Advertisement

அத்தியாயம் 12 
உன்னைத் தீண்டிய
காற்று என்னை
மெதுவாக தீண்டிச்
செல்கிறது காதலுடன்!!!

“ஒரு வேளை ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கலைன்னு திருட்டு கல்யாணம் பண்ண போறானோ?”, என்று யோசித்து அம்மா, அப்பாவிடம் “நாளைக்கு கல்யாணத்துக்கு போகணும்”, என்று சொன்னான்.

“ஒரு நாளில் என்ன கிஃப்ட் வாங்க? பணமா கொடுத்துறலாம்”, என்று சேகர் சொன்ன பிறகு அடுத்த நாள் மூவரும் கிளம்பி போனார்கள். சத்யாவும் வந்தாள்.

கல்யாணம் திருட்டு தனமாக இல்லாமல் சொந்த பந்தங்களுடன் தான் நிகழ்ந்தது. “அப்புறம் ஏன் ஒரு நாளுல முடிவு பண்ணிட்டாங்க?”, என்று யோசித்து சிவாவிடம் கேட்க நல்ல தருணத்துக்காக காத்திருந்தான் கார்த்திக்.

மதிய உணவு சாப்பிட பந்தியில் அம்மா, அப்பா மற்றும் சத்யாவுடன் அமர்ந்தான் கார்த்திக். பின் சத்யா கிளம்பி விட்டாள்.

அப்போது “இந்த காலத்து பிள்ளைங்க எல்லாருக்கும் அவசரம்”, என்றார் சேகர்.

“அப்படி எல்லாரையும் சொல்ல கூடாதுப்பா. நம்ம கார்த்திக்கும், சத்யாவும் தான் நிறைய நேரம் தனியா இருந்துருக்காங்க. இப்படியா நடந்தது?”, என்று கேட்டாள் தேவகி.

“என்ன பேசுறாங்க?”, என்று யோசித்து அவர்களை கேட்க வந்தவனை சிவா அழைக்கவும், அம்மா, அப்பாவை வீட்டுக்கு போக சொன்னவன் சிவாவுடன் நின்று கொண்டான். 

எல்லா சடங்கும் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு தான், மணமக்களை ரெஸ்ட் எடுக்க அனுப்பி வைத்தார்கள்.

சிவாவின் அறை கட்டிலில் அமர்ந்திருந்த கார்த்திக் சிவாவை பார்த்து “என்ன டா ஆச்சு? திடிர்னு கல்யாணம் சொன்னவுடனே பயந்துட்டேன். ஆனா அம்மா அப்பா எல்லாரும் சேந்து தான கல்யாணத்தை பண்ணி வச்சிருக்காங்க? ஆனா ஏன் இவ்வளவு அவசரம்?”, என்று கேட்டான். 

….

“என்ன டா நான் கேட்டுட்டே இருக்கேன். நீ அமைதியா இருக்க? நீ பாரின்ல இருந்து எப்ப வந்த அதை சொல்லு. ரெண்டு நாள் முன்னாடி கூட நீ வரதா சொல்லவே இல்லை. ஆனா நேத்து கல்யாணம்னு போன் பண்ற? என்ன டா ஆச்சு?”
“நான் தப்பு செஞ்சிட்டேன் டா கார்த்திக்”
“தப்பா? என்ன செஞ்ச?”
“நான் அசிங்க பட்டது பத்தாதுன்னு அவளையும் அசிங்க படுத்திட்டேன்”
“என்ன டா சொல்ற? எனக்கு ஒன்னும் புரியலை. சிஸ்டர் கூட தான கல்யாணம் முடிஞ்சிருக்கு. அவ  கூட சந்தோசமா தான இருக்கா?”
“சந்தோசமா இல்லை கார்த்திக். சந்தோசமா இருக்குற மாதிரி ரெண்டு பேரும் நடிக்கிறோம். கல்யாணம் முடிஞ்சது சந்தோசம் தான். ஆனா ஆனா”
“ஆனா என்ன டா?”
“கொஞ்ச நாள் முன்னாடி நான் பாரின் கிளம்புறதா இருந்துள்ள?”
“ஆமா, நான் கூட ஏர்போர்ட் வந்தேனே டா?”
“ஆமா கார்த்திக், ஆனா அதுக்கு முந்துன நாள் அவளோட பர்த்டே அன்னைக்கு மஹாபலிபுரம் போயிருந்தோம். அன்னைக்கு அவளை…. ரெண்டு பேரும் தப்பு செஞ்சிட்டோம் கார்த்திக்”
“சிவா என்ன டா சொல்ற?”
“ஹ்ம்ம் ஆமா, எங்களையே அறியாம எல்லாம் நடந்துருச்சு. அதுக்கப்புறம் நான் பாரின் போறேங்குற, கவலையில பிரிவை நினைச்சு, அதை பத்தி யோசிக்கவே இல்லை டா. இப்ப அவளா கண்டு பிடிச்சிருந்தா கூட எதாவது செஞ்சிருப்போம். ஆனா மயங்கி விழுந்து மாட்டிக்கிட்டா மச்சி. ஆமா கார்த்திக் அவ இப்ப மாசமா இருக்கா”
…..
“வீட்ல எல்லாரும் ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தோம். இப்படி பண்ணிட்டியே? லவ் பண்ணா கூட சேத்து வச்சிருப்போம்ல? ஆனா இப்படி செய்வீங்கன்னு நினைக்கலையேன்னு ரெண்டு பேர் வீட்லயும் திட்றாங்க. அசிங்கமா இருக்கு. அஞ்சு நாள் முன்னாடி தான் போன் பண்ணாங்க. இந்த டென்ஷன்ல உன்கிட்ட சொல்ல முடியலை. ரெண்டு குடும்பமும் சேந்து மாத்தி மாத்தி பேசி சண்டை வராத குறையா கல்யாணத்தை செஞ்சி வச்சிட்டாங்க. இங்க இருக்கவே பிடிக்கலை மச்சான். எல்லாரையும் பாக்கும் போது தப்பு செஞ்சிட்டோம்னு குத்துது”
கார்த்திக் முகத்தில் ஈயாட வில்லை. உடனே நண்பனின் மனநிலையை புரிந்து கொண்டான் கார்த்திக்
“அன்னைக்கு சத்யா என்னை தடுக்கலைனா…. தடுக்கலைனா…. நானும் இப்படி பட்ட நிலைல தான இருந்துருப்பேன்”, என்ற உண்மை அவன் முகத்தில் அறைந்தது.
தன்னுடைய எண்ணத்தில் இருந்து வெளியே வந்தவன் “சரி டா நடந்தது நடந்து போச்சு. எப்ப இருந்தாலும் அவ தான உன் பொண்டாட்டி. யார் என்ன சொன்னாலும் கவலை படாத. அப்புறம் இங்க இருந்தா எதாவது பேசிட்டே இருப்பாங்க. நான் நாலு நாள்ல ரெண்டு பேருக்கும் டிக்கட் போடுறேன். அவளை கூட்டிட்டு பாரின் போயிரு. கொஞ்ச நாளில் பாசத்தில் எல்லாம் மறந்துருவாங்க. இப்ப இங்கயே இருந்தா எல்லா கோபத்தையும் காட்டுவாங்க. பையன் உனக்கே இப்படி இருக்குன்னா சிஸ்டர் நிலைமையையும் யோசிச்சு பாரு”, என்றான்.
“ஹ்ம்ம், ஆனா ப்ரெக்னன்ட்டா இருக்கானு சொல்லி அவளை விட மாட்டேன்னு ஒரு பேச்சு கிளம்புது டா”
“உனக்கு உன் மனைவியும் பிள்ளையும் முக்கியம் டா. ரெண்டு பேரோட அம்மா அப்பாவும் கோபத்துல இருக்காங்க. இவங்க கூட நீ அவளை மட்டும் விட்டுட்டு போனா, அவ நிம்மதியா இருக்க மாட்டா. உனக்கு வேலை இருக்கு. ஹாஸ்பிட்டலில் லீவ் தர மாட்டாங்க. என் பொண்டாட்டியை நான் பாத்துக்குறேன்னு சொல்லி எப்படியாவது சண்டை போட்டாவது கூட்டிட்டு போ. இப்ப நிம்மதியா இரு.  நான் டிக்கட் போட்டுட்டு போன் பண்றேன்”
“இப்ப கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருக்கு டா கார்த்திக்”
“புது மாப்பிள்ளை நீ. கவலை படாம இரு டா”
“சரி நீ எப்ப கல்யாணம் பண்ண போற?”
“கூடிய சீக்கிரம் கல்யாணம் இருக்கும். நீ இப்ப தான் போக போற? இந்த நிலைமைல சிஸ்டரை அங்க இங்க அலைய வைக்கிறது நல்லது இல்லை. அதனால நீ பாரின் போன அப்புறம் உங்க வீட்டுக்கே நாங்க ஹனிமூன் கொண்டாட வரோம் சரியா?”
“சூப்பர் மச்சி. கண்டிப்பா வா. வரதுக்கு முன்னாடி சொல்லு. அங்க எல்லா ஏற்பாடும் செஞ்சிறேன்”
“சரி டா டிக்கட் போட்டுட்டு கூப்பிடுறேன். அது வரைக்கும் உங்க வீட்ல உள்ளவங்க சிஸ்டரை ஏதும் சொல்ல விடாம பாத்துக்கோ, பை மச்சான்”, என்று விடை பெற்றவனுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.
சேகரும், தேவகியும் காரில் சென்று விட்டதால் ஒரு ஆட்டோ பிடித்து சேகர் ஆபிஸ் இருக்கும் இடம் சொல்லி போக சொன்னான். ஏறி அமர்ந்தவன் தன்னுடைய அப்பாவை போனில் அழைத்தான்.

“சொல்லு கார்த்திக்”, என்றார் சேகர்.

“அப்பா நீ எங்க இருக்க?”

“இப்ப தான் அம்மாவை வீட்ல விட்டுட்டு ஆபிஸ் குள்ள நுழையுறேன்”

“அப்படியா சரி?”

“டேய் எதுக்கு டா போன் பண்ண?”

“சும்மா தான்”, என்று சொல்லி வைத்து விட்டான். 

போனையே முறைத்து பார்த்த சேகர் “அப்படியே அம்மா மாதிரி”, என்று நினைத்து வேலைகளில் ஆழ்ந்தார்.

கடனே என்று வேலை செய்து கொண்டிருந்தாள் சத்யா. 

திடீரென்று வேலையில் ஒரு சந்தேகம் வந்ததால் பக்கத்தில் அமர்ந்திருந்தவளிடம் கேக்கலாம் என்று நினைத்து “மேகலா”, என்று அழைத்தாள்.

என்ன என்று கூட கேக்காமல் திரும்பி மட்டும் பார்த்தாள் அந்த மேகலா. “எனக்கு இதுல ஒன்னு புரியலை. கொஞ்சம் சொல்லி தாங்களேன்”

“நீ தான் எம் டி க்கு பெட் ஆச்சே. அவர் உன்கிட்ட தான எல்லா வேலையும் சொல்றார். அவர் கிட்டயே கேட்டுக்கோ”, என்று சொல்லி விட்டு திரும்பி விட்டாள்.

“அட பாவி என் மாமனார் என்கிட்ட பேசுறதுல இவளுக்கு பொறாமையா? இந்த மாமாவும் தான் இவளுக்கு கூட கொஞ்சம் வேலை கொடுக்குற சாக்குல இவ கிட்ட பேசிருந்தா ஐ எம். டி பேசிட்டார்ன்னு குதிச்சிருப்பா”, என்று நினைத்து கொண்டு “என்ன செய்யலாம்?”, என்று யோசித்தாள்.

விடை கிடைக்காததால் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது “ ஹாய் டார்லிங்”, என்று சொன்ன கார்த்திக்கின் குரல் அவள் காதில் விழவில்லை.
அவன் சத்தம் கேட்டு மேகலா தான் நிமிர்ந்து பார்த்தாள். “எம். டி யோட சன் வந்திருக்கார். இந்த சத்யாவுக்கு முன்னாடி நாம போய் எம். டி கிட்ட சொல்லலாம்”, என்று நினைத்து அவசர அவசரமாக எழுத்து போனாள் மேகலா.

அவள் எழுந்து போன சத்தத்தில் கண் விழித்து அவள் பக்கம் பார்த்த சத்யா  “இவ ஏன் பேய பாத்த மாதிரி ஓடி போறா?”, என்று நினைத்து கொண்டு தலையை உயர்த்தி பார்த்தாள். பார்த்தவள் அதிர்ச்சியாகி விட்டாள்.

“கார்த்திக்”, என்று உதடுகள் சொன்னாலும் வெகு நாட்கள் கழித்து அவன் கண்களில் இருந்த காதலை பார்த்ததும் கண்கள் அருவியாய் கொட்டியது.  
சுற்றி வேலை செய்யும் அனைவரும் அவர்களை தான் பார்க்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் ஒருவரை ஒருவர் பார்வையால் பருகி கொண்டிருந்தார்கள்.  

“தேவை இல்லாத விஷயத்துக்கு அவளை கஷ்ட படுத்திட்டேனே”, என்று நினைத்து கொண்டு அவள் கண்ணீரை துடைத்து விட்டான். 

எல்லாரும் ஆ என்று வாயை பிளந்தார்கள். அப்போது உள்ளே இருந்து வந்த சேகருக்கும் மேகலாவுக்குமே அதிர்ச்சி தான்.

“கார்த்திக்..”, என்று அழைத்து கொண்டே அவன் அருகில் வந்தார்.

“அப்பா, நான் சத்யாவை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”

“அதெல்லாம் முடியாது. வேலை நேரத்தில் விட மாட்டேன்”, என்று சிரித்தார் சேகர்.

“உங்க கிட்ட பெர்மிஷன் கேட்டதே தப்பு, நீங்க உங்க சம்பந்திக்கு போன் பண்ணி கல்யாணத்துக்கு நாள் குறிக்கிற வேலையை பாருங்க. இந்த ஓட்டை ஆபிஸ்க்கு ஒரு வாரம் லீவ் கொடுங்க. நான் என் டார்லிங்கை தூக்கிட்டு போறேன்”, என்று சொல்லி கொண்டே அவர் பாக்கெட்டில் இருந்த கார் சாவியை எடுத்தான்.
“எல்லார் முன்னாடியும் இப்படி உளறுறானே”, என்று நினைத்து கொண்டிருந்த சத்யாவை அப்படியே கைகளில் அள்ளி கொண்டான்.
“டேய் ஒரு வருசமா கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு ரெண்டு பேர் கிட்டயும் கெஞ்சினோம். அப்ப சரின்னு சொன்னீங்களா? இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் பண்ணி வைப்போம்”, என்று சிரித்தார் சேகர்.
“அப்படி ரெண்டு வருஷம் கழிச்சு நீ கல்யாணம் பண்ணி வச்சா, நான் என் பிள்ளைங்க கூட தான் மணமேடைல உக்காருவேன். எப்படி வசதி?”
“நீ செஞ்சாலும் செய்வ டா. சத்யா அப்பா கிட்ட பேசட்டுமாமா?”
“நீங்க பேசுங்க மாமா. ஆனா உங்க பிள்ளையை கீழே இறக்கி விட சொல்லுங்க. எல்லாரும் பாக்குறாங்க”
“டேய் அவளை விடேன் டா. சுத்தி எல்லாரும் சிரிக்கிறாங்க”
“என் பொண்டாட்டியை நான் தூக்குவேன். யார் என்னை கேப்பா?”
“சரிங்க சார். வீட்டுக்கு கிளம்பு, வேலையை கெடுக்காத”
“அது… வா குட்டி நாம போகலாம்”, என்று தூக்கி கொண்டே வெளியே சென்றான்.
“கார்த்திக் கூச்சமா இருக்கு விடுங்க ப்ளீஸ்”, என்று சிணுங்கினாள் சத்யா.
“அமைதியா இருந்தா கார் வரைக்கும் நல்ல பிள்ளையா தூக்கிட்டு வருவேன். இல்லைனா இப்பவே இங்க முத்தம் கொடுப்பேன்”, என்றான்.

Advertisement