Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 26
கல்லூரி வந்து இரண்டு நாட்கள் வரையிலும் கூட சித்திரைச் செல்வன் அங்கில்லை. இவர்கள் எல்லாம்  ஒரே காரில் தான் வந்தார்கள். மானசாவும், ஷில்பாவும் அவர்களின் அறைக்கு சென்றுவிட, சித்திரச் செல்வனும், பாஸ்கியும் அவர்களின் அறைக்கு வந்துவிட, பின் மறுநாள் காலையில் வகுப்புகள் இல்லை, மதியம் போல் தான் என்று பாஸ்கர் தான் அழைத்துச் சொன்னான்.
“தேங்க்ஸ் பாஸ்கி சேட்டா..” என்ற ஷில்பா, நன்கு உறங்கிக்கொண்டு இருந்த மானசாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தானும் மீண்டும் உறங்கிப்போனாள்.
மதியம் போல் தான் இருவரின் உறக்கமும் களைய, அதுவும் கூட விடுதி பொறுப்பாளர் வந்து கதவு தட்டவும் தான் இருவருக்கும் எழும் எண்ணமே வந்தது.
“ரூம் ரொம்ப நேரமா ஓப்பன் பண்ணலையா.. அதான்..” என்று அவர் பார்க்க,
“மதியம் தான் கிளாஸ்..” என்று இவர்கள் பதில் சொல்ல,
“ஓ..!! ஓகே..” என்றுவிட்டு போனார்.
“ச்சே.. படுக்கவும் தான் சிப்ஸ் எவ்வளோ டயர்ட்னு தெரியுது…” என்றவள் சோம்பல் முறித்தபடி, அவளின் அலைபேசி எடுத்துப் பார்த்தாள் அப்பா அக்காவிடம் இருந்து இரண்டொரு மெசேஜ்கள், அதற்கு பதில் அனுப்பிவிட்டு, சித்துவிடம் இருந்து எதுவும் வந்திருக்கிறதா என்று பார்த்தால் எதுவுமே இல்லை.
இதற்கும் அவளின் அலைபேசியில் எடுத்திருந்த அத்தனை புகைப்படங்களையும் அவனுக்கு அனுப்பியிருக்க, அவனும் அதனை கண்டுவிட்டதன் அடையாளம் தெரிய, அவனிடம் பதில் தான் இல்லை.
‘இப்போ கிளாஸ் இருக்குமோ…’ என்று நேரம் பார்த்தாள், இவர்கள் கிளம்பிடவும் வேண்டும் இல்லையா, ஷில்பா குளிக்கச் சென்றிருக்க, மானசா ஒருமுறை சித்துவிற்கு அழைப்போமா என்று எண்ணியவள், பின் வேண்டாம் வகுப்பிற்கு சென்று பார்த்துக்கொள்வோம் என்று விட்டுவிட்டாள்.
இவர்கள் இருவரும் கிளம்பி வகுப்பிற்கு செல்ல, அங்கேயோ யாருமே இல்லை. பாஸ்கியும் இல்லை, சித்துவும் இல்லை.
“என்ன சிப்ஸ் யாருமில்லை..” என்று மானசா கூற,
“வந்திடுவாங்க..” என்று அவள் சொல்லவும், இருவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்திருக்க, மேலும் ஒரு பத்து நிமிடம் கடந்தே பாஸ்கர் வந்தான்.
“சாரி சாரி லேட்டாகிடுச்சா..” என்றபடி.
“இல்ல பாஸ்கிண்ணா கிளாஸா உங்களுக்கு..” என்று மானசா கேட்க,
“இல்ல ஸ்காலர்ஸ் மீட்டிங் இருந்தது..” என்றவன் “ஸ்டார்ட் பண்ணலாமா..??” என்றபடி வகுப்பெடுக்கத் திரும்ப,
‘சித்து எங்கே…’ என்று கேட்க வார்த்தைகள் வந்து தொண்டை வரைக்கும் அடைத்திருந்தாலும், மானசா அதனை கேட்கவில்லை.
எப்படியும் அவனுக்கும் வேறு வேலைகள் இருக்கும்தானே என்று விட்டுவிட, அடுத்த ஒருமணி நேரம் என்பது படிப்பினில் மட்டுமே செல்ல, “நெக்ஸ்ட் டூ டேஸ் ஒரு ஸ்மால் டெஸ்ட் கண்டக்ட் பண்ணிக்கலாம்.. சோ பார் கம்ப்ளீட் பண்ண போர்சன்…” என்று பாஸ்கர் சொல்லவும்,
“நாளைக்கு டெஸ்ட் இப்போ சொன்னா எப்படிண்ணா…” என்று மானசா சீண்ட,
“அதானே..” என்று ஷில்பாவும் கூற,
“ஹச் ஓ டி மார்னிங் தான் சொன்னார்.. இது உங்களுக்கு மட்டுமில்ல டெஸ்ட்.. நாங்க எப்படி நடத்தியிருக்கோம்னு பாக்கவும் தான்..” என்றவன் “காப்பாத்தி விட்ருங்கம்மா…” என்று வேண்டுமென்றே சொல்ல, மூவருக்குமே சிரிப்பு தான்.
நேரம் சென்றதே தவிர சித்திரைச் செல்வன் என்பவனை காணவில்லை என்பது தான் நிஜம். இவர்கள் கிளம்பும் நேரம் கூட வந்துவிட மானசா கேட்டேவிட்டாள் “எங்க பாஸ்கிண்ணா உங்க பிரண்ட்..” என்று.
“அ… அவனா..??!!” என்று பாஸ்கர் பார்க்க,
“ம்ம்..” என்றாள் இவளும்.
“உன்கிட்ட சொல்லலையா??!!”
“என்ன சொல்லலையா??” என்றாள் புரியாது.
“அவன் ஏர்லி மார்னிங்கே ஊருக்கு போயிட்டானே…” என்று பாஸ்கர் சொல்ல, மானசாவிற்கு பக்கென்று ஆனது.
“ஊருக்கா??!!”
“ஆமா மனு… காலைல அவனா எழுந்தான்.. ஊருக்கு போறேன் சொன்னான்.. என்னடான்னு கேட்டேன்.. வந்திடுவேன்டா அப்படின்னு சொல்லிட்டு போறான்.. உன்கிட்ட சொல்லிருப்பான்னு நினைச்சேன்…” என,
‘இல்லையே..’ என்றவளின் உதடுகள் முணுமுணுத்தாளும், ‘என்னானதோ…’ என்று உள்ளம் பதறியது.
கண்கள் அலைப்புற, கழுத்துச் சங்கிலியை திருகிக்கொண்டு நின்றவள் “வே.. வேறதுவும் பிராப்ளம் இல்லையே ண்ணா…” என்றாள் பாஸ்கரிடம்.
“அதெல்லாம் இல்லம்மா.. சும்மா போயிருப்பான்.. வந்திடுவான்..” என்ற பாஸ்கர் அவனின் வேலைகளைப் பார்க்க, மானசாவிற்குத்தான் எப்படியோ ஆனது.
‘அப்படி என்ன அவசரம்…??!!!’ என்று யோசனை போக, சரி அவனுக்கே அழைத்துக் கேட்போம் என்று அழைத்தாள்.
ம்ம்ஹும்.. ‘சுவிட்ச் ஆப்…’ என்று வர, ‘என்னவோ இருக்கிறது…’ என்று உள்ளம் சொல்லியது.
மனது பலதை யோசித்தாலும், சரி மாலை வரைக்கும் பார்ப்போம் என்று பொறுமையாகவே இருந்தாள். மாலை வந்தது, இரவு கடந்தது, மறுநாள் பொழுதும் விடிந்தது, அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை.
‘உடம்பு எதுவும் சரியில்லையோ..’ என்று நினைத்தால், அந்த நினைப்பே அவளுக்கு பயமாய் இருந்தது..
மறுநாள் காலை நேர லேப் என்று பாஸ்கர் சொல்லியிருக்க, போனதுமே அவள் கேட்டது ஒன்றுதான் “என்னாச்சுண்ணா.. அவருக்கு?” என்று.
“ஒண்ணுமில்லயே…” என்று பாஸ்கர் சொல்ல,
“இல்ல போன் ஆப்ல இருக்கு… எனக்கு பயமா இருக்கு பாஸ்கிண்ணா…” எனும்போதே அவளின் குரல் நடுங்க,
“அட.. அதெல்லாம் இல்ல… அவன் நல்லாத்தான் இருக்கான்.. இன்னிக்கு வந்திடுவான். திஸ் வீக் எண்டு எங்களுக்கு எக்ஸாம்ஸ் இருக்கு..” என,
“நிஜமாவா..” என்றாள் மானசா.
“ஆமா மனு.. ஒருவேளை படிக்கணும்ங்கறதுக்காக கூட அவன் போயிருக்கலாம். ப்ரீயா விடு..” என்று சொல்லிவிட்டு பாஸ்கர் நகர, அவளுக்கு இன்னமும் தெளிவு ஏற்படவில்லை.
‘எதுவும் இருக்கக் கூடாது…’ என்று மானசா உருப்போட்டுக் கொண்டு இருக்க, அங்கே சித்திரைச் செல்வனோ அவனின் வீட்டினில், அவனின் அறையினில் குப்புறப் படுத்துக்கொண்டு இருந்தான்.
வந்ததில் இருந்து இப்படித்தான்.. உண்பது உறங்குவது..
வா வா என்றாலும் கூட வராதவன், இப்படி வந்து கிடப்பதை பார்த்து மீனா பதறித்தான் போய்விட்டார்.
“என்னங்க ஆச்சு இவனுக்கு.. விசேசத்துக்கு போறேன்னு போனான். இப்போ இப்படி பண்றான்..” என, பூபதியோ, அவனின் படிப்பினில் இருக்கும் மன அழுத்தங்கள் புரிந்தவராகையால்,
“பரீட்சை வருதுன்னு சொன்னான்ல.. அது கொஞ்சம் டென்சனா இருப்பானா இருக்கும்..” என்று சொல்ல,
“நல்ல படிப்பு.. நல்ல பரிட்சை.. நல்ல டென்சன்… இவன் வயசுல இருக்கவன் எல்லாம் அவனவன் புள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கான். இவன் பரிட்சைக்கு படிக்க டென்சனாகி படுத்திருக்கான்.. எல்லாம் உங்கள சொல்லணும்…” என்று கணவரை வைதவர்,
“செல்வா.. செல்வா…” என்று அழைத்தபடி மீண்டும் மகனின் அறைக்குள் தான் போனார்.
“செல்வா.. டேய்…” என்று மீனா அதட்ட,
“ம்ம்ச் என்னம்மா..” என்றுதான் கண்களை திறந்து பார்த்தான்.
“இப்போ என்னாச்சுன்னு இப்படி படுத்திருக்க.. ஏன் டா இதுக்கு முன்னாடி எல்லாம் பரீட்சை எழுதினது இல்லையா நீ.. அதுக்கா இப்படி வந்து படுத்திருக்க..??” என்று கேட்க,
“ம்மா போ ம்மா.” என்றான் சலிப்பாய்.
“அப்படிலாம் போக முடியாது… நேத்து காலைல வந்தவன். இப்படியே இருந்தா என்னா அர்த்தம்..??” என்றார் விடாது.
“ம்மா.. இப்போ என்னதான் செய்ய சொல்ற..” என்றவன் கடுப்பாய் எழுந்து அமர, அவனின் முகமே ஒருமாதிரி இருக்க, கண்களோ சிவந்து இருந்தது..
“டேய் என்னடா??!!” என்று பதறி அவனின் அருகே அமர்ந்தவர், “என்னாச்சு செல்வா ?? எதுவும் முடியலையா.. படிக்க கஷ்டமா இருக்கா??” என,
“அதெல்லாம் இல்லம்மா..” என்றான் ஒரு கசந்த குரலில்.
“பின்ன என்னடா??” என்று வாஞ்சையாய் கேட்க, அவனோ வாகாய் அம்மாவின் மடியினில் படுத்துக்கொண்டான்.
‘அட….!!’ என்று அதிசயமாய் பார்த்தவர், மகனிடம் எதுவும் கேட்கவில்லை அவராகவே சொன்னார்
“மனசுல எதையும் போட்டு குழப்பிட்டு இருக்காத செல்வா.. இப்போ நமக்கு பெருசா தெரியுற எதுவுமே எப்பவும் பெருசா தெரியும்னு சொல்ல முடியாது. கடந்து போயிடும்.. இல்ல நம்ம கடந்து வந்திடுவோம்.. ஒரு முடிவு எடுக்கணும்னா நிதானமா யோசிச்சு முடிவு எடு.. அது எதுக்கா இருந்தாலும் சரி.. ஆனா நீ எடுக்கிற அந்த முடிவுகளோட எல்லாத்தையும் நீ தான் தாங்கனும். அது லாபமோ நஷ்டமோ.. இல்லை வலியோ வேதனையோ.. எது எப்படி இருந்தாலும் உன்னோட நானும் அப்பாவும் இருப்போம்..” என்று தலைகோதிக்கொண்டே சொல்ல,
அம்மா சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும், அவனுக்கு அப்படியொரு தெளிவு கொடுத்தது..
எத்தனை நிதர்சனமான வார்த்தைகள் இவை..!!
“சரியா செல்வா…” என்று மீனா கேட்க, “ம்ம் சரிம்மா…” என்றவன் அடுத்து எழுந்து கொண்டான்.
நிறைய யோசித்தான்.. ஆனால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. இப்போது சற்றே தெளிவு கிடைக்க, “நான் குளிச்சிட்டு வர்றேன்..” என்று எழுந்து போனான்.
குளித்து முடித்து வருகையிலோ மீனா, பூபதியிடம் பேசுவது கேட்டது “மகன் பணக்கார வீட்டு பொண்ண விரும்புறான்னு தெரிஞ்சதும் ஆகா அடிச்சது லாட்டரின்னு கட்டி வச்சா.. இப்போ பாருங்க வந்தவளும் நிம்மதியா இல்ல.. இவளும் நிம்மதியா இல்லை..” என்று சொல்லிக்கொண்டு இருக்க,
என்னவோ இவனுக்கு சுருக்கென்று மனதில் தைத்தது..
யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. அதெல்லாம் அவனுக்குத் தேவையும் இல்லை. மீனா பேசிக்கொண்டே தட்டில் போட்டுக் கொடுத்ததை வாங்கிக்கொண்டவன் அங்கேயே அமர்ந்தும் கொள்ள,
“வசதியான வீட்டு பொண்ணுன்னா அப்படித்தான் இருக்கும். வந்ததுமேவா இவளுக்கு தொண்டு செய்வா…” என்றவர், “இன்னொரு தோசை வைக்கவா??” என்றார் இவனிடம்.
“வேணாம்..” என்று தலையை ஆட்டியவன், அமைதியாகவே உண்ண,
“வானத்துல பறக்குற பறவையே கொண்டு வந்து கூண்டுல அடச்சு வச்சா அது நிம்மதியா இருக்குமா?? அந்த பொண்ணு என்ன செய்யும்.. இல்ல இவளாவது பையனும் மருமகளும் சந்தோசமா இருக்கட்டும்னு தனியா விடனும்.. அதுவும் இல்லை..” என்று பேச,
“விடு மீனா இது எதுக்கு உனக்கு..” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.
“அது எப்படிங்க.. நம்ம செல்வாவ என்ன என்ன பேசுவா இவ.. இப்போ இவ வீட்லயே விடியுதுன்னா நான் எப்படி சும்மா விட..” என்று மீனா பேசிக்கொண்டே போக, சித்திரைச் செல்வனுக்கு அதற்கு மேல் அதனை கேட்கும் தெம்பு இல்லை.
மானசாவையும், மீனாவின் வார்த்தைகளையும் ஒன்றோடு ஒன்று பொருந்திப் பார்க்க, அதற்குமேல் அவனால் யோசிக்க முடியவில்லை. தட்டில் அப்படியே கை கழுவி, எழுந்திட “என்னடா…” என்று மீனா கேட்க, பூபதியும்,
“என்ன செல்வா..” என்றார்.
“சரியா தூங்காதது எப்படியோ இருக்கு..” என்றவன், திரும்ப அவனின் அறைக்கு வர, மீனா இப்போது கணவர் முகம் பார்க்க “நான் பேசிக்கிறேன்..” என்றார் பூபதியும்.
சொன்னது போலவே சிறிது நேரத்தில் மகனைத் தேடி வர அவனோ கிளம்பிக்கொண்டு இருந்தான்.
“என்ன செல்வா கிளம்பிட்டியா??” என,
“ம்ம் ஆமாப்பா… கொஞ்சம் வேலை இருக்கு..” என்றவன், அவரின் முகம் கூட பார்க்கவில்லை. அப்பா கண்டுகொள்வார் என்று நினைத்தானோ என்னவோ..
பூபதி மௌனமாய் மகனின் முகம் பார்த்தவர் “என்கிட்டே எதுவும் சொல்லனுமா செல்வா??” என,
“அ.. அதெல்லாம் இல்லப்பா..” என்றான் வேகமாய்.
“ம்ம் சரி.. உனக்கு நாங்க சொல்ல வேண்டியது இல்லை.. எதுன்னாலும் பார்த்து செய்.. அவ்வளோதான்.. அதையும் மீறி என்கிட்டே எதுவும் பேசணும்னா சொல்லு..” என்று அவன் முதுகினில் கை வைக்க,
“நான் பார்த்துக்கிறேன் ப்பா…” என்று பெயருக்கு ஒரு புன்னகை சிந்திவிட்டு கிளம்பிவிட்டான்.
மனம் தெளிவுகொண்டு கிளம்பினானோ இல்லையோ, ஒரு முடிவு கொண்டு கிளம்பிவிட்டான்..!!
காதல் என்ற பெயரில் மானசாவின் உணர்வுகளோடு அவன் விளையாடத் தயாராய் இல்லை. அது இப்போதாகினும் சரி, இனி எப்போதாகினும் சரி.. அந்த முடிவு அவனுள் திண்ணமாய் நிலைபெற்றது.
அதே திடத்தோடு தான் அவன் கிளம்பியும் சென்றான்..
ஏன் போனேன் என்றும் சொல்லவில்லை, வந்தேன் என்றும் யாரிடமும் சொல்லவில்லை..
வந்தான், அவனின் வகுப்புகளுக்கு சென்றான், அவனின் படிப்பினைப் பார்த்தான். இவ்வளவே. மானசாவிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வர “எக்ஸாம்ஸ் முடியட்டும் ம.. மானசா..” என,
“ம்ம் உங்களுக்கு ஒன்னும் இல்லைதானே..” என்று அவளின் குரல் பரிதவிப்பாய் ஒலிக்கையில், அவனுக்கு தொண்டை அடைத்தது.
“இ.. இல்ல..” என,
“அது போதும்.. நீங்க படிங்க.. எக்ஸாம்ஸ் முடியட்டும்.. பார்த்துக்கலாம்..” என்றுவிட, அதன் பின்னும் கூட அவன் அவளிடம் இருந்து ஓடி ஒழிந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒருவழியாய் நாட்கள் நகர்ந்து சித்திரைச் செல்வனின் பரிட்சைகள் எல்லாம் முடிய, அந்த நாளுக்காகவே மானசாவும் காத்திருக்க, அவள் காத்திருந்த தருணமும் வந்துவிட்டது.
இடைப்பட்ட நாட்களில் மானசாவிற்குமே ஒரு வித்தியாசம் தோன்றத்தான் செய்தது. பரீட்சை இருக்கிறது, படிக்கவேண்டும் எல்லாம் சரிதான். ஆனால் அவன் ஏன் இப்படி கண்ணில் கூட படாது இருக்கவேண்டும்??!!
‘என்னவோ நடக்கப் போகிறது..’ என்று தோன்றிக்கொண்டே இருக்க, சரியாய் அது நடந்தும் விட்டது..
அவளின் உள்ளுணர்வு சொன்னது சரியாய் தான் இருந்தது.
“மனு… நமக்குள்ள இது செட்டாகாது…” என்றவன் “நா.. நான் உனக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லை..” என, அவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.
“என்ன சொல்றீங்க சித்து சர்…”
“எஸ்… நல்லா யோசிச்சு பார்த்துட்டேன்.. உனக்கு இந்த லைப்.. நான்.. இதெல்லாம் செட்டாக மாட்டோம் மானசா..” என, கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் வார்த்தைகளை தன்னுள் கிரகித்தவள், அதன் அர்த்தம் புரியத் தொடங்கவும், ஆடித்தான் போனாள்.
அவன், எதற்காக இந்த முடிவு என்று விளக்கத்தான் முயன்றான், அவளோ அதனை கேட்கவும் தயாராக இல்லை.
‘வேண்டாம்…’ என்ற பிறகு விளக்கங்கள் என்ன??!!
விளக்கம் சொன்னால் மட்டும் மனம் சமாதானம் ஆகிடுமா??
உன் விளக்கங்களை எல்லாம் நீயே வைத்துக்கொள்.. நான் என்ன செய்ய வேண்டும் என்பது என் முடிவு…
அவனிடம் நின்று விவாதிக்கக் கூட அவளுக்கு எண்ணம் வரவில்லை..
கிளம்பிவிட்டாள்.. அவ்விடம் விட்டும்.. அவனை விட்டும்.. அந்த ஊரில் இருந்தும்.
அறைக்கு வந்தவள் “சாரி சிப்ஸ்.. நான்.. நான்..” என்று எதுவோ சொல்ல வந்தவள் “இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது…” என்றுவிட்டு, ஷில்பா என்னவென்று கேட்க கேட்க, அவளின் ஹேன்ட் பேக்கினை மட்டும் எடுத்துக்கொண்டு
“ரூம் வெக்கேட் பண்ண டாடி வருவார் சிப்ஸ்.. கொஞ்சம் ஹெல்ப் மட்டும் பண்ணிடு..” என்றவள் கிளம்பியே விட்டாள்.

Advertisement