Advertisement

அத்தியாயம்  10
உன்னைப் பற்றிய
அழகான கனவுகள்
காவியமாகிறது என் இதயத்தில்!!!

அந்த பக்கம் “பாப்பா வலி எப்படி டா இருக்கு?”, என்று கேட்டார் சண்முகநாதன்.
“இந்த நம்பர் அப்பாவுக்கு எப்படி தெரியும்? நான் பேசும் முன்னாடியே எப்படி கண்டு பிடிச்சாங்க?”, என்று யோசித்து,  யோசனையை தடை செய்து விட்டு  அவரிடம் பேச ஆரம்பித்தாள்.
“வலி இப்ப இல்லை பா. கல்யாணம் முடிஞ்சிட்டா?”
“இப்ப தான் சத்யா முடிஞ்சது”
“ஓ, சரிப்பா சாயங்காலம் எப்ப வாறீங்க?”
“ஏன் டா, அங்க இருக்க உனக்கு பிடிக்கலையா?”
“ஐயோ அதெல்லாம் இல்லை பா. இங்க இருக்க ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம வீட்ல தனியா தான் இருப்பேன். இங்க அத்தை நல்லா பாத்துக்குறாங்க. ஆனாலும் எத்தனை நாள் இருக்க முடியும். அவங்களுக்கு கஷ்டம்”
“எங்களுக்கு உன்னை பாத்துக்க எந்த கஷ்டமும் இல்லை சத்யா. ஆனா உனக்கு இங்க இருக்க பிடிக்கலைன்னா சொல்லு, சாயங்காலம் மாமாவை உன்னை ஊருல கொண்டு போய் விட சொல்றேன்”, என்று சொன்ன படி வந்தாள் தேவகி.
“அப்படி எல்லாம் இல்லை அத்தை”, என்று தேவகியிடம் சொன்ன சத்யா போனில்  “அப்பா நீங்க எப்ப வரணுமா அப்ப வாங்க. அது வரைக்கும் நான் இங்கயே இருக்கேன். என்னால ஆண்ட்டிக்கு கஷ்டம்னு தான் சொன்னேன்”, என்றாள்.
அவள் பதிலில் சிரித்த சண்முகநாதன்  “மிளகு இறக்குமதி பண்ண கேரளா போறேன் பாப்பா. அண்ணன் வீட்லயும் எல்லாரும் இங்க கல்யாண வீட்ல இருப்பாங்க. நீ ஊருக்கு போனா தனியா இருக்கனும்ன்னு தான் நான் யோசிச்சேன். கார்த்திக் அப்பா தான் நீ அவங்க வீட்லயே  இருக்கட்டும்னு சொல்லிட்டார்”, என்றார்.
“சரி ப்பா. என்னை பத்தி யோசிக்காதீங்க. நீங்க வேலையை பாருங்க. வைக்கிறேன்”
“சரி பாப்பா அப்பா நைட் பேசுறேன்”, என்று வைத்தார்.
“உனக்கு நிஜமாவே இங்க இருக்க பிடிக்கலையா சத்யா?”, என்று கேட்டாள் தேவகி.
திடுக்கிட்டு தேவகியை பார்த்த சத்யா தேவகியின் கைகளை பிடித்து கொண்டு “நேத்து உங்க கூட தூங்குனது எனக்கு எங்க அம்மா கூட தூங்குன மாதிரி இருந்தது. இந்த வீடு, அப்புறம் உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கண்டிப்பா இங்க இருந்து போகும் போது, உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்”, என்றாள்.
“எதுக்கு மிஸ் பண்ற? பேசாம இங்கேயே இருந்துறேன்”, என்றாள் தேவகி. அதிர்ச்சியாக தேவகியை பார்த்தாள் சத்யா.
அவள் அதிர்ச்சியை பார்த்த தேவகி “சும்மா சொன்னேன். ஆனா இது உன்னோட வீடு. எப்ப விருப்பமோ இங்க வரலாம். இங்கேயே இருக்கணும்னா கூட இங்கயே இருக்கலாம்”, என்று சொல்லி விட்டு எழுந்து போனாள்.
“இதுக்கு என்ன அர்த்தம்?”, என்று குழம்பி கொண்டிருந்தவள் “சத்யா இங்க வாயேன்”, என்ற தேவகியின் குரலில் களைந்தாள்.
குழப்பத்தை மறந்து “என்ன அத்தை?”, என்ற படியே தேவகி அருகில் சென்றாள் சத்யா.
“இந்த கார்த்திக் எருமை பதினோரு மணிக்கு எந்திச்சு வந்து காபி கொடுன்னு கேக்கும். அப்ப அது நாறி போயிருக்கும். இப்பவே நீ போய் கொடுத்துட்டு வாயேன். கஷ்டமா இருந்தா மாமா கிட்ட கொடு. அவர் கொடுப்பாரு”
“நானே கொண்டு போறேன் அத்தை”, என்று வாங்கி கொண்டு போனவளுக்கு  அறைக்கு வெளியே போய் நின்றவுடன் கால்கள் நடுங்கியது.
“தூங்கிட்டு இருந்தா அவனை எப்படி எழுப்ப?”, என்று யோசித்து கொண்டே “கதவு திறந்து இருக்கா?”, என்று பார்க்க அதை தள்ளினாள்.
அவள் தள்ளியவுடன் அது சிறு சத்தத்துடன் திறந்து கொண்டு போய் கொண்டே இருந்தது. அதை பிடித்தவள் சத்தம் வராதவாறு மெதுவாக விரித்து வைத்தாள்.
அவனை எழுப்ப வேண்டும் என்று யோசித்தவளுக்கு அவளுடைய நல்ல நேரமோ என்னவோ? அவனை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லாமல் அவனே எழுந்து கண்ணாடி முன்பு நின்றிருந்தான்.
ஆனால் அவனுடைய கெட்ட நேரம் வெறும் ஜட்டியுடன் அவன் நின்றது தான் கொடுமை.
“ஆஆ”, என்று கத்திய சத்யா அவனுடைய தோற்றத்தில் சிலை என நின்றாள். அவள் “ஆஆ”, என்று சத்தம் கொடுத்ததில் தான் தலையை திருப்பி பார்த்தான். 
இப்போது அதிர்ச்சி ஆவது அவன்  முறை. யாரும் வர மாட்டாங்கன்னு நினைத்து கதவை மூடாமல் இருந்த தன் மடத்தனத்தை நொந்த படி அருகில் கிடந்த போர்வையை மேல போட்டு பாதிரியார் மாதிரி மூடினான்.
“அத்தை… காபி…”, என்று உளறினாள் சத்யா.
அவள் தடுமாற்றத்தை ரசித்த கார்த்திக்  “உள்ள வா சத்யா”, என்று சொல்லி சிரித்தான்.
“இல்லை. நீங்க வாங்கிக்கோங்க. நான் கீழ போறேன்”
அவள் அருகில் வந்தான் கார்த்திக். நெருங்கி நெருங்கி வர வர அவளுடைய இதய துடிப்பு அதிகமானது. 
வம்புக்கென்று அவள் கையை பிடித்து காபி கப்பை வாங்கினான் கார்த்திக்.
அதை வாங்குறேன் என்று அவள் கையை நன்றாக  அழுத்தி பிடித்தான். விரல்களை வருடினான்.
“யாரும் இந்த லட்சணத்துல காபி கப்பை வாங்கியிருக்க மாட்டாங்க”, என்று நினைத்தவளுக்கு அவனை பார்க்க கூட முடியாமல்  இமைகள் பட படத்தது.
அவள் பட படப்பை ரசித்தவன் “சாரி ரூம்க்கு யாரும் வர மாட்டாங்கன்னு தான் அப்படியே இருந்துட்டேன்”, என்றான்.
“பரவால்லன்னா  சொல்ல முடியும்?”, என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தாள்.
அவள் அமைதியையும் ரசித்தான். “நான் போறேன்”, என்று திரும்பியவளை “கப்பை வாங்கிட்டு போயேன்”, என்று சொல்லி இருக்க வைத்தான்.
வேறு வழி இல்லாமல் நின்றாள்.
“அந்த வைசாலி கொடுத்த போட்டோ உன்கிட்டயா இருக்கு சத்யா?”, என்று கேட்டான் கார்த்திக்.
அந்த வைசாலி பேரை கேட்டவுடன் நேற்று வந்த எரிச்சல் வந்தது. இது வரை இருந்த மயக்கம் எல்லாம் மடிந்தது. அதே கோபத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள். அவன் அவள் முறைப்பை உணர்ந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் சிரித்தான்.
அவன் சிரிப்பில் மேலும் எரிச்சல் ஆனவள் “எதுக்கு அது உங்களுக்கு?”, என்று கோபமாக கேட்டாள்.
“வாவ் பொறாமையா?”, என்று மனதில் நினைத்து கொண்டு “பாவம் என்னையும் ஒருத்தி ஆசையா லவ் பண்ணிருக்கா. அவ லவ்வை கன்சிடர் பண்ணலாம்னு யோசிச்சேன்”, என்று சொல்லி வம்பிழுத்தான் கார்த்திக்.
“காலேஜ்ல இருக்க அத்தனை பொண்ணுங்களும் தான் உங்களை லவ் பண்ணிட்டு திரியுறாங்க. ஜூனியர், சீனியர்னு எல்லாருமே  கார்த்திக் கார்த்திக்ன்னு கொஞ்சிக்கிறாளுக. அவன் அழகு, ஹேண்சம்ன்னு ஜொள்ளு விடுறாளுக. அப்ப அத்தனை பேரையும் நீங்க  லவ் பண்ண போறீங்களா?”
“ஆத்தாடி அது எப்படி முடியும்? என்கிட்ட வைசாலி மட்டும் தான லவ்வை  சொன்னா?”
“அவளா சொன்னா? சொன்னது நானாக்கும்”
“ஆனா அவ காதலை தான நீ  சொன்ன? உன்னோட காதலையா சொன்ன? ஏன் சத்யா, எனக்கு ஒரு டவுட். எல்லா பொண்ணுங்களும் என்னை விரும்புறாங்கன்னு சொன்ன? நீ என்னை விரும்புறேன்னு சொல்லல. நீயும் வைசாலிக்காக தான பேசுன. அவ காதலை ஏத்துக்கிட்டா என்ன தப்பு?”
வந்த எரிச்சலில் சுற்றி கண்களை ஓட்டி “ஏதாவது அவனை அடிக்க கிடைக்குதா?”, என்று பார்த்தாள் சத்யா.
ஒன்னும் அகப்படாததால் அவன் கையில் இருந்து காபியை பிடுங்கி  அவன் தலையில் அப்படியே கவிழ்ந்தாள்.
“நல்லதா போச்சு காபி ஆறிட்டு”, என்று நினைத்து கொண்டே முகம் முழுவதும் காபி வடிய நின்றிருந்தான் கார்த்திக்.
இந்த கலவரத்தில் அவன் சும்மா மேலே மூடி இருந்த போர்வை கீழே விழுந்தது. ஆனால் இந்த முறை அதை எடுத்து மேலே போடாமல் அப்படியே நின்றான் கார்த்திக்.
எதையும் உணராமல் அவன் அருகே நெருங்கியவள்  அவன் கழுத்தை பிடித்து நெரித்து “என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது? அவ என்கிட்ட உன்னை காதலிக்கிறேன்னு சொன்னப்ப உன்னை தூக்கி போட்டு மிதிக்கணும்னு தான் நேத்து தோணுச்சு. நிலைமை சரி இல்லைனு அமைதியா போனேன். அதுக்காக நானே அவ காதலுக்கு தூது வருவேன்னு நினைச்சியா? எவ்வளவு தைரியம் டா உனக்கு? என்கிட்டயே அவ காதலை பத்தி பேசுற? கொன்னுருவேன் கொன்னு”, என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.
அவள் பேசியதை ரசித்தவன் “ஏய்! என்ன ஆச்சு சத்யா? எதுக்கு இப்படி கோப படுற?”, என்று கேட்டான்.
“பின்ன கோப படாம, உன்னை கொஞ்சுவாங்களா? நான் விரும்புறவனை, இன்னொருத்தி என்கிட்டயே வந்து  லவ் பண்றேன்னு சொல்லி என்னையே போய் சொல்ல சொல்லுவா. நீ அவளையே லவ் பண்ண போறேன்னு என்கிட்டயே சொல்ற? கொன்னுருவேன் டா. அவளை அப்படியே கொல்லணும்னு தோணுச்சு. ஆனா அவ அப்படி செஞ்சதுக்கு நீ தான காரணம். உன்னை எவ ஹீரோ மாதிரி காலேஜ்ல சுத்த சொன்னா?”
கண்களில் ஒரு வித பரவசத்துடன், இதழ்களில் சிறு சிரிப்புடன் அவளையே பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக். அவன் மனது றெக்கை இல்லாமல் பறந்தது. கோபத்தில் அவள் காதலை உளறி இருந்தாள் சத்யா.
அவன் பார்வையை பார்த்த பிறகு தான், உளறியதே நினைவில் வந்தது.  அங்கு இருந்து திரும்பி ஓட நினைத்தவள் கைகளை இறுக்கமாக பற்றினான் கார்த்திக்.
திகைத்து போய் தலை குனிந்து கொண்டாள் சத்யா.
பற்றிய கைகளை விடாமல் பிடித்திருந்தான் கார்த்திக். அவனிடம் இருந்து நழுவி ஓடி விட கையை உருவ முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. 

“கையை விடுங்க ப்ளீஸ்”, என்றாள் சத்யா.

“இப்ப நீ பேசுனதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லு. கையை விடுறேன்”

“அது ஒன்னும் இல்ல. சும்மா தான் சொன்னேன். விடுங்க அத்தை தேடுவாங்க”

“அத்தையா? உறவு முறை எல்லாம் சரி தான். ஆனா நீ திட்டுனதுக்கு இன்னும் விளக்கம் சொல்லலையே”

“விடுங்க கார்த்திக்”

“நான் வேற பொண்ணை லவ் பண்ணா உனக்கு கோபம் வரதுக்கு காரணம் என் மேல உள்ள காதலா சத்யா?”

“நான் போகணும் விடுங்க”

Advertisement