Advertisement

8

இந்திரஜித்தின் வலது கை ஸ்டியரிங் வீலை வளைத்து வளைத்து திருப்பவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் குழலி. கோபமாக வந்தது அவன் மேல் மட்டுமல்ல அவளின் அன்னையின் மீதும் தான்.

‘இத்தனை மாசமா என்னைத் தேடி வந்து பார்க்கணும்ன்னு தோணலை. அவர் வான்னு கூப்பிட்டா நான் போய்டணுமா’ என்று அவள் மனம் கேள்விக் கேட்டது அவளை.

 

திருவாதவூர் அதுவே அவளின் சொந்த ஊர், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் அது. திருவாதவூர் அதன் பெயர், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகரின் ஊர் என்றால் சட்டென்று விளங்கும்.

 

பெங்களூரில் இருந்து அவளின் சொந்த ஊரான திருவாதவூருக்கு வந்த போது ஏதோவொரு வீம்புடனும் கோபத்துடனும் தான் வந்திருந்தாள்.

 

அது சில நாட்கள் வரை நீடிக்கவே செய்தது. ‘என்னை கூட்டிட்டு வந்து விடலை, போன்னு சொல்லிட்டாங்க’ என்று சிறுபிள்ளை கோபமாக மட்டுமே இருந்தது.

 

அருகாமை நெருக்கத்தை கொடுக்கும். பிரிவோ நெருக்கத்தை கெடுக்கும். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் பெரிதாய் அன்னியோன்யமாய் வாழ்ந்திருக்கவில்லை என்பதால் இங்கு பிரிவு விலகலை அதிகப்படுத்தியது.

 

அவள் கல்லூரி சேர்ந்த பின்பு பெரிதாய் சில மாற்றங்கள் அவளுள். இந்தரிடம் அவள் கொண்ட வருத்தமும் ஆதங்கமும் சிறுபிள்ளை செயல் என்று அவளுக்கே தோன்ற ஆரம்பித்தது.

 

காதலன், காதலி என்ற பெயரில் கல்லூரியில் பெரிது பெரிதாய் ஊடல், கூடலை பார்த்த போது அவள் கொண்டது கோபமே அல்ல என்று அவளுக்கு புரிந்து போனது.

 

அது முற்றிலும் தணிந்த தருவாயில் தான் இந்திரஜித்தின் வருகை. அமேரிக்காவில் இருந்து வந்திருந்தவன் திரும்பி வந்த பிறகாவது அவளைத் தேடி வந்து அழைத்துச் செல்வான் என்று எங்கோ ஒரு மனம் எதிர்பார்த்திருந்தது.

 

அவனோ போனிலே சொல்லிவிட்டு அவளை கிளம்பி வருமாறு சொல்லியிருக்க அப்படியொரு வீம்பு பொங்கியது அவளிடத்தில்.

 

‘நான் வரமாட்டேன் போ’ என்ற ஆங்காரம் எழுந்தது. அதுவே தரங்கிணி வந்த போது வரமுடியாது என்று பேச வைத்தது.

 

அப்போதாவது இந்திரஜித் மனைவியைத் தேடி வருவான் என்று அவள் எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். அவன் அவள் விருப்பம் என்று சொல்லியிருந்தான். ‘ச்சே என்ன வாழ்க்கை இது’ என்று தன் மீதும் தன்னைக் குறித்தும் கழிவிரக்கம் தோன்றி அவளை அலைக்கழித்தது.

 

அவள் தாய் வீட்டில் இருந்த போதும் எதையோ அவள் தொலைத்ததாகவே உணர்ந்தாள். தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டவள் ‘இப்படியே இருந்து என்ன சாதிக்கப் போறோம். என்னால எல்லாருக்கும் கஷ்டம் தானே. அவர் ஒண்ணும் உன்னை கூப்பிடாம இல்லையே’

 

‘வான்னு சொல்லத்தானே செஞ்சாரு. அவருக்கு வேலை இருந்திருக்கும்ன்னு உனக்கு புரிய வேணாமா’ என்று அவளின் மனசாட்சியே அவனுக்கு பரிந்து பேசி மீண்டும் நடந்ததெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட இந்திரஜித் மறுமுறை போனில் வரச்சொல்லி அழைத்தால் வீம்பு பாராமல் கிளம்பி செல்ல வேண்டும் என்று ஒரு வழியாய் முடிவெடுத்திருந்தாள் அவன் மனைவி.

 

ஆனாலும் அவ்வப்போது அவன் வந்து உன்னைப் பார்க்க வரவில்லையே என்று தோன்றும் போதெல்லாம் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகத் தான் போகும்.

 

அப்போது அவளின் கோபமும் உச்சாணிக்கொம்பில் தான் சென்று வீற்றிருக்கும். அப்படித்தான் ஒரு முறை அதே கோபத்தோடு பெரியாத்தாவிடம் சண்டைப் போடவென்று கிளம்பியிருந்தாள்.

 

அதே நேரம் பெரியாத்தாவிற்கு மேலுக்கு சுகமில்லை என்று அறிந்ததும் தரங்கிணியும் ஸ்ரீனிவாசனும் அவரைப் பார்க்க வந்திருந்தனர்.

 

அப்போது அவர்கள் பேசுவதை அவள் தற்செயலாய் கேட்க நேர்ந்தது. தரங்கிணி சொன்னதை அவளால் இப்போதும் கூட நம்ப முடியவில்லை. அப்படியே வந்த வழியே வீட்டிற்கு திரும்பிவிட்டிருந்தாள்.

அது முதல் தான் இந்திரின் அழைப்பைக் கூட நிராகரிக்க ஆரம்பித்திருந்தாள். வேலை இருக்கிறது, படிக்கிறேன், டிஸ்டர்ப் பண்ணாதீங்க இப்படி அவள் அவனை கத்தரித்தது போலவே பேச அவனும் பேசுவதை விட்டிருந்தான்.

 

‘அவருக்கு நான் செட்டாக மாட்டேன்னா ஏன் கல்யாணம் பண்ணணும். எதுக்கு என் வாழ்க்கையை கெடுக்கணும். அப்படி என்னா பொருத்தமில்லாம போயிட்டேன்’ என்ற நினைத்து நினைத்து வருந்தினாள் அவள்.

 

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த இந்தர் திரும்பி அருகே பலவித எண்ணவோட்டத்துடன் அமர்ந்திருந்த அவன் மனைவியின் மீது பார்வையை செலுத்தினான். மெல்லிய நகை அவன் இதழ்களில் கசியவிட்டவனின் நினைவுகளில் நான்கைந்து நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வுகள் ஓடியது.

 

மறுநாள் அவன் ஊருக்கு கிளம்புவதாக இருக்க மாடியில் இருந்த அவன் அறைக்கு வந்தார் தரங்கிணி.

 

“இந்தர்”

 

“சொல்லுங்கம்மா”

 

“ஊருக்கு எப்போ கிளம்பணும்ன்னு சொன்னே??”

 

“நாளைக்கும்மா”

 

“குழலியை…”

“அவ தான் வரலைன்னு சொல்றாளே என்ன செய்ய??”

 

“வரலைன்னா அப்படியே விட்டிருவியா, போய் வாடின்னு சொல்லி இழுத்துட்டு வரமாட்டியா. இதுக்கு தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சோமா சொல்லு”

 

“பெத்தவங்க புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது அவங்க சந்தோசமா வாழுறதை பார்க்கவும் வம்சம் தழைக்கிறதை பார்த்து சந்தோசப்படுறதுக்காகவும் தான்”

 

“இங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்களை ரொம்பவே கவலைப்பட வைக்கறீங்க. உங்களை நினைச்சு வருத்தப்பட்டே தான் அத்தையும் போய் சேர்ந்துட்டாங்க”

 

“ம்மா…

 

“நான் சொல்லி முடிச்சுக்கறேன் இந்தர்” என்றவர் தொடர்ந்தார். “ஒண்ணு நீங்க சேர்ந்து வாழுங்க, இல்லை சேர்ந்து முடிவு பண்ணி பிரிஞ்சு போங்க. பிடிக்கலைன்னா விலகிடுங்க இப்படி எங்க உசுரை வாங்காதீங்க” என்று காட்டமாகவே உரைத்து நகர்ந்தார் மகன் பேச இடம் கொடுக்காது.

 

அவர் சென்றதும் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன் அப்படியே அமர்ந்துவிட்டான். ‘விருப்பமில்லாதவளை இழுத்திட்டு போயா குடித்தனம் பண்ண முடியும். அது எவ்வளவு அசிங்கம் அது ஏன் இவங்களுக்கு புரிய மாட்டேங்குது’

‘திருமணம் ஆகாத ஒரு பெண்ணை கற்பழிக்கறதும் திருமணம் முடிஞ்சு விருப்பமில்லாத பொண்ணுக்கிட்ட அது மனைவியே ஆனாலும் அந்த பொண்ணை தொடுறது எவ்வளவு கீழ்த்தரமான ஒரு செயல்’

 

‘அவளுக்கு முடிவெடுக்க உரிமை இருக்கு தானே. என்னை கல்யாணம் பண்ணதாலேயே என்னோட முடிவை அவ மேல திணிக்கிறது எந்தவிதத்துல நியாயம்’ என்று தான் யோசித்தான் அவன்.

 

அவன் எண்ணம் சரியானதாக இருக்கலாம். அது அவனுக்கு மட்டுமே, அடுத்தவர் பார்வையில் அது சரியாய் எப்படி இருக்க முடியும். கணவன், மனைவி இருவரும் ஒருமனதாய் இணைந்தால் தான் தம்பதி ஆக முடியும்.

 

அறைக்கதவு மெலிதாய் தட்டப்படும் சத்தம் கேட்கவும் சிந்தனையில் இருந்து மனம் சிதற வாயிலை பார்த்தவன் சட்டென்று எழுந்து நின்றான். அங்கு கயல்விழி நின்றிருந்தார்.

 

“உன்கிட்ட பேசணுமாம் உன்னை பார்க்க வந்திருக்காங்க” என்று வாயிலோடு சொல்லிச் சென்றார் உடன் வந்திருந்த அவன் அன்னை தரங்கிணி.

 

அவர் அப்புறம் செல்லவும் “உள்ள வாங்க அத்தை” என்று இந்தர் அவரை அழைத்தான்.

 

உள்ளே வந்தவர் நின்றுக் கொண்டே இருக்கே “உட்காருங்க அத்தை” என்று சொல்ல “பரவாயில்லை” என்றார் மருமகனின் முன் அமர கூச்சப்பட்டவராய்.

 

“சும்மா உட்காருங்க அத்தை. உங்க பொண்ணை கட்டிக்கலைன்னாலும் நான் உங்களுக்கு சொந்தக்காரன் தானே. நீங்க பார்த்து வளர்ந்த பிள்ளை தானே நானு. உட்காருங்க” என்று அழுத்திச் சொல்லவும் அமர்ந்தார்.

 

“என்கிட்ட என்ன பேசணும்??” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.

 

“நீங்க நாளைக்கு ஊருக்கு கிளம்பறீங்களா??”

 

“ஹ்ம்ம்”

 

“குழலியையும் உங்க கூட கூட்டிட்டு போவீங்களா??” என்று அவர் கேட்ட தொனி அவனுக்கு சங்கடத்தை கொடுக்க பதில் சொல்லாது அமைதியாய் நின்றான்.

 

“எனக்கு தெரியும் என் பொண்ணைப்பத்தி. அவ பிடிச்சா உடும்பு பிடி தான். என்ன பிடிவாதத்தை மனசுல வைச்சிருக்கான்னு என்னால கண்டுப்பிடிக்கவே முடியலை”

 

“மதினி சொன்னாங்க அவ உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தினான்னு”

 

“அத்தை அப்படி…” என்று அவன் சொல்லும் போதே “தெரியும் எனக்கு அவளுக்கு வாய் கொஞ்சம் அதிகம். அங்க வந்து அக்கம் பக்கம் ஒரே சண்டைன்னு கேள்விப்பட்டேன்”

 

“அப்படியெல்லாம் எதுவுமில்லை நீங்க தேவையில்லாம யோசிக்காதீங்க”

 

“என் பொண்ணை எனக்கு தெரியாதா. எட்டு வயசுல அவளுக்கு என்ன தெரியும்ன்னு நான் நினைச்சது தான் என்னோட முட்டாள்த்தனம். அவங்கப்பா இறந்த பிறகும் நாங்க அந்த ஊர்ல இருந்ததும் என்னோட தப்பு தான். அவங்கப்பாவோட சொந்த தம்பியே என்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தார்”

 

“நானும் அவளுமா தான் சேர்ந்து அவரை விரட்டி அடிச்சோம். நைட்டெல்லாம் தூங்காம முழிச்சுட்டு இருந்தோம். எந்த நேரத்துலயும் போனவன் திரும்பி வந்திடுவானோன்னு பயந்திட்டே விடிய விடிய தூங்கலை”

 

“ஒவ்வொரு நாளையும் இப்படி நரகமா கழிக்க முடியாதுன்னு தான் என் பொண்ணை கூட்டிட்டு இந்த ஊருக்கு வந்தேன். நான் பிறந்த ஊர்ல எனக்கான பாதுகாப்பு கிடைக்கும்ன்னு நம்பினேன்”

 

அவர் சொன்னதை கேட்டதும் இந்தருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அந்த வயதில் அவர் எப்படி துடித்திருப்பார் என்று உணர முடிந்தது அவனால். முகமறியாத அந்த ஆணின் மேல் கோபமும் அவனை துவைத்து எடுக்கும் ஆத்திரமும் கூடவே வந்தது.

 

“அத்தை நான் ஒண்ணு கேட்கணும்”

 

“கேளுங்க”

 

“நீங்க அந்த ஊரைவிட்டு வந்திருக்க கூடாது. உங்க மாமியார் அதவாது குழலியோட பாட்டி அங்க தானே இருந்தாங்க. அவங்ககிட்ட நீங்க ஏன் சொல்லலை”

 

அவள் இதழ்கள் லேசாய் வளைந்தது விரக்தியில். “சொல்லாம இருந்திருப்பேனா அவங்க என்ன தெரியுமா சொன்னாங்க. ஆம்பிளைங்க அப்படித்தான் முன்னப்பின்ன இருப்பாங்க. இதெல்லாம் நான் தான் பொறுத்து போகணுமாம்”

 

“நாளைக்கு என் பொண்ணுக்கு ஒண்ணுன்னா அவங்க தான் வரணுமாம். அவங்களை நான் பகைச்சுக்க கூடாதாம். வேடிக்கையா இல்லை அவங்க சொன்னதைக் கேட்டு”

 

“அப்படியொரு சொந்தக்காரங்க மத்தியில பொம்பிளை பிள்ளை வைச்சுட்டு என்னால நிம்மதியா இருக்க முடியும்ன்னு தோணலை. அதனால தான் இங்க வந்தேன்”

 

“ஆனா எனக்குள்ள ஒரு பயம் இங்கயும் ஆம்பிளைங்க இருக்காங்க. அவங்களும் இப்படி நம்மகிட்ட நடந்துக்கிட்டா போறதுக்கு வேற போக்கிடம் ஏதுன்னு”

 

“தெரிஞ்ச ஊர் தெரிஞ்ச மனுஷங்களை விட்டு போகவும் எனக்கு மனசில்லை. யாரையும் நம்பவும் முடியலை, எனக்கு ஒரு வேலி வேணும்ன்னு நினைச்சு தான் எல்லார்கிட்டயும் சண்டை போட்டேன். அதுவே என் பொண்ணு வாழ்க்கையை பாதிக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை”

 

“என்னைப் பார்த்து வளர்ந்தவளுக்கு அந்த குணம் வந்திருக்குன்னு தரங்கிணி சொன்னதை கேட்டப்போ உள்ளுக்குள்ளவே நான் செத்துட்டேன். என் பொண்ணுக்கு வேலின்னு நினைச்சு நான் செஞ்சது அவளுக்கு வினையாகும்ன்னு நான் நினைக்கலை”

 

“அவ மேல உங்களுக்கு கோபமோ வெறுப்போ இருந்தா அதை என் மேல காட்டுங்க. அவளை மன்னிச்சிடுங்க” என்று கண்ணீர் வழிய பேசியவரை பார்த்ததும் முடிவெடுத்துவிட்டான் ஊருக்கு சென்றால் தன் மனைவியுடன் தான் செல்ல வேண்டும் என்று.

Advertisement