Advertisement

அத்தியாயம் 2
காதலாக நீ
பார்க்கும் ஒற்றை 
பார்வை கூட என்னை 
சுகமாய் சீண்டுமே!!!!
சரி அவனுடன் செல்லலாம் என்று முடிவெடுத்தாள் சத்யா. ஆனால் அவன் எடுத்து வந்த பைக்கை பார்த்து அரண்டே விட்டாள்.
“ஐயோ என்ன இது இப்படி இருக்கு?”, என்று கேட்டாள் சத்யா.
“எப்படி இருக்கு? என்னோட பைக்குக்கு என்ன?”
“பின்னாடி உயரமா இருக்கு. இதுல எப்படி உக்கார?”
“அதெல்லாம் உக்காரலாம். நீ ஏறு. ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்காரு”
“என்னது ரெண்டு பக்கமா? அவன் முதுகு மேல படுக்க தான் செய்யணும்”, என்று நினைத்தவள் “அதெல்லாம் பரவால்ல. நான் ஒரு பக்கமே கால் போட்டு உக்காருறேன்”, என்றாள். 
“ஹ்ம்ம் சரி”
ஏறி அமர்ந்தவளுக்கு எதுவோ உயரத்தில் அவளை தூக்கி வைத்தது போல இருந்தது.
அது மட்டும் இல்லாமல் அவள் எவ்வளவு விலகி அமர்ந்தும் அவனை நோக்கி வழுக்கி வழுக்கி விட்டது.
“பிடிச்சுக்கோ”, என்று ஓட்ட ஆரம்பித்தவனை பார்த்து மறுபடியும் அரண்டே விட்டாள். அந்த அளவு இருந்தது அவன் வேகம்.
“ஐயோ கொஞ்சம் மெதுவா போங்களேன்”
“மெதுவா தான போறேன்? இதை விட ரெண்டு மடங்கு போவேன். நீ ஒழுங்கா பிடிச்சுக்கோ”
அடுத்த நொடி அவன் தோளில் ஒரு கை வைத்து, மறு கையை பின் பக்க கம்பியில் வைத்து, முகத்தை அவன் முதுகில் வைத்து கண்களை மூடி கொண்டாள்.
அவள் தொடுகையில் ஜில்லென்று ஒரு உணர்வை அடைந்தான் கார்த்திக்.
அம்மாவை தவிர்த்து அவன் அறிந்த மற்றொரு பெண்ணின் தொடுகை. 
ஆனால் சத்யாவோ பயத்தில் கண்களை மூடி அவனை இறுக்கி பிடித்திருந்தாள். “எப்ப விழுவோம்?”, என்று பயந்து போய் இருந்தாள். 
அவள் பயத்தை பார்த்து, இன்னும் கொஞ்சம் வேகத்தை குறைத்தான் கார்த்திக்.
சிறிது நேரம் கழித்து தான் அவன் வேகத்தை குறைத்ததையே உணர்ந்தாள்.
“இப்படி தூங்குனேன்னா நான் எப்படி உன்னை வீட்டில் விட? மாம்பலம் வந்துட்டு. இங்க எங்க போகணும்? அட்ரஸ் சொல்லு”, என்றான் கார்த்திக்.
“சிவகாமி தெரு. அங்க நிறுத்துனா, நான் நடந்து போய்ப்பேன். அங்க இருந்து போக தெரியும். அப்புறம் நான் ஒன்னும் தூங்கலை. நீங்க பிளைட்ல போற மாதிரி போனா நான் என்ன செய்ய?”
“பிளைட்டா? நான் என் வாழ்க்கையில இப்படி மெதுவா போனதே இல்லை”
“ஆனா நான் எப்ப டா கீழ விழுவோம்னு, பயந்துட்டு இருக்கேன்”
“ஹா ஹா, அதெல்லாம் கவலை படாத. பத்திரமா உன்னை விட்டுருவேன்”
அவள் சொன்ன தெரு வந்ததும் வண்டியை நிறுத்தினான் கார்த்திக்.
இறங்கி கொண்டவள் “தேங்க்ஸ்”, என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம். நீயும் தான் என்னை அவங்க கிட்ட இருந்து அடி வாங்காம காப்பாத்திருக்க. அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு”
“ஹ்ம்ம் சரி. அப்புறம் சண்டை கத்துக்க மறந்துராதீங்க”
“நீ யார் கிட்ட கத்துக்கணும்னு, முடிவு பண்ணி சொல்லு. நான் கத்துக்குறேன் சரியா? சரி நான் கிளம்புறேன் பை”, என்று சொல்லி விட்டு சிட்டாய் பறந்து விட்டான்.
கண்களை சிமிட்டுவதுக்குள் அவன் சென்றதை பார்த்து திகைத்து நின்றாள் சத்யா.
“இன்னும் இவனை பாக்கும் போது, இவ்வளவு வேகமா போக கூடாதுன்னு சொல்லணும். ஐயோ அவன் பேர் என்னன்னு கேக்கலையே. சரி மறுபடியும் பாக்கும் போது கேக்கலாம்”, என்று நினைத்து வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டுக்கு சென்றவுடன் அவளை “வா சத்யா”, என்று சொன்னாள் சுகந்தி.
சுகந்தியும் அவள் கணவன் வெங்கட்டும் சத்யா வந்ததில் வெகுவாக எல்லாம் சந்தோச பட வில்லை.
ஒரு நாள் தான இருந்துட்டு போகட்டும் என்று தான் நினைத்தார்கள்.
அதை உணர்ந்த சத்யாவுக்குமே, எப்ப டா இங்க இருந்து போக என்று தான் தோன்றியது.
“காலைல இங்க இருந்து போயிரலாம். ஒரு ராத்திரி தான?”, என்று நினைத்து கொண்டே சுகந்தியை பார்த்து சிரித்தாள்.
ஆனால் சுகந்தி கேட்ட முதல் கேள்வியே “ஹாஸ்டல் கிடைச்சிட்டா?”, என்பது தான்.
“ஹ்ம்ம் கிடைச்சிட்டு அத்தை. காலைல திங்க்ஸ் எல்லாம் கொண்டு போகணும். மாமா வருவாங்களா துணைக்கு?”
“யாரு உங்க மாமாவா? வந்துட்டு தான் மறுவேலை பார்ப்பார். நான் ஸ்டாண்ட்ல உள்ள ஆட்டோக்கு போன் பண்றேன். அதுல போய்க்கோ. காபி போடவா?”
“இல்லை அத்தை. நான் காபி குடிக்க மாட்டேன்”. “எதுக்கு அவர்களுக்கு தொல்லை”, என்று நினைத்து பொய் சொன்னாள்.
“சரி அந்த ரூம்ல உன் பெட்டி எல்லாம் வச்சிருக்கேன். அங்க தங்கிக்கோ”, என்று அவளுடைய இரண்டு வயது குழந்தையை தூக்கி கொண்டு சென்று விட்டாள்.
அந்த குழந்தையை தூக்க சொல்லி மனது ஆசை பட்டாலும், “வேண்டாத விருந்தாளியா வந்துருக்கேன். நாளைக்கே போக போறேன். அப்புறம் எதுக்கு? அவங்களுக்கு நான் தூக்குனா பிடிக்குமோ, பிடிக்காதோ?”, என்று நினைத்து கொண்டு அவள் சொன்ன அறைக்குள் சென்றாள்.
போட்டிருந்த துணியையும், அவனுடைய கர்ச்சிப்பையும் துவைத்து விட்டு குளித்து முடித்து அந்த துணியை பக்கெட்டில் போட்டு கொண்டு வெளியே வந்தாள் சத்யா.
“அத்தை இதை எங்க காய போட?”
“மாடில கொடி கட்டிருக்கும். அங்க காய போட்டுரு சத்யா. பாப்பா அழுதுட்டே இருக்கா. அந்த பாத்திரம் மட்டும் விளக்குறியா?”
“சந்தோஷமாகவே சரி”, என்று சொன்னாள். அவர்கள் வீட்டில் ஒரு நாள் தங்கி சாப்பிட்டதுக்கு இந்த வேலை கூட செய்யாமல் இருந்தால் எப்படி?
மேல போய் காய போட்டவள் கீழே வந்து, பாத்திரங்களை கழுவி கவுத்தி விட்டு வீட்டையும் பெருக்கி விட்டு இரவு உணவுக்கு சுகந்திக்கு உதவி செய்தாள்.
நாலு இட்லியை உள்ளே தள்ளி விட்டு மாமா, அத்தை இருவரிடமும் “தூங்க போறேன்”, என்று சொல்லி விட்டு அந்த அறைக்குள் சென்றாள். 
தன்னுடைய துண்டை எடுத்து அந்த கட்டிலில் இருந்த தலையணை மீது விரித்தவள் விளக்கை அணைத்து விட்டு படுத்து விட்டாள்.
அப்போது தான் அவளுக்கு அவன் நினைவு வந்தது.
“பாவம், பாக்க ரொம்ப அப்பாவியா இருக்கான். அந்த ரவுடி பயலுக எதுக்கு அடிக்க வந்தானுங்க. அப்பாவியா பாத்து தேடி அடிப்பானுங்க போல? நல்லதா போச்சு. நான் போனதுனால தப்பிச்சான். இல்லைனா செம அடி வாங்கிருப்பான். எவ்வளவு வேகமா வண்டி ஓட்டுறான்?”, என்று நினைத்தவளுக்கு அவன் முதுகில் முகத்தை புதைந்திருந்தது நினைவு வந்தது. 
அந்த பயத்தில் உணராத அவனுடைய வியர்வை வாசத்தை இப்போது அனுபவித்தாள் சத்யா. மனது குறுகுறு வென்று இருந்தது.
“சே என்ன இப்படி நினைக்கிறேன்?”, என்று நினைத்து கொண்டு கண்களை மூடி தூங்க முயன்றாள்.
“ஐயோ எவ்வளவு ரத்தம்?”, என்று சொல்லி கொண்டே அவள் கால்களை தூக்கி அவன் துடைத்து விட்ட நினைவு வந்து இம்சித்தது. 
“நான் இப்ப எதுக்கு அவனையே நினைச்சிட்டு இருக்கேன்? என் மனசுல சாத்தான் தான் புகுந்துட்டு”, என்று நினைக்கும் போதே “சத்யா இங்க வா”, என்று சுகந்தி அழைக்கும் குரல் கேட்டது.
“வரேன் அத்தை”, என்ற படி எழுந்து போனாள்.
“உங்க அப்பா பேசுறாரு”, என்ற படியே போனை கொடுத்துவிட்டு சென்று விட்டாள்.
“கொஞ்சம் இங்கிதம் தெரிஞ்சவங்களா தான் இருக்காங்க”, என்று நினைத்து கொண்டே காதில் வைத்தாள் சத்யா.
அந்த பக்கம் “பாப்பா”, என்று உருக்கமாக அழைக்கும் சண்முகநாதன் குரல் கேட்டது.
அந்த குரலில் வந்த நெகிழ்வை கட்டு படுத்தி கொண்டு அமைதியாக இருந்தாள் சத்யா.
“அப்பா மேல கோபமா பாப்பா?”
….
“பேசு பாப்பா “
“அப்பா பாவம் தான? நான் என்ன குட்டி செய்றது? அங்க மிளகு லோடு இறக்க முடியாம மழைல மாட்டிகிட்டு. அப்படியே போச்சுன்னா வீணாகிரும் தாயி. அதானே அப்பா உன்னை தனியா அனுப்புனேன்? இல்லைன்னா என் தங்கத்தை அப்படி விடுவேனா? அப்பவும் ரெண்டு நாள் கழிச்சு காலேஜ் போன்னு சொன்னேன் தான? நீ தான முதல் நாளே லீவு போட கூடாதுன்னு போன?”
“சரி சரி விடு. கெஞ்சாத. பண்றது எல்லாம் பண்ணிட்டு, அப்புறம் வந்து நல்ல பிள்ளை மாதிரியே நடிப்ப. போப்பா”
“ஐ என்கிட்ட பாப்பா பேசிட்டா”
“ம்ம். சரி வேலை முடிஞ்சிட்டா”
“முடிஞ்சிட்டு பாப்பா. அதான், நான் கிளம்பி வரவான்னு கேக்க தான் கூப்பிட்டேன்”
“அதெல்லாம் வேண்டாம் பா. காலைல தான் நீ இருந்தா நல்லா இருந்துருக்கும்னு தோணுச்சு. நானே கஷ்ட பட்டு போய்ட்டேன்”
“மன்னிச்சிரு பாப்பா. அவுக வீட்ல விட்டதுக்கு. ஹாஸ்டல் கிடைச்சிட்டா?”
“ஹ்ம்ம் கிடைச்சிருச்சு பா. பீஸ் கட்டிட்டேன். நாளைக்கு அங்க போயிருவேன்”
“எனக்கே அந்த ஊருல எங்க எப்படி போகணும்னு தெரியாது. நீ தனியா கஷ்ட பட்டியா பாப்பா? அவுக வீட்ல நீ தங்குறதே எனக்கு பிடிக்கலை பாப்பா. ஆனா நான் இல்லாம உன்னை எப்படி ஹோட்டல்ல தங்க வைக்கன்னு தான் யோசிச்சு அங்க விட்டேன்.
ஆனா அங்க இருந்து காலேஜ் போக கஷ்ட பட்டிருப்பல்ல?”
“நீ அன்னைக்கு கூட்டிட்டு போன மாதிரியே தான் பா போனேன். தெரியத்தப்ப அடுத்தவங்க கிட்ட கேட்டுக்கிட்டேன். அப்புறம் ஒரு விஷயம் சொல்லணும் பா”
“என்ன டா?”
“திட்டுவியா?”
“பாப்பா எதோ தப்பு செஞ்சிட்டாங்க போலயே? மென்னு விழுங்குறாங்க? என்ன செஞ்ச டா?”
“இன்னைக்கு காலைல பராக்கு பாத்துட்டே போய் முள்ளுள்ள மிதிச்சிட்டேன் பா. ஆழமா பதிஞ்சு ரத்தம் வந்துட்டு. அடுத்த எட்டு வைக்க முடியாம அப்படியே உக்காந்துட்டேன்”
“கண்ணை முன்னாடி வச்சு நட பாப்பான்னு எத்தனை தடவை சொல்லிருப்பேன். கேட்டியா? சரி ரொம்ப வலிச்சதா?”
“ஹ்ம்ம் ஆமா. அப்புறம் இங்க காலேஜ்ல படிக்கிற ஒருத்தங்க வந்து, முள்ளை எடுத்து விட்டு, என் பேக் எல்லாம் கிளாஸ் வரைக்கும் தூக்கிட்டு வந்தாங்க”
“நல்ல பொண்ணா இருக்கும் போலயே?”
“பொண்ணு இல்ல பா. பையன்”
“பையனா? சரி நல்ல பையனா இருப்பான் போலயே? ஆனா நீ இதுக்கு எதுக்கு இவ்வளவு தயங்குன?”
“முழுசா கேளுப்பா”
“சொல்லு சொல்லு”
“அப்புறம் ரெண்டு பிரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. அவங்க கூட தான் சாப்பிட்டேன்”
“சரி அப்புறம்?”
“அப்புறம் சாயங்காலம் பீஸ் கட்டிட்டு வந்தப்ப, அந்த பையன் சொன்னேன்ல? அவனை நாலு பேர் அடிக்க நின்னுட்டு இருந்தாங்க பா”
“ஐயையோ ஏன்?”

Advertisement