்கமா போச்சு தெரியுமா?”, என்று வாயை திறந்தான் கார்த்திக்.
“நான் என்ன டா செஞ்சேன்?”
“என்ன செஞ்சியா? நீ எதுக்கு என்கிட்டே யாரையும் அடிக்க கூடாதுன்னு சத்தியம் வாங்குன? அதனால இன்னைக்கு நாலு பேர்  கிட்ட அடி வாங்க தெரிஞ்சேன்”
“என்னது அடி வாங்க தெரிஞ்சியா? அப்ப அடி வாங்கலையா? சே”, என்று சலித்து கொண்டாள் தேவகி.
“பாரு பா, நான் அடி வாங்கலைன்னு உன் பொண்டாட்டிக்கு எவ்வளவு வருத்தம் பாரு”
“தேவகி என்ன இது?”
“என்ன நொன்ன இது? இவன் அடி வாங்குறது மட்டும் உங்களுக்கு பெருசா? தினமும் யார் கூடவாது வம்பு இழுத்துட்டு யாரையாவது மொத்திட்டு வாரான். காலேஜ்ல இருந்து என்னை தான் என்கொயரிக்கு கூப்பிடுறாங்க. அவங்க முன்னாடி நான் தான நிக்க வேண்டி இருக்கு. உங்களை கூப்பிட்டா வேலை இருக்குன்னு கிளம்பிற வேண்டியது. அப்பாவுக்கும் பையனுக்கும் என்னை பாத்தா இளிச்ச வாய் மாதிரி இருக்கா?”
“ப்ச் அவ கிடக்கா. நீ சொல்லு டா. என்ன நடந்துச்சு?”, என்று கேட்டார் சேகர்.
“அந்த ஜஸ்டின் தான் பா. அன்னைக்கு அந்த புரொபஸரை கிண்டல் பண்ணுனான்னு அவனை நாலு தட்டு தட்டி பிரின்சிபால் கிட்ட கம்பளைண்ட் பண்ணுனேன்ல? அவனும் அவன் கேங்கும் தான் இன்னைக்கு என்னை அடிக்க பிளான் போட்டாங்க. அம்மா மட்டும் எவனையும் அடிக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கலைன்னா விளாசி தள்ளிருப்பேன். இன்னைக்கு அவனுங்க கிட்ட ஓடி ஒளிஞ்சிருக்க வேண்டியதா போச்சு”
“என்னது ஓடி ஒளிஞ்சியா? இது தான் இந்த வருசத்துல சிறந்த காமெடி”
“ஆமா பா. எப்படியும் அடிக்கணும்னு ஸ்கெட்ச் போட்டுட்டாங்க. தூக்காம விட மாட்டானுங்க. காலேஜ் கட் அடிச்சிட்டு ஊரு சுத்துனாவோ, இல்லை வீட்டுக்கு வந்தாளோ உன் பொண்டாட்டி ஒப்பாரி வைப்பா. அப்ப என்ன தான் செய்றது. அதான் ஒளிஞ்சு இருந்தேன். நாள் புல்லா தேடுனாங்க”
“தேடுனாங்களா? அப்புறம் எப்படி கண்டு பிடிச்சாங்க? நீ எங்க ஒளிஞ்சு இருந்த?”
“நான் அவனோட கிளாஸ்ல தான் ஒளிஞ்சு இருந்தேன். அங்க வந்து தேட மாட்டான்ல அதான்”
“அட பாவி, அங்க யாரும் உன்னை காட்டி கொடுக்கலையா?”
“காட்டியா? என்னையா? இந்த கார்த்திக் ஹீரோ பா. எல்லா கிளாசும் எனக்கு பேன்ஸ். ஐயாவை காட்டி கொடுப்பாங்களா?”
“பெருமை பேசுறதுல நீ உன் அப்பனையே மிஞ்சிட்ட டா”, என்று இடையில் புகுந்து சொன்னாள் தேவகி.
“ப்ச் சும்மா இரு தேவி. அப்புறம் எப்படி டா அவனுங்க கிட்ட மாட்டுன?”
“ஒரு அழகான பொண்ணை பாத்து பிளாட் ஆகி நின்னுட்டேன். அந்த கேப்ல கண்டு பிடிச்சிட்டானுங்க”, என்று சொல்ல வந்தவன் “சொன்னா அவ்வளவு தான். ஓட்டியே ஒரு வழி ஆக்கிருவாங்க”, என்று நினைத்து கொண்டு “சாயங்காலம் கிளம்பும் போது, பாத்துட்டானுங்க பா”, என்றான்.
“அப்புறம் என்ன ஆச்சு?”
“என்ன ஆகும்? சுத்தி வளைச்சிட்டானுங்க. இன்னைக்கு ரத்த களரியோட தான் வீட்டுக்கு போக போறேன்னு நினைச்சேன். அதுக்குள்ளே ஒரு வீராங்கனை வந்து காப்பாத்திட்டா”
“என்னது வீராங்கனையா?”
“ஆமா, பா. பர்ஸ்ட் இயர் பொண்ணு. அவனுங்க என்னை அடிக்க நிக்குறதை பாத்துட்டு கிட்ட வந்து ஜஸ்டினை ஒரே திட்டு. அப்புறம் அவன் அடிக்காம போய்ட்டான்”
“என்னது அவளுக்கு பயந்துட்டு அடிக்காம போய்ட்டானா?”
“ஹ்ம்ம்”
“அதிசயமா இருக்கே”
“அதிசயம் இல்லை பா. ஆனா அந்த பொண்ணு பாவம். அவன் அவளை பாத்த பார்வையே சரி இல்லை. அவளை தொல்லை செய்வான்னு நினைக்கிறேன்”
“ஐயோ உன்னை காப்பாத்த போய் அவளுக்கு பிரச்சனையா?”
“ஆமா பா. எல்லாம் இந்த அம்மாவால தான். சத்தியத்தை வாபஸ் வாங்க சொல்லு பா”
“தேவி, என்ன இது சின்ன பிள்ளை மாதிரி? சத்தியம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு. இன்னைக்கு அடி வாங்கிருந்தா உனக்கும் தான வலிக்கும்”
“அப்ப அவங்க அடி வாங்குனா பிரச்சனை இல்லையா? அவங்க வீட்லயும் தான பீல் பண்ணுவாங்க”
“அவன் என்ன வேணும்னா சண்டைக்கு போறான் தேவி. நல்ல விஷயத்துக்காக தான் தட்டி கேக்குறான். காலேஜ் லைப்ல இதெல்லாம் சகஜம். அப்புறம் என்ன?”
“சரி சரி நான் யாரு கிட்டயும் சத்தியம் கேக்கல. யாரும் எப்படியும் போகட்டும்”, என்று முகத்தை திருப்பி கொண்டு உள்ளே சென்று விட்டாள் தேவகி.
“பாரு பா. கோச்சிக்கிட்டு போறதை”, என்றான் கார்த்திக்.
“நீ போய் பேசு சரியாகிருவா. அவளை பத்தி தெரியாதா?”, என்று சொல்லி விட்டு போனை எடுத்து விளையாட ஆரம்பித்தார்.
“வர வர நான் யூத்தா நீ யூத்தான்னே தெரிய மாட்டிக்கு. எப்ப பாத்தாலும் விளையாடிட்டே இரு, போப்பா”, என்று சொல்லி விட்டு அம்மாவை தேடிச் சென்றான்.
அங்கே ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டு நின்றாள் தேவகி.
அருகில் போய் அவள் தோளில் கை வைத்தான் கார்த்திக்.
அவன் கையை தட்டி விட்டுவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள் தேவகி.
“அம்மா, அன்னைக்கு அந்த லெக்ச்சரர் பாவம் மா. அவங்க கிட்ட போய் கலாட்டா பண்றான். அவங்க அழவே செஞ்சிட்டாங்க. அவங்க சேலை எல்லாம் புடிச்சு இழுத்தான் தெரியுமா? அரசியல் வாதி பையன்னா என்ன வேணா செய்யலாமா?”
“அந்த லெக்ச்சரர் போய் பிரின்சிபால் கிட்ட சொல்ல வேண்டியது தான?”
“அவங்க எப்படி சொல்லுவாங்க? ஒரு மாதிரி இருக்கும்ல? நான் பாத்தேன் ரெண்டு தட்டு தட்டினேன். என்கிட்ட வம்பு இழுத்தான். அதனால அடிச்சேன்னு சொன்னேன். அதுக்கு சாட்சி அந்த மேடம்னு சொன்னேன். அவங்களும் ஆமான்னு பிரின்சிபால் கிட்ட சொல்லிட்டாங்க. அவர் உன்னை கூப்பிட்டு விட்டுட்டாரு. அவனுக்கு ஒரு வாரம் சஸ்பென்ஷன் கிடைச்சது. எனக்கு திட்டு கிடைச்சது. அந்த மேடம் முகம் எப்படி சந்தோசமா இருந்துச்சு தெரியுமா?”
“எல்லா சண்டையும் போட்டுட்டு வந்து இப்படி தான டா காரணம் சொல்ற?”
“எனக்கு எல்லாத்தையும் பாத்துட்டு சும்மா இருக்க முடியலை. நான் என்ன செய்ய? நீ கோப படாத ப்ளீஸ். வேணும்னா இப்படி வச்சிக்கலாம். என்னை யாரும் முதல் அடி அடிக்கிற வரைக்கும் நான் யார் மேலயும் கையை வைக்க மாட்டேன் சரியா?”
நல்ல விஷயத்துக்காக சண்டை போடுபவன் இந்த அளவு இறங்கி வந்ததே பெரியதாக தோன்றியது தேவகிக்கு.
“சரி சரி, அந்த பொண்ணை கொஞ்சம் கவனிச்சிக்கோ. அந்த ஜஸ்டின் எதாவது செய்ய போறான்”
“அம்மான்னா அம்மா தான். ஆனா அவ என்னை அசிங்க படுத்திட்டா மா”
“என்னது உன்னையா? ஏண்டா?”
“அவ என்ன சொன்னா தெரியுமா?”
“என்ன சொன்னா?”
“நான் ரொம்ப அப்பாவியாம். அதனால சண்டை கத்துக்கணுமாம்”
“அட பாவி, நீ அப்பாவியா? இருக்குற பிரச்சனையே என்னால தாங்க முடியலை. இன்னும் நீ சண்டை கத்துக்கிட்டா காலேஜ்ல ரத்த ஆறு தான் ஓடும். அந்த பொண்ணு வெள்ளந்தியா இருப்பா போல?”
“ஆமா மா. கிராமத்து பொண்ணு போல? ஆனா எவ்வளவு வீரமா வந்து ஜஸ்டினை திட்டுனா தெரியுமா?”
“உனக்கேத்த ஜோடி தான் டா. வா சாப்பிடலாம்”, என்று சிரித்து கொண்டே தேவகி போன பின்னரும் அவன் காதில் “உனக்கேத்த ஜோடி தான் டா”, என்ற அம்மா சொன்ன வார்த்தைகளே ரீங்காரமிட்டது.
“கார்த்திக் சாப்பிட வா”, என்ற சேகரின் குரலில் தான் கலைந்தான். அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது. விசில் அடித்து கொண்டே சாப்பிட சென்றான்.
மூவரும் பேசி சிரித்து சாப்பிட்டு முடித்த பின்னர் அறைக்குள் வந்து படுத்தவனுக்கு சத்யா நினைவில் வந்தாள்.
“அவ்வளவு பேசி கடைசில பேர் கேக்காம விட்டுட்டோமே. குயூட் கேர்ள்”, என்று நினைத்து சிரித்து கொண்டான்.

சீண்டல் தொடரும்….

Advertisement