Advertisement

                        கொஞ்சும் ஏழிசை நீ – 18
“ம்மா….” என்று சித்திரைச் செல்வன் சத்தம் கொடுக்க, யாரும் வீட்டினில் இருக்கும் அரவமே இல்லை.
வீட்டின் வாசல் வேறு திறந்து இருக்க, “ப்பா…” என்றதொரு அடுத்த அழைப்பு கொடுக்க, அப்போது அங்கே பதில் இல்லை.
‘எங்க போனாங்க…’ என்று நடு கூடத்தில் நின்று சுற்றி முற்றிப் பார்க்க, “யார் வேணும்???” என்றபடி உள்ளிருந்து வந்தாள் மானசா.
நீளமான ஸ்கர்ட் மற்றும் ஒரு டாப் போட்டிருக்க, அவள் நடந்து வந்ததே, மிதந்து வந்தது போலிருந்தது சித்திரைச் செல்வனுக்கு. மானசாவோ, உள்ளுக்குள் இருக்கும் கடுப்பினை எல்லாம் மறைத்து, “யார் நீங்க?? என்ன வேணும்..??” என்று கேட்க,
“அப்பா அம்மா எங்க??!!” என்றான் சித்து.
“யாரோட அப்பா அம்மா??!!” என்று கேட்டபடி, மானசா அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்துவிட,
“ம்ம்ச் மனு..” என்றவன், பொத்தென்று மற்றொரு இருக்கையில் அமர, அவர்கள் இருவரையும் சுற்றி பெரும் நிசப்தமாய் இருந்தது.
மானசா எதுவுமே பேசாது, சித்திரைச் செல்வனை மட்டுமே பார்த்தபடி இருக்க, எத்தனை நேரம் அவனால் அதனை தாங்கிக்கொள்ள முடியும். அதுவும் மனதில் அவள்பால் உணர்வுகள் இருக்கையில்.
“இப்போ என்ன இப்படியொரு பார்வை??!!” என்று அவன் கேட்டாலும், அவனின் பார்வை அவளை நோக்கி அல்ல.
“ம்ம் இன்னும் நீங்க பதில் சொல்லலை.. அதான்..” என்றவள், “என்ன திடீர்னு இந்த பக்கம்..” என்றாள்.
“இப்போதான் கொஞ்சம் ப்ரீ.. நைட் ஸ்டே பண்ணிட்டு மார்னிங் அகைன் கேம்ப் போயிடுவேன்..” என்றவன், “எங்க யாரும் காணோம்..” என,
“அங்கிள் அண்ட் ஆன்ட்டி கோவிலுக்கு போயிருக்காங்க..” என்றாள்.
“ஓ!!! நீயும் போயிருக்கலாமே..”
“கப்பிள்ஸ் போறப்போ கூட நான் ஏன் கரடி போல..” எனும் போதே அவன் முறைக்க,
“வீட்ல நான் இருக்கிறதுக்கே, கேட்கிறவங்களுக்கு எல்லாம் ஆன்ட்டி ஒவ்வொரு ரீசன் சொல்லி சமாளிக்கிறாங்க.. இதுல நான் அவங்களோட கோவில் எல்லாம் போனா அவ்வளோதான்..” என்றாள் பாவனையாய்.
அன்று விட்டு சென்றதை விட, இன்று மானசாவிற்கு முகம் தெளிவாய் இருக்க, பழையபடி அவள் திடமாய் இருப்பதாகவே அவனுக்குப் பட “ஏன்.. என்ன சமாளிக்கணும்??” என்றான் புரியாது.
அவனின் ஆராய்ச்சி அவள் மீது இருந்தமையால், அவளின் பேச்சினை அவன் சரியாய் கண்டுகொள்ளவில்லை. அதனால் திரும்பக் கேட்க, “ம்ம் எல்லாம் உங்கனால தான்..” என்றாள் பல்லைக் கடித்து.
“வாட் நானா??!! நான் என்ன பண்ணேன்…”
“என்ன பண்ணல…??” என்றவள், “உங்களை நான் என்னவோ நினைச்சேன்.. பட் நீங்க சரியில்ல சாரே…”என்றாள் இறுகிய குரலில்.
மானசா எதனை சொல்கிறாள் என்று யூகித்தவன் “ஷ்.. மானசா.. இங்க எல்லாம் அப்படித்தான்.. உனக்கு இங்க செட் ஆகாதுன்னும் தெரியும்.. பட் உனக்கு ஹெல்த் சரியாகணும் இல்லையா…” என்று அவன் இறங்கி வந்து பேச,
“செட் ஆகலைன்னு நான் சொன்னேனா??!!” என்றாள், அவனின் கண்களைப் பார்த்து.
பார்வை ஒன்றோடொன்று பொருந்திக்கொள்ள, சித்திரைச் செல்வன் மௌனமாய் இருக்க “எனக்கு இங்க இருக்க ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள் உணர்ந்து.
அவள் கண்கள் காட்டிய ஆவலும், அவள் முகம் காட்டிய பாவனையும் சித்திரைச் செல்வனுக்கு அவளின் உள்ளத்தை புரிய வைக்க ‘நோ சித்து.. அவளை பேச விடாத.. எதுவும்.. எதுவுமே அவளும் சொல்ல வேண்டாம்.. நீயும் சொல்லிக்க வேண்டாம்..’ என்று அவனின் அறிவு எட்டிப் பார்க்க,
‘அட.. பேசு சித்து.. இப்போவாது மனசு விட்டு பேசேன்.. இந்த நேரம் இனி உனக்கு அடுத்து கிடைக்குமோ என்னவோ??’ என்று அவனது உள்ளம் ஆசை மூட்டியது.
“எந்தா சாரே.. அப்படியொரு பார்வை…” என்று மானசா ஒரு சிரிப்பினோடு கேட்க,
“நத்திங்..” என்றவன் வேகமாய் எழுந்துவிட,
“அட… என்னாச்சு…” என்றாள்.
“ஒண்ணுமில்ல.. நீ டோர் லாக் பண்ணிக்கோ.. நா.. நானுமே கோவில் போயிட்டு வர்றேன்..” என்று சித்திரைச் செல்வன் கிளம்ப முயல,
“என்னோட தனியா இருக்க பயமா??” என்ற அவளின் கேள்வி அவனை அப்படியே நிற்க வைத்தது.
“அப்படித்தானே…” என்று கேட்டவள், அவனின் முன்னே வந்து நின்று “ம்ம் சொல்லுங்க.. அப்படியா??” என்று ஓர் கூர் பார்வை பார்க்க,
“ஷ்..!! இப்போ உனக்கு என்ன வேணும் மனு..” என்றான் எரிச்சலை அடக்கி.
“ஒண்ணுமில்ல.. உங்களோட சண்டை போடணும் நினைச்சேன்.. பட் மைன்ட் செட் ஆகல.. சோ நான் கொடுக்கிற காபி மட்டும் குடிச்சிட்டு என்னவோ பண்ணுங்க..” என்றபடி அவள், அவன் வீட்டின் அடுக்களை நோக்கிச் செல்ல,
‘இவ என்ன இப்படியாகிட்டா..’ என்று எண்ணியவனின் கால்களும் தன்னப்போல் அவளின் பின்னே சென்றது.
பால் ஏற்கனவே காய்ச்சி வைத்திருக்க, டிக்காசனும் இருக்க, அவனுக்காக கலந்தவள் “நீங்க ரொம்ப சுகர் போட்டுக்க மாட்டீங்களாமே..” என்றபடி காபி கலக்க,
“அம்மா சொன்னாங்களா..” என்றான்.
“ம்ம்.. சமைக்கும் போதெல்லாம் உங்களுக்கு இது புடிக்கும்.. அது புடிக்கும்னு சொல்லிட்டே தான் செய்வாங்க..” என்றவள் அவனுக்கு ஏற்றவிதமாய் காபி கலந்து கொடுக்க, அதனை வாங்கிப் பருகியவனுக்கு அப்படியே மீனா கலந்து கொடுப்பது போலவே இருக்க,
“ம்ம்.. பக்கா..!!!” என்றான் ரசித்து ருசித்து.
அந்த நிமிடம், அவன் முகத்தினில் தோன்றிய மன திருப்தி பாவனை, அவளை அவன்மீதே பார்வை செலுத்த வைக்க,
“சாரே…” என்றாள் மென்மையாய்.
“ம்ம்…” என்றவன், என்ன என்பது போல் பார்க்க, 
“ரொம்ப தேங்க்ஸ்..” என்றாள் இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று கோர்த்தபடி.
“எதுக்கு??!!” என்றவனின் நெற்றி சுருங்க,
“நீங்க எதுக்காக என்னை இங்க ஸ்டே பண்ண வச்சீங்கன்னு எனக்குத் தெரியாது.. பட்.. ஐ ஜஸ்ட் லவ் டூ லிவ் ஹியர்..” என்றதும், சித்திரைச் செல்வனின் இதயம் பக்கென்று நின்று பின் துடித்தது.
பருக்கிக்கொண்டு இருக்கும் காபியின் சூட்டினை அவனின் நா மட்டுமே உணர்ந்துகொண்டு இருக்க, இப்போது உடல் முழுவதும் ஒரு உஷ்ணம் பரவியது.
அவளின் பேச்சு கொடுத்த பதற்றம்.
எதை எல்லாம் அவளும் சரி, தானும் சரி பகிரவே கூடாது என்று அவன் எண்ணியிருந்தானோ, அது ஆரம்பித்தாகிவிட்டது என்ற பதற்றம் அவனுக்குத் தொற்றிக்கொள்ள, வேகமாய் தன் எண்ணங்களை உதறியவன்,
“அதுக்காக.. நீ இங்கயே இருக்க முடியுமா?? கோர்ஸ் முடிஞ்சதும் கிளம்பனும் தானே…” என்றான் இதெல்லாம் பெரிய விசயமா என்பதுபோல்.
“ம்ம் கிளம்பலாம் தான்.. பட் இங்கயே நான் வேற ஏதாவது கோர்ஸ் எடுக்கலாம்னு இருக்கேன்..” என்று மானசா சொல்லவுமே, அவனுக்கே காபி தொண்டையில் சிக்கிக்கொண்டது போல் ஓர் உணர்வு.
மிகவும் கடினப்பட்டே விழுங்கியவன், டம்ப்ளரை வைத்துவிட்டு “நீ என்னவோ பண்ணு..” என்று அங்கிருந்து வெளிவர பார்க்க,
“ஆன்ட்டி அங்கிள் கிட்ட கேட்டுட்டு ஹாஸ்டல் வெக்கேட் பண்ணிட்டு இங்க இருந்து டெய்லி காலேஜ் வரலாம்னு இருக்கேன்…” என்று அவள் சொன்னது மேலும் ஒரு பேரிடியாய் இருக்க,
“ஹேய்..!! லூசா நீ..” என்று கத்திவிட்டான் சித்து.
அவனின் கோபம் கலந்த குழப்ப முகத்தினைப் பார்த்தவள் “ஹா.. ஹா.. டென்சன் ஆகிட்டீங்களா.. செம.. சூப்பர்…” என்று விரல்களை மடக்கிச் சொன்னவள்,
“இப்படித்தானே இருக்கும் என்னை நீங்க இங்க விட்டுட்டு போனதும்  எனக்கும்..” என்றாள் குற்றம் சாட்டும் பார்வை பார்த்து.
‘ஹப்பாடி..!!! இடியட் ப்ளே பண்ணிருக்கா…’ என்று கடிந்தாலும் ஒரு நிம்மதி பரவ, “ம்ம்ம் எனக்கு நிஜமாவே வொர்க் மானசா..” என்றான், அங்கிருந்த திண்டில் அமர்ந்து.
“ம்ம் ஆனா எனக்குமே இங்க நிஜமா பிடிச்சிருக்கு சாரே.. அமைதியான லைப்.. பந்தா.. படோடபம்.. இப்படி எதுவும் இல்லாம ஒரு இயல்பான வாழ்க்கை.. இது என் மனசுக்கு ரொம்ப அமைதி கொடுக்குது…” என்றவள்,
“நீங்க ரொம்ப லக்கி..” என்றாள்.
“ஏன்??!!”
“ஏன்னா நீங்க இங்கதானே இருப்பீங்க.. அதான்…” என்றபடி அவளும் அவனருகே அந்தத் திண்டில் அமர, சித்துவிற்கு எழும் எண்ணம் வரவில்லை.
“இந்த ஊரு… இந்த வீடு.. ஆன்ட்டி.. அங்கிள்.. இவங்களோட லைப் ஸ்டைல்.. எல்லாமே.. மானசாக்கு அவ்வளோ பிடிச்சிருக்கு..” என,
“அப்போ என்னை??!!” என்று கேட்டுவிட்டிருந்தான் சித்து.
அவனையும் மீறி அந்த கேள்வி வந்துவிட, மனதோ இந்த சூழலை மாற்ற விரும்பவில்லை அவனுக்கு. அவனின் கேள்வி கண்டு, அவன் முகம் பார்த்தவள் ஒரு புன்னகையோடு “ம்ம்ம் நீங்க கண்டுபிடிங்க பார்க்கலாம்..” என்றாள், ஒரு புதிர்போல.
“என்னது??!!” என,
“எனக்கு உங்களை பிடிக்குமான்னு நீங்க கண்டுபிடிங்க பார்க்கலாம்..” என்று மானசா திரும்ப சொல்ல,
“முடியாதுன்னு சொன்னா…” என்றான், அவனும் அவள் சொன்ன தொனியில்.
“சொல்லித்தான் பாருங்களேன்..” என்றவள், காலினை ஆட்டியபடி இருக்க “கால் ஆட்டக் கூடாது மனு..” என்றான் சித்து லேசாய் கண்டிக்கும் பாங்கில்.
“ம்ம்.. இதான்.. இதுதான்… இதே தான்… உங்களை எனக்கு ரொம்ப பிடிக்க வச்சிருக்கு.. நீங்க உரிமையா கண்டிக்கிறது.. எங்க விபரம் தெரிஞ்சு அம்மா இல்லை.. இருந்திருந்தா அப்போவும் நான் இப்படியே தான் இருந்திருப்பேனா தெரியாது.. அப்பாவும் அக்காவும் எப்பவுமே எனக்கு பிரண்ட்ஸ் தான் முதல்ல.. அடுத்துதான் எதுவுமே.. கண்டிக்கிற அளவுக்கு எல்லாம் நானோ அக்காவோ நடந்ததில்லை…
அப்பா ஒவ்வொன்னும் எங்களுக்காகத்தான் செய்வார்.. எல்லாமே இருக்கு.. ஆனாலும் ஏனோ இங்க வந்தப்புறம் எனக்கு அம்மா நியாபகம் அடிக்கடி வரும்…” என்றவளின் பேச்சு லேசாய் பிசிறடிக்க,
“ஷ்..!! மனு.. கஷ்டமா இருந்தா எதுவும் சொல்லாத..” என்றான் ஆதரவாய் அவள் கரம் வருடி.
“இல்ல.. பேசனும் போல இருக்கு..” என்றவள், தன் கரத்தின் மீதிருந்த அவனி கரம் மீது அவளுடைய மற்றொரு கரத்தினையும் வைத்துக்கொள்ள, சித்துவிற்கு உள்ளே ஒரு சிலிர்ப்பு..
“உங்களை பர்ஸ்ட் டைம் பார்த்தப்போவே எதோ ஒரு ஸ்பார்க்.. ஆனா நீங்க என்னை ட்ரீட் பண்ண விதம் எனக்கு பிடிக்கல.. சோ நானும் உங்களை மதிக்கல.. ஆனாலும் ஆன்ட்டிக்கு ஆப்ரேசன் சொன்னப்போ இங்க வரணும்னு அப்படியொரு பிடிவாதம் எனக்குள்ள.. வந்தா அப்போவும் நீங்க சரியா பேசலை.. எனக்கு செம கோவம்.. அந்த டைம் எனக்கு என் அம்மாவோட நியாபகம் நிறைய வந்தது..
அம்மா இருந்திருந்தா அவங்க இப்படிதான் என்னோட பேசிருப்பாங்களா?? அப்பாவும் அம்மாவும் இப்படித்தான் சேர்ந்து உக்கார்ந்து பேசி சிரிப்பாங்களா.. நானோ அக்காவோ அவங்களோட எப்படி இருப்போம் இப்படின்னு எல்லாம் என்னோட மனசுக்குள்ள நிறைய தாட்ஸ்..
இதெல்லாம் நான் அப்பாக்கிட்டயோ, அக்காக்கிட்டயோ சொல்ல முடியாது.. அவங்க பீல் பண்ணுவாங்க.. ஓகே.. நீங்க கொஞ்சம் நல்லா பேசினா உங்ககிட்ட சொல்லணும் நினைச்சேன்.. ஆனா அதுக்குள்ள என்னை நீங்க திட்டிட்டீங்க..    பட் தனு தான் சொன்னா.. உன்னை அவர் சரியா ட்ரீட் பண்ணலைன்னா எப்பவோ உன்னை கம்ப்ளைன்ட் பண்ணிருக்கணும்.. யாராவது சார்க்கிட்ட கோவிச்சிட்டு வீட்டுக்கு வருவாங்களா அப்படின்னு..
அப்போதான் எனக்கும் புரிஞ்சது.. நீங்க என்னை இல் ட்ரீட் பண்ணலை.. நான் தான் சம்டைம் புரிஞ்சுக்காம நடந்துக்கிட்டேன் அப்படின்னு…” என்று மானசா பேச பேச, சித்திரைச் செல்வனின் உறுதியும் கரைந்து கொண்டு இருந்தது.
“பீல் ப்ரீ மனு..” என்றவன், அவளின் பிடியில் இருந்து தன் கரம் விடுவித்து, அவள் தலை கோத,
“ம்ம்… நீங்க இதோ இப்போ எனக்கிட்ட காட்டுற கேர்.. எனக்கு கொடுத்த ஸ்பேஸ்… சின்ன விசயமா இருந்தாலும் கூட எனக்காக நீங்க பண்ற எல்லாம் சேர்ந்து என்னவோ ஒன்னு சாரே..” என்றவள், பேச்சினை நிறுத்தி, மீண்டும் அவன் முகம் பார்க்க, மானசாவின் விழிகளில் நீர் படலம் இருக்க,
“வேண்டாம் மனு.. நீ எதுவும் ரொம்ப எல்லாம் யோசிக்காத.. ரிலாக்ஸ்…” என்று அவன் ஆதரவாய் அவள் முதுகினை வருட,
“ஏன் ரிலாக்ஸ் பண்ணனும்.. இந்த பீல் கூட எனக்கு புடிச்சிருக்கு.. ஐ மீன்.. உங்க மேல எனக்கு எதோ ஒன்னு இருக்கு.. ஒரு பிடித்தமா.. இல்ல பிடிவாதமா எனக்கு சொல்ல தெரியலை.. ஆனா எல்லாம் தாண்டி எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. அது ட்ரூ.. இதுக்கு நேம் என்ன எல்லாம் எனக்கு சொல்ல தெரியலை.. ஆனா நிஜமா உங்கனால எனக்குள்ள ஒரு டிஸ்டர்பன்ஸ் இருக்கிறது நிஜம்..” என்று அவள் சொல்லியே விட்டாள்.
எது நடந்துவிடக் கூடாது என்று சித்திரைச் செல்வன் இத்தனை நாள் தன் உணர்வுகளை அடக்கி வைத்தானோ, அதனை ஒன்றுமேயில்லை என்பதனைப் போல ஆக்கிவிட்டாள் மானசா.
அவள் அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டாள். அவனோ அவள் கொட்டியதை அள்ளிக்கொள்ளவும் முடியவில்லை, போகட்டும் என்று விட்டுவிடவும் முடியாது அவன் தவித்துக்கொண்டு இருக்க,
“நீங்க சொல்லுங்க சாரே..” என்றாள், கண்களில் ஆவலும் ஆசையும் காட்டி.
“எ.. என்ன சொல்ல??” என்று கேட்டவனின் குரல் கரகரக்க,
“என்னை புடிக்குமா சொல்லுங்க??” என்றாள், அவனை நோக்கி திரும்பி அமர்ந்து.
ஏற்கனவே அந்த சிறிய திண்டில் இருவரும் அருகருகே அமர்ந்து இருக்க, இப்போ அவள் அவனை நோக்கி வேறு திரும்பி அமர்ந்திட, அது அவனுக்கு மேலுமோர் அவஸ்தை கொடுக்க, அவனால் விலகிடவே முடியாது போனது தான் விந்தை.
“இப்போ ஏன் இதெல்லாம்..” என்று அவன் பேச்சினை மாற்ற முயல,
“ம்ம்ஹும்.. நீங்க சொல்லணும்..” என்றாள் பிடிவாதமாய்.
“விடு மனு.. வேற பேசு..” என,
“ஏன்.. ஏன்…” என்றவள் “சோ.. என்னை பிடிக்காது அப்படித்தானே..” என்றவள், வேகமாய் எழ,
“ம்ம்ச் அதெல்லாம் இல்ல..” என்றவன், அவள் கை பிடித்து தன்னருகே அமரச் செய்ய, மேலும் அங்கே நெருக்கம் கூடித்தான் போனது.
கிட்டத்தட்ட, அருகே அமர்கிறேன் என்று அவனின் ஒரு கால் தொடை மீது மானசா அமர்ந்திருக்க, அவள் கரமோ அவன் பிடியில் இருக்க, இருவரின் தேகமும் ஒன்றோடொன்று உரசியபடி கதை பேச, இருவரின் பார்வையும், அப்படியே பின்னிக்கொண்டது.
“சாரே…” என்று அவள் அழைக்கும் குரல் அவனுக்கு எட்டியதா தெரியாது, ஆனால் அவனோ “மனு..” என்று இதழ் அசைக்க, அதற்கும் அவளின் “சாரே…” என்று இதழ் அசைப்பு அவன் பார்வையை தன் பக்கம் இழுக்க, சித்திரைச் செல்வனின் கரம், அவளின் கன்னம் பற்ற, மானசாவோ கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
இதயம் வேகமாய் துடிக்கத் தொடங்கியதோ இல்லை, மூடிய இமைகளும் படபடக்கத் தொடங்கியதோ, இல்லை அவளின் இதழ்கள் தான் நடுங்கத் தொடங்கியதோ அவளுக்கே தெரியவில்லை, ஆனாலும் சித்திரைச் செல்வனின் நெருக்கம் மட்டும் உணர முடிய, அவனோ, தன்னிலை முற்றிலும் மறந்து தான் போனான்.
பிடித்து பிடித்து பிடிவாதமாய் வைத்திருந்த அவனின் பிடிவாதங்கள் எல்லாம், பிடி தளர்ந்து போனது சட்டென்று.
அவனின் உறுதிகளை எல்லாம் பஸ்பமாக்கிவிட்டு காதல் தலைதூக்க, மெது மெதுவாய் அவனின் உஷ்ன உதடுகள், மானசாவின் ஈர இதழ்களை தன் வசமாக்கத் துடிக்க, அந்த இதழ் தீண்டலில் இருவருக்குமே புரிந்துபோனது ஒருவரை ஒருவர் மற்றவர்க்கு எத்துனை பிடிக்கும் என்பது..

Advertisement