Advertisement

அத்தியாயம் 1
நீ விடும்
மூச்சு காற்று கூட
என்னை சுகமாய் தீண்டுமே!!!!
கண்களில் ஒரு மிரட்சியுடன், அந்த இன்ஜினியரிங் காலேஜ் உள்ளே அடி எடுத்து வைத்தாள் சத்யா..
“புது இடம் எப்படி இருக்குமோ? இந்த அப்பா கேட்டாரா? இங்க வந்து சேத்துட்டாரே? நான் இல்ல அவஸ்தை படுறேன். இதுல பையன்களா வேற இருக்காங்க”, என்று மனதுக்குள்ளே புலம்பினாள்.
“பெரிய பெரிய கட்டிடமா இருக்கே. இதுல எந்த பக்கம் போறதுன்னே தெரியலை. இந்த அப்பா கூடவாது வந்திருக்கலாம். பெரிய தோப்பு வேலை. என்னை விட அது முக்கியமா? இப்ப, கூட வந்திருந்தா துணைக்கு ஆள் இருக்குன்னு நிம்மதியா இருந்துருப்பேன். இந்த அனிதா வேற, ரேகிங் அது இதுன்னு பயமுறுத்திருக்கா. அது வேற பயமா இருக்கே. நாலு வருசம் இந்த காலேஜில் எப்படி படிக்க போறேன்? முதல் நாளே கால் நடுங்குது. இதுல ஹாஸ்டல் வேற விசாரிக்கணும். அப்பா…”, என்று பல்லை கடித்தவள் அங்கு இருந்த செக்யுரிட்டியை பார்த்தாள்.
அவள் பார்வையில் என்ன உணர்ந்தாரோ அருகில் வந்து “என்ன பாப்பா?”, என்று கேட்டார்.
“இல்லைங்க ஐயா. இன்னைக்கு தான் முதல் நாள் காலேஜ். எங்க போறதுன்னு தெரியலை அதான்”
“கூட யாரும் வரலையா?”
“இல்லை”
“சரி அங்க இருக்கு பாரு அந்த ஊதா கட்டடம். அங்க தான் பீஸ் கட்டிட்டு இருக்காங்க. அங்க போனேன்னா, விவரம் சொல்லுவாங்க”
“ரொம்ப நன்றி ஐயா”
“அட என்ன மா, பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு. நம்ம ஊரு பக்கம் உள்ள பொண்ணு மாதிரி தெரியுற? பாத்து போ மா”, என்று சொல்லி விட்டு திரும்பி போய் விட்டார்.
மறுபடியும் ஒரு வித பயம் தன்னை சூழ்ந்து கொள்ள அந்த கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சத்யா.
கட்டிடத்தை பார்த்து கொண்டு, கீழே பார்க்காமல் மேலே பார்த்து கொண்டே சென்றாள். அடுத்த நொடி ஆ என்று அலறினாள்.
அவள் காலில் நன்கு ஏறி இருந்தது அந்த முள்.
அப்படியே பேகை கீழே வைத்து விட்டு அமர்ந்து விட்டாள். அவள் செருப்பை தாண்டி குத்தியதால் ரத்தம் அதிகமாக வந்தது.
வந்த ரத்தத்தை பார்த்தோ, மனதில் இருந்த பயமோ, கூட யாருமே இல்லை என்ற தடுமாற்றமோ, இல்லை எல்லாம் சேர்ந்தோ அவளுக்கு அழுகையை வர வைத்தது.
கால்களில் இருந்து ரத்தமும், கண்களில் இருந்து கண்ணீரும் வந்தது சத்யாவுக்கு.
தன்னுடைய சத்துக்கள் அனைத்தும் வடிந்தது போல உணர்ந்தாள் சத்யா.
அப்போது “பாத்து வர கூடாதா? மேலே பாத்துட்டு நீ நடந்து வரும் போதே, கீழே விழ போறேன்னு நினைச்சேன். பாத்தா கீழே விழுந்து கிடக்க”, என்று சொல்லி கொண்டே அவள் அருகில் ஒரு அழகான வாலிபன் நின்றிருந்தான்.
துணைக்கு ஆள் வந்தது நிம்மதியாக இருந்தாலும், அவன் கீழே விழுந்துட்ட என்று சொன்னது ரோசத்தை வர வழைக்க “நான் ஒன்னும் கீழே விழலை”, என்று அழுது கொண்டே சொன்னாள். 
“அப்ப கீழே எதாவது புதையல் தேடுறியா?”, என்று கேட்டான் அவன்.
“என்னை பாத்தா உங்களுக்கு காமெடியா இருக்கா? காலில் முள்ளு குத்திட்டு. இங்க பாருங்க”, என்று காண்பித்தாள் சத்யா.
அதை பார்த்தவன் திகைத்தான். “லூசா நீ? எவ்வளவு பெரிய முள்ளு குத்திருக்கு. ஐயோ ரத்தம் வருது”, என்று சொல்லி கொண்டே அவள் அருகில் அமர்ந்தவன் தன்னுடைய கர்ச்சிப்பை வைத்து ரத்தத்தை துடைத்தான்.
அவன் அக்கரையில் விழி விரித்து அவனை பார்த்தவள் அவன் தன் கால்களை தொட்டதும் அவன் கைகளை விலக்க பார்த்தாள்.,
“அசையாம இரு”, என்றவன் வந்த ரத்தத்தை துடைத்து விட்டு முள் உள்ளே இருக்கிறதா என்று ஆராய்ந்தான்.
கூச்சத்துடன் “ப்ளீஸ் கையை எடுங்களேன்”, என்றாள் சத்யா.
“நீ முதலில் எந்திரி. இங்க தான் டாக்டர் இருப்பாங்க. வா ஒரு இன்ஜெக்சன் போட்டுக்கலாம்”
“முள்ளு குத்துனதுக்கு ஊசியா? அதெல்லாம் வேண்டாம். சரியா போகும்”
“எப்படி சரியா போகும்? எவ்வளவு ரத்தம் வீணாகிருக்கு”
“அதெல்லாம் சரியாகிரும். நீங்க கையை எடுங்க. நான் போகணும்”
“இதே காலோட எப்படி நடப்ப?”, என்று சொல்லி கொண்டே அவள் கையை பிடித்து தூக்கி நிற்க வைத்தான்.
அந்த நிலையிலும் “என் காலோட தான் நடக்கணும். காலையா கடன் வாங்க முடியும்?”, என்று நக்கல் அடித்தாள் சத்யா.
“நல்லா பேசுற? ஆமா யார் நீ?”
“நான் இங்க தான் சேந்துருக்கேன். நீங்க இங்க தான் படிக்கிறீங்களா? இந்த காலேஜ் எப்படி?”
“எப்படின்னா?”
“இல்லை இங்க இருக்குறவங்க எல்லாம் எப்படி பழகுவாங்க? எனக்கு பயமா இருக்கு”
“பயப்படாத. தைரியமா இரு. நல்லவங்களும் இருப்பாங்க. கெட்டவங்களும் இருப்பாங்க. எல்லாருக்கும் பயந்துட்டு இருக்க முடியுமா?”
“ஹ்ம்ம்”
“சரி இப்ப எங்க போற?”
“அந்த ஐயா, இந்த பில்டிங்க்கு போக சொன்னாரு. அங்க தான் பர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் இருக்காங்களாம்”
“அங்க பீஸ் கட்டுறவங்க தான் இருக்காங்க. நீ கட்டிட்டியா?”
“அப்பா முன்னாடியே கட்டிட்டாங்க”
“அப்பறம் என்ன? நேரா கிளாசுக்கு போ”
“அது எங்க இருக்கு?”
“நீ என்ன டிபார்ட்மென்ட்?”
“எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்”
“ஏன் இது எடுத்த? வேற எடுத்துருக்கலாம்ல?”
“ஏன் அப்படி சொல்றீங்க? நல்ல படிப்பு இல்லையா? எங்க சொந்தக்காரங்க இது எடுக்க சொன்னாங்க”
“உங்க வீட்ல யாரும் வேண்டாம்னு சொல்லலையா?”
“எங்க வீட்ல யாருக்குமே என்ன படிப்பு எல்லாம் இருக்குன்னே தெரியாது. எங்க ஊருலே நான் தான் மேலே படிக்க வந்திருக்கேன்”
வெகுளியாக சொன்னவளை ரசித்தவன் “சரி வா நானும் உங்க கிளாசுக்கு தான் போறேன்”, என்று சொல்லி அவளுடைய பையை எடுத்து கொண்டான்.
“இல்லை பரவால்ல நானே கொண்டு வரேன்”, என்று தடுத்து வாங்க பார்த்தாள்.
“பரவால்ல வா. நீ நடக்குறதுக்கே கஷ்ட படுற? ஆனா அந்த வளைவுல உன்கிட்ட கொடுத்துருவேன். அப்புறம் என்கூட சேர்ந்து வர கூடாது”
“ஏன்? நீங்க அங்க தான போறீங்க?”
“அதெல்லாம் அப்படி தான். சரி வா”
“ஹ்ம்ம்”, என்று சொல்லி அவனுடன் நடந்தாள்.
அவன் சொன்னது போல வளைவில் அவளிடம் பையை கொடுத்தவன் “இந்தா உன் பேக். இனி நீ தனியா வா. என் கூட பேசின மாதிரி காட்டிக்காத. அப்புறம் எதுக்கும் டாக்டர் கிட்ட போயிரு. அதோ அங்க இருக்கு பாரு. ரெண்டாவது கிளாஸ். அது தான் உங்க கிளாஸ். ஹாஸ்பிட்டல் போயிரு என்ன?”, என்றான்.
“அட நீங்க வேற? இதை விட பெரிய காக்கா முள்ளு எல்லாம் என்னை குத்திருக்கு. அப்பவே ஒன்னும் ஆகலை. இது சின்ன முள்ளு தான்”
“இது சின்ன முள்ளா? சரி தான். பை”
“நீங்க எந்த கிளாஸ்?”
“நான் மெக்கானிக்கல். சரி நீ வா. நான் போறேன். பை”, என்று சொல்லி விட்டு விருட்டென்று சென்று விட்டான். அவன் அவளை போக சொன்ன கிளாசுக்கு பக்கத்து கிளாசுக்குள் சென்றான் அவன் 
மெதுவாக நடந்து அவன் சொன்ன கிளாஸை அடைந்தவள், உள்ளே போகாமல் வெளியவே நின்றாள். அவன் வருவானா என்று பார்ப்பதற்கு.
ஆனால் உள்ளே போனவன் வெளியே வரவே இல்லை. “ஒரு வேளை அந்த கிளாஸ் அவனோடது தானா? உள்ளே உக்காந்துட்டானா? அப்புறம் எதுக்கு மெக்கானிக்கல்னு சொன்னான்? இந்த கிளாஸ் வெளிய ஈ. சி. ஈ ன்னு போட்டுருக்கே”, என்று யோசித்து கொண்டே தன்னுடைய கிளாசுக்கு உள்ளே சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்தாள் சத்யா.
கிளாஸ் உள்ளே ஒரு பத்து பேர் அமர்ந்திருந்தார்கள். நேராக பெண்கள் அமர்ந்திருக்கும் பக்கம் சென்ற சத்யா, மூன்றாவது பெஞ்சில் அமர்ந்தாள்.
பக்கத்தில் இருந்த இரு பெண்களும் திரும்பி அவளை பார்த்தார்கள்.
அவர்களை பார்த்து பதிலுக்கு சிரித்தாள் சத்யா. அவர்கள் அவளிடம் பேச ஆரம்பித்தார்கள்.
“என்னோட பேரு கோகிலா”, என்றாள் ஒருத்தி.
“என் பேரு கிருத்திகா. உன்னோட பேர் என்ன?”, என்று கேட்டாள் இன்னொருத்தி.
“என் பேரு சத்யா. நீங்க எல்லாரும் எந்த ஊரு?”, என்று சிரித்து கொண்டே கேட்டாள் சத்யா.
“நான் திருச்செந்தூர், கோகிலா சிவகாசி பக்கம். ஆமா நீ எந்த ஊர்?”, என்று கேட்டாள் கிருத்திகா.
“நான் மதுரைல ஒரு கிராமம்”
அதன் பின் அவர்கள் வாங்கிய மார்க், வீட்டில் எத்தனை பேர்? பீஸ் கட்டியாச்சா? கிளாசில் மத்த பசங்க எல்லாரும் எங்க என்று அலசி ஆராய்ந்து எல்லா பக்கமும் சுற்றியது.
அதுவும் அவர்கள் இருவரும் ஹாஸ்டல் என்று சொன்னவுடன் சத்யாவுக்கு பெருத்த நிம்மதியாக இருந்தது.
“அப்பாடி துணைக்கு ஆள் கிடைச்சிருச்சு”, என்று வாய் விட்டு சொன்ன சத்யா “உங்க திங்ஸ் எல்லாம் ஹாஸ்டல்ல வச்சிட்டீங்களா?”, என்று கேட்டாள்.
“நாங்க காலைலே வச்சிட்டோம். ஆனா டிபார்ட்மென்ட் பிரிக்கலை. சும்மா அவங்க சொன்ன ரூம்ல குமிச்சி போட்டுட்டு வந்துருக்கோம். போய் தான் என்னனு பாக்கணும். உன்னோட பொருள் எல்லாம் எங்க?”, என்று கேட்டாள் கோகிலா.
“இங்க ஒருத்தங்க தெரிஞ்சவங்க இருக்காங்க. அப்பாவுக்கு சொந்த காரங்க. அவங்க வீட்ல தான் இருக்கு. இன்னைக்கு இங்க விசாரிச்சிட்டு, நாளைக்கு கொண்டு வரலாம்னு நினைச்சேன்”, என்றாள் சத்யா.
“அதுவும் சரிதான். ஆனா இன்னைக்கே அட்மிசன் போட்டுட்டு போயிரு சத்யா”, என்றாள் கிருத்திகா.
“ஹ்ம்ம் நானும் அது தான் நினைச்சேன். கிளாஸ் விட்ட உடனே உங்க கூடவே வரேன்”, என்று சொன்னவள் அடுத்த நொடி “ஆ”, என்று அலறினாள்.
“என்ன ஆச்சு?”, என்று இருவரும் பதறினார்கள்.
முள் குத்தி இருந்த காலிலே, கோகிலா இடித்ததால் வலி உயிர் போனது.
என்ன நடந்தது என்று காலை பிடித்து கொண்டே அவர்களுக்கு சொன்னாள் சத்யா.
“ஓ சாரி டி. தெரியாம மிதிச்சுட்டேன்”, என்றாள் கோகிலா.
அவள் சொன்ன டி என்ற வார்த்தை சத்யாவை புன்னகை கொள்ள வைத்தது. சிறு சிரிப்புடன் அவளை பார்த்தவள் “பரவால்ல”, என்றாள்.
மனதுக்குள் “பாத்த கொஞ்ச நேரத்திலே டி சொல்ற அளவுக்கு ரெண்டு பேரும் பேசுறாங்க. என்னால எல்லாம் டி சொல்ல முடியாது”, என்று நினைத்து கொண்டாள்.
“சாயங்காலம் ஹாஸ்டல் வரும் போது, எனக்கு ஞாபக படுத்து. என்கிட்ட ஒரு ஆயின்மென்ட் இருக்கு”, என்றாள் கிருத்திகா.
“சரி”, என்ற சத்யாவுக்கு சிறிது நேரத்துக்கு முன்னர் பார்த்தவன் முகம் நினைவில் வந்தது.
அவர்கள் பேசுவதை கவனிக்காமல் “அவன் அந்த கேப்ல எங்க ஓடி மறைஞ்சான். அந்த கிளாஸ் குள்ள தான போனான்? ஆனா அது நம்ம டிபார்ட்மென்ட் ஆச்சே? அப்ப அவனும் இந்த டிபார்ட்மென்ட் தானா? அப்புறம் எதுக்கு மெக்கானிக்கல்ன்னு சொன்னான்?”, என்று மறுபடியும் சிந்தனை அவனை சுற்றியது.
அவள் கையை பிடித்து இழுத்து எழுந்து நிற்க வைத்தாள் கோகிலா.
அப்போது தான் சுயநினைவுக்கே வந்தாள் சத்யா.
“என்ன கனவு கண்டுட்டு இருக்க?”, என்று கோகிலா அடிக்குரலில் கேட்கும் போது “குட் மார்னிங் சிட் அவுன்”. என்று அங்கே ஆசிரியர் பேசிய குரல் கேட்டது.
“ஐயோ சார் வந்தது கூட தெரியாம கனவு கண்டுட்டு இருக்கேன்”, என்று நினைத்து கொண்டு கோகிலாவை பார்த்து அசடு வழிய சிரித்தாள் சத்யா.
அதன் பின் அனைவரையும் அறிமுக படுத்திக் கொள்ள சொன்னார் சதீஸ் சார்.
ஒவ்வொருத்தராக எழுந்து இங்கிலீஷில் பேசும் போது, இங்கே நடுங்க துடங்கி விட்டாள் சத்யா.

Advertisement