Advertisement

“சும்மாவே நமக்கு இங்கிலிஷ் வராது, இதுல முதல் நாளே வா? எப்படி பேச?”, என்று நினைத்து மனதுக்குள் ரயில் தட தடத்தது.
ஊர் பக்கம் இருக்கும் ஆர்ட்ஸ் காலேஜில் படிக்க விடாமல் இங்கே வந்து இப்படி மாட்டி விட்ட தன் தந்தையை அன்றைக்கு ஐம்பதாவது முறையாக திட்டி தீர்த்தாள்.
கிருத்திகா முறை வந்தவுடனே, அவள் தைரியமாக எழுந்து அறிமுக படுத்தி கொண்டாள்.
கோகிலாவும், கிருத்திகாவும் இங்கிலிஷ் மீடியம் படித்தவர்கள் என்று அறிந்ததால் “இங்கிலிஷ் தெரிஞ்சா இந்த தைரியமும் சேந்து வந்திரும் போல? இங்க தெரியாம தான பயத்துல நடுங்குறேன்”, என்று நொந்து கொண்டு இது வரை பேசிய மாணவர்கள் போல பேசி விட வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.
அவள் முறை வந்ததும் தயக்கத்துடனே பேசி விட்டு அமர்ந்தவளுக்கு, செத்து பிழைத்த நிம்மதி. 
“ஐயோ முதல் நாளே கொடுமையா இருக்கே”, என்று நினைத்தவளுக்கு தெரியாது, இந்த இங்கிலிஷ் கொடுமையை அவள் வெகுநாள் அனுபவிக்க போகிறாள் என்று.
இங்கிலீஷை கண்டு பிடித்தவனை சபித்து விட்டு அவர்களுடன் கதை பேச ஆரம்பித்தாள். சதீஸ் சாரும் கொஞ்ச பேர் தான் இருப்பதால் அவர்கள் இஷ்டம் போல விட்டு விட்டார்.
அடுத்த பீரியட் மைமூன் பேகம் என்ற மேடம் வந்து “இங்கிலீஷில் அறிமுக படுத்திக்கோங்க”, என்ற அதே கொடுமையை செய்ய நொந்தே போனாள் சத்யா.
“அப்பா…”, என்று மனதுக்குள் கொலை வெறி வந்தது சத்யாவுக்கு.
“எப்படினாலும் எவன் வீட்டுக்காவது போய் அடுப்பூத தான் போறேன். எனக்கு எதுக்கு இந்த என்ஜினீயர் படிப்பு? சொன்னா கேட்டாரா? அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியும் வாந்தியும் வயித்தாலயும்?”, என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தவள் இந்த முறை காலை அவளே தெரியாமல் பெஞ்சில் இடித்து கொண்டாள்.
“ப்ச் இது வேற? இன்னும் ஆறுற வரைக்கும் பட்ட காலிலே படும்”, என்று நினைத்து கொண்டவளுக்கு அவன் முகம் நினைவில் வந்தது.
ஜித்தன் என்று மனதுக்குள் நினைத்தவளுக்கு அப்போது தான் நினைவில் வந்தது. அவனுடைய கர்ச்சிப்பை வைத்து ரத்தத்தை துடைத்தவன் அவள் கையிலே அதை கொடுத்தது. அதை எடுத்து பார்த்தாள்.
அந்த வெண்மை நிற கைக்குட்டை ஆங்காங்கே சிவப்பு நிறம் படிந்து ஏதோ கோலம் போட்டது போல இருந்தது.
“துவைச்சாலும் போகாது. ரத்தத்தை துடைச்சதை அவன் திருப்பியும் யூஸ் பண்ண போறது இல்லை. தூர தான் போடணும்”, என்று மனதில் நினைத்தவள் அடுத்த நிமிடமே “சாயங்காலம் இதை போய் துவைக்கணும்”, என்று நினைத்தாள்.
அடுத்து நேரம் வேகமாக நகர்ந்தது. கொண்டு வந்த உணவை மூவரும் பகிர்ந்து உண்டார்கள். 
சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் மூவரும் பிரண்ட்ஸாக ஐக்கியமாகி விட்டார்கள்.
அன்று மாலை கிருத்திகா மற்றும் கோகிலாவுடன் ஹாஸ்டலுக்கு சென்றவள் அட்மிசன் போட்டு விட்டு, பீஸையும் கட்டி ரசீதை வாங்கி கொண்டு, “நாளைக்கு திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு தோழிகளிடமும் சொல்லி விட்டு, அவர்கள் கொடுத்த மருந்தையும் போட்டு விட்டு அந்த ஹாஸ்டலை விட்டு வெளியே வந்தாள்.
அங்கு இருக்கும் கட்டிடங்களை பராக்கு பார்த்து கொண்டே வந்தவளின் கண்ணில் இரண்டு கட்டிடமிடையே இருந்த இடைவெளியில் கண்ட காட்சி திகைக்க வைத்தது. 
காலையில் அவளுக்கு உதவி செய்தவன் நடுவில் நின்றிருக்க அவனைச் சுற்றி நான்கு பேர் நின்றிருப்பது கண்ணில் பட்டது.
அவர்கள் சாதாரணமாக இருந்திருந்தால் அவர்களை பிரண்ட்ஸ் என்று நினைத்து நடந்திருப்பாள். ஆனால் அந்த நான்கு பேரை பார்த்தாலே நடுவில் இருந்தவனை அடிக்க காத்திருக்கிறார்கள் என்று புரிந்தது.
“ஒருத்தனை நாலு பேர் அடிக்கிறதா? என்ன ஒரு கொடுமை”, என்று நினைத்து கொண்டே அவள் கால்கள் தன்னாலே அவர்களை நோக்கி சென்றது.
நால்வரும் தன்னை சுற்றி இருக்க, அடுத்து என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
“இந்த நிலைமை வர கூடாதுன்னு தான காலைல இருந்து இந்த நாய்ங்க கிட்ட இருந்து ஒளிஞ்சு விளையாடிட்டு இருந்தேன். இப்ப வந்துருச்சே. எல்லாம் அம்மாவால தான். அம்மா…”, என்று நினைத்து பல்லை கடித்தவன் எதிரில் நின்ற ஜஸ்டினை பார்த்தான்.
அவன் கொலை வெறியோடு கார்த்திக்கை முறைத்து கொண்டிருந்தான். அவனுடன் நின்ற ராம், சிவா, ரகு மூவருமே அதே போல் தான் நின்றார்கள்.
“இன்னைக்கு நான் செத்தேன்”, என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவர்களை பார்த்தவன் “இங்க பாரு ஜஸ்ட்டின், நீ செஞ்சது தப்பு. அதுக்கு தான் நான் அப்படி செஞ்சேன். அது அதோட முடிஞ்சிருச்சு. இப்ப மறுபடியும் ஆரம்பிக்கிற? யாராவது பாத்தா வம்பு. பேசாம போயிரு”, என்றான்.
“பாரு டா. பண்றது எல்லாம் பண்ணிட்டு விலகி போகணுமாம்? கேட்டிங்களா டா? இன்னைக்கு நீ செத்த டா”, என்று சொல்லி கொண்டே அவனை கன்னத்தில் அடிக்க போகும் போது “டேய் நிறுத்துங்க டா”, என்ற சத்யாவின் குரலில் அந்தரத்திலே உறைந்தது ஜஸ்டின் கை.
“யாரு அது?”, என்ற படியே திரும்பி பார்த்தான் ஜஸ்டின். அவன் கண்களில் மின்னல் வந்தது. அங்கே தேவதையின் அழகோடு, முகத்தில் கோபத்தோடு நின்றிருந்தாள் சத்யா.
அதே நேரம் கார்த்திக்கும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். அவன் கண்களில் பயம் வந்திருந்தது. “இவ எதுக்கு இப்ப இங்க வந்தா?”, என்று நினைத்து எரிச்சல் பட்டான் கார்த்திக்.
கார்த்திக் கண்களில் இருந்த பயத்தை பார்த்த சத்யா, ஜஸ்டினை பார்த்து “மனுசனா டா நீ? அவங்களை பாரு. எப்படி பயந்து போய் பாக்குறாங்கன்னு. அப்படி பட்டவங்களை அடிக்க நாலு பேரு சுத்தி நிக்கீங்க?”, என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் ராம், சிவா, ரகு கொலை வெறியாக அவளை முறைத்தார்கள். அவர்கள் பார்வையை கண்டு கொள்ளாமல் ஜஸ்டினை தான் அவள் முறைத்து கொண்டிருந்தாள்.
கார்த்திக் இதழ்களில் சிறு புன்னகை வந்தது. “பாரு டா சண்டி ராணி என்னை காப்பாத்த வந்திருக்கா?”, என்று நினைத்து சிரித்து கொண்ட கார்த்திக் ஜஸ்டினை திரும்பி பார்த்தான்.
ஜஸ்டின் சத்யாவையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். ஜஸ்டின் கண்களில் இருந்த மின்னலை பார்த்த கார்த்திக் க்கு ஏனோ எரிச்சலாக வந்தது.
அவன் பார்வையை உணராமல் அவனை முறைத்த படியே நின்றாள் சத்யா.
ஆனால் அவன் பார்வையை உணர்ந்த கார்த்திக் “ஏய் உனக்கு அறிவு இருக்கா? எதுக்கு இங்க வந்த? கிளம்பு இங்க இருந்து”, என்று கத்தினான்.
அவனை திரும்பி பார்த்தவள் “நீங்க பயப்படாதீங்க. இவனுங்க என்ன செய்றாங்கன்னு பாப்போம். நான் இருக்கேன். தைரியமா இருங்க”, என்றாள்.
அதை கேட்டு தலையில் அடித்து கொண்ட கார்த்திக் “ஒழுங்கா இங்க இருந்து போ மா”, என்றான்.
“எனக்கு பிரச்சனை வர கூடாதுன்னு நீங்க தவிக்கிறீங்க. உங்களை விட்டுட்டு நான் எப்படி போவேன்”, என்று கார்த்திக்கிடம் சொன்னவள் ஜஸ்டின் புறம் திரும்பி “சொல்லு டா. ஒருத்தனை நாலு பேர் அடிக்க போறீங்க? நீ தான் இந்த கூட்டத்துக்கு தலைவனா?”, என்று கேட்டாள்.
ஜஸ்டினை தவிர அவள் மிரட்டலில் கடுப்பாகி விட்டார்கள் மற்ற மூவரும். கார்த்திக் நெற்றியை தடவி கொண்டான். நிலைமையை எப்படி சமாளிக்க என்று தெரியாமல் விழித்தான்.
“இவளை முதல்ல அடிக்கணும் டா”, என்றான் ராம்.
“ஆமா ஜஸ்டின். பெரிய இவ மாதிரி வந்து மிரட்டிட்டு இருக்கா”, என்றான் சிவா.
“வேண்டாம் விட்டுருங்க. வாங்க வீட்டுக்கு கிளம்பலாம்”, என்று சொன்ன ஜஸ்டின் அவளையே பார்த்த படி நடந்தான்.
அவன் பின்னே மூவரும் நடந்தார்கள். அவர்கள் போனதும் பெருமையாக அவனை பார்த்தாள் சத்யா.
“எப்படி உங்களை காப்பாத்திட்டேன் பாத்தீங்களா?”, என்று அவனை பார்த்து சிரித்தாள்.
“எவ்வளவு பெரிய பிரச்சனைல மாட்டிக்க போறான்னு புரியாம என்னை காப்பாத்துனதுல சந்தோச படுறாளே? ஜஸ்டின் பார்வையை நினைச்சாலே பயமா இருக்கு?”, என்று நினைத்து இமைக்காமல் அவளை பார்த்தான் கார்த்திக்.
“ரொம்ப பயந்துடீங்களா? அவங்க போய்ட்டாங்க. பய படாதீங்க. ஆனா ஒரு பையன் இப்படியா பய படுறது?”, என்று கேட்டாள் சத்யா.
“அம்மா…”, என்று மனதுக்குள் பல்லை கடித்தவன் அவளுடைய விவரம் புரியாத வெகுளியான பேச்சை கேட்டு சிரித்தான்.
“அப்பாடி சிரிச்சிட்டீங்க. பயம் போயிருச்சா? இனி அவங்க கூட ஏதும் வம்பு வச்சிக்காதீங்க சரியா? பாக்கவே முரடன் மாதிரி இருக்காங்க. நீங்களோ பயந்து பாவம் போல இருக்கீங்க?”
“ஹ்ம் சரி”, என்றவனுக்கு “என்னை பத்தி தெரிஞ்சா இவ முகம் எப்படி போகும்?”, என்று நினைத்து கொண்டான். தன்னாலே சிரிப்பு வந்தது.
சிரிப்பை அடக்கிய கார்த்திக் “ஆமா நீ எதுக்கு இங்க வந்த? எல்லாரும் பசங்களா இருக்காங்க. நீ மட்டும் வரலாமா?”, என்று கேட்டான்.
“உங்களை அடிக்க நாலு பேர் நிக்காங்க. பாத்துட்டு எப்படி போக முடியும்?”
அவள் பதிலில் அவன் மனது ஏனோ மென்மையான தாலாட்டை உணர்ந்தது. மனதை அடக்கியவன் “அவனுங்க உன்னை ஏதாவது செஞ்சிருந்தா, என்ன பண்ணிருப்ப? அதுக்கு தான் சொல்றேன். இப்படி எல்லாம் தலையை கொடுக்காத”, என்றான் 
“ஆமால்ல? நீங்களே பயந்து போய் இருக்கீங்க. அப்ப எனக்கு ஒன்ணுன்ணா நீங்களா என்னை காப்பாத்துவீங்க? ஆனா உங்களை பாத்ததும் மனசு கேக்கலை. ஓடி வந்துட்டேன். இனி யாரையாவது கூட்டிட்டு வறேன்”
“ஏன்?”
“என்ன ஏன்?”
“எனக்கு என்னனு நினைச்சிட்டு நீ போக வேண்டியது தான? எதுக்கு ரிஸ்க் எடுத்து யாரையும் கூட்டிட்டு வரணும்?”
“கூட்டிட்டு வராம? உங்களை அடி வாங்க வச்சிட்டு நான் பேசாம போக முடியுமா? காலைல முள்ளு குத்தினதுக்கு எனக்காக எப்படி துடிச்சீங்க? அதே மாதிரி தான எனக்கும் இருக்கும். ஆனா நீங்க கொஞ்சம் சண்டை கத்துக்கோங்க”
அவள் பதிலில் மறுபடியும் “அம்மா…”, என்று பல்லை கடித்த கார்த்திக் “வேணும்னா நீ எனக்கு சண்டை கத்து தரியா?”, என்று கேட்டான்.
“ஐயோ, நானே ஒரு சரியான பயந்தான்கொள்ளி. நான் எப்படி கத்து தர?”
“ஹ்ம்ம் சரி. நான் கிளம்புறேன்”
“ஒரு நிமிஷம்”
“என்ன?”
“இல்லை… நீங்க மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்ன்னு தான சொன்னீங்க?”
“ஆமா அதுக்கென்ன?”
“அப்புறம் எதுக்கு காலைல எங்க டிபார்ட்மெண்ட்க்குள்ள போனீங்க?”
“சும்மா பிரண்ட் பாக்க”
“ஆனா நீங்க ரொம்ப நேரம் வெளிய வரவே இல்லையே”
“அது.. அது… இப்ப என்னை அடிக்க வந்தாங்கள்ல? அவங்க கிட்ட இருந்து ஒளிஞ்சுக்க தான் உங்க டிபார்ட்மெண்ட்க்கு வந்தேன் போதுமா?”
“ஓ, அதுக்கு தான் சண்டை கத்துக்க சொல்றேன்”
“சரி கத்துக்குறேன். நீ எங்க கிளம்பிட்ட? ஹாஸ்டல் போகலையா?”
“ஹாஸ்டல்ல சேந்துட்டேன். ஆனா திங்க்ஸ் எல்லாம் இங்க உள்ள மாமா வீட்ல தான் இருக்கு. நாளைக்கு எடுத்துட்டு வந்து சேரனும்”
“ஓ சரி. அப்ப நான் கிளம்புறேன்”
“ஹ்ம்ம்”
“ஆமா நீ எங்க போகணும்”
“மாம்பலம் போகணும். ஆனா இங்க இருந்து ரெண்டு பஸ் பிடிக்கணும்னு சொன்னாங்க”
“சொன்னாங்களா? அப்ப உனக்கு போக தெரியாதா?”
“நானே இந்த ஊருக்கு புதுசு. அப்புறம் எப்படி எனக்கு தெரியும்? வரும் போது கேட்டு கேட்டு தான் வந்தேன். இப்பவும் அப்படியே போகணும். ஆனா அந்த சப்வேயை பாத்தா தான் நடுங்குது”
“ஏன்?”
“ஏனா? அது ஏதோ குகை மாதிரி இருக்கு. பாக்கவே பயமா இருக்கு”
“அப்ப சரி வா. நான் உன்னை உன் வீட்ல விடுறேன்”
“நீங்களா?”
“ஆமா. நான் பைக்ல தான வந்துருக்கேன். உன்னையும் விட்டுட்டு போறேன்”
“அது வந்து நான் யார் கூடவும் பைக்ல போனது இல்ல?”
“யார் கூடவுமா? ஏன் உங்க அப்பா கூட போனது இல்லையா?”
“அவருக்கு ஒட்டவே தெரியாதே”
“சரி இப்ப என்ன செய்ய? பேசாம, விக்ரம் படத்துல வர மாதிரி முதுகு பக்கம் மாதிரி உக்காந்துக்குறியா?”
“ஐயையோ ரோடே நம்மளை வேடிக்கை பாக்கும்”
“அப்புறம் என்ன? நம்பி வரலாம். உன்னை எங்கயும் கடத்திட்டு போற உத்தேசம் எல்லாம் இல்லை. வா”
“ஹா ஹா, நீங்களே பயந்தான்கொள்ளி. நீங்க என்னை கடத்திட்டு போறீங்களா?”, என்று சிரித்தவளை பார்த்தவன் “எனக்கு தேவை தான்”, என்று மனதில் நினைத்து கொண்டான்.
பைக் ஸ்டாண்ட் வரை அவனுடனே நடந்தாள் சத்யா.
சீண்டல் தொடரும்….

Advertisement